வெற்றிபெறும் சகிப்புத்தன்மை
“நீங்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்தபின்பு, வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றத்தைப் பெறும்படி உங்களுக்குச் சகிப்புத்தன்மை தேவை.”—எபிரெயர் 10:36, NW.
1. இன்று யெகோவா தேவனைச் சேவிக்கிற ஒவ்வொருவருக்கும் சகிப்புத்தன்மை ஏன் இன்றியமையாதது?
இந்த முழு உலகமும் ஆட்சி-எதிர்க்கும் ஒரு கடவுளின் வல்லமைக்குள் கிடக்கிறது. அதன் காணக்கூடாத அதிபதியாகிய, பிசாசான சாத்தான், யெகோவாவை எதிர்ப்பதிலும், மேசியானிய ராஜ்யம் யெகோவாவின் சர்வலோக அரசாட்சி சரியென நிரூபிப்பதற்கு எதிராகப் போரிடுவதிலும் தன் முயற்சிகள் எல்லாவற்றையும் ஒருமித்து ஊன்ற வைத்துக்கொண்டிருக்கிறான். இது, கடவுளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து அரசாட்சிக்குரிய இந்த விவாதத்தில் அவருடைய சார்பை ஆதரிக்கிறவனை இவ்வுலகம் தொடர்ந்து எதிர்க்குமென்பதைத் தவிர்க்க முடியாததாக்குகிறது. (யோவான் 15:18-20; 1 யோவான் 5:19)ஆகையால், நாம் ஒவ்வொருவரும், இந்த உலகம் அர்மகெதோனில் முழுமையானத் தோல்வியில் அழிந்து போகும் வரையில் சகித்துநிலைத்திருக்க நம்மைப் பலப்படுத்தித் தயாராக்கிக்கொள்ள வேண்டும். தங்கள் விசுவாசத்தாலும் உத்தமநிலையாலும் உலகத்தை வென்றவர்களான கடவுளுடைய வெற்றிபெற்றோருக்குள் நாம் இருப்பதற்கு, நாம் முடிவுவரையில் விடாப்பிடியுடன் உறுதியாக நிலைநிற்கவேண்டும். (1 யோவான் 5:4) நாம் இதை எவ்வாறு செய்ய முடியும்?
2, 3. எவ்வாறு யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் சகிப்புத்தன்மைக்கு மிகப் பெரிய முன்மாதிரிகளாக இருக்கின்றனர்?
2 முதலாவதாக, சகித்திருந்த இருவரின் முனைப்பான முன்மாதிரியை ஊக்கமூட்டுதலுக்காக நாம் கவனிக்கலாம். இவர்கள் யார்? ஒருவர் ‘சர்வ சிருஷ்டிக்கும் முதற்பேறு’ ஆன இயேசுவே, இவர் அறியப்படாதக் கடந்தகாலத்தின் ஒரு சமயத்தில் தாம் பிறப்பிக்கப்பட்ட முதற்கொண்டே கடவுளுடைய சேவையில் உண்மையுடன் விடாதுதொடர்ந்திருக்கிறார். கடவுளை உண்மையுடன் விடாதுதொடர்ந்து சேவிப்பதில் இயேசு, தமக்குப் பின்னர் வானத்திலும் பூமியிலும் உயிர்வாழும்படி படைக்கப்பட்ட அறிவுள்ள எல்லா சிருஷ்டிகளுக்கும் முன்மாதிரியானார். (கொலோசெயர் 1:15, 16) எனினும், சகிப்புத்தன்மைக்கு எல்லாரிலும் மிகப் பெரிய முன்மாதிரி யெகோவா தேவனே, அவர் தம்முடைய சர்வலோக அரசாட்சிக்கு எதிரான கலகத்தை நெடுங்காலமாகச் சகித்து வந்திருக்கிறார் மேலும் இந்த அரசாட்சிக்கெதிரான விவாதத்தை கடைசியாகத் தீர்த்து முடிப்பதற்குத் தாம் நடவடிக்கை எடுக்கும் வரையிலும் அவ்வாறு சகித்துக்கொண்டுமிருப்பார்.
3 யெகோவா தம்முடைய உயர் மதிப்பு மற்றும் தம்முடைய சொந்த மிகக்கூர்ந்த உணர்ச்சிகள் சார்ந்த காரியங்களில் பெரும் முன்மாதிரியான முறையில் சகித்திருக்கிறார். கடும் எரிச்சலூட்டும் சந்தர்ப்பங்களுக்கெதிரில் அவர் தம்மைக் கட்டுப்படுத்தியிருக்கிறார் மேலும்—பிசாசான சாத்தானைத்தானே உட்பட—தம்மை நிந்தித்தவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதிலிருந்தும் அவர் தம்மைத் தடுத்து வைத்திருக்கிறார். கடவுளுடைய சகிப்புத்தன்மைக்காகவும் அவருடைய இரக்கத்துக்காகவும் நாம் நன்றியுடனிருக்கிறோம். இவையில்லாமல், மிக அற்பகால வாழ்க்கையையுங்கூட நாம் அனுபவித்து மகிழ்ந்திருக்கமாட்டோம். நிச்சயமாகவே, யெகோவா தேவன் தம்முடைய சகிப்புத்தன்மையால் எதற்கும் மேலான ஒப்பற்ற முறையில் தம்மை மேன்மையாய் விளங்கச்செய்திருக்கிறார்.
4, 5. (எ) பவுல் கொடுத்த குயவனைப்பற்றிய உவமை எவ்வாறு கடவுளுடைய சகிப்புத்தன்மையையும் அவருடைய இரக்கத்தையும் பற்றி காட்டுகிறது? (பி) கடவுளுடைய இரக்கம் வீணாகவில்லையென எவ்வாறு நிரூபிக்கும்?
4 அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு சொல்லுகையில் கடவுளுடைய சகிப்புத்தன்மையையும் அவருடைய இரக்கத்தையும் குறிப்பிட்டுக் காட்டுகிறான்: “பிசைந்த ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும் ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரமில்லையோ? கடவுள் தமது கோபத்தைக் காண்பிக்கவும் தமது வல்லமையைத் தெரிவிக்கவும் அதோடுகூடத் தாம் மகிமைக்காக ஆயத்தமாக்கின இரக்கப் பாத்திரங்கள்மேல், அதாவது யூதரிலிருந்து மாத்திரமல்ல புறஜாதிகளிலிருந்தும் அவர் அழைத்த நம்மேல், தமது மகிமையின் ஐசுவரியத்தைத் தெரிவிக்கவும் சித்தங்கொண்டு அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாயிருந்தாரானாலென்ன?”—ரோமர் 9:21-24, தி.மொ.
5 இந்த வார்த்தைகள் காட்டுகிறபிரகாரம், யெகோவா, தாம் சகித்துக்கொண்டிருக்கும் தற்போதைய இந்தக் காலப்பகுதியின்போது, தம்முடைய மகிமையான நோக்கத்தைத் தொடர்ந்து செயற்படுத்தி குறிப்பிட்ட சில மனித பாத்திரங்கள்மீது இரக்கத்தைக் காட்டுகிறார். இந்தப் பாத்திரங்களை நித்திய மகிமைக்காக அவர் ஆயத்தஞ்செய்து இவ்வாறு அவருடைய பெரிய எதிராளியாகிய, பிசாசான சாத்தானின் மற்றும் அவனுடைய எல்லா சேனைகளின் பொல்லாத நோக்கங்களைத் தோற்கடிக்கிறார். மனிதவர்க்கத்தினரில் எல்லாருமே அழிவுக்குத் தகுதியுள்ள கோபாக்கினைப் பாத்திரங்களாக மாறியில்லை. இது சர்வவல்லமையுள்ள கடவுளின் பொறுமையான சகிப்புத்தன்மையைக் குறித்து நல்ல முறையில் தெரிவிக்கிறது. அவருடைய இரக்கம் வீணாவதில்லை. அது (1) யெகோவாவின் மிக நேசமான குமாரனான இயேசு கிறிஸ்துவின்கீழ் பரலோகத்தில் ஒரு மகிமையான ராஜ்ய குடும்பத்தில் பலன் தரும், மேலும் (2) பரதீஸான பூமியில், எல்லாரும் நித்திய ஜீவனைச் சுதந்தரிப்போராயுள்ள, மீட்கப்பட்டு பரிபூரணராக்கப்பட்ட மனித சிருஷ்டிகளாலாகிய மனிதவர்க்கத்தினரிலும் பலன் தரும்.
முடிவு வரையில் சகித்து நிலைத்திருத்தல்
6. (எ) சகிப்புத்தன்மைக்குரிய பரீட்சையைக் கிறிஸ்தவர்கள் ஏன் தவிர்க்க முடியாது? (பி) “சகிப்புத்தன்மை” என்பதற்குரிய கிரேக்கச் சொல் பொதுவாய்க் குறிப்பதென்ன?
6 இத்தகைய அதிசயமான நம்பிக்கை முன்னிருக்க, இயேசுவின் ஊக்கமூட்டும் வார்த்தைகள் நம்முடைய செவிகளில் இடைவிடாமல் தொனித்துக்கொண்டிருக்க வேண்டும், அதாவது: “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.” (மத்தேயு 24:13) கிறிஸ்தவ சீஷராயிருக்கும் போக்கில் செல்வதை நல்ல முறையில் தொடங்குவது முக்கியம். ஆனால் முடிவில் முக்கியமெனக் கருதப்படுவது நாம் எவ்வாறு நிலைத்திருக்கிறோம், எவ்வளவு நன்றாய் அந்தப் போக்கை முடிக்கிறோம் என்பதே. அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு சொன்னபோது இதை அறிவுறுத்தினான்: “நீங்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்த பின்பு, வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றத்தைப் பெறும்படி, உங்களுக்குச் சகிப்புத்தன்மை தேவை.” (எபிரெயர் 10:36, NW) “சகிப்புத்தன்மை” என்று இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கச் சொல் ஹைப்பொமொனே (hy·po·mo·ne΄) என்பதாகும். இது இடையூறுகள், துன்புறுத்தல்கள், இக்கட்டுகள், மற்றும் சோதனைகளுக்கெதிரில் நம்பிக்கை இழக்காத தைரியமான, தளரா உறுதியுள்ள, அல்லது பொறுமையான சகிப்புத்தன்மையைப் பொதுவாய்க் குறிக்கிறது. முடிவான இரட்சிப்பைப் பெற ஆவலோடு எதிர்பார்த்தால், அந்த இரட்சிப்புக்குத் தேவைப்படும் ஆயத்தத்துக்குரிய பாகமாக சகிப்புத்தன்மைக்குரிய பரீட்சைக்கு நாம் நம்மை உட்படுத்த வேண்டும்.
7. என்ன ஏமாற்றமான எண்ணத்தை நாம் தவிர்க்க வேண்டும், யாருடைய முன்மாதிரி சகிப்பதற்கு நமக்கு உதவிசெய்யும்?
7 அந்தப் பரீட்சையை நாம் விரைவில் முடித்துக்கொள்ளலாமென்ற தற்பிரிய எண்ணத்தால் நாம் நம்மை ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. சர்வலோக அரசாட்சியைப் பற்றிய மற்றும் மனிதனின் உத்தமத்தைப்பற்றிய விவாதங்கள் திட்டமாய்ப் பதிலளித்துத் தீர்க்கப்படும்படி, யெகோவா தம்மையுங்கூட விட்டுவைக்கவில்லை. அவர் அவர்களை உடனடியாக அழித்துவிட்டிருக்கலாமெனினும் அவ்வாறு செய்யாமல் வெறுப்புண்டாக்கும் காரியங்களைச் சகித்துவந்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவும் சகிப்புத்தன்மைக்கு ஒரு மாதிரியாக இருந்தார். (1 பேதுரு 2:21; ரோமர் 15:3-5-ஐ ஒத்துப்பாருங்கள்.) இந்த முதன்மையான முன்மாதிரிகள் நமக்கு முன்னிருக்க, நிச்சயமாகவே நாமும் முடிவு வரையில் சகித்திருக்க மனமுவந்தவர்களாக இருக்கிறோம்.—எபிரெயர் 12:2, 3.
தேவைப்படும் ஒரு தகுதி
8. நம் எல்லாருக்கும் தேவைப்படும் என்ன பண்பை அப்போஸ்தலன் பவுல் காட்டினான்?
8 பூர்வ காலங்கள் முதற்கொண்டே, கடவுளின் ஊழியர் எவரும், சகிப்பதால் தன் உத்தமத்தை நிரூபிக்கத் தேவைப்படுவதிலிருந்து விதிவிலக்களிக்கப்படவில்லை. மரணம் வரையில் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருந்து பரலோகத்தில் நித்திய ஜீவனையடைய தகுதிபெற்ற, பைபிள் சரித்திரத்திலுள்ள முதன்மைவாய்ந்த ஆட்களும் தங்கள் உறுதிநிலைநிற்கையை நிரூபிக்க வேண்டியிருந்தது. உதாரணமாக, முன்னாள் பரிசேயனாகிய, தர்சு பட்டணத்தானான சவுல், கொரிந்தியருக்குப் பின்வருமாறு கூறினான்: “நான் ஒன்றுமில்லைதானெனினும் மகா பிரதான அப்போஸ்தலரிலும் ஒன்றிலும் நான் எவ்வகையிலும் குறைவுள்ளவனல்ல. அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள், அற்புதங்கள், அடையாளங்கள், வல்லசெயல்கள் இவைகளோடு, எல்லாச் சகிப்பிலும் உங்கள் நடுவில் செய்யப்பட்டன.” (2 கொரிந்தியர் 12:11, 12, தி.மொ.) வேலையின் பாரச்சுமைகள் இருந்தபோதிலும், பவுல் போதக ஊழியத்தை அவ்வளவு உயர்வாக மதித்ததனால் அவன் மிகுதியானதைச் சகித்து அதன்பேரில் எந்த நிந்தையையும் கொண்டுவராதபடி காத்துக்கொள்ள பிரயாசப்பட்டான்.—2 கொரிந்தியர் 6:3, 4, 9.
9. (எ) அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேர் சகிப்புத்தன்மையை எவ்வாறு காட்டினார்கள், அதன் பலன் என்ன? (பி) தொடர்ந்து தெய்வீகச் சேவையை உண்மையுடன் நிறைவேற்றிக்கொண்டிருக்க எது நமக்குத் தூண்டுவிசையாகச் சேவிக்கிறது?
9 அதிக நவீன காலங்களில், முதல் உலகப் போருக்கு முன்னால் கடவுளைச் சேவித்துக்கொண்டிருந்த அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், 1914-ம் ஆண்டு புறஜாதியாரின் காலங்களின் முடிவைக் குறிக்குமென அறிந்திருந்தனர், மேலும், நினைவில் வைப்பதற்குரிய அந்த ஆண்டில் அவர்களில் பலர் தங்கள் பரலோகப் பரிசைப் பெறும்படி எதிர்பார்த்தனர். ஆனால் அது சம்பவிக்கவில்லை. . உண்மைநிகழ்ச்சிகள் இப்பொழுது காட்டுகிறபடி, பல பத்தாண்டுகள் அவர்களுக்குக் கூட்டப்பட்டன. அவர்களுடைய பூமிக்குரிய வாழ்க்கைப்போக்கின் இந்த எதிர்பாராத நீடிப்பின்போது, அவர்கள் யெகோவா தேவனின் கைகளில் புடமிட்டு சுத்திகரிக்கப்படுதலை அனுபவித்தனர். (சகரியா 13:9; மல்கியா 3:2, 3) தொடர்ந்து சகித்திருந்தது அவர்கள் மேம்பாடடைவதற்கேதுவாகப் பலன்தந்தது. யெகோவாவின் ஊழியர்களாக, அவர்கள் அவருடைய பெயருக்கான ஜனமாகப் பெயர்குறிப்பிடப்பட்டதில் களிகூர்ந்தார்கள். (ஏசாயா 43:10-12, தி.மொ.; அப்போஸ்தலர் 15:14) இன்று, இரண்டு உலகப்போர்களின் மற்றும் பல சிறு போர்களினூடே காத்து கொண்டுவரப்பட்டிருக்க, நற்செய்தியைப் பரவச் செய்வதற்கு, பெருகிக்கொண்டேயிருக்கும் மற்றச் செம்மறியாடுகளாலாகிய ஒரு திரள்கூட்டத்தாரால் உதவிசெய்யப்படுவதில் அவர்கள் அகமகிழ்கின்றனர், எண்ணிக்கையில் இந்தத் திரள் கூட்டம் இப்பொழுது நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்டுள்ளது. அவர்கள் அனுபவித்துமகிழும் ஆவிக்குரிய பரதீஸ், பூமிமுழுவதிலும், சமுத்திரத்தின் மிகத் தொலைதூர தீவுகள் வரையிலுங்கூட பரவியுள்ளது. நாம் மேலும் நீடித்து வாழ்கையில் மேலுமாக மதித்துணரும் இந்தத் தயவுகூரப்பட்ட நடத்துமுறை, யெகோவாவின் சித்தமும் நோக்கமும் முழுமையாய் நிறைவேற்றப்படும்வரையில் தெய்வீக ஊழியத்தை உண்மையுடன் நிறைவேற்றிக்கொண்டிருக்க நமக்குத் தூண்டுவிசையாகச் சேவிக்கிறது.
10. நாம் எவ்வாறாவது பலன் குன்றிவிடாதபடி, எது நமக்குத் தவறாமல் தேவைப்படுகிறது?
10 நாம் பரிசைப் பெறுவது நாம் உறுதியாய் நிலைநிற்பதன்போல் சார்ந்திருப்பதால், இந்த இன்றியமையாதக் காரியத்தின்பேரில் நமக்கு இடைவிடாமல் அறிவுரை தேவை. (1 கொரிந்தியர் 15:58; கொலோசெயர் 1:23) யெகோவாவின் ஜனங்களுக்குள் பலன் குன்றுதல் இராதபடி, சத்தியத்தையும் சத்தியத்தைப் பரவச் செய்யும் மதிப்புமிகுந்த சிலாக்கியத்தையும் விடாது உறுதியாய்க் கடைப்பிடிப்பதற்கு நாம் தவறாதுதொடர்ந்து ஊக்கமூட்டப்பட வேண்டும், முதற் நூற்றாண்டில் புதிதாய் அமைக்கப்பட்ட சபைகளைப் பவுலும் பர்னபாவும் மறு சந்திப்புகள் செய்து ஊக்கமூட்டினதுபோல் நமக்கும் அது தேவை. (அப்போஸ்தலர் 14:21, 22) அப்போஸ்தலன் யோவான் சொன்னதுபோல், சத்தியம் நமக்குள் நிலைநிற்கும், அது “என்றென்றைக்கும் நம்மோடிருக்கும்,” என்பது நம்முடைய உறுதி முடிவும் தீர்மானமுமாக இருக்கட்டும்.—2 யோவான் 1.
தடுமாறாத சகிப்புத்தன்மையுடன் காத்திருத்தல்
11. தம்முடைய ஊழியர்களைக் குறித்ததில் கடவுள் கடைப்பிடிக்கும் முறை என்னவாகத் தெரிகிறது? இது யோசேப்பின் காரியத்தில் எவ்வாறு விளக்கிக் காட்டப்பட்டது?
11 நம்மைக் குறித்தப் பரீட்சை நிறைவேறி முடிவதற்குக் காலமெடுக்கிறது. (யாக்கோபு 1:2-4) காத்திரு! காத்திரு! காத்திரு! என்பது, கடவுளுடைய பூர்வ ஊழியர்கள் விசுவாசத்தில் தொடர்ந்திருக்கவேண்டுமென்ற தங்கள் தீர்மானத்தின்பேரில் பரீட்சிக்கப்பட்டபோது கடவுள் அவர்களிடம் கடைப்பிடித்த முறையாகத் தோன்றுகிறது. ஆனால் இந்தக் காத்திரு என்பது, முடிவில், அந்த உண்மையுள்ள ஊழியர்களுக்கு நற்பயனளிப்பதாக எப்பொழுதும் நிரூபித்தது. உதாரணமாக, யோசேப்பு, அடிமையாக மற்றும் கைதியாக 13 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது, ஆனால் அவனுடைய அனுபவம் அவனுடைய பண்பியல்பைச் சுத்திகரித்துச் செம்மைப்படுத்தியது.—சங்கீதம் 105:17-19.
12, 13. (எ) ஆபிரகாம் எவ்வாறு உண்மையோடு சகிப்பதற்கு முன்மாதிரியாயிருந்தான்? (பி) எவ்வகையில் ஆபிரகாமின் விசுவாசமும் சகிப்புத்தன்மையும் நமக்கு மாதிரியாகக் காட்டப்படுகின்றன?
12 கடவுள் ஆபிரகாமைக் கல்தேயரின் ஊர் பட்டணத்திலிருந்து வெளியேறி வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குப் போகும்படி அழைத்தபோது ஆபிரகாம் ஏற்கெனவே 75 வயதாயிருந்தான். கடவுளுடைய வாக்கு ஆணையிட்டு உறுதிசெய்யப்பட்டதை அவன் பெற்றபோது ஏறக்குறைய 125 வயதாகியிருந்தான்—இது அவன் தன் மிகவும் நேசிக்கப்பட்ட குமாரனை, ஈசாக்கைப் பலிசெலுத்தும் நிலைவரைச் சென்று, யெகோவாவின் தூதன் அவனுடைய கையை நிறுத்தி அந்தப் பலிசெலுத்துதலைத் தடைசெய்தபோதுதானே நிறுத்தினதால் தன் விசுவாசத்தின் உறுதியை மெய்ப்பித்துக் காட்டினபின் உடனடியாக நடந்தது. (ஆதியாகமம் 22:1-18) ஆபிரகாம் ஓர் அன்னிய நாட்டில் பரதேசியாகக் காத்திருப்பதற்கு ஐம்பது ஆண்டுகள் நீண்டகாலமாகும், ஆனால் அவன் 175 வயதில் தான் மரிக்கும் வரையில் இன்னும் 50 ஆண்டுகள் தொடர்ந்து நிலைத்திருந்தான். அந்தக் காலமெல்லாம், ஆபிரகாம் யெகோவா தேவனின் உண்மையுள்ள ஒரு சாட்சியும் தீர்க்கதரிசியுமாக இருந்தான்.—சங்கீதம் 105:9-15.
13 அந்த வாக்குப்பண்ணப்பட்ட ஆசீர்வாதங்களை, ஆபிரகாமின் வித்தாகிய இயேசு கிறிஸ்துவின்மூலம் பெற்றுக்கொள்ள விரும்பும் கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருக்கும் ஆபிரகாமின் விசுவாசமும் சகிப்புத்தன்மையும் மாதிரியாக அளிக்கப்படுகின்றன. (எபிரெயர் 11:8-10, 17-19, தி.மொ.) அவனைக் குறித்து, எபிரெயர் 6:11-15-ல் (தி.மொ.) நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “உங்களுக்கு நன்னம்பிக்கையின் பூரண நிச்சயம் உண்டாகும்படி உங்களில் ஒவ்வொருவரும் முடிவுபரியந்தம் அப்படியே உற்சாகத்தைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். நீங்கள் அசதியுள்ளவர்களாகாமல் விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாக வேண்டுமென்றிருக்கிறோம். ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குப் பண்ணினபோது ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவரும் இல்லாதபடியினாலே தமதுபேரில்தானே ஆணையிட்டு: நிச்சயமாக உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன், உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். அப்படியே, அவன் நீடிய பொறுமையோடு காத்திருந்து வாக்குப்பண்ணப்பட்டதைப் பெற்றான்.”
14. சகிப்புத்தன்மையின் பரீட்சை முடிவற்றது அதன் பரிசும் எட்டாமல் ஏய்ப்பதாயுள்ளதென நாம் ஏன் எண்ணக்கூடாது?
14 1914-ல் புறஜாதியாரின் காலங்கள் முடிவடைந்தபோது அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேரில் சிலர், உண்மையான கிறிஸ்தவ சபை பரலோகத்துக்கு எடுக்கப்பட்டு மகிமைப்படுத்தப்படுவதை எதிர்பார்த்தனர், அதுமுதற்கொண்டு ஏற்கெனவே 77 ஆண்டுகள் கடந்துசென்றுவிட்டதை அவர்கள் கண்டுள்ளனர். இன்னும் எவ்வளவு நீடித்தக் காலம் இந்த மீதிபேர் காத்திருக்க வேண்டுமென்பது நமக்குத் தெரியாது. அப்படியானால், மனத்தடுமாற்றமடைந்து, காத்திருப்பது முடிவற்றது மற்றும் பரிசுபெறுவது சதுப்புநில ஒளியைப்போன்று பிடிபடாமல் ஏய்ப்பதாயுள்ளதென எண்ணவேண்டுமா? இல்லை! அது கடவுளுடைய அரசாட்சியை நேர்மையென ஒருபோதும் நிரூபிக்காது அல்லது அவருடைய பெயரைக் கனப்படுத்தாது. அவர் நம்மீது வெற்றியையும் அதன் பலனாக நித்திய ஜீவனின் பரிசையும் வழங்குகையில் இந்த உலகத்துக்கு முன்பாக நியாயமென மெய்ப்பிக்கப்படமாட்டார். கால நீடிப்பு என்னவாயினும், யெகோவா தம்முடைய சொந்த நேரத்தில் செயல்படும்படி, மீதிபேர், செம்மறியாடுகளைப்போன்ற தங்கள் உண்மையுள்ள தோழர்களோடு, அவருக்காகக் காத்திருக்கத் தீர்மானித்துள்ளனர். இத்தகைய முன்மாதிரியான தளரா மனவுறுதியைக் காட்டுவதில், அவர்கள் ஆபிரகாமின் போக்கைப் பின்தொடருகின்றனர்.—ரோமர் 8:23-25.
15 அப்படியானால், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் தடுமாறாத சகிப்புத்தன்மையுடனிருத்தல் என்பதே இன்னும் இலக்கு வாசகமாயுள்ளது. (ரோமர் 2:6, 7) சென்ற காலத்தில் அவர் நம்மை, சிறையிருப்புகள் மற்றும் கான்சன்டிரேஷன் முகாம்கள் உட்பட, கடும் இக்கட்டுகளினூடே தாங்கி நடத்தி, அவருடைய பெயருக்கும் நோக்கத்துக்கும் மகிமையுண்டாக அவற்றினூடே வெற்றிக்களிப்புடன் கொண்டுவந்திருக்கிறார்.a நம்முடைய பரீட்சை முடிந்துதீர்வதற்கு இன்னும் மீந்திருக்கும் காலத்தின்போதும் யெகோவா தொடர்ந்து அவ்வாறே செய்வார். பவுலின் பின்வரும் அறிவுரை நம்முடைய நாளுக்கும் பொருந்தியதாய் நிலைத்திருக்கிறது: “நீங்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்து முற்றிலும் நிறைவேற்றி, இவ்வாறு வாக்குப்பண்ணப்பட்டதைப் பெற்று ஏற்றுச் சென்று முழுமையாய் அனுபவித்துக் களிக்கும்படி, உறுதிமாறாதப் பொறுமையும் சகிப்புத்தன்மையும் உங்களுக்குத் தேவை.”—எபிரெயர் 10:36, தி ஆம்ப்ளிஃபைட் பைபிள் (Amplified Bible); ரோமர் 8:37.
16. யெகோவாவுக்கு நாம் செய்த ஒப்புக்கொடுத்தலை நாம் ஏன் மட்டுப்பட்ட முறையில் அல்லது விதிவிலக்குகளுடன் கருதக்கூடாது?
16 யெகோவா தேவன் நமக்கு, இந்தப் பொல்லாத உலகத்தின் மத்தியில் செய்வதற்கு வேலை வைத்திருக்கும் வரையில், நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, அந்த வேலை முடியும் வரையில், அதில் ஈடுபட்டிருக்க விரும்புகிறோம். (யோவான் 17:4) யெகோவாவுக்கு நாம் செய்த ஒப்புக்கொடுத்தலை, நாம் வெறுமென ஒரு குறுகிய காலத்துக்கு அவரைச் சேவிப்போம் பின்பு அர்மகெதோன் வரும் என்ற ஒப்பந்தத்தின்பேரில் செய்யவில்லை. நம்முடைய ஒப்புக்கொடுத்தல் என்றென்றுக்கும் உரியது. கடவுள் நமக்கு வைத்திருக்கும் வேலை அர்மகெதோன் போருடன் முடிந்துவிடாது. எனினும், அர்மகெதோனுக்கு முன்னால் செய்யப்பட வேண்டிய வேலையை நாம் செய்துமுடித்தப் பின்பு மாத்திரமே அந்தப் போருக்கு அப்பால் வரவிருக்கும் மகத்தான காரியங்களைக் காண்போம். அவ்வாறெனில், இந்த வேலையைத் தொடர்ந்து செய்வதற்குரிய இந்த மகிழ்ச்சியுள்ள சிலாக்கியத்தோடுகூட, அவர் வாக்குக் கொடுத்துள்ள நீண்டகாலம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஆசீர்வாதங்களின் பரிசும் நமக்கு அளிக்கப்படும்.—ரோமர் 8:32.
கடவுள்மீதுள்ள அன்பு சகிப்பதற்கு நமக்கு உதவிசெய்கிறது
17, 18. (எ) தொல்லைமிகுந்த காலங்களில் சகித்து கடவுளுடைய அங்கீகாரத்துடன் இருப்பதற்கு எது நமக்கு உதவிசெய்யும்? (பி) எது வெற்றிபெற நமக்கு உதவிசெய்யும், மீந்திருக்கும் காலத்தைப்பற்றி நாங்கள் என்ன சொல்லுகிறதில்லை?
17 காலங்கள் தொல்லைமிகுந்ததாக இருக்கையில்: ‘இதற்குமேலும் நாம் எவ்வாறு சகிக்க முடியும்?’ என்று ஒருவேளை நாம் கேட்கலாம். இதற்குப் பதில்? கடவுளை நம்முடைய முழு இருதயத்தோடும், மனதோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும் நேசிப்பதன்மூலமே முடியும் என்பதே. “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது.” (1 கொரிந்தியர் 13:4, 7, 8) கடவுள்மீதுள்ள அன்பினால் நாம் சகித்திருந்தால் தவிர, நம்முடைய சகிப்பு பயனற்றது. ஆனால் யெகோவாவின்பேரிலுள்ள நம் பக்தியினிமித்தம் பெரும் தொல்லைகளை நாம் பொறுமையோடு தாங்கினால், அப்பொழுது நம்முடைய சகிப்புத்தன்மை அவர்மீதுள்ள நம்முடைய அன்பை ஆழமாக்குவதில் பலன்தருகிறது. தம் தகப்பனாகிய, கடவுளின்பேரிலுள்ள அன்பு, சகிக்கும்படி இயேசுவுக்கு உதவிசெய்தது. (யோவான் 14:30, 31; எபிரெயர் 12:2) நம்முடைய தகப்பனாகிய, கடவுள்மீதுள்ள அன்பே நம்முடைய உண்மையான நோக்கமென்றால் நாம் சகிக்கமுடியாத என்ன இருக்கிறது?
18 பரீட்சைக்குரிய இந்த மிகக் கடும் நெருக்கடியான காலத்தின்போது இந்த உலகத்தின்மீது வெற்றிபெற்றவர்களாக நிலைத்திருக்க நமக்கு உதவிசெய்தது யெகோவா தேவன்மீதுள்ள நம்முடைய தடுமாறாத அன்பேயாகும். இந்தப் பழைய காரிய ஒழுங்குமுறையை இன்னும் எவ்வளவு காலம் நீடித்திருக்கும்படி அனுமதித்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, யெகோவா, இயேசு கிறிஸ்துவின்மூலம், நமக்குத் தேவைப்படும் உதவியைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருப்பார். (1 பேதுரு 5:10) நிச்சயமாகவே, இன்னும் எவ்வளவு காலம் மீந்திருக்கிறது என்பதைப்பற்றி நாங்கள் எந்த முன்னறிவிப்பும் செய்கிறதில்லை, எந்தத் திட்டமான தேதியையும் நாங்கள் குறிக்கிறதில்லை. அதை மகா நேரப்பதிவாளரான, யெகோவா தேவனிடம் விட்டுவிடுகிறோம்.—சங்கீதம் 31:15.
19, 20. (எ) நாம் சகித்த கடந்துசெல்லும் ஒவ்வொரு நாளையும் நாம் எவ்வாறு கருதவேண்டும்? (பி) என்ன முட்டாள்தனத்தை நாம் தவிர்க்க விரும்புகிறோம், ஏன்?
19 எனினும், “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவை” காணும் மற்றும் அனுபவிக்குமென முன்னறிவிக்கப்பட்ட அந்தச் சந்ததி இப்பொழுது வயதில் நன்றாய் முதிர்ந்திருக்கிறது. (மத்தேயு 24:3, 32-35, NW) நாம் சகிக்கும் ஒவ்வொரு கடந்துசெல்லும் நாளும் சாத்தானும் அவனுடைய பேய்களும் தாங்கள் உயிரோடிருப்பதனால்தானே இந்தச் சர்வலோகத்தைத் தூய்மைக்கேடு செய்வதில் அவர்களுக்கு ஒரு நாள் குறைந்துவிட்டதெனவும் “அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்” இருந்துவருவதை யெகோவா இனிமேலும் சகிக்கப்போகாத அந்த நேரம் ஒரு நாள் நெருங்கி வருவதையும் நாம் ஒருபோதும் மறந்துவிடாதிருப்போமாக. (ரோமர் 9:22) சீக்கிரத்தில், யெகோவாவின் நீடியபொறுமை முடிவுக்கு வருகையில், அவர் தம்முடைய உக்கிரகோபத்தைத் தெய்வபக்தியற்ற ஆண்களின்மேலும் பெண்களின்மேலும் காட்டுவார். இவ்வாறு, இந்தக் காலப்பகுதியின்போதெல்லாம் தொடர்ந்திருக்க அவர்களை அனுமதித்தபோதிலும், அவர்களுடைய நடத்தைப் போக்கைக் குறித்த தம்முடைய தெய்வீகக் கண்டனத்தைத் அவர் தெரிவிப்பார்.
20 நாம் ஏற்கும்படி இயேசு கிறிஸ்துவின்மூலம் நமக்கு நீட்டப்படுகிற அந்த மகிமையான பரிசைப் பெறுவதற்கான நம்முடைய அன்புள்ள முயற்சிகளை நிறுத்திவிடுவது நம் பங்கில் மிகப் பெரும் முட்டாள்தனமாயிருக்கும். அதற்கு மாறாக, யெகோவா சர்வலோகப் பேரரசராகத் தம்மை நியாயநிரூபணம் செய்யவிருக்கும் இந்த மிக அதிக இன்றியமையாதக் காலத்தில் யெகோவாவுக்குச் சாட்சிகளாக உண்மையுடன் தொடர்ந்து செயல்பட நாம் தீர்மானித்திருக்கிறோம். (w91 11/1)
[அடிக்குறிப்புகள்]
a உதாரணமாக, கிறிஸ்டீன் எலிசபெத் கிங் பின்வருமாறு எழுதினாள்: “சாட்சிகளுக்கு எதிராக மாத்திரமே [நாஜி] அரசாங்கம் வெற்றியடையவில்லை, ஏனெனில் அவர்கள் [அரசாங்கத்தார்] ஆயிரக்கணக்கானோரைக் [யெகோவாவின் சாட்சிகளை] கொன்றபோதிலும், அந்த வேலை [சாட்சிகொடுக்கும் வேலை] தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது, மே 1945-ல் யெகோவாவின் சாட்சிகளின் இயக்கம் இன்னும் உயிருடன் இருந்தது, தேசீய பொதுவுடைமை அரசாங்கமோ இல்லாமற்போயிற்று. சாட்சிகளின் எண்ணிக்கைகள் பெருகியிருந்தன, விட்டுக்கொடுத்து இணங்கிப்போதல் எதுவும் செய்யப்படவில்லை. அந்த இயக்கம் இரத்தச் சாட்சிகளை அடைந்து யெகோவா தேவனின் போரில் மேலும் ஒரு சண்டையை வெற்றியுடன் நடத்தி முடித்தது.”—நாஜி அரசாங்கமும் புதிய மதங்களும்: இணங்கிப்போகாததில் ஐந்து வழக்கு ஆராய்ச்சிகள், [The Nazi State and the New Religions: Five Case Studies in Noncon-formity, பக்கம் 193.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ நம்முடைய சகிப்புத்தன்மை பரீட்சிக்கப்படுவதை நாம் ஏன் தவிர்க்க முடியாது?
◻ என்ன ஏமாற்றத்தை நாம் தவிர்க்க விரும்புகிறோம்?
◻ நாம் எம்முறையிலாவது பலன் குன்றுவதைத் தவிர்க்க, எது தேவை?
◻ நம்முடைய இலக்குவாசகம் என்ன?
◻ தொல்லைமிகுந்த காலங்களில், சகிப்பதற்கு எது உதவிசெய்யும்?
15. (எ) நம்முடைய இலக்குவாசகம் என்ன, எந்த அனுபவங்களினூடே கடவுள் நம்மைத் தாங்கி நடத்தி வெற்றிக்களிப்புடன் கொண்டுவந்திருக்கிறார்? (பி) பவுல் கொடுத்துள்ள எந்த அறிவுரை நம்முடைய நாளுக்குப் பொருந்துவதாய் நிலைத்திருக்கிறது?
[பக்கம் 11-ன் படம்]
ஸ்பெய்னின் துறைமுகமான டிரினிடாடிலுள்ள இந்தச் சாட்சிகளைப்போல், கடவுளுடைய ஜனங்கள், யெகோவாவுக்காகக் காத்திருக்க எப்பொழுதும் மனமுவந்தவர்கள்