உண்மை மதத்தை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது?
‘கடவுள் சத்தியத்தைத் தந்திருக்கிறார் என்றால் அதை ஏன் நான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்? மக்கள் எல்லாரிடமும் அவர் முக்கிய செய்தியைச் சொல்ல நினைக்கிறார் என்றால், ஆராய்ந்து பார்க்காமலேயே, உடனடியாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் அதைத் தெளிவாகத் தெரிவித்திருக்க மாட்டாரா?’ என்று சிலர் கேட்கிறார்கள்.
அப்படித் தெரிவிக்க கடவுளுக்குத் திறமை இருப்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால், சத்தியத்தைத் தெரிவிக்க அத்தகைய வழியைத்தான் அவர் பயன்படுத்துகிறாரா?
சத்தியத்தை கடவுள் எப்படித் தெரிவிக்கிறார்?
உண்மையில், சத்தியத்தைத் தெரிந்துகொள்ள ஏங்குகிறவர்கள் அதைத் தேடிக் கண்டுபிடிக்கும் விதத்தில் தம்முடைய செய்திகளை கடவுள் தெரிவிக்கிறார். (சங்கீதம் 14:2) பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, எரேமியா தீர்க்கதரிசிமூலம் கடவுள் கொடுத்த செய்தியைக் கவனியுங்கள். பாபிலோனியர்கள் எருசலேமை அழிக்கப் போகிறார்கள் என்ற செய்தி, கீழ்ப்படியாமல் போன யெகோவாவின் ஜனங்களிடம் அறிவிக்கப்பட்டது.—எரேமியா 25:8-11; 52:12-14.
ஆனால், அந்தச் சமயத்தில் வேறு தீர்க்கதரிசிகளும்கூட தாங்கள் கடவுளுடைய செய்தியை அறிவிப்பதாய்ச் சொன்னார்கள். எதிர்காலத்தில் எருசலேமில் சமாதானம் நிலவுமென அனனியா என்பவன் தீர்க்கதரிசனம் சொன்னான். இது, எரேமியா அறிவித்த செய்திக்கு முற்றிலும் நேர்மாறாக இருந்தது. அன்று வாழ்ந்த ஒருவர் இவர்களில் யார் சொன்ன செய்தியை நம்பியிருக்க வேண்டும்? எரேமியா சொன்னதையா, அவருக்கு முரணாகப் பேசிய மற்றவர்கள் சொன்னதையா?—எரேமியா 23:16, 17; 28:1, 2, 10-17.
இவர்களில் யார் சொன்னதை நம்புவதென்று தீர்மானிக்க, உண்மை மனதுள்ள யூதர்கள் முதலாவது யெகோவாவைத் தனிப்பட்ட விதமாக அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. அவருடைய சட்டங்களையும் நியமங்களையும் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. கெட்ட செயல்களை அவர் எவ்வாறு கருதுகிறார் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் இவ்வாறு செய்திருந்தால், “தன் பொல்லாப்பினிமித்தம் மனஸ்தாபப்படுகிறவன் ஒருவனுமில்லை” என்று எரேமியாமூலம் யெகோவா சொன்ன வார்த்தைகள் உண்மையென அவர்கள் உணர்ந்திருப்பார்கள். (எரேமியா 8:5-7) மேலும், அந்த மோசமான சூழ்நிலை எருசலேமுக்கும் அதில் குடியிருப்பவர்களுக்கும் கெடுதலைத்தான் கொண்டுவரும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பார்கள்.—உபாகமம் 28:15-68; எரேமியா 52:4-14.
எருசலேமைக் குறித்து எரேமியா உரைத்த தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின. பொ.ச.மு. 607-ல் அந்நகரம் பாபிலோனியர்களால் தரைமட்டமாக்கப்பட்டது.
கீழ்ப்படியாமல் போனால் எத்தகைய மோசமான நிலைமைகளைச் சந்திக்க நேரிடுமென வெகு காலத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது; இருந்தபோதிலும், கடவுள் நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதைப் புரிந்துகொள்ள முயற்சி தேவைப்பட்டது.
இயேசு கற்பித்த சத்தியம்
இயேசு கிறிஸ்து கற்பித்த சத்தியத்தைக் குறித்து என்ன சொல்லலாம்? அது கடவுளிடமிருந்து வந்த செய்தியென எல்லாரும் அடையாளம் கண்டுகொண்டார்களா? இல்லை. இஸ்ரவேலர் மத்தியில்தான் இயேசு கற்பித்தார், அற்புதங்களைச் செய்தார்; எனினும், இவர்தான் முன்னறிவிக்கப்பட்ட மேசியா, கிறிஸ்து, அதாவது அபிஷேகம் செய்யப்பட்டவர் என்பதை இவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த பெரும்பாலோர் உணராதிருந்தார்கள்.
எப்போது கடவுளுடைய ராஜ்யம் வருமென கேட்ட பரிசேயர்களிடம், “தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் [அதாவது, வெளிப்படையாய்] வராது” என்று இயேசுவே கூறினார். அதோடு, “தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே” என்றும் அவர் சொன்னார். (லூக்கா 17:20, 21) கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவான இயேசு அவர்கள் மத்தியில்தானே இருந்தார்! ஆனாலும் மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை இயேசு நிறைவேற்றிக் கொண்டிருந்ததையும், “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” அவரே என்பதையும் ஏற்றுக்கொள்ள அந்தப் பரிசேயர்கள் மறுத்தார்கள்.—மத்தேயு 16:16.
இதே போல, முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்துவின் சீஷர்கள் அறிவித்த சத்தியத்தையும் ஜனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கடவுளுடைய ஆதரவு சீஷர்களுக்கு இருந்ததை நிரூபிக்க அற்புதங்கள் உதவியபோதிலும் ஜனங்களில் பெரும்பாலோர் சத்தியத்தை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. (அப்போஸ்தலர் 8:1-8; 9:32-41) கற்பிப்பதன்மூலம், ‘சகல ஜாதிகளையும் [அதாவது, ஜனங்களையும்] சீஷராக்கும்படி’ இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கட்டளையிட்டார். சத்தியத்துக்காக ஏங்கி, அதைத் தேடிக்கொண்டிருந்தவர்கள், பைபிள் சத்தியங்களைக் கவனமாய் கேட்டு, கற்றுக்கொண்டதால் விசுவாசிகள் ஆனார்கள்.—மத்தேயு 28:19; அப்போஸ்தலர் 5:42; 17:2-4, 32-34.
இன்றும் அதுதான் நடக்கிறது. ‘ராஜ்யத்தினுடைய . . . சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படுகிறது.’ (மத்தேயு 24:14) இதுதான் கடவுளுடைய செய்தி என பூமியிலுள்ள ஒவ்வொருவரும் அடையாளம் கண்டுகொள்கிற விதத்தில், ‘வெளிப்படையாக’ இது பிரசங்கிக்கப்படுவதில்லை. ஆனாலும், கடவுளுடைய சத்தியத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இது, கடவுள் ஏற்றுக்கொள்ளும் முறையில் அவரை வழிபட விரும்புகிற நல்மனமுள்ளவர்களிடம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.—யோவான் 10:4, 27.
பைபிளைப்பற்றிச் சொல்லும் இந்தப் பத்திரிகையை நீங்கள் வாசிப்பதிலிருந்து, நீங்களும் சத்தியத்தைத் தேடுவதுபோல் தெரிகிறது. எந்த மதம் சத்தியத்தைக் கற்பிக்கிறது என நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
கண்டுபிடிப்பதற்கு ஓர் அருமையான வழி
முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலன் பவுல் பெரோயா பட்டணத்தாருக்குக் கற்பித்தபோது அவர்களில் சிலர் அந்தச் செய்தியைக் கேட்டு செயல்பட்ட விதத்தை அவர் பாராட்டினார். பவுல் கற்பித்தது சத்தியம்தான் என்று அவர்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை; இருப்பினும் அவர் சொன்னவற்றைப் பயபக்தியாய் கேட்டார்கள். செய்தியைக் கேட்ட பிறகு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது நமக்கு பிரயோஜனமாக இருக்கும்.
அதைக் குறித்து பைபிள் பின்வருமாறு சொல்வதைக் கவனியுங்கள்: ‘அந்தப் பட்டணத்தார் [பெரோயாவாசிகள்] மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள். அதனால் அவர்களில் அநேகம்பேர் . . . விசுவாசித்தார்கள்.’ (அப்போஸ்தலர் 17:10-12) அவர்கள் ஏதோ மேலோட்டமாக ஆராய்ந்து பார்க்கவில்லை. பவுலுடன் ஓரிரு முறை சுருக்கமாகக் கலந்துரையாடிய உடனேயே இதுதான் சத்தியமென்ற முடிவுக்கு தங்களால் வந்துவிட முடியுமென அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
பெரோயா பட்டணத்தார், ‘மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டார்கள்’ என்பதையும் கவனியுங்கள். இது, எத்தகைய மனநிலையோடு அவர்கள் வேதவசனங்களை ஆராய்ந்தார்கள் என்பதைப்பற்றி நமக்குச் சொல்கிறது. பவுல் கற்பித்தவற்றை அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளவும் இல்லை, கண்மூடித்தனமாக ஒதுக்கித் தள்ளவும் இல்லை. மேலும், தம்முடைய செய்தியை அறிவிக்க கடவுள் பயன்படுத்திய பிரதிநிதிகளில் ஒருவரான பவுல் கொடுத்த விளக்கங்களை அவர்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கவில்லை.
இந்தப் பெரோயா பட்டணத்தார் முதன்முதலாக அப்போதுதான் கிறிஸ்தவத்தைப் பற்றியே கேள்விப்பட்டிருந்தார்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். அந்த விஷயங்களைக் கேட்க அவர்களுக்கு நன்றாயிருந்தது, ஆனால், நம்புவதற்குக் கடினமாய் இருந்தது. அதற்காக அதை அவர்கள் ஒரேடியாக ஒதுக்கித் தள்ளிவிடாமல், ‘பவுல் சொன்னவை உண்மைதானாவென’ கண்டுபிடிக்க வேதவசனங்களைக் கவனமாய் ஆராய்ந்து பார்த்தார்கள். பெரோயாவிலும் தெசலோனிக்கேயிலும் யாரெல்லாம் இப்படி முழுமையாய் ஆராய்ந்து பார்த்தார்களோ அவர்களெல்லாம் விசுவாசிகளானார்கள் என்பதையும் கவனியுங்கள். (அப்போஸ்தலர் 17:4, 12) இடையிலேயே சோர்ந்துபோய், ஆராய்வதை நிறுத்திவிடவில்லை. சத்தியத்தைக் கண்டுபிடிக்கவே முடியாதென்ற முடிவுக்கும் வந்துவிடவில்லை. அவர்கள் உண்மை மதத்தை அடையாளம் கண்டுகொண்டார்கள்.
சத்தியம் மக்களை எப்படி மாற்றுகிறது?
பெரோயா பட்டணத்தாரைப் போல ஒருவர் சத்தியத்தைக் கண்டுபிடித்ததும், தான் அறிந்தவற்றை மற்றவர்களுடன் ஆர்வமாய்ப் பகிர்ந்துகொள்ள தூண்டப்படுகிறார். எல்லா மதங்களும் சரியானவையே எனக் கருதுவது பெருந்தன்மை எனச் சொல்லும் சிலர், சத்தியத்தைப்பற்றி மற்றவர்களிடம் நாம் பேசுவதை விரும்பாதிருக்கலாம். எனினும், பைபிள் சத்தியத்தை ஒருவர் கண்டுபிடித்ததும் ‘இதுதான் சத்தியம்’ என்ற உறுதி அவர் உள்ளத்தில் பிறக்கிறது. சத்தியத்தைக் கண்டுபிடிக்க முடியுமா, எல்லா மதங்களும் இரட்சிப்புக்கு வழிநடத்துகின்றனவா என்றெல்லாம் அவர் இனிமேலும் குழம்புவதில்லை. என்றாலும், இப்படிச் சத்தியத்தைக் கண்டுபிடிப்பதற்கு முதலாவது அதை அவர் ஊக்கமாய் ஆராய வேண்டும்; இதற்கு உண்மையிலேயே மனத்தாழ்மை தேவைப்படுகிறது.
யெகோவாவின் சாட்சிகள் இப்படி ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள். எனவேதான், உண்மை மதத்தைத் தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக நம்புகிறார்கள். இன்று உண்மை மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் யாரென அடையாளம் கண்டுகொள்வதற்காக, வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கும்படி அவர்கள் உங்களை அழைக்கிறார்கள். சில விஷயங்களை மட்டுமே வைத்துக்கொண்டு அதைத் தீர்மானிக்க முடியாதுதான்; எனினும், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பற்றி இந்தப் பக்கத்திலுள்ள பெட்டியில் காணப்படும் தகவல் முதல் படியை எடுத்து வைக்க உங்களுக்கு உதவலாம்.
யெகோவாவின் சாட்சிகள் இலவசமாக பைபிள் படிப்பு நடத்துகிறார்கள். பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்பதை ஆழமாய் ஆராய்ந்து பார்க்க நீங்களும் அவர்களோடு சேர்ந்து படிக்கலாமே? இப்படிக் கற்றுக்கொள்வது, உண்மை மதத்தை அடையாளம் கண்டுகொள்ள உங்களுக்கு உதவும். (g 3/08)
[பக்கம் 27-ன் பெட்டி]
உண்மை மதத்தின் அடையாளங்கள்
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்தவையும் கற்பித்தவையும் இதோ:
◼ கடவுளுடைய வார்த்தையைத் தங்களுடைய வழிகாட்டியாக நம்பினார்கள்.—2 தீமோத்தேயு 3:16; 2 பேதுரு 1:21.
◼ கடவுளுடைய குமாரனே இயேசு; இவர் கடவுளிலிருந்து வேறுபட்டவர், கடவுளுக்குக் கீழானவர் என்று கற்பித்தார்கள்.—1 கொரிந்தியர் 11:3; 1 பேதுரு 1:3.
◼ எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் உயிர்த்தெழுதலில், இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள் என்று கற்பித்தார்கள்.—அப்போஸ்தலர் 24:15.
◼ பொதுவாக, அவர்கள் அன்பான ஜனங்களென அடையாளம் கண்டுகொள்ளப்பட்டார்கள். —யோவான் 13:34, 35.
◼ தாங்களே தனித்தனியாக வழிபடுவதற்குப் பதிலாக, சபைகளாக அவர்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தார்கள்; கண்காணிகளுக்கும், இயேசுவைத் தங்கள் தலைவராக மதித்து நடந்த ஆளும் குழுவினருக்கும் கீழ்ப்படிந்து அவர்கள் ஐக்கியப்பட்டிருந்தார்கள்.—அப்போஸ்தலர் 14:21-23; 15:1-31; எபேசியர் 1:22; 1 தீமோத்தேயு 3:1-13.
◼ கடவுளுடைய ராஜ்யமே மனிதர்களுக்கான ஒரே நம்பிக்கை என ஊக்கமாய்ப் பிரசங்கித்து வந்தார்கள்.—மத்தேயு 24:14; 28:19, 20; அப்போஸ்தலர் 1:8.
[பக்கம் 25-ன் படம்]
மற்றவர்கள் முரண்பாடானதைச் சொன்னபோதிலும் எரேமியாவே உண்மையான தீர்க்கதரிசியென மக்களால் எப்படி அறிந்துகொள்ள முடிந்தது?
[பக்கம் 26, 27-ன் படங்கள்]
முதல் நூற்றாண்டிலிருந்த பெரோயா பட்டணத்தார் பவுல் சொன்னதைக் கேட்ட பிறகு, அவை உண்மைதானாவென உறுதிப்படுத்திக்கொள்ள வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தார்கள்
[பக்கம் 26, 27-ன் படம்]
பைபிளைக் கவனமாகப் படிப்பது மத சத்தியத்தை அடையாளம் கண்டுகொள்ள உங்களுக்கு உதவும்