அயலானுக்கு அன்புகாட்டுதல் கூடியகாரியம்
இயேசு கிறிஸ்துவின் சமாரியன் உதாரணம் உண்மையான அயலான் அன்பு உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதைக் காண்பித்தது. (லூக்கா 10:25-37) இயேசு இதையும்கூட கற்பித்தார்: “‘உன் கடவுளாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்புகூரவேண்டும்,’ இதுவே முதலாம் பிரதான கட்டளை. இதையொத்த இரண்டாம் கட்டளை, ‘உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல், உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக,’ என்பதே.”—மத்தேயு 22:37-39, NW.
பல மக்களைப்போல, உங்களுக்குச் சொந்தமாயிராத ஓர் இன வகுப்பைச் சார்ந்த உங்கள் அயலானிடம் அன்புகாட்டுவது கடினமாய் இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா? இது அவ்வாறாக ஒருவேளை இருக்கலாம், ஏனென்றால் நீங்கள் ஓரவஞ்சகம், அநீதி காட்டப்பட்டிருப்பதைப் பற்றி அறிந்திருக்கலாம் அல்லது தனிப்பட்ட வகையில் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். நீங்களோ உங்களுடைய பிரியமானவர்களோ மற்றொரு தொகுதி மக்களால் கொடூரமாகவும் ஒருவேளை நடத்தப்பட்டிருக்கலாம்.
கடவுளின் கட்டளைகளில் ஒன்றாக, நாம் அயலானுக்கு அன்புகாட்டவேண்டும் என்று இயேசு குறிப்பிட்டதால், அப்படிப்பட்ட ஆழமான உணர்ச்சிகளை மேற்கொள்வது சாத்தியமானதாக இருக்கவேண்டும். இதைச் செய்வதற்கு உயிர்நாடி என்னவென்றால், கடவுளும் கிறிஸ்துவும் மக்களை எப்படிக் கருதுகிறார்களோ அப்படிக் கருதுவதாகும். இதன் சம்பந்தமாக, இயேசு மற்றும் ஆரம்ப கிறிஸ்தவர்களின் முன்மாதிரியை நாம் சிந்திக்கலாம்.
இயேசுவின் நல்ல முன்மாதிரி
யூதேயாவுக்கும் கலிலேயாவுக்கும் இடையே உள்ள பகுதியில் வாழ்ந்த சமாரியர்களுக்கு எதிராக முதல் நூற்றாண்டு யூதர்கள் கடுமையான வெறுப்புணர்ச்சிகளைக் கொண்டிருந்தனர். ஒரு சமயத்தில் யூத எதிரிகள் ஆணவத்தோடு இயேசுவிடம் இவ்வாறு கேட்டனர்: ‘உன்னைச் சமாரியன் என்றும், பிசாசுபிடித்தவன் என்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே?’ (யோவான் 8:48) சமாரியருக்கு எதிரான வெறுப்புணர்ச்சி அவ்வளவு கடுமையாக இருந்ததால், சில யூதர்கள் சமாரியர்களை ஜெப ஆலயங்களில் அப்பட்டமாகச் சபிக்கவும் செய்தனர், மேலும் சமாரியர்களுக்கு நித்திய ஜீவ வாழ்க்கை கொடுக்கப்படக் கூடாது என்பதற்கு தினந்தோறும் ஜெபமும் செய்தனர்.
கொள்ளையர்களால் அடிக்கப்பட்டு விடப்பட்ட யூத மனிதனைப் பராமரித்து தன்னை ஓர் உண்மையான அயலானாக நிரூபித்த சமாரியனைப் பற்றிய ஓர் உதாரணத்தைக் கொடுக்கும்படி இயேசுவைத் தூண்டியது இந்த ஆழமாக ஊறிப்போயிருந்த பகையுணர்ச்சியைப் பற்றிய அறிவுதான். மோசேயின் நியாயப்பிரமாணத்தை நன்கு அறிந்திருந்த அந்த யூத மனிதன் “என் அயலான் யார்?” என்று கேட்டபோது இயேசு எவ்வாறு பதிலளித்திருக்கலாம். (லூக்கா 10:29) ஏன், இயேசு நேரடியாகவே, ‘உன் அயலான் என்பது உன்னுடைய சகவாசியாகிய யூதன் மட்டுமல்ல, மற்ற மக்களையும், சமாரியனையுங்கூட உள்ளடக்குகிறது,’ என்று பதிலளித்திருக்கலாமே. ஆனால் யூதர்கள் அதை ஒத்துக்கொள்வதற்கு அதிகக் கடினமாக உணர்ந்திருக்கக்கூடும். எனவேதான், சமாரியனின் இரக்கத்தைப் பெற்ற யூதன் ஒருவனைப் பற்றிய அந்த உதாரணத்தை அவர் சொன்னார். இதன்மூலமாக, யூதரல்லாதவர்களுக்கும் உண்மையான அயலான் அன்பு காட்டப்படவேண்டும் என்ற தீர்மானத்திற்கு வரும்படி செவிசாய்த்துக்கொண்டிருந்த யூதர்களுக்கு இயேசு உதவினார்.
இயேசு சமாரியருக்கு எதிரான வெறுப்புணர்ச்சிகளைக் கொண்டிருக்கவில்லை. ஒரு சமயம் அவர் சமாரியாவின் வழியே பிரயாணம் செய்தபோது, ஒரு கிணற்றருகே ஓய்வெடுக்க உட்கார்ந்தார்; அப்போது அவருடைய சீஷர்கள் உணவு வாங்கி வருவதற்காக அருகேயிருந்த ஊருக்குச் சென்றிருந்தார்கள். ஒரு சமாரிய பெண் தண்ணீர் மொள்ள வந்தபோது, இயேசு பின்வருமாறு சொன்னார்: “தாகத்துக்குத்தா.” யூதர்கள் சமாரியர்களோடு பழகுவதில்லை என்பதால், அவள் கேட்டாள்: “நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம்.” பின்பு இயேசு அவளுக்குச் சாட்சிகொடுத்தார், அவர்தான் மேசியா என்பதையும் பகிரங்கமாக அறிவித்தார். அவள் ஊருக்குள்போய், இவரிடத்தில் வந்து செவிகொடுக்கும்படி மற்றவர்களை அழைப்பதன்மூலம் அவள் பிரதிபலித்தாள். விளைவு? “அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.” யூத சகாக்களின் பரவலான போக்கினால் இயேசு வசீகரிக்கப்படாது இருந்தது எவ்வளவு நல்ல பலனுள்ளதாய் இருந்தது!—யோவான் 4:4-42.
கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல
இயேசு முக்கியமாக “காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு,” அதாவது யூதர்களிடம் பிரசங்கிக்கவேண்டும் என்பது கடவுளுடைய நோக்கமாயிருந்தது. (மத்தேயு 15:24) எனவேதான் ஆரம்பத்தில் அவரைப் பின்பற்றினவர்கள் யூத பின்னணியை உடையவர்களாக இருந்தனர். ஆனால் பெந்தெகொஸ்தே பொ.ச. 33-ல் பரிசுத்த ஆவி பொழியப்பட்டு மூன்றே ஆண்டுகளுக்குப் பின்பு, யூத விசுவாசிகள் சீஷராக்கும் வேலையை புறஜாதியார்களாகிய மற்ற தேசத்தார்களுக்கும் விஸ்தரிக்கும்படி யெகோவா விரும்பினார் என்பதைத் தெளிவுபடுத்தினார்.
தன்மீது அன்புகாட்டுவது போல ஒரு சமாரியனுக்கு அன்புகாட்டுவதென்பது யூத மனதிற்கு அதிகக் கடினமாக இருக்கும். சமாரியர்களைவிட அதிகக் குறைவான பொதுப் பழக்கமுடைய விருத்தசேதனம் அடையாத புறஜாதியாரிடம் அயலான் அன்பைக் காட்டுவது இதைவிடக் கடினமாக இருக்கும். புறஜாதியார்களைப் பற்றிய யூதர்களின் மனநிலையைக் குறித்து சொல்லும்போது, தி இன்டர்நேஷனல் ஸ்டான்டெர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது: “பு[திய] ஏ[ற்பாட்டின்] காலத்தில் அளவுக்கு அதிகமான வெறுப்பு, அவமதிப்பு, பகைமை போன்றவற்றை நாம் காண்கிறோம். அவர்கள் [புறஜாதியார்கள்] அசுத்தமானவர்கள் என கருதப்பட்டனர்; அவர்களோடு சிநேகப்பான்மையோடு பழகுவது சட்டத்திற்கு விரோதமானதாகக் கருதப்பட்டது. அவர்கள் கடவுளுக்கும் கடவுளுடைய மக்களுக்கும் எதிரிகளாய் இருந்தனர்; அவர்கள் யூத மதத்தைத் தழுவிக்கொள்பவர்களாக ஆகாத வரை, கடவுளைப் பற்றிய அறிவு அவர்களுக்கு மறுக்கப்பட்டது; ஏன், அப்போதுங்கூட பூர்வ காலத்தைப்போல அவர்கள் முழு அங்கத்தினராக ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. யூதர்கள் அவர்களுக்கு ஆலோசனைக் கொடுப்பதிலிருந்து தடைசெய்யப்பட்டனர்; கடவுள் சம்பந்தமான விஷயங்களை அவர்கள் கேட்டால், சபிக்கப்படுவர்.”
பலர் இந்தக் கருத்துக்களை உடையவர்களாக இருந்தாலும், அப்போஸ்தலன் பேதுரு ஒரு காட்சியைக் காணும்படி யெகோவா செய்தார்; அதில் ‘கடவுள் சுத்தப்படுத்தியவற்றை தீட்டு என்று சொல்லாதே’ என்று அவருக்கு சொல்லப்பட்டது. பின்பு கடவுள், புறஜாதியானாகிய கொர்நேலியுவின் வீட்டிற்கு இவரை வழிநடத்தினார். பேதுரு, கொர்நெலியுவுக்கும், அவர் குடும்பத்தினருக்கும், மற்ற புறஜாதியாருக்கும் கிறிஸ்துவைப் பற்றி சாட்சிக்கொடுத்தார். பேதுரு சொன்னார்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.” பேதுரு இன்னும் பிரசங்கம் செய்துகொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவி புதிய விசுவாசிகள்மீது வந்தது; இவர்கள் அப்போது முழுக்காட்டப்பட்டனர், கிறிஸ்துவைப் பின்பற்றின முதலாம் புறஜாதியார்களாய் ஆனார்கள்.—அப்போஸ்தலர், அதிகாரம் 10.
‘சகல தேசத்தாரையும் சீஷராக்கி’ என்ற இயேசுவின் கட்டளை சகல தேசங்களில் வாழும் யூதர்களுக்கு மட்டும் மட்டுப்பட்டதல்ல, புறஜாதியார்களையும் உட்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொண்டவர்களாக யூத விசுவாசிகள் இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டனர். (மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 11:18) புறஜாதியாருக்கு எதிராக அவர்களுக்குள் இருக்கும் எந்தவித உணர்ச்சிகளையும் மேற்கொண்டு, புறதேசத்தார் மத்தியிலிருந்து சீஷர்களை உருவாக்குவதற்கு ஒரு பிரசங்க ஏற்பாட்டை பேரார்வத்தோடு ஏற்பாடு செய்தனர். முப்பது ஆண்டுகளுக்குள்ளாகவே, அந்தச் சுவிசேஷம் “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்” பிரசங்கிக்கப்பட்டிருந்தது என்று சொல்லப்படும் அளவிற்கு இருந்தது.—கொலோசெயர் 1:23.
இந்தப் பிரசங்க வேலையை வழிநடத்திக்கொண்டிருந்தவர் அப்போஸ்தலன் பவுல்; இவரும் யூதப் பின்னணியைக் கொண்ட ஒரு கிறிஸ்தவராக இருந்தார். கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக ஆவதற்கு முன்பு, பரிசேயர்களுடைய மதப் பிரிவின் வைராக்கியமுள்ள உறுப்பினராக அவர் இருந்துவந்தார். அவர்கள் புறஜாதியாரை மட்டுமல்ல, அவர்களுடைய சொந்த தேசத்தைச் சேர்ந்த பொது மக்களையும்கூட ஏளனத்தோடு நோக்கினர். (லூக்கா 18:11, 12) ஆனால் பவுல், இப்படிப்பட்ட எண்ணங்கள் மற்றவர்களுக்கு அயலான் அன்பைக் காட்டுவதிலிருந்து தன்னைத் தடுப்பதற்கு அனுமதிக்கவில்லை. இதற்குப்பதிலாக, அவர் ‘புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாக’ ஆனார்; தன்னுடைய வாழ்க்கையை மத்தியதரைக் கடல் தேசங்கள் முழுவதும் சீஷராக்கும் வேலைக்காக ஒப்புக்கொடுத்தார்.—ரோமர் 11:13.
அவருடைய ஊழியக் காலத்தின்போது, பவுல் கல்லெறியுண்டார், அடிக்கப்பட்டார், சிறையிலடைக்கப்பட்டார். (அப்போஸ்தலர் 14:19; 16:22, 23) இப்படிப்பட்ட கடினமான அனுபவங்கள் அவரை வாழ்க்கையை வெறுக்கச்செய்து, சில தேசத்தார் மற்றும் இனங்களின் மத்தியில் தன்னுடைய நேரத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார் என்று அவர் உணரும்படி செய்ததா? நிச்சயமாகவே இல்லை. அவருடைய நாட்களிலிருந்த பல இனத் தொகுதிகளிலெல்லாம் நேர்மை இருதயமுள்ளவர்கள் ஆங்காங்கே சிதறியிருந்தார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார்.
கடவுளுடைய வழிகளில் போதிக்கப்படுவதற்கு விருப்பம் உள்ளவர்களாகப் புறஜாதியார்கள் இருந்தார்கள் என்று பவுல் கண்டுணர்ந்தபோது, அவர்களிடம் அன்புகாட்ட ஆரம்பித்தார். உதாரணமாக, தெசலோனிக்கேயர்களுக்கு அவர் எழுதினார்: “உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல, நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.” (1 தெசலோனிக்கேயர் 2:7, 8) இந்த இருதயப்பூர்வமான வார்த்தைகள், பவுல் புறஜாதியாராகிய தெசலோனிக்கேயர்மீது உண்மையில் அன்புகொண்டிருந்தார் என்பதைக் காட்டுகின்றன; அவர்களோடு நல்ல உறவைக் கொண்டிருப்பதன் சந்தோஷத்தைக் கெடுத்துப்போட எதையும் அனுமதிக்கவில்லை.
அயலான் அன்பு செயலில்
முதல் நூற்றாண்டைப்போலவே, இன்று கிறிஸ்தவச் சபையோடு தங்களைச் சேர்த்துக்கொள்கிறவர்கள் எல்லா இன தொகுதிகளின் மக்களிடமாக அயலான் அன்பை வளர்க்கிறார்கள். மற்றவர்களைப் பற்றிய தெய்வீக எண்ணத்தை வளர்ப்பதன்மூலமும், அவர்களோடு ராஜ்ய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதன்மூலமும், உண்மைக் கிறிஸ்தவர்கள் தாங்கள் ஒருபோதும் அறிய வந்திராத மக்களைப் பற்றிய அவர்களுடைய புரிந்துகொள்ளுதலை விஸ்தரித்திருக்கின்றனர். அவர்கள்மீது சகோதர அன்பையும் அவர்கள் காட்டுகின்றனர். (யோவான் 13:34, 35) இதுவே உங்களுடைய அனுபவமாகவுங்கூட இருக்கலாம்.
அவர்கள் 229 நாடுகளில் ‘சகல தேசங்களிலிருந்தும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலிருந்தும்’ வந்திருந்தாலும், இப்படிப்பட்ட அன்பு யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:9) உலகளாவிய சகோதரத்துவமாக, யெகோவாவை வணங்குவதிலும், இனக் கலவரங்களிலும் சண்டைகளிலும் ஈடுபட மறுப்பதிலும், உடன் மனிதர்களிடம் கொண்டுள்ள அனலான உறவுகளைக் கொள்ளையடிக்கும் தப்பெண்ணங்களை அறவே ஒதுக்கித் தள்ளிவிடுவதிலும் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்.
சாட்சிகளோடு கூட்டுறவுகொள்ளுங்கள்; எல்லா இன பின்னணிகளிலிருந்து வந்த மக்கள், கடவுளுடைய சித்தத்தை எவ்வாறு செய்கிறார்கள் என்பதைக் காண்பீர்கள். அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரஸ்தாபப்படுத்துவதால், அயலான் அன்பைச் செயலில் காண்பீர்கள். ஆம், அவர்களுடைய அயலானுக்கு அன்புகாட்ட உண்மையிலேயே அவர்கள் கற்றுக்கொண்டவர்கள் என்பதை அவர்களுடைய வாழ்க்கையின்மூலம் காட்டும் இரக்கமுள்ள, நேர்மையான மக்களை, அவர்களுடைய சபைகளில் சந்திப்பீர்கள்.
[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]
Arrival of the Good Samaritan at the Inn/The Doré Bible Illustrations/Dover Publications, Inc.
[பக்கம் 6-ன் படம்]
எல்லா இனங்களிலிருந்து வந்த சந்தோஷமான மக்களை நீங்கள் யெகோவாவின் சாட்சிகளின் சபைகளில் காண்பீர்கள்