யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
ரோமர் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
சுமார் பொ.ச. 56-ம் வருடம், அப்போஸ்தலன் பவுல் தனது மூன்றாவது மிஷனரி பயணத்தின்போது கொரிந்து நகருக்கு வந்து சேருகிறார். ரோமில், யூதர்களாக இருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்களுக்கும் புறஜாதியாராய் இருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததை அவர் அறிந்திருந்தார். கிறிஸ்தவர்களாக அவர்களிடையே முழு ஒற்றுமை இருக்கவேண்டும் என்பதற்காக பவுல் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார்.
ரோமர்களுக்கு எழுதிய அந்தக் கடிதத்தில், மனிதர் எவ்வாறு நீதிமான்களாக அறிவிக்கப்படுகிறார்கள் என்பதையும் அப்படிப்பட்டவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் பவுல் விவரிக்கிறார். கடவுளையும் அவருடைய வார்த்தையையும் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள அந்தக் கடிதம் நமக்கு உதவுகிறது. கடவுள் காண்பித்திருக்கும் அளவற்ற கருணையை அது வலியுறுத்துகிறது. நம்முடைய இரட்சிப்பில் கிறிஸ்துவின் பங்கை அது சிறப்பித்துக் காட்டுகிறது.—எபி. 4:12.
நீதிமான்களாக அறிவிக்கப்படுதல்—எப்படி?
“எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்” அதாவது, நீதிமான்களாக அறிவிக்கப்படுகிறார்கள் என பவுல் எழுதுகிறார். அவர் மேலும் சொல்வதாவது: “மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான்.” (ரோ. 3:23, 24, 28) ‘ஒரே நீதியின்’ செயலில் விசுவாசம் வைப்பதன்மூலம் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் ‘வேறே ஆடுகளை’ சேர்ந்த ‘திரள்கூட்டத்தாரும்’ ‘நீதிமான்களாக தீர்க்கப்படுகிறார்கள்.’ கிறிஸ்துவின் உடன் சுதந்திரவாளிகளாக பரலோகத்தில் வாழும் நம்பிக்கை அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு இருக்கிறது; கடவுளுடைய நண்பர்களாக, ‘மிகுந்த உபத்திரவத்தை’ தப்பிப்பிழைக்கும் நம்பிக்கை திரள் கூட்டத்தாருக்கு இருக்கிறது.—ரோ. 5:18; வெளி. 7:9, 14; யோவா. 10:16; யாக். 2:21-24; மத். 25:46.
“நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவஞ்செய்யலாமா?” என பவுல் கேட்கிறார். “கூடாதே” என அவரே பதிலளிக்கிறார். ‘மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், . . . அதற்கு கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று’ பவுல் விளக்குகிறார். (ரோ. 6:15, 16) “ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்” என்றும் அவர் சொல்கிறார்.—ரோ. 8:13.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:24-32—இதில் விவரிக்கப்பட்டிருக்கும் ஒழுக்கங்கெட்ட நடத்தை யூதருக்குப் பொருந்துகிறதா புறஜாதியாருக்குப் பொருந்துகிறதா? இதிலுள்ள விவரிப்பு இருசாராருக்கும் பொருந்தலாம்; என்றாலும், விசுவாசத் துரோகம் செய்த பண்டைய இஸ்ரவேலரைப் பற்றியே பவுல் இங்கு குறிப்பாக பேசுகிறார். அவர்கள் கடவுளுடைய நீதியான கட்டளைகளை அறிந்திருந்த போதிலும் ‘தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாமற்போனது.’ எனவே, அவர்கள் குற்றமுள்ளவர்களாய் இருந்தார்கள்.
3:24, 25—கிறிஸ்து இயேசு மீட்கும்பலியை அளிப்பதற்கு ‘முற்காலத்தில் நடந்த பாவங்களும்’ அந்த பலியின் அடிப்படையில் எப்படி மன்னிக்கப்பட்டன? ஆதியாகமம் 3:15-ல் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் மேசியானிய தீர்க்கதரிசனம் பொ.ச. 33-ல், இயேசு கழுமரத்தில் கொல்லப்பட்டபோது நிறைவேறியது. (கலா. 3:13, 16) யெகோவா அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னபோதே, அவருடைய பார்வையில் அந்த மீட்பின் விலை ஏற்கெனவே கொடுக்கப்பட்டதுபோல் இருந்தது. ஏனென்றால், கடவுள் செய்ய நினைத்ததை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. ஆகவே, இந்த வாக்குறுதியில் நம்பிக்கை வைத்த ஆதாமின் சந்ததியார் அனைவரையும், வருங்காலத்தில் இயேசு கிறிஸ்து கொடுக்கவிருந்த பலியின் அடிப்படையில் யெகோவாவால் மன்னிக்க முடிந்தது. கிறிஸ்துவுக்கு முன்னான காலத்தைச் சேர்ந்தவர்கள்கூட உயிர்த்தெழுதலைப் பெறுவதற்கு இந்த மீட்கும் பலி வழிவகுக்கிறது.—அப். 24:15.
6:3-5—கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெறுவதும் அவருடைய மரணத்துக்குள் ஞானஸ்நானம் பெறுவதும் எதைக் குறிக்கின்றன? கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களை தம்முடைய சக்தியால் யெகோவா அபிஷேகம் செய்யும்போது அதாவது தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் இயேசுவுடன் ஒன்றுசேருகிறார்கள். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அங்கத்தினர் ஆகிறார்கள்; அந்த சபைக்கு கிறிஸ்துவே தலையாக இருக்கிறார். (1 கொ. 12:12, 13, 27; கொலோ. 1:18) கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெறுவது இதையே அர்த்தப்படுத்துகிறது. இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் தியாக வாழ்க்கை வாழ்கிறார்கள்; பூமியில் நித்திய ஜீவனைப் பெறும் நம்பிக்கையைத் துறந்துவிடுகிறார்கள். இதுவே அவர்கள் கிறிஸ்துவின் ‘மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெறுவதை’ அர்த்தப்படுத்துகிறது. எனவே, இவர்களுடைய மரணத்திற்கு மீட்கும் வல்லமை இல்லையென்றாலும் இயேசுவின் மரணத்தைப் போலவே தியாக மரணமாக இருக்கிறது. இவர்கள் மரித்து பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படும்போது கிறிஸ்துவின் மரணத்துக்குள் அவர்கள் பெற்ற ஞானஸ்நானம் முடிவடைகிறது.
7:8-11—‘பாவம் கற்பனையினாலே சமயம் [“தூண்டுதல்,” NW] பெற்றது’ எப்படி? பாவம் என்றால் என்ன, அதில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது என்பதை கற்பனையினாலே, அதாவது நியாயப்பிரமாணத்தினாலே மக்கள் புரிந்துகொண்டார்கள். இவ்வாறு, அவர்கள் பாவிகள் என்பதை இன்னும் அதிகமாக உணர ஆரம்பித்தார்கள். நியாயப்பிரமாணத்தின் மூலம், அவர்கள் செய்த பல காரியங்கள் பாவமானவை என்பதையும், இன்னும் அநேகர் தாங்கள் பாவிகள் என்பதையும் உணர ஆரம்பித்தார்கள். எனவே, பாவம் கற்பனையினால் தூண்டுதலைப் பெற்றதாகச் சொல்லலாம்.
நமக்குப் பாடம்:
1:14, 15. நற்செய்தியை ஆர்வத்துடன் அறிவிப்பதற்கு நமக்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, இயேசுவின் இரத்தத்தால் விலைக்கு வாங்கப்பட்ட மக்கள், கடவுளையும் அவருடைய நோக்கத்தையும் பற்றி தெரிந்துகொள்ள உதவுவதற்கு நாம் கடன்பட்டிருக்கிறோம் என்பதாகும்.
1:18-20. கடவுளுடைய குணங்களை பார்க்க முடியாவிட்டாலும் படைப்பில் அவை தெளிவாய் தெரிகின்றன. ஆகவே அவபக்தியுள்ளவர்களும் அநியாயம் செய்கிறவர்களும் “போக்குச்சொல்ல இடமில்லை.”
2:28; 3:1, 2; 7:6, 7. யூதர்களைப் புண்படுத்துவதாகத் தோன்றும் சில கூற்றுகளை சொன்ன பிறகு அவர்களைச் சமாதானப்படுத்தும் வகையில் சில குறிப்புகளை பவுல் சொன்னார். சிக்கலான விஷயங்களை சாதுரியமாகவும் திறமையாகவும் கையாளுவதற்கு இது ஓர் உதாரணம்.
3:4. மனிதர் சொல்லும் விஷயங்கள் கடவுளுடைய வார்த்தைக்கு முரணாக இருக்கும்போது, பைபிள் சொல்வதை நம்பி, கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக செயல்படுவதன்மூலம் “தேவனே சத்தியபரர்” என்று விளங்கப்பண்ணுகிறோம். ராஜ்யத்தைப்பற்றி பிரசங்கிப்பதிலும் சீஷராக்குவதிலும் ஆர்வமாகப் பங்கெடுப்பதன்மூலம் கடவுள் நம்பகமானவர் என்பதைப் புரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவலாம்.
4:9-12. ஆபிரகாம் 99 வயதில் விருத்தசேதனம் செய்யப்படுவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே அவருடைய விசுவாசம் அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது. (ஆதி. 12:4; 15:6; 16:3; 17:1, 9, 10) கடவுளுக்கு முன்பாக நீதியுள்ளவராக நிற்க எது முக்கியம் என்பதை இதன்மூலம் அவர் வலியுறுத்திக் காட்டினார்.
4:18. விசுவாசம் வைப்பதற்கு நம்பிக்கை மிக அவசியம். நம் விசுவாசம் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டுள்ளது.—எபி. 11:1.
5:18, 19. இயேசு எவ்விதத்தில் ஆதாமைப்போல் இருக்கிறார் என்பதை நியாயமாக எடுத்துக்காட்டுவதன்மூலம், எப்படி ஒரே மனிதன் ‘அநேகரை மீட்பதற்கு தன் ஜீவனைக் கொடுக்க முடியும்’ என்று பவுல் சுருக்கமாக விளக்குகிறார். (மத். 20:28) தர்க்கரீதியாக நியாயம்காட்டுவதும் சுருக்கமாகச் சொல்வதும் நாம் பின்பற்றுவதற்குச் சிறந்த போதனா முறைகள் ஆகும்.—1 கொ. 4:17.
7:23. நம்முடைய கைகள், கால்கள், நாக்கு போன்ற உடல் உறுப்புகள் நம்மை ‘பாவப்பிரமாணத்துக்கு சிறையாக்கிவிடலாம்.’ ஆகவே, அவற்றைத் தவறாகப் பயன்படுத்தாதபடி கவனமாயிருக்க வேண்டும்.
8:26, 27. நாம் எதைக் குறித்து ஜெபம் செய்ய வேண்டும் என்றே தெரியாத அளவுக்கு குழம்பிப்போயிருக்கும் சூழ்நிலைகளில், ‘ஆவிதானே நமக்காக வேண்டுதல் செய்கிறது’ அதாவது கடவுளுடைய சக்தி நமக்காக பரிந்து பேசுகிறது. அதுபோன்ற சமயங்களில், ‘ஜெபத்தைக் கேட்கிறவராகிய’ யெகோவா தமது வார்த்தையில் பதிவாகியுள்ள பொருத்தமான ஜெபங்களை நாம் செய்யும் ஜெபங்களாகவே ஏற்றுக்கொள்கிறார்.—சங். 65:2.
8:38, 39. துயர சம்பவங்கள், பொல்லாத ஆவி சிருஷ்டிகள், மனித அரசாங்கங்கள் என எதுவும் யெகோவா நம்மை நேசிப்பதைத் தடுக்க முடியாது. நாம் அவரை நேசிப்பதைத் தடுப்பதற்கும் அவற்றை அனுமதிக்கக்கூடாது.
9:22-28; 11:1, 5, 17-27. இஸ்ரவேலர் மீண்டும் நிலைநாட்டப்படுவது சம்பந்தமான அநேக தீர்க்கதரிசனங்கள், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அடங்கிய சபையில் நிறைவேறின. இந்தச் சபையின் அங்கத்தினர்கள் ‘யூதரிலிருந்து மாத்திரமல்ல, புறஜாதிகளிலிருந்தும் அழைக்கப்பட்டவர்கள்.’
10:10, 13, 14. கடவுளிடமும் சக மனிதரிடமும் அன்பு வைத்திருப்பதோடு யெகோவாமீதும் அவருடைய வாக்குறுதிகள்மீதும் அசைக்கமுடியாத விசுவாசம் வைத்திருப்பதும் கிறிஸ்தவ ஊழியத்தில் ஆர்வத்துடன் பங்கெடுப்பதற்கு நம்மைத் தூண்டும்.
11:16-24, 33. ‘தேவனுடைய தயவும் கண்டிப்பும்’ எவ்வளவு அற்புதமான சமநிலையில் இருக்கின்றன! ஆம், “அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம்.”—உபா. 32:4.
நீதிமான்களாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு இசைவாக வாழ்தல்
“அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” என்று பவுல் சொல்கிறார். (ரோ. 12:1) “அப்படியிருக்க,” அதாவது, கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தின் காரணமாக நீதிமான்கள் என அறிவிக்கப்பட்டிருப்பதால், அதைத் தொடர்ந்து பவுல் சொன்ன விஷயங்கள், அவர்கள் தங்களையும் மற்றவர்களையும் அரசாங்க அதிகாரங்களையும் கருதும் விதத்தைப் பாதிக்க வேண்டும்.
‘நான் சொல்லுகிறதாவது, உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமலிருக்க’ வேண்டும் என்கிறார் பவுல். “உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக” என்றும் அறிவுறுத்துகிறார். (ரோ. 12:3, 9) “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்.” (ரோ. 13:1) மனசாட்சியைப் பொறுத்து தீர்மானிக்க வேண்டிய விஷயங்களில் கிறிஸ்தவர்கள் ‘ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருக்கும்படி’ ஊக்கமளிக்கிறார்.—ரோ. 14:13.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
12:20—நாம் எப்படி சத்துருவின் தலையில் “அக்கினித்தழலை” வைக்க முடியும்? பைபிள் காலங்களில், உலோக கலவையை உலைக்களத்தில் உருக்கியபோது, அதற்கு கீழே மட்டுமல்ல மேலேயும் நிலக்கரி குவிக்கப்பட்டது. மேலே குவிக்கப்பட்ட நிலக்கரி எரிந்தபோது வெப்பம் அதிகரித்ததால் அது உருகி, கசடுகள் நீங்கி சுத்தமான உலோகம் பிரித்தெடுக்கப்பட்டது. அதேவிதமாக, சத்துருவிடமும் அன்பாக நடந்துகொள்வதன்மூலம் அவருடைய தலையின்மேல் அக்கினித்தழலைக் குவிக்கிறோம். அப்போது அவருடைய கடினத்தன்மை உருகுவதோடு, அவரிடமுள்ள சிறந்த குணங்களும் வெளிப்படும்.
12:21—நாம் எப்படி ‘தீமையை நன்மையினால் வெல்லலாம்’? இதற்கு ஒரு வழி, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பிரசங்க வேலையைத் தைரியமாகச் செய்து வருவதாகும். போதும் என்று யெகோவா சொல்லும்வரை ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்துவர வேண்டும்.—மாற். 13:10.
13:1—என்ன அர்த்தத்தில் மேலான அதிகாரங்கள் “தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது”? ஆட்சி செய்வதற்காக உலக அதிகாரங்களை கடவுள் அனுமதித்திருக்கிறார்; சில சமயங்களில், அவற்றின் ஆட்சியைக் குறித்தும் முன்னறிவித்திருக்கிறார். இந்த அர்த்தத்தில்தான் உலக அதிகாரங்கள் “தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.” அநேக ஆட்சியாளர்களைக் குறித்து பைபிள் முன்னறிவித்த விஷயங்களிலிருந்து இது தெரிய வருகிறது.
நமக்குப் பாடம்:
12:17, 19. “தீமைக்குத் தீமை” செய்வது, யெகோவாவிடம் விட்டுவிட வேண்டிய காரியங்களை நாமே கையாளுவதுபோல் ஆகிவிடும். அப்படிச் செய்வது எவ்வளவு துணிகரமானதாக இருக்கும்!
14:14, 15. நம் சகோதரருக்கு அளிக்கும் உணவினாலோ பானத்தினாலோ அவரை வருத்தப்படுத்தவோ அவருக்கு இடறல் உண்டாக்கவோ கூடாது.
14:17. கடவுளோடு நல்ல உறவு வைத்திருப்பது, நாம் எதைச் சாப்பிடுகிறோம் எதைத் தவிர்க்கிறோம் என்பதையே முக்கியமாக சார்ந்தில்லை. மாறாக, அது நீதி, சமாதானம், சந்தோஷம் போன்றவற்றை சார்ந்திருக்கிறது.
15:7. உண்மை மனதுடன் சத்தியத்தைத் தேடும் அனைவரையும் நாம் எந்த வேற்றுமையும் பார்க்காமல் கிறிஸ்தவ சபைக்குள் வரவேற்க வேண்டும்; நாம் சந்திக்கும் அனைவருக்குமே ராஜ்ய செய்தியை அறிவிக்க வேண்டும்.
[பக்கம் 31-ன் படங்கள்]
மீட்கும்பலி செலுத்தப்படுவதற்கு முன்னர் செய்த பாவங்களுக்கும் அந்த மீட்பின் விலை பொருந்துமா?