படைப்பில் பளிச்சிடும் யெகோவாவின் ஞானம்
“காணமுடியாத அவருடைய பண்புகள் . . . படைப்புகள் மூலம் தெளிவாகக் காணப்படுகின்றன.” —ரோ. 1:20.
1. உலக ஞானத்தால் பலர் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்?
அறிவில் சிறந்து விளங்குபவர்கள் பொதுவாக ஞானவான்கள் என்று கருதப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையிலேயே ஞானவான்களா? இல்லை, ஏனென்றால் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க எவ்வித நம்பகமான ஆலோசனையையும் அவர்கள் கொடுப்பதில்லை. சொல்லப்போனால், அவர்களுடைய பேச்சைக் கேட்டு நடக்கிறவர்கள், ‘அலைகளினால் அலைக்கழிக்கப்பட்டு அவர்களுடைய போதனைகளாகிய பலவித காற்றினால் இங்குமங்கும் அடித்துச் செல்லப்படுகிறார்கள்.’—எபே. 4:14.
2, 3. (அ) யெகோவா ‘ஒருவரே ஞானமுள்ளவர்’ என ஏன் சொல்லலாம்? (ஆ) கடவுள் தருகிற ஞானம் எவ்வாறு உலக ஞானத்திலிருந்து வேறுபடுகிறது?
2 உண்மையான ஞானத்தைப் பெறுகிறவர்களின் விஷயமே வேறு! அவர்கள் அந்த ஞானத்தை அதன் ஊற்றுமூலரான யெகோவா தேவனிடமிருந்து பெறுகிறார்கள். யெகோவா “ஒருவரே ஞானமுள்ளவர்” என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 16:27) இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் எப்படி உண்டாக்கப்பட்டன, எவற்றால் உண்டாக்கப்பட்டன போன்ற எல்லா நுட்ப விவரங்களையும் அவர் அறிந்திருக்கிறார். மனிதர்கள் ஆராய்ச்சிக்காக நம்பியிருக்கிற இயற்கை நியதிகள் அனைத்தும் யெகோவாவால் ஏற்படுத்தப்பட்டவை. ஆகவே, மனித கண்டுபிடிப்புகளைப் பார்த்து அவர் அசந்துபோவதில்லை, உயர்வாய்க் கருதப்படுகிற மனித தத்துவத்தைக் கண்டு மலைத்துப்போவதும் இல்லை. உண்மையில், “இந்த உலகத்தின் ஞானத்தைக் கடவுள் முட்டாள்தனமாகக் கருதுகிறார்.”—1 கொ. 3:19.
3 யெகோவா தம் ஊழியர்களுக்கு “ஞானத்தைத் தருகிறார்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 2:6) கடவுள் தருகிற ஞானம் மனித தத்துவங்களைப் போல் சிக்கலானது அல்ல. மாறாக, அது திருத்தமான அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது; தெளிவான முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது. (யாக்கோபு 3:17-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் ஞானத்தைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் பிரமித்துப்போய், “ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள் எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை! அவருடைய நியாயத்தீர்ப்புகள் ஆராய்ந்தறிய முடியாதவை! அவருடைய வழிகள் கண்டறிய முடியாதவை!” என்றார். (ரோ. 11:33) யெகோவா ஞானத்தில் ஈடிணையில்லாதவர் என்பதால், அவருடைய சட்டதிட்டங்கள் நமக்குச் சிறந்த வாழ்வைத் தருமென நாம் உறுதியாக நம்புகிறோம். நாம் சந்தோஷமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென யெகோவாவைவிட நன்கு தெரிந்தவர் வேறு யாரேனும் உண்டா?—நீதி. 3:5, 6.
இயேசு—“கைதேர்ந்த வேலையாள்”
4. யெகோவாவின் ஞானத்தைப் புரிந்துகொள்ள ஒரு வழி என்ன?
4 யெகோவாவின் ஞானமும் ஈடிணையற்ற பிற பண்புகளும் அவருடைய படைப்புகளில் பளிச்சிடுகின்றன. (ரோமர் 1:20-ஐ வாசியுங்கள்.) சின்னஞ்சிறிய படைப்புகள்முதல் மாபெரும் படைப்புகள்வரை, யெகோவாவின் கைவண்ணங்கள் அனைத்துமே அவருடைய குணாதிசயத்தைப் பறைசாற்றுகின்றன. மேலே வானம்முதல் கீழே நிலம்வரை எங்கு பார்த்தாலும், சர்வஞானமும் அன்பும் கொண்ட படைப்பாளர் ஒருவர் இருப்பதற்கு ஏராளமான அத்தாட்சிகளை நாம் காண்கிறோம். அவருடைய படைப்புகளைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் அவரைப் பற்றி எத்தனையோ விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம்.—சங். 19:1; ஏசா. 40:26.
5, 6. (அ) யெகோவாவோடு சேர்ந்து படைப்பு வேலையில் ஈடுபட்டவர் யார்? (ஆ) இப்போது எதைக் கவனிப்போம், ஏன்?
5 யெகோவா தன்னந்தனியாக ‘வானத்தையும் பூமியையும் சிருஷ்டிக்க’வில்லை. (ஆதி. 1:1) அவர் இந்தப் பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே பரலோகத்தில் ஒருவரைப் படைத்தார்; இவர் மூலமாகவே ‘எல்லாவற்றையும்’ உண்டாக்கினார். இவர்தான் கடவுளுடைய ஒரே மகன், ‘படைப்புகளிலேயே முதல் படைப்பாக இருப்பவர்,’ பிற்பாடு இயேசு என்ற பெயரில் மனிதராக பூமியில் வாழ்ந்தவர். (கொலோ. 1:15-17) யெகோவாவைப் போல் இயேசுவும் ஞானமிக்கவர். சொல்லப்போனால், நீதிமொழிகள் 8-ஆம் அதிகாரத்தில் அவர் ஞானம் என்பதாக உருவகப்படுத்தப்பட்டுள்ளார். அதே அதிகாரத்தில் அவர் கடவுளுடைய “கைதேர்ந்த வேலையாள்” (NW) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.—நீதி. 8:12, 22-31.
6 ஆகவே, இந்தப் பிரபஞ்சம் யெகோவாவின் ஞானத்தையும், அதேசமயத்தில் அவரது கைதேர்ந்த வேலையாளாகிய இயேசுவின் ஞானத்தையும் பறைசாற்றுகிறது. நமக்கு அருமையான பாடங்களையும் புகட்டுகிறது. இப்போது நீதிமொழிகள் 30:24-28-ல், ‘இயல்பிலேயே ஞானமுள்ளவையாக’ விவரிக்கப்பட்டுள்ள நான்கு படைப்புகளைப் பற்றிக் கவனிக்கலாம்.a
சுறுசுறுப்புக்கு ஒரு பாடம்
7, 8. எறும்புகளைப் பற்றிய என்ன உண்மைகள் உங்கள் மனதைக் கவருகின்றன?
7 படைப்புகளின் வடிவமைப்பையும் செயல்களையும் கவனிக்கும்போது, ‘பூமியில் சிறியவைகளாக’ இருக்கிறவற்றிடமிருந்துகூட அருமையான பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். உதாரணத்திற்கு, எறும்புக்கு இயல்பிலேயே இருக்கிற ஞானத்தைக் கவனிக்கலாம்.—நீதிமொழிகள் 30:24, 25-ஐ வாசியுங்கள்.
8 உலகத்தில் எத்தனை எறும்புகள் இருக்கின்றன, தெரியுமா? குறைந்தபட்சம், ஒரு மனிதனுக்கு 2,00,000 என்ற வீதத்தில் எறும்புகள் இருப்பதாக சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அத்தனை லட்சம் எறும்புகளும் பூமியின்மீதும் பூமிக்கடியிலும் சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கின்றன. எறும்புகள் தனித்தனிக் கூட்டங்களாக அதனதன் குடியிருப்புகளில் வாழ்கின்றன; ஒவ்வொரு குடியிருப்பிலும் ராணி எறும்பு, ஆண் எறும்பு, வேலைக்கார எறும்பு என மூன்று வகையான எறும்புகளைப் பெரும்பாலும் காண முடிகிறது. இந்த ஒவ்வொரு வகையான எறும்புகளும் ஒவ்வொரு வேலையைச் செய்து தங்கள் “வீட்டை” கவனித்துக்கொள்கின்றன. தென் அமெரிக்காவிலுள்ள இலைவெட்டி எறும்புக்கு, “திறமையான தோட்டக்காரன்” என்று பெயர் சூட்டலாம். இந்தச் சின்னஞ்சிறு எறும்பு, அதிக விளைச்சல் பெறுவதற்காகத் தன்னுடைய காளான் தோட்டங்களில் உரமிடுகிறது, காளான்களை இடம்பெயர்த்து நடுகிறது, அவற்றில் தேவையற்ற பாகங்களைக் கத்தரித்துவிடுகிறது. இந்தத் திறமையான “தோட்டக்காரன்” தன்னுடைய குடியிருப்பிலுள்ள எறும்புகளுக்கு எந்தளவு உணவு தேவைப்படுகிறதோ அந்தளவு உழைப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டிருக்கிறார்கள்.b
9, 10. எறும்பின் சுறுசுறுப்பை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
9 எறும்புகள் நமக்குப் புகட்டும் பாடம் இதுதான்: கைமேல் பலன் கிடைப்பதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும். “சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும் தலைவனும் அதிகாரியும் இல்லாதிருந்தும், கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 6:6-8) யெகோவாவும் அவருடைய கைதேர்ந்த வேலையாளான இயேசுவும் சுறுசுறுப்பாக உழைக்கிறவர்கள். அதனால்தான், “என் தகப்பன் இதுவரை வேலை செய்து வந்திருக்கிறார், நானும் வேலை செய்து வருகிறேன்” என்று இயேசு சொன்னார்.—யோவா. 5:17.
10 கடவுளையும் கிறிஸ்துவையும் பின்பற்றுகிற நாமும் சுறுசுறுப்பாக உழைக்கிறவர்களாய் இருக்க வேண்டும். கடவுளுடைய அமைப்பில் நமக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும்சரி, நாம் அனைவரும் “எந்நேரமும் நம் எஜமானருடைய வேலையில் அதிகமதிகமாய் ஈடுபடுகிறவர்களாக” இருக்க வேண்டும். (1 கொ. 15:58) ஆகவே, “உங்கள் வேலையில் மந்தமாக இருக்காதீர்கள். யெகோவாவுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்படுங்கள்; அவருக்கு அடிமைகளாக வேலை செய்யுங்கள்” என்று ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் சொன்ன அறிவுரையை நாமும் பின்பற்ற வேண்டும். (ரோ. 12:11) யெகோவாவின் சித்தத்தைச் செய்ய நாம் எடுக்கிற முயற்சிகள் எதுவும் வீண் போகாது; ஏனென்றால், “உங்களுடைய உழைப்பையும் தமது பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும் மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் அல்ல” என்று பைபிள் உறுதியளிக்கிறது.—எபி. 6:10.
ஆன்மீகத் தீங்கிலிருந்து பாதுகாப்பு
11. கற்பாறை வளைக்கரடிகளின் சில பண்புகள் யாவை?
11 நமக்கு முக்கியமான பாடங்களைப் புகட்டும் இன்னொரு சிறிய விலங்கு, குழிமுசல் என்றழைக்கப்படுகிற கற்பாறை வளைக்கரடி ஆகும். (நீதிமொழிகள் 30:26-ஐ வாசியுங்கள்.) அது பார்ப்பதற்கு ஒரு பெரிய முயலைப் போல் இருக்கிறது; ஆனால் சிறிய, உருண்டையான காதுகளையும் குட்டையான கால்களையும் கொண்டிருக்கிறது. இந்தச் சிறிய பிராணி கற்பாறைகளில் குடியிருக்கிறது. ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அதன் கூரிய பார்வை அதற்குக் கைகொடுக்கிறது; அதோடு, கற்பாறைகளிலுள்ள பொந்துகளும் இடுக்குகளும் பதுங்கிக்கொள்ள அதற்கு இடமளிக்கின்றன. “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பதற்கு ஏற்றாற்போல் வாழும்படியே அந்தக் கற்பாறை வளைக்கரடிகள் படைக்கப்பட்டுள்ளன; அதனால் அவை பாதுகாப்பையும் பெறுகின்றன, குளிர்காலத்தில் கதகதப்பையும் பெறுகின்றன.c
12, 13. கற்பாறை வளைக்கரடிகளிடமிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்?
12 கற்பாறை வளைக்கரடியிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? முதலாவதாக, இந்த விலங்கு ஆபத்தில் மாட்டிக்கொள்ளாதபடி உஷாராக நடந்துகொள்கிறது. அதன் கூரிய பார்வையைக் கொண்டு எதிரிகளைத் தூரத்திலிருந்தே கண்டுபிடித்துவிடுகிறது; அதோடு, தஞ்சமளிக்கும் ‘வீடுகளாகிய’ பொந்துகளுக்கும் இடுக்குகளுக்கும் அருகிலேயே எப்போதும் இருக்கிறது. அதேபோல் நாமும், கூரிய ஆன்மீகப் பார்வையுடன், சாத்தானின் உலகத்தில் மறைந்திருக்கும் ஆபத்துக்களைக் கண்டுகொள்ள வேண்டும். “தெளிந்த புத்தியுடன் இருங்கள், விழித்திருங்கள்; உங்கள் எதிரியான பிசாசு கர்ஜிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று அலைந்து திரிகிறான்” என்று அப்போஸ்தலன் பேதுரு கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை தந்தார். (1 பே. 5:8) இயேசு பூமியில் இருந்தபோது, தம் உத்தமத்தைக் குலைப்பதற்குச் சாத்தான் எடுத்த எல்லா முயற்சிகளையும் முறியடிக்க எப்போதும் உஷாராகவும் கவனமாகவும் இருந்தார். (மத். 4:1-11) இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்கு எப்பேர்ப்பட்ட முன்னுதாரணம்!
13 நாம் உஷாராக இருப்பதற்கு ஒரு வழி, ஆன்மீகப் பாதுகாப்புக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்வதாகும். கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதையும் கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் செல்வதையும் நாம் ஒருபோதும் அசட்டை செய்யக் கூடாது. (லூக். 4:4; எபி. 10:24, 25) அதுமட்டுமல்ல, கற்பாறை வளைக்கரடிகள் ஒன்றுகூடி வாழ்வதுபோல் நாமும் நம் சக கிறிஸ்தவர்களோடு ‘ஒன்றுகூடி வாழ’ வேண்டும்; அப்போதுதான், “ஒருவருக்கொருவர் ஊக்கம்பெற” முடியும். (ரோ. 1:12) யெகோவா அளிக்கும் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதன் மூலம், சங்கீதக்காரனாகிய தாவீது சொன்னதுபோல் நாமும் இப்படிச் சொல்வோம்: ‘கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமுமாய் இருக்கிறார்.’—சங். 18:2.
எதிர்ப்பு வந்தாலும் சளைப்பதில்லை
14. ஒரு வெட்டுக்கிளி பார்ப்பதற்குப் பிரமாதமாகத் தெரியாவிட்டாலும் வெட்டுக்கிளிக் கூட்டத்தைப் பற்றி என்ன சொல்லலாம்?
14 வெட்டுக்கிளிகளும் நமக்குப் பாடம் புகட்டுகின்றன. கிட்டத்தட்ட இரண்டு அங்குல நீளமே உடைய ஒரு வெட்டுக்கிளி யாருக்கும் பிரமாதமாகத் தெரிவதில்லை; ஆனால், வெட்டுக்கிளிக் கூட்டத்தைப் பார்த்தால் எல்லாரும் அசந்துபோவார்கள். (நீதிமொழிகள் 30:27-ஐ வாசியுங்கள்.) அகோரப் பசிக்குப் பேர்போன இந்த வெட்டுக்கிளிக் கூட்டங்கள் அறுவடைக்குத் தயாராயிருக்கும் வயலைக் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரேமூச்சாகக் கபளீகரம் செய்துவிடுகின்றன. திரண்டுவரும் வெட்டுக்கிளிக் கூட்டங்களும் மற்ற பூச்சிகளின் கூட்டங்களும், ஓடுகிற இரதங்களின் இரைச்சல்போலவும் சருகுகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சல்போலவும் இருப்பதாக பைபிள் சொல்கிறது. (யோவே. 2:3, 5) படையெடுத்துவரும் வெட்டுக்கிளிக் கூட்டங்களைத் தடுத்துநிறுத்துவதற்கு மனிதர்கள் தீ மூட்டிப் பார்த்திருக்கிறார்கள், ஆனால் அவை மசியவே இல்லை. ஏன்? முன்னணியில் செல்லும் வெட்டுக்கிளிகள் கருகி விழுந்து நெருப்பை அணைத்துவிடுகின்றன; பின்னால் வரும் வெட்டுக்கிளிகளோ சற்றும் நிற்காமல் அதே வேகத்தில் பாய்ந்து செல்கின்றன. இந்த வெட்டுக்கிளிக் கூட்டங்கள், எந்தவொரு ராஜாவும் தலைவரும் இல்லாமலேயே, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு படையைப் போல் செயல்பட்டு எப்பேர்ப்பட்ட தடைகளையும் தாண்டிச் செல்கின்றன.d—யோவே. 2:25.
15, 16. நவீனநாளில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிப்போர் எவ்விதத்தில் வெட்டுக்கிளிக் கூட்டத்தைப்போல் இருக்கிறார்கள்?
15 தீர்க்கதரிசியாகிய யோவேல், யெகோவாவின் ஊழியர்களை வெட்டுக்கிளிகளுக்கு ஒப்பிட்டு இவ்வாறு எழுதினார்: “அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும். ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும், அவைகள் [“அவற்றில் சில,” NW] ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் [“மற்றவை தொடர்ந்து,” NW] காயம்படாமற்போகும்.”—யோவே. 2:7, 8.
16 நவீனநாளில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிப்போரை இந்தத் தீர்க்கதரிசனம் எவ்வளவு நன்றாகச் சித்தரித்துக் காட்டுகிறது! ‘மதில்’ போன்ற எவ்வித எதிர்ப்பும் அவர்களுடைய பிரசங்க வேலையைத் தடுத்து நிறுத்த முடிவதில்லை. மாறாக, பலரால் இகழப்பட்டபோதும் கடவுளுடைய சித்தத்தை விடாமல் செய்த இயேசுவை அவர்கள் பின்பற்றிவருகிறார்கள். (ஏசா. 53:3) உண்மைதான், சில கிறிஸ்தவர்கள் ‘ஆயுதங்களுக்குள் விழுந்திருக்கிறார்கள்,’ அதாவது தங்கள் விசுவாசத்திற்காக உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். இருந்தாலும், பிரசங்க வேலை தடைபடவே இல்லை; மாறாக, அவ்வேலையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துதான் வந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, நற்செய்தி பரவுவதைத் தடுப்பதற்குக் கொண்டுவரப்பட்ட துன்புறுத்தல், அச்செய்தி மேன்மேலும் பரவுவதற்குத்தான் வழிவகுத்திருக்கிறது; சொல்லப்போனால், துன்புறுத்தல் வராதிருந்தால் சிலருக்கு நற்செய்தியைக் கேட்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். (அப். 8:1, 4) ஆகவே, ஊழியத்தில் மக்கள் உங்களை அலட்சியம் செய்தாலும் சரி எதிர்த்தாலும் சரி, வெட்டுக்கிளிகளைப் போல் சளைக்காமல் செயல்படுகிறீர்களா?—எபி. 10:39.
“நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்”
17. பல்லியின் பாதங்கள் எவ்வாறு வழுவழுப்பான பரப்புகளையும் பற்றிக்கொள்கின்றன?
17 சின்னஞ்சிறிய ஜந்துவான பல்லி, புவியீர்ப்பு சக்திக்குக் கட்டுப்படுவதில்லை. (நீதிமொழிகள் 30:28-ஐ வாசியுங்கள்.e) இந்தச் சிறிய பிராணி, சுவர்களில் ஏறும் விதத்தையும் கீழே விழாமலேயே வழுவழுப்பான உட்கூரையின்மீது ஊர்ந்து செல்லும் விதத்தையும் பார்த்து விஞ்ஞானிகள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள். பல்லி எப்படி இந்தச் சாகசத்தைச் செய்கிறது? அதன் பாதத்தில் இருக்கிற உறிஞ்சும் தன்மையுள்ள குழிவுகளாலோ ஏதோவொரு பசைப்பொருளாலோ அல்ல. மாறாக, பல்லியின் தட்டையான பாதங்கள் ஒவ்வொன்றிலும் பல மேடுகள் உள்ளன. அந்த மேடுகளில் உரோமங்கள் போன்ற ஆயிரக்கணக்கான காம்புகள் நீட்டிக்கொண்டிருக்கின்றன. இந்தக் காம்புகள் ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான இழைகள் இருக்கின்றன. இவற்றின் முனைகள் தட்டுவடிவில் உள்ளன. இந்த எல்லா இழைகளிலும் உள்ள மூலக்கூறு விசை, அந்தப் பல்லியின் உடல் எடையைத் தாங்கிக்கொள்கிறது; இதனால், பல்லி ஒரு கண்ணாடிப் பரப்பின்மீது தலைகீழாக ஊர்ந்து செல்கிறது! பல்லியின் இந்த அபாரத் திறமையைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் மலைத்துப்போகிறார்கள்; அதன் பாதங்களைக் காப்பியடித்து உருவாக்கப்படுகிற செயற்கைப் பொருட்களை, கெட்டியாக ஒட்டிக்கொள்ளும் பிசினாகப் பயன்படுத்தலாம் எனச் சொல்கிறார்கள்.f
18. நாம் எப்போதும் ‘நல்லதை இறுகப் பற்றிக்கொண்டிருக்க’ என்ன செய்ய வேண்டும்?
18 பல்லியிடமிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம்? “பொல்லாததை அறவே வெறுத்து, நல்லதை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்” என பைபிள் சொல்கிறது. (ரோ. 12:9) சாத்தானுடைய உலகத்தில் மலிந்திருக்கும் தீய செல்வாக்குகள் தெய்வீக நியமங்கள்மீதுள்ள நம் பிடிப்பைத் தளர்த்திவிடலாம். உதாரணத்திற்கு, கடவுளுடைய சட்டதிட்டங்களைக் கடைப்பிடிக்காதவர்கள், சரியானதைச் செய்ய வேண்டுமென்ற நம் தீர்மானத்தைக் குலைத்துவிடலாம்; இது பள்ளியிலோ, வேலைசெய்யும் இடத்திலோ, ஏதேனும் தகாத பொழுதுபோக்கில் ஈடுபடுகையிலோ நடக்கலாம். ஆனால், உங்களுக்கு அப்படி நடக்காதபடி கவனமாயிருங்கள்! “நீ உன்னை ஞானியென்று எண்ணாதே” எனக் கடவுளுடைய வார்த்தை எச்சரிக்கிறது. (நீதி. 3:7) ஆகவே, பூர்வ காலத்தில் கடவுளுடைய மக்களுக்கு மோசே கொடுத்த இந்த ஞானமான அறிவுரையைப் பின்பற்றுங்கள்: ‘உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொண்டிரு.’ (உபா. 10:20) நாம் யெகோவாவைப் பற்றிக்கொண்டிருந்தால் இயேசுவைப் பின்பற்றுவோம்; “நீ நீதியை நேசித்தாய், அக்கிரமத்தை வெறுத்தாய்” என இயேசுவைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.—எபி. 1:9.
படைப்பு புகட்டும் பாடம்
19. (அ) யெகோவாவின் என்ன குணங்களை நீங்கள் படைப்பில் பார்க்கிறீர்கள்? (ஆ) தெய்வீக ஞானம் நமக்கு எவ்வாறு நன்மையளிக்கிறது?
19 நாம் இதுவரை பார்த்தபடி, யெகோவாவின் படைப்புகளிலிருந்து அவருடைய குணங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது, அருமையான பாடங்களையும் கற்றுக்கொள்ள முடிகிறது. யெகோவாவின் கைவண்ணங்களை நாம் ஆராய ஆராய அவருடைய ஞானத்தைக் குறித்து மேன்மேலும் வியந்துபோகிறோம். நாம் ஞானத்தின் பிறப்பிடமான யெகோவாவுக்குச் செவிசாய்ப்பது இக்காலத்தில் நம் சந்தோஷத்தை அதிகரிக்கும், வருங்காலத்தில் பாதுகாப்பை அளிக்கும். (பிர. 7:12) ஆம், “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்” என்று நீதிமொழிகள் 3:13, 18-ல் கொடுக்கப்பட்டிருக்கிற உறுதி நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நாம் அனுபவத்தில் காண்போம்.
[அடிக்குறிப்புகள்]
a முக்கியமாக இளைஞர்கள், அடிக்குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகளை வாசித்து மகிழலாம்; பின்பு, சபை காவற்கோபுர படிப்பில் இந்தக் கட்டுரை கலந்தாலோசிக்கப்படும்போது தாங்கள் ஆராய்ந்த குறிப்புகளைச் சொல்லலாம்.
b இலைவெட்டி எறும்பைப் பற்றிய கூடுதலான தகவலுக்கு விழித்தெழு! மார்ச் 22, 1997, பக்கம் 31 மற்றும் ஜூன் 8, 2002, பக்கம் 31-ஐக் காண்க.
c கற்பாறை வளைக்கரடிகளைப் பற்றிய கூடுதலான தகவலுக்கு விழித்தெழு! மார்ச் 8, 1992, பக்கங்கள் 28-29-ஐக் காண்க.
d வெட்டுக்கிளிகளைப் பற்றிய கூடுதலான தகவலுக்கு ஆங்கில விழித்தெழு! அக்டோபர் 22, 1976, பக்கம் 11-ஐக் காண்க.
e நீதிமொழிகள் 30:28 (NW): ‘பல்லி தன் சொந்த கைகளினால் ஒட்டிக்கொண்டு அரசரின் அரண்மனையில் இருக்கிறது.’
f பல்லியைப் பற்றிய கூடுதலான தகவலுக்கு விழித்தெழு! ஏப்ரல் 8, 1990, பக்கம் 31-ஐக் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
இவற்றிலிருந்து நாம் என்ன நடைமுறையான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?
• எறும்பு
• கற்பாறை வளைக்கரடி
• வெட்டுக்கிளி
• பல்லி
[பக்கம் 16-ன் படம்]
நீங்கள் இலைவெட்டி எறும்பைப் போல் சுறுசுறுப்பாக இருக்கிறீர்களா?
[பக்கம் 17-ன் படங்கள்]
கற்பாறை வளைக்கரடி ஒன்றுகூடி வாழ்வதால் பாதுகாப்பைப் பெறுகிறது. நீங்களும் ‘ஒன்றுகூடி வாழ்கிறீர்களா’?
[பக்கம் 18-ன் படங்கள்]
கிறிஸ்தவர்கள் ஊழியத்தில் வெட்டுக்கிளிகளைப் போல் சளைக்காமல் ஈடுபடுகிறார்கள்
[பக்கம் 18-ன் படம்]
பல்லிகள் மேற்பரப்புகளைப் பற்றிக்கொள்வதுபோல் கிறிஸ்தவர்கள் நன்மையானதைப் பற்றிக்கொள்கிறார்கள்
[படத்திற்கான நன்றி]
Stockbyte/Getty Images