படிப்பு 48
நியாயங்காட்டிப் பேசும் விதம்
நம்முடைய வாழ்க்கையில் கடவுளுடைய வார்த்தை ஏற்படுத்திய மாற்றங்களுக்காக நன்றியுடன் இருக்கிறோம், அதேபோல் மற்றவர்களும் பயனடைய நாம் விரும்புகிறோம். மேலும், நற்செய்திக்கு மக்கள் பிரதிபலிப்பதைப் பொறுத்தே அவர்களுடைய எதிர்காலம் இருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (மத். 7:13, 14; யோவா. 12:48) அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென நாம் உள்ளப்பூர்வமாக விரும்புகிறோம். ஆனால் சிறந்த பலனை பெற, உறுதியான நம்பிக்கையும் வைராக்கியமும் இருந்தால் போதாது, பகுத்துணர்வும் அவசியம்.
ஒருவர் காலங்காலமாக இருதயத்தில் பொக்கிஷமாய் பேணிவரும் நம்பிக்கையை நேரடியாக தவறென சுட்டிக்காட்டினால், அதை நிறைய வசனங்களின் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டினாலும், பொதுவாக அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். உதாரணமாக, பிரபலமான பண்டிகைகள் புறமதத்திலிருந்து தோன்றியவை என நேரடியாக கண்டனம் செய்வது, அவற்றை குறித்த மக்களின் கருத்தை மாற்றி விடாது. நியாயங்காட்டிப் பேசுவதே பொதுவாக வெற்றியை தருகிறது. நியாயங்காட்டிப் பேசுவதில் என்ன உட்பட்டுள்ளது?
‘பரத்திலிருந்து வருகிற ஞானமோ . . . சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும் [“நியாயத்தன்மையுள்ளதாயும்,” NW] இருக்கிறது.’ (யாக். 3:17) “நியாயத்தன்மை” என இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் நேர்பொருள் “வளைந்துகொடுப்பதை” அர்த்தப்படுத்துகிறது. “கரிசனை,” ‘சாந்தம்,’ அல்லது “பொறுமை” என சில மொழிபெயர்ப்புகள் இதை மொழிபெயர்க்கின்றன. நியாயத்தன்மை சமாதானத்தோடு தொடர்புபடுத்தப்படுவதை கவனியுங்கள். தீத்து 3:2-ல், இது சாந்த குணத்தோடு சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் சண்டை பண்ணுவதிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. “நியாயத்தன்மை”யோடு இருப்பதற்கு பிலிப்பியர் 4:5 (NW) நம்மை உந்துவிக்கிறது. நியாயத்தன்மையுடையவர் யாரிடம் பேசுகிறாரோ அவருடைய பின்னணியையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் உணர்ச்சிகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்கிறார். பொருத்தமான சந்தர்ப்பங்களில் வளைந்துகொடுக்கவும் மனமுள்ளவராக இருக்கிறார். மற்றவர்களோடு இப்படிப்பட்ட முறையில் பேசுவது அவர்களுடைய மனதையும் இருதயத்தையும் திறப்பதற்கு வழிவகுக்கும். வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுகையில் அவர்கள் அதிக உற்சாகத்தோடும் ஏற்றுக்கொள்வார்கள்.
எங்கே ஆரம்பிப்பது. அப்போஸ்தலன் பவுல் தெசலோனிக்கேயாவில் இருக்கையில் வேதவசனங்களைப் பயன்படுத்தி, “நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து, கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்று” விளக்கிக் காட்டியதாக சரித்திராசிரியர் லூக்கா அறிவிக்கிறார். (அப். 17:2, 3) இதை யூதருடைய தேவாலயத்தில் பவுல் செய்தது குறிப்பிடத்தக்கது. அவருடைய பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எபிரெய வேதாகமத்தை அதிகாரப்பூர்வமான ஒன்றாக கருதியவர்கள். அவர்கள் ஏற்றுக்கொண்ட ஒன்றை அடிப்படையாக வைத்து பேசியது பொருத்தமாக இருந்தது.
அத்தேனேயில் மார்ஸ் மேடையில் நின்று கிரேக்கருடன் பவுல் பேசியபோதோ வேதவசனங்களைப் பற்றி பேச ஆரம்பிக்கவில்லை. மாறாக, அவர்கள் அறிந்திருந்த, ஏற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார்; பிறகு படைப்பாளரையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி யோசித்துப் பார்க்க தூண்டுவதற்கு இவ்விஷயங்களை பயன்படுத்தினார்.—அப். 17:22-31.
நவீன நாளில், பைபிளை அதிகாரப்பூர்வமான ஒன்றாக அங்கீகரிக்காதவர்கள் எண்ணற்றோர் இருக்கின்றனர். ஆனால் ஏறக்குறைய எல்லாருடைய வாழ்க்கையும் தற்போதைய உலகில் காணப்படும் மோசமான சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறது. மேம்பட்ட வாழ்க்கைக்காக மக்கள் ஏங்குகிறார்கள். முதலில் அவர்களுடைய மனதை நெருடும் விஷயங்களுக்கு அக்கறை செலுத்தி அவற்றை குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்பதை விளக்குங்கள். மனிதகுலத்திற்கு கடவுள் வைத்திருக்கும் நோக்கங்களைப் பற்றி பைபிள் சொல்வதை செவிகொடுத்துக் கேட்பதற்கு இத்தகைய நியாயமான அணுகுமுறை அவர்களை உந்துவிக்கும்.
பைபிள் மாணாக்கருக்கு அவருடைய பெற்றோர் மத நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் ஆஸ்தியாக கடத்தியிருக்கலாம். அந்த நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் கடவுளை பிரியப்படுத்துவதில்லை என்பதை இப்பொழுது மாணாக்கர் கற்றுக்கொண்டு, பைபிள் கற்பிப்பதை ஏற்று அவற்றை ஒதுக்கித் தள்ளியிருக்கலாம். அப்படியென்றால், இந்தத் தீர்மானத்தை தன்னுடைய பெற்றோருக்கு அவர் எப்படி விளக்கலாம்? ஆஸ்தியாக கொடுத்த மத பாரம்பரியத்தை அவர் ஒதுக்கித் தள்ளுவதன் மூலம் தங்களையே ஒதுக்கித் தள்ளுவதாக பெற்றோர் நினைக்கலாம். எனவே, அந்த பைபிள் மாணாக்கர் தன்னுடைய தீர்மானத்திற்குரிய காரணத்தை பைபிளிலிருந்து விளக்குவதற்கு முன், பெற்றோருக்கு தன்னுடைய அன்பையும் மரியாதையையும் உறுதிப்படுத்துவது நல்லது.
எப்பொழுது இணங்கிப்போவது. கட்டளை பிறப்பிக்க யெகோவாவுக்கு முழு அதிகாரம் இருந்தாலும், நியாயத்தன்மையை காண்பிப்பதில் அவர் சிறந்து விளங்குகிறார். சோதோமிலிருந்து லோத்துவையும் அவருடைய குடும்பத்தாரையும் காப்பாற்றும்போது, “நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ”! என்று யெகோவாவின் தூதன் உந்துவித்தார். ஆனால் லோத்துவோ “அப்படியல்ல ஆண்டவரே” என்று கூறி சோவாருக்கு ஓடிப்போக அனுமதி கேட்டார். அதற்கு சம்மதிப்பதன் மூலம் லோத்துவுக்கு யெகோவா கரிசனை காட்டினார்; ஆகவே மற்ற பட்டணங்கள் அழிக்கப்பட்டபோது சோவார் அழிக்கப்படவில்லை. ஆனால் பிற்பாடு, யெகோவா முதலில் சொன்ன கட்டளைக்கு செவிகொடுத்து மலைப் பிரதேசத்திற்கு லோத்து சென்றார். (ஆதி. 19:17-30) தம்முடைய வழி சரி என்பதை யெகோவா அறிந்திருந்தார், ஆனாலும் அதை லோத்து புரிந்துகொள்ளும் வரை அவர் பொறுமையோடு கரிசனை காட்டினார்.
பிரச்சினைகளின்றி மற்றவர்களோடு நன்கு பழகுவதற்கு, நாமும் நியாயத்தன்மையுடன் இருப்பது அவசியம். பிறருடைய கருத்து தவறு என நமக்கு நன்றாக தெரியலாம், அதை நிரூபிப்பதற்கு வலிமையான அத்தாட்சிகளும் நம்மிடம் இருக்கலாம். ஆனால் சில சமயங்களில், அதை வற்புறுத்தாமலிருப்பது நல்லது. நியாயத்தன்மையோடு இருப்பது என்பது யெகோவாவின் தராதரங்களை விட்டுக்கொடுப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. பிறர் தங்கள் மனதிலுள்ளதை வெளிப்படுத்தியதற்காக நன்றி சொல்லலாம், அல்லது தவறாக ஏதாவது சொல்லியிருந்தால் அதை எதிர்த்து விவாதிக்காமல் விட்டுவிடலாம். இவ்வாறு, மிகுந்த பயன் தரும் விதத்தில் அந்த உரையாடலை நடத்துவதற்கு கவனம் செலுத்தலாம். உங்களுடைய நம்பிக்கையை அவர் கண்டனம் செய்தாலும், நீங்கள் எதிர்த்து விவாதிக்காதீர்கள். அதற்குப் பதிலாக, அவர் ஏன் அப்படி நினைக்கிறார் என கேளுங்கள். அவருடைய பதிலை செவிகொடுத்துக் கேளுங்கள். இது, அவருடைய எண்ணத்தின் மீது உட்பார்வை செலுத்த உதவும். வரப்போகும் நாட்களில் ஆக்கபூர்வமாக உரையாடுவதற்கும் ஒருவேளை அஸ்திவாரமாக அமையும்.—நீதி. 16:23; 19:11.
தேர்ந்தெடுக்கும் திறமையை மனிதருக்கு யெகோவா தந்திருக்கிறார். அந்தத் திறமையை அவர்கள்—ஞானமாக பயன்படுத்தாதபோதிலும்—பயன்படுத்த அனுமதிக்கிறார். இஸ்ரவேலருடன் யெகோவா கொண்டிருந்த செயல் தொடர்புகளை அவருடைய பிரதிநிதியாகிய யோசுவா விவரித்தார். ஆனால் பிற்பாடு அவர் கூறினார்: “கர்த்தரைச் [“யெகோவாவை,” NW] சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே [“யெகோவாவையே,” NW] சேவிப்போம்.” (யோசு. 24:15) இன்று நமக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை “சாட்சி” கொடுப்பது, நாம் உறுதியான நம்பிக்கையோடு பேசினாலும், பிறரை பலவந்தப்படுத்தி நம்ப வைக்க முயலுவதில்லை. (மத். 24:14) தேர்ந்தெடுக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு, அவர்களுக்கு இருக்கும் அந்த உரிமையை நாம் புறக்கணிப்பதில்லை.
கேள்விகள் கேளுங்கள். ஜனங்களோடு நியாயங்காட்டிப் பேசுவதில் இயேசு சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார். அவர்களுடைய பின்னணியை கவனத்தில் கொண்டு உடனடியாக புரிந்துகொள்ளக்கூடிய உவமைகளைப் பயன்படுத்தினார். கேள்விகளையும் திறம்பட பயன்படுத்தினார். இது, மற்றவர்கள் தங்களுடைய மனதிலுள்ளதை சொல்வதற்கு வாய்ப்பளித்தது, அவர்களுடைய இருதயத்திலிருப்பதையும் வெளிப்படுத்தியது. கலந்தாலோசிக்கப்படும் விஷயத்தை நியாயமாக சிந்தித்துப் பார்க்கவும் அவர்களை உற்சாகப்படுத்தியது.
நியாயப்பிரமாணத்தில் தேர்ச்சிபெற்ற ஒரு மனிதன் இயேசுவிடம் இவ்வாறு கேட்டான்: “போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு நான் என்ன செய்ய வேண்டும்”? அதற்குரிய பதிலை இயேசு உடனே அவனுக்கு சொல்லியிருக்கலாம். ஆனால் இதைக் குறித்து அந்த மனிதனுடைய கருத்தை தெரிந்துகொள்ள விரும்பினார். ‘நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன?’ என்று கேட்டார். அந்த மனிதன் சரியாக பதிலளித்தான். சரியான பதிலை கொடுத்ததோடு அந்த உரையாடல் முடிந்துவிட்டதா? இல்லை. அந்த மனிதன் தொடர்ந்து பேசுவதற்கு இயேசு அனுமதித்தார், அப்படி பேசுகையில் அவன் கேட்ட கேள்வியே தன்னை நீதிமானாக நிரூபிக்க அவன் முயல்வதை சுட்டிக்காட்டியது. “எனக்கு அயலான் யார்?” என்று அவன் கேட்டான். இதற்கு இயேசு நேரடியான விளக்கம் கொடுக்கவில்லை, ஏனென்றால் புறஜாதிகள் மற்றும் சமாரியர்கள் மீது யூதர்களுக்கு அப்போதிருந்த மனப்பான்மையின் காரணமாக அந்த மனிதன் அதை எதிர்த்து வாதாடியிருக்கலாம். எனவே, ஓர் உவமையின் மூலம் இயேசு நியாயங்காட்டிப் பேசினார். அந்த உவமை நல்ல அயலானாக நிரூபித்த சமாரியனைப் பற்றியது; உடைமைகள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு கிடந்த ஒரு பயணிக்கு இந்த சமாரியன் உதவி செய்தார், ஆனால் ஆசாரியனும் லேவியனும் உதவி செய்யவில்லை. ஓர் எளிய கேள்வியின் வாயிலாக அந்த மனிதன் அந்த உவமையைப் புரிந்துகொண்டதை நிச்சயப்படுத்திக் கொண்டார். இவ்வாறு இயேசு நியாயங்காட்டிப் பேசியது, “அயலான்” என்ற வார்த்தைக்கு அந்த மனிதன் ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத அர்த்தத்தை தந்தது. (லூக். 10:25-37; NW) பின்பற்றுவதற்கு எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி! வீட்டுக்காரரை சிந்திக்க விடாமல் நீங்களே எல்லாவற்றையும் பேசுவதற்குப் பதிலாக, சிந்திக்க வைப்பதற்குக் கேள்விகளையும் உவமைகளையும் சாதுரியமாக பயன்படுத்துவது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
காரணம் காட்டுங்கள். அப்போஸ்தலன் பவுல் தெசலோனிக்கேயாவில் தேவாலயத்தில் பேசியபோது, கூட்டத்தார் ஏற்றுக்கொண்ட ஓர் அதிகாரப்பூர்வ நூலிலிருந்து வெறுமனே வாசிப்பதோடு நிறுத்திவிடவில்லை. பவுல் தான் வாசித்ததை விளக்கிக் காட்டினார், நிரூபித்துக் காட்டினார், பொருத்திக் காட்டினார் என லூக்கா அறிவிக்கிறார். அதனால், ‘அவர்களில் சிலர் . . . விசுவாசித்து, பவுலையும் சீலாவையும் சேர்ந்து கொண்டார்கள்.’—அப். 17:1-4.
உங்களுடைய பேச்சை செவிகொடுத்துக் கேட்போர் யாராக இருந்தாலும், அவர்களிடம் இப்படிப்பட்ட முறையில் நியாயங்காட்டிப் பேசுவது பயன் தரலாம். உறவினர்களுக்கு, சக தொழிலாளிகளுக்கு, பள்ளித் தோழர்களுக்கு, அல்லது முன்பின் தெரியாதவர்களுக்கு சாட்சி கொடுக்கும்போதோ பைபிள் படிப்பு நடத்தும்போதோ இந்த முறையையே கையாளலாம்; சபையில் பேச்சு கொடுக்கும்போதும் இதைக் கையாளலாம். ஒரு வசனத்தை நீங்கள் வாசிக்கும்போது, அதன் அர்த்தம் உங்களுக்குத் தெளிவாக தெரியலாம், ஆனால் வேறொருவருக்கோ அது தெரியாது. நீங்கள் தரும் விளக்கம் அல்லது நீங்கள் பொருத்திக் காட்டுவது பிடிவாதமாக ஒன்றை கூறுவதுபோல தொனிக்கலாம். அந்த வசனத்திலுள்ள சில முக்கிய வார்த்தைகளைத் தனிப்படுத்தி விளக்குவது உதவியாக இருக்குமா? அதற்கு அத்தாட்சியை அதன் சூழமைவிலிருந்து அல்லது இதே பொருளைப் பற்றி பேசுகிற மற்றொரு வசனத்திலிருந்து அளிக்க முடியுமா? நீங்கள் சொன்னது எந்தளவு நியாயமானது என்பதை ஓர் உவமையின் மூலம் நிரூபித்துக் காட்ட முடியுமா? அந்த விஷயத்தின் பேரில் நியாயங்காட்டுவதற்கு உங்களுடைய சபையாரிடம் கேள்விகள் கேட்பது உதவியாக இருக்குமா? இப்படிப்பட்ட முறையில் நியாயங்காட்டிப் பேசுவது விஷயத்தை மனதில் நன்கு பதிய வைக்கிறது. மற்றவர்கள் அதைப் பற்றி நன்கு யோசித்துப் பார்ப்பதற்கும் உதவுகிறது.