படிப்புக் கட்டுரை 14
வடக்கிலிருந்து வந்த தாக்குதல்!
“பலம்படைத்த வெட்டுக்கிளிக் கூட்டம் என்னுடைய தேசத்துக்கு வந்தது.”—யோவே. 1:6.
பாட்டு 116 ஒளி மேன்மேலும் பிரகாசிக்கிறது
இந்தக் கட்டுரையில்...a
1. சகோதரர் ரஸலும் அவருடைய நண்பர்களும் பைபிளை எப்படி ஆராய்ச்சி செய்து படித்தார்கள், அது ஏன் ஒரு சிறந்த முறையாக இருந்தது?
நூறு வருஷங்களுக்கும் முன்பு, சகோதரர் சி. டி. ரஸலும் அவருடைய நண்பர்கள் சிலரும் பைபிளை ஆராய்ச்சி செய்து படிப்பதற்காக ஒன்றுகூடி வந்தார்கள். யெகோவாவைப் பற்றியும், இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், இறந்தவர்களுடைய நிலையைப் பற்றியும், மீட்புவிலையைப் பற்றியும் பைபிள் உண்மையிலேயே என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார்கள். அவர்கள் எப்படி ஆராய்ச்சி செய்தார்கள்? அவர்களில் ஒருவர், ஒரு கேள்வியைக் கேட்பார். பிறகு, அந்தக் கேள்வியோடு சம்பந்தப்பட்ட எல்லா வசனங்களையும் அவர்கள் ஆராய்ச்சி செய்வார்கள். கடைசியில், தாங்கள் கண்டுபிடித்த தகவல்களைப் பதிவு செய்து வைப்பார்கள். இப்படி, எளிமையான முறையில் ஆராய்ச்சி செய்தார்கள். யெகோவாவின் ஆசீர்வாதத்தால், நிறைய அடிப்படை உண்மைகளைக் கண்டுபிடித்தார்கள். அந்த உண்மைகளையெல்லாம் இன்றுவரை நாம் உயர்வாக மதிக்கிறோம்.
2. பைபிள் தீர்க்கதரிசனங்களைத் தவறாகப் புரிந்துகொள்வதற்கு என்ன காரணம்?
2 பைபிளில் இருக்கிற அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொள்வதைவிட தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்வது கொஞ்சம் கஷ்டம் என்பது பைபிள் மாணாக்கர்களுக்குச் சீக்கிரமாகவே தெரியவந்தது. ஏனென்றால், பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கும்போது அல்லது நிறைவேறி முடிந்த பின்புதான் அவற்றை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமல்ல, ஒரு தீர்க்கதரிசனத்தை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதைப் பற்றிய முழு விவரங்களையும் அலசி ஆராய வேண்டும். ஒரு அம்சத்தை மட்டும் கருத்தில் எடுத்துக்கொண்டு மற்ற அம்சத்தை விட்டுவிட்டால், அதைத் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. யோவேல் புத்தகத்தில் இருக்கிற ஒரு தீர்க்கதரிசனத்தையும் இப்படித்தான் நாம் தவறாகப் புரிந்துவைத்திருந்தோம். அந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றியும், அதை இவ்வளவு நாட்களாக நாம் புரிந்துவைத்திருந்ததில் ஏன் மாற்றம் தேவை என்பதைப் பற்றியும் இப்போது பார்க்கலாம்.
3-4. யோவேல் 2:7-9-ல் இருக்கிற தீர்க்கதரிசனத்தை இதுவரை நாம் எப்படிப் புரிந்துவைத்திருந்தோம்?
3 யோவேல் 2:7-9-ஐ வாசியுங்கள். ஒரு வெட்டுக்கிளிக் கூட்டம் இஸ்ரவேல் தேசத்தை நாசமாக்கும் என்று யோவேல் தீர்க்கதரிசனம் சொல்கிறது. அவற்றின் பற்களும் தாடைகளும் சிங்கத்தின் பற்கள் போலவும் சிங்கத்தின் தாடைகள் போலவும் இருக்கும் என்று அவர் சொன்னார். அதோடு, பேராசை பிடித்த அந்த வெட்டுக்கிளிகள், கண்ணில் படுகிற எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடும் என்றும் சொன்னார். (யோவே. 1:4, 6) கட்டுப்படுத்த முடியாத வெட்டுக்கிளிக் கூட்டத்தைப் போல் யெகோவாவின் மக்கள் சுறுசுறுப்பாகப் பிரசங்க வேலை செய்வதைப் பற்றித்தான் இந்தத் தீர்க்கதரிசனம் சொல்கிறது என்று ரொம்ப வருஷங்களாக நம்பிக்கொண்டிருந்தோம். வெட்டுக்கிளிக் கூட்டத்தால் தாக்கப்படுகிற அந்த “தேசம்,” மதத் தலைவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற மக்களைக் குறிக்கிறது என்றும் நம்பிக்கொண்டிருந்தோம்.b
4 யோவேல் 2:7-9 வசனங்களை மட்டும் பார்த்தால், இதுவரை நாம் நம்பிக்கொண்டிருந்தது சரிதான் என்று தோன்றும். ஆனால், இந்தத் தீர்க்கதரிசனத்தின் முழு விவரங்களையும் ஆராய்ந்தால், இதுவரை நாம் நம்பிக்கொண்டிருந்ததில் மாற்றம் தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வோம். மாற்றத்துக்கான நான்கு காரணங்களை இப்போது பார்க்கலாம்.
மாற்றத்துக்கான நான்கு காரணங்கள்
5-6. இந்த வசனங்களைச் சிந்தித்துப்பார்க்கும்போது என்ன கேள்வி வருகிறது? (அ) யோவேல் 2:20 (ஆ) யோவேல் 2:25
5 முதல் காரணம், வெட்டுக்கிளிக் கூட்டத்தைப் பற்றி யெகோவா கொடுத்த ஒரு வாக்குறுதி! “வடதிசைப் படையை உங்களைவிட்டுத் தூரமாக விரட்டியடிப்பேன்” என்று அவர் வாக்குறுதி கொடுத்தார். (யோவே. 2:20) இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஊழிய வேலையைச் செய்யும் யெகோவாவின் சாட்சிகளை இந்த வெட்டுக்கிளிக் கூட்டம் குறிப்பதாக இருந்தால், அவர்களை ஏன் யெகோவா விரட்டியடிக்க வேண்டும்? (எசே. 33: 7-9; மத். 28:19, 20) தன்னுடைய உண்மை ஊழியர்களை அவர் கண்டிப்பாக விரட்டியடிக்க மாட்டார். தன்னுடைய மக்களுக்கு எதிராக இருக்கிற விஷயங்களை அல்லது ஆட்களைத்தான் அவர் விரட்டியடிப்பார்.
6 இரண்டாவது காரணம், யோவேல் 2:25-ல் இருக்கிற ஒரு விஷயம்! அதில், “முன்பு என்னுடைய பெரிய வெட்டுக்கிளிப் படையை அனுப்பினேன். நான்கு வகையான வெட்டுக்கிளிகள் வந்து எல்லாவற்றையும் தின்றுதீர்த்தன. அத்தனை வருஷங்களாக ஏற்பட்ட நஷ்டத்தை நான் ஈடுகட்டுவேன்” என்று யெகோவா சொன்னார். இந்த வசனத்தில், வெட்டுக்கிளிக் கூட்டத்தால் ஏற்பட்ட “நஷ்டத்தை நான் ஈடுகட்டுவேன்” என்று யெகோவா சொன்னதைக் கவனித்தீர்களா? அந்த வெட்டுக்கிளிக் கூட்டம் பிரசங்க வேலை செய்பவர்களைப் பற்றிச் சொல்வதாக இருந்தால், அவர்கள் சொல்கிற செய்தி நஷ்டத்தை ஏற்படுத்துமா என்ன? நிச்சயம் இல்லை! அவர்கள் சொல்கிற செய்தி மற்றவர்களுடைய உயிரைக் காப்பாற்றுகிற செய்தி; பொல்லாதவர்களை மனம் திருந்த வைக்கிற செய்தி! (எசே. 33:8, 19) அப்படியென்றால், இது மக்களுக்கு நன்மையைத்தானே தரும்!
7. யோவேல் 2:28, 29-ல் இருக்கிற “அதற்குப் பின்பு” என்ற வார்த்தைகளிலிருந்து என்ன புரிந்துகொள்கிறோம்?
7 மூன்றாவது காரணம், யோவேல் 2:28, 29-ல் சொல்லப்பட்டிருக்கிற சம்பவங்களின் வரிசை! (வாசியுங்கள்.) இந்த வசனங்களில், ‘அதற்குப் பின்பு, என் சக்தியைப் பொழிவேன்’ என்று யெகோவா சொன்னதைக் கவனியுங்கள். அதாவது, வெட்டுக்கிளிகளுக்குக் கொடுக்கப்பட்ட வேலை முடிந்த பின்பு, யெகோவா தன்னுடைய சக்தியைப் பொழிவதாகச் சொல்கிறார். வெட்டுக்கிளிக் கூட்டம் பிரசங்க வேலை செய்பவர்களைக் குறிப்பதாக இருந்தால், அவர்கள் தங்களுடைய வேலையைச் செய்து முடித்த பின்பு யெகோவா ஏன் தன்னுடைய சக்தியைப் பொழிய வேண்டும்? அந்த வேலையைச் செய்வதற்கே அவருடைய சக்தி தேவைப்படுகிறது, இல்லையா? இதை யோசித்துப்பாருங்கள்: எதிர்ப்புகள் மற்றும் தடையுத்தரவுகள் மத்தியிலும் இவ்வளவு வருஷங்களாக இந்த வேலையைச் செய்திருக்கிறோம். கடவுளுடைய சக்தியின் உதவியில்லாமல் இதைச் சாதித்திருக்க முடியுமா?
8. வெளிப்படுத்துதல் 9:1-11-ல் சொல்லப்பட்டிருக்கிற வெட்டுக்கிளிக் கூட்டம் யாரைக் குறிக்கிறது? (அட்டைப் படம்)
8 நான்காவது காரணம், வெளிப்படுத்துதல் 9:1-11-ல் இருக்கிற தீர்க்கதரிசனம்! (வாசியுங்கள்.) யோவேல் புத்தகத்தில் இருக்கிற வெட்டுக்கிளிக் கூட்டத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைப் போலவே வெளிப்படுத்துதல் புத்தகத்திலும் சொல்லப்பட்டிருப்பதால், யோவேல் தீர்க்கதரிசனம் பிரசங்க வேலையைப் பற்றித்தான் சொல்கிறது என்று இத்தனை நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தோம். வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற வெட்டுக்கிளிகளுடைய முகங்கள், மனித முகங்களைப் போல் இருப்பதாக விவரிக்கப்பட்டிருக்கிறது. “அவற்றின் தலைகளில் தங்கக் கிரீடத்தைப் போன்ற கிரீடங்கள் இருந்தன.” (வெளி. 9:7) “கடவுளுடைய முத்திரை இல்லாத” ஆட்களை அந்த வெட்டுக்கிளிக் கூட்டம் ஐந்து மாதங்களுக்கு வேதனைப்படுத்தியது. (இது, வெட்டுக்கிளிகளின் சராசரி ஆயுள் காலம்.) (வெளி. 9:4, 5) இந்த வெட்டுக்கிளிக் கூட்டம், யெகோவாவால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களைத்தான் குறிப்பதாகத் தெரிகிறது. ஏனென்றால், இந்த மோசமான உலகத்துக்கு அழிவு வரப் போகிறது என்ற நியாயத்தீர்ப்பு செய்தியை அவர்கள் தைரியமாக அறிவிக்கிறார்கள். இந்தச் செய்தி, உலகத்தின் பாகமாக இருக்க விரும்புகிறவர்களுக்கு வேதனையாகத்தான் இருக்கும்.
9. யோவேல் பார்த்த வெட்டுக்கிளிக் கூட்டத்துக்கும் யோவான் பார்த்த வெட்டுக்கிளிக் கூட்டத்துக்கும் இருக்கிற முக்கியமான வித்தியாசங்கள் என்ன?
9 யோவேல் தீர்க்கதரிசனத்துக்கும் வெளிப்படுத்துதலில் சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனத்துக்கும் சில ஒற்றுமைகள் இருப்பது உண்மைதான். இருந்தாலும், இரண்டுக்கும் இடையில் முக்கியமான வித்தியாசங்களும் இருக்கின்றன. யோவேல் தீர்க்கதரிசனத்தில் வரும் வெட்டுக்கிளிக் கூட்டம், செடிகொடிகளையெல்லாம் நாசம் செய்தது. (யோவே. 1:4, 6, 7) வெளிப்படுத்துதலில் வரும் வெட்டுக்கிளிக் கூட்டத்திடமோ, “பூமியிலுள்ள எந்தச் செடிகொடிக்கோ தாவரத்துக்கோ மரத்துக்கோ தீங்கு” செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டிருந்தது. (வெளி. 9:4) யோவேல் பார்த்த வெட்டுக்கிளிக் கூட்டம், வடக்கிலிருந்து வந்தது. (யோவே. 2: 20) யோவான் பார்த்த வெட்டுக்கிளிக் கூட்டமோ, அதலபாதாளத்திலிருந்து வந்தது. (வெளி. 9: 2, 3) யோவேல் தீர்க்கதரிசனத்தில் வரும் வெட்டுக்கிளிக் கூட்டம், விரட்டியடிக்கப்பட்டது. வெளிப்படுத்துதலில் வரும் வெட்டுக்கிளிக் கூட்டமோ, விரட்டியடிக்கப்படவில்லை; வேலையைச் செய்து முடிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த வெட்டுக்கிளிக் கூட்டத்துக்கு யெகோவாவின் அங்கீகாரம் இல்லை என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. (“வெட்டுக்கிளிக் கூட்டத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்—ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
10. யோவேலும் யோவானும் பார்த்த வெட்டுக்கிளிகள் வெவ்வேறு விஷயங்களை அடையாளப்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ள பைபிளிலிருந்து ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.
10 இந்த வித்தியாசங்களை வைத்துப் பார்க்கும்போது, இந்த இரண்டு தீர்க்கதரிசனங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற முடிவுக்கு வருகிறோம். அப்படியென்றால், யோவேலில் வருகிற வெட்டுக்கிளிகளும் வெளிப்படுத்துதலில் வருகிற வெட்டுக்கிளிகளும் வேறுவேறா? ஆமாம்! இதை எப்படிச் சொல்லலாம்? பைபிளில், ஒரு குறிப்பிட்ட அடையாளம், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, வெளிப்படுத்துதல் 5:5, இயேசுவை ‘யூதா கோத்திரத்துச் சிங்கம்’ என்று சொல்கிறது. ஆனால் 1 பேதுரு 5:8, பிசாசை ‘கர்ஜிக்கிற சிங்கம்’ என்று சொல்கிறது. இதுவரை கவனித்த நான்கு காரணங்களை வைத்துப் பார்க்கும்போது, யோவேல் தீர்க்கதரிசனத்துக்கு வேறொரு அர்த்தம்தான் இருக்க முடியும். அது என்ன?
தீர்க்கதரிசனத்தின் அர்த்தம் என்ன?
11. வெட்டுக்கிளிகள் யாரை அடையாளப்படுத்துகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள, யோவேல் 1:6; 2:1, 8, 11 வசனங்கள் எப்படி உதவுகின்றன?
11 யோவேல் தீர்க்கதரிசனத்தில் இருக்கும் மற்ற வசனங்களை அலசி ஆராய்ந்து பார்க்கும்போது, ஒரு ராணுவத் தாக்குதலைப் பற்றித்தான் யோவேல் பேசிக்கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. (யோவே. 1:6; 2:1, 8, 11) தன்னுடைய ‘பெரிய படையை,’ அதாவது பாபிலோனிய வீரர்களை, பயன்படுத்தி கீழ்ப்படியாத இஸ்ரவேலர்களைத் தண்டிக்கப்போவதாக யெகோவா சொன்னார். (யோவே. 2:25) இந்தப் படை, ‘வடதிசைப் படை’ என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், பாபிலோனியர்கள் வடக்கிலிருந்துதான் இஸ்ரவேலர்களைத் தாக்குவார்கள். (யோவே. 2:20) இந்தப் படையை, நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட வெட்டுக்கிளிக் கூட்டத்துக்கு பைபிள் ஒப்பிடுகிறது. இந்தப் படையைப் பற்றி யோவேல் இப்படிச் சொல்கிறார்: “ஒவ்வொன்றும் (ஒவ்வொரு வீரனும்) முன்னேறிக்கொண்டே போகும் . . . அவை நகரத்துக்குள் பாயும், மதில்மேல் ஓடும். வீடுகள்மேல் ஏறும், திருடனைப் போல ஜன்னல்கள் வழியாக நுழையும்.” (யோவே 2:8, 9) இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? எங்கு பார்த்தாலும் படை வீரர்கள்! ஒளிந்துகொள்வதற்கு இடமே இல்லை. பாபிலோனியர்களுடைய வாளிலிருந்து யாருமே தப்பிக்க முடியாது.
12. வெட்டுக்கிளிகளைப் பற்றி யோவேல் சொன்ன தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது?
12 கி.மு. 607-ல், வெட்டுக்கிளிக் கூட்டத்தைப் போல் பாபிலோனியர்கள் (அதாவது, கல்தேயர்கள்) எருசலேமுக்குள் நுழைந்தார்கள். “கல்தேயர்களின் ராஜா இளைஞர்களை வாளால் வெட்டிக் கொன்றான் . . . இளைஞர்கள் என்றோ கன்னிப்பெண்கள் என்றோ பார்க்கவில்லை, வயதானவர்கள் என்றோ பலவீனமானவர்கள் என்றோ பரிதாபப்படவில்லை. சொல்லப்போனால், எல்லாவற்றையும் கடவுள் அவர்கள் கையில் கொடுத்துவிட்டார். உண்மைக் கடவுளின் ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தினான், எருசலேமின் மதிலை இடித்துப்போட்டான், கோட்டைகள் எல்லாவற்றையும் சுட்டெரித்தான், மதிப்புமிக்க எல்லாவற்றையும் அழித்துப்போட்டான்” என்று பைபிள் சொல்கிறது. (2 நா. 36:17, 19) “இந்தத் தேசம் கல்தேயர்களின் கைக்குப் போய்விட்டது. மனுஷர்களும் மிருகங்களும் இல்லாத பொட்டல் காடாகிவிட்டது” என்று மக்கள் சொல்லுமளவுக்கு அதன் நிலைமை படுமோசமானதாக இருக்கும்.—எரே. 32:43.
13. எரேமியா 16:16, 18 வசனங்களில் இருக்கிற அர்த்தத்தை விளக்குங்கள்.
13 யோவேல் தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டு சுமார் 200 வருஷங்களுக்குப் பிறகு, எரேமியாவைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலைப் பற்றிய இன்னொரு தகவலை யெகோவா சொன்னார். “யெகோவா சொல்வது இதுதான்: ‘இதோ, நான் நிறைய மீனவர்களை வரவழைப்பேன். அவர்கள் இஸ்ரவேலர்களை வலைவீசிப் பிடிப்பார்கள். அதன் பின்பு, நான் நிறைய வேட்டைக்காரர்களை வரவழைப்பேன். அவர்கள் இஸ்ரவேலர்களை எல்லா மலைகளிலும் குன்றுகளிலும் பாறை இடுக்குகளிலும் வேட்டையாடிப் பிடிப்பார்கள். . . . அவர்கள் செய்த பாவத்துக்கும் குற்றத்துக்கும் முழுமையாகத் தண்டனை கொடுப்பேன்.’” இப்படி, பொல்லாத காரியங்களைச் செய்கிற ஒரு இஸ்ரவேலன்கூட தப்பிக்காதபடி எல்லாரும் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று அவர் சொன்னார். மனம் திருந்தாத இஸ்ரவேலர்கள், பாபிலோனியர்களிடமிருந்து தப்பித்து கடலிலும் போய் ஒளிந்துகொள்ள முடியாது; காடுகளிலும் போய் ஒளிந்துகொள்ள முடியாது.—எரே. 16:16, 18.
தேசம் மறுபடியும் செழித்தோங்கும்!
14. யோவேல் 2:28, 29 எப்போது நிறைவேறியது?
14 சந்தோஷமான ஒரு விஷயத்தையும் யோவேல் சொல்கிறார். அதாவது, தேசம் மறுபடியும் செழித்தோங்கும் என்று சொல்கிறார். (யோவே. 2:23-26) எதிர்காலத்தில், ஏதோவொரு கட்டத்தில், ஏராளமான ஆன்மீக உணவு கிடைக்கும் என்றும் சொல்கிறார். “பலதரப்பட்ட ஜனங்கள்மேல் என் சக்தியைப் பொழிவேன். உங்களுடைய மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள் . . . எனக்கு ஊழியம் செய்கிற ஆண்கள்மேலும் பெண்கள்மேலும் என் சக்தியைப் பொழிவேன்” என்று யெகோவா சொன்னதை யோவேல் பதிவு செய்திருக்கிறார். (யோவே. 2:28, 29) ஆனால், இஸ்ரவேலர்கள் பாபிலோனிலிருந்து தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிய உடனே கடவுள் தன்னுடைய சக்தியைப் பொழியவில்லை. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளன்றுதான், தன்னுடைய சக்தியைப் பொழிந்தார். இது நமக்கு எப்படித் தெரியும்?
15. யோவேல் 2: 28-ஐ மேற்கோள்காட்டிப் பேசியபோது, பேதுரு அதில் என்ன மாற்றம் செய்தார், இதிலிருந்து என்ன தெரிகிறது?
15 பெந்தெகொஸ்தே நாளன்று அற்புதமான ஒரு சம்பவம் நடந்தது. கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்ட பேதுரு, யோவேல் 2: 28, 29-ல் இருக்கிற விஷயத்தை அந்தச் சம்பவத்தோடு சம்பந்தப்படுத்திப் பேசினார். அது என்ன சம்பவம்? பெந்தெகொஸ்தே நாளன்று, கிட்டத்தட்ட காலை ஒன்பது மணியளவில் அற்புதமான விதத்தில் நிறைய பேர்மீது கடவுளுடைய சக்தி பொழியப்பட்டது. அவர்கள் எல்லாரும் “கடவுளுடைய மகத்தான செயல்களைப் பற்றி” பேச ஆரம்பித்தார்கள். (அப். 2:11) யோவேல் தீர்க்கதரிசனத்தை அப்போஸ்தலன் பேதுரு மேற்கோள்காட்டிப் பேசியபோது, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால், அந்த வார்த்தைகளில் சில மாற்றங்களைச் செய்தார். அது என்ன மாற்றம் என்று கண்டுபிடிக்க முடிகிறதா? (அப்போஸ்தலர் 2:16, 17-ஐ வாசியுங்கள்.) யோவேல் தீர்க்கதரிசனத்தில் இருக்கிற “அதற்குப் பின்பு” என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக, “கடைசி நாட்களில்” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். எருசலேமும் ஆலயமும் அழிக்கப்படுவதற்கு முன்னால் இருந்த கடைசி நாட்கள்தான், பேதுரு சொன்ன அந்தக் கடைசி நாட்கள்! அப்படியென்றால், யோவேல் சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்கு கொஞ்சக் காலம் எடுத்திருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது.
16. முதல் நூற்றாண்டிலும் சரி இன்றும் சரி பிரசங்க வேலை செய்வதற்கு கடவுளுடைய சக்தி எப்படி உதவுகிறது?
16 முதல் நூற்றாண்டில் கடவுளுடைய சக்தி அற்புதமான விதத்தில் பொழியப்பட்டதற்குப் பின்பு பிரசங்க வேலை பெரிய அளவில் நடைபெற்றது. அதனால்தான், கிட்டத்தட்ட கி.பி. 61-ல் கொலோசெயர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் கடிதம் எழுதியபோது, “வானத்தின் கீழ் இருக்கிற எல்லா மக்களுக்கும்” நல்ல செய்தி பிரசங்கிக்கப்பட்டது என்று சொன்னார். (கொலோ. 1:23) அதாவது, பவுலாலும் மற்ற சீஷர்களாலும் எவ்வளவு முடிந்ததோ அவ்வளவு தூரம் போய்ப் பிரசங்கித்தார்கள். அதே சக்தியின் உதவியால்தான், அன்று நடந்ததைவிட இன்று பிரசங்க வேலை பிரமாண்டமான அளவில் நடைபெற்று வருகிறது. அதாவது, “பூமியெங்கும்” நடைபெற்று வருகிறது!—அப். 13:47. (“என் சக்தியைப் பொழிவேன்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
எது மாறியிருக்கிறது?
17. வெட்டுக்கிளிகள் பற்றிய யோவேல் தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொள்வதில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது?
17 யோவேல் 2:7-9-ல் இருக்கிற தீர்க்கதரிசனத்தை இப்போது நாம் தெளிவாகப் புரிந்துகொண்டோம். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆர்வத்துடிப்போடு நாம் செய்கிற பிரசங்க வேலையைப் பற்றி அது சொல்லவில்லை. கி.மு. 607-ல் பாபிலோனியர்கள் எருசலேமுக்குள் படையெடுத்து வந்ததைப் பற்றித்தான் அது சொல்கிறது.
18. யெகோவாவின் மக்களுடைய விஷயத்தில் எது மாறவில்லை?
18 யெகோவாவின் மக்கள் அன்று எப்படிச் சுறுசுறுப்பாக ஊழியம் செய்தார்களோ இன்றும் அதே மாதிரிதான் செய்கிறார்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை. எல்லா இடங்களிலும், எல்லா விதங்களிலும் தொடர்ந்து நல்ல செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டே வருகிறார்கள். (மத். 24:14) எந்த அரசாங்கத் தடைகளாலும் இந்த வேலையைத் தடுத்து நிறுத்தவே முடியாது. யெகோவாவின் ஆசீர்வாதத்தால் என்றும் இல்லாதளவு இன்று நாம் படுசுறுசுறுப்பாகவும் தைரியமாகவும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிறோம்! பைபிள் தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொள்வதற்கு நாம் மனத்தாழ்மையோடு தொடர்ந்து யெகோவாவை நம்பியிருக்க வேண்டும். சரியான நேரத்தில் “சத்தியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள” அவர் நமக்கு உதவுவார் என்று உறுதியாக நம்ப வேண்டும்.—யோவா. 16:13.
பாட்டு 115 வாழ்வில் வெற்றி பெற
a யோவேல் புத்தகத்தின் முதல் இரண்டு அதிகாரங்களில் இருக்கிற தீர்க்கதரிசனம் நம் நாட்களில் நடக்கிற பிரசங்க வேலையைப் பற்றித்தான் சொல்கிறது என ரொம்ப வருஷங்களாக நாம் நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது அதில் மாற்றம் தேவைப்படுகிறது. ஏன்? அதற்கான நான்கு காரணங்களைப் பற்றிப் பார்ப்போம்.
b உதாரணத்துக்கு, ஏப்ரல் 15, 2009 காவற்கோபுரத்தில் வந்த “படைப்பில் பளிச்சிடும் யெகோவாவின் ஞானம்” என்ற கட்டுரையில், பாராக்கள் 14-16-ஐப் பாருங்கள்.