அதிகாரம் 16
ஒன்றுபட்ட ஒரே குடும்பம்
சுமார் 1,500 வருஷங்களாக இஸ்ரவேலர்கள் யெகோவாவின் பெயர் தாங்கிய மக்களாக இருந்தார்கள். அதன்பின் யெகோவா, ‘மற்ற தேசத்து மக்கள்மேல் தன் கவனத்தைத் திருப்பி, அவர்கள் மத்தியிலிருந்து தன்னுடைய பெயருக்கென்று ஒரு ஜனத்தைப் பிரித்தெடுத்தார்.’ (அப். 15:14) யெகோவாவின் பெயர் தாங்கிய மக்கள் அவருடைய சாட்சிகளாக இருக்கிறார்கள். உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும் சரி, சிந்தனையிலும் செயலிலும் அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இயேசு செய்யச் சொன்ன இந்த வேலையின் மூலம்தான் யெகோவாவின் மக்கள் கூட்டிச்சேர்க்கப்படுகிறார்கள்: “நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.”—மத். 28:19, 20.
நீங்கள் இப்போது, உலகம் முழுவதும் இருக்கும் ஒன்றுபட்ட ஒரே கிறிஸ்தவக் குடும்பத்தின் பாகமாக, அதாவது நாடு, இனம், பொருளாதாரம் என எந்தப் பாகுபாடும் இல்லாத ஒரே குடும்பத்தின் பாகமாக, ஆகியிருக்கிறீர்கள்
2 யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்ததன் மூலம் நீங்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷராக ஆகியிருக்கிறீர்கள். இப்போது, உலகம் முழுவதும் இருக்கும் ஒன்றுபட்ட ஒரே கிறிஸ்தவக் குடும்பத்தின் பாகமாக, அதாவது நாடு, இனம், பொருளாதாரம் என எந்தப் பாகுபாடும் இல்லாத ஒரே குடும்பத்தின் பாகமாக, ஆகியிருக்கிறீர்கள். (சங். 133:1) அதனால், சபையிலுள்ள சகோதர சகோதரிகள்மேல் அன்பும் மரியாதையும் காட்டுகிறீர்கள். அவர்களில் சிலருடைய இனமும், தேசமும், படிப்பும் வித்தியாசமாக இருக்கலாம். இந்தக் காரணங்களால் முன்பு அவர்களை நீங்கள் ஒதுக்கியிருக்கலாம். ஆனால் இப்போது, அவர்கள்மேல் அதிக பாசம் காட்டுகிறீர்கள். சொல்லப்போனால், முன்பு உங்கள் சமுதாயத்தையோ, மதத்தையோ, குடும்பத்தையோ சேர்ந்தவர்கள்மேல் காட்டிய பாசத்தைவிடப் பல மடங்கு அதிகமான பாசத்தைக் காட்டுகிறீர்கள்.—மாற். 10:29, 30; கொலோ. 3:14; 1 பே. 1:22.
கண்ணோட்டத்தில் மாற்றங்கள்
3 இனம், நாடு, சமுதாயம், அல்லது மற்ற பாகுபாடுகளைப் பார்க்கும் பழக்கத்தை விடுவது நம்மில் சிலருக்கு இன்னமும் கஷ்டமாக இருக்கலாம். அப்படியென்றால், ஆரம்பகால யூதக் கிறிஸ்தவர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் யூத மதத்தில் இருந்தபோது, அந்த மதத்தைச் சேராத மற்ற தேசத்து மக்களை ஒதுக்கினார்கள். ஆனால், கிறிஸ்தவர்களாக ஆன பிறகு தங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. ரோமப் படை அதிகாரியான கொர்நேலியுவின் வீட்டுக்குப் போகும் பொறுப்பை யெகோவா பேதுருவுக்குக் கொடுத்தபோது, அந்தப் பொறுப்பைச் செய்ய அவரைத் தயார்படுத்தினார்.—அப்., அதி. 10.
4 யூதர்கள் அசுத்தமானதாக நினைத்த சில மிருகங்களை அடித்துச் சாப்பிடும்படி பேதுருவுக்கு ஒரு தரிசனத்தில் சொல்லப்பட்டது. பேதுரு அதைச் செய்ய மறுத்தபோது, “கடவுள் சுத்தமாக்கியவற்றைத் தீட்டென்று சொல்லாதே” என்று பரலோகத்திலிருந்து ஒரு குரல் சொன்னது. (அப். 10:15) மற்ற தேசத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்திக்கும் நியமிப்பைக் கொடுப்பதற்காகத்தான் பேதுருவின் மனதைக் கடவுள் இப்படி முன்கூட்டியே தயார்படுத்தினார். யெகோவாவின் கட்டளைக்கு பேதுரு கீழ்ப்படிந்தார். அப்போது பேதுரு தன்னைப் பார்க்க வந்திருந்தவர்களிடம், “ஒரு யூதன் வேறு இனத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்திப்பதோ அவரோடு பழகுவதோ யூத சட்டத்துக்கு எதிரானது என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனாலும், யாரையும் தீட்டானவர் என்றும், அசுத்தமானவர் என்றும் சொல்லக் கூடாது என்பதைக் கடவுள் எனக்குக் காட்டியிருக்கிறார். அதனால், நீங்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பியபோது எந்த மறுப்பும் தெரிவிக்காமல் வந்தேன்” என்று சொன்னார். (அப். 10:28, 29) அதன் பிறகு, கொர்நேலியுவையும் அவருடைய குடும்பத்தாரையும் யெகோவா ஏற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை பேதுரு கண்கூடாகப் பார்த்தார்.
5 தர்சு நகரத்தைச் சேர்ந்த சவுல் உயர்கல்வி கற்ற பரிசேயராக இருந்தார். அவர் மனத்தாழ்மையை வளர்த்துக்கொண்டு, முன்பு யாரையெல்லாம் ஒதுக்கினாரோ அவர்களோடு சகஜமாகப் பழக வேண்டியிருந்தது. அவர்களுடைய ஆலோசனையைக் கேட்டு நடக்கவும் வேண்டியிருந்தது. (அப். 4:13; கலா. 1:13-20; பிலி. 3:4-11) நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டு இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக ஆன மற்ற பலரும்கூட தங்களுடைய கண்ணோட்டத்தை அடியோடு மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. உதாரணத்துக்கு, செர்கியு பவுல், தியொனீசியு, தாமரி, பிலேமோன், ஒநேசிமு போன்றவர்கள் எந்தளவுக்கு மாற்றம் செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்!—அப். 13:6-12; 17:22, 33, 34; பிலே. 8-20.
உலகளாவிய ஒற்றுமையைக் கட்டிக்காப்பது
6 சபையிலுள்ள சகோதர சகோதரிகள் காட்டிய பாசம், யெகோவாவிடமும் அவருடைய அமைப்பிடமும் நெருங்கிவர உங்களுக்கு உதவி செய்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இயேசு தன் சீஷர்களிடம், “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்று சொன்னார். (யோவா. 13:34, 35) அவருடைய உண்மையான சீஷர்களுக்கு அடையாளமாக இருக்கும் அப்படிப்பட்ட அன்பை சபையில் உள்ளவர்களிடம் நீங்கள் பார்த்தீர்கள். அதேபோன்ற அன்பைத்தான், உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகளும் காட்டுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டீர்கள். அதனால், யெகோவாவின் மீதும் அவருடைய அமைப்பின் மீதும் நீங்கள் வைத்திருந்த மதிப்பு இன்னும் அதிகமானது. இந்தக் கடைசி நாட்களில் சமாதானத்தோடும் ஒற்றுமையோடும் யெகோவாவை வணங்குவதற்காக மக்கள் ஒன்றுகூடி வருவார்கள் என்று சொல்லப்பட்ட பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.—மீ. 4:1-5.
7 இன்று எங்கு பார்த்தாலும் பிரிவினைகளும் பாகுபாடுகளும்தான் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு உலகத்தில், ‘எல்லா தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்தவர்களை’ ஒன்றுபடுத்த முடியுமென்று யார்தான் நினைத்திருப்பார்கள்? (வெளி. 7:9) ஒருபக்கம் அதிநவீன தொழில்நுட்பத்தில் புரளும் மக்களைப் பார்க்கிறோம், இன்னொரு பக்கம் பழமையான பாரம்பரியங்களிலேயே ஊறிப்போன மக்களைப் பார்க்கிறோம். ஒரே இனத்தையும் நாட்டையும் சேர்ந்தவர்கள் மதத்தின் பெயரில் மோதிக்கொள்கிறார்கள். தேசப்பற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதால், முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு உலகம் அரசியல் ரீதியில் பிளவுபட்டிருக்கிறது. மனிதர்கள் மத்தியில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடும் இருக்கிறது. இப்படி, பாகுபாடுகளும் வேறுபாடுகளும் நிறைந்த ஒரு உலகத்தில், எல்லா நாடுகளையும் மொழிகளையும் தொகுதிகளையும் பிரிவுகளையும் சேர்ந்த மக்களை ஒன்றுபடுத்துவது ஒரு பெரிய அற்புதம்தான். சர்வவல்லமையுள்ள கடவுளைத் தவிர வேறு யாரால் இதைச் சாதிக்க முடியும்?!—சக. 4:6.
8 இன்று யெகோவா இதை உண்மையிலேயே சாதித்துக் காட்டியிருக்கிறார். அவருக்கு உங்களை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுத்தபோது நீங்களும் அவருடைய ஒற்றுமையான மக்களில் ஒருவராக ஆனீர்கள். அப்படிப்பட்ட ஒற்றுமையால் உங்களுக்கு எத்தனையோ நன்மைகள் கிடைத்திருக்கின்றன. இப்போது, அதைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, பவுல் சொன்னதுபோல், “காலம் சாதகமாக இருக்கும்போதே எல்லாருக்கும் நன்மை செய்ய வேண்டும், முக்கியமாக நம்முடைய விசுவாசக் குடும்பத்தாருக்கு நன்மை செய்ய வேண்டும்.” (கலா. 6:10) அதோடு, “எதையும் பகையினாலோ வறட்டு கௌரவத்தினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினால் செய்யுங்கள். மற்றவர்களை உங்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதுங்கள். உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்” என்ற அறிவுரையை நாம் பின்பற்ற வேண்டும். (பிலி. 2:3, 4) நம் சகோதர சகோதரிகளுடைய வெளித்தோற்றத்தை மட்டும் நாம் பார்க்கக் கூடாது. அவர்களை யெகோவா பார்க்கும் விதமாகப் பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அவர்களோடு எப்போதுமே சமாதானமாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியும்.—எபே. 4:23, 24.
ஒருவர்மேல் ஒருவர் அக்கறை காட்டுவது
9 சபையில் இருப்பவர்கள் உடலின் உறுப்புகளைப் போல ஒருவர்மேல் ஒருவர் அக்கறை காட்டுவதாக அப்போஸ்தலன் பவுல் விளக்கினார். (1 கொ. 12:14-26) நம் சகோதர சகோதரிகள் ஆயிரக்கணக்கான மைல் தூரத்தில் இருந்தாலும், அவர்களுடைய நலனில் நாம் அதிக அக்கறை காட்டுகிறோம். அவர்களில் சிலர் துன்புறுத்தப்படுவதை நினைத்து நாம் எல்லாருமே வேதனைப்படுகிறோம். வறுமை, பேரழிவு, போர், உள்நாட்டுக் கலவரம் போன்றவற்றால் சிலர் பாதிக்கப்படும்போது, நாம் அவர்களுக்கு ஆன்மீக உதவியையும் பொருள் உதவியையும் செய்கிறோம்.—2 கொ. 1:8-11.
10 நாம் எல்லாரும் நம் சகோதர சகோதரிகளுக்காகத் தினமும் ஜெபம் செய்ய வேண்டும். அவர்களில் சிலர் கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஒருசிலர் படும் கஷ்டங்கள் எல்லாருக்கும் வெளிப்படையாகத் தெரிகின்றன. வேறுசிலர் படும் கஷ்டங்கள் எல்லாருக்கும் தெரிவதில்லை. உதாரணத்துக்கு, அவர்களுடன் வேலை செய்கிறவர்கள் அவர்களை எதிர்க்கலாம் அல்லது சத்தியத்தில் இல்லாத குடும்ப அங்கத்தினர்கள் அவர்களைத் துன்புறுத்தலாம். (மத். 10:35, 36; 1 தெ. 2:14) இதையெல்லாம் நினைத்து நாம் கவலைப்படுகிறோம். ஏனென்றால், நாம் எல்லாரும் ஒரே உலகளாவிய குடும்பத்தின் பாகமாக இருக்கிறோம். (1 பே. 5:9) யெகோவாவின் சேவையில் கடினமாக உழைக்கும் சில சகோதரர்கள் பிரசங்க வேலையையும் சபைகளையும் முன்நின்று நடத்துகிறார்கள். இன்னும் சிலருக்கு உலகளாவிய வேலையைக் கண்காணிக்கும் பொறுப்பு இருக்கிறது. ஒருவேளை, அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை நம்மால் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் எல்லாருக்காகவும் நாம் ஜெபம் செய்ய வேண்டும். அப்போதுதான், அவர்கள்மேல் அன்பும் அக்கறையும் வைத்திருப்பதைக் காட்ட முடியும்.—எபே. 1:16; 1 தெ. 1:2, 3; 5:25.
11 இந்தக் கொடிய காலத்தில், யெகோவாவின் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய ஓடோடி வர வேண்டும். நிலநடுக்கம், வெள்ளம் போன்ற பேரழிவுகள் தாக்கும்போது, பெரிய அளவில் நிவாரண வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்க வேண்டியிருக்கும். இந்த விஷயத்தில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நல்ல முன்மாதிரி வைத்தார்கள். அந்தியோகியாவில் இருந்த சீஷர்கள், இயேசு கொடுத்த அறிவுரையை மனதில் வைத்து, யூதேயாவில் இருந்த சகோதரர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களைச் சந்தோஷமாகக் கொடுத்து உதவினார்கள். (அப். 11:27-30; 20:35) பிற்பாடு, ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் செய்யப்பட்டுவந்த நிவாரண வேலைகளுக்கு ஆதரவு தரும்படி அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்டார். (2 கொ. 9:1-15) இன்றும், சில சூழ்நிலைகளால் நம் சகோதர சகோதரிகளுக்குப் பொருள் உதவி தேவைப்படும்போது, நம் அமைப்பும் சரி, தனிப்பட்ட நபர்களும் சரி, உடனே கைகொடுக்கிறார்கள்.
யெகோவாவின் விருப்பத்தைச் செய்ய பிரித்தெடுக்கப்படுதல்
12 உலகம் முழுவதும் உள்ள நம் சகோதர சகோதரிகள் ஒற்றுமையாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்திலும் யெகோவாவின் விருப்பத்தைச் செய்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பதே கடவுளுடைய விருப்பம். (மத். 24:14) இந்த வேலையைச் செய்யும்போது, நாம் அவருடைய உயர்ந்த ஒழுக்கநெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். (1 பே. 1:14-16) நாம் ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு நடக்கவும், பிரசங்க வேலைக்கு ஆதரவு கொடுக்கவும் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். (எபே. 5:21) நம் வாழ்க்கையில் சொந்த விருப்பங்களுக்கு முதலிடம் கொடுப்பதற்குப் பதிலாக கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுப்பதுதான் இப்போது மிகவும் முக்கியம். (மத். 6:33) இதை மனதில் வைத்து, நல்ல செய்தியை அறிவிக்கும் வேலையில் நாம் தோளோடு தோள் சேர்ந்து உழைக்கும்போது, சந்தோஷமும் திருப்தியும் எதிர்காலத்தில் முடிவில்லாத வாழ்க்கையும் கிடைக்கும்.
13 யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் மற்ற மனிதர்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறோம்; கடவுளுடைய சேவையைச் செய்வதில் வைராக்கியமுள்ள மக்களாக... பரிசுத்தமான மக்களாக... இருக்கிறோம். (தீத். 2:14) யெகோவாவை வணங்குவதால்தான் நாம் மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக இருக்கிறோம். உலகம் முழுவதும் உள்ள நம் சகோதர சகோதரிகளோடு நாம் தோளோடு தோள் சேர்ந்து உழைப்பது மட்டுமல்லாமல், சத்தியம் என்ற ஒரே பாஷையைப் பேசுகிறோம். அந்தச் சத்தியத்துக்கு இசைவாக வாழவும் செய்கிறோம். இதைப் பற்றி செப்பனியா தீர்க்கதரிசி மூலம் யெகோவா முன்கூட்டியே இப்படிச் சொல்லியிருக்கிறார்: “நான் ஜனங்களின் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாற்றுவேன். அப்போது, எல்லாரும் யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வார்கள். தோளோடு தோள் சேர்ந்து அவருக்குச் சேவை செய்வார்கள்.”—செப். 3:9.
14 இது இன்று நிஜமாகியிருக்கிறது. உலகம் முழுவதும் ஒரே குடும்பமாகத் தன்னை வணங்கும் மக்களைப் பற்றி செப்பனியா மூலம் யெகோவா இப்படியும் சொன்னார்: “இஸ்ரவேலில் மீதியாக இருப்பவர்கள் எந்த அநியாயமும் செய்ய மாட்டார்கள். அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள்; அவர்களுடைய பேச்சில் சூதுவாது இருக்காது. அவர்கள் நன்றாகச் சாப்பிட்டு, நிம்மதியாகத் தூங்குவார்கள்; யாரும் அவர்களைப் பயமுறுத்த மாட்டார்கள்.” (செப். 3:13) யெகோவாவின் வார்த்தையிலுள்ள சத்தியத்தைப் புரிந்துகொண்டு, நாம் யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொண்டு, யெகோவாவின் ஒழுக்கநெறிகளுக்கு இசைவாக வாழ்வதால்தான், நம்மால் ஒன்றுபட்டு உழைக்க முடிகிறது. மனித கண்ணோட்டத்தில் எது நடக்கவே நடக்காதோ அது நம் மத்தியில் இப்போது நடக்கிறது. உண்மையிலேயே நாம் வித்தியாசப்பட்ட மக்களாக... கடவுளுடைய மக்களாக... உலகம் முழுவதும் அவருக்குப் புகழ் சேர்க்கும் மக்களாக... இருக்கிறோம்.—மீ. 2:12.