-
கண்ணால் காண்பதே மெய்காவற்கோபுரம்—2008 | ஜூலை 1
-
-
கடவுள் இருக்கிறார் என்றும் மனிதர்மீது அவருக்கு அக்கறை இருக்கிறது என்றும் பவுல் உறுதியாக நம்பக் காரணம் என்ன? ரோம் நகரில் வசித்த கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில் இதற்கான ஒரு காரணத்தை பவுல் தெரியப்படுத்தினார். “கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள் . . . உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக்கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன” என்று அவர் சொன்னார்.—ரோமர் [உரோமையர்] 1:20, பொது மொழிபெயர்ப்பு.
கடவுளுடைய படைப்புகளில் பளிச்சிடுகிற அவருடைய மூன்று குணங்களை உதாரணங்களோடு பின்வரும் கட்டுரைகள் விளக்கும். அவற்றைச் சிந்திக்கும்போது, ‘கடவுளுடைய இந்தக் குணங்களைப் பற்றி கற்றுக்கொண்டதால் நான் எப்படிப் பயனடைகிறேன்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். (w08 5/1)
-
-
இயற்கையில் மிளிரும் இறைவனின் ஞானம்காவற்கோபுரம்—2008 | ஜூலை 1
-
-
இயற்கையில் மிளிரும் இறைவனின் ஞானம்
‘மிருகங்களைப் பார்க்கிலும் எங்களைப் புத்திமான்களும், ஆகாசத்துப் பறவைகளைப் பார்க்கிலும் எங்களை ஞானவான்களுமாக்கினீர்.’—யோபு 35:10.
பறவைகளிடம் அபாரத் திறமைகள் உள்ளன. அவை ஆகாயத்தில் செய்யும் சாகசங்களை விமான வடிவமைப்பாளர்கள் பிரமிப்புடன் பார்க்கிறார்கள். சில பறவையினங்கள், பரந்து விரிந்திருக்கும் பெருங்கடல்மீது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பறந்து சென்று எங்கிருந்து கிளம்பியதோ அந்த இடத்திற்கே மீண்டும் திரும்புகின்றன.
பறவைகள், ஒலிகள் எழுப்பியும் பாடல்கள் பாடியும் ஒன்றோடொன்று பேசிக் கொள்கின்றன. அவற்றுக்கு உள்ள இந்த ஒப்பற்றத் திறன் படைப்பாளரின் ஞானத்திற்கு மகுடம் சூட்டுகிறது. அதற்குச் சில உதாரணங்கள் இதோ:
பறவைகளின் பேச்சு
சில இனப் பறவைகளின் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவருவதற்கு முன்பே ஒன்றோடொன்று ‘பேசிக்’ கொள்கின்றன. உதாரணமாக, பெண் காடை ஒரு நாளைக்கு ஒரு முட்டை என்ற கணக்கில் கிட்டத்தட்ட எட்டு முட்டைகள் இடுகிறது. ஒருவேளை, எல்லா முட்டைக்கருவும் ஒரே வேகத்தில் வளர்ச்சியடைந்தால் ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் எட்டு நாளைக்குள் எல்லா குஞ்சுகளும் வெளியே வந்துவிடும். இப்படி நடந்தால் தாய் பறவை திண்டாடிவிடும். ஏனென்றால், வெளியே வந்து சுமார் ஒரு வாரமே ஆன குஞ்சுகளைக் கவனிப்பதோடு இன்னும் குஞ்சு பொரியாமல் இருக்கும் ஒரு முட்டையை அடைகாக்க வேண்டுமென்றால் அது திணறிவிடும். ஆனால், அப்படி நடப்பதற்குப் பதிலாக எட்டுக் குஞ்சுகளும் ஆறு மணி நேரத்திற்குள் ஒன்றொன்றாக முட்டைகளை உடைத்துக் கொண்டு வெளியே வருகின்றன. அது எப்படி? காடை குஞ்சுகள் முட்டைக்குள்ளிருந்தே ஒன்றுக்கொன்று எப்படியோ ‘பேசிக்’ கொண்டு, ஒரே சமயத்தில் வெளியே வருவதற்கு திட்டம் போடுவதே இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
பறவைகள் வளர்ச்சி அடைந்த பிறகு, அவற்றில் பொதுவாக ஆண் பறவைதான் பாட்டு பாடும். விசேஷமாக, இனப்பெருக்க காலத்தில், ‘இது என்னுடைய இடம்’ என்று சொல்லாமல் சொல்வதற்கும் தன் துணையைக் கவருவதற்கும் இப்படிப் பாடும். பறவைகளில் ஆயிரக்கணக்கான இனங்கள் இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் தங்களுக்கே உரிய ‘மொழியில்’ பேசுகின்றன. இதனால் பெண் பறவை தன் இனத்தைச் சேர்ந்த துணையைக் கண்டுபிடிக்க முடிகிறது.
பறவைகள் அதிகாலையிலும் அந்திசாயும் வேளையிலும்தான் அதிகமாய்ப் பாடுகின்றன. அதற்குக் காரணம் என்னவென்றால், அச்சமயங்களில் காற்றும் அதிகமாக அடிக்காது, இரைச்சலும் இருக்காது. நண்பகலைவிட காலையிலும் மாலையிலும்தான் அவற்றின் பாட்டு சுமார் 20 மடங்கு அதிகமாகக் கேட்கிறது.
பெரும்பாலும் ஆண் பறவைகளே பாடினாலும் ஆண் பறவையும் சரி பெண் பறவையும் சரி இரண்டுமே வெவ்வேறு அர்த்தமுள்ள வித்தியாசமான ஒலிகளை எழுப்பும். உதாரணமாக, சாஃபின்ச் பறவைகள் ஒன்பது வித்தியாசமான ஒலிகளை எழுப்புகின்றன. ஆகாயத்தில் எதிரி பறவையின் நடமாட்டம் தெரிந்தால் அவை ஒரு விதமான அபாய ஒலியை எழுப்பும். கீழே இருக்கும் எதிரிகளிடமிருந்து வரும் ஆபத்தை அறிவிப்பதற்கு வேறு விதமான அபாய ஒலியை எழுப்பும்.
ஒப்பற்ற பரிசு
படைப்பாளர் பறவைகளுக்குக் கொடுத்திருக்கும் ஞானம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால், மனிதர்களுக்கு இருக்கும் பேச்சுத் திறனோ அதைவிட பல மடங்கு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. “ஆகாசத்துப் பறவைகளைப்பார்க்கிலும்” மனிதர்களை கடவுள் ‘ஞானவான்களாக’ படைத்திருக்கிறார் என்று யோபு 35:10 சொல்கிறது. தொண்டையில் உள்ள நாளங்களின் அதிர்வால் வருகிற ஒலியின் மூலமாகவும் சைகையின் மூலமாகவும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத, சிக்கலான எண்ணங்களையும் கருத்துகளையும் தெரிவிக்கும் திறன் மனிதருக்கு மட்டுமே உள்ளது.
எந்தப் பிராணிகளுக்கும் இல்லாத அபாரத் திறன் மனிதர்களுக்கு இருக்கிறது. சிக்கலான மொழிகளைக் கற்றுக்கொள்ளும் திறன் குழந்தைகளுக்கு இயல்பாகவே இருப்பதாகத் தெரிகிறது. ஆன்லைன் பத்திரிகையான அமெரிக்கன் சைன்டிஸ்ட் சொல்வதாவது: “பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் நேரடியாகப் பேசாவிட்டாலும்கூட அந்தக் குழந்தைகள் அவர்களுடைய மொழியை கற்றுக்கொள்கிறார்கள். கேட்கும் திறனற்ற பிள்ளைகளோ இன்னும் ஒருபடி மேலே செல்கிறார்கள்; அதாவது, வீட்டில் சைகை மொழி கற்றுக் கொடுக்கப்படாவிட்டாலும்கூட, அவர்களாகவே ஒரு சைகை மொழியை உருவாக்குகிறார்கள்.”
-
-
இயற்கையில் மிளிரும் இறைவனின் ஞானம்காவற்கோபுரம்—2008 | ஜூலை 1
-
-
நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
பறவையின் இனிய கீதத்தைக் கேட்கும்போது அல்லது ஒரு மழலை முதன்முதலாக சொல்லும் வார்த்தையைக் கேட்கும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? கடவுளுடைய ஞானம் அவருடைய படைப்புகளில் பளிச்சிடுவது உங்களுக்குத் தெரிகிறதா?
சங்கீதக்காரனாகிய தாவீது, தான் படைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்த பிறகு மிகவும் நெகிழ்ந்து போய் கடவுளிடம் இவ்வாறு சொன்னார்: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.” (சங்கீதம் 139:14) இயற்கையில் மிளிரும் இறைவனின் ஞானத்தை கவனமாய்ச் சிந்தித்துப் பாருங்கள். அவரால் உங்களுக்கு ஞானமான வழிநடத்துதலை நிச்சயம் தர முடியும் என்ற நம்பிக்கை அப்போது பெருகும். (w08 5/1)
-
-
கடவுளின் வல்லமையைப் பறைசாற்றும் நட்சத்திரங்கள்காவற்கோபுரம்—2008 | ஜூலை 1
-
-
கடவுளின் வல்லமையைப் பறைசாற்றும் நட்சத்திரங்கள்
“மேலே வானங்களைப் பாருங்கள். இந்த நட்சத்திரங்களை எல்லாம் படைத்தது யார்? வானத்தில் இந்தப் படைகளை எல்லாம் படைத்தது யார்? ஒவ்வொரு நட்சத்திரங்களின் பெயரும் யாருக்கு தெரியும்? உண்மையான தேவன் மிக்க பலமும் வல்லமையும் கொண்டவர். எனவே, நட்சத்திரங்களில் எதுவும் குறையாது.”—ஏசாயா 40:26, ஈஸி டு ரீட் வர்ஷன்.
நம் சூரியன் நடுத்தரமான அளவுள்ள ஒரு நட்சத்திரமே. என்றாலும், அது பூமியைவிட 3,30,000 மடங்கு பெரியது. நம் பூமிக்கு அருகிலிருக்கும் பெரும்பாலான நட்சத்திரங்கள் சூரியனைக் காட்டிலும் சிறியவைதான். ஆனால், V382 சிக்னி என்று பெயரிடப்பட்ட நட்சத்திரமும், அதைப் போன்ற மற்ற நட்சத்திரங்களும் சூரியனைவிட கிட்டத்தட்ட 27 மடங்கு பெரியவை.
நம் சூரியனிலிருந்து எந்தளவு ஆற்றல் வெளிப்படுகிறது? எரியும் நெருப்பிலிருந்து நீங்கள் 15 கிலோமீட்டர் தள்ளி நின்றாலும் அதன் வெப்பத்தை உணருகிறீர்கள் என்றால், அது எந்தளவுக்கு சூடாக இருக்குமென்று கற்பனை செய்து பாருங்கள்! நம் பூமி, சூரியனிலிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் சுழலுகிறது. அவ்வளவு தூரத்தில் இருந்தாலும், உச்சி வெயிலில் வெளியே சென்றால் அந்த வெப்பத்தால் சிலருக்கு உடலில் கொப்புளங்கள் ஏற்படலாம். சூரிய ஆற்றலில் சுமார் 100 கோடியில் ஒரு பாகம் மட்டுமே நம் கிரகத்தை எட்டுகிறது என்பது ஆச்சரியத்துக்குரிய விஷயம். ஆனால், பூமியிலுள்ள உயிரினங்களைக் காக்க இந்தத் துளி ஆற்றலே போதுமானது.
ஒருவேளை, பூமியைப் போன்று சுமார் 31 லட்சம் கோடி கிரகங்கள் இருந்தால் அவற்றிலுள்ள உயிரினங்களைக் காக்க நம் சூரியனிலிருந்து வெளிவரும் ஒட்டுமொத்த ஆற்றல் போதுமானதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளார்கள். சூரியனிலிருந்து எந்தளவுக்கு அதிகமான ஆற்றல் வெளிவருகிறது என்பதை வேறு விதத்திலும் கணக்கிடலாம். சூரியனிலிருந்து ஒரு நொடியில் வெளிவரும் ஆற்றலை, அமெரிக்கா போன்ற தொழில்துறை நாடுகள், “அடுத்த 90 லட்சம் ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்று விண்வெளி வானிலை கணிப்பு மையம் (SWPC) என்ற ஒரு வெப்-சைட் கூறுகிறது.
அணுஉலையைப் போல் சூரியன் அதன் மையப் பகுதியிலிருந்து ஆற்றலைக் கக்குகிறது. சூரியன் மிகப் பெரியதாகவும் அதன் மையப்பகுதி மிக அடர்த்தியாகவும் இருப்பதால் அதன் உள்ளே உற்பத்தியாகும் ஆற்றல் மேற்பரப்பிற்கு வருவதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் எடுக்கிறது. “ஒருவேளை, இன்று சூரியன் தன் ஆற்றலை உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டது என்றால், 5 கோடி ஆண்டுகளுக்கு பின்னரே அதன் பாதிப்பு நம் பூமியில் தெரியவருமாம்!” என்று SWPC வெப்-சைட் கூறுகிறது.
சரி, இப்படிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மேகமூட்டமில்லாத இரவில் வானத்தை சற்று அண்ணாந்து பார்த்தீர்களென்றால், அள்ளித் தெறித்தாற்போல் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக் கொண்டிருக்கும். இவை ஒவ்வொன்றும் நம் சூரியனைப் போல் அளவிலா ஆற்றலை வெளியிடுகின்றன. அதோடு, இந்தப் பிரபஞ்சத்தில் கோடானுகோடி நட்சத்திரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்த விண்மீன் கூட்டங்கள் எங்கிருந்து வந்தன? நம் பிரபஞ்சம் சுமார் 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு திடீரென தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் பலர் நம்புகிறார்கள். ஆனால், அதற்கான காரணத்தை அவர்களால் இன்றுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (ஆதியாகமம் 1:1) பிரமாண்டமான அணுஉலைகளாக இருக்கும் இந்த நட்சத்திரங்களைப் படைத்த கடவுளை ‘மகா வல்லமையுள்ளவர்’ என அழைப்பது பொருத்தமாய் இருக்கும்.—ஏசாயா 40:26.
-