கடவுளுடைய வசனம் உங்கள் பாதைக்கு வெளிச்சமாயிருப்பதாக
‘உம்முடைய வசனம் . . . என் பாதைக்கு வெளிச்சமாயிருக்கிறது.’—சங்கீதம் 119:105.
1, 2. எத்தகைய சூழ்நிலையில் யெகோவாவின் வசனம் நம் பாதைக்கு வெளிச்சம் தரும்?
நாம் அனுமதித்தால் யெகோவாவின் வசனம் நம்முடைய பாதைக்கு வெளிச்சமாயிருக்கும். இத்தகைய ஆன்மீக வெளிச்சத்திலிருந்து பயனடைவதற்கு, கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாய் படிப்பவர்களாகவும் அதிலுள்ள அறிவுரைகளைப் பின்பற்றுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” என்று சொன்ன சங்கீதக்காரனுடைய மனோபாவத்தை பிரதிபலிப்பவர்களாக இருப்போம்.—சங்கீதம் 119:105.
2 இப்பொழுது, சங்கீதம் 119:89-176-ஐ நாம் சிந்திக்கலாம். 11 செய்யுள்களாக அமைக்கப்பட்ட இந்த வசனங்களில் எவ்வளவு தகவல்கள் நிறைந்துள்ளன! நித்திய ஜீவ பாதையில் நிலைத்திருக்க அவை நமக்கு உதவி செய்யும்.—மத்தேயு 7:13, 14.
கடவுளுடைய வசனத்தில் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்?
3. கடவுளுடைய வார்த்தையை நாம் நம்பலாம் என்பதை சங்கீதம் 119:89, 90 எவ்வாறு காட்டுகிறது?
3 யெகோவாவுடைய வசனத்தில் ஆர்வம் காட்டுவது ஆன்மீக ரீதியில் ஸ்திரமாக இருப்பதற்கு உதவுகிறது. (சங்கீதம் 119:89-96) சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது. . . . பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது.” (சங்கீதம் 119:89, 90) கடவுளுடைய வசனத்தின் காரணமாக, அதாவது ‘வானத்து நியமங்களின்’ காரணமாக, கிரகங்கள் அனைத்தும் அச்சுப்பிசகாமல் அதன் பாதைகளில் சுற்றிவருகின்றன, பூமியும் என்றென்றும் உறுதியாக நிலைத்திருக்கிறது. (யோபு 38:31-33; சங்கீதம் 104:5) யெகோவாவின் வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையையும் நாம் நம்பலாம்; கடவுள் தமது நோக்கத்தை நிறைவேற்ற என்ன சொல்கிறாரோ அது ‘நிச்சயம் நிறைவேறும்.’—ஏசாயா 55:8-11.
4. கடவுளுடைய வார்த்தையை நேசிப்பது துன்பப்படுகிற அவருடைய ஊழியர்களுக்கு என்ன செய்யும்?
4 சங்கீதக்காரன் ‘கடவுளுடைய சட்டத்தில் இன்பமாக இல்லாதிருந்தால்,’ அவர் ‘தன் துன்பத்திலே’ அழிந்து போயிருப்பார்.’ (சங்கீதம் 119:92, NW) அவர் அந்நியரால் துன்புறுத்தப்படவில்லை; சட்டத்தை மீறிய இஸ்ரவேலரால் பகைக்கப்பட்டார். (லேவியராகமம் 19:17) ஆனால் இது அவரை துக்கத்தில் ஆழ்த்திவிடவில்லை, ஏனென்றால் தன்னை தாங்கி வழிநடத்திய கடவுளுடைய சட்டத்தை அவர் நேசித்தார். அப்போஸ்தலன் பவுல் கொரிந்துவில் இருந்தபோது, ‘கள்ளச் சகோதரரிடத்தில் உண்டான மோசங்களாலும்’ ஒருவேளை அவருக்கு எதிராக குற்றம்சாட்டிய ‘கள்ள அப்போஸ்தலர்களாலும்’ அவதிப்பட்டார். (2 கொரிந்தியர் 11:5, 12-14, 26) என்றாலும், ஆன்மீக ரீதியில் உயிர் பிழைத்தார், ஏனென்றால் கடவுளுடைய வசனத்தை அவர் மிகவும் நேசித்தார். நாமும் யெகோவாவின் வார்த்தையை நேசித்து அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம் நம்முடைய சகோதரர்களை நேசிக்கிறோம். (1 யோவான் 3:15) இவ்வுலகம் நம்மை பகைத்தாலும்கூட கடவுளுடைய போதனைகளை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். நித்திய காலமாய் யெகோவாவின் சேவையில் மகிழ்ச்சியை எதிர்நோக்கியவாறு நம் சகோதரர்களுடன் சேர்ந்து அன்போடும் ஐக்கியத்தோடும் அவருடைய சித்தத்தை தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்.—சங்கீதம் 119:93.
5. அரசனான ஆசா எவ்வாறு யெகோவாவை தேடினார்?
5 யெகோவாவுக்கு நமது பக்தியை வெளிக்காட்டி, “நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்” என்று ஜெபிக்கலாம். (சங்கீதம் 119:94) அரசனான ஆசா கடவுளைத் தேடினார், அதனால் யூதாவிலிருந்து விசுவாச துரோகத்தை பூண்டோடு அழித்தார். ஆசாவுடைய ஆட்சி காலத்தின் 15-ம் ஆண்டில் யூதாவின் குடிகள் திரளாக ஒன்றுகூடி, ‘யெகோவாவைத் தேடி உடன்படிக்கை செய்தார்கள்.’ ‘கடவுள் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப் பண்ணினார்.’ (2 நாளாகமம் 15:10-15) கிறிஸ்தவ சபையைவிட்டு படிப்படியாக விலகிப்போன எவரும் கடவுளை மீண்டும் தேடுவதற்கு இந்த உதாரணம் அவர்களை உந்துவிக்க வேண்டும். தமது மக்களுடன் மறுபடியும் கூட்டுறவு கொள்கிறவர்களை அவர் ஆசீர்வதித்துப் பாதுகாப்பார்.
6. எத்தகைய செயல் ஆன்மீக தீங்கிலிருந்து நம்மை பாதுகாக்கும்?
6 யெகோவாவின் வசனம் ஞானத்தை அருளுகிறது, அது ஆன்மீக தீங்கிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. (சங்கீதம் 119:97-104) கடவுளுடைய கட்டளைகள் நம் எதிரிகளைவிட நம்மை ஞானமுள்ளவர்களாய் ஆக்குகின்றன. அவருடைய நினைப்பூட்டுதல்களுக்குச் செவிசாய்ப்பது நமக்கு உட்பார்வையைத் தருகிறது, அவருடைய ‘கட்டளைகளைக் கைக்கொள்வது முதியோர்களைப் பார்க்கிலும் நம்மை ஞானமுள்ளவர்களாய் ஆக்குகிறது.’ (சங்கீதம் 119:98-100) யெகோவாவின் வார்த்தைகள் ‘நம் நாவுக்குத் தேனிலும் மதுரமாயிருந்தால், எல்லா பொய் வழிகளையும்’ வெறுத்து அவற்றை தவிர்ப்போம். (சங்கீதம் 119:103, 104) இந்தக் கடைசி நாட்களில், அகந்தையுள்ளவர்களையும் கொடுமையுள்ளவர்களையும் தேவபக்தியற்றவர்களையும் நாம் எதிர்ப்படுவதால் நமக்கு உண்டாகும் ஆன்மீக தீங்கிலிருந்து இது நம்மை பாதுகாக்கும்.—2 தீமோத்தேயு 3:1-5.
நமது கால்களுக்குத் தீபம்
7, 8. சங்கீதம் 119:105-க்கு இசைவாக நடப்பதற்கு, நாம் என்ன செய்ய வேண்டும்?
7 கடவுளுடைய வசனம் தவறாமல் தொடர்ந்து வரும் ஆன்மீக ஒளியின் ஊற்றாய் விளங்குகிறது. (சங்கீதம் 119:105-112) நாம் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களாக இருந்தாலும்சரி ‘திரள் கூட்டத்தைச்’ சேர்ந்த அவர்களுடைய தோழர்களாக இருந்தாலும்சரி, “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” என்று அறிவிக்கிறோம். (யோவான் 10:16; சங்கீதம் 119:105) கடவுளுடைய வசனம் நம் பாதைக்கு வெளிச்சம் தரும் விளக்கு போல இருக்கிறது, இதனால் நாம் ஆன்மீக ரீதியில் இடறுவதுமில்லை கீழே விழுவதுமில்லை. (நீதிமொழிகள் 6:23) என்றாலும், யெகோவாவின் வசனம் தனிப்பட்ட விதமாக நம்முடைய கால்களுக்குத் தீபமாக இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.
8 சங்கீதம் 119-ஐ இயற்றியவரைப் போல நாம் உறுதியாக இருக்க வேண்டும். கடவுளுடைய கட்டளைகளை விட்டுவிலகாதிருக்க அவர் திடத்தீர்மானமாய் இருந்தார். “உம்முடைய [யெகோவாவுடைய] நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்” என்று அவர் கூறினார். (சங்கீதம் 119:106) தவறாமல் பைபிள் படிப்பதையும் கிறிஸ்தவ கூட்டங்களில் பங்குகொள்வதன் மதிப்பையும் ஒருபோதும் குறைவாக எடை போடாதிருப்போமாக.
9, 10. யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள் ‘அவருடைய கட்டளைகளைவிட்டு வழிதவற’ முடியும் என்பது நமக்கு எப்படி தெரியும், ஆனால் இதை எப்படி தவிர்க்கலாம்?
9 சங்கீதக்காரன் ‘கடவுளுடைய கட்டளைகளைவிட்டு வழி தவறவில்லை,’ ஆனால் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஒருவருக்கு அது சம்பவிக்கலாம். (சங்கீதம் 119:110) சாலோமோன் ராஜா யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த தேசத்தின் ஓர் அங்கத்தினராகவும், கடவுள் தந்த ஞானத்திற்கு இசைவாக செயல்படுகிறவராகவும் ஆரம்பத்தில் இருந்தபோதிலும் வழிதவறிப் போனார். பொய்க் கடவுட்களை வழிபடத் தூண்டுவதன் மூலம், ‘அப்படிப்பட்டவரையும் மறு ஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப் பண்ணினார்களே.’—நெகேமியா 13:26; 1 இராஜாக்கள் 11:1-6.
10 ‘வேடனாகிய’ சாத்தான் அநேக கண்ணிகளை வைக்கிறான். (சங்கீதம் 91:3) உதாரணமாக, ஆன்மீக ஒளி தரும் பாதையை விட்டுவிட்டு விசுவாச துரோகம் எனும் இருளுக்குள் வழிவிலகிப் போவதற்கு முன்னாள் நண்பர் ஒருவர் நம்மை தூண்டலாம். தியத்தீரா சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் மத்தியில், “யேசபேல் என்னும் ஸ்திரீ” இருந்தாள்; விக்கிரகாராதனை பழக்கத்திற்கும் வேசித்தனத்தில் ஈடுபடுவதற்கும் மற்றவர்களுக்குக் கற்பித்த பெண்களின் கூட்டத்தை இவள் அடையாளப்படுத்தியிருக்கலாம். இத்தகைய கெட்ட செயல்களை இயேசு பொறுத்துக்கொள்ளவில்லை, அது போலவே நாமும் பொறுத்துக்கொள்ளக் கூடாது. (வெளிப்படுத்துதல் 2:18-22; யூதா 3, 4) ஆகவே, யெகோவாவின் கட்டளைகளை விட்டுவிலகாமல் தெய்வீக ஒளியில் தொடர்ந்து நடப்பதற்கு உதவிக்காக அவரிடம் ஜெபிப்போமாக.—சங்கீதம் 119:111, 112.
கடவுளுடைய வசனத்தால் தாங்கி ஆதரிக்கப்படுதல்
11. சங்கீதம் 119:119-ன்படி, பொல்லாதவர்களை கடவுள் எப்படி கருதுகிறார்?
11 கடவுளுடைய பிரமாணங்களிலிருந்து நாம் ஒருபோதும் வழிவிலகாமல் இருந்தால், கடவுள் நம்மை ஆதரிப்பார். (சங்கீதம் 119:113-120) இன்றைக்கு கிறிஸ்தவர்களென சொல்லிக்கொண்டு வெதுவெதுப்பாக இருப்பவர்களை, அதாவது ‘அரைமனதுடன்’ இருப்பவர்களை இயேசு ஏற்காதது போலவே நாமும் ஏற்பதில்லை. (சங்கீதம் 119:113, NW; வெளிப்படுத்துதல் 3:16) நாம் யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்வதால், அவர் நமக்கு ‘மறைவிடமாக’ திகழ்கிறார், நம்மை ஆதரிப்பார். வஞ்சகத்தையும் பொய்யையும் நாடி, அவருடைய ‘பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துப் போடுவார்.’ (சங்கீதம் 119:114, 117, 118; நீதிமொழிகள் 3:32) அத்தகைய பொல்லாதவர்களைக் ‘களிம்பைப் போல்,’ அதாவது விலையேறப்பெற்ற உலோகங்களான பொன், வெள்ளி போன்றவற்றிலிருந்து நீக்கப்படும் கசடுகளைப் போல் அவர் கருதுகிறார். (சங்கீதம் 119:119; நீதிமொழிகள் 17:3) கடவுளுடைய நினைப்பூட்டுதல்களை நாம் எப்போதும் நேசிப்போமாக, ஏனென்றால் அப்புறப்படுத்துவதற்காக குவித்து வைக்கப்படும் கசடுகளைப் போலிருக்கும் பொல்லாதவர்களோடு சேர நாம் நிச்சயமாகவே விரும்புகிறதில்லை!
12. யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் ஏன் முக்கியம்?
12 “உம்மீது கொண்டுள்ள அச்சத்தால் என் உடல் சிலிர்க்கின்றது” என்று சங்கீதக்காரன் கூறினார். (சங்கீதம் 119:120, பொது மொழிபெயர்ப்பு) கடவுள் நம்மை அவருடைய ஊழியர்களாக ஆதரிக்க வேண்டுமானால், அவருக்கு பிரியமில்லாதவற்றை தவிர்த்து அவர் மீது ஆரோக்கியமான பயத்தைக் கொண்டிருப்பது இன்றியமையாதது. யெகோவா மீது வைத்திருந்த பயபக்தியே நீதியுள்ள வாழ்க்கையை நடத்த யோபுவை உந்துவித்தது. (யோபு 1:1, 23:15) நாம் எதை சகிக்க வேண்டியதாக இருந்தாலும்சரி, தேவ பயம் கடவுளுடைய தயவை அடைய உதவும் பாதையில் செல்ல நமக்குத் துணைபுரியும். என்றாலும், சகிப்புத்தன்மையுடன் நிலைத்திருக்க விசுவாசத்தோடு ஊக்கமாய் ஜெபிப்பது அவசியம்.—யாக்கோபு 5:15.
விசுவாசத்துடன் ஜெபியுங்கள்
13-15. (அ) நம் ஜெபங்கள் பதிலளிக்கப்படும் என்று நாம் ஏன் விசுவாசத்துடன் இருக்கலாம்? (ஆ) ஜெபத்தில் நாம் என்ன சொல்வதென்று தெரியாதிருந்தால் என்ன நடக்கலாம்? (இ) சங்கீதம் 119:121-128, நம் ‘வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு’ எப்படி தொடர்புடையதாக இருக்கலாம் என்பதை விளக்குங்கள்.
13 நம் சார்பாக கடவுள் செயல்படுவார் என்ற விசுவாசத்துடன் நாம் ஜெபிக்கலாம். (சங்கீதம் 119:121-128) சங்கீதக்காரனைப் போல், நமது ஜெபங்கள் பதிலளிக்கப்படும் என்று நாம் நிச்சயமாய் இருக்கிறோம். ஏன்? ஏனென்றால் கடவுளுடைய கட்டளைகளைப் “பொன்னிலும் பசும் பொன்னிலும் அதிகமாய்” நேசிக்கிறோம். மேலும், ‘எல்லாவற்றைப் பற்றியும் கடவுள் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று’ நாம் கருதுகிறோம்.—சங்கீதம் 119:127, 128.
14 விசுவாசத்துடன் ஜெபிப்பதாலும் யெகோவாவின் கட்டளைகளைக் கவனமாய் பின்பற்றுவதாலும் அவர் நம் வேண்டுதல்களுக்குச் செவிசாய்க்கிறார். (சங்கீதம் 65:2) ஆனால் சில சமயங்களில் பிரச்சினைகளால் மனம் குழம்பிப் போயிருக்கும்போது ஜெபத்தில் என்ன சொல்வதென்றே தெரியாதிருந்தால் என்ன செய்வது? அப்போது ‘ஆவிதானே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறது.’ (ரோமர் 8:26, 27) அப்படிப்பட்ட சமயங்களில், கடவுள் தமது வார்த்தையிலுள்ள ஜெபங்களை நம் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் ஜெபங்களாக ஏற்றுக்கொள்கிறார்.
15 நமது ‘வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு’ சம்பந்தப்பட்ட ஜெபங்களும் எண்ணங்களும் வேதவசனங்களில் உள்ளன. உதாரணமாக, சங்கீதம் 119:121-128-ஐ கவனியுங்கள். இங்கு விவரிக்கப்படும் விஷயங்கள் நம் சூழ்நிலைகளுக்குப் பொருந்தலாம். உதாரணமாக, நாம் வஞ்சிக்கப்படுவோம் என்று பயந்தால், சங்கீதக்காரன் செய்தது போல் கடவுளுடைய உதவிக்காக நாம் கேட்கலாம். (வசனங்கள் 121-123) மிகக் கஷ்டமான ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டியிருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது, யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை ஞாபகப்படுத்தி அவற்றை பின்பற்றுவதற்கு அவருடைய ஆவி நமக்கு உதவி செய்யும்படி நாம் ஜெபிக்கலாம். (வசனங்கள் 124, 125) ‘சகல பொய் வழிகளையும் நாம் வெறுக்கிறபோதிலும்’ கடவுளுடைய கட்டளையை மீறுவதற்கான ஏதோ சோதனைக்கு நாம் விட்டுக் கொடுத்துவிடாதிருக்க நமக்கு உதவி செய்யும்படி கடவுளை நாம் கேட்க வேண்டியிருக்கலாம். (வசனங்கள் 126-128) நாள்தோறும் பைபிள் வாசித்துவந்தால், நாம் யெகோவாவை வேண்டிக் கொள்ளும்போது இது போன்ற உதவியளிக்கும் பகுதிகள் நம்முடைய மனதிற்கு வரலாம்.
யெகோவாவின் நினைப்பூட்டுதல்களால் வரும் உதவி
16, 17. கடவுளுடைய நினைப்பூட்டுதல்கள் நமக்கு ஏன் தேவை, அவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்? (ஆ) மற்றவர்கள் நம்மை எவ்வாறு நோக்கலாம், ஆனால் எது உண்மையில் முக்கியம்?
16 கடவுள் நம்முடைய ஜெபங்களைக் கேட்பதற்கும் நாம் அவருடைய தயவை அனுபவிப்பதற்கும் விரும்பினால், அவருடைய நினைப்பூட்டுதல்களுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். (சங்கீதம் 119:129-136) நமக்கு ஞாபக மறதி ஏற்படுவதால், யெகோவாவின் அதிசயமான நினைப்பூட்டுதல்கள் நமக்குத் தேவை; அவை அவரது போதனைகளையும் கட்டளைகளையும் நம் மனதிற்குத் திரும்பவும் கொண்டுவரும். நிச்சயமாகவே, கடவுளுடைய வார்த்தையிலுள்ள புதுப் புது விஷயங்கள் வெளிப்படுத்தப்படுவதன் மூலம் கிடைக்கும் ஆன்மீக ஒளிக்காக நாம் நன்றியுடன் இருக்கிறோம். (சங்கீதம் 119:129, 130) மற்றவர்கள் கடவுளுடைய பிரமாணத்தை மீறுவதை பார்க்கையில், நம் ‘கண்களிலிருந்து நீர் தாரைகளாக ஓடுகிறது;’ என்றாலும், நம்மை ஏற்றுக்கொள்ளும் விதமாக யெகோவா தமது ‘முகத்தை நம்மீது பிரகாசிக்கச் செய்திருப்பதால்’ நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.—சங்கீதம் 119:135, 136; எண்ணாகமம் 6:25.
17 கடவுளுடைய நீதியுள்ள நினைப்பூட்டுதல்களுக்கு இசைவாக செயல்பட்டால் அவருடைய தயவு நிச்சயம் நமக்கு கிடைக்கும். (சங்கீதம் 119:137-144) யெகோவா தமது நீதியுள்ள நினைப்பூட்டுதல்களை நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவருவதற்கும், அந்தக் கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படியும்படி எதிர்பார்ப்பதற்கும் அவருக்கு உரிமை இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். (சங்கீதம் 119:138) சங்கீதக்காரன் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தபோதிலும், “நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்” என்று ஏன் சொன்னார்? (சங்கீதம் 119:141) அவருடைய சத்துருக்கள் அவரை நோக்கிய விதத்தை அவர் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. நீதிக்கான நம் நிலைநிற்கையை விடாமல் காத்துவந்தால், மற்றவர்கள் நம்மை தாழ்வாக நினைக்கலாம். என்றாலும், யெகோவாவின் நீதியுள்ள நினைப்பூட்டுதல்களுக்கு இசைய நாம் வாழ்வதால், அவர் நம்மை தயவுடன் நோக்குகிறார் என்பதே உண்மையில் முக்கியம்.
பாதுகாப்பாயும் சமாதானமாயும் இருத்தல்
18, 19. கடவுளுடைய நினைப்பூட்டுதல்களைக் கைக்கொள்வதால் வரும் பலன் என்ன?
18 கடவுளுடைய நினைப்பூட்டுதல்களைக் கைக்கொள்வது நம்மை அவரிடம் நெருங்கிவரச் செய்கிறது. (சங்கீதம் 119:145-152) யெகோவாவின் நினைப்பூட்டுதல்களுக்கு நாம் கவனம் செலுத்துவதால், நாம் அவரிடம் முழு இருதயத்தோடு வேண்டிக்கொள்ள முடியுமென்ற உணர்வு நமக்கு உண்டாகிறது. நம்முடைய மன்றாட்டிற்கு செவிகொடுப்பார் என்றும் நாம் எதிர்பார்க்கலாம். நாம் ‘அதிகாலையில் எழுந்து’ உதவிக்காக கேட்கலாம். ஜெபிப்பதற்கு அது எவ்வளவு அருமையான நேரம்! (சங்கீதம் 119,145-147) கடவுள் நம் அருகில் இருக்கிறார் என்றும் நம்மால் சொல்ல முடியும்; ஏனென்றால் ஒழுக்கக்கேடான நடத்தையை நாம் தவிர்க்கிறோம், இயேசுவை போல அவருடைய வார்த்தையை சத்தியமாக கருதுகிறோம். (சங்கீதம் 119:150, 151; யோவான் 17:17) யெகோவாவுடன் நாம் கொண்டுள்ள உறவு இந்தத் தொல்லைமிகு உலகில் நம்மை காத்து நடத்துகிறது, மகா அர்மகெதோன் யுத்தத்திலும் நம்மைத் தளராமல் நடத்திச் செல்லும்.—வெளிப்படுத்துதல் 7:9, 14; 16:13-16.
19 கடவுளுடைய வார்த்தை மீது ஆழ்ந்த மதிப்பும் மரியாதையும் நாம் வைத்திருப்பதால், மெய்யான பாதுகாப்பை அனுபவித்து மகிழ்கிறோம். (சங்கீதம் 119:153-160) பொல்லாதவர்களைப் போல, நாம் ‘யெகோவாவின் நினைப்பூட்டுதல்களிலிருந்து வழிவிலகிச் செல்லவில்லை.’ கடவுளுடைய கட்டளைகளை நாம் நேசிக்கிறோம், ஆகையால் அவருடைய அன்புள்ள தயவில் பாதுகாப்பாய் இருக்கிறோம். (சங்கீதம் 119:157-159, NW) ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் நாம் என்ன செய்யும்படி யெகோவா எதிர்பார்க்கிறார் என்பதை ஞாபகப்படுத்துவதற்கு அவருடைய நினைப்பூட்டுதல்கள் நம் நினைவாற்றலை தட்டியெழுப்புகின்றன. மறுபட்சத்தில், கடவுளுடைய கட்டளைகள் வழிநடத்துதல்களாகவும் இருக்கின்றன; ஆகவே நம்மை வழிநடத்த கடவுளுக்கு இருக்கும் உரிமையை நாம் மனமார ஏற்றுக்கொள்கிறோம். ‘கடவுளுடைய வசனமே சத்தியமென்றும்’ நம்முடைய சொந்த நடைகளை நாமே நடத்திக்கொள்ள முடியாதென்றும் நாம் அறிந்திருப்பதால், தெய்வீக வழிநடத்துதலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம்.—சங்கீதம் 119:160; எரேமியா 10:23.
20. நமக்கு ஏன் “மிகுந்த சமாதானமுண்டு”?
20 யெகோவாவின் சட்டத்தை நாம் நேசிப்பதால் நமக்கு மிகுந்த சமாதானம் கிடைக்கிறது. (சங்கீதம் 119:161-168) தன்னிகரற்ற ‘கடவுளுடைய சமாதானத்தை’ துன்புறுத்தல் நம்மிடமிருந்து கொள்ளை கொண்டு போவதில்லை. (பிலிப்பியர் 4:6, 7) யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை நாம் மிகவும் மதிப்பதால், அவற்றிற்காக நாம் அவரை அடிக்கடி—“ஒரு நாளில் ஏழுதரம்”—துதிக்கிறோம். (சங்கீதம் 119:161-164) “உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை” என்று சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 119:165) நாம் ஒவ்வொருவருமே யெகோவாவின் வேதத்தை நேசித்து கைக்கொண்டால், எவர் என்ன செய்தாலும் அல்லது என்ன ஏற்பட்டாலும் ஆன்மீக ரீதியில் நாம் இடறலடைய மாட்டோம்.
21. சபையில் பிரச்சினைகள் எழும்பினால் நாம் இடறலடைய வேண்டியதில்லை என்பதை என்ன வேதப்பூர்வ உதாரணங்கள் காட்டுகின்றன?
21 பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்கள் பலர், எதுவும் தங்களுக்கு நிரந்தர இடறலாக இருப்பதற்கு அனுமதிக்கவில்லை. உதாரணமாக, தியோத்திரேப்பு தேவ பக்தியற்ற விதமாக நடந்து கொண்டபோதிலும், கிறிஸ்தவரான காயு இடறலடையாமல் ‘சத்தியத்தில் நடந்து கொண்டிருந்தார்.’ (3 யோவான் 1-3, 9, 10) ‘கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க’ எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் பவுல் புத்திமதி கூறினார்; அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சினைகள் எழும்பியதால் அவர் புத்திமதி கொடுத்திருக்கலாம். அவர்கள் தங்கள் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள உதவி அளிக்கப்பட்டார்கள் என்றும், தொடர்ந்து உண்மையுடன் யெகோவாவுக்கு சேவை செய்தார்கள் என்றும் தெரிகிறது. (பிலிப்பியர் 4:2, 3) ஆகையால், சபைக்குள் ஏதாவது பிரச்சினை எழுந்தால், நாம் இடறலடைய வேண்டியதில்லை. ‘நம் வழிகளெல்லாம் யெகோவாவுக்கு முன் இருக்கின்றன’ என்பதை நினைவில் வைத்து யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொள்வதில் நம் மனதை ஒருமுகப்படுத்துவோமாக. (சங்கீதம் 119:168; நீதிமொழிகள் 15:3) அப்போது எதுவும் நம்முடைய ‘மிகுந்த சமாதானத்தை’ நிரந்தரமாக கொள்ளை கொண்டு போகாது.
22. (அ) நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால், என்ன பாக்கியத்தை அனுபவிக்கலாம்? (ஆ) கிறிஸ்தவ சபையை விட்டுவிலகி அலையும் சிலரை நாம் எப்படி கருத வேண்டும்?
22 நாம் யெகோவாவுக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடந்தால், தொடர்ந்து அவரை துதிக்கும் பாக்கியம் நமக்கு கிடைக்கும். (சங்கீதம் 119:169-176) கடவுளுடைய கட்டளைகளுக்கு இசைவாக வாழ்வதன் மூலம் ஆன்மீக பாதுகாப்பை அனுபவித்து மகிழலாம். அது மட்டுமல்லாமல், ‘நம் உதடுகள் யெகோவாவுக்குத் துதியைத் தொடர்ந்து பிரஸ்தாபப்படுத்தும்.’ (சங்கீதம் 119:169-171, 174) இதுவே இந்தக் கடைசி நாட்களில் நமக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய பாக்கியம். என்றென்றும் உயிர்வாழ்ந்து யெகோவாவைத் துதிக்கும்படி சங்கீதக்காரன் விரும்பினார், ஆனால் ஏதோவொரு விதத்தில், ‘காணாமற்போன செம்மறியாட்டைப் போல்’ அவர் அலைந்து திரிந்திருந்திருந்தார். (சங்கீதம் 119:175, 176) கிறிஸ்தவ சபையை விட்டு அலைந்து திரிந்த சிலர், கடவுளை இன்னும் நேசிக்கக்கூடும், அவரைத் துதிக்கவும் விரும்பக்கூடும். ஆகையால் அவர்கள் மறுபடியும் ஆன்மீக பாதுகாப்பைக் கண்டடைந்து, யெகோவாவை அவருடைய ஜனங்களோடுகூட துதிக்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கு நம்மால் இயன்ற அனைத்து உதவியையும் அவர்களுக்குச் செய்வோமாக.—எபிரெயர் 13:15; 1 பேதுரு 5:6, 7.
நம் பாதைக்கு நிரந்தர வெளிச்சம்
23, 24. சங்கீதம் 119-லிருந்து என்ன நன்மைகளைப் பெற்றீர்கள்?
23 சங்கீதம் 119 பல்வேறு வழிகளில் நமக்குப் பயன் தரலாம். உதாரணமாக, கடவுளையே அதிகமாக சார்ந்திருப்பதற்கு அது நமக்கு உதவலாம். எப்படியெனில், ‘யெகோவாவின் பிரமாணத்திலே நடப்பதிலிருந்து’ உண்மையான சந்தோஷம் உண்டாகிறதென அது காட்டுகிறது. (சங்கீதம் 119:1) ‘கடவுளுடைய வசனமே சத்தியம்’ என்று சங்கீதக்காரன் நமக்கு நினைப்பூட்டுகிறார். (சங்கீதம் 119:160) இது நிச்சயமாகவே, கடவுளுடைய வார்த்தை முழுவதன் மீதும் நம் நன்றியுணர்வை பெருகச் செய்ய வேண்டும். சங்கீதம் 119-ஐ ஆழ்ந்து சிந்தனை செய்வது, வேதவசனங்களை ஊக்கமாய் படிப்பதற்கு நம்மை உந்துவிக்க வேண்டும். “உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்” என்று கடவுளிடம் சங்கீதக்காரன் மறுபடியும் மறுபடியுமாக மன்றாடினார். (சங்கீதம் 119:12, 68, 135) மேலும், “உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின் பேரில் விசுவாசமாயிருக்கிறேன்” என்றும் மன்றாடினார். (சங்கீதம் 119:66) இதைப் போன்ற முறையில் நாமும் ஜெபிக்க வேண்டும்.
24 யெகோவாவின் போதனை அவருடன் நெருங்கிய உறவை அனுபவிப்பதற்கு வழிசெய்கிறது. சங்கீதக்காரன் தன்னையே கடவுளுடைய ஊழியன் என மறுபடியும் மறுடியுமாக குறிப்பிடுகிறார். சொல்லப்போனால், “நான் உம்முடையவன்” என்ற மனதைக் கவரும் வார்த்தைகளைக் குறிப்பிட்டு யெகோவாவிடம் பேசுகிறார். (சங்கீதம் 119:17, 65, 94, 122, 125, ரோமர் 14:8) யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக அவருக்குச் சேவை செய்து அவரைத் துதிப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! (சங்கீதம் 119:7) ராஜ்ய பிரஸ்தாபியாக மகிழ்ச்சியுடன் கடவுளுக்கு நீங்கள் சேவை செய்கிறீர்களா? அப்படியானால், எப்போதும் அவருடைய வசனத்தில் நம்பிக்கை வைத்து அதுவே உங்கள் பாதைக்கு வெளிச்சம் தரும்படி அனுமதித்தால், இந்த ஒப்பற்ற வேலையில் யெகோவா உங்களைத் தொடர்ந்து ஆதரித்து ஆசீர்வதிப்பார் என்று உறுதியாக இருக்கலாம்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• நாம் ஏன் கடவுளுடைய வசனத்தை நேசிப்போராக இருக்க வேண்டும்?
• கடவுளுடைய வசனத்தால் நாம் எவ்வாறு ஆதரிக்கப்படுகிறோம்?
• எவ்விதங்களில் நாம் யெகோவாவின் நினைப்பூட்டுதல்களால் உதவி செய்யப்படுகிறோம்?
• யெகோவாவின் ஜனங்கள் ஏன் பாதுகாப்பாகவும் சமாதானமாகவும் இருக்கிறார்கள்?
[பக்கம் 16-ன் படம்]
கடவுளுடைய வசனம் ஆன்மீக ஒளியின் ஊற்றாக விளங்குகிறது
[பக்கம் 17-ன் படம்]
யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை நாம் நேசித்தால், அவர் நம்மை ‘களிம்பைப் போல்’ ஒருபோதும் கருதமாட்டார்
[பக்கம் 18-ன் படம்]
தினந்தோறும் பைபிளை வாசித்தால், நாம் ஜெபிக்கும்போது உதவியளிக்கும் பகுதிகள் எளிதில் நம்முடைய மனதிற்கு வரும்