யார் ‘இரட்சிக்கப்படுவார்கள்’?
“யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிற அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள்.”—அப்போஸ்தலர் 2:21, NW.
1. பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாள் ஏன் உலக சரித்திரத்தில் ஒரு திருப்புகட்டமாக இருந்தது?
உலக சரித்திரத்திலேயே பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாள் ஒரு திருப்புகட்டமாய் விளங்கியது. ஏன்? ஏனென்றால் அந்த நாளில் ஒரு புதிய தேசம் பிறந்தது. முதலில், அது ஒன்றும் அவ்வளவு பெரிய தேசமாய் இல்லை—இயேசுவின் 120 சீஷர்கள்தான் எருசலேமிலிருந்த ஒரு மாடி அறையில் கூடியிருந்தனர். ஆனால் இன்றோ, அன்றைக்கு இருந்த பெரும்பாலான தேசங்கள் மறக்கப்பட்டுப்போயிருக்கையில், அந்த மாடி அறையில் பிறந்த தேசம் இன்றும் நம்முடன் இருக்கிறது. இந்த உண்மை நம் அனைவருக்கும் மிகமிக முக்கியத்துவமுடையது; ஏனென்றால் மனிதவர்க்கத்திற்கு முன் கடவுளுடைய சாட்சியாய் இருப்பதற்கு அவரால் நியமிக்கப்பட்ட தேசம் இதுவே.
2. அற்புதமான என்ன சம்பவங்கள் புதிய தேசத்தின் பிறப்பை அடையாளப்படுத்தி காட்டின?
2 அப்புதிய தேசம் தோன்ற ஆரம்பித்தபோது, யோவேலின் தீர்க்கதரிசன வார்த்தைகளை நிறைவேற்றிய முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்தன. இச்சம்பவங்களைப் பற்றி அப்போஸ்தலர் 2:2-4-ல் நாம் வாசிக்கிறோம்: “அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.” இந்த முறையில், விசுவாசமுள்ள அந்த 120 ஆண்களும் பெண்களும் ஓர் ஆவிக்குரிய தேசமாயினர்; அப்போஸ்தலன் பவுல் பிற்பாடு அந்த முதல் அங்கத்தினர்களை, ‘தேவனுடைய இஸ்ரவேலர்’ என்று அழைத்தார்.—கலாத்தியர் 6:16.
3. யோவேல் உரைத்த என்ன தீர்க்கதரிசனம் பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாள் அன்று நிறைவேற்றமடைந்தது?
3 ‘பலத்த காற்று அடிப்பதை’ ஆராய்வதற்காக திரளான ஜனங்கள் கூடிவந்தனர்; யோவேல் தீர்க்கதரிசனங்களில் ஒன்று நிறைவேறுவதை அப்போஸ்தலன் பேதுரு அவர்களுக்கு விளக்கிக் கூறினார். எந்தத் தீர்க்கதரிசனம்? சரி, அவர் என்ன சொன்னார் என்பதை செவிகொடுத்துக் கேளுங்கள்: “கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழப் பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். அப்பொழுது கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] நாமத்தை தொழுதுகொள்கிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.” (அப்போஸ்தலர் 2:17-21) பேதுரு மேற்கோள் காட்டிய இந்த வார்த்தைகள் யோவேல் 2:28-32-ல் காணப்படுகின்றன; அவற்றின் நிறைவேற்றம் யூத தேசத்திற்கான காலம் கடந்துவருவதை அர்த்தப்படுத்தியது. ‘யெகோவாவுடைய பெரிதும் பிரகாசமுமான நாள்,’ அதாவது உண்மையற்ற இஸ்ரவேலருக்கு கணக்குத்தீர்க்கும் காலம் அருகில் இருந்தது. ஆனால் யார் இரட்சிக்கப்படுவார்கள், அல்லது பாதுகாக்கப்படுவார்கள்? இது எதற்கு முன்நிழலாக இருந்தது?
தீர்க்கதரிசனத்தின் இரு நிறைவேற்றங்கள்
4, 5. வரவிருக்கும் சம்பவங்களைக் குறித்து பேதுரு என்ன அறிவுரை கொடுத்தார், அந்த அறிவுரை ஏன் அவருடைய நாளுக்கும் அப்பால் பொருந்துவதாக இருந்தது?
4 பொ.ச. 33-க்கு பின்வந்த ஆண்டுகளில், தேவனுடைய ஆவிக்குரிய இஸ்ரவேலர் செழித்தோங்கினார்கள், மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலரோ செழித்தோங்கவில்லை. பொ.ச. 66-ல், மாம்சப்பிரகாரமான இஸ்ரவேல் ரோமுடன் போரிட்டுக்கொண்டிருந்தது. பொ.ச. 70-ல், இஸ்ரவேல் ஏறக்குறைய இருந்த இடம் தெரியாமல் போனது, எருசலேமும் அதோடுகூட அதன் ஆலயமும் எரிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. வரவிருந்த துயரமான சம்பவத்தைக் குறித்து பொ.ச. 33 பெந்தெகொஸ்தே அன்று பேதுரு சிறந்த அறிவுரை வழங்கினார். மீண்டும் யோவேலை மேற்கோள் காண்பித்து, அவர் சொன்னதாவது: “யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிற அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள்.” யெகோவாவின் பெயரில் கூப்பிடுவதற்கு ஒவ்வொரு யூதனும் தனிப்பட்ட தீர்மானம் எடுக்க வேண்டியதாயிருந்தது. இது, பேதுருவின் பின்வரும் கூடுதலான அறிவுரைகளுக்குச் செவிசாய்ப்பதையும் உட்படுத்தியது: “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.” (அப்போஸ்தலர் 2:38) பேதுருவுக்கு செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், இஸ்ரவேல் ஒரு தேசமாக சேர்ந்து ஒதுக்கித்தள்ளிய இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது.
5 யோவேலின் அந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் முதல் நூற்றாண்டிலிருந்த சாந்தகுணமுள்ள ஆட்கள்மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. என்றபோதிலும், அதைவிட பெரும் பாதிப்பை அவை இன்று ஏற்படுத்துகின்றன; ஏனென்றால், 20-ம் நூற்றாண்டில் நடக்கும் சம்பவங்கள் காண்பிக்கிறபடி, யோவேல் தீர்க்கதரிசனத்தின் இரண்டாவது நிறைவேற்றம் நடந்திருக்கிறது. எப்படி என்பதை நாம் பார்க்கலாம்.
6. 1914 நெருங்கியபோது எவ்வாறு தேவனுடைய இஸ்ரவேலரின் அடையாளம் தெளிவாக தெரிய ஆரம்பித்தது?
6 அப்போஸ்தலருடைய மரணத்திற்குப் பின்பு, தேவனுடைய இஸ்ரவேலர் பொய் கிறிஸ்தவம் என்ற களைகளால் மறைக்கப்பட ஆரம்பித்தனர். இருப்பினும், 1914-ல் ஆரம்பித்த முடிவு காலத்தின்போது, ஆவிக்குரிய தேசத்தின் அடையாளம் மீண்டும் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. இவையனைத்தும் கோதுமை மற்றும் களைகளைப் பற்றிய இயேசுவினுடைய உவமையின் நிறைவேற்றமாகும். (மத்தேயு 13:24-30, 36-43) 1914 நெருங்க ஆரம்பித்தபோது, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் உண்மையற்ற கிறிஸ்தவமண்டலத்திலிருந்து தங்களை தனியே பிரித்துக்கொள்ள ஆரம்பித்தனர்; அதன் பொய்க் கோட்பாடுகளை தைரியமாய் ஒதுக்கித் தள்ளி, ‘தேசங்களுக்கு குறிக்கப்பட்ட காலம்’ முடிவடையப்போவதைப் பற்றி பிரசங்கித்தனர். (லூக்கா 21:24, NW) ஆனால், 1914-ல் ஆரம்பமான முதல் உலகப் போர், விவாதங்களை எழுப்பியது; அந்த விவாதங்களை எதிர்ப்படுவதற்கு அவர்கள் ஆயத்தமில்லாமல் இருந்தனர். தீவிரமான அழுத்தத்தினால் பலர் பின்தங்கிவிட்டனர், சிலர் இணங்கிவிட்டனர். 1918-க்குள்ளாக அவர்களுடைய பிரசங்க வேலை ஏறக்குறைய நின்றுவிட்டது.
7. (அ) பொ.ச. 33 பெந்தெகொஸ்தே அன்று நடந்ததைப் போன்ற என்ன சம்பவம் 1919-ல் நடந்தது? (ஆ) 1919 முதற்கொண்டு, யெகோவாவின் ஊழியர்கள்மீது கடவுளுடைய பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது என்ன விளைவை ஏற்படுத்தியது?
7 இருப்பினும், அது அதிக காலம் நீடிக்கவில்லை. 1919-ம் ஆண்டு தொடங்கி, யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியை தம்முடைய ஜனங்கள்மீது ஊற்ற ஆரம்பித்தார்; அது பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளை நினைவுபடுத்திய விதத்தில் இருந்தது. நிச்சயமாகவே, 1919-ல் அந்நிய பாஷை பேசுதலோ பலத்த காற்று அடித்தலோ நிகழவில்லை. அற்புதங்களுக்கான காலம் கடந்த காலத்திலேயே முடிந்துவிட்டது என்பதை 1 கொரிந்தியர் 13:8-ல் உள்ள பவுலின் வார்த்தைகளிலிருந்து நாம் புரிந்துகொள்கிறோம். என்றபோதிலும், கடவுளுடைய ஆவி கிரியை செய்வது 1919-ல் தெளிவாக தெரிய ஆரம்பித்தது; அந்தச் சமயத்தில், அ.ஐ.மா., ஒஹாயோ, சீடர் பாய்ன்ட்டிலுள்ள ஒரு மாநாட்டில், உண்மை கிறிஸ்தவர்கள் மீண்டும் உயிர்ப்பூட்டப்பட்டு ராஜ்யத்தின் நற்செய்தியை மறுபடியும் பிரசங்கிக்க ஆரம்பித்தனர். அவர்கள் 1922-ல் சீடர் பாய்ன்ட்டுக்குத் திரும்பிவந்து, “ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்,” என்ற வேண்டுகோளால் உந்துவிக்கப்பட்டனர். முதல் நூற்றாண்டில் நடந்ததுபோலவே, கடவுளுடைய ஆவி ஊற்றப்பட்டதன் விளைவை கவனிக்கும்படி உலகத்தார் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவரும்—ஆண்களும் பெண்களும், முதியோரும் இளைஞரும்—‘தீர்க்கதரிசனஞ்சொல்ல’ அதாவது, “தேவனுடைய மகத்துவங்களை” அறிவிக்க ஆரம்பித்தனர். (அப்போஸ்தலர் 2:11) பேதுருவை போலவே, “மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள்” என்று சாந்தகுணமுள்ளோருக்கு புத்திமதி அளித்தனர். (அப்போஸ்தலர் 2:40) இதற்குப் பிரதிபலித்தவர்கள் அதை எப்படி செய்ய முடிந்தது? “யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிற அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள்” என்று யோவேல் 2:32-ல் (NW) காணப்படும் யோவேலின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்ததன் மூலமே.
8. 1919 முதற்கொண்டு எவ்வாறு தேவனுடைய இஸ்ரவேலருக்கு காரியங்கள் முன்னேறியிருக்கின்றன?
8 அந்த ஆரம்ப வருடங்கள் முதற்கொண்டு, தேவனுடைய இஸ்ரவேலரின் நடவடிக்கைகள் முன்னோக்கி சென்றிருக்கின்றன. அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் முத்திரைபோடுதல் வெகுமுன்னதாகவே நடந்துவிட்டதாக தெரிகிறது. 1930-கள் முதற்கொண்டு பூமிக்குரிய நம்பிக்கையுடைய சாந்தகுணமுள்ள திரள்கூட்டத்தினர் காட்சியில் தோன்ற ஆரம்பித்திருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 7:3, 9) அனைவரும் அவசரத்தன்மையை உணருகின்றனர், ஏனென்றால் அதைவிட இன்னும் பயங்கரமான யெகோவாவின் நாளை நாம் நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை யோவேல் 2:28, 29-ன் இரண்டாவது நிறைவேற்றம் காண்பிக்கிறது; அப்பொழுது உலகளாவிய மத, அரசியல், மற்றும் வர்த்தக ஒழுங்குமுறை அழிக்கப்படும். யெகோவா நம்மை மீட்டுக்கொள்வார் என்ற முழு விசுவாசத்துடன் ‘யெகோவாவின் பெயரில் கூப்பிடுவதற்கு’ நமக்கு எல்லா காரணமும் இருக்கிறது!
நாம் எவ்வாறு யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிறோம்?
9. யெகோவாவின் பெயரில் கூப்பிடுவதில் உட்பட்டுள்ள சில விஷயங்கள் யாவை?
9 யெகோவாவின் பெயரில் கூப்பிடுவதில் என்ன உட்பட்டிருக்கிறது? யோவேல் 2:28, 29-ன் சூழமைவு, இக்கேள்விக்குப் பதிலளிக்க நமக்கு உதவுகிறது. உதாரணமாக, யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிற அனைவருக்கும் அவர் செவிகொடுப்பதில்லை. மற்றொரு தீர்க்கதரிசியாகிய ஏசாயா மூலம் இஸ்ரவேலரிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்.” தம்முடைய சொந்த தேசத்தாருக்கு யெகோவா ஏன் செவிகொடுக்க மறுத்தார்? அவர்தாமே விளக்குகிறார்: “உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.” (ஏசாயா 1:15) இரத்தப்பழி நிறைந்தவர்களுக்கோ பாவத்தை பழக்கமாய் செய்கிறவர்களுக்கோ யெகோவா செவிகொடுக்க மாட்டார். அதனால்தான் மனந்திரும்பும்படி பெந்தெகொஸ்தே நாளன்று யூதர்களிடம் பேதுரு சொன்னார். யோவேல் 2:28, 29-ன் சூழமைவில், யோவேலும்கூட மனந்திரும்புதலை வலியுறுத்திக் கூறுவதை நாம் காண்கிறோம். உதாரணமாக, யோவேல் 2:12, 13-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்கிறார். நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.” 1919 முதற்கொண்டு, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இந்த வார்த்தைகளுக்கு இசைவாக செயல்பட்டனர். தங்களுடைய தவறுகளிலிருந்து அவர்கள் மனந்திரும்பி, மறுபடியும் ஒருபோதும் இணங்கிவிடாமல் அல்லது பின்தங்கிவிடாமல் இருக்க திடதீர்மானத்துடன் இருந்தனர். இது, கடவுளுடைய ஆவி ஊற்றப்படுவதற்கான வழியைத் திறந்தது. யெகோவாவின் பெயரில் கூப்பிட விரும்புகிறவரும் கேட்கப்பட விரும்புகிறவருமாகிய ஒவ்வொரு தனிநபரும் அதே போக்கையே பின்பற்ற வேண்டும்.
10. (அ) உண்மையான மனந்திரும்புதல் என்றால் என்ன? (ஆ) உண்மையான மனந்திரும்புதலுக்கு யெகோவா எவ்வாறு பிரதிபலிக்கிறார்?
10 உண்மையான மனந்திரும்புதல் என்பது “என்னை மன்னிச்சிருங்க” என்று வெறுமனே சொல்வதைக் காட்டிலும் அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது என்பதை நினைவில் வையுங்கள். இஸ்ரவேலர்கள் தங்களுடைய தீவிர உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு தங்களுடைய மேலங்கிகளைக் கிழிப்பது வழக்கம். ஆனால் யெகோவா சொல்கிறார்: “நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழி[யுங்கள்].” உண்மையான மனந்திரும்புதல் இருதயத்திலிருந்து, உள்ளான முழு ஆளிலிருந்து வருகிறது. தவறுசெய்வதை விட்டுவிடுவதையும் இது உட்படுத்துகிறது, ஏசாயா 55:7-ல் நாம் வாசிக்கிறபிரகாரம்: “துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் [“யெகோவாவிடத்தில்,” NW] திரும்பக்கடவன்.” இயேசுவைப் போலவே, அது பாவத்தை வெறுப்பதை உட்படுத்துகிறது. (எபிரெயர் 1:9) அதன் பின்பு, கிரய பலியின் அடிப்படையில் மன்னிப்பளிக்கும்படி நாம் யெகோவாவில் நம்பிக்கை வைக்கிறோம்; ஏனென்றால் யெகோவா, “இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.” அவர் நம்முடைய வணக்கத்தையும் நம்முடைய ஆவிக்குரிய “போஜனபலி”யையும் “பானபலி”யையும் ஏற்றுக்கொள்வார். நாம் அவருடைய பெயரில் கூப்பிடும்போது செவிகொடுப்பார்.—யோவேல் 2:14.
11. நம்முடைய வாழ்க்கையில் உண்மையான வணக்கம் என்ன பாகத்தை வகிக்க வேண்டும்?
11 இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில், நாம் மனதில் வைக்கவேண்டிய வேறொன்றையும் சொன்னார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்.” (மத்தேயு 6:33) நம்முடைய வணக்கத்தை சாதாரண விஷயமாக, நம்முடைய மனச்சாட்சியை சாந்தப்படுத்துவதற்கு பெயரளவில் நாம் செய்யக்கூடிய ஒன்றாக கருதக்கூடாது. கடவுளை சேவிப்பது நம்முடைய வாழ்க்கையில் முதலிடம் பெற தகுதியானது. எனவே, யோவேல் மூலம் யெகோவா தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், . . . ஜனத்தைக் கூட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப் புறப்படுவார்களாக.” (யோவேல் 2:15, 16) புதிதாக திருமணமானவர்கள் கவனச்சிதறலடைவது இயல்பானதே, அவர்களுடைய கவனம் ஒருவருக்கொருவர் மட்டுமே இருக்கும். ஆனால் அவர்களுக்கும்கூட, யெகோவாவை சேவிப்பதே முதலிடத்தில் வரவேண்டும். நம்முடைய கடவுளை அவருடைய பெயரில் கூப்பிட்டு மெய் வணக்கத்தில் ஒன்றாக கூட்டிச்சேர்க்கப்படுவதற்கு முன்பு எந்தக் காரியமும் முதலிடத்தில் வரக்கூடாது.
12. கடந்த வருட நினைவு ஆசரிப்பு அறிக்கையில் வளர்ச்சிக்கான என்ன சாத்தியம் காணப்படுகிறது?
12 இதை மனதிற்கொண்டு, நம்முடைய 1997 ஊழிய ஆண்டின் அறிக்கை காண்பிக்கும் புள்ளிவிவரத்தை சிந்தித்துப் பார்ப்போமாக. கடந்த வருடத்தில் 55,99,931 ராஜ்ய பிரஸ்தாபிகள் என்ற உச்சநிலையை நாம் அடைந்தோம்—உண்மையிலேயே துதிசெலுத்தும் திரள் கூட்டம்! நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தோரின் எண்ணிக்கை 1,43,22,226—பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைவிட சுமார் 85 லட்சத்திற்கும் அதிகமானோர். வளர்ச்சிக்கான நல்ல சாத்தியமிருப்பதை அந்த எண்ணிக்கை காட்டுகிறது. அந்த 85 லட்சம் பேரில் அநேகர், அக்கறை காட்டும் நபர்களாக அல்லது முழுக்காட்டப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளாக ஏற்கெனவே யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படித்து வருகின்றனர். பெரும் எண்ணிக்கையானோர் முதன்முதலாக கூட்டத்திற்கு ஆஜராகியிருந்தனர். அவர்கள் ஆஜராகியிருந்தது யெகோவாவின் சாட்சிகள் அவர்களை நன்கு அறிந்துகொள்வதற்கும் கூடுதலான முன்னேற்றம் செய்ய உதவியளிப்பதற்கும் நல்ல வாய்ப்பளித்தது. ஒவ்வொரு ஆண்டும் நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்து, ஒருவேளை சில கூட்டங்களுக்கும்கூட ஆஜராயிருந்து, ஆனால் கூடுதலான எந்த முன்னேற்றமும் செய்யாத ஆட்களும்கூட அதில் இருந்தனர். நிச்சயமாகவே, இப்படிப்பட்டவர்கள் கூட்டங்களுக்கு ஆஜராகும்படி வரவேற்கப்படுகின்றனர். ஆனால், யோவேலின் தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கவனமாக தியானிக்கும்படியும் யெகோவாவின் பெயரில் கூப்பிடும்போது அவர் கேட்பதைக் குறித்து நிச்சயமாயிருப்பதற்கு கூடுதலாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை சிந்திக்கும்படியும் நாங்கள் அவர்களை உந்துவிக்கிறோம்.
13. நாம் ஏற்கெனவே யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிறவர்களாய் இருந்தால், மற்றவர்களிடமாக நமக்கு இருக்கும் உத்தரவாதம் என்ன?
13 கடவுளுடைய பெயரில் கூப்பிடுவதன் பேரில் அப்போஸ்தலன் பவுல் மற்றொரு அம்சத்தையும் வலியுறுத்திக் கூறினார். ரோமருக்கு எழுதிய அவருடைய கடிதத்தில், யோவேலின் தீர்க்கதரிசன வார்த்தைகளை மேற்கோள் காட்டினார்: “யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிற அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள்.” அதன் பின்பு அவர் இவ்வாறு நியாயங்காட்டிப் பேசினார்: “அவரை விசுவாசியாதவர்கள் எவ்வாறு அவரைக் கூப்பிடுவார்கள்? அவரைக் குறித்து கேள்விப்படாதவர்கள் எவ்வாறு அவரை விசுவாசிப்பார்கள்? யாராவது பிரசங்கிக்காவிட்டால் அவர்கள் எவ்வாறு கேள்விப்படுவார்கள்?” (ரோமர் 10:13, 14, NW) ஆம், இப்பொழுது வரை யெகோவாவைப் பற்றி அறியாதிருக்கிற மற்ற அநேகர் அவருடைய பெயரில் அவரைக் கூப்பிட வேண்டும். பிரசங்கிக்க வேண்டிய உத்தரவாதம் மட்டுமல்லாமல், தகுதிபெறவும் அவர்களுக்கு அந்த உதவியை அளிக்கவும் வேண்டிய உத்தரவாதமும் யெகோவாவைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருக்கிறவர்களுக்கு இருக்கிறது.
ஓர் ஆவிக்குரிய பரதீஸ்
14, 15. யெகோவாவின் பெயரில் அவருக்குப் பிரியமான முறையில் யெகோவாவின் ஜனங்கள் கூப்பிடுவதால் என்ன பரதீஸிய ஆசீர்வாதங்களை அனுபவிக்கின்றனர்?
14 அப்படித்தான் அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் வேறே ஆடுகளுமாகிய இருதரப்பினரும் காரியங்களை நோக்குகின்றனர். அதன் விளைவாக, யெகோவா அவர்களை ஆசீர்வதிக்கிறார். “யெகோவா தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனங்களுக்கு இரக்கத்தைக் காண்பிப்பார்.” (யோவேல் 2:18, NW) 1919-ல், யெகோவா தம்முடைய ஜனங்களை திரும்ப நிலைநாட்டி அவர்களை ஆவிக்குரிய பரதீஸுக்குள் கொண்டுவந்தபோது, அவர்களிடம் வைராக்கியத்தையும் இரக்கத்தையும் காண்பித்தார். இது உண்மையிலேயே ஆவிக்குரிய பரதீஸ், இது யோவேலினால் பின்வரும் வார்த்தைகளில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது: “தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் [“யெகோவா,” NW] பெரிய காரியங்களைச் செய்வார். வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள்; வனாந்திரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; விருட்சங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத் தரும். சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் [“யெகோவாவுக்குள்,” NW] மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார். களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.”—யோவேல் 2:21-24.
15 என்னே ஒரு இனிய வர்ணனை! ஏராளமான மந்தைகளோடு, இஸ்ரவேலில் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான மூன்று பொருட்கள்—தானியம், ஒலிவ எண்ணெய், மற்றும் திராட்சரசம்—அபரிமிதமாய் வழங்கப்பட்டன. நம்முடைய நாளில், அந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் உண்மையிலேயே ஆவிக்குரிய முறையில் நிறைவேற்றமடைந்துள்ளன. நமக்குத் தேவையான எல்லா ஆவிக்குரிய உணவையும் யெகோவா தருகிறார். கடவுளால் ஏராளமாய் அளிக்கப்படும் இப்படிப்பட்ட உணவைக் குறித்து நாம் சந்தோஷப்படவில்லையா? உண்மையிலேயே, மல்கியா முன்னுரைத்தபடி, நம்முடைய கடவுள் ‘வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் நம்மீது ஆசீர்வாதத்தை வருஷித்திருக்கிறார்.’—மல்கியா 3:10.
காரிய ஒழுங்குமுறையின் முடிவு
16. (அ) யெகோவாவின் ஆவி ஊற்றப்படுவது நம்முடைய நாளுக்கு எதைக் குறிக்கிறது? (ஆ) என்ன எதிர்காலம் இருக்கிறது?
16 கடவுளுடைய ஜனங்கள் அனுபவிக்கும் பரதீஸிய நிலைமையை முன்னறிவித்த பிறகு, யெகோவாவின் ஆவி ஊற்றப்படுவதைப் பற்றி யோவேல் தீர்க்கதரிசனம் உரைக்கிறார். பெந்தெகொஸ்தே அன்று பேதுரு இந்தத் தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காண்பிக்கையில், அது “கடைசிநாட்களில்” நிறைவேறியது என சொன்னார். (அப்போஸ்தலர் 2:17) அந்தச் சமயத்தில் கடவுளுடைய ஆவி ஊற்றப்பட்டதானது, யூத காரிய ஒழுங்குமுறைக்கு கடைசி நாட்கள் ஆரம்பமாகிவிட்டன என்பதை அர்த்தப்படுத்தியது. 20-ம் நூற்றாண்டில் தேவனுடைய இஸ்ரவேலர்மீது கடவுளுடைய ஆவி ஊற்றப்படுவது, உலகளாவிய காரிய ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில் நாம் வாழ்ந்துவருகிறோம் என்பதை அர்த்தப்படுத்துகிறது. இதன் அடிப்படையில், எதிர்காலம் எப்படி இருக்கும்? யோவேல் தீர்க்கதரிசனம் தொடர்ந்து சொல்கிறது: “வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன். கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.”—யோவேல் 2:30, 31.
17, 18. (அ) எருசலேமின்மீது யெகோவாவின் என்ன பயங்கரமான நாள் வந்தது? (ஆ) எதிர்காலத்தில் யெகோவாவின் பயங்கரமான நாள் வருமென்ற உறுதியான நம்பிக்கை, என்ன செய்யும்படி நம்மை உந்துவிக்கிறது?
17 இத்தீர்க்கதரிசன வார்த்தைகள் பொ.ச. 66-ல் யூதேயாவில் நிறைவேற ஆரம்பித்தன; அப்போது, பொ.ச. 70-ல் உச்சக்கட்டத்தை அடையவிருந்த யெகோவாவின் பயங்கரமான நாளை நோக்கி சம்பவங்கள் தீவிரமாக முன்னோக்கிச் சென்றன. அந்தச் சமயத்தில் யெகோவாவின் பெயரில் கூப்பிடாதவர்கள் மத்தியில் இருப்பது எவ்வளவு திகிலூட்டுவதாய் இருந்திருக்கும்! இன்று, அதைப்போலவே திகிலூட்டும் சம்பவங்கள் சமீப காலத்தில் நடக்கவிருக்கின்றன, அப்பொழுது இந்த முழு உலக காரிய ஒழுங்குமுறையும் யெகோவாவின் கரத்தால் அழிக்கப்படும். இருப்பினும், தப்பிப்பிழைப்பது சாத்தியமே. அந்தத் தீர்க்கதரிசனம் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறது: “யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிற அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள்; யெகோவா சொன்னபடியே, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் தப்பி ஓடியவர்கள் இருப்பார்கள், யெகோவாவினால் அழைக்கப்பட்டவர்கள் தப்பிப்பிழைத்தவர்கள் மத்தியில் இருப்பார்கள்.” (யோவேல் 2:32, NW) யெகோவாவின் பெயரை அறிந்திருப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாய் இருக்கின்றனர்; அவருடைய பெயரில் கூப்பிடுகையில் அவர் தங்களை காப்பாற்றுவார் என்பதில் முழு நம்பிக்கையோடு உள்ளனர்.
18 என்றபோதிலும், பெரிதும் பயங்கரமுமான யெகோவாவின் நாள் இந்த உலகத்தின்மீது முழு கோபாக்கினையுடன் தாக்கும்போது என்ன சம்பவிக்கும்? இது கடைசி படிப்புக் கட்டுரையில் சிந்திக்கப்படும்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
◻ யெகோவா எப்பொழுது தம்முடைய ஜனங்களின்மீது முதலாவதாக ஆவியை ஊற்றினார்?
◻ யெகோவாவின் பெயரில் கூப்பிடுவதில் உட்பட்டுள்ள சில விஷயங்கள் யாவை?
◻ மாம்சப்பிரகாரமான இஸ்ரவேல்மீது யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள் எப்பொழுது வந்தது?
◻ இன்று யெகோவா தம்முடைய பெயரில் கூப்பிடுகிறவர்களை எவ்வாறு ஆசீர்வதிக்கிறார்?
[பக்கம் 15-ன் படம்]
பொ.ச. 33 பெந்தெகொஸ்தே அன்று ஒரு புதிய தேசம் பிறந்தது
[பக்கம் 16, 17-ன் படம்]
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், யோவேல் 2:28, 29-ன் நிறைவேற்றமாக யெகோவா தம்முடைய ஜனங்கள்மீது மீண்டும் ஆவியை ஊற்றினார்
[பக்கம் 18-ன் படம்]
யெகோவாவின் பெயரில் கூப்பிட ஜனங்களுக்கு உதவ வேண்டும்