இரத்தம்
சொற்பொருள் விளக்கம்: மனிதர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட உயிரணுக்களாலான பெரும்பான்மை மிருக ஜீன்களின் இரத்தக்குழாய் மண்டலத்தில் பாய்கிற, உண்மையிலேயே ஓர் அதிசயமான திரவம். இது உணவையும் பிராணவாயுவையும் விநியோகிக்கிறது, மற்றும் கழிவுப் பொருட்களை ஏந்திச் செல்கிறது. மேலும் உடலை நோய்த்தொற்றப்படுவதற்கு எதிராகப் பாதுகாப்பதில் ஒரு பிரதான பங்கை வகிக்கிறது. உயிர் சம்பந்தமான நடவடிக்கைகளில் மிகவும் நெருங்கிய வண்ணமாக இரத்தம் உட்படுவதால், பைபிள் இவ்வாறு சொல்கிறது: “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது.” (லேவி. 17:11) உயிரின் மூலகாரணராக, யெகோவா, இரத்தம் எந்தக் காரியத்துக்குப் பயன்படுத்தப்படலாம் என்பதற்கான திட்டவட்டமான கட்டளைகளை அளித்திருக்கிறார்.
கிறிஸ்தவர்கள் ‘இரத்தத்திற்கு விலகியிருக்கக்’ கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள்
அப். 15:28, 29: “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும் இரத்தத்திற்கும், நெருங்குண்டு செத்ததிற்கும், [அல்லது, இரத்தம் வடிக்கப்படாமல் கொல்லப்பட்டதற்கு] வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் [கிறிஸ்தவ சபையின் நிர்வாகக் குழுக்கும்] நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக.” (இங்கே இரத்தத்தைப் புசிப்பது நாம் ஈடுபட விரும்பக்கூடாத விக்கிரக ஆராதனைக்கும் வேசித்தனத்துக்கும் சமமாகப் பேசப்படுகிறது.)
மிருக மாம்சத்தைப் புசிக்கலாம், ஆனால் இரத்தத்தைப் புசிக்கக்கூடாது
ஆதி. 9:3, 4: “நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன். மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்க வேண்டாம்.”
உணவுக்காகப் பயன்படுத்தும் எந்த மிருகத்தின் உடலிலிருந்தும் இரத்தத்தைச் சரியானமுறையில் வடித்துவெளியேற்றவேண்டும். நெருக்குண்டு சாகிறதோ, அல்லது பொறியில் அகப்பட்டு சாகிறதோ அல்லது செத்தப் பின்பு கண்டுபிடிக்கப்படுகிறதோ உணவுக்கு உகந்ததல்ல. (அப்போஸ்தலர் 15:19, 20; லேவியராகமம் 17:13-16-ஐ ஒப்பிடுங்கள்.) அவ்வாறே, முழு இரத்தம் அல்லது இரத்தத்தின் கூறு ஏதாயினுங்கூட சேர்க்கப்பட்ட எந்த உணவையும் சாப்பிடக்கூடாது.
இரத்தத்தைப் பலிக்குரிய உபயோகம் செய்வதை மட்டுமே கடவுள் அனுமதித்தார்
லேவி. 17:11, 12: “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.” (மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் செலுத்தப்பட்ட அந்த மிருக பலிகள் எல்லாம் இயேசு கிறிஸ்துவின் ஒரே பலியை முன்குறித்துக்காட்டின.)
எபி. 9:11-14, 22: “கிறிஸ்துவானவர் . . . பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, . . . வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! . . . இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.”
எபே. 1:7: “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய [இயேசு கிறிஸ்துவின்] இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.”
பொ.ச. ஆரம்ப நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டினவர்கள் இரத்தத்தைக் குறித்த பைபிளின் கட்டளைகளை எவ்வாறு புரிந்துகொண்டனர்?
டெர்ட்டூல்லியன் (சுமார் பொ.ச. 160-230): “இயல்புக்கு மாறான உங்களுடைய வழிகள் கிறிஸ்தவர்களுக்கு முன்பாக வெட்கமடையட்டும். நாங்கள் எங்கள் உணவிலுங்கூட மிருகங்களின் இரத்தத்தைச் சேர்ப்பதில்லை, ஏனெனில் அவை சாதாரண உணவே அடங்கியவை. . . . கிறிஸ்தவர்களின் நியாயவிசாரணையின்போது நீங்கள் [புறமத ரோமர்கள்] அவர்களுக்கு இரத்தம் நிறைந்த இறைச்சியை அளிக்கிறீர்கள். எந்தப் பொருளைக்கொண்டு அவர்களைச் சரியான வழியிலிருந்து விலகிப்போகச் செய்ய நீங்கள் முயற்சி செய்கிறீர்களோ அதே காரியம் அவர்களுக்குச் சட்டப்படி குற்றமானதென நீங்கள் நிச்சயமாகவே அறிந்திருக்கிறீர்கள். மிருக இரத்தத்தின்பேரில் அவர்கள் வெறுப்பதிர்ச்சி கொள்வார்களென்று நீங்கள் திட்டமாய் அறிந்திருக்கையில், மனித இரத்தத்தை அருந்த தீவிர ஆவலோடு நாடிச் செல்வார்களென நீங்கள் நம்புவது எவ்வாறு?”—டெர்ட்டூல்லியனின், தன் மத ஆதரவான விவாதங்கள், மற்றும் மினிஷியஸ் ஃபீலிக்ஸ், ஆக்டேவியஸ் (நியு யார்க், 1950), எமிலி டாலி மொழிபெயர்த்தது, பக். 33.
மினிஷியஸ் ஃபீலிக்ஸ் (பொ.ச. மூன்றாம் நூற்றாண்டு): “மனித இரத்தத்திலிருந்தே நாங்கள் அவ்வளவு அதிகம் வெறுத்தொதுங்கி விலகியிருப்பதால், சாப்பிடத்தக்க மிருகங்களின் இரத்தத்தையுங்கூட எங்கள் உணவில் நாங்கள் பயன்படுத்துவதில்லை.”—எதிர்-நைஸீன் பிரமுகர்கள் (கிரான்ட் ராப்பிட்ஸ், மிச்சிகன்; 1956), A. ராபர்ட்ஸ் மற்றும் J. டோனல்ட்சன், புத். IV, பக். 192.
இரத்தமேற்றுதல்கள்
பைபிள் மனித இரத்தத்தையும் தடைசெய்கிறதா?
ஆம், பூர்வ கிறிஸ்தவர்கள் அவ்வாறே அதைப் புரிந்துகொண்டனர். அப்போஸ்தலர் 15:28-ல் “இரத்தத்திற்கும் . . . விலகியிருக்கவேண்டும்,” என்று சொல்லியிருக்கிறது. இது மிருக இரத்தத்திலிருந்து மட்டுமே விலகியிருக்க வேண்டுமென சொல்வதில்லை. (லேவியராகமம் 17:10-ஐ ஒப்பிடுங்கள், இது “எந்த வகை இரத்தத்தையும்” (NW) புசிப்பதைத் தடைசெய்தது.) டெர்ட்டூல்லியன் (ஆரம்பகால கிறிஸ்தவ நம்பிக்கைகளின் சார்பாக எதிர்விளக்கமளித்து வாதாடி எழுதினவன்) பின்வருமாறு குறிப்பிட்டான்: “‘இரத்தத்தின்’ மீதான தடையுத்தரவு மனித இரத்தத்திற்கு மேலுமதிகமாகப் பொருந்தும் (தடையுத்தரவு) என்று நாங்கள் புரிந்துகொள்கிறோம்.”—நைஸீனுக்கு முற்பட்ட பிரமுகர்கள், புத். IV, பக். 86.
இரத்தமேற்றுதல் உண்மையில் இரத்தத்தைப் புசிப்பதைப் போன்றதா?
மருத்துவமனையில், ஒரு நோயாளி தன்னுடைய வாயின்மூலம் சாப்பிட முடியாதபோது, அவனுடைய இரத்தக்குழாயின்மூலம் அவனுக்கு உணவூட்டப்படுகிறது. இரத்தத்தைத் தன் வாயில் ஒருபோதும் ஏற்காத ஒரு நபர், இரத்தமேற்றுதலின்மூலம் இரத்தத்தை ஏற்றுக்கொண்டால் “இரத்தத்திற்கு . . . விலகியிருக்கவேண்டும்,” (அப். 15:29) என்ற கட்டளைக்கு அவன் உண்மையில் கீழ்ப்படிகிறானா? ஓர் ஒப்புமையைப் பயன்படுத்தலாம், மதுபானத்திலிருந்து விலகியிருக்கவேண்டுமென மருத்துவர் சொல்லியிருக்கும் ஓர் ஆளை எண்ணிப்பாருங்கள். அவன் மதுபானம் குடிப்பதை நிறுத்திவிட்டான் ஆனால் அதைத் தன் இரத்தக் குழாய்க்குள் நேரடியாக உட்செலுத்தச் செய்தானெனில் அவன் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறானா?
ஒரு நோயாளி இரத்தமேற்றிக்கொள்ள மறுக்கும்போது ஏதாவது மாற்று மருத்துவ முறைகள் இருக்கின்றனவா?
அடிக்கடி, சாதாரண உப்புக் கரைசல், ரிங்கர் கரைசல், மற்றும் டெக்ஸ்ட்ரன் ஆகியவை நிணநீர்ப்பரிமாணப் பெருக்கிகளாகப் பயன்படுத்தப்படலாம். இவை ஏறக்குறைய எல்லா நவீன மருத்துவ மனைகளிலும் கிடைப்பவை. உண்மையாகவே, இரத்தமேற்றுதலால் உண்டாகும் அபாயங்களை இந்தப் பொருட்களைப் பயன்படுத்துவதன்மூலம் தவிர்க்க முடியும். கானடா மயக்க மருந்து கொடுப்போரின் சங்க பத்திரிகை (ஜனவரி 1975, பக். 12) சொல்வதாவது: “இரத்தமேற்றுதலில் உண்டாகும் அபாயங்கள் நிணநீர்ப் பதிலிகளின் அனுகூலங்களாக இருக்கின்றன: பாக்டீரியா அல்லது நுண்கிருமி தொற்றுநோய்கள், இரத்தமேற்றுதலின் எதிரிடை பாதிப்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப்பொருள் உற்பத்தியைத் தூண்டும் பொருளுக்குக் கூருணர்வு உண்டாகுதல் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.” இரத்தமில்லாத நிணநீர்ப் பரிமாணப் பெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு யெகோவாவின் சாட்சிகள் மத சம்பந்தமான மறுப்புத் தெரிவிப்பதில்லை.
மறுப்பதால் யெகோவாவின் சாட்சிகள் மேம்பட்ட மருத்துவ சிகிச்சையின் நன்மையைப் பெறுகிறார்கள். தாய்மை மருத்துவம் மற்றும் பெண்நோய் மருத்துவக்கலையின் அமெரிக்கப் பத்திரிகையில் (ஜூன் 1, 1968, பக். 395) ஒரு மருத்துவர் எழுதுகையில் பின்வருமாறு ஒப்புக்கொண்டார்: “இரத்தமேற்றுதல் சாத்தியமில்லாத சூழ்நிலைமையில் நீங்கள் [அறுவைச் சிகிச்சை மருத்துவர்] அறுவைச் சிகிச்சை செய்வது உங்களுடைய அறுவைச் சிகிச்சையை மேம்படச் செய்கிறது. கசியும் எல்லா இரத்தக் குழாய்களையும் அடைத்துப் போடுவதில் நீங்கள் மேலுமதிக முனைப்பாக இருக்கிறீர்கள்.”
இரத்தமேற்றுதல்கள் இல்லாமலே எல்லாவகையான அறுவைச் சிகிச்சைகளையும் வெற்றிகரமாகச் செய்யமுடியும். இது திறந்த-இருதய அறுவைச் சிகிச்சைகள், மூளை அறுவைச் சிகிச்சை, கைகால் தறிப்புச் சிகிச்சை, புற்றுநோய் பாதித்தப் பாகங்களை முழுமையாக நீக்குதல் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. நியு யார்க் நகர மருத்துவ பத்திரிகையில் (அக்டோபர் 15, 1972, பக். 2527) டாக்டர் ஃபிலிப் ரோயன் எழுதுகையில் குறிப்பிட்டதாவது: “இரத்த மாற்றீடு செய்வதில் தடையை எதிர்ப்படுகையில் நாங்கள் குறிப்பிடப்பட்ட எல்லா வகையான அறுவைச் சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ள தயங்கவில்லை.” டெக்ஸாஸ் இருதய ஸ்தபனத்தின் டாக்டர் டென்டன் கூலி பின்வருமாறு சொன்னார்: “[இரத்தமில்லா நிணநீர்ப் பரிமாணப் பெருக்கிகளை] யெகோவாவின் சாட்சிகளின்பேரில் பயன்படுத்தியதில் உண்டான நல்ல விளைவுகளால் நாங்கள் திறம்பட ஊக்கமூட்டப்பட்டதால் இந்த மருத்துவ முறையை எங்களுடைய எல்லா இருதய நோயாளிகளுக்கும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்.” (தி சான் டீகோ யூனியன், டிசம்பர் 27, 1970, பக். A-10) “யெகோவாவின் சாட்சிகளின் மதம் இரத்தமேற்றுதல்களைத் தடைசெய்வதால் அவர்களுடைய மதப்பிரிவின் வயதுவந்த அங்கத்தினர்களுக்கு ஆரம்பத்தில் விருத்திசெய்யப்பட்ட ‘இரத்தமில்லா’ திறந்த-இருதய அறுவைச் சிகிச்சை, இப்பொழுது குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகளின் மிக நுணுக்கமான இருதய சம்பந்த சிகிச்சை முறைகளில் கையாளப்பட்டு, எந்த ஆபத்துமின்றி பயன்படுத்தப்படுகிறது.”—கார்டியோவஸ்குலர் நியூஸ், பிப்ரவரி 1984, பக். 5.
ஒருவர் இவ்வாறு சொன்னால்—
‘நீங்கள் இரத்தமேற்றுதல்களை மறுப்பதால், உங்கள் பிள்ளைகளைச் சாக விடுகிறீர்கள். அது பயங்கரமென நான் எண்ணுகிறேன்’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘ஆனால் நாங்கள், அவர்கள் பாதுகாப்பான வகை திரவமேற்றுதல்களைப் பெற அனுமதிக்கிறோம். எய்ட்ஸ், கல்லீரல் வீக்கம், மலேரியா போன்ற அபாயங்களைக் கொண்டுவராதத் திரவமேற்றுதல்களை நாங்கள் மறுப்பதில்லை. நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த சிகிச்சையை விரும்புகிறோம். அதையே அன்புள்ள எந்தப் பெற்றோரும் விரும்புவர்.’ பின்பு மேலும் சொல்லலாம்: (1) ‘கடுமையான இரத்த இழப்பு ஏற்படுகையில், திரவப்பரிமாணத்தை ஈடுகட்டுவதே மிகப் பெரிய தேவையாகும். நம்முடைய இரத்தத்தில் 50 சதவீதம் நீராக இருக்கிறதென நீங்கள் உணருகிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை; மேலும் இரத்தச் சிவப்பணுக்கள், வெள்ளணுக்கள் என மற்றவையும் இருக்கின்றன. இரத்தம் அதிகமாக இழக்கப்படுகையில் நம்முடைய உடல்தானே, சேமிப்பிலுள்ள இரத்த அணுக்களைப் பேரளவில் நம்முடைய இரத்த மண்டலத்திற்குள் செலுத்துகிறது. மேலும், புதிய அணுக்களின் உற்பத்தியைத் தீவிரமாக்குகிறது. ஆனால் திரவப் பரிமாணம் தேவை. இரத்தமல்லாத நிணநீர்ப்பரிமாணப் பெருக்கிகளை அந்தத் தேவையைப் பூர்த்திச் செய்ய பயன்படுத்தலாம், இவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.’ (2) ‘நிணநீர்ப்பரிமாணப் பெருக்கிகள் ஆயிரக்கணக்கான ஆட்களுக்கு மிக நல்ல விளைவுகளுடன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.’ (3) ‘எல்லாவற்றையும் பார்க்கிலும் எங்களுக்கு அதிக முக்கியமானது அப்போஸ்தலர் 15:28, 29-ல் பைபிளில்தானே சொல்லியிருப்பதாகும்.’
அல்லது இவ்வாறு சொல்லலாம்: ‘உங்கள் நோக்குநிலையை நான் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் உங்கள் பிள்ளையை அந்தச் சூழ்நிலையில் வைத்துப் பார்க்கிறீர்களென்று நான் ஊகிக்கிறேன். பெற்றோர்களாக நாம் நம்முடைய பிள்ளைகளின் நலனைக் காக்க சாத்தியமான எல்லாவற்றையும் செய்வோம், அல்லவா? ஆகவே, உங்களையும் என்னையும் போன்ற ஆட்கள் நம்முடைய பிள்ளைகளுக்கு ஏதோவகையான மருத்துவ சிகிச்சையை மறுக்கிறோமென்றால், அதற்கு ஏதோவொரு வற்புறுத்தும் காரணம் நிச்சயமாக இருக்கும்.’ பின்பு மேலும் சொல்லலாம்: (1) ‘பெற்றோர்கள் சிலர் இங்கே அப்போஸ்தலர் 15:28, 29-ல் கடவுளுடைய வார்த்தை சொல்வதால் பாதிக்கப்பட்டிருக்கலாமென நீங்கள் நினைக்கிறீர்களா?’ (2) ‘ஆகையால் கேள்வி என்னவெனில், கடவுள் கட்டளையிடுவதைச் செய்ய நமக்குப் போதிய விசுவாசம் இருக்கிறதா என்பதே.’
‘இரத்தமேற்றுதல்களில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘இரத்தமேற்றுதலை ஏற்றுக்கொள்ளாவிடில் சாட்சிகள் மரிக்கக்கூடுமென தாங்கள் உணர்ந்த சில சந்தர்ப்பங்களைக் குறித்து கதைகளைச் செய்தித்தாள்கள் வெளியிட்டிருக்கின்றன. உங்கள் மனதில் இருப்பது இதுதானா? . . . நாங்கள் ஏன் இந்நிலையை ஏற்கிறோம்?’ பின்பு மேலும் சொல்லலாம்: (1) ‘உங்கள் மனைவிக்காக (கணவனுக்காக) உங்கள் உயிரை ஆபத்துக்குட்படுத்தவும் நீங்கள் மனங்கொள்ள அவளைப் (அவரைப்) போதியளவு நேசிக்கிறீர்களா? . . . தங்களுடைய தேசத்துக்காகத் தங்கள் உயிரை ஆபத்துக்குள்ளாக்கும் ஆட்களும் இருக்கின்றனர். இவர்கள் வீரர்களெனக் கருதப்படுகின்றனர், அல்லவா? ஆனால் இங்கே இந்தப் பூமியிலுள்ள எந்த ஆளையும் அல்லது பொருளையும் பார்க்கிலும் மிகப் பெரியவர் ஒருவர் இருக்கிறார், அவரே கடவுள். அவரை நேசிப்பதனிமித்தமாகவும் அவருடைய ஆட்சிக்கு உண்மைத்தவறா பற்றுறுதியைக் காட்டுவதனிமித்தமாகவும் நீங்கள் உங்கள் உயிரை ஆபத்துக்குள்ளாக்குவீர்களா?’ (2) ‘உண்மையில் இங்கு உட்பட்டுள்ள விவாதம் கடவுளுக்கு உண்மைத்தவறாமையேயாகும். இரத்தத்துக்கு விலகியிருக்கும்படி சொல்வது கடவுளுடைய வார்த்தையே. (அப். 15:28, 29)’
அல்லது இவ்வாறு சொல்லலாம்: ‘இன்று சாதாரண பழக்கமாயிருப்பவையும் யெகோவாவின் சாட்சிகள் அறவே விட்டுவிலகியிருப்பவையுமான பல காரியங்கள் இருக்கின்றன—உதாரணமாக, பொய்ச்சொல்லுதல், விபசாரம், திருடுதல், புகை குடித்தல், மேலும் நீங்கள் குறிப்பிட்டதுபோல், இரத்தத்தைப் பயன்படுத்துவது ஆகியவை. ஏன்? ஏனெனில் எங்கள் வாழ்க்கையைக் கடவுளுடைய வார்த்தையால் கட்டுப்படுத்தி நடத்துகிறோம்.’ பின்பு மேலும் சொல்லலாம்: (1) ‘நாம் “இரத்தத்திற்கு விலகியிருக்க வேண்டும்” என்று பைபிளில் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா? நான் அதை உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். (அப். 15:28, 29)’ (2) ‘நம்முடைய முதல் பெற்றோரான, ஆதாமும் ஏவாளும், ஏதேனிலிருந்த ஒரு மரத்தைத் தவிர மற்ற எல்லா மரங்களின் கனியையும் புசிக்கலாமென்று கடவுள் அவர்களுக்குச் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் அவர்கள் கீழ்ப்படியாமற்போனார்கள், விலக்கப்பட்ட அந்தக் கனியைப் புசித்து, எல்லாவற்றையும் இழந்தார்கள். எத்தகைய ஞானமற்றப்போக்கு! இப்பொழுது, நிச்சயமாகவே, விலக்கப்பட்ட கனியைக்கொண்ட ஒரு மரமும் இல்லை. ஆனால் நோவாவின் நாளின் ஜலப்பிரளயத்துக்குப்பின் கடவுள் மறுபடியும் ஒரு தடையுத்தரவை ஏற்படுத்திவைத்தார். இந்தச் சமயத்தில் அது இரத்தத்தை உட்படுத்தியது. (ஆதி. 9:3, 4)’ (3) ‘ஆகவே உண்மையான கேள்வி என்னவெனில், நாம் கடவுளில் விசுவாசம் வைத்திருக்கிறோமா? நாம் அவருக்குக் கீழ்ப்படிந்தால், அவருடைய ராஜ்யத்தின்கீழ் பரிபூரணத்தில் நித்திய வாழ்க்கைக்கான எதிர்பார்ப்பு நமக்கு முன்னால் இருக்கிறது. நாம் மரித்தாலும், உயிர்த்தெழுப்பப்படுவோமென்று அவர் நமக்கு உறுதிதருகிறார்.’
“இரத்தமேற்றாவிடில் நீர் மரித்துவிடுவீர்,” என்று மருத்துவர் சொன்னால் என்ன செய்வது?’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘அந்த நிலைமை உண்மையில் அவ்வளவு வினைமையானதாயிருந்தால், இரத்தமேற்றினால் அந்த நோயாளி சாகமாட்டாரென அந்த மருத்துவர் பொறுப்புறுதி அளிக்கமுடியுமா?’ பின்பு மேலும் சொல்லலாம்: ‘ஆனால் ஒருவனுக்கு மறுபடியும் உயிர் அளிக்கும் ஒருவர் இருக்கிறார், அவரே கடவுள். மரணத்தை நேருக்குநேர் எதிர்ப்படுகையில், கடவுளுடைய சட்டத்தை மீறுவதன்மூலம் அவரைவிட்டுவிலகுவது கேடான தீர்மானமாயிருக்குமென நீங்கள் ஒப்புக்கொள்வீர்களல்லவா? எனக்கு உண்மையில் கடவுளில் விசுவாசமிருக்கிறது, உங்களுக்கு இருக்கிறதா? அவருடைய குமாரனில் விசுவாசம் வைக்கிறவர்களுக்கு அவருடைய வார்த்தை உயிர்த்தெழுதலை வாக்குறுதியளிக்கிறது. நீங்கள் இதை நம்புகிறீர்களா? (யோவான் 11:25)’
அல்லது இவ்வாறு சொல்லலாம்: ‘ஒருவேளை இரத்தம் பயன்படுத்தாமல் அந்த நோயாளியைக் கையாளும் முறையை அவர்தாமே அறியாதிருப்பதையும் இது குறிக்கலாம். கூடுமானால், தேவைப்பட்ட அனுபவத்தையுடைய ஒரு மருத்துவரோடு அவரைத் தொடர்புகொள்ளவைக்க நாங்கள் முயற்சி செய்கிறோம், அல்லது மற்றொரு மருத்துவரின் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்கிறோம்.’