பரிசுத்தவான்களுக்கு துயருதவி அளிக்க ஏற்பாடு செய்கிறார் பவுல்
ஆன்மீக விஷயங்களே உண்மை கிறிஸ்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இருப்பினும், மற்றவர்களின் சரீரப்பிரகாரமான தேவைகளுக்கு கவனம் செலுத்துவதும் அவர்களுக்கு முக்கியமானதுதான். கஷ்டத்தில் இருப்போருக்கு அவர்கள் உதவிக்கரம் நீட்ட அடிக்கடி முன்வந்திருக்கின்றனர். தேவையிலிருக்கும் உடன்விசுவாசிகளுக்கு உதவும்படி சகோதர அன்பு கிறிஸ்தவர்களைத் தூண்டியிருக்கிறது.—யோவான் 13:34, 35.
அகாயா, கலாத்தியா, மக்கெதோனியா, ஆசியா மாகாணம் ஆகிய இடங்களிலிருந்த சபைகளில் நன்கொடை திரட்டும் ஏற்பாட்டில் ஈடுபட தன் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளிடமுள்ள அன்பு அப்போஸ்தலன் பவுலைத் தூண்டினது. இது ஏன் தேவைப்பட்டது? இந்தத் துயருதவி ஏற்பாடு எப்படி ஒழுங்குபடுத்தப்பட்டது? இதற்கு சபையினர் எப்படி பிரதிபலித்தனர்? இந்தச் சம்பவம் நமக்கு ஏன் ஆர்வத்திற்குரியதாய் இருக்க வேண்டும்?
எருசலேம் சபையின் நிலைமை
வேறு இடங்களைச் சேர்ந்த யூதர்களும் யூத மதத்திற்கு மதம் மாறியவர்களும் பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்களாயினர். அதற்குப் பின்பு இவர்கள், உண்மையான விசுவாசத்தைப் பற்றி இன்னும் கற்றறிய எருசலேமிலேயே தங்கிவிட்டனர். எனவே, இப்படி நீண்ட காலம் தங்கியவர்களைக் கவனித்துக் கொள்ள உடன் வணக்கத்தார் சந்தோஷமாய் உதவினர். (அப்போஸ்தலர் 2:7-11, 41-44, 4:32-37) யூத தேசாபிமானிகள் ஜனத்தாரில் கலகத்தையும், வன்முறையையும் தூண்டிவிட்டபோது உள்நாட்டு குழப்பம் இன்னும் அதிகமாகி, மிகவும் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி இருக்கலாம். எனினும், கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் பசியில் வாடாதபடிக்கு, தேவையிலிருந்த விதவைகளுக்கு உதவியளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. (அப்போஸ்தலர் 6:1-6) சபைகளைத் துன்புறுத்துவதில் ஏரோது மும்முரமாய் ஈடுபட்டிருந்தான். மேலும் பொ.ச. 45 வாக்கில் யூதேயாவில் மோசமான பஞ்சம் தலைதூக்கியது. பவுல் குறிப்பிட்டபடி, இயேசுவைப் பின்பற்றினோருக்கோ இதெல்லாம், ‘துன்பங்களிலும்,’ ‘உபத்திரவங்களிலும்,’ ‘ஆஸ்திகள் கொள்ளையிடப்படுவதிலும்’ போய் முடிவடைந்திருக்கலாம்.—எபிரெயர் 10:32-34; அப்போஸ்தலர் 11:27–12:1.
பொ.ச. 49 வாக்கில் இந்த நிலைமை இன்னும் படுமோசமடைந்தது. ஆகவே, பிறதேசத்தாருக்கு பிரசங்கிப்பதில் கவனம் செலுத்த பவுல் ஒப்புக்கொண்டபோது, “தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படி” பேதுருவும், யாக்கோபும், யோவானும் அவரை ஊக்குவித்தனர். அதைச் செய்யவே பவுலும் பிரயாசப்பட்டார்.—கலாத்தியர் 2:7-10.
நன்கொடை திரட்ட ஏற்பாடு செய்தல்
யூதேயாவிலிருந்த ஏழை கிறிஸ்தவர்களுக்காக நிதி திரட்டப்படுவதை பவுல் மேற்பார்வையிட்டார். பொ.ச. 55 வாக்கில் அவர் கொரிந்தியர்களிடம், “பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக் குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள். . . . உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன். நான் வரும்போது உங்கள் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் நிருபங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன்” என்று சொன்னார். (1 கொரிந்தியர் 16:1-3) ஓர் ஆண்டுக்குப் பின்பு, மக்கெதோனியாவும் அகாயாவும் இந்த நன்கொடை அளிப்பதில் பங்குகொண்டதாக பவுல் சொன்னார். இந்தப் பணம் எருசலேமுக்கு அனுப்பப்பட்டபோது, ஆசியாவிலிருந்து வந்த பிரதிநிதிகளும் அங்கிருந்தனர்; எனவே, அந்தப் பகுதியிலிருந்த சபைகளும் உதவிக்கரம் நீட்டியதாக தெரிகிறது.—அப்போஸ்தலர் 20:4; 2 கொரிந்தியர் 8:1-4; 9:1, 2.
தங்கள் சக்திக்கு மீறி கொடுக்கும்படி யாரும் வற்புறுத்தப்படவில்லை. மாறாக, தேவைக்கு அதிகமானவற்றை சமமாக பகிர்ந்தளிப்பதன் மூலம் எருசலேமிலும் யூதேயாவிலும் இருந்த பரிசுத்தவான்களின் குறைகளை நிரப்பிடும் செயலாய் அது இருந்தது. (2 கொரிந்தியர் 8:13-15) “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” என்று பவுல் சொன்னார்.—2 கொரிந்தியர் 9:7.
தயாள குணத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை நியாயமான முறையில் அப்போஸ்தலன் பவுல் கொரிந்தியருக்கு எடுத்துரைத்தார். ஆன்மீகத்தில் ‘அவர்கள் ஐசுவரியவான்களாகும்படிக்கு,’ இயேசு, ‘அவர்கள் நிமித்தம் தரித்திரரானாரே.’ (2 கொரிந்தியர் 8:9) அவருடைய தாராள மனப்பான்மையைப் பின்பற்ற அவர்கள் நிச்சயமாகவே விரும்பினர். மேலும், ‘உதாரகுணத்திலே சம்பூரணமுள்ளவர்களாகும்படி’ கடவுள் அவர்களைச் செல்வந்தராக்குவதால், பரிசுத்தவான்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவர்கள் உதவுவது பொருத்தமானதே.—2 கொரிந்தியர் 9:10-12.
நன்கொடை அளிப்போரின் மனநிலை
முதல் நூற்றாண்டில், பரிசுத்தவான்களுக்கான துயர்தீர்ப்பு பணியில் ஈடுபட்டவர்களின் மனப்பான்மையைக் கவனிப்பதால் மனமுவந்து அளிப்பதில் நாம் சிறந்த பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். நன்கொடை திரட்டுவது, யெகோவாவின் வணக்கத்தாரில் ஏழையாய் இருந்தவர்களிடம் கரிசனை காட்டுவதை மட்டுமே அர்த்தப்படுத்தவில்லை. யூத கிறிஸ்தவர்களுக்கும் புறஜாதியிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் இடையே சகோதரத்துவ பிணைப்பு இருந்ததை அது அர்த்தப்படுத்தியது. நன்கொடைகள் அளிப்பதும் ஏற்றுக்கொள்வதும், இவர்களுக்கிடையே நிலவிய ஒற்றுமையையும் நட்பையும் சுட்டிக்காட்டின. பொருளாதார ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.—ரோமர் 15:26, 27.
ஆரம்பத்தில் மக்கெதோனிய கிறிஸ்தவர்களை உதவும்படி பவுல் அழைத்திருக்க மாட்டார்; ஏனென்றால், அவர்களும் ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். எனினும் தங்கள் ‘தர்ம ஊழியத்தின் பங்கை ஏற்கும்படி மிகவும் வேண்டிக்கொண்டார்கள்.’ ‘மிகுந்த உபத்திரவ சோதனையை’ அவர்கள் அனுபவித்து வந்தபோதிலும், “தங்கள் திராணிக்கு மிஞ்சி” சந்தோஷமாய் கொடுத்தார்களே! (2 கொரிந்தியர் 8:1-4) ரோம சட்டம் அனுமதிக்காத ஒரு மதத்தை அவர்கள் பின்பற்றுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் அவர்கள் அனுபவித்த பெரும் சோதனையில் அடங்கும். ஆகையால், இதே போன்ற கஷ்டங்களை அனுபவித்து வந்த தங்கள் யூதேய சகோதரர்களின் நிலையை அவர்கள் முழுமையாய் உணர்ந்தனர்.—அப்போஸ்தலர் 16:20, 21; 17:5-9; 1 தெசலோனிக்கேயர் 2:14.
நன்கொடை திரட்டுவதில் கொரிந்தியரிடம் ஆரம்பத்தில் காணப்பட்ட ஆர்வத்தை பவுல் சுட்டிக்காட்டி மக்கெதோனியரை ஊக்குவித்த போதிலும் கொரிந்தியரிடம் இருந்த உற்சாகம் மெல்ல மெல்ல குறைந்துபோனது. எனவே, கொரிந்தியரை ஊக்குவிப்பதற்கு மக்கெதோனியரின் தாராள மனப்பான்மையைப் பற்றி அப்போஸ்தலன் குறிப்பிட்டார். ஓர் ஆண்டுக்கு முன்பாக அவர்கள் தொடங்கிய பணியை முடிப்பதற்கு இப்போது நேரம் வந்துவிட்டதை அவர்களுக்கு நினைப்பூட்டினார். என்ன நடந்திருந்தது?—2 கொரிந்தியர் 8:10, 11; 9:1-5.
தீத்து கொரிந்துவில் நன்கொடை திரட்ட தொடங்கியிருந்தார், ஆனால் பிரச்சினைகள் எழும்பின, அவை அவருடைய முயற்சிகளுக்கு இடையூறாய் இருந்திருக்கலாம். எனவே, மக்கெதோனியாவில் பவுலுடன் கலந்தாலோசித்த பின்பு, கொரிந்துவிலிருந்த சபையை ஊக்குவிக்கவும், நன்கொடை அளித்தது போதும் என சொல்லவும் வேறு இருவரோடு அவர் திரும்பிவந்தார். பவுல், கொரிந்தியரை சுயநலத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள முயன்றதாக சிலர் ஒருவேளை குறைகூறி இருக்கலாம். இதனிமித்தமாகவே, ஒருவேளை பவுல் இப்படி நன்கொடை திரட்டுவதை முடித்துக் கொள்ளும்படி சொல்ல மூவரை அனுப்பியிருக்கலாம். மேலும், அவர்களைக் குறித்த சிபாரிசு கடிதங்களையும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் கொடுத்தனுப்பி இருக்கலாம். “எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த மிகுதியான தர்ம பணத்தைக் குறித்து ஒருவனும் எங்களைக் குற்றப்படுத்தாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கையாயிருந்து, கர்த்தருக்கு [“யெகோவாவுக்கு,” NW] முன்பாக மாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்” என பவுல் சொன்னார்.—2 கொரிந்தியர் 8:6, 18-23; 12:18.
நன்கொடை பணத்தை ஒப்புவித்தல்
பொ.ச. 56-ன் இளவேனிற்காலத்திற்குள், எருசலேமுக்குக் கொண்டு செல்ல நன்கொடை பணம் தயாராக இருந்தது. நன்கொடை அளித்தவர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியவர்களுடன் பவுலும் செல்லவிருந்தார். “பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தொபையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டாராகிய தீகிக்கும் துரோப்பீமும், ஆசியாநாடு வரைக்கும் அவனுக்கு வழித்துணையாய் வந்தார்கள்” என அப்போஸ்தலர் 20:4 சொல்கிறது. அவர்களில் லூக்காவும் இருந்ததாக தெரிகிறது; இவர் பிலிப்பியிலிருந்த கிறிஸ்தவர்களின் பிரதிநிதியாக அங்கு இருந்திருக்கலாம். இவ்வாறு, குறைந்தபட்சம் ஒன்பது பேர் இந்த வேலைக்காக சென்றனர்.
அறிஞர் டீட்டர் ஜியார்ஜி இவ்வாறு சொல்கிறார்: “நிதியாக திரட்டப்பட்ட மொத்த தொகை பெரும் தொகையாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், பவுலும் அத்தனை அநேக பிரதிநிதிகளும் பட்ட கஷ்டமும் செய்த தியாகமும் பிரயோஜனமற்றதாய் போயிருக்கும்.” அத்தனை பேர் இருந்தது பாதுகாப்பை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், நேர்மையற்றவர் என்ற எந்தவொரு குற்றச்சாட்டிலிருந்தும் பவுலை பாதுகாத்தது. அனுப்பப்பட்டவர்கள், எருசலேமிலிருந்த பரிசுத்தவான்களுக்கு முன் பிறதேசத்தாரின் சபைகளைப் பிரதிநிதித்துவம் செய்தனர்.
கொரிந்துவிலிருந்து சீரியாவுக்குக் கப்பலில் பயணம் செய்திருந்தால் பிரதிநிதிகளின் அந்தக் குழுவினர், பஸ்காவிற்குள் எருசலேமுக்குப் போய் சேர்ந்திருப்பர். எனினும் பவுலைக் கொலை செய்யும் சதித்திட்டத்தைக் கேள்விப்பட்டதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டனர். (அப்போஸ்தலர் 20:3) கடலில் அவரைக் கொன்று போட அவருடைய எதிரிகள் ஒருவேளை திட்டமிட்டிருக்கலாம்.
பவுலுக்கு வேறு கவலைகளும் இருந்தன. எனவே, புறப்படுவதற்கு முன்பாக, ‘யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளிடமிருந்து தன்னை தப்புவிக்கும்படிக்கும், எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்கு தான் செய்யப் போகிற தர்மசகாயம் அவர்களால் அங்கீகரிக்கப்படும்படிக்கும்’ ஜெபிக்க ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அவர் எழுதினார். (ரோமர் 15:30, 31) அந்த நன்கொடை பணத்தை அந்தப் பரிசுத்தவான்கள் மனமார்ந்த நன்றியுடன் ஏற்பார்கள் என்பதில் அவருக்கு சந்தேகமில்லை; எனினும் தான் செல்வதால் பொதுவாக யூதர்களுக்குள் எழும் கலகத்தைப் பற்றியே பவுல் ஒருவேளை கவலைப்பட்டிருக்கலாம்.
இந்த அப்போஸ்தலன் நிச்சயமாகவே ஏழைகளை மனதில் வைத்திருந்தார். அந்த பண உதவி எப்போது அளிக்கப்பட்டது என்பதைப் பற்றி வேதவசனங்கள் சொல்லாவிடினும், அது ஐக்கியத்தை அதிகரித்தது; தங்கள் உடன் யூதேய விசுவாசிகளிடமிருந்து பெற்ற ஆவிக்குரிய செல்வங்களுக்காக நன்றியுடன் இருக்க பிறதேச கிறிஸ்தவர்களைத் தூண்டியது. பவுல் எருசலேமில் இருக்கையில் ஆலயத்திற்கு அவர் வந்த உடனேயே கலகம் ஆரம்பித்தது, அவர் கைதுசெய்யப்படுவதில் போய் முடிந்தது. ஆனால் அது, தேசாதிபதிகளுக்கும் அரசர்களுக்கும் சாட்சிகொடுப்பதற்கு வாய்ப்புகளை அவருக்கு ஏற்படுத்தித் தந்தது.—அப்போஸ்தலர் 9:15; 21:17-36; 23:11; 24:1–26:32.
இன்று நம் நன்கொடைகள்
முதல் நூற்றாண்டிலிருந்து இன்று வரை பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அடிப்படையான நியமங்கள் மாறவில்லை. பண தேவைகள் ஏற்படுகையில் உடனடியாக அது கிறிஸ்தவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. தேவையில் இருப்போருக்காக அவர்கள் அளிக்கும் எந்தப் பண உதவியும் மனமுவந்து அளிக்கப்பட வேண்டும், கடவுளிடமும் உடன்விசுவாசிகளிடமும் உள்ள அன்பினால் தூண்டப்பட்டதாய் அது இருக்க வேண்டும்.—மாற்கு 12:28-31.
முதல் நூற்றாண்டில் பரிசுத்தவான்களின் துயர்தீர்ப்புக்கான நடவடிக்கைகள், அத்தகைய நன்கொடைகள் அளிப்பது சரிவர ஏற்பாடு செய்யப்பட்டு முற்றிலும் நேர்மையான விதத்தில் கையாளப்படுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகின்றன. யெகோவா தேவன் இந்தத் தேவைகளைப் பற்றி நிச்சயம் அறிந்திருக்கிறார்; தம்முடைய ஊழியர்கள், கஷ்டங்களின் மத்தியிலும் ராஜ்ய நற்செய்தியை மற்றவர்களிடம் அறிவிப்பதில் விடாமல் தொடர ஏற்பாடுகளைச் செய்கிறார். (மத்தேயு 6:25-34) எனினும், நம்முடைய பொருளாதார நிலை என்னவாயிருந்தாலும், எல்லாருமே நம் பங்கை செய்யலாம். அப்போது, ‘மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமாக இராது, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவாக இராது.’—2 கொரிந்தியர் 8:15.