யெகோவாவின் மக்கள் விசுவாசத்தில் உறுதிப்பட்டவர்களாகிறார்கள்
“சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்கு நாள் பெருகின.”—அப்போஸ்தலர் 16:5.
1. கடவுள் எவ்விதமாக அப்போஸ்தலனாகிய பவுலை பயன்படுத்தினார்?
யெகோவா தேவன் தர்சு பட்டணத்து சவுலை “தெரிந்து கொண்ட பாத்திரமாகப்” பயன்படுத்தினார். அப்போஸ்தலனாகிய பவுலாக அவன் ‘அநேக பாடுகளை அனுபவித்தான்.’ ஆனால் அவனுடைய மற்றும் மற்றவர்களுடைய ஊழியத்தின் மூலமாக யெகோவாவின் அமைப்பு ஐக்கியத்தையும் மகத்தான வளர்ச்சியையும் அனுபவித்துக் களித்தது.—அப்போஸ்தலர் 9:15, 16.
2. அப்போஸ்தலர் 13:1–16:5-ஐ சிந்திப்பது ஏன் பிரயோஜனமாயிருக்கும்?
2 புறஜாதிகள் அதிகரித்துவரும் எண்ணிக்கையில் கிறிஸ்தவர்களாக மாறிக்கொண்டிருந்தனர். ஆளும் குழுவின் அதிமுக்கியமான ஒரு கூட்டம் கடவுளுடைய மக்களின் மத்தியில் ஐக்கியத்தை வளர்க்கவும் விசுவாசத்தில் அவர்களை ஸ்திரப்பட்டவர்களாக்கவும் அதிகத்தைச் செய்தது. அப்போஸ்தலர் 13:1–16:5-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இவைகளையும் மற்ற வளர்ச்சிகளையும் சிந்திப்பது அதிக பிரயோஜனமாயிருக்கும். ஏனென்றால் யெகோவாவின் சாட்சிகள் இப்பொழுது இதே போன்ற வளர்ச்சியையும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் அனுபவித்து வருகிறார்கள். (ஏசாயா 60:22) (இந்தப் பிரதியிலுள்ள அப்போஸ்தலர் நடபடிகளின் கட்டுரைகளைத் தனிப்பட்ட படிப்பில் படிக்கையில், கொட்டை எழுத்துக்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகளை வாசிக்கும்படியாக நாங்கள் உங்களுக்கு ஆலோசனை தருகிறோம்.)
மிஷனரிகள் செயலில் இறங்குகிறார்கள்
3. அந்தியோகியாவில் “தீர்க்கதரிசிகளாலும் போதகர்களாலும்” என்ன வேலை செய்யப்பட்டது?
3 சீரியாவில் அந்தியோகியாவிலிருந்த சபையினால் அனுப்பிவைக்கப்பட்ட மனிதர்கள், விசுவாசிகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டவர்களாவதற்கு உதவிசெய்தார்கள். (13:1–5) அந்தியோகியாவில் பர்னபாவும் சிமியோனும் (நீகர்) சிரேனே ஊரானாகிய லூகியும், மனாயீனும், தர்சு பட்டணத்து சவுலும் “தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும்” இருந்தார்கள். தீர்க்கதரிசிகள் கடவுளுடைய வார்த்தைக்கு விளக்கமளித்து சம்பவங்களை முன்னறிவிக்கையில், போதகர்கள் வேதவாக்கியங்களிலும் பக்தியாக வாழ்க்கை நடத்துவதிலும் அறிவுரைகளைக் கொடுத்தார்கள். (1 கொரிந்தியர் 13:8; 14:4) பர்னபாவும் பவுலும் விசேஷித்த ஒரு நியமனத்தைப் பெற்றுக்கொண்டார்கள். பர்னபாவின் உறவினனான மாற்குவை அழைத்துக்கொண்டு அவர்கள் சீப்புருத் தீவுக்குப் போனார்கள். (கொலோசெயர் 4:10) சாலமி பட்டணத்தின் கிழக்குத் துறைமுகப் பகுதியில் ஜெப ஆலயங்களில் அவர்கள் பிரசங்கித்தார்கள், ஆனால் யூதர்கள் நன்கு செவி சாய்த்ததற்கு எந்தப் பதிவுமில்லை. இப்படிப்பட்டவர்கள் பொருளாதாரத்தில் வளமாக இருந்ததன் காரணமாக அவர்களுக்கு மேசியாவுக்கான என்ன தேவை இருந்தது?
4. சீப்புருவில் மிஷனரிகள் தொடர்ந்து பிரசங்கித்தபோது என்ன சம்பவித்தது?
4 சீப்புருவில் கடவுள் மற்ற சாட்சி வேலையை ஆசீர்வதித்தார். (13:6–12) பாப்போ பட்டணத்தில் மிஷனரிகள் யூத மாயவித்தைக்காரனும் பொய்த் தீர்க்கதரிசியுமாகிய பர்யேசுவை (எலிமா) எதிர்ப்பட்டார்கள். அவன், செர்கியுபவுல் என்னும் அதிபதி வேதவசனத்தைக் கேட்பதைத் தடை செய்ய முயன்றபோது, சவுல் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் சொன்னதாவது: ‘எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, யெகோவாவுடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?’ அப்பொழுது, கடவுளுடைய தண்டனையின் கை சிலகாலம் எலிமாவைக் குருடாக்கியது, செர்கியுபவுல் “யெகோவாவுடைய (NW) உபதேசத்தைக் குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.”
5, 6. (எ) பிசீதிய அந்தியோகியாவிலுள்ள ஜெபஆலயத்தில் பவுல் பேசியபோது, இயேசுவைப் பற்றி அவன் என்ன சொன்னான்? (பி) பவுலின் பேச்சு என்ன பாதிப்பைக் கொண்டிருந்தது?
5 சீப்புருவிலிருந்து, பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் சிறிய ஆசியாவிலுள்ள பெர்கே பட்டணத்துக்குக் கப்பலேறிச் சென்றார்கள். பவுலும் பர்னபாவும் வடக்கு நோக்கி ‘ஆறுகளால் வந்த மோசங்களும் கள்ளர்களால் வந்த மோசங்களும்’ இருந்த மலைகளின் கணவாய் வழியாகப் பிசீதியாவிலுள்ள அந்தியோகியாவுக்குச் சென்றிருக்க வேண்டும். (2 கொரிந்தியர் 11:25, 26) அங்கே பவுல் ஜெப ஆலயத்தில் பேசினான். (13:13–41) அவன் இஸ்ரவேலோடு கடவுளுடைய செயல்தொடர்புகளை விமர்சனம் செய்து தாவீதின் வம்சாவழியில் வந்த இயேசுவை இரட்சகராக அடையாளம் காட்டினான். யூத ஆட்சியாளர்கள் இயேசுவைக் கொல்லும்படியாக வற்புறுத்தியிருந்தபோதிலும், கடவுள் அவரை உயிர்த்தெழுப்பியபோது அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்கு நிறைவேறியது. (சங்கீதம் 2:7; 16:10; ஏசாயா 55:3) பவுல் தனக்குச் செவிசாய்த்துக் கொண்டிருந்தவர்களை, கிறிஸ்துவின் மூலமாகக் கடவுள் அருளும் இரட்சிப்பின் ஈவை அவமதிக்காதபடி எச்சரித்தான்.—ஆபகூக் 1:5, செப்டுவஜின்ட்.
6 இன்று யெகோவாவின் சாட்சிகள் கொடுக்கும் பொதுப்பேச்சுகளைப் போலவே, பவுலின் பேச்சு அக்கறையைத் தூண்டியது. (13:42–52) அடுத்த ஓய்வுநாளில் ஏறக்குறைய பட்டணத்தார் அனைவருமே யெகோவாவின் வசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள். இதனால் யூதர்கள் பொறாமையினால் நிறைந்தவர்களானார்கள். ஏன், ஒரே வாரத்தில், மிஷனரிமார்கள், யூதர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் செய்ததைவிட அதிகமான புறஜாதிகளை மதம் மாற்றியிருந்தார்கள்! யூதர்கள் தூஷணமாகப் பவுலுக்கு எதிரிடையாய்ப் பேசியதால், ஆவிக்குரிய வெளிச்சத்தை வேறிடத்தில் பிரகாசிக்கச் செய்வதற்கு அது சமயமாயிருந்தது. அவர்கள் பின்வருமாறு சொல்லப்பட்டார்கள்: ‘நீங்கள் தேவ வசனத்தைத் தள்ளி, உங்களை நித்திய ஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.’—ஏசாயா 49:6.
7. பவுலும் பர்னபாவும் துன்புறுத்தலுக்கு எவ்விதமாகப் பிரதிபலித்தார்கள்?
7 இப்பொழுது புறஜாதியார் களிகூர ஆரம்பித்தார்கள், நித்திய ஜீவனுக்குச் சரியான மனநிலையைக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் விசுவாசிகளானார்கள். என்றபோதிலும் யெகோவாவின் வசனம் அத்தேசமெங்கும் எடுத்துச் சொல்லப்பட்டபோது யூதர்கள் கனமுள்ள ஸ்திரீகளையும் (ஒருவேளை அவர்களுடைய கணவன்மார்களையும் மற்றவர்களையும் அழுத்தத்திற்குட்படுத்த) பட்டணத்து முதலாளிகளையும், பவுலையும் பர்னபாவையும் துன்புறுத்தவும் அவர்களுடைய எல்லைகளுக்குப் புறம்பாக அவர்களைத் துரத்திவிடவும் தூண்டினார்கள். ஆனால் அது மிஷனரிமார்களை தடுத்துநிறுத்தவில்லை. அவர்கள் வெறுமென “தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு” கலாத்தியாவின் ரோம மாகாணத்தில் முக்கிய நகரமாகிய இக்கோனியாப் பட்டணத்துக்குப் (நவீன கான்யா) போனார்கள். (லூக்கா 9:5; 10:11) சரி, பிசீதிய அந்தியோகியாவில் பின்னால் விட்டுவரப்பட்ட சீஷர்களைப் பற்றி என்ன? விசுவாசத்தில் ஸ்திரப்பட்டவர்களாகும்படி செய்யப்பட்டபடியால், அவர்கள் “சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும்” நிரப்பப்பட்டார்கள். எதிர்ப்பு ஆவிக்குரிய முன்னேற்றத்தைத் தடைசெய்ய வேண்டிய அவசியமில்லை என்பதைக் காண இது நமக்கு உதவிசெய்கிறது.
துன்புறுத்தலின் மத்தியிலும் விசுவாசத்தில் ஸ்திரம்
8. இக்கோனியா பட்டணத்தில் வெற்றிகரமாகச் சாட்சிக் கொடுத்ததன் விளைவாக என்ன சம்பவித்தது?
8 பவுலும் பர்னபாவும் தாமே, துன்புறுத்தலின் மத்தியிலும் விசுவாசத்தில் ஸ்திரமுள்ளவர்களாக நிரூபித்தார்கள். (14:1–7) இக்கோனியாப் பட்டணத்தில் ஜெப ஆலயத்தில் அவர்கள் சாட்சி கொடுத்ததன் பலனாக, அநேக யூதர்களும் கிரேக்கர்களும் விசுவாசிகளானார்கள். விசுவாசியாத யூதர்கள் புதிய விசுவாசிகளுக்கு எதிராக புறஜாதிகளைத் தூண்டிவிட்ட போது, இரண்டு ஊழியர்களும் கடவுளுடைய அதிகாரத்தினால் தைரியத்தோடே பேசினார்கள். அடையாளங்களைச் செய்யும்படிக்கு அவர்களுக்கு வல்லமையளிப்பதன் மூலம் அவர் தம்முடைய அங்கீகாரத்தைக் காண்பித்தார். இதனால் ஜனங்கள் பிரிந்துபோனார்கள், சிலர் யூதரையும் மற்றவர்கள் அப்போஸ்தலரையும் (அனுப்பப்பட்டவர்கள்) சேர்ந்துகொண்டார்கள். அப்போஸ்தலர்கள் கோழைகளாக இருக்கவில்லை. ஆனால் அவர்களைக் கல்லெறிவதற்காகச் செய்யப்பட்ட சதியை அறியவருகையில், அவர்கள் ஞானமாக தென் கலாத்தியாவில் சிறிய ஆசியாவிலுள்ள பிரதேசமாகிய லிக்கவோனியா நாட்டில் பிரசங்கிப்பதற்காகப் புறப்பட்டுப் போனார்கள். விவேகமுள்ளவர்களாக இருப்பதன் மூலம், நாமும்கூட துன்புறுத்தலின் மத்தியிலும் அநேகமாக ஊழியத்தில் சுறுசுறுப்பாக நிலைத்திருக்க முடியும்.—மத்தேயு 10:23.
9, 10. (எ) ஒரு சப்பாணி குணமாக்கப்பட்டதற்கு லீஸ்திராவிலுள்ள குடிமக்கள் எவ்விதமாகப் பிரதிபலித்தார்கள்? (பி) லீஸ்திராவில் பவுலும் பர்னபாவும் எப்படிப் பிரதிபலித்தார்கள்?
9 லீஸ்திராவின் லிக்கவோனியா பட்டணம் அடுத்து சாட்சியைப் பெற்றுக்கொண்டது. (14:8–18) அங்கே பவுல் பிறப்பிலேயே சப்பாணியாயிருந்த ஒரு மனிதனை குணப்படுத்தினான். இந்த அற்புதத்துக்கு யெகோவாவே காரணம் என்பதை உணராமல், ஜனக்கூட்டத்தார் இவ்விதமாக சத்தமிட்டார்கள்: “தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள்!” லிக்கவோனியா பாஷையிலே இது சொல்லப்பட்டதால், பர்னபாவும் பவுலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறியாதவர்களாக இருந்தார்கள். பவுல் முன்நின்று பேசியதன் காரணமாக ஜனங்கள் அவனை மெர்க்கூரி (தேவர்களின் சொல்திறமிக்க தூதுவர்) என்றும் பர்னபாவை முக்கிய கிரேக்க கடவுளாகிய யூப்பித்தர் என்றும் கருதினார்கள்.
10 யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி, பவுலுக்கும் பர்னபாவுக்கும் பலியிடுவதற்காக எருதுகளையும் பூமாலைகளையும்கூட கொண்டுவந்தார். சாதாரணமாகப் புரிந்துகொள்ளப்படும் கிரேக்குவில் அல்லது மொழிபெயர்ப்பாளர் ஒருவரைப் பயன்படுத்தி, தாங்களும் குறைகளையுடைய வெறும் மனிதர்களே என்றும், மக்கள் இந்த “வீணான காரியங்களை” (உயிரற்ற கடவுட்கள் அல்லது விக்கிரகங்கள்) விட்டுவிட்டு ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பும் பொருட்டு தாங்கள் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களிடம் உடனடியாக விளக்கிச் சொன்னார்கள். (1 இராஜாக்கள் 16:13; சங்கீதம் 115:3–9; 146:6) ஆம், கடவுள் சென்ற காலங்களில் தேசங்களை (ஆனால் எபிரெயர்களை அல்ல) தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தார். ஆனாலும் ‘அவர்களுக்கு மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் தந்து ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் அவர்களுடைய இருதயங்களை நிரப்பி’ தாம் இருப்பது பற்றியும் தம்முடைய நற்குணத்தைப் பற்றியும் சாட்சி விளங்கப்பண்ணாமல் அவர்களை விடவில்லை. (சங்கீதம் 147:8) இப்படிப்பட்ட நியாயமான விளக்கத்தின் மத்தியிலும் பவுலுக்கும் பர்னபாவுக்கும், ஜனங்களைத் தங்களுக்கு பலியிடாதபடிக்கு அவர்களைக் கட்டுப்படுத்துவது அரிதாயிருந்தது. என்றபோதிலும், மிஷனரிமார்கள் தேவர்களாக வணக்கமுறையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவுமில்லை அல்லது அந்தப் பகுதியில் கிறிஸ்தவத்தை நிறுவுவதற்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளவுமில்லை. விசேஷமாக யெகோவா அவருடைய சேவையில் செய்துமுடிக்க நம்மை அனுமதிக்கும் காரியங்களுக்குப் பாராட்டை விரும்பும் மனசாய்வு நமக்கு இருக்குமேயானால் இது நேர்த்தியான ஒரு முன்மாதிரி!
11. “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்” என்ற கூற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
11 திடீரென்று துன்புறுத்தல் அதன் கோரமான தலையைத் தூக்கியது. (14:19–28) எவ்விதமாக? பீசிதிய அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமுள்ள யூதர்களால் தூண்டப்பட்ட ஜனக்கூட்டத்தார் பவுலைக் கல்லெறிந்து அவன் மரித்துப்போனானென்று எண்ணி அவனைப் பட்டணத்துக்கு வெளியே இழுத்துக்கொண்டு போனார்கள். (2 கொரிந்தியர் 11:24, 25) ஆனால் சீஷர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டபோது அவன் எழுந்து ஒருவேளை இருட்டில் இரகசியமாக எவர் பார்வையிலும்படாமல் லீஸ்திராவுக்குள் பிரவேசித்தான். அடுத்தநாள் அவனும் பர்னபாவும் தெர்பைக்குப் போனார்கள். அநேகர் அங்கே சீஷரானார்கள். லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பிவந்து சந்தித்தபோது, மிஷனரிமார்கள் சீஷர்களை திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி உற்சாகப்படுத்தி பின்வருமாறு சொன்னார்கள்: “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்.” கிறிஸ்தவர்களாக நாமும்கூட உபத்திரவங்களை அனுபவிக்க எதிர்பார்த்திருக்க வேண்டும், நம்முடைய விசுவாசத்தை விட்டுக் கொடுப்பதன் மூலம் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள நாம் முயற்சி செய்யக்கூடாது. (2 தீமோத்தேயு 3:12) சபைகளில் மூப்பர்கள் நியமிக்கப்பட்ட அந்தச் சமயத்தில், கலாத்தியருக்குப் பவுலினுடைய நிருபம் எழுதப்பட்டது.
12. பவுலின் முதல் மிஷனரி பிரயாணம் முடிவுக்கு வந்தபோது இரண்டு மிஷனரிமார்களும் என்ன செய்தார்கள்?
12 பவுலும் பர்னபாவும் பிசீதியா நாட்டின் வழியாகக் கடந்து சென்று பம்பிலியா நாட்டின் முக்கிய ஊராகிய பெர்கேவில் வசனத்தைப் பிரசங்கித்தார்கள். காலப்போக்கில், அவர்கள் சீரியாவிலுள்ள அந்தியோகியாவுக்குத் திரும்பிவந்தார்கள். பவுலின் முதல் பயணம் இப்பொழுது முடிவுக்கு வர இரண்டு மிஷனரிமார்களும், “தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும்” சபைக்கு அறிவித்தார்கள். அந்தியோகியாவிலுள்ள சீஷருடனே கூட கொஞ்ச காலம் செலவழிக்கப்பட்டது. இது அவர்கள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டவர்களாகும்படி அதிகத்தைச் செய்தது என்பதில் சந்தேகமில்லை. பிரயாண கண்காணிகளின் சந்திப்புகள் இன்று அதேவிதமான ஆவிக்குரிய பாதிப்புகளைக் கொண்டிருக்கின்றது.
முக்கியமான ஒரு கேள்விக்கு தீர்வு காணப்படுகிறது
13. கிறிஸ்தவம், எபிரெயர் என்றும் யூதரல்லாதவர் என்றும் கட்சிகளாக பிரிந்து போகாதிருக்க வேண்டுமாயின் என்ன தேவைப்பட்டது?
13 விசுவாசத்தில் ஸ்திரம் ஏகயோசனையைத் தேவைப்படுத்தியது. (1 கொரிந்தியர் 1:10) கிறிஸ்தவம் எபிரெயர் என்றும் யூதரல்லாதவர் என்றும் கட்சிகளாக பிரிந்து போகாதிருக்க வேண்டுமாயின், கடவுளுடைய அமைப்புக்குள் திரளாக வந்துகொண்டிருந்த புறஜாதியார் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடித்து விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள வேண்டுமா என்பதை ஆளும் குழு தீர்மானிக்க வேண்டியது அவசியமாயிருந்தது. (15:1–5) ஒருசில மனிதர்கள் ஏற்கெனவே யூதேயாவிலிருந்து சீரிய அந்தியோகியாவுக்குப் பிரயாணம் பண்ணிவந்து புறஜாதி விசுவாசிகள் அவர்கள் விருத்தசேதனமடைந்தாலொழிய இரட்சிக்கப்படமாட்டார்கள் என்பதாக போதகம் பண்ண ஆரம்பித்துவிட்டிருந்தார்கள். (யாத்திராகமம் 12:48) ஆகவே பவுலும் பர்னபாவும் இன்னும் மற்றவர்களும் எருசலேமிலிருந்த அப்போஸ்தலரிடத்திலும் மூப்பரிடத்திலும் அனுப்பப்பட்டார்கள். அங்கேயும்கூட ஒரு சமயம் சட்டத்துக்கு உடன்பாடான மனமுள்ளவர்களாயிருந்த பரிசேயர்கள், புறஜாதிகள் விருத்தசேதனம் அடைந்து நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
14. (எ) எருசலேமில் நடத்தப்பட்ட கூட்டத்தில் வாக்குவாதம் நடைபெற்றபோதிலும் என்ன நல்ல முன்மாதிரி வைக்கப்பட்டது? (பி) அந்தச் சமயத்தில் பேதுருவின் விவாதத்தின் சுருக்கம் என்னவாக இருந்தது?
14 கடவுளுடைய சித்தத்தை உறுதிசெய்வதற்காகக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. (15:6–11) ஆம், வாக்குவாதம் நடைபெற்றது, ஆனால் பலமான நம்பிக்கைகளையுடைய மனிதர்கள் தங்கள் கருத்துகளை வெளியிடுகையில் அங்கு சண்டை இல்லை—இன்று மூப்பர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி! சரியான சமயத்தில் பேதுரு சொன்னதாவது: ‘புறஜாதியார் [கொர்நேலியு போன்றவர்கள்] என்னுடைய வாயினாலே வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி என்னைத் தெரிந்து கொண்டார். பரிசுத்த ஆவியை அவர்களுக்குத் தந்தருளி அவர்களைக் குறித்து சாட்சிகொடுத்து, அவர்களுக்கும் நமக்குமிடையே யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார். [அப்போஸ்தலர் 10:44–47] இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கமுடியாத நுகத்தடியை [நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படியான கடமை] அவர்கள் கழுத்தின் மேல் சுமத்துவதினால் நீங்கள் ஏன் தேவனை சோதிக்கிறீர்கள்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் [மாம்சத்தின்படி யூதர்கள்] இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே.’ விருத்தசேதனமில்லாத புறஜாதிகளைக் கடவுள் ஏற்றுக்கொண்டது, இரட்சிக்கப்படுவதற்கு விருத்தசேதனமும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதும் அவசியமில்லை என்பதைக் காண்பித்தது.—கலாத்தியர் 5:1.
15. என்ன அடிப்படைக் குறிப்புகளை யாக்கோபு சொன்னான்? புறஜாதி கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில் அவன் என்ன அறிவுரை கூறினான்?
15 பேதுரு பேசி முடித்தபோது, கூடிவந்திருந்த அனைவரும் அமைதியாக இருந்தார்கள். ஆனால் இன்னும் அதிகம் சொல்லப்பட வேண்டியிருந்தது. (15:12–21) பர்னபாவும் பவுலும் அவர்களைக் கொண்டு புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்களைக் குறித்து விவரித்து சொன்னார்கள். பின்னர் அக்கிராசினராக இருந்த இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபு சொன்னதாவது: ‘புறஜாதிகளிலிருந்து தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தை தெரிந்துகொள்ளும்படி தேவன் எவ்விதமாகத் தம்முடைய கவனத்தை திருப்பியிருக்கிறார் என்பதை சிமியோன் [பேதுருவின் எபிரெய பெயர்] விவரித்து சொல்லியிருக்கிறான்.’ விழுந்து போன “தாவீதின் கூடாரம்” (தாவீதின் வம்சத்தில் ராஜரீகம் மீண்டும் நிலைநிறுத்தப்படுவது) மறுபடியும் கட்டப்படும் என்பதாக முன்னறிவிக்கப்பட்ட காரியம், இயேசுவின் சீஷர்கள் (ராஜ்ய சுதந்திரவாளிகள்) யூதர்களிலிருந்தும் புறஜாதிகளிலிருந்தும் கூட்டிச் சேர்க்கப்படுவதில் நிறைவேறிவருவதாக யாக்கோபு குறிப்பிட்டான். (ஆமோஸ் 9:11, 12, செப்டுவஜின்ட்; ரோமர் 8:17) இது கடவுளுடைய நோக்கமாயிருப்பதால் சீஷர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். யாக்கோபு, புறஜாதி கிறிஸ்தவர்களைப் பின்வருகின்றவற்றிலிருந்து விலகியிருக்கும்படியாக அறிவுரைகூறி எழுதினான்: (1) விக்கிரகங்களால் கறைப்படுத்தப்பட்டவைகள், (2) வேசித்தனம், (3) இரத்தம் மற்றும் நெருங்குண்டு செத்தது. தடைசெய்யப்பட்டிருந்த இவை ஒவ்வொரு ஓய்வுநாளிலும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்ட மோசேயின் எழுத்துக்களில் இடம்பெற்றிருந்தன.—ஆதியாகமம் 9:3, 4; 12:15–17; 35:2, 4.
16. முதல் நூற்றாண்டு ஆளும்குழுவின் நிருபம் என்ன மூன்று குறிப்புகளின் பேரில் இந்நாள் வரையாகவும் வழிகாட்டுதலைக் கொடுக்கிறது?
16 ஆளும்குழு இப்பொழுது அந்தியோகியா, சீரியா மற்றும் சிலிசியாவிலுள்ள புறமத கிறிஸ்தவர்களுக்கு ஒரு நிருபத்தை அனுப்பினார்கள். (15:22–35) பரிசுத்த ஆவியும் நிருபத்தை எழுதியவர்களும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும்; (ஒருசில ஆட்களால் வழக்கமாக உட்கொள்ளப்பட்ட) இரத்தத்திற்கும்; இரத்தத்தை வடியவிடாமல் நெருங்குண்டு செத்ததிற்கும் (அநேக புறஜாதியார் இப்படிப்பட்ட இறைச்சியைச் சுவையான உணவாகக் கருதினர்); வேசித்தனத்திற்கும் (கிரேக்குவில் போர்னியா, வேதப்பூர்வமான விவாகத்துக்குப் புறம்பாகத் தவறான உடலுறவுகள்) விலகியிருக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். இப்படியாக விலகியிருப்பதன் மூலம், அவர்கள், இன்று “அவசியமான இவைகளோடு” இணங்கி நடப்பதன் காரணமாக யெகோவாவின் சாட்சிகளின் விஷயத்தில் இருப்பது போலவே, ஆவிக்குரிய பிரகாரமாக செழிப்பாக இருப்பார்கள். “சுகமாயிருப்பீர்களாக” என்ற வார்த்தைகள் “பிரியாவிடை நல்வாழ்த்துக்கு” சரியாக இருந்தது. இந்தக் கட்டளைகள் அடிப்படையில் உடல்நல நடவடிக்கையோடு சம்பந்தப்பட்டிருப்பதாக முடிவுசெய்யப்படக்கூடாது. நிருபம் அந்தியோகியாவில் வாசிக்கப்பட்டபோது, அதனாலுண்டாகிய உற்சாகமூட்டுதலுக்காக சபையார் சந்தோஷப்பட்டார்கள். அந்தச் சமயத்தில் அந்தியோகியாவிலுள்ள கடவுளுடைய மக்கள் பவுல், சீலா, பர்னபா இன்னும் மற்றவர்களுடைய உற்சாகமூட்டும் வார்த்தைகளாலும்கூட விசுவாசத்தில் ஸ்திரப்பட்டவர்களானார்கள். நாமும்கூட உடன்விசுவாசிகளை உற்சாகப்படுத்துவதற்கும் கட்டியெழுப்புவதற்கும் வழிகளைத் தேடிக்கொண்டிருப்போமாக.
இரண்டாவது மிஷனரி பிரயாணம் ஆரம்பமாகிறது
17. (எ) இரண்டாவது மிஷனரி பிரயாணம் திட்டமிடப்பட்டபோது, என்ன பிரச்னை எழுந்தது? (பி) பவுலும் பர்னபாவும் தங்கள் வாக்குவாதத்தை எவ்விதமாகக் கையாண்டார்கள்?
17 இரண்டாவது மிஷனரி பிரயாணம் திட்டமிடப்படுகையில் ஒரு பிரச்னை எழும்பியது. (15:36–41) பவுல், தானும் பர்னபாவும் சீப்புருவிலும் சிறிய ஆசியாவிலுமுள்ள சபைகளை மீண்டும் சென்று சந்திக்கவேண்டும் என்று யோசனை கூறினான். பர்னபா அதற்கு சம்மதித்தான். ஆனால் அவன் தன் உறவினனான மாற்குவைத் தன்னோடுகூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்று விரும்பினான். பவுல் இதை ஒத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால் மாற்கு பம்பிலியா நாட்டிலே அவர்களை விட்டுப் போய்விட்டிருந்தான். அப்பொழுது அவர்களுக்குள்ளே “கடுங்கோபமூண்டது.” ஆனால் பவுலோ அல்லது பர்னபாவோ தங்களுடைய சொந்த விவகாரத்தில் மற்ற மூப்பர்களை அல்லது ஆளும் குழுவை ஈடுபடுத்த முயற்சி செய்வதன் மூலம் தங்களுடைய சொந்த நியாயநிரூபணத்தைத் தேடிக்கொண்டில்லை. என்னே ஒரு நேர்ந்தியான முன்மாதிரி!
18. பவுலும் பர்னபாவும் பிரிந்து போனதால் என்ன நேரிட்டது? இந்தச் சம்பவத்திலிருந்து நாம் எப்படி நன்மையடையலாம்?
18 ஆனால் இந்த வாக்குவாதம் அவர்களைப் பிரிந்துபோகச் செய்தது. பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு சீப்புருவுக்குப் போனான். பவுல் தன் கூட்டாளியாகிய சீலாவோடு, “சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து சபைகளைத் திடப்படுத்தினான்.” பர்னபா, குடும்ப பிணைப்புகளின் செல்வாக்குக்கு உட்பட்டிருக்கக்கூடும், ஆனால் பவுலின் அப்போஸ்தல உரிமையையும் “தெரிந்துகொண்ட பாத்திரமாக” அவன் தெரிந்துகொள்ளப்பட்டதையும் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். (அப்போஸ்தலர் 9:15) நம்மைப் பற்றி என்ன? இந்தச் சம்பவம், தேவராஜ்ய அதிகாரத்தை மதித்துணரவும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யோடு முழுமையாக ஒத்துழைக்கவும் வேண்டிய அவசியத்தை நம் மனதில் பதிய வைக்க வேண்டும்!—மத்தேயு 24:45–47.
சமாதானத்தில் முன்னேற்றம்
19. இன்றைய நாளைய இளைஞருக்கு தீமோத்தேயுவில் என்ன முன்மாதிரி இருக்கிறது?
19 இந்த வாக்குவாதம் சபையின் சமாதானத்தைப் பாதிக்க அனுமதிக்கப்படவில்லை. கடவுளுடைய மக்கள் தொடர்ந்து விசுவாசத்தில் ஸ்திரப்பட்டவர்களானார்கள். (16:1–5) பவுலும் சீலாவும் தெர்பைக்கும் பின்னர் லீஸ்திராவுக்கும் போனார்கள். அங்கே யூத விசுவாசியான ஐனிக்கேயாளுக்கும் அவிசுவாசியான அவளுடைய கிரேக்க கணவனுக்கும் மகனாக இருந்த தீமோத்தேயு வாழ்ந்துவந்தான். தீமோத்தேயு இளைஞனாக இருந்தான். ஏனென்றால் 18 அல்லது 20 வருடங்களுக்குப் பின்னும்கூட அவன் பின்வருமாறு சொல்லப்பட்டான்: “உன் இளமையைக் குறித்து ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாதிருப்பானாக.” (1 தீமோத்தேயு 4:12) அவன் “லீஸ்திராவிலும் [சுமார் 18 மைல்கள் அப்பால் இருந்த] இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சிபெற்றவனா”யிருந்தபடியால் அவனுடைய சிறந்த ஊழியத்துக்காகவும் தெய்வீக குணாதிசயங்களுக்காகவும் நன்கு அறியப்பட்டவனாயிருந்தான். கிறிஸ்தவ இளைஞர்கள் இன்று அதேவிதமான நற்பெயரை வளர்த்துக்கொள்வதற்கு யெகோவாவின் உதவியை நாடுகிறவர்களாக இருக்க வேண்டும். பவுல் தீமோத்தேயுவுக்கு விருத்தசேதனம் பண்ணினான், ஏனென்றால் அவர்கள் தீமோத்தேயுவின் தகப்பன் ஒரு புறஜாதியான் என்பதை அறிந்திருந்த யூதர்களுடைய வீடுகளுக்கும் ஜெபஆலயங்களுக்கும் செல்வார்கள். மேலும் மேசியாவைப் பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்திலிருந்த யூத ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருந்த வாய்ப்பை எதுவும் தடைசெய்வதைப் பவுல் விரும்பவில்லை. பைபிள் நியமங்களை மீறாமலே இன்று யெகோவாவின் சாட்சிகளும்கூட எல்லாவிதமான ஆட்களுக்கும் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாகச் செய்ய தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள்.—1 கொரிந்தியர் 9:19–23.
20. முதல் நூற்றாண்டு ஆளும் குழுவின் நிருபத்துக்கு கீழ்ப்படிந்தது என்ன பாதிப்பைக் கொண்டிருந்தது? இது எவ்விதமாக நம்மைப் பாதிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
20 தீமோத்தேயுவை உதவியாளனாகக் கொண்டு, பவுலும் சீலாவும் சீஷர்களுக்கு ஆளும் குழு விதித்த சட்டங்களைக் கைக்கொள்ளும்படி அவர்களிடம் ஒப்புவித்தார்கள். என்ன விளைவடைந்தது? ஒருவேளை சீரியா, சிலிசியா மற்றும் கலாத்தியாவைக் குறித்துப் பேசுகிறவனாய் லூக்கா எழுதியதாவது: “சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு நாளுக்கு நாள் பெருகின.” ஆம் ஆளும்குழுவின் நிருபத்துக்கு கீழ்ப்படிந்தது ஐக்கியத்திலும் ஆவிக்குரிய செழுமையிலும் விளைவடைந்தது. யெகோவாவின் மக்கள் விசுவாசத்தில் ஐக்கியப்பட்டவர்களாகவும் ஸ்திரப்பட்டவர்களாகவும் நிலைத்திருக்க வேண்டியதாயிருக்கும் நம்முடைய நெருக்கடியான காலங்களுக்கு என்னே ஒரு நேர்த்தியான முன்மாதிரி! (w90 6/15)
நீங்கள் எவ்விதமாகப் பதிலளிப்பீர்கள்?
◻ துன்புறுத்தலுக்கு பவுலும் பர்னபாவும் எவ்வாறு பிரதிபலித்தார்கள்?
◻ “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்” என்ற கூற்றிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
◻ முதல்–நூற்றாண்டு ஆளும் குழுவினால் அனுப்பிவைக்கப்பட்ட நிருபத்தின் மூன்று குறிப்புகளிலிருந்து நாம் என்ன அறிவுரையைப் பெற்றுக்கொள்கிறோம்?
◻ யெகோவாவின் முதல் நூற்றாண்டு சாட்சிகளை விசுவாசத்தில் ஸ்திரப்பட்டவர்களாகும்படிச் செய்த அம்சங்கள் இன்று நமக்கு எவ்வாறு பொருந்துகின்றன?