வாழ்வும் சமாதானமும் பெற கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடவுங்கள்
‘பாவ வழியில் நடக்காமல் கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடவுங்கள்.’—ரோ. 8:4.
1, 2. (அ) கவனத்தை வேறெங்காவது வைத்துக்கொண்டு வண்டி ஓட்டியதால் என்ன விபரீதம் ஏற்பட்டிருக்கிறது? (ஆ) கடவுளைச் சேவிப்பவர் தன் கவனத்தை வேறெங்காவது திருப்பினால் என்ன ஆபத்து நேரிடலாம்?
“கவனத்தை வேறெங்காவது வைத்துக்கொண்டு வண்டி ஓட்டுவது ஒரு கொள்ளைநோய்போல் பரவிவருகிறது; அதுவும், ஒவ்வொரு வருடமும் மோசமாகிக்கொண்டே போவதாகத் தெரிகிறது” என்றார் அமெரிக்கப் போக்குவரத்துத் துறை செயலர். ஓட்டுநனர்களுடைய கவனமெல்லாம் வண்டியை ஓட்டுவதில்தான் இருக்க வேண்டும்; அவர்கள் அதை விட்டுவிட்டு தங்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்புகிறார்கள் என்றால், அதற்கு ஒரு காரணம் அவர்களுடைய செல்போன்கள்தான். ஒரு சுற்றாய்வில் பங்கேற்ற மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர், செல்போனில் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டிவந்தவர்கள் தங்கள்மீது மோதிவிட்டதாக அல்லது மோதும் அளவுக்கு வந்துவிட்டதாகச் சொன்னார்கள். வண்டி ஓட்டும்போது மற்ற காரியங்களையும் செய்வது சௌகரியமாகத் தெரியலாம், ஆனால் அது விபரீதத்தில் போய் முடியலாம்.
2 நம் ஆன்மீக நலனைக் குறித்ததிலும் இதுவே உண்மை. வண்டி ஓட்டுபவர் தன் கவனத்தை வேறெங்காவது திருப்பும்போது சாலையிலுள்ள ஆபத்துகளைக் கவனிக்க மாட்டார்; அப்படித்தான் கடவுளைச் சேவிப்பவர் தன் கவனத்தை வேறெங்காவது திருப்பும்போது ஆபத்துகளைக் கவனிக்காமல் எளிதாக அவற்றில் சிக்கிக்கொள்வார். கிறிஸ்தவ வழியிலிருந்தும் நடவடிக்கைகளிலிருந்தும் நாம் மெல்ல மெல்ல விலகிச் சென்றால், நம் விசுவாசம் எனும் கப்பல் மூழ்கிப்போகலாம். (1 தீ. 1:18, 19) இந்த ஆபத்தைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் ரோமிலிருந்த சக கிறிஸ்தவர்களை இவ்வாறு எச்சரித்தார்: “பாவ காரியங்களில் சிந்தையாக இருப்பவர்களுக்குக் கிடைப்பது மரணம், கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களில் சிந்தையாக இருப்பவர்களுக்குக் கிடைப்பதோ வாழ்வும் சமாதானமும் ஆகும்.” (ரோ. 8:6) பவுல் எதை அர்த்தப்படுத்தினார்? நாம் எவ்வாறு ‘பாவ காரியங்களில் சிந்தையாக இருப்பதை’ தவிர்த்து, ‘கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களில் சிந்தையாக’ இருக்கலாம்?
அவர்களுக்கு “தண்டனைத் தீர்ப்பு கிடையாது”
3, 4. (அ) பவுல் தனக்கு ஏற்பட்ட என்ன போராட்டத்தைப் பற்றி எழுதினார்? (ஆ) பவுலின் நிலையை நம்மால் ஏன் புரிந்துகொள்ள முடிகிறது?
3 பவுல் ரோமர்களுக்குக் கடிதம் எழுதியபோது, தன் மனதிற்கும் உடலுக்கும் இடையே நடந்த போராட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். (ரோமர் 7:21-23-ஐ வாசியுங்கள்.) பவுல் தன்னை நியாயப்படுத்தவில்லை, தன்மீதே பரிதாபப்படவும் இல்லை; பாவத்தை ஏதோ ஒரு பெரும் சுமையாகத் தான் சுமப்பதுபோலவும் அதிலிருந்து மீள தனக்கு வழியே இல்லாததுபோலவும் அவர் குறிப்பிடவில்லை. உண்மையில் அவர் பரலோக நம்பிக்கையுள்ள, முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவராக இருந்தார்; ‘புறதேசத்தாருக்கு ஓர் அப்போஸ்தலனாக’ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். (ரோ. 1:1; 11:13) அப்படியென்றால், தனக்கு ஏற்பட்ட போராட்டத்தைப் பற்றி ஏன் அவர் எழுதினார்?
4 பவுல் தன் சொந்த சக்தியால் தான் விரும்பிய அளவுக்குக் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய முடியாது என்பதைத்தான் நேர்மையோடு ஒப்புக்கொண்டார். காரணம்? “எல்லாருமே பாவம் செய்து கடவுளுடைய மகிமையான குணங்களைப் பிரதிபலிக்கத் தவறியிருக்கிறார்கள்” என்று சொன்னார். (ரோ. 3:23) ஆதாமின் சந்ததியில் வந்ததால் பவுலும் பாவத்தின் பிடியில் சிக்கியிருந்தார். அவரது நிலையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது; ஏனென்றால், நாமும் அபூரணர்களாக இருக்கிறோம், தினமும் அவரைப்போலவே பல போராட்டங்களைச் சந்திக்கிறோம். இவ்வுலகில், நம் கவனத்தைத் திசைதிருப்பி ‘வாழ்வுக்கு வழிநடத்தும் இடுக்கமான வாசலை’ விட்டு விலக்கக்கூடிய பல காரியங்கள் உண்டு. (மத். 7:14) என்றாலும், நமக்கு நம்பிக்கை இருக்கிறது, பவுலைப் போலவே.
5. எதன் காரணமாக பவுலால் போராட்டத்தில் வெற்றி பெற முடிந்தது?
5 “யார் என்னைக் காப்பாற்றுவார்?” என்று பவுல் கேட்டுவிட்டு, “நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கு நன்றி!” எனச் சொன்னார். (ரோ. 7:24, 25) அதன்பின், “கிறிஸ்து இயேசுவின் சீடர்களுக்கு,” அதாவது பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு, எழுதினார். (ரோமர் 8:1, 2-ஐ வாசியுங்கள்.) யெகோவா தமது சக்தியின் மூலம் அவர்களை மகன்களாகத் தத்தெடுக்கிறார், “கிறிஸ்துவின் சக வாரிசுகளாக” இருப்பதற்கு அழைக்கிறார். (ரோ. 8:14-17) கடவுளுடைய சக்தியின் காரணமாகவும் கிறிஸ்துவின் மீட்புப் பலியில் உள்ள விசுவாசத்தின் காரணமாகவும் அவர்களால் பவுல் குறிப்பிட்ட போராட்டத்தில் வெற்றி பெற முடிகிறது; ஆகவே, அவர்களுக்கு “தண்டனைத் தீர்ப்பு கிடையாது.” அவர்கள் “பாவத்தின் சட்டத்திலிருந்தும் மரணத்தின் சட்டத்திலிருந்தும்” விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
6. பவுலின் வார்த்தைகளை ஏன் கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருமே புரிந்துகொள்ள வேண்டும்?
6 கடவுளுடைய சக்தியைப் பற்றியும் கிறிஸ்துவின் மீட்புப் பலியைப் பற்றியும் பவுல் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதியபோதிலும், யெகோவாவின் ஊழியர்கள் எல்லாருமே அதிலிருந்து நன்மை அடையலாம். பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு அறிவுரைகள் வழங்க கடவுளுடைய சக்தி பவுலைத் தூண்டியபோதிலும், நாம் அனைவருமே அவற்றைப் புரிந்துகொண்டு பயன் பெற முயலுவது அவசியமாக இருக்கிறது.
கடவுள் ‘மனிதரிடமுள்ள பாவத்தைக் கண்டனம் செய்த’ விதம்
7, 8. (அ) எந்த அர்த்தத்தில் திருச்சட்டம் பாவிகளைக் ‘காப்பாற்ற முடியாததாக இருந்தது’? (ஆ) கடவுள் தமது சக்தியின் மூலமாகவும் மீட்புப் பலியின் மூலமாகவும் எதை நிறைவேற்றியிருக்கிறார்?
7 ரோமர் 7-ஆம் அதிகாரத்தில், அபூரண மனிதர்கள்மீது பாவம் மிகுந்த செல்வாக்கு செலுத்துவதை பவுல் ஒப்புக்கொண்டார். 8-ஆம் அதிகாரத்திலோ கடவுளுடைய சக்தியின் வல்லமையைப் பற்றிக் குறிப்பிட்டார். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் கடவுளுடைய சக்தி எவ்வாறு கிறிஸ்தவர்களுக்கு உதவும் என்பதை அவர் விளக்கினார்; ஆம், யெகோவாவின் சித்தத்திற்கு இசைவாக வாழ்ந்து அவரது அங்கீகாரத்தைப் பெற அது எவ்வாறு உதவும் என்பதை விவரித்தார். கடவுள் தமது சக்தியின் மூலமாகவும் தமது மகனின் மீட்புப் பலியின் மூலமாகவும், திருச்சட்டத்தால் நிறைவேற்ற முடியாத ஒன்றை நிறைவேற்றியிருக்கிறார்.
8 பல சட்டதிட்டங்களைக் கொண்ட திருச்சட்டம் பாவிகளைக் கண்டனம் செய்தது. அதோடு, திருச்சட்ட முறைமைகளின்படி இஸ்ரவேலில் சேவை செய்த தலைமைக் குருமார் அபூரணராக இருந்ததால் பாவத்தை முழுமையாகப் போக்கும் பலியைச் செலுத்த முடியவில்லை. ஆகவே, திருச்சட்டம் ‘அவர்களைக் காப்பாற்ற முடியாததாக இருந்தது.’ ஆனால், கடவுள் ‘தமது மகனைப் பாவமுள்ள மனித சாயலில் அனுப்புவதன்’ மூலமும் மீட்புப் பலியாக அளிப்பதன் மூலமும், “மனிதரிடமுள்ள பாவத்தைக் கண்டனம் செய்தார்”; இவ்வாறு, “அந்தத் திருச்சட்டம் செய்ய முடியாததைக் கடவுளே செய்தார்.” ஆகவே, இயேசுவின் மீட்புப் பலியில் வைக்கும் விசுவாசத்தின் அடிப்படையில் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் நீதிமான்களாக எண்ணப்படுகிறார்கள். அவர்கள் ‘பாவ வழியில் நடக்காமல் கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்கும்படி’ ஊக்குவிக்கப்படுகிறார்கள். (ரோமர் 8:3, 4-ஐ வாசியுங்கள்.) சொல்லப்போனால், அவர்கள் பூமிக்குரிய வாழ்வின் முடிவுவரை உண்மையோடு அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்; அப்போதுதான் “வாழ்வெனும் கிரீடத்தை” பெறுவார்கள்.—வெளி. 2:10.
9. ரோமர் 8:2-ல் உள்ள ‘சட்டம்’ என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது?
9 பவுல் ‘திருச்சட்டத்தை’ பற்றிக் குறிப்பிட்டதோடு, ‘கடவுளுடைய சக்தியின் சட்டம்,’ ‘பாவத்தின் சட்டம்,’ ‘மரணத்தின் சட்டம்’ ஆகியவற்றைப் பற்றியும் குறிப்பிட்டார். (ரோ. 8:2) இந்தச் சட்டங்கள் எதைக் குறிக்கின்றன? இங்கே ‘சட்டம்’ என்ற வார்த்தை திருச்சட்டத்தில் உள்ளதைப் போன்ற சில சட்டதிட்டங்களைக் குறிப்பதில்லை. ஒரு புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “இங்கே சட்டம் என்பதற்கான கிரேக்க வார்த்தை மக்கள் செய்கிற நன்மையான அல்லது தீமையான செயல்களைக் குறிக்கிறது; அவை அவர்களை ஒரு சட்டம்போல் கட்டுப்படுத்துகின்றன. அந்த வார்த்தை, ஒருவரது வாழ்க்கையின் நெறிமுறையையும் குறிக்கிறது.”
10. நாம் எவ்வாறு பாவத்தின் சட்டத்திற்கும் மரணத்தின் சட்டத்திற்கும் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறோம்?
10 “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது; இவ்வாறு, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோ. 5:12) ஆதாமின் சந்ததியில் வந்திருக்கிற நாம் அனைவருமே பாவத்தின் சட்டத்திற்கும் மரணத்தின் சட்டத்திற்கும் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறோம். நம்முடைய பாவ இயல்பு, கடவுளுக்குப் பிரியமில்லாத காரியங்களைச் செய்ய நம்மை எப்போதும் தூண்டிக்கொண்டே இருக்கிறது; அதனால் மரணமே விளையும். கலாத்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில், அப்படிப்பட்ட நடவடிக்கைகளையும் பண்புகளையும் “பாவ இயல்புக்குரிய செயல்கள்” என பவுல் குறிப்பிட்டார். அதன்பின், “இப்படிப்பட்டவற்றைச் செய்து வருகிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றும் குறிப்பிட்டார். (கலா. 5:19-21) இவர்கள் பாவ வழியில் நடக்கிறவர்கள். (ரோ. 8:4) இவர்களுடைய ‘செயல்களும்,’ ‘வாழ்க்கையின் நெறிமுறைகளும்’ முழுக்க முழுக்க பாவ இயல்புக்குரியவை. ஆனால், பாலியல் முறைகேடு, உருவ வழிபாடு, ஆவியுலகத் தொடர்பு போன்ற பெரும் பாவங்களைச் செய்கிறவர்கள் மட்டும்தான் பாவ வழியில் நடக்கிறவர்களா? இல்லை; சாதாரண பலவீனங்கள் எனச் சிலர் நினைக்கும் குணங்கள்கூட பாவ இயல்புக்குரிய செயல்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன; உதாரணத்திற்கு, பொறாமை, கோபாவேசம், வாக்குவாதம், பிறரைக் கண்டு வயிறெரிதல் போன்ற குணங்கள்கூட அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படியென்றால், பாவ வழியில் நடப்பதே இல்லையென நம்மில் எவராவது சொல்ல முடியுமா?
11, 12. பாவத்தின் சட்டத்திலிருந்தும் மரணத்தின் சட்டத்திலிருந்தும் நம்மை விடுவிக்க யெகோவா என்ன ஏற்பாடு செய்திருக்கிறார், அவருடைய தயவைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
11 பாவத்தின் சட்டத்திலிருந்தும் மரணத்தின் சட்டத்திலிருந்தும் நம்மை விடுவிக்க யெகோவா ஏற்பாடு செய்திருப்பதற்காக நாம் எவ்வளவு சந்தோஷப்படலாம்! “கடவுள், தம்முடைய ஒரே மகன்மீது விசுவாசம் வைக்கிற எவரும் அழிந்துபோகாமல் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மீது அன்பு காட்டினார்” என்று இயேசு சொன்னார். கடவுளுடைய அன்பை ஏற்றுக்கொள்வதன் மூலமும் இயேசு கிறிஸ்துவின் மீட்புப் பலியில் விசுவாசம் வைப்பதன் மூலமும், பாவத்தினால் கண்டனம் செய்யப்படுவதை நாம் தவிர்க்கலாம். (யோவா. 3:16-18) ஆகவே, பவுலைப் போல் நாமும், “நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கு நன்றி!” என சொல்லத் தூண்டப்படுவோம்.
12 நம் நிலைமை ஒரு கொடிய வியாதியிலிருந்து குணமடைவதைப் போன்றது. முழுமையாகக் குணமாக விரும்பினால், டாக்டர் சொல்வதை நாம் அப்படியே செய்ய வேண்டும். மீட்புப் பலியில் விசுவாசம் வைப்பது நம்மைப் பாவத்தின் சட்டத்திலிருந்தும் மரணத்தின் சட்டத்திலிருந்தும் விடுவிக்குமென்றாலும், நாம் இன்னமும் அபூரணர்களாகவும் பாவிகளாகவும்தான் இருக்கிறோம். தொடர்ந்து கடவுளுடன் நெருங்கிய பந்தத்தை அனுபவிப்பதற்கும் அவருடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் நாம் ஒன்றைச் செய்ய வேண்டும். ஆம், அபூரணம் என்ற வியாதியிலிருந்து குணமடைய நாம் விரும்பினால், கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்க வேண்டும் என்று பவுல் குறிப்பிடுகிறார்.
கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடப்பது எப்படி?
13. கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடப்பதன் அர்த்தம் என்ன?
13 நாம் நடக்கும்போது ஓர் இடத்தை நோக்கித் தொடர்ந்து முன்னேறிச் செல்கிறோம். அவ்வாறே, கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடப்பதற்கு ஆன்மீக ரீதியில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும்; அதற்காகப் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்பதில்லை. (1 தீ. 4:15) கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்க அல்லது வாழ நம்மால் முடிந்த அளவுக்குத் தினமும் முயல வேண்டும். ‘கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நடந்தால்’ கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற முடியும்.—கலா. 5:16.
14. “பாவ வழியில் நடக்கிறவர்கள்” எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்?
14 ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் அடுத்ததாக நேர்மாறான சிந்தையுள்ள இரண்டு விதமான மக்களைப் பற்றிக் குறிப்பிட்டார். (ரோமர் 8:5-ஐ வாசியுங்கள்.) பாவத்தின் காரணமாகத்தான் மனதிற்கும் உடலுக்கும் இடையே போராட்டம் நடக்கிறது. என்றாலும், “பாவ வழியில் நடக்கிறவர்கள்” பவுலைப் போல் கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராடுவதுகூட இல்லை. கடவுள் தங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் அவர் அளித்திருக்கிற உதவியை ஏற்றுக்கொள்வதற்கும் பதிலாக, “பாவ காரியங்களில் சிந்தையாக இருக்கிறார்கள்.” சரீர ஆசைகளையும் இன்பங்களையும் பூர்த்தி செய்வதிலேயே அவர்கள் பெரும்பாலும் குறியாக இருக்கிறார்கள். “கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்கிறவர்களோ கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களில் சிந்தையாக இருக்கிறார்கள்,” அதாவது ஆன்மீக ஏற்பாடுகளிலும் நடவடிக்கைகளிலும் சிந்தையாக இருக்கிறார்கள்.
15, 16. (அ) ஏதோவொன்றில் சிந்தையாக இருப்பது நம்மை எவ்வாறு பாதிக்கும்? (ஆ) இன்று மக்கள் பெரும்பாலும் எப்படிப்பட்ட காரியங்களில் மூழ்கியிருக்கிறார்கள்?
15 ரோமர் 8:6-ஐ வாசியுங்கள். நன்மையோ தீமையோ செய்வதற்கு முன்பு மக்கள் அதைப் பற்றியே சிந்தையாக இருக்கிறார்கள். அவர்கள் பாவ காரியங்கள்மீது சிந்தையாக இருந்தால் பாவ காரியங்களைச் செய்யவே விரும்புவார்கள். அவர்களுடைய யோசனைகள், ஆர்வங்கள், உணர்ச்சிகள் என அனைத்தும் அவற்றிலேயே மூழ்கியிருக்கும்.
16 இன்று மக்கள் பெரும்பாலும் எப்படிப்பட்ட காரியங்களில் மூழ்கியிருக்கிறார்கள்? “உலகத்திலுள்ள அனைத்தும், அதாவது உடலின் இச்சையும், கண்களின் இச்சையும், பகட்டாகக் காட்டப்படுகிற பொருள் வசதிகளும் பரலோகத் தகப்பனிடமிருந்து தோன்றுவதில்லை, இந்த உலகத்திடமிருந்தே தோன்றுகின்றன” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோ. 2:16) ஒழுக்கக்கேட்டில் ஈடுபட விரும்புவது, பேரும் புகழும் அடைய நாடுவது, பணத்தையும் பொருளையும் குவிக்க ஆசைப்படுவது போன்றவை இந்த இச்சைகளில் அடங்கும். புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், இன்டர்நெட் ஆகியவற்றில் இப்படிப்பட்ட விஷயங்களே மலிந்திருக்கின்றன; ஏனென்றால், மக்கள் பெரும்பாலும் இவற்றிலேயே சிந்தையாக இருக்கிறார்கள், இவற்றையே விரும்புகிறார்கள். என்றாலும், “பாவ காரியங்களில் சிந்தையாக இருப்பவர்களுக்குக் கிடைப்பது மரணம்”; அவர்கள் இப்போது ஆன்மீக ரீதியில் மரணம் அடைகிறார்கள், சீக்கிரத்தில் வரவிருக்கும் அழிவில் நிஜமாகவே மரணம் அடைவார்கள். ஏன்? ஏனென்றால், “பாவ சிந்தை கடவுளுக்கு விரோதமாக இருக்கிறது; அது கடவுளுடைய சட்டத்திற்குக் கட்டுப்பட்டதாக இல்லை; சொல்லப்போனால், அது கட்டுப்பட்டதாக இருக்கவும் முடியாது. ஆகவே, பாவ வழியில் நடக்கிறவர்கள் கடவுளைப் பிரியப்படுத்த முடியாது.”—ரோ. 8:7, 8.
17, 18. நாம் எவ்வாறு “கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களில் சிந்தையாக” இருக்கலாம், அப்படிச் செய்தால் எதைப் பெறுவோம்?
17 மறுபட்சத்தில், “கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களில் சிந்தையாக இருப்பவர்களுக்குக் கிடைப்பதோ வாழ்வும் சமாதானமும் ஆகும்”; ஆம், அவர்களுக்கு எதிர்காலத்தில் முடிவில்லா வாழ்வு கிடைக்கும், இப்போது மனசமாதானமும் கடவுளுடைய சமாதானமும் கிடைக்கும். நாம் எவ்வாறு “கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களில் சிந்தையாக” இருக்கலாம்? கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களையே தவறாமல் சிந்திப்பதன் மூலமும் ஆன்மீக மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதன் மூலமும் ஆகும். அப்படிச் செய்யும்போது ‘கடவுளுடைய சட்டத்திற்குக் கட்டுப்பட்டதாகவும்,’ அவருடைய எண்ணங்களுக்கு இசைவாகவும் உள்ள மனப்பான்மையைப் பெறுவோம். அதோடு, கெட்ட ஆசை வரும்போது, என்ன செய்வதென்ற குழப்பமே நமக்கு இருக்காது. சரியான தீர்மானத்தை, கடவுளுடைய சக்திக்கு இசைவான தீர்மானத்தை, எடுக்க நாம் தூண்டப்படுவோம்.
18 ஆகவே, நாம் கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களில் சிந்தையாக இருப்பது அவசியம். இதற்காக, ‘மும்முரமாகச் செயல்படுவதற்கு நம் மனதைத் தயார்படுத்த’ வேண்டும்; அதாவது, இடைவிடாத ஜெபம், பைபிள் வாசிப்பு மற்றும் படிப்பு, கூட்டங்கள், ஊழியம் ஆகிய ஆன்மீகக் காரியங்களைச் சுற்றியே நம் வாழ்க்கை சுழல வேண்டும். (1 பே. 1:13) பாவ காரியங்கள் நம் கவனத்தைத் திசைதிருப்ப அனுமதிப்பதற்குப் பதிலாக, கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களில் சிந்தையாக இருப்போமாக. இவ்வாறு, கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் தொடர்ந்து நடப்போம். அது நமக்கு ஆசீர்வாதங்களை அள்ளித் தரும்; ஏனென்றால், கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களில் சிந்தையாக இருப்பவர்களுக்கு வாழ்வும் சமாதானமும் கிடைக்கும்.—கலா. 6:7, 8.
உங்களால் விளக்க முடியுமா?
• ‘திருச்சட்டம் செய்ய முடியாதது’ எது, அதைக் கடவுள் எப்படிச் செய்தார்?
• ‘பாவத்தின் சட்டம்,’ ‘மரணத்தின் சட்டம்’ என்றால் என்ன, அவற்றிலிருந்து நாம் எவ்வாறு விடுவிக்கப்படலாம்?
• “கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களில் சிந்தையாக” இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
[பக்கம் 12-ன் படம்]
நீங்கள் பாவ வழியில் நடக்கிறீர்களா, கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்கிறீர்களா?
[பக்கம் 14-ன் படம்]