கடவுள் நம்மீது அன்பை வெளிக்காட்டினார்
‘அளவற்ற கருணையானது நீதியின் மூலம் ராஜாவாக ஆட்சி செய்யும்.’—ரோ. 5:21.
1, 2. எதை ஓர் அன்பளிப்பென ஒரு பேராசிரியர் சொன்னார், ஆனால் அதைவிட மதிப்புவாய்ந்த அன்பளிப்பு எது?
ரோம சாம்ராஜ்யத்தின் சட்டங்கள் உலக நாகரிகத்திற்கு மிகுந்த பயனளிக்கும் ஓர் அன்பளிப்பு என்று ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்பர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் சொன்னார். ஆனால், அதைவிடப் பல மடங்கு மதிப்புவாய்ந்த அன்பளிப்பைக் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. அதுதான், நாம் நீதிமான்களாக அங்கீகரிக்கப்பட்டு மீட்பையும் முடிவில்லா வாழ்வையும் பெறுவதற்காக அவர் செய்திருக்கிற ஏற்பாடாகும்.
2 கடவுள் இந்த அன்பளிப்பைத் தந்த விதம் அவருடைய நீதியோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ரோமர் 5-ஆம் அதிகாரத்தில், இதை பவுல் ஏதோ உப்புச்சப்பில்லாத சட்டங்களை விவரிப்பதுபோல் விவரிக்கவில்லை. மாறாக, பூரிப்பளிக்கும் இந்த நம்பிக்கையான வார்த்தைகளுடன் ஆரம்பித்தார்: “விசுவாசத்தினால் நாம் இப்போது நீதிமான்களாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளோடு சமாதானத்தை அனுபவிப்போமாக.” கடவுளுடைய அன்பளிப்பை ஏற்றுக்கொள்கிறவர்கள் அவர்மீது அன்பு காட்டத் தூண்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பவுல். அவர் இவ்வாறு எழுதினார்: “கடவுள் தமது சக்தியை நமக்கு அருளி தமது அன்பை நம் இருதயங்களில் பொழிந்திருக்கிறார்.”—ரோ. 5:1, 5.
3. என்ன பொருத்தமான கேள்விகள் எழுகின்றன?
3 கடவுளுடைய அன்பளிப்பு ஏன் தேவைப்பட்டது? இதைக் கடவுள் எப்படி நியாயமான, பாரபட்சமில்லாத விதத்தில் அளித்தார்? இதைப் பெறுவதற்கான தகுதியை எட்ட ஒருவர் என்ன செய்ய வேண்டும்? இவற்றிற்கான திருப்தியளிக்கும் பதில்களையும், அவை எவ்வாறு கடவுளுடைய அன்பைச் சிறப்பித்துக் காட்டுகின்றன என்பதையும் பார்க்கலாம்.
மனிதர்களுடைய பாவமும், கடவுளுடைய அன்பும்
4, 5. (அ) யெகோவா எவ்விதத்தில் பேரளவான அன்பைக் காட்டினார்? (ஆ) ரோமர் 5:12-ஐப் புரிந்துகொள்ள என்ன பைபிள் பதிவு நமக்கு உதவுகிறது?
4 மனிதர்களுக்கு உதவ யெகோவா தமது ஒரே மகனை அனுப்பி பேரளவான அன்பைக் காட்டினார். அதைப் பற்றி பவுல் குறிப்பிடுகையில், “நாம் பாவிகளாக இருந்தபோதே நமக்காக உயிரைக் கொடுக்க கிறிஸ்துவைக் கடவுள் அனுப்பினார்; இதன் மூலம், கடவுள் நம்மீது அன்பை வெளிக்காட்டினார்” என்றார். (ரோ. 5:8) “நாம் பாவிகளாக இருந்தபோதே” என்று அவர் சொன்னதைக் கவனியுங்கள். நாம் எப்படிப் பாவிகளானோம் என்பதை எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
5 அதைக் குறித்து பவுல் இவ்வாறு சுருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்: “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது; இவ்வாறு, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.” (ரோ. 5:12) இதை நாம் புரிந்துகொள்ள, மனித வாழ்வு ஆரம்பித்த விதத்தைப் பற்றிய பைபிள் பதிவு நமக்கு உதவுகிறது. யெகோவா முதன்முதலில் ஆதாமையும் ஏவாளையும் படைத்தார். படைப்பாளராகிய அவர் பரிபூரணர் என்பதால் நம்முடைய மூதாதையர்களான அந்த முதல் மனித ஜோடியும் பரிபூரணராக இருந்தார்கள். கடவுள் அவர்களுக்கு ஒரேவொரு கட்டளையைக் கொடுத்து, அதை மீறினால் மரண தண்டனை கிடைக்குமென்று குறிப்பிட்டார். (ஆதி. 2:17) என்றாலும், அவர்கள் கடவுளுடைய நியாயமான கட்டளையை மீறி, தங்களையே கெடுத்துக்கொண்டார்கள்; இவ்வாறு, சட்டத்தை இயற்றுபவரும் சர்வலோகப் பேரரசருமான அவரை நிராகரித்தார்கள்.—உபா. 32:4, 5.
6. (அ) கடவுள் திருச்சட்டத்தைக் கொடுப்பதற்கு முன்பும் சரி பின்பும் சரி ஆதாமின் சந்ததியினர் ஏன் இறந்தார்கள்? (ஆ) பரம்பரை நோய்களின் உதாரணத்தை வைத்து எதை விளக்கலாம்?
6 ஆதாம் பாவம் செய்த பிறகுதான் அவனுக்குப் பிள்ளைகள் பிறந்தன; ஆகவே, அவன் மூலம் அவர்கள் அனைவருமே பாவத்தையும் அதன் விளைவுகளையும் வழிவழியாகப் பெற்றார்கள். ஆனால், ஆதாமைப் போல் அவர்கள் கடவுளுடைய கட்டளையை மீறவில்லை; அதனால் அவன் சுமந்த அதே பாவத்தை அவர்கள் சுமக்கவில்லை; அதோடு, எந்தச் சட்டதிட்டமும் அவர்களுக்கு அதுவரை கொடுக்கப்படவில்லை. (ஆதி. 2:17) இருந்தாலும், ஆதாமுடைய வம்சத்தில் வந்த அனைவருமே பாவத்தை வழிவழியாகப் பெற்றார்கள். இவ்வாறு, கடவுள் இஸ்ரவேலருக்குத் திருச்சட்டத்தைக் கொடுத்த காலம்வரை பாவமும் மரணமும் ராஜாவாக ஆட்சி செய்ததெனச் சொல்லலாம்; அந்தத் திருச்சட்டம், அவர்கள் பாவிகள் என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டியது. (ரோமர் 5:13, 14-ஐ வாசியுங்கள்.) வழிவழியாகக் கடத்தப்படும் பாவத்தின் விளைவை சில பரம்பரை நோய்களின் உதாரணத்தை வைத்து விளக்கலாம். ஒரு குடும்பத்தில் சில பிள்ளைகளுக்கு அப்படிப்பட்ட நோய் வந்தாலும் எல்லாப் பிள்ளைகளுக்கும் அது வராமலிருக்கலாம். பாவமோ அப்படியல்ல. ஆதாமிடமிருந்து கடத்தப்பட்ட பாவம் யாராலும் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆனது. ஆம், எல்லாருமே அதனால் பீடிக்கப்படுகிறார்கள். அதன் மரணப் பிடியிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது. அது எந்தப் பிள்ளைகளையும் விட்டுவைப்பதில்லை. இந்த இக்கட்டான நிலையிலிருந்து விடுபட முடியுமா?
இயேசு கிறிஸ்து மூலம் கடவுள் செய்த ஏற்பாடு
7, 8. இரண்டு பரிபூரண மனிதர்களின் வாழ்க்கை எப்படி வேறுவேறு விளைவுகளை ஏற்படுத்தின?
7 வழிவழியாக வரும் பாவத்திலிருந்து விடுபட மனிதர்களுக்காக யெகோவா அன்போடு ஓர் ஏற்பாட்டைச் செய்தார். பிற்பாடு வந்த இன்னொரு மனிதனைக் கொண்டு, அதாவது இரண்டாம் ஆதாம் என்றழைக்கப்படும் பரிபூரண மனிதனைக் கொண்டு, அவர் அந்த ஏற்பாட்டைச் செயல்படுத்தியதாக பவுல் விளக்கினார். (1 கொ. 15:45) ஆனால், அந்த இரண்டு பரிபூரண மனிதர்களின் வாழ்க்கையும் வேறுவேறு விளைவுகளை ஏற்படுத்தின. எப்படி?—ரோமர் 5:15, 16-ஐ வாசியுங்கள்.
8 “குற்றத்தினால் வந்த விளைவும் அன்பளிப்பினால் வந்த விளைவும் வேறுவேறு” என்று பவுல் எழுதினார். ஆதாம் குற்றத்தைச் செய்தான், அதற்குரிய மரண தண்டனையையும் பெற்றான். இருந்தாலும், அவன் மட்டுமே சாகவில்லை. “[அந்த] ஒரே மனிதனுடைய குற்றத்தினால் அநேகருக்கு மரணம் வந்தது” என்று வாசிக்கிறோம். ஆதாமுக்குக் கிடைத்த நியாயமான தண்டனை அவனுடைய அபூரண சந்ததியாரான நம் அனைவருக்குமே கிடைப்பது நீதியானதாக இருந்தது. ஆனாலும், பரிபூரண மனிதரான இயேசு அதற்கு நேர்மாறான விளைவை ஏற்படுத்தினார் என்பது ஆறுதலளிக்கும் விஷயம். அது என்ன விளைவு? இதற்கான பதிலை பவுல் இவ்வாறு எழுதினார்: “பலதரப்பட்ட ஆட்களும் வாழ்வு பெறும்படி நீதிமான்களாக அங்கீகரிக்கப்படுவார்கள்.”—ரோ. 5:18.
9. ரோமர் 5:16, 18-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கடவுள் மனிதர்களை நீதிமான்களாக அங்கீகரிப்பது எதைக் குறிக்கிறது?
9 ‘நீதிமான்களாக அங்கீகரிக்கப்படுதல்’ என்பதற்கான கிரேக்க வார்த்தைகளின் அர்த்தம் என்ன? பைபிள் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் இவ்வாறு விளக்கினார்: “அது ஒரு சட்டப்பூர்வ குறிப்பை எடுத்துக் காட்டும் ஒரு சட்டப்பூர்வ உருவகமாகும். அது, கடவுளுக்குமுன் ஒரு நபருடைய நிலைநிற்கை மாறுவதைக் குறிக்கிறது, அந்த நபரின் குணம் மாறுவதைக் குறிப்பதில்லை. . . . இந்த உருவகத்தில் கடவுள் ஒரு நீதிபதியாகச் செயல்படுகிறார்; ஏதோ அநியாயம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு அவருடைய நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ள நபருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்குகிறார். அந்த நபரைக் குற்றமற்றவரென அறிவிக்கிறார்.”
10. மனிதர்கள் நீதிமான்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு இயேசு என்ன செய்தார்?
10 நீதியுள்ள “சர்வலோக நியாயாதிபதி” எதன் அடிப்படையில் அநீதியுள்ளவர்களைக் குற்றமற்றவர்களென அறிவிக்கிறார்? (ஆதி. 18:25) இதற்கு முதற்படியாக, அவர் அன்போடு தமது ஒரே மகனை இந்தப் பூமிக்கு அனுப்பினார். இயேசு பல சோதனைகளையும் ஏளனங்களையும் பழிப்பேச்சுகளையும் எதிர்ப்பட்டபோதிலும் தமது தகப்பனின் சித்தத்தை அப்படியே செய்தார். கழுமரத்தில் சாகும்வரைகூட தமது உத்தமத்தைவிட்டு விலகாமல் இருந்தார். (எபி. 2:10) அவர் தமது பரிபூரண மனித உயிரைக் கொடுப்பதன் மூலம், ஆதாமின் சந்ததியாரைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிப்பதற்குரிய மீட்புவிலையைச் செலுத்தினார்.—மத். 20:28; ரோ. 5:6-8.
11. மீட்புவிலை எதற்குச் சரிசமமானதாக இருந்தது?
11 இன்னொரு இடத்தில் பவுல் இதை “சரிசமமான மீட்புவிலை” என்று குறிப்பிட்டார். (1 தீ. 2:6) இது எதற்குச் சரிசமமானதாக இருந்தது? ஆதாம் தனது சந்ததியினரான கோடிக்கணக்கான மனிதர்களுக்கு அபூரணத்தையும் மரணத்தையும் கடத்தினான். இயேசுவோ, ஒரு பரிபூரண மனிதராக கோடிக்கணக்கான பரிபூரண மனிதர்களுக்குத் தகப்பனாகும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்.a ஆகவே, இயேசுவின் உயிரும் அவரால் பெற்றெடுத்திருக்க முடிந்த பரிபூரண மனிதர்கள் அனைவரின் உயிரும் ஒன்றுசேர்ந்து, ஆதாம் மற்றும் அவனுடைய அபூரண சந்ததி அனைவரின் உயிருக்கும் சரிசமமான பலியாக ஆனது என்று நம்பிவந்தோம். என்றாலும், இயேசுவால் பெற்றெடுத்திருக்க முடிந்த எந்தப் பிள்ளைகளும் மீட்புப் பலியின் பாகமாக ஆனதாய் பைபிள் சொல்வதில்லை. ரோமர் 5:15-19 சொல்கிறபடி, “ஒரே மனிதனுடைய” மரணம் மீட்பை அளித்தது. ஆம், இயேசுவின் பரிபூரண உயிர் ஆதாமின் பரிபூரண உயிருக்குச் சரிசமமானதாக இருந்தது. ஆகவே, மீட்புப் பலி என்றாலே இயேசு கிறிஸ்து மட்டும்தான் நம் கவனத்தில் நிற்கிறார், நிற்கவும் வேண்டும். அவருடைய ஒரே “நீதியான செயலினால்,” அதாவது மரணம்வரை கீழ்ப்படிதலையும் உத்தமத்தையும் காட்டிய போக்கினால், கடவுள் தரும் அன்பளிப்பையும் வாழ்வையும் பெறுகிற வாய்ப்பு பலதரப்பட்ட ஆட்களுக்குக் கிடைத்தது. (2 கொ. 5:14, 15; 1 பே. 3:18) எப்படி?
மீட்புவிலையின் அடிப்படையில் குற்றமற்றவர்களாகத் தீர்க்கப்படுதல்
12, 13. கடவுள் மீட்புப் பலியின் நன்மைகளை எதனால் அளித்தார்?
12 யெகோவா தேவன் தமது மகன் தந்த மீட்புப் பலியை ஏற்றுக்கொண்டார். (எபி. 9:24; 10:10, 12) என்றாலும், பூமியிலிருந்த உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் உட்பட இயேசுவின் சீடர்கள் அனைவரும் அபூரணர்களாகவே இருந்தார்கள். தவறு செய்வதைத் தவிர்க்க அவர்கள் முயன்றபோதிலும், சில சமயங்களில் தவறிவிட்டார்கள். ஏன்? ஏனென்றால், அவர்கள் பாவத்தை வழிவழியாகப் பெற்றிருந்தார்கள். (ரோ. 7:18-20) ஆனால், அதற்குப் பரிகாரமாகக் கடவுளால் ஒன்றைச் செய்ய முடிந்தது, அதைத்தான் அவர் செய்தார். அவர் ‘சரிசமமான மீட்புவிலையை’ ஏற்றுக்கொண்டு, அதன் நன்மைகளைத் தம் மனித ஊழியர்களுக்கு அளிக்க முன்வந்தார்.
13 அப்போஸ்தலர்களும் மற்றவர்களும் சில நற்செயல்களைச் செய்ததால் அவர்களுக்கு மீட்புப் பலியின் நன்மைகளை அளிக்கக் கடவுள் கடமைப்பட்டில்லை. மாறாக, தமது இரக்கத்தினாலும் பேரன்பினாலும்தான் அவற்றை அளித்தார். அப்போஸ்தலர்களையும் மற்றவர்களையும் குற்றமற்றவர்களென நியாயந்தீர்த்து, வழிவழியாகப் பெற்ற பாவத்திலிருந்து விடுபட்டவர்களாக அவர்களைக் கருதினார். இதைத்தான் பவுல் இவ்வாறு தெளிவாகக் குறிப்பிட்டார்: “இந்த அளவற்ற கருணையினால்தான் விசுவாசத்தின் மூலம் நீங்கள் மீட்புப் பெற்றிருக்கிறீர்கள்; இதை நீங்களாகவே சம்பாதித்துக்கொள்ளவில்லை, இது கடவுளுடைய அன்பளிப்பு.”—எபே. 2:8.
14, 15. கடவுளால் நீதிமான்களாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து என்ன செய்ய வேண்டியிருந்தது, அவர்களுக்கு என்ன பலன் காத்திருந்தது?
14 ஒருவர் வழிவழியாகப் பெற்ற பாவத்தை மட்டுமல்லாமல் அவர் செய்த குற்றங்களையும் சர்வவல்லவர் மன்னிக்கிறார் என்றால், அது எப்பேர்ப்பட்ட அன்பளிப்பு! ஒருவர் கிறிஸ்தவராக ஆவதற்குமுன் எத்தனை பாவங்களைச் செய்திருப்பார் என்பதைக் கணக்கிடவே முடியாது; என்றாலும், மீட்புப் பலியின் அடிப்படையில் கடவுள் அந்தப் பாவங்களை மன்னிக்கிறார். “பலருடைய குற்றங்களுக்குப் பின்பு கொடுக்கப்பட்ட அன்பளிப்பினால் அவர்கள் நீதிமான்களாக அங்கீகரிக்கப்பட்டார்கள்” என்று பவுல் எழுதினார். (ரோ. 5:16) இந்த அன்பளிப்பை (நீதிமான்களாக அங்கீகரிக்கப்படும் அன்பளிப்பை) பெற்றிருந்த அப்போஸ்தலர்களும் மற்றவர்களும் தொடர்ந்து உண்மைக் கடவுளை விசுவாசத்துடன் வழிபட வேண்டியிருந்தது. அவர்களுக்கு என்ன பலன் காத்திருந்தது? “அளவற்ற கருணையையும் நீதியாகிய அன்பளிப்பையும் அபரிமிதமாகப் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்ற ஒருவர் மூலம் வாழ்வு பெற்று ராஜாக்களாக ஆட்சி செய்யப்போவது அதிக நிச்சயம்” என்று பவுல் குறிப்பிட்டார். உண்மையிலேயே, நீதியாகிய அன்பளிப்பு அருமையான பலனை அளிக்கிறது; ஆம், அது வாழ்வளிக்கிறது.—ரோ. 5:17; லூக்கா 22:28-30-ஐ வாசியுங்கள்.
15 நீதிமான்களாக அங்கீகரிக்கப்படும் அன்பளிப்பைப் பெறுகிறவர்கள் கடவுளுடைய ஆன்மீக மகன்களாகவும் கிறிஸ்துவுடன் சக வாரிசுகளாகவும் ஆகிறார்கள். இவ்வாறு, கடவுளுடைய பரலோக மகன்களாக உயிர்த்தெழுப்பப்பட்டு இயேசு கிறிஸ்துவுடன் சேர்ந்து ‘ராஜாக்களாக ஆட்சி செய்யும்’ வாய்ப்பைப் பெறுகிறார்கள்.—ரோமர் 8:15-17, 23-ஐ வாசியுங்கள்.
மற்றவர்கள்மீது கடவுள் பொழியும் அன்பு
16. பூமியில் முடிவில்லாமல் வாழும் நம்பிக்கை உள்ளவர்கள் இப்போதே அன்பளிப்பைப் பெற முடியுமா?
16 கடவுள்மீது விசுவாசம் வைத்து அவரை உண்மையுடன் சேவிக்கிற கிறிஸ்தவர்கள் அனைவருமே பரலோகத்தில் கிறிஸ்துவுடன் சேர்ந்து “ராஜாக்களாக ஆட்சி செய்யப்போவது” கிடையாது. அநேகர் பூஞ்சோலையான பூமியில் முடிவில்லாமல் வாழும் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள்; பைபிள் அடிப்படையிலான இந்த நம்பிக்கையைத்தான் கடவுளுடைய பூர்வகால ஊழியர்களும் பெற்றிருந்தார்கள். பூமியில் முடிவில்லாமல் வாழப்போகிறவர்கள் இப்போதே கடவுளுடைய அன்பளிப்பைப் பெற முடியுமா? அதாவது, பூமியில் வாழ்வதற்கேற்ற நீதிமான்களாக அங்கீகரிக்கப்பட முடியுமா? பவுல் ரோமர்களுக்கு எழுதிய குறிப்புகளின்படி, நிச்சயமாக முடியும்!
17, 18. (அ) ஆபிரகாமின் விசுவாசத்தினால் கடவுள் அவரை எப்படிக் கருதினார்? (ஆ) யெகோவா ஆபிரகாமை ஏன் நீதிமானாகக் கருதினார்?
17 பவுல் ஆபிரகாமை முக்கிய உதாரணமாகக் குறிப்பிட்டார்; இஸ்ரவேலருக்கு யெகோவா திருச்சட்டத்தை அளித்ததற்கு முன்பும், கிறிஸ்து பரலோக வாழ்வுக்கு வழி திறந்து வைத்ததற்கு வெகு காலம் முன்பும் வாழ்ந்தவர்தான் ஆபிரகாம். (எபி. 10:19, 20) “உலகத்தை உரிமையாக்கிக்கொள்வது பற்றிய வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய சந்ததியாருக்கோ திருச்சட்டத்தின் மூலம் கிடைக்கவில்லை; விசுவாசத்தினால் கடவுளுக்குமுன் அவர் நீதிமானாக இருந்ததாலேயே கிடைத்தது” என்று நாம் வாசிக்கிறோம். (ரோ. 4:13; யாக். 2:23, 24) ஆகவே, விசுவாசமுள்ள ஆபிரகாமைக் கடவுள் நீதிமானாகக் கருதினார்.—ரோமர் 4:20-22-ஐ வாசியுங்கள்.
18 அதற்காக, யெகோவாவைச் சேவித்த காலமெல்லாம் ஆபிரகாம் பாவமற்றவராக இருந்தாரெனச் சொல்ல முடியாது. அந்த அர்த்தத்தில் அவர் நீதிமானாக இருக்கவில்லை. (ரோ. 3:10, 23) என்றாலும், யெகோவா தமது எல்லையில்லா ஞானத்தினால், ஆபிரகாமின் தலைசிறந்த விசுவாசத்தையும் அதற்குரிய செயல்களையும் கவனித்தார். முக்கியமாக, ஆபிரகாம் தனது வம்சத்தில் வரவிருந்த வாக்குப்பண்ணப்பட்ட ‘சந்ததியாகிய’ கிறிஸ்துவில் விசுவாசம் வைத்ததைக் கவனித்தார். (ஆதி. 15:6; 22:15-18) ஆகவே நீதிபதியாகிய கடவுளால், பூர்வ காலங்களில் வாழ்ந்தவர்களின் பாவங்களை ‘கிறிஸ்து இயேசு செலுத்திய மீட்புவிலையின்’ அடிப்படையில் மன்னிக்க முடிந்தது. இவ்வாறு, ஆபிரகாமும் கிறிஸ்தவத்திற்கு முன் வாழ்ந்த மற்ற உண்மை ஊழியர்களும் உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பெறுகிறார்கள்.—ரோமர் 3:24, 25-ஐ வாசியுங்கள்; சங். 32:1, 2.
இப்போதே நீதிமான்களாக அங்கீகரிக்கப்படுங்கள்
19. கடவுள் ஆபிரகாமைக் கருதிய விதம் இன்றுள்ள அநேகரின் மனதிற்கு ஏன் இதமளிக்க வேண்டும்?
19 அன்பே உருவான கடவுள் ஆபிரகாமை நீதிமானாகக் கருதினார் என்ற உண்மை இன்றுள்ள மெய்க் கிறிஸ்தவர்களின் மனதிற்கு இதமளிக்க வேண்டும். யெகோவா, “கிறிஸ்துவின் சக வாரிசுகளாக” நியமிக்கப்படுவோரை நீதிமான்களாக அங்கீகரிக்கும் அர்த்தத்தில் ஆபிரகாமை நீதிமானாக அங்கீகரிக்கவில்லை. கிறிஸ்துவுடன் சக வாரிசுகளாக இருக்கப்போகிற அந்தச் சொற்ப எண்ணிக்கையினர், “பரிசுத்தவான்களாகும்படி அழைப்புப் பெற்றவர்கள்,” “கடவுளுடைய மகன்களாக” ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். (ரோ. 1:2; 8:14, 17, 33) ஆனால், ஆபிரகாம் ‘யெகோவாவின் நண்பராய்’ இருந்தார், அதுவும் மீட்புப் பலி செலுத்தப்படுவதற்கு முன்பே. (யாக். 2:23; ஏசா. 41:8) அப்படியென்றால், ஆபிரகாமைப் போல் பூஞ்சோலையான பூமியில் வாழும் நம்பிக்கையுள்ள உண்மைக் கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்?
20. யெகோவா ஆபிரகாமை நீதிமானாகக் கருதியது போலவே ஏன் உண்மைக் கிறிஸ்தவர்களையும் நீதிமான்களாகக் கருதுகிறார்?
20 இவர்கள் பரலோக வாழ்வுக்கென “நீதியாகிய அன்பளிப்பை” பெறவில்லை; அந்த வாழ்வுக்கென, ‘கிறிஸ்து இயேசு செலுத்திய மீட்புவிலையினால் விடுவிக்கப்படவில்லை.’ (ரோ. 3:24; 5:15, 17) இருந்தாலும், கடவுள் மீதும் அவருடைய ஏற்பாடுகள் மீதும் ஆழ்ந்த விசுவாசம் வைக்கிறார்கள்; அந்த விசுவாசத்தைத் தங்களுடைய நற்செயல்களால் வெளிக்காட்டுகிறார்கள். அப்படிப்பட்ட நற்செயல்களில் ஒன்றுதான், ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிப்பதும், எஜமானராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விஷயங்களைக் கற்பிப்பதும்’ ஆகும். (அப். 28:31) ஆகவே, யெகோவா ஆபிரகாமை நீதிமானாகக் கருதியது போலவே இவர்களையும் நீதிமான்களாகக் கருதுகிறார். இவர்கள் பெறுகிற அன்பளிப்பு கடவுளுடனான நட்புறவாகும்; இது, பரலோக நம்பிக்கை உள்ளவர்கள் பெறுகிற ‘அன்பளிப்பிலிருந்து’ வேறுபட்டாலும், இவர்கள் மனமார்ந்த நன்றியுடன் ஏற்றுக்கொள்கிற ஓர் அன்பளிப்பாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
21. யெகோவா தம் அன்பினாலும் நீதியினாலும் நமக்காக என்னென்ன செய்திருக்கிறார்?
21 மனித ஆட்சியாளர்கள் அநேக வாக்குறுதிகளைத் தருகிறார்கள். ஆனால், பூமியில் முடிவில்லாமல் வாழும் நம்பிக்கையை அவர்கள் உங்களுக்குத் தரவில்லை. சர்வலோகப் பேரரசரான யெகோவாவே தமது ஞானமான நோக்கத்தின்படி உங்களுக்கு அந்த நம்பிக்கையைத் தந்திருக்கிறார். அவர் தமது நோக்கத்தை நிறைவேற்ற படிப்படியாகப் பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். இந்த நடவடிக்கைகள் உண்மையான நீதிக்கு இசைவாக இருந்திருக்கின்றன. அதைவிட முக்கியமாக, கடவுளுடைய பேரன்பை வெளிக்காட்டியிருக்கின்றன. அதனால்தான் பவுல் இவ்வாறு சொன்னார்: “நாம் பாவிகளாக இருந்தபோதே நமக்காக உயிரைக் கொடுக்க கிறிஸ்துவைக் கடவுள் அனுப்பினார்; இதன் மூலம், கடவுள் நம்மீது அன்பை வெளிக்காட்டினார்.”—ரோ. 5:8.
[அடிக்குறிப்பு]
a உதாரணத்திற்கு, சந்ததியைப் பற்றிய இந்தக் கருத்து, காவற்கோபுரம், மார்ச் 15, 2000, பக்கம் 4, பாரா 4-லிலும் வேதாகமங்களின்பேரில் உட்பார்வை என்ற ஆங்கில புத்தகத்தில், தொகுதி 2, பக்கம் 736, பாராக்கள் 4, 5-லும் கொடுக்கப்பட்டிருந்தது.
நினைவிருக்கிறதா?
• ஆதாமின் சந்ததியார் எதை வழிவழியாகப் பெற்றார்கள், அதன் விளைவு என்ன?
• சரிசமமான மீட்புவிலை எவ்வாறு அளிக்கப்பட்டது, அது எந்த அர்த்தத்தில் சரிசமமானதாக இருந்தது?
• நீதிமானாக அங்கீகரிக்கப்படும் அன்பளிப்பு உங்களுக்கு என்ன நம்பிக்கையை அளித்திருக்கிறது?
[பக்கம் 13-ன் படம்]
பரிபூரண மனிதனான ஆதாம் பாவம் செய்தான். பரிபூரண மனிதரான இயேசுவோ “சரிசமமான மீட்புவிலையை” தந்தார்
[பக்கம் 15-ன் படம்]
இயேசு மூலம் நாம் நீதிமான்களாக அங்கீகரிக்கப்படுவோம் என்பது எப்பேர்ப்பட்ட நற்செய்தி!