கடவுள்—சூதாட்டக்காரரா படைப்பாளரா?
“அநேக அறிவியலாளர்கள் மறைபொருள் சம்பந்தமாக மட்டுமல்ல தெய்வீக சம்பந்தமான எந்த விவாதங்களையும் அவர்களது மனப்பாங்குக்கேற்ப எதிர்க்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை. கடவுள் இருக்கிறார் அல்லது படைப்புக்குப் பின்னால் ஏதோவொரு சக்தியிருக்கிறது . . . என்ற கருத்தைக்கூட அவர்கள் ஏளனம் செய்கின்றனர். தனிப்பட்ட விதமாக அவர்களது ஏளனத்தை நான் ஏற்றுக்கொள்வதில்லை.” இவ்வாறு கடவுளின் மனம் என்ற தனது ஆங்கில புத்தகத்தில் பால் டேவிஸ் என்பவர் சொல்கிறார்; இவர், தென் ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் கணித இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
டேவிஸ் இப்படியும்கூட சொல்கிறார்: “கவனமான ஆராய்ச்சி, இப்பிரபஞ்சத்தின் சட்டங்கள் சிக்கலான பல்வகை உயிரினங்களை உருவாக்குவதற்கு குறிப்பிடத்தக்க விதத்தில் பொருத்தமாய் இருக்கின்றனவென காண்பிக்கிறது. உயிரினங்களைப் பொருத்தவரையில், அவற்றின் வாழ்வு, மிக வியக்கத்தக்கதென சில அறிவியலாளர்களும் தத்துவஞானிகளும் பாராட்டியிருக்கும் அநேக தற்செயலான நிகழ்ச்சிகளின்மீது சார்ந்திருப்பதாய் தோன்றுகிறது.”
அவர் மேலும் கூறுவதாவது: “அறிவியல் ஆராய்ச்சி அறியாத ஊருக்கு மேற்கொள்ளும் பயணம்போல் உள்ளது. . . . ஆனால் இந்த ஆராய்ச்சி முழுவதிலும் நியாயமும் ஒழுங்கும் வியாபித்திருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் ஒழுங்கு, நுண்மையும் இணக்கமும் கலந்த ஐக்கியத்தை உண்டாக்கும்படி ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கும் திட்டவட்டமான கணித சட்டங்களால் ஆதரிக்கப்படுகிறது. அச்சட்டங்களின் தெளிவு நேர்த்தியானது.”
டேவிஸ் இவ்வாறு சொல்வதன்மூலம் முடிக்கிறார்: “பிரபஞ்சத்தின் இயல்பைப் புரிந்துகொள்ளும் திறமையை மனிதகுலம் உண்மையில் ஏன் பெற்றிருக்க வேண்டுமென்பது பெரும் புதிராக இருக்கிறது. . . . நாம் இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்வது வெறுமனே விதியின் விளையாட்டு, சரித்திரத்தின் ஒரு விபத்து, இப்பெரும் அண்ட அமைப்பு நாடகத்தில் ஏற்பட்ட தற்செயலான ஒழுங்கின்மை என சொல்லப்படுவதையெல்லாம் என்னால் நம்ப முடியாது. நமக்கு இப்பிரபஞ்சத்தோடு மிக நெருக்கமான தொடர்பிருக்கிறது. . . . நாம் உண்மையில் இங்கிருப்பதற்காகவே தோன்றியிருக்கிறோம்.” ஆனாலும், வடிவமைப்பாளராகிய கடவுள் இருக்கிறார் என்ற முடிவிற்கு டேவிஸ் வரவில்லை. ஆனால் நீங்கள் என்ன முடிவிற்கு வருகிறீர்கள்? மனிதகுலம் இங்கிருப்பதற்காகவே தோன்றியதா? ஆம் என்றால், நாம் இங்கிருக்க வேண்டுமென நினைத்தது யார்?
‘புதிருக்கு’ விடை
‘பெரும் புதிர்’ என டேவிஸ் அழைப்பதைப் புரிந்துகொள்ள அப்போஸ்தலனாகிய பவுல் பைபிளில் துப்பு கொடுக்கிறார். கடவுள் தம்மை எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என பவுல் காண்பிக்கிறார்: “தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே [“சத்தியத்தை அடக்கிவைக்கிற மனுஷருக்குள்ளே”] வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.” (ரோமர் 1:18-20) a ஆம், எண்ணற்ற வகையைச் சேர்ந்த உயிரினங்களும் நம்புவதற்கரிய அவற்றின் சிக்கலும் அருமையான வடிவமைப்பும், மனிதனது கற்பனைக்கு அப்பாற்பட்ட மேலோங்கிய சக்தி, அறிவுத்திறம் அல்லது மனம் இருப்பதாக மனத்தாழ்மையான, பயபக்தியுள்ள நபர் நம்புவதற்கு உதவ வேண்டும்.—சங்கீதம் 8:3, 4.
கடவுளை ஏற்றுக்கொள்ளாதோருக்கு பவுல் சொல்லும் கூடுதலான வார்த்தைகள் சிந்தனையைத் தூண்டுகின்றன: “அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, . . . தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத்தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.” (ரோமர் 1:22, 25) “இயற்கையை” தொழுது, கடவுளைப் புறக்கணிக்கும் எவரும் யெகோவாவின் பார்வையில் ஞானமில்லாதவர்கள். முரண்படும் பரிணாமக் கொள்கைகளின் சகதியில் சிக்குண்டவர்களாய், அவர்கள் படைப்பாளரையும் அவரது படைப்பின் சிக்கலான தன்மையையும் வடிவமைப்பையும் புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர்.
“தொடர்ச்சியான மாபெரும் விபத்துகள்”
பவுல் இவ்வாறும் எழுதினார்: “விசுவாசமில்லாமல் தேவனுக்குப்பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.” (எபிரெயர் 11:6) ஆதாரமில்லாமலேயே நம்பிவிடுவதற்குப் பதிலாக, திருத்தமான அறிவின் அடிப்படையில் விசுவாசம் வைக்கும்போது நாம் ஏன் வாழ்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள அது நமக்கு உதவும். (கொலோசெயர் 1:9, 10) நிச்சயமாகவே, “பத்து லட்சம் டாலர் மதிப்புள்ள லாட்டரிப்பரிசு தொடர்ச்சியாக பத்து லட்சம் முறை நமக்கு கிடைத்ததுபோல்” உயிர் தோன்றியது என நாம் நம்பவேண்டுமென சில அறிவியலாளர்கள் எதிர்பார்த்தால் அது ஆதாரத்தைக் காட்டாமல் ஏமாற்ற முயற்சிப்பதாய் இருக்கும்.
உயிர் உருவாவதற்கு காரணமாயிருந்த இரண்டு தனிமங்களாகிய கார்பனையும் ஆக்ஸிஜனையும் உண்டாக்கிய அணுக்கரு வினைகள், வெறுமனே குருட்டு அதிர்ஷ்டத்தால்தான் இந்தத் தனிமங்களை ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட அளவுகளில் உண்டாக்கின என்று சொல்லும் கோட்பாட்டை பிரிட்டிஷ் அறிவியலாளரான ஃப்ரெட் ஹாயில் உருவாக்கினார்.
அவர் மற்றுமொரு உதாரணத்தை அளிக்கிறார்: “எலக்ட்ரான் மற்றும் புரோட்டான்களது ஒட்டுமொத்த பொருண்மை நியூட்ரானின் பொருண்மையைக் காட்டிலும் சிறிது குறைவாக இருப்பதற்குப் பதிலாக திடீரென சற்று அதிகமாகிவிட்டால், விளைவு பயங்கரமானதாயிருக்கும். . . . பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள எல்லா ஹைட்ரஜன் அணுக்களும் உடனடியாக சிதைந்து நியூட்ரான்களையும் நியூட்ரினோக்களையும் உண்டாக்கும். அணுக்கரு எரிபொருள் இல்லாததால் சூரியன் மங்கி செயலற்றுப்போகும்.” அதேதான் பிரபஞ்சத்திலுள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்களுக்கும் நிகழும்.
ஹாயில் இவ்வாறு முடிவுசெய்கிறார்: “கார்பன்-சார்ந்த உயிரும், இப்படியாக மனித உயிரும் வாழ்வதற்கு அத்தியாவசியமான உயிரியல் சார்பற்ற விபத்துகளின் . . . பட்டியல் மிகப் பெரியதும் மனங்கவருவதுமாய் உள்ளது.” அவர் இவ்வாறு சொல்கிறார்: “[உயிருக்கு அவசியமான] அப்படிப்பட்ட தன்மைகள் தொடர்ச்சியான யதேச்சை யோகங்களாய் இயற்கை உலகில் பின்னிப்பிணைந்திருக்கின்றன. ஆனால் உயிருக்குத் தேவையான இப்படிப்பட்ட தனித்தன்மைவாய்ந்த எதிர்பாரா சம்பவங்கள் அநேகம் இருப்பதன் காரணமாக அவை இருப்பதற்கான காரணத்தைக் கூற கொஞ்சம் விளக்கம் தேவைப்படுவதாய்த் தோன்றுகிறது.”—நேரெழுத்துக்கள் எங்களுடையவை.
அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டார்: “தற்செயலாய் நிகழ்ந்ததாக கருதப்படும் சரிப்படுத்துதல்கள் உண்மையிலேயே விபத்துக்களா இல்லையா என்பதையும் அதன் காரணமாக உயிர் விபத்தின் விளைவா இல்லையா என்பதையும் தீர்மானிப்பது பிரச்சினையாய் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு கேள்வியை எந்த அறிவியலாளரும் கேட்க விரும்பமாட்டார், ஆனால் இதைக் கேட்டே தீர வேண்டும். சரிப்படுத்துதல்கள் புத்திக்கூர்மையுள்ள ஒருவரால் திட்டமிடப்பட்டு செய்யப்படுகின்றனவா?”
பால் டேவிஸ் இவ்வாறு எழுதுகிறார்: “இந்தத் ‘தொடர்ச்சியான மாபெரும் விபத்துக்களால்’ ஹாயில் அவ்வளவு கவரப்பட்டதால், ‘அணுக்கரு இயற்பியலின் சட்டங்கள் நட்சத்திரங்களுக்குள் அவை உண்டாக்கும் விளைவுகளுக்கு ஏற்றாற்போல் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கின்றன’ என சொல்லும்படி தூண்டப்பட்டார்.” இந்த “தொடர்ச்சியான [யோகமளித்த] மாபெரும் விபத்துகளுக்கு” யார் அல்லது எது காரணம்? எண்ணற்ற வகையில் நேர்த்தியாய் உருவாக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான தாவரங்களையும் மற்ற உயிரினங்களையும் உடைய இந்தச் சிறு கிரகத்தை உருவாக்கியது யார் அல்லது எது?
பைபிள் அளிக்கும் பதில்
சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு சங்கீதக்காரன் இவ்வாறு பயபக்தியோடு எழுதினார்: “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது. பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.”—சங்கீதம் 104:24, 25.
அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு சொன்னார்: “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.” (வெளிப்படுத்துதல் 4:11) உயிர் தற்செயலாக உண்டானதோ லட்சக்கணக்கான உயிரினங்களை பரிசளித்த ஏதோவொரு பிரபஞ்ச லாட்டரியாகவோ இல்லை.
எளிய சத்தியம் என்னவென்றால், கடவுள் “சகலத்தையும் சிருஷ்டித்தார், அவருடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.” இயேசு கிறிஸ்துதாமே பரிசேயர்களிடம் இவ்வாறு சொன்னார்: “ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதை . . . நீங்கள் வாசிக்கவில்லையா?” இயேசு சிருஷ்டிகரை அறிந்திருந்தார்! யெகோவாவின் கைதேர்ந்த வேலையாளாக, சிருஷ்டிப்பின்போது இயேசு அவருடன் இருந்தார்.—மத்தேயு 19:4, 5; நீதிமொழிகள் 8:22-31.
ஆனாலும், சிருஷ்டிகரைப் பற்றிய இந்த அடிப்படை சத்தியத்தை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வதற்கு விசுவாசமும் மனத்தாழ்மையும் தேவைப்படுகின்றன. இந்த விசுவாசம், குருட்டாம்போக்கில் எதைவேண்டுமானாலும் ஆதாரமில்லாமல் நம்பிவிடுவதை அர்த்தப்படுத்துவதில்லை. அது உண்மையான, காணக்கூடிய அத்தாட்சியின்பேரில் சார்ந்திருக்கிறது. ஆம், “காணப்படாதவைகளாகிய [கடவுளது] பண்புகள் உலகமுண்டானதுமுதற்கொண்டு தெளிவாய்க் காணப்படுகின்றன.”—ரோமர் 1:20, NW.
கடவுள் எவ்வாறு படைத்தார் என்பதை இப்போது நமக்கிருக்கும் மட்டுப்பட்ட அறிவியல் அறிவைக்கொண்டு நம்மால் விளக்க முடியாது. ஆகவே, உயிரின் தோற்றத்தைக் குறித்த அனைத்தையும் நம்மால் தற்போது அறிந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். யெகோவாவின் பின்வரும் வார்த்தைகளை வாசிக்கும்போது நாம் இதைக் குறித்து நினைப்பூட்டப்படுகிறோம்: “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல . . . பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.”—ஏசாயா 55:8, 9.
தெரிவு உங்களுடையது: குருட்டாம்போக்கில் தற்செயலாக நடந்த பரிணாமத்தில், வெற்றிதந்ததாக உரிமைபாராட்டப்படும் எண்ணிக்கையிலடங்கா சூதாட்டங்களில் ஆதாரமில்லாமல் நம்பிக்கை வைக்கலாம் அல்லது நோக்கமுள்ளவரும் படைப்பாளரும் வடிவமைப்பாளருமான யெகோவா தேவன்மீது விசுவாசம் வைக்கலாம். ஏவப்பட்ட தீர்க்கதரிசி சரியாகவே இவ்வாறு சொன்னார்: “பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; . . . அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது.”—ஏசாயா 40:28.
ஆகவே, நீங்கள் எதை நம்புவீர்கள்? உங்களது தீர்மானம் உங்கள் எதிர்கால வாழ்க்கையை அதிகளவில் பாதிக்கும். பரிணாமம் உண்மையானால், “ஆத்துமா” என்பதை பரிணாமத்திற்குள் புகுத்த முற்படும் மிகச் சிக்கலான கத்தோலிக்க இறைமையியலின் போலியான நியாயவிவாதங்களின் மத்தியிலும் சாவு என்பது ஒட்டுமொத்த முடிவைக் குறிக்கும். b அழிவைத் தவிர்க்க முடியாதென்ற துக்க உணர்வைப் போக்க மனிதனுக்கு அழியா ஆத்துமா இல்லை.—ஆதியாகமம் 2:7; எசேக்கியேல் 18:4, 20.
பைபிள் உண்மையானதெனவும் உயிருள்ள தேவன் படைப்பாளர் எனவும் நாம் ஏற்றுக்கொண்டால், ஆரம்பத்தில் இருந்ததைப்போலவே சமநிலையையும் ஒத்திசைவையும் மீண்டும் பெற்ற பூமியில் நித்திய, பரிபூரண வாழ்க்கையை பெறும்படி உயிர்த்தெழுப்பப்படும் வாக்குறுதி இருக்கிறது. (யோவான் 5:28, 29) நீங்கள் எதன்மீது விசுவாசம் வைப்பீர்கள்? நம்பமுடியாத சூதாட்டமான டார்வினது பரிணாமக் கொள்கையிலா? அல்லது நோக்கத்தோடு செயல்பட்டவரும் அவ்வாறே இப்போதும் செயல்பட்டுக்கொண்டிருப்பவருமான சிருஷ்டிகரிலா? c
[அடிக்குறிப்புகள்]
a “கடவுள் உலகைப் படைத்த நாள் முதற்கொண்டே, அவரது நித்திய வல்லமையும் தெய்வீகமும், கண்களுக்கு புலப்படாவிட்டாலும், அவர் படைத்த காரியங்களின்மூலம் மனக்கண்களுக்குப் புலப்படுகின்றன.”—ரோமர் 1:20, ஜெரூசலம் பைபிள்.
b “உலகை கவனித்தல்,” பக்கம் 28, “போப் பரிணாமத்தை மறுவுறுதி செய்கிறார்” என்ற தலைப்பைக் காண்க.
c இந்தப் பொருளின்பேரில் விளக்கமான கலந்தாலோசிப்பிற்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட உயிர்—அது எவ்வாறு இங்கு வந்தது? பரிணாமத்தின் மூலமா படைப்பின் மூலமா? என்ற ஆங்கில புத்தகத்தைக் காண்க.
[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]
“பத்து லட்சம் டாலர் மதிப்புள்ள லாட்டரிப்பரிசு தொடர்ச்சியாக பத்து லட்சம் முறை நமக்கு கிடைத்ததுபோல்”தான் பூமியில் நம் வாழ்க்கை தோன்றியதென சில பரிணாமவாதிகள் சொல்கின்றனர்
[பக்கம் 15-ன் பெட்டி/படம்]
எண்ணற்ற வகையும் வடிவமைப்பும்
பூச்சிகள் “அறிவியலாளர்கள் ஒவ்வொரு வருடமும் 7,000-லிருந்து 10,000 வரையான புதிய பூச்சி இனங்களைக் கண்டுபிடிக்கின்றனர்” என்பதாக தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது. ஆயினும், “பத்து லட்சத்திலிருந்து ஒரு கோடி வரையான இனங்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம்.” கார்டியன் வீக்லியில் மேற்கோள் காட்டப்பட்ட பிரகாரம், பிரெஞ்சு செய்தித்தாளான லா மான்ட்-ல் வெளிவந்த ஒரு கட்டுரையில் காத்ரன் வின்சன்ட் என்பவர், இதுவரை பதிவுசெய்யப்பட்டிருக்கும் இனங்களைக் குறித்து சொல்லுகையில், அது “உண்மையான எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவானது . . . உண்மையில் 50 லட்சத்திலிருந்து 5 கோடி என்ற வியக்கத்தக்க எண்ணிக்கை வரை வெவ்வேறு இனங்கள் இருக்கலாமென கணக்கிடப்படுகிறது” என்றார்.
ஆச்சரியமான பூச்சி உலகை சற்று சிந்தித்துப் பாருங்கள்—தேனீக்கள், எறும்புகள், குளவிகள், பட்டாம்பூச்சிகள், கரப்பான்பூச்சிகள், மூட்டைப்பூச்சிகள், மின்மினிப் பூச்சிகள், கரையான்கள், அந்துப் பூச்சிகள், வீட்டு ஈக்கள், தும்பிகள், கொசுக்கள், சில்வர்ஃபிஷ்கள், வெட்டுக்கிளிகள், ஒட்டுயிர்ப்பூச்சிகள், பாச்சைப் பூச்சிகள், தெள்ளுப் பூச்சிகள்—முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும் ஒரு பட்டியலின் வெறும் ஆரம்பம்தான் இது! பட்டியல் போய்க்கொண்டே இருக்கும்.
பறவைகள் 28 கிராமுக்கும் குறைவான எடையுள்ள ஒரு பறவையைப் பற்றி நாம் என்ன சொல்லலாம்? “அது, மலை உச்சிகளைத் தாண்டி, நகர்ப்புறத்து வானளாவிய கட்டிடங்களைச் சுற்றி பறந்து, அட்லான்டிக் பெருங்கடலின் அகன்ற நீர்ப்பரப்பையும் மெக்ஸிகோ வளைகுடாவையும் தாண்டி, வருடத்திற்கு 16,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் அலாஸ்காவின் மிக உயர்ந்த மரங்களிலிருந்து தென் அமெரிக்காவிலுள்ள மழைக்காடுகளுக்குச் இடம்பெயர்ந்து சென்று திரும்புவதைக் கற்பனைசெய்து பாருங்கள்.” வியக்கத்தக்க இந்தப் பறவை எது? “மிகச் சுறுசுறுப்பான ப்ளாக்போல் பாடும்பறவையின் (blackpoll warbler [Dendroica striata]) அசாதாரண பறக்கும் திறன் வட அமெரிக்க நிலப் பறவைகளிலேயே இதை நிகரற்றதாக்குகிறது.” (வட அமெரிக்க பறவைகளின் புத்தகம், [ஆங்கிலம்]). மறுபடியும் நாம் கேட்பது: இயற்கையில் நடந்த கோடிக்கணக்கான தற்செயல் நிகழ்ச்சிகளின் விளைவாக இந்தப் பறவை திடீரென தோன்றியதா? அல்லது புத்தியுள்ள வடிவமைப்பால் உண்டாக்கப்பட்ட அதிசயமா?
இந்த உதாரணங்களோடுகூட, முடிவே இல்லாததுபோல் தோன்றும் கானங்களைப் பாடும் பறவைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்: ஐரோப்பா முழுவதிலும் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளிலும் இன்னிசைக்காக பேர்பெற்றிருக்கும் இராப்பாடி; “விகடம் செய்வதில் திறம்பெற்றதும், மனப்பாடம் செய்யப்பட்ட சொற்றொடர்களை பாட்டில் சேர்த்துக்கொள்வதுமான” வட அமெரிக்காவின் வடதிசை நையாண்டிப் பறவை; “மிக நேர்த்தியான பாடல் பாடி, ஆச்சரியத்தக்க விதத்தில் திறமையாக விகடம் செய்யும்” ஆஸ்திரேலியாவின் அருமையான லையர் பறவை.—உலகின் பறவைகள், (ஆங்கிலம்).
கூடுதலாக, இவ்வளவு அநேக பறவைகளின் மிக அழகான வண்ணங்கள், இறக்கைகள் மற்றும் இறகுகளின் வடிவம் போன்றவை ஒருவரை பிரமிப்படையச் செய்கின்றன. இதோடுகூட, தரையிலிருந்தாலும்சரி, செங்குத்தான பாறைகளிலிருந்தாலும்சரி, மரங்களிலிருந்தாலும்சரி எந்த இடத்திலும் கூடுகளைக் கட்டுவதில் அவை திறம்பெற்றிருக்கின்றன. அப்படிப்பட்ட உள்ளியல்பான புத்திக்கூர்மை நிச்சயமாகவே மனத்தாழ்மையுள்ள நபர்களைக் கவரும். அவை எவ்வாறு தோன்றின? தற்செயலாகவா அல்லது வடிவமைப்பினாலா?
மனித மூளை “மூளையில், பத்து லட்சம் கோடியிலிருந்து 100 லட்சம் கோடி கூடல்வாய்கள் வரை இருக்கலாம்; மின் துடிப்புகளாக வரும் சிக்னல்களை பதிவுசெய்யும் சிறு கால்குலேட்டர்போல் அவை ஒவ்வொன்றும் செயல்படுகின்றன.” (மூளை) நமது மூளைக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை, ஆனாலும் அது மண்டையோட்டிற்குள் பொதிந்து பாதுகாக்கப்பட்டுள்ள சிக்கலான பிரபஞ்சமாகும். மனிதரை யோசிக்கச்செய்து, நியாயமாய் சிந்திக்கவைத்து, ஆயிரக்கணக்கான மொழிகளில் பேசவைக்கும் இந்த உறுப்பை நாம் எப்படிப் பெற்றோம்? லட்சக்கணக்கான சூதாட்டங்களின் மூலமா? அல்லது புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்பின் மூலமா?
[பக்கம் 16, 17-ன் அட்டவணை]
மூளையின் வெளிப்புற பகுதியினுடைய எளிய வரைபடம்
புலனுணர் கார்டக்ஸ்
முழு உடலிலிருந்து வரும் புலனுணர் துடிப்புகளைப் பகுத்தறிகிறது
பிடரிமடல்
பார்வை சிக்னல்களை உண்டாக்குகிறது
சிறுமூளை
சமநிலையையும் ஒருங்கிணைப்பையும் கட்டுப்படுத்துகிறது
நரம்பு வேரிழை முனை
நரம்பு செய்தி கடத்திகள்
நரம்பு உணர்விழை
கூடல்வாய்
நரம்பணு
நரம்பு உணர்விழைகள்
நரம்பு வேரிழை
ப்ரீமோட்டார் கார்டக்ஸ்
தசை ஒருங்கிணைப்பைக் கட்டுப்படுத்துகிறது
மோட்டார் கார்டக்ஸ்
உணர்நிலை அசைவுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது
பொட்டு மடல்
நியாயப்படுத்துதல், உணர்ச்சிகள், பேச்சு, அசைவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது
மூளைப்பக்க மடல்
ஒலியை உண்டாக்குகிறது; கற்றுக்கொள்ளுதல், ஞாபகசக்தி, பாஷை, உணர்ச்சிகள் ஆகிய அம்சங்களைக் கட்டுப்படுத்துகிறது
நரம்பு உணர்விழைகள்
கூடல்வாய்
நரம்பணு
நரம்பு வேரிழை
“மூளையில் பத்து லட்சம் கோடியிலிருந்து 100 லட்சம் கோடி கூடல்வாய்கள் வரை இருக்கலாம்; மின் துடிப்புகளாக வரும் சிக்னல்களை பதிவுசெய்யும் சிறு கால்குலேட்டர்போல் அவை ஒவ்வொன்றும் செயல்படுகின்றன.”—மூளை
[பக்கம் 13-ன் படங்களுக்கான நன்றியின் படம்]
சந்திரனும் கிரகங்களும்: NASA photo