முதலாவது “அவருடைய நீதிநெறிகளை” நாடிக்கொண்டே இருங்கள்
“முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருங்கள், அப்போது இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.”—மத். 6:33.
1, 2. கடவுளுடைய நீதிநெறிகள் என்றால் என்ன, அவை எதன் அடிப்படையில் இருக்கின்றன?
‘முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தை . . . நாடிக்கொண்டே இருங்கள்.’ (மத். 6:33) இயேசு கிறிஸ்து தமது மலைப்பிரசங்கத்தில் கொடுத்த இந்த அறிவுரையை யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் நன்கு அறிந்திருக்கிறோம். நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இந்த அரசாங்கத்தை நேசிக்கிறோம் என்பதைக் காட்ட முயலுகிறோம், அதற்கு உண்மையுள்ளவர்களாக இருக்கவும் விரும்புகிறோம். ஆனால் இந்த வசனத்தின் இரண்டாம் பகுதியான, ‘கடவுளுடைய நீதிநெறிகளுக்கும்’ நாம் கவனம் செலுத்த வேண்டும். அப்படியானால், கடவுளுடைய நீதிநெறிகள் என்றால் என்ன? அதை முதலாவது நாடுவது எதை அர்த்தப்படுத்துகிறது?
2 நீதிநெறிகள் என்பதற்கு மூல மொழியில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை “நியாயம்” அல்லது “நேர்மை” எனவும் மொழிபெயர்க்கலாம். ஆகவே, கடவுளுடைய நீதிநெறிகள் அவருடைய தனிப்பட்ட நியதிகள் மற்றும் மதிப்பீடுகளின்படி எப்போதும் நேர்மையானவையாகவே இருக்கின்றன. யெகோவா படைப்பாளராக இருப்பதால், எது சரி எது தவறு, எது நல்லது எது கெட்டது என்ற நியதியை வகுக்க, அதாவது ஏற்படுத்த அவருக்கு உரிமை இருக்கிறது. (வெளி. 4:11) இருந்தாலும், அவருடைய நீதிநெறிகள் கொடூரமான, கறாரான சட்டத் தொகுப்பாகவோ கணக்குவழக்கில்லாத சட்ட திட்டங்களாகவோ இல்லை. மாறாக, அவை யெகோவாவின் சுபாவத்தையும் அவருடைய பிரதான குணமான நீதியையும் அடிப்படையாகக் கொண்டவை; அந்த நீதியோடு மற்ற பிரதான குணங்களான அன்பு, ஞானம், வல்லமை ஆகியவையும் கைகோர்த்துக் கொள்கின்றன. ஆகவே, கடவுளுடைய நீதிநெறிகள், அவருடைய சித்தத்தோடும் நோக்கத்தோடும் சம்பந்தப்பட்டுள்ளன. அவரைச் சேவிக்க விரும்புவோரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதும் இதில் உட்படுகிறது.
3. (அ) கடவுளுடைய நீதிநெறிகளை முதலாவது நாடுவது எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) யெகோவாவுடைய நீதியான நியதிகளை நாம் ஏன் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்?
3 கடவுளுடைய நீதிநெறிகளை முதலாவது நாடுவதன் அர்த்தம் என்ன? எளிய வார்த்தைகளில் சொன்னால், கடவுளைச் சந்தோஷப்படுத்தும் வகையில் அவருடைய சித்தத்தைச் செய்வதை இது அர்த்தப்படுத்துகிறது. அதாவது, நம்முடைய நியதிகளின்படி அல்லாமல், அவருடைய பரிபூரண நியதிகளின்படியும் மதிப்பீடுகளின்படியும் வாழ முயலுவதை இது குறிக்கிறது. (ரோமர் 12:2-ஐ வாசியுங்கள்.) இப்படி வாழ்வது யெகோவாவோடு நெருக்கமான பந்தம் வைப்பதை உட்படுத்துகிறது. இது, தண்டனைக்குப் பயந்து அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதைக் குறிப்பதில்லை. மாறாக, அவர்மீதுள்ள அன்பு அவரைச் சந்தோஷப்படுத்த நம்மைத் தூண்டுகிறது; ஆகவே, நம்முடைய சொந்த நெறிகளை வகுத்துக்கொள்ளாமல் அவருடைய நெறிகளை உறுதியாகக் கடைப்பிடிக்கிறோம். இப்படிச் செய்வதே சரியானது என நாம் அறிந்திருக்கிறோம்; இவ்வாறு செய்யும் விதத்தில்தான் நாம் உண்டாக்கப்பட்டிருக்கிறோம். கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவான இயேசு கிறிஸ்துவைப் போல, நாமும் நீதிநெறிகளை நேசிக்க வேண்டும்.—எபி. 1:8, 9.
4. கடவுளுடைய நீதிநெறிகளை நாடுவது ஏன் அந்தளவு முக்கியம்?
4 யெகோவாவின் நீதிநெறிகளை நாடுவது எந்தளவு முக்கியம்? இந்த விஷயத்தைக் கவனியுங்கள்: நெறிகளை வகுக்க யெகோவாவுக்கு உரிமை இருப்பதை ஆதாமும் ஏவாளும் ஏற்றுக்கொள்வார்களா என்பதைப் பரிசோதித்துப் பார்க்கவே ஏதேன் தோட்டத்தில் அவர்களுக்கு ஒரு கட்டளை கொடுக்கப்பட்டது. (ஆதி. 2:17; 3:5) அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் போனதால், அவர்களுடைய சந்ததியாரான நம்மைத் துன்பமும் மரணமும் தொற்றிக்கொண்டன. (ரோ. 5:12) மறுபட்சத்தில், ‘நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்’ என்று கடவுளுடைய வார்த்தை குறிப்பிடுகிறது. (நீதி. 21:21) ஆம், கடவுளுடைய நீதிநெறிகளை முதலாவது நாடினால் யெகோவாவுடன் சுமூகமான பந்தத்தை வைத்துக்கொள்ள முடியும்; இதன் மூலம் நாம் மீட்பைப் பெறுவோம்.—ரோ. 3:23, 24.
சுயநீதியின் ஆபத்து
5. நாம் தவிர்க்க வேண்டிய ஆபத்து என்ன?
5 அப்போஸ்தலன் பவுல் ரோம கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில், கடவுளுடைய நீதிநெறிகளை முதலாவது நாடுவதில் சிறந்து விளங்குவதற்கு நாம் எல்லாருமே தவிர்க்க வேண்டிய ஓர் ஆபத்தைப் பற்றி விளக்கினார். அவர் தன்னுடைய சக யூதர்களைப் பற்றிப் பேசுகையில், “அவர்களுக்குக் கடவுள்மீது பக்திவைராக்கியம் இருக்கிறது என்று சாட்சி சொல்கிறேன்; ஆனால், அது திருத்தமான அறிவுக்கேற்ற பக்திவைராக்கியம் அல்ல. கடவுளுடைய வழியில் நீதிமான்களாவது எப்படியென அறிந்துகொள்ளாமல் தங்களுடைய சொந்த வழியில் நீதிமான்களாவதற்கு அவர்கள் முயற்சி செய்கிறார்கள்; அதனால், கடவுளுடைய நீதியான வழிக்குக் கட்டுப்படாமல் இருக்கிறார்கள்” என்று சொன்னார். (ரோ. 10:2, 3) பவுல் சொல்கிறபடி, அந்த யூதர்கள் தங்களுடைய சொந்த வழியில் நீதிமான்களாவதற்குத் தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருந்ததால் கடவுளுடைய நீதிநெறிகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போனது.
6. நாம் என்ன மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும், ஏன்?
6 மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்துப் போட்டி மனப்பான்மையுடன் கடவுளுக்குச் சேவை செய்தால், இந்தக் கண்ணியில் நாம் சிக்கிவிடலாம். இந்த மனப்பான்மையால், நம்மை அறியாமலேயே நம்முடைய திறமைகளைக் குறித்து மட்டுக்குமீறிய தன்னம்பிக்கை உள்ளவர்களாகி விடுவோம். அவ்வாறு நடந்துகொண்டால், நாம் உண்மையில் யெகோவாவின் நீதிநெறிகளை மறந்துவிடுவோம். (கலா. 6:3, 4) யெகோவாமீதுள்ள அன்புதான் சரியானதைச் செய்ய நம்மைத் தூண்டுகிறது. மாறாக, சொந்த வழியில் நீதிமான்களாவதற்கு நாம் முயற்சி செய்தால் கடவுள்மீதுள்ள நம் அன்பு அர்த்தமற்றதாகிவிடும்.—லூக்கா 16:15-ஐ வாசியுங்கள்.
7. சுயநீதியின் ஆபத்தை இயேசு எப்படி விளக்கினார்?
7 ‘தாங்கள் நீதிமான்கள் என்ற நினைப்பில் மற்றவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காதவர்களை’ நினைத்து இயேசு கவலைப்பட்டார். சுயநீதியின் ஆபத்தை விளக்க அவர் ஓர் உவமையைச் சொன்னார்: “இரண்டு பேர் ஜெபம் செய்வதற்காக ஆலயத்திற்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன். அந்தப் பரிசேயன் நின்றுகொண்டு, ‘கடவுளே, கொள்ளையடிப்பவர்களையும் அநீதிமான்களையும் மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் போலவோ, வரி வசூலிக்கிற இவனைப் போலவோ நான் இல்லாததற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன். வாரத்தில் இரண்டு முறை விரதம் இருக்கிறேன், எனக்குக் கிடைக்கிற எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பாகத்தைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன்’ என்று மனதிற்குள் ஜெபம் செய்தான். தூரத்தில் நின்றுகொண்டிருந்த வரி வசூலிப்பவனோ தன்னுடைய கண்களை வானத்திற்கு ஏறெடுக்கக்கூடத் துணியாமல், தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியான எனக்குத் தயவு காட்டுங்கள்’ என்று ஜெபம் செய்தான்.” அந்த உவமையை இயேசு இவ்வாறு முடித்தார்: “நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவனைவிட இவனே அதிக நீதியுள்ளவனாகத் தன் வீட்டிற்குப் போனான்; ஏனென்றால், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்; தன்னைத்தான் தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான்.”—லூக். 18:9-14.
மிஞ்சின நீதிமானாவது மற்றொரு ஆபத்து
8, 9. ‘மிஞ்சின நீதிமானாக’ இருப்பதன் அர்த்தம் என்ன, இது நம்மை எதற்கு வழிநடத்தும்?
8 நாம் தவிர்க்க வேண்டிய மற்றொரு ஆபத்தைப் பற்றி பிரசங்கி 7:16 இவ்வாறு சொல்கிறது: ‘மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?’ அப்படிப்பட்ட மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டியதன் காரணத்தை 20-ஆம் வசனம் இவ்வாறு விளக்குகிறது: “ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.” ‘மிஞ்சின நீதிமானாகிற’ ஒருவர், சொந்தமாக நீதிநெறிகளை வகுத்துக்கொண்டு அவற்றின் அடிப்படையில் மற்றவர்களை நியாயந்தீர்க்கிறார். ஆனாலும், இப்படிச் செய்வதன் மூலம் அவர் தன்னுடைய நெறிகளைக் கடவுளுடைய நெறிகளுக்கு மேலாகக் கருதுகிறார் என்பதையும் அதனால் கடவுளுடைய பார்வையில் அநீதிமானாகி விடுகிறார் என்பதையும் புரிந்துகொள்வதில்லை.
9 ‘மிஞ்சின நீதிமானாக’ இருப்பது யெகோவா காரியங்களைக் கையாளும் விதத்தைச் சந்தேகிக்குமளவுக்கு நம்மைக் கொண்டுபோய்விடும். யெகோவா தீர்மானிப்பவை நியாயமானதா அல்லது சரியானதா என நாம் சந்தேகித்தால், ஒரு கருத்தில் நம்முடைய நெறிகளை அவருடைய நெறிகளுக்கு மேலாகக் கருத ஆரம்பிக்கிறோம் என்பதை நினைவில் வைப்பது அவசியம். அப்படிச் செய்வது, யெகோவாவை விசாரணை கூண்டில் ஏற்றி, நம்முடைய சொந்த நெறிகளின் அடிப்படையில் அவரை நியாயம் விசாரிப்பதுபோல் இருக்கும். ஆனால், நீதிநெறிகளை வகுப்பதற்கு உரிமையுள்ளவர் யெகோவாவே, நாம் அல்ல!—ரோ. 14:10.
10. யோபைப் போல நாமும் எந்தச் சூழ்நிலையில் கடவுளை நியாயந்தீர்த்து விடுவோம்?
10 நாம் யாருமே யெகோவாவை வேண்டுமென்றே நியாயந்தீர்க்க விரும்புவதில்லை; என்றாலும், நம்முடைய அபூரணத்தன்மையால் அப்படிச் செய்துவிடுகிறோம். ஒருவேளை அநியாயத்தைப் பார்த்தாலோ, நமக்கு ஏதாவது துன்பம் வந்தாலோ சட்டென அப்படி நியாயந்தீர்த்துவிடுகிறோம். கடவுளுக்கு உண்மையுள்ளவராய் இருந்த யோபும்கூட இந்தத் தவறைச் செய்தார். ஆரம்பத்தில் யோபு, ‘உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாய்’ இருந்ததாக பைபிள் விவரிக்கிறது. (யோபு 1:1) ஆனால், பிற்பாடு அவருக்கு அடுத்தடுத்து பல கஷ்டங்கள் வந்தபோது, அவற்றையெல்லாம் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களாகக் கருதினார். இதனால், தன்னை ‘தேவனைப்பார்க்கிலும் நீதிமானாக’ சொல்லிக்கொண்டார். (யோபு 32:1, 2) யோபு தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. சில சமயங்களில் நாம் அதுபோன்ற சூழ்நிலையில் இருப்பதாக உணர்ந்தால், அதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், நம்முடைய சிந்தையைச் சரிப்படுத்த எது நமக்கு உதவலாம்?
நமக்கு எல்லா உண்மைகளும் தெரியாது
11, 12. (அ) ஏதாவது ஒரு காரியம் நமக்கு அநியாயமாகப் பட்டால், நாம் எதை நினைவில் வைக்க வேண்டும்? (ஆ) திராட்சைத் தோட்டத்தில் வேலை பார்த்தவர்களைப் பற்றிய இயேசுவின் உவமை, அநியாயத்தைச் சித்தரித்துக் காட்டுவதாக ஏன் சிலர் நினைக்கலாம்?
11 நமக்கு எல்லா உண்மைகளும் தெரியாது என்பதை நாம் முதலாவது நினைவில் வைக்க வேண்டும். யோபின் விஷயத்தில், அதுவே நடந்தது. தேவ புத்திரர் பரலோகத்தில் கூடிவந்த சமயங்களையும் அங்கே தன்னைக் குறித்து சாத்தான் தவறாகக் குற்றஞ்சாட்டியதையும் பற்றி யோபுக்குத் தெரிந்திருக்கவில்லை. (யோபு 1:1-12; 2:1-6) தனக்கு வந்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் சாத்தானே என்பது யோபுக்குத் தெரியாது. சொல்லப்போனால், சாத்தான் யாரென்றுகூட யோபுக்கு தெரியுமா என நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. அதனால், தன்னுடைய பிரச்சினைகளுக்குக் கடவுளே காரணம் என தப்புக்கணக்குப் போட்டார். ஆம், நமக்கு எல்லா உண்மைகளும் தெரியாதபோது நாம் சட்டென தவறான முடிவுக்கு வந்துவிடலாம்.
12 உதாரணத்திற்கு, திராட்சைத் தோட்டத்தில் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களைப் பற்றிய இயேசுவின் உவமையைக் கவனியுங்கள். (மத்தேயு 20:8-16-ஐ வாசியுங்கள்.) இங்கு, அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரர், நாள் முழுக்க வேலை செய்தவர்களுக்கும் ஒரு மணிநேரம் மட்டுமே வேலை செய்தவர்களுக்கும் ஒரே கூலி கொடுத்ததாக இயேசு விவரிக்கிறார். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா? நாள் முழுக்க கொளுத்தும் வெயிலில் வேலை பார்த்தவர்களை நினைத்து நீங்கள் ஒருவேளை பரிதாபப்படலாம். அவர்களுக்குத்தான் அதிகக் கூலி கொடுக்க வேண்டுமென்ற முடிவுக்கு நீங்கள் வரலாம்! அதனால், அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரரை அன்பற்றவர், அநியாயக்காரர் என்று முத்திரை குத்திவிடலாம். அவருக்கு எதிராக முறுமுறுத்த வேலையாட்களிடம் அவர் பேசிய விதமும்கூட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததுபோல் தோன்றலாம். ஆனால், நமக்கு எல்லா உண்மைகளும் தெரியுமா?
13. திராட்சைத் தோட்டத்து வேலையாட்களைப் பற்றிய இயேசுவின் உவமையை வேறெந்த கோணத்தில் நாம் பார்க்கலாம்?
13 இந்த உவமையை மற்றொரு கோணத்தில் ஆராயலாம். இதில் சொல்லப்பட்ட தோட்டத்துச் சொந்தக்காரர் தன்னுடைய வேலையாட்கள் எல்லாருமே தங்களுடைய குடும்பத்தினரின் வயிற்றுப்பாட்டைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்ததை நிச்சயம் அறிந்திருப்பார். இயேசுவின் காலத்தில் தோட்ட வேலையாட்களுக்கு தினக்கூலி கொடுக்கப்பட்டது. அவர்களுடைய குடும்பத்தினர் அந்தத் தினக்கூலியை நம்பியே இருந்தார்கள். இதை மனதில் வைத்து, அந்த நாளின் பதினோராம் மணிநேரத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டு ஒரு மணிநேரம் மட்டும் வேலை செய்தவர்களின் நிலைமையை யோசித்துப்பாருங்கள். அவர்களால் அந்த ஒரு மணிநேரத்திற்குரிய கூலியை வைத்து குடும்பத்தினருக்குச் சாப்பாடு போட முடிந்திருக்குமா? முடிந்திருக்காது. என்றாலும், அவர்கள் வேலை செய்ய மனமுள்ளவர்களாக இருந்தார்கள்; அதுமட்டுமா, அந்த நாள் முழுவதும் அவர்கள் வேலை தேடிக்கொண்டிருந்தார்கள். (மத். 20:1-7) அவர்கள் காலையிலேயே வேலைக்கு அமர்த்தப்படாமல் போனது அவர்களுடைய குற்றமில்லை. அவர்கள் வேண்டுமென்றே வேலை செய்யாமல் இருந்ததாக வசனங்கள் குறிப்பிடுவதில்லை. நீங்கள் வேலைக்காக நாள் பூராவும் காத்திருப்பதாகக் கற்பனை செய்யுங்கள்; அன்றைய தினம், நீங்கள் கொண்டுவருகிற கூலியை நம்பிதான் குடும்பத்திலுள்ள மற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அந்த நேரத்தில் ஏதாவது ஒரு வேலை உங்களுக்குக் கிடைத்ததென்றால் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருப்பீர்கள்; அதோடு, உங்களுடைய குடும்பத்தினருக்கு உணவளிப்பதற்குப் போதுமான கூலியைப் பெறப்போவதை நினைத்து எவ்வளவாய் ஆச்சரியப்படுவீர்கள்!
14. திராட்சைத் தோட்டத்தைப் பற்றிய உவமையிலிருந்து என்ன மதிப்புமிக்க பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?
14 இப்போது, அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரர் செய்தது நியாயமா என்பதைச் சிந்திக்கலாம். அவர் யாருக்குமே குறைவாகக் கூலி கொடுக்கவில்லை. மாறாக, வேலையாட்கள் எல்லாருக்குமே குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதை உணர்ந்து அவர்களுக்குக் கூலி வழங்கினார். வேலைக்கு அதிக ஆட்கள் கிடைக்கிறார்கள் என்பதற்காகக் கூலியை அவர் அநியாயமாகக் குறைக்கவில்லை. வேலையாட்கள் எல்லாருமே தங்களுடைய குடும்பத்தினரின் வயிற்றுப்பாட்டிற்குத் தேவையான கூலியைப் பெற்று வீடு திரும்பினார்கள். கூடுதலான இந்த விவரங்களைச் சிந்தித்துப் பார்ப்பது, அவரைப் பற்றிய நம்முடைய கண்ணோட்டத்தை மாற்றலாம். அவர் எடுத்தத் தீர்மானத்தில் அன்புதான் மேலிட்டது; அவர் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யவில்லை. இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? ஒருசில உண்மைகளை மட்டுமே கருத்தில்கொண்டால், நாம் தவறான முடிவுக்குத்தான் வருவோம். ஆம், இந்த உவமை கடவுளுடைய நீதிநெறிகள் எவ்வளவு உயர்வானவை என்பதைச் சிறப்பித்துக் காட்டுகிறது; அவை, வெறுமனே சட்ட திட்டங்களின் அடிப்படையில் ஆனவையும் அல்ல, மனிதருடைய தகுதியின் அடிப்படையில் ஆனவையும் அல்ல.
தவறான அல்லது குறுகிய கண்ணோட்டம்
15. நியாயத்தைக் குறித்ததில் நம்முடைய கண்ணோட்டம் ஏன் தவறானதாகவோ குறுகியதாகவோ இருக்கலாம்?
15 சில சமயங்களில், ஒரு விஷயம் நமக்கு நியாயமற்றதாகத் தெரியலாம்; அதற்குக் காரணம் நம்முடைய கண்ணோட்டம் தவறானதாக அல்லது குறுகியதாக இருப்பதே. இது நாம் நினைவில் கொள்ள வேண்டிய இரண்டாவது அம்சம். அபூரணம், தப்பெண்ணம் அல்லது கலாச்சாரம் காரணமாக நம்முடைய கண்ணோட்டம் தவறானதாகிவிடலாம். மற்றவர்களுடைய உள்நோக்கங்களைப் புரிந்துகொள்ளவும் அவர்களுடைய இருதயத்தின் யோசனைகளை அறிந்துகொள்ளவும் இயலாததால் நம்முடைய கண்ணோட்டம் குறுகியதாக இருக்கிறது. யெகோவாவுக்கும் இயேசுவுக்குமோ இப்படிப்பட்ட வரம்புகள் எதுவும் இல்லை.—நீதி. 24:12; மத். 9:4; லூக். 5:22.
16, 17. பத்சேபாளுடன் தாவீது தவறான உறவுகொண்டபோது, யெகோவா தமது சட்டத்தின்படி அவர்களைத் தண்டிக்காததற்கு எது காரணமாக இருக்கலாம்?
16 பத்சேபாளுடன் தாவீது தவறான உறவுகொண்டதைப் பற்றிய பதிவை நாம் ஆராயலாம். (2 சா. 11:2-5) திருச்சட்டத்தின்படி, அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட வேண்டும். (லேவி. 20:10; உபா. 22:22) யெகோவா அவர்களுக்குத் தண்டனை வழங்கியபோதிலும், தம்முடைய சொந்த சட்டத்தின்படி அவர்களை நியாயந்தீர்க்கவில்லை. இந்த விஷயத்தில் யெகோவா நியாயமில்லாமல் நடந்துகொண்டாரா? தாவீதிடம் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டு, தம்முடைய நீதியான நெறிகளை அவர் மீறினாரா? பைபிளை வாசிக்கிற சிலர் அப்படித்தான் உணர்ந்திருக்கிறார்கள்.
17 என்றாலும், தவறான உறவுகொள்வது சம்பந்தமான இந்தச் சட்டத்தை அபூரண நீதிபதிகளுக்கு யெகோவா கொடுத்தார்; அவர்களால், மற்றவர்களுடைய இருதயத்தை அறிந்துகொள்ள முடியாது. அவர்களுக்குக் குறைகள் இருந்தபோதிலும், தில்லுமுல்லு செய்யாமல் ஒரேபோல் நியாயம் வழங்க இச்சட்டம் உதவியது. மறுபட்சத்தில், யெகோவாவால் மற்றவர்களுடைய இருதயத்தை அறிந்துகொள்ள முடியும். (ஆதி. 18:25; 1 நா. 29:17) ஆகவே, அபூரண நீதிபதிகளுக்கென யெகோவா கொடுத்த சட்டத்திற்கு அவரும் கட்டுப்பட வேண்டுமென நாம் எதிர்பார்க்கக் கூடாது. அவ்வாறு எதிர்பார்த்தால், நல்ல கண்பார்வையுள்ள ஒருவரிடம் கண்பார்வை சரியில்லாத ஒருவருக்காகச் செய்யப்பட்ட மூக்குக் கண்ணாடியைப் போடும்படி வற்புறுத்துவதுபோல் இருக்கும், அல்லவா? தாவீது மற்றும் பத்சேபாளின் இருதயத்தை யெகோவாவால் அறிய முடிந்தது, அவர்கள் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பியதைப் பார்க்கவும் முடிந்தது. அதைக் கருத்தில்கொண்டு, அதற்கேற்ப அவர்களை இரக்கத்தோடும் அன்போடும் நியாயந்தீர்த்தார்.
யெகோவாவின் நீதிநெறிகளைத் தொடர்ந்து நாடுங்கள்
18, 19. நம்முடைய சொந்த நெறிகளின்படி யெகோவாவை ஒருபோதும் நியாயந்தீர்க்காதிருக்க எது நமக்கு உதவும்?
18 சில சமயங்களில், ஒரு விஷயத்தில் யெகோவா நியாயமற்றவராய் நடந்துகொண்டதாக நாம் உணரலாம்; அது நாம் வாசித்த ஒரு பைபிள் பதிவாக இருக்கலாம், அல்லது வாழ்க்கையில் எதிர்ப்பட்ட கசப்பான ஓர் அனுபவமாக இருக்கலாம். அப்போது, நம்முடைய சொந்த நெறிகளின் அடிப்படையில் கடவுளை ஒருபோதும் நியாயந்தீர்க்காதிருப்போமாக. நமக்கு எப்போதுமே எல்லா உண்மைகளும் தெரியாது என்பதையும் நம்முடைய கண்ணோட்டம் தவறானதாகவோ குறுகியதாகவோ இருக்கலாம் என்பதையும் நினைவில் வையுங்கள். “கோபப்படுகிற மனிதனால் கடவுளுடைய நீதியை நடப்பிக்க முடியாது” என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். (யாக். 1:19, 20) அப்போது, நம் இருதயம் ஒருகாலும் ‘யெகோவாவின்மேல் கோபம் கொள்ளாது.’—நீதி. 19:3, திருத்திய மொழிபெயர்ப்பு.
19 நீதியானது எது நல்லது எது என்பதற்கான நெறியை வகுக்க யெகோவாவுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்பதை இயேசுவைப் போல நாமும் எல்லாச் சமயங்களிலும் ஏற்றுக்கொள்வோமாக. (மாற். 10:17, 18) அவருடைய நியதிகளைப் பற்றிய ‘திருத்தமான அறிவை’ அல்லது ‘உண்மையான அறிவை’ பெற முயலுங்கள். (ரோ. 10:2; 2 தீ. 3:7, இருபதாம் நூற்றாண்டின் புதிய ஏற்பாடு [ஆங்கிலம்]) இவற்றை ஏற்றுக்கொண்டு, யெகோவாவுடைய சித்தத்தின்படி வாழ்வதன் மூலம் “அவருடைய நீதிநெறிகளை” முதலாவது நாடுகிறோமென காட்டுகிறோம்.—மத். 6:33.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• யெகோவாவின் நீதிநெறிகளை நாடுவது ஏன் முக்கியம்?
• நாம் தவிர்க்க வேண்டிய இரண்டு ஆபத்துகள் என்ன?
• நாம் எப்படி முதலாவது கடவுளுடைய நீதிநெறிகளை நாடலாம்?
[பக்கம் 9-ன் படம்]
ஆலயத்தில் ஜெபம் செய்த இருவரைப் பற்றிய இயேசுவின் உவமையிலிருந்து நாம் கற்றுக்கொள்வதென்ன?
[பக்கம் 10-ன் படம்]
நாள் முழுக்க வேலை செய்தவர்களுக்குக் கொடுத்த அதே கூலியை 11-ஆம் மணிநேரத்தில் வேலைக்கு வந்தவர்களுக்கும் கொடுத்தது நியாயமா?