பாடம் 54
“உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” செய்யும் வேலைகள்
கிறிஸ்தவ சபைக்கு இயேசுதான் தலைவர். (எபேசியர் 5:23) இன்று அவர் பரலோகத்திலிருந்து ஒரு ராஜாவாக பூமியில் இருக்கும் தன் சீஷர்களை வழிநடத்துகிறார். அதற்காக ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ பயன்படுத்துகிறார். (மத்தேயு 24:45-ஐ வாசியுங்கள்.) இயேசுவே நேரடியாக நியமித்திருப்பதால் இந்த ‘அடிமைக்கு’ ஓரளவு அதிகாரம் இருக்கிறது. ஆனாலும், அவர்கள் கிறிஸ்துவுக்கு அடிமையாகத்தான் இருப்பார்கள், கிறிஸ்துவின் சகோதரர்களுக்குச் சேவை செய்வார்கள். இந்த அடிமை யார்? அவர்கள் நம்மை எப்படிக் கவனித்துக்கொள்கிறார்கள்?
1. “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” யார்?
யெகோவா தன் மக்களை வழிநடத்த ஆண்களில் ஒருவரை அல்லது ஆண்களைக் கொண்ட ஒரு சின்னக் குழுவை எப்போதுமே பயன்படுத்தியிருக்கிறார். (மல்கியா 2:7; எபிரெயர் 1:1) இயேசு இறந்த பிறகு, எருசலேமில் இருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் அவருடைய மக்களை வழிநடத்தினார்கள். (அப்போஸ்தலர் 15:2) அதேபோல் இன்றும், மூப்பர்களைக் கொண்ட ஒரு சின்னத் தொகுதி கடவுளுடைய மக்களை வழிநடத்துகிறார்கள். இந்தத் தொகுதிதான் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு. இவர்கள் நமக்கு ஆன்மீக உணவு தருகிறார்கள், ஊழிய வேலைகளையும் வழிநடத்துகிறார்கள். இந்தத் தொகுதிதான் “[இயேசு] நியமித்த உண்மையும் விவேகமும் உள்ள அடிமை.” (மத்தேயு 24:45ஆ) ஆளும் குழுவில் இருக்கும் எல்லாரும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள். அதாவது, அவர்கள் இறந்த பிறகு கிறிஸ்துவோடு சேர்ந்து பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வார்கள்.
2. என்ன ஆன்மீக உணவை உண்மையுள்ள அடிமை கொடுக்கிறார்கள்?
உண்மையுள்ள அடிமை ‘ஏற்ற வேளையில் [கிறிஸ்தவர்களுக்கு] உணவு கொடுப்பார்கள்’ என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:45அ) நம் உடல் பலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு நாம் சாப்பிடும் உணவு உதவி செய்கிறது. அதேபோல், ஆன்மீக உணவு, அதாவது கடவுளுடைய வார்த்தையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள், யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதற்கான பலத்தை நமக்குக் கொடுக்கிறது. அதோடு, இயேசு கொடுத்திருக்கும் வேலையைச் செய்ய அது தெம்பளிக்கிறது. (1 தீமோத்தேயு 4:6) கூட்டங்கள், மாநாடுகள், பைபிள் பிரசுரங்கள், வீடியோக்கள் ஆகியவற்றின் மூலம் நமக்கு இந்த ஆன்மீக உணவு கிடைக்கிறது. கடவுளுடைய விருப்பத்தைப் புரிந்துகொள்ளவும் அவரோடு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்தவும் இந்த உணவு உதவுகிறது.
ஆராய்ந்து பார்க்கலாம்!
“உண்மையும் விவேகமும் உள்ள அடிமை,” அதாவது ஆளும் குழு, நமக்கு ஏன் தேவை என்று பார்க்கலாம்.
3. யெகோவாவின் மக்கள் ஒழுங்கமைக்கப்பட்டு இருப்பார்கள்
ஆளும் குழு, இயேசுவின் வழிநடத்துதலின் கீழ் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை ஒழுங்கமைக்கிறார்கள். இதேபோன்ற ஏற்பாடுதான் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மத்தியிலும் இருந்தது. வீடியோவைப் பாருங்கள்.
1 கொரிந்தியர் 14:33, 40-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
தன் மக்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று யெகோவா விரும்புவதை இந்த வசனங்கள் எப்படிக் காட்டுகின்றன?
4. உண்மையுள்ள அடிமை பிரசங்க வேலையை ஒழுங்கமைக்கிறார்கள்
ஆரம்பகால கிறிஸ்தவர்கள் செய்த ரொம்ப முக்கியமான வேலைதான் பிரசங்க வேலை. அப்போஸ்தலர் 8:14, 25-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
ஆரம்பகால கிறிஸ்தவர்கள் செய்த பிரசங்க வேலையை யார் வழிநடத்தினார்கள்?
பேதுருவும் யோவானும் எப்படி மற்ற அப்போஸ்தலர்கள் சொன்னபடி செய்தார்கள்?
ஆளும் குழு செய்கிற வேலைகளிலேயே ரொம்ப முக்கியமானது பிரசங்க வேலையை ஒழுங்கமைப்பதுதான். வீடியோவைப் பாருங்கள்.
பிரசங்க வேலை எவ்வளவு முக்கியம் என்று இயேசு சொன்னார். மாற்கு 13:10-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
பிரசங்க வேலை ரொம்ப முக்கியம் என்று ஆளும் குழு ஏன் நினைக்கிறார்கள்?
உலகம் முழுவதும் நடக்கும் இந்த வேலையை ஒழுங்கமைக்க “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” ஏன் தேவை?
5. உண்மையுள்ள அடிமை நமக்கு வழிநடத்துதலைக் கொடுக்கிறார்கள்
உலகம் முழுவதும் இருக்கும் கிறிஸ்தவர்களுக்குத் தேவையான வழிநடத்துதலை ஆளும் குழு கொடுக்கிறார்கள். என்ன வழிநடத்துதல் கொடுப்பது என்று அவர்கள் எப்படி முடிவு செய்கிறார்கள்? ஆரம்பகால கிறிஸ்தவர்களை வழிநடத்திய ஆளும் குழு என்ன செய்தார்கள் என்று பார்க்கலாம். அப்போஸ்தலர் 15:1, 2-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
ஆரம்ப காலத்தில் இருந்த சில கிறிஸ்தவர்கள் மத்தியில் என்ன பிரச்சினை வந்தது?
அந்தப் பிரச்சினையைத் தீர்க்க பவுலும் பர்னபாவும் மற்றவர்களும் யாரிடம் போனார்கள்?
அப்போஸ்தலர் 15:12-18, 23-29-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
அன்று இருந்த ஆளும் குழு, ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு கடவுளுடைய வழிநடத்துதலைத் தெரிந்துகொள்ள என்னென்ன செய்தார்கள்?—வசனங்கள் 12, 15, 28-ஐப் பாருங்கள்.
அப்போஸ்தலர் 15:30, 31-ஐயும் 16:4, 5-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
ஆளும் குழு கொடுத்த வழிநடத்துதலை ஆரம்பகால கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டார்களா? எப்படிச் சொல்லலாம்?
அவர்கள் கீழ்ப்படிந்ததால் யெகோவா எப்படி அவர்களை ஆசீர்வதித்தார்?
2 தீமோத்தேயு 3:16-ஐயும் யாக்கோபு 1:5-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
இன்று ஆளும் குழு ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு கடவுளுடைய வழிநடத்துதலைத் தெரிந்துகொள்ள என்னென்ன செய்கிறார்கள்?
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “ஆளும் குழுவுல இருக்குறவங்களும் மனுஷங்கதானே, அவங்க சொல்றத நாம ஏன் கேட்டு நடக்கணும்?”
இயேசுதான் ஆளும் குழுவை வழிநடத்துகிறார் என்று நீங்கள் எதை வைத்து நம்புகிறீர்கள்?
சுருக்கம்
ஆளும் குழுதான் கிறிஸ்து நியமித்திருக்கும் “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை.” உலகம் முழுவதும் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு அவர்கள் வழிநடத்துதலையும் ஆன்மீக உணவையும் கொடுக்கிறார்கள்.
ஞாபகம் வருகிறதா?
‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ நியமித்தது யார்?
ஆளும் குழு நம்மை எப்படிக் கவனித்துக்கொள்கிறார்கள்?
ஆளும் குழுதான் “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” என்று நீங்கள் நம்புகிறீர்களா?
அலசிப் பாருங்கள்
ஆளும் குழு தங்களுடைய வேலைகளை எப்படி நன்றாக ஒழுங்கமைத்து செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
“யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு என்பது என்ன?” (ஆன்லைன் கட்டுரை)
நமக்குக் கொடுக்கும் எல்லா தகவல்களும் திருத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆளும் குழு என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
இயேசு தங்களுக்குக் கொடுத்திருக்கும் வேலையைப் பற்றி ஆளும் குழு என்ன நினைக்கிறார்கள்?
யெகோவாதான் ஆளும் குழுவை வழிநடத்துகிறார் என்பதை நம் கூட்டங்களும் மாநாடுகளும் எப்படிக் காட்டுகின்றன?