உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்திய காவற்கோபுர இதழ்களால் நீங்கள் பயனடைந்தீர்களா? அப்படியென்றால், பின்வரும் கேள்விகளை உபயோகித்து உங்கள் நினைவாற்றலை ஏன் சோதித்துப் பார்க்கக்கூடாது?
◻ வேலை சம்பந்தப்பட்ட தீர்மானங்களைச் செய்கையில் சொந்தத் தீர்மானத்தை எடுக்க அநேக கிறிஸ்தவர்களுக்கு எந்த இரண்டு கேள்விகள் உதவியிருக்கின்றன?
முதல் முக்கிய கேள்வி: உலகப்பிரகாரமான வேலையையே பைபிள் கண்டனம் செய்கிறதா? இரண்டாவது கேள்வி: இந்த வேலையைச் செய்வது, கண்டனம் செய்யப்பட்ட செயலுக்கு ஒருவரை பங்காளியாக்குமா?—4/15, பக்கம் 28.
◻ எந்த அர்த்தத்தில் ‘மனித சிருஷ்டியானது மாயைக்கு கீழ்ப்பட்டிருக்கிறது?’
(ரோமர் 8:20) நாம் ‘மாயைக்கு கீழ்ப்பட்டிருக்க’ காரணம் நம்முடைய முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளுமே. நம்முடைய “சுய இஷ்டத்தினாலே” அல்லது நாமே தெரிவு செய்ததினால் இது ஏற்படவில்லை. இந்த நிலைமையை நம்முடைய முதல் பெற்றோரிடமிருந்து சுதந்தரித்திருக்கிறோம். இப்போது அபூரணம், பாவம், மரணம் ஆகியவற்றைத்தான் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்தாக கொடுக்க முடிந்தபோதிலும், யெகோவா தம்முடைய இரக்கத்தின் காரணமாக அவர்கள் பிள்ளைகளை பெறும்படி அனுமதித்தார். அதனால், “மரணம் எல்லாருக்கும் வந்தது.” இந்த அர்த்தத்தில்தான் கடவுள் சிருஷ்டியை ‘மாயைக்குக் கீழ்ப்படுத்தினார்.’—5/1, பக்கம் 5.
◻ அந்த ‘அருவருப்பு,’ ‘பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பது’ எதிர்காலத்தில் நடக்கவிருக்கிறதென்று சொல்வது ஏன் நியாயமாக இருக்கிறது? (மத்தேயு 24:15)
அந்தப் பூர்வ மாதிரியில், ‘பாழாக்கும் அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பது,’ பொ.ச. 66-ல் தளபதி கேலஸின் தலைமையில் ரோமர்கள் தாக்கியதோடு இணைக்கப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு தற்கால இணைசம்பவமாகிய, மிகுந்த உபத்திரவத்தின் திடீர் தொடக்கம், எதிர்காலத்தில் நடக்கவிருக்கிறது. (மத்தேயு 24:21) ஆகவே, அந்தப் ‘பாழாக்குகிற அருவருப்பு’ பரிசுத்த ஸ்தலத்தில் இனிமேல்தான் நிற்கப்போகிறது என அத்தாட்சி காட்டுகிறது.—5/1, பக்கங்கள் 16, 17.
◻ வேலைக்குப் போகும் தாய்மாரும் தகப்பன்மாரும் தங்கள் பிள்ளைகளோடு இருக்க எவ்வாறு நேரத்தைக் கண்டுபிடிக்கலாம்?
வேலைக்குப் போய் நாள்முழுக்க கஷ்டப்பட்டு களைத்துப்போன தாய், தன்னோடு சாப்பாடு தயாரிப்பதில் கூடமாட ஒத்தாசை செய்ய பிள்ளைகளிடம் கேட்கலாம். சனி ஞாயிற்றுக் கிழமைகளில் செய்யவேண்டிய வேலைகளின் ஒரு பெரிய பட்டியல் உள்ள அப்பா, இந்த வேலைகளில் சிலவற்றை தன் பிள்ளைகளோடு சேர்ந்து செய்யலாம்.—5/15, பக்கம் 6.
◻‘யெகோவாவின் வழியில் நடப்பவர்கள்’ என்ன செய்ய வேண்டும்? (எரேமியா 7:23)
யெகோவாவின் வழியில் நடப்பது உண்மைப் பற்றுறுதியை—அவரை மாத்திரமே சேவிக்க வேண்டும் என்ற திடதீர்மானத்தை—தேவைப்படுத்துகிறது. அது நம்பிக்கையை—யெகோவாவின் வாக்குறுதிகள் நம்பத்தக்கவை, அது நிச்சயமாக நிறைவேறும் என்ற முழு விசுவாசத்தை—தேவைப்படுத்துகிறது. யெகோவாவின் வழியில் நடப்பது கீழ்ப்படிதலை—வழிவிலகாமல் அவருடைய சட்டங்களை பின்பற்றுவதை, அவருடைய உயர்ந்த தராதரங்களைக் கடைப்பிடிப்பதை—தேவைப்படுத்துகிறது. (சங்கீதம் 11:7)—5/15, பக்கம் 14.
◻ ‘மனித வடிவில் வரங்கள்’ நிறைவேற்றக்கூடிய நான்கு முக்கிய பொறுப்புகள் யாவை?
(எபேசியர் 4:8) அவர்கள் நம்மை மென்மையோடு சீர்பொருந்தப் பண்ணலாம், அன்போடு நம்மைக் கட்டியெழுப்பலாம், சபையோடு ஒற்றுமையாயிருக்க நமக்கு உதவலாம், தைரியத்தோடு நம்மைப் பாதுகாக்கலாம். (எபேசியர் 4:12-15)—6/1, பக்கம் 14.
◻ அப்போஸ்தலர் புத்தகத்திலும் பவுலின் கடிதங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் சுமார் நூறு தனி நபர்களோடு பவுல் கூட்டுறவு வைத்திருந்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
கடவுளுடைய அமைப்பு, உள்ளூர் சபை, நம் உடன் விசுவாசிகள் ஆகியோருடன் நாம் எப்போதும் சேர்ந்தே செயல்பட வேண்டும். சந்தோஷமான சமயங்களிலும் வேதனையான சமயங்களிலும் அவர்களுடைய உதவியும் ஆதரவும் ஆறுதலும் நமக்கு தேவை.—6/1, பக்கம் 31.
◻சிருஷ்டிகரைப் பற்றி சிந்திக்க மற்றவர்களுக்கு உதவ என்ன மூன்று நியாயவிவாதங்களை உபயோகிக்கலாம்?
இந்த மாபெரும் அண்டத்தில் காணப்படும் மிகத் துல்லியமான ஒத்திசைவு, பூமியில் உயிரின் தோற்றம், மேலும் பல்வேறுபட்ட திறமைகளையுடைய மனித மூளையின் மறுக்க முடியாத தனித்தன்மைகள்.—6/15, பக்கம் 18.
◻படைப்பாளரின் தனிப்பட்ட பெயரின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது ஏன் அவ்வளவு முக்கியமானது?
கடவுளுடைய பெயர், அவர் “ஆகும்படி செய்கிறவர்” என்பதை சுட்டிக்காட்டுகிறது. அவர் நோக்கமுள்ளவர், செயல்படுகிறவர் என்பதையும் இது வலியுறுத்துகிறது. அவருடைய பெயரை அறிந்து அதைப் பயன்படுத்துவதன் மூலம் அவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுகிறவர், தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற சுறுசுறுப்பாக செயல்படுகிறவர் என்பதை நாம் நன்கு அறிந்துகொள்ளலாம்.—6/15, பக்கம் 21.
குடும்ப பைபிள் படிப்பில் பிள்ளைகளையும் எவ்வாறு ஈடுபடுத்தலாம்?
முடிந்தால், ஒவ்வொரு பிள்ளைக்கும் சொந்தமாக ஒரு பைபிளையும் பிரசுரத்தையும் கொடுங்கள். படிப்புக் கட்டுரையில் இருக்கும் படத்தை ஒரு வாலிபப் பிள்ளை விளக்கும்படி சொல்லலாம். சிறு பிள்ளையாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட வசனத்தை வாசிக்கும்படி முன்னதாகவே சொல்லி விடலாம். பெரிய பிள்ளையாக இருந்தால், படிப்புக் கட்டுரையை வாழ்க்கையில் பொருத்துவதற்கான சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்டும்படி சொல்லலாம்.—7/1, பக்கம் 15.
◻ஒரு குடும்பம் சபை கூட்டங்களுக்காக தயாரிக்கையில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில திட்டங்கள் யாவை?
(1) சபை கூட்டங்களில் பதில் சொல்வதற்கு குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் தயாராகுதல்; (2) தங்களுடைய சொந்த வார்த்தையில் பதில் சொல்வதற்கு ஒவ்வொருவரும் முயற்சி செய்தல்; (3) வசனங்களை உபயோகித்து பதில் சொல்லுதல்; (4) தனிப்பட்ட வாழ்க்கையில் பொருத்தும் நோக்கத்தோடு கட்டுரையை ஆராய்தல்.—7/1, பக்கம் 20.
◻ நல்ல குடும்பத்திற்கு ஒரு திறவுகோல் என்ன?
நல்ல குடும்பம் என்ற பெட்டகத்தை நல்ல பேச்சு பரிமாற்றம் என்ற சாவியைப் போட்டு திறந்தால், அதில் தாம்பத்தியத்தின் பொன்னான தருணங்களை அனுபவித்து மகிழ முடியும். இது உணர்வுகளையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்வதை உட்படுத்துகிறது. அப்படியென்றால் மனம்விட்டு பேசும்போது ஊக்கம்தரும், புத்துணர்ச்சியளிக்கும், மகிழ்ச்சியளிக்கும் நல்ல விஷயங்களையும், பாராட்டுக்குரிய, ஆறுதல் அளிக்கும் விஷயங்களையும் பரிமாற வேண்டும். (எபேசியர் 4:29-32; பிலிப்பியர் 4:8)—7/15, பக்கம் 21.
◻‘யெகோவாவின் வழி’ என்றால் என்ன? (சங்கீதம் 25:8, 9, 12)
அந்த வழி அன்பின் வழி. கடவுளுடைய தராதரங்களின்படி சரியானதைச் செய்வதில் அது சார்ந்திருக்கிறது. நியமத்திற்குள்ளான இந்த அன்பின் வெளிக்காட்டை “அதிக மேன்மையான வழி” என்று பைபிள் அழைக்கிறது. (1 கொரிந்தியர் 12:31)—8/1, பக்கம் 12.