‘ஒருவருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்’
“ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.”—ரோமர் 12:17.
1. எந்தப் பழக்கம் சர்வசாதாரணமாய் காணப்படுகிறது?
கூடப்பிறந்தவன் தன்னைத் தள்ளிவிட்டால் பதிலுக்கு அவனைத் தள்ளிவிடுவதுதான் ஒரு சிறுபிள்ளையின் சுபாவம். வருத்தகரமாக, இப்படிப் பதிலுக்குப்பதில் செய்வது சிறுபிள்ளைகள் மாத்திரமல்ல. பெரியவர்கள் பலரும் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள். ஒருவர் தன்னைப் புண்படுத்திவிட்டால் பதிலுக்குத் தானும் அவரைப் புண்படுத்த வேண்டுமென நினைக்கிறார்கள். பெரியவர்கள் பெரும்பாலோர் நிஜமாகவே மற்றவர்களைத் தள்ளிவிடுவதில்லை, ஆனால், தந்திரமான வழிகளில் தள்ளிவிடுவார்கள். பொதுவாக, தங்களைப் புண்படுத்தியவரைப்பற்றி மோசமான புரளிகளைப் பரப்பிவிடுவார்கள் அல்லது அவருடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு வழிகளைத் தேடுவார்கள். எந்த வழியைக் கையாண்டாலும் உள்நோக்கம் என்னவோ பழிவாங்க வேண்டும் என்பதுதான்.
2. (அ) பழிவாங்கும் தூண்டுதலை உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? (ஆ) என்னென்ன கேள்விகளையும் பைபிளில் எந்த அதிகாரத்தையும் நாம் சிந்திக்கப்போகிறோம்?
2 பழிவாங்க வேண்டுமென்ற தூண்டுதல் பலமாக இருந்தாலும், உண்மைக் கிறிஸ்தவர்கள் அதற்கு அடிபணிவதில்லை. மாறாக, “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்” என்ற அப்போஸ்தலன் பவுலின் அறிவுரையைப் பின்பற்ற அவர்கள் முயற்சி செய்கிறார்கள். (ரோமர் 12:17) இந்த உயர்ந்த நெறிமுறைக்கு இசைவாக வாழ நம்மை எது தூண்டும்? விசேஷமாக, யாருக்கு நாம் தீமைக்குத் தீமை செய்யக்கூடாது? பழிவாங்குவதைத் தவிர்ப்பதன்மூலம் என்ன பலன்களை நாம் அனுபவிப்போம்? இந்தக் கேள்விகளுக்குப் பதில்களைக் காண பவுலுடைய வார்த்தைகளின் சூழமைவை ஆராயலாம்; அதோடு, பழிவாங்குவதைத் தவிர்ப்பது ஏன் பின்பற்றுவதற்குச் சரியான, அன்பான, தன்னடக்கமான வழி என்பதை ரோமர் 12-ஆம் அதிகாரம் விளக்குவதையும் பார்க்கலாம். இந்த மூன்று அம்சங்களையும் ஒவ்வொன்றாகச் சிந்திப்போம்.
“அப்படியிருக்க . . . உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்”
3, 4. (அ) ரோமர் 12-ஆம் அதிகாரம் முதல் பவுல் எதைச் சிந்திக்கிறார், “அப்படியிருக்க” என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியதன் முக்கியத்துவம் என்ன? (ஆ) ரோமிலுள்ள கிறிஸ்தவர்கள்மீது கடவுளுடைய இரக்கம் என்ன பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்?
3 ஒரு கிறிஸ்தவருடைய வாழ்க்கையைப் பாதிப்பதில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய நான்கு அம்சங்களை 12-ஆம் அதிகாரத்தின் ஆரம்பத்தில் பவுல் சிந்திக்கிறார். யெகோவாவிடத்திலும் சக விசுவாசிகளிடத்திலும் விசுவாசத்தில் இல்லாதவர்களிடத்திலும் அரசாங்க அதிகாரிகளிடத்திலும் நமக்குள்ள உறவைப்பற்றி அவர் விளக்குகிறார். பழிவாங்குவதற்கான தூண்டுதல் உட்பட தவறான மனச்சாய்வுகளை எதிர்ப்பதற்கான ஓர் அடிப்படைக் காரணத்தை ரோமர் 12:1-ல் பவுல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அப்படியிருக்க, சகோதரரே, . . . தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.” “முன்னே சொல்லப்பட்டதன் அடிப்படையில்” என்று அர்த்தம் தருகிற “அப்படியிருக்க” என்ற வார்த்தையைக் கவனியுங்கள். எனவே, ‘முன்னே சொல்லப்பட்டதன் அடிப்படையில் இனி உங்களுக்கு நான் சொல்கிறவற்றைச் செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன்’ என்றே பவுல் சொல்லுகிறார். ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் எதை விளக்கியிருந்தார்?
4 பவுல் தனது கடிதத்தில் முதல் 11 அதிகாரங்களில், கடவுளுடைய ராஜ்யத்தில் கிறிஸ்துவுடன் அரசாளுவதற்கு யூதர்களுக்கும் புறதேசத்தாருக்கும் இருக்கிற அற்புதமான வாய்ப்பைப் பற்றியும், இஸ்ரவேலராய் பிறந்தவர்கள் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் போனதைப் பற்றியும் விளக்கினார். (ரோமர் 11:13-36) அந்தப் பொன்னான வாய்ப்பை ‘தேவனுடைய இரக்கங்களினால்’ மட்டுமே பெற முடிந்தது. பெருமளவில் கடவுள் காட்டியிருக்கும் இந்தத் தகுதியற்ற தயவிற்குக் கிறிஸ்தவர்கள் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்? அவர்களுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியுணர்வு பொங்கிவழிய வேண்டும்; அடுத்ததாக பவுல் பின்வருமாறு சொன்னதைச் செய்வதற்கு அவர்களை அது தூண்டியிருக்க வேண்டும்: ‘நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.’ (ரோமர் 12:1) அந்தக் கிறிஸ்தவர்கள் எவ்வாறு உண்மையில் தங்களையே கடவுளுக்குப் “பலியாக” ஒப்புக்கொடுக்க முடியும்?
5. (அ) ஒருவர் எவ்வாறு தன்னையே கடவுளுக்குப் “பலியாக” செலுத்த முடியும்? (ஆ) என்ன நியமம் ஒரு கிறிஸ்தவர் நடந்துகொள்ளும் விதத்தில் செல்வாக்கு செலுத்த வேண்டும்?
5 பவுல் தொடர்ந்து இவ்வாறு விளக்குகிறார்: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (ரோமர் 12:2) இந்த உலகத்தின் மனப்பான்மை தங்களுடைய சிந்தனையைச் செதுக்க இடங்கொடுக்காமல், கிறிஸ்து சிந்திக்கும் விதமாகவே சிந்திப்பதற்குத் தங்களுடைய மனதை அவர்கள் புதிதாக்க வேண்டியிருந்தது. (1 கொரிந்தியர் 2:16; பிலிப்பியர் 2:5) இந்த நியமம் நாமும் எல்லா உண்மைக் கிறிஸ்தவர்களும் அன்றாடம் நடந்துகொள்ளும் விதத்தில் செல்வாக்கு செலுத்த வேண்டும்.
6. ரோமர் 12:1, 2-ல் காணப்படும் பவுலுடைய நியாயவிவாதத்தின் அடிப்படையில், பழிவாங்குவதைத் தவிர்க்க எது நம்மைத் தூண்டுகிறது?
6 ரோமர் 12:1, 2-ல் பவுல் செய்கிற நியாயவிவாதம் எவ்வாறு நமக்கு உதவுகிறது? ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்குத் தொடர்ந்தும் பல்வேறு விதங்களிலும் காட்டியிருக்கிற, காட்டி வருகிற இரக்கத்திற்கு இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்க வேண்டும்; இந்த விஷயத்தில், ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட ரோமிலிருந்த கிறிஸ்தவர்களைப் பின்பற்ற வேண்டும். அப்படியிருப்பதால், நன்றியால் நிறைந்த இருதயம் நம்முடைய முழு பலத்தையும், வளங்களையும், திறமைகளையும் பயன்படுத்தி கடவுளுக்குச் சேவை செய்ய நம்மைத் தூண்டுகிறது. அந்த இருதயப்பூர்வமான ஆவலும்கூட உலகத்தாரைப்போல் அல்ல, ஆனால் கிறிஸ்துவைப்போலச் சிந்திக்க நம்மாலான அனைத்தையும் செய்ய நம்மைத் தூண்டுகிறது. கிறிஸ்துவின் சிந்தையைப் பெற்றிருப்பது சகவிசுவாசிகளையும் விசுவாசத்தில் இல்லாதவர்களையும் நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதைப் பாதிக்கிறது. (கலாத்தியர் 5:25) உதாரணமாக, கிறிஸ்துவைப்போல சிந்தித்தால், பழிவாங்கும் தூண்டுதலை நாம் கண்டிப்பாய் எதிர்ப்போம்.—1 பேதுரு 2:21-23.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக”
7. ரோமர் 12-ஆம் அதிகாரத்தில் எத்தகைய அன்பு கலந்தாலோசிக்கப்படுகிறது?
7 நாம் தீமைக்குத் தீமை செய்யாமலிருப்பது சரியான வழி என்பதால் மட்டுமே அல்ல, அன்பான வழியாக இருப்பதாலும்தான். அடுத்து, அன்பின் உள்நோக்கத்தை பவுல் பரிசீலிக்கும் விதத்தைக் கவனியுங்கள். ரோமர் புத்தகத்தில் கடவுளுடைய அன்பையும் கிறிஸ்துவினுடைய அன்பையும்பற்றி குறிப்பிடும்போது அவர் “அன்பு” (கிரேக்கில் ஆகாப்பி) என்ற வார்த்தையைப் பலமுறை பயன்படுத்துகிறார். (ரோமர் 5:5, 8; 8:35, 39) என்றாலும், 12-ஆம் அதிகாரத்தில் பவுல் ஆகாப்பி என்ற வார்த்தையை வித்தியாசமான விதத்தில் பயன்படுத்துகிறார்; அதாவது, சக மனிதர்களிடம் காட்டுகிற அன்பைப்பற்றி பேசும்போது பயன்படுத்துகிறார். ஆன்மீக வரங்கள் வித்தியாசப்படுவதையும், சில விசுவாசிகளிடம் அவை காணப்பட்டதையும் குறிப்பிட்ட பிறகு, பவுல் எல்லாக் கிறிஸ்தவர்களுமே வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு பண்பைப்பற்றிச் சொல்கிறார். “உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக” என்று அவர் கூறுகிறார். (ரோமர் 12:4-9) மற்றவர்களிடம் அன்பு காட்டுவது உண்மைக் கிறிஸ்தவர்களின் முக்கிய அடையாளமாகும். (மாற்கு 12:28-31) கிறிஸ்தவர்களாக நாம் காட்டும் அன்பு உண்மையானதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும்படி பவுல் நமக்கு அறிவுரை கூறுகிறார்.
8. மாயமற்ற அன்பை நாம் எவ்வாறு காட்டலாம்?
8 மேலும், “தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்” என்று சொல்வதன்மூலம் மாயமற்ற அன்பு எவ்வாறு காட்டப்படுகிறது என்பதை பவுல் குறிப்பிடுகிறார். (ரோமர் 12:9) “வெறுத்து,” “பற்றிக்கொண்டிரு” ஆகியவை வலிமையான வார்த்தைகள். “வெறுத்து” என்பதை “அடியோடு அருவருப்பது” எனவும் மொழிபெயர்க்கலாம். நாம் தீமையின் விளைவுகளை மட்டுமல்ல தீமையையே வெறுக்க வேண்டும். (சங்கீதம் 97:10) “பற்றிக்கொண்டிரு” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஒரு கிரேக்க வினைச்சொல், “ஒட்டுவதற்கு” என்ற நேரடி அர்த்தத்தைத் தருகிறது. உண்மையான அன்புள்ள ஒரு கிறிஸ்தவர் நற்குணத்தோடு அந்தளவு உறுதியாக ஒட்டிக்கொள்வதால் அது அவருடைய சுபாவத்திலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.
9. பவுல் திரும்பத் திரும்ப என்ன அறிவுரையைக் கொடுக்கிறார்?
9 அன்பின் விசேஷமான ஓர் அம்சத்தை பவுல் திரும்பத் திரும்ப குறிப்பிடுகிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்க வேண்டியதேயன்றி சபியாதிருங்கள்,” “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்,” ‘நீங்கள் பழிவாங்காமலிருங்கள்,’ “நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.” (ரோமர் 12:14, 17-19, 21) நம்மை எதிர்க்கிற, விசுவாசத்தில் இல்லாதவர்களையும்கூட நாம் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை பவுலின் வார்த்தைகள் தெளிவாகக் காட்டுகின்றன, அல்லவா?
“உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்”
10. நம்மைத் துன்புறுத்துகிறவர்களை எந்த வழியில் நாம் ஆசீர்வதிக்கலாம்?
10 “உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்” என்ற பவுலின் அறிவுரைப்படி நாம் எப்படி நடக்கலாம்? (ரோமர் 12:14) இயேசு தம் சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; . . . உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.” (மத்தேயு 5:44; லூக்கா 6:27, 28) எனவே, ஜெபம் செய்வதன்மூலம் நம்மைத் துன்புறுத்துகிறவர்களை ஆசீர்வதிக்கலாம். அறியாமல் அவர்கள் நம்மை எதிர்ப்பதால் சத்தியத்தைக் காண அவர்களுடைய கண்களைத் திறந்தருளும்படி நாம் யெகோவாவிடம் வேண்டிக்கொள்ளலாம். (2 கொரிந்தியர் 4:4) துன்புறுத்துகிறவர்களை ஆசீர்வதிக்குமாறு கடவுளிடம் வேண்டிக்கொள்வது வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றலாம் என்பது உண்மைதான். என்றாலும், எந்தளவுக்கு நாம் கிறிஸ்துவின் சிந்தையைப் பின்பற்றுகிறோமோ அந்தளவுக்கு எதிரிகளிடம் நாம் அன்பு காட்டுவோம். (லூக்கா 23:34) இதுபோன்ற அன்பைக் காட்டுவதால் என்ன பலன் கிடைக்கும்?
11. (அ) ஸ்தேவானின் முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) பவுலுடைய அனுபவம் காண்பிக்கிற விதமாக, துன்புறுத்துகிற சிலரின் வாழ்க்கையிலும் என்ன மாற்றம் ஏற்படலாம்?
11 தன்னைத் துன்புறுத்தியவர்களுக்காக ஜெபம் செய்தவர்களில் ஸ்தேவானும் ஒருவர்; அவருடைய ஜெபம் வீணாகவில்லை. பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு கொஞ்சகாலத்தில், கிறிஸ்தவ சபையினரை எதிர்த்தவர்கள் ஸ்தேவானைக் கைதுசெய்து, எருசலேமுக்கு வெளியே இழுத்துச் சென்று, கல்லெறிந்து கொன்றார்கள். அவர் இறப்பதற்கு முன்பு, “ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும்” என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார். (அப்போஸ்தலர் 7:58–8:1) ஸ்தேவான் யாருக்காக ஜெபம் செய்தாரோ அவர்களில் சவுலும் ஒருவர்; இவர், ஸ்தேவான் கொலை செய்யப்படுவதை ஆதரிப்பவராகவும், அதற்குச் சாட்சியாகவும் இருந்தார். பிற்பாடு உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, சவுலுக்குத் தரிசனமானார். ஒருகாலத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியவர் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவரானார்; அப்போஸ்தலன் பவுல் என அழைக்கப்படலானார்; ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தின் எழுத்தாளரும் இவரே. (அப்போஸ்தலர் 26:12-18) கிறிஸ்தவர்களை பவுல் துன்புறுத்தி வந்த காலத்தில் செய்த பாவத்தை அவர்மீது யெகோவா சுமத்தாதிருப்பதன் மூலம் ஸ்தேவானின் ஜெபத்திற்கு பதிலளித்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. (1 தீமோத்தேயு 1:12-16) ஆகவே, “உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்” என்று கிறிஸ்தவர்களுக்கு பவுல் அறிவுரை கூறியதில் ஆச்சரியமேதுமில்லை! துன்புறுத்துகிற சிலர் கடவுளுடைய ஊழியர்களாக மாறுவதற்குத் தகுதியானவர்களே என்பதை அவர் அறிந்திருந்தார். அதேபோல, இன்றும் துன்புறுத்துகிற சிலர் யெகோவாவின் சாட்சிகள் சமாதானமாய் நடந்துகொள்வதைப் பார்த்து விசுவாசிகளாக மாறியிருக்கிறார்கள்.
“எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்”
12. ரோமர் 12:9, 17-ல் காணப்படுகிற பவுலின் அறிவுரை எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்புடையது?
12 சத்தியத்தில் இல்லாதவர்களையும் மற்றவர்களையும் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதன்பேரில் பவுல் கொடுக்கும் அடுத்த அறிவுரை, “ஒருவருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்” என்பதாகும். இந்த அறிவுரை ‘தீமையை வெறுத்துவிடுங்கள்’ என்று அவர் முன்னே சொன்னதன் நியாயமான விளைவாக இருக்கிறது. மற்றவர்களுக்குத் தீமைக்குத் தீமை செய்யும்போது ஒருவர் உண்மையிலேயே தீமையை வெறுக்கிறார் என்று சொல்ல முடியுமா? அப்படித் தீமை செய்தால் அது “மாயமற்ற” அன்புக்கு எதிரானதாக இருக்கும். பிறகு பவுல், “எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்” என்று சொல்கிறார். (ரோமர் 12:9, 17) இந்த வார்த்தைகளை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
13. “எல்லா மனுஷருக்கு முன்பாகவும்” நாம் எப்படி நடந்துகொள்கிறோம்?
13 முன்னதாக கொரிந்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலர்கள் சந்தித்த துன்புறுத்துதலைப்பற்றி பவுல் குறிப்பிட்டிருந்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம். . . . வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம். தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்.” (1 கொரிந்தியர் 4:9-13) அதேபோல, இன்றும் இந்த உலகத்திலுள்ளவர்கள் உண்மைக் கிறிஸ்தவர்களைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அநியாயமாய் நாம் நடத்தப்படும்போதுகூட நன்மைகள் செய்வதை அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் கவனிக்கையில் கிறிஸ்தவர்களாக நாம் அறிவிக்கிற நற்செய்திக்கு மிகவும் சாதகமாகப் பிரதிபலிக்கத் தூண்டப்படலாம்.—1 பேதுரு 2:12.
14. சமாதானத்தை முன்னேற்றுவிக்க நாம் எந்தளவு செல்ல வேண்டும்?
14 என்றாலும், சமாதானத்தை முன்னேற்றுவிக்க நாம் எந்தளவுக்கு செல்ல வேண்டும்? நம்மால் முடிந்தளவுக்குச் செல்ல வேண்டும். “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” என்று கிறிஸ்தவ சகோதரர்களுக்கு பவுல் கூறுகிறார். (ரோமர் 12:18) “கூடுமானால்,” “உங்களாலானமட்டும்” ஆகிய வரம்பை உட்படுத்தும் சொற்றொடர்கள், மற்றவர்களோடு எப்பொழுதுமே சமாதானமாயிருக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக, ஒருவரோடு சமாதானமாய் இருக்க வேண்டும் என்பதற்காக கடவுளுடைய கட்டளையை நாம் மீற மாட்டோம். (மத்தேயு 10:34-36; எபிரெயர் 12:14) இருந்தாலும், நீதியான நியமங்களை விட்டுக்கொடுக்காமல் “எல்லா மனுஷரோடும்” சமாதானமாயிருக்க நம்மாலான அனைத்தையும் செய்கிறோம்.
‘நீங்கள் பழிவாங்காமலிருங்கள்’
15. பழிவாங்காதிருப்பதற்கு ரோமர் 12:19-ல் என்ன காரணம் சொல்லப்பட்டிருக்கிறது?
15 நாம் பழிவாங்காதிருப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணத்தை பவுல் வலியுறுத்துகிறார்; அது பின்பற்றுவதற்குரிய தன்னடக்கமான வழி. அவர் சொல்கிறதாவது: “பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.” (ரோமர் 12:19) ஒரு கிறிஸ்தவர் பழிவாங்க முயல்வது துணிகரச் செயலாகும். கடவுள் செய்ய வேண்டியதைத் தானே செய்ய துணிகிறார். (மத்தேயு 7:1) மேலும், காரியங்களைத் தானே செய்வதன்மூலம் “நானே பதிற்செய்வேன்” என்று யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதியில் நம்பிக்கை இல்லாதிருப்பதைக் காட்டுகிறார். உண்மைக் கிறிஸ்தவர்களோ, ‘தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு [யெகோவா] நியாயஞ்செய்வாரென்று’ நம்பிக்கையோடு இருக்கிறார்கள். (லூக்கா 18:7, 8; 2 தெசலோனிக்கேயர் 1:6-8) அவர்கள், பழிவாங்குவதை கடவுளின் கைகளில் தன்னடக்கத்தோடு விட்டுவிடுகிறார்கள்—எரேமியா 30:23, 24; ரோமர் 1:18.
16, 17. (அ) ஒருவருடைய தலையில் ‘அக்கினித்தழலைக் குவிப்பது’ எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) அன்பான செயல்கள் சத்தியத்தில் இல்லாதவரின் இருதயத்தை எவ்வாறு இளக வைத்திருக்கிறது என்பதைத் தனிப்பட்ட விதத்தில் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஓர் உதாரணம் தருக.
16 எதிரியைப் பழிவாங்கும்போது அது அவருடைய இருதயத்தைக் கடினமாக்குகிறது; ஆனால், அவரை அன்பாக நடத்துவது அவருடைய இருதயத்தை இளக வைக்கலாம். ஏன்? ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் சொன்ன வார்த்தைகளைக் கவனியுங்கள். “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்” என்று அவர் கூறுகிறார். (ரோமர் 12:20; நீதிமொழிகள் 25:21, 22) இதற்கு என்ன அர்த்தம்?
17 “அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்” என்ற உருவக நடை, பைபிள் காலங்களில் உலோகத்தை உருக்கும் முறையிலிருந்து பெறப்பட்டது. ஓர் உலோகத்தை உலைக்களத்தில் உருக்கியபோது, நெருப்புக்காக கீழே மட்டுமல்ல மேலேயும் நிலக்கரி குவிக்கப்பட்டது. அப்படி மேலே குவிக்கப்பட்ட நிலக்கரி எரிந்தபோது அதிகரித்த வெப்பத்தால் அந்தக் கடினமான உலோகம் உருகி, அதிலுள்ள கசடுகள் நீங்கி, உலோகம் பிரிக்கப்பட்டது. அதேவிதமாக, எதிர்க்கும் ஒருவருக்கு அன்பான செயல்களைச் செய்வதன்மூலம் அவருடைய கடினத்தன்மை ‘உருகும்படி’ செய்யலாம்; அதோடு, அவரிடமுள்ள சிறந்த குணங்களைக் வெளிக்கொண்டு வரலாம். (2 இராஜாக்கள் 6:14-23) சொல்லப்போனால், யெகோவாவின் ஊழியர்கள் தங்களுக்குச் செய்த அன்பான செயல்கள் காரணமாகவே இன்று கிறிஸ்தவ சபையில் இருக்கும் ஏராளமானோர் உண்மை வணக்கத்திடம் கவர்ந்திழுக்கப்பட்டிருக்கிறார்கள்.
நாம் ஏன் பழிவாங்குவதில்லை
18. பழிவாங்காமலிருப்பது ஏன் சரியானது, அன்பானது, தன்னடக்கமானது?
18 ரோமர் 12-ஆம் அதிகாரத்தைச் சுருக்கமாக ஆராய்ந்ததில் ஏன் ‘ஒருவருக்கும் தீமைக்குத் தீமை செய்யக்கூடாது’ என்பதற்கு முக்கியமான பல காரணங்களை நாம் பார்த்தோம். முதலாவது, பழிவாங்காமல் இருப்பது பின்பற்றுவதற்குச் சரியான வழியாகும். கடவுள் நம்மீது இரக்கம் காட்டியிருப்பதைக் கவனிக்கையில், இதுவே சரியானதாகவும் நியாயமானதாகவும் இருக்கிறது. நம்மையே யெகோவாவுக்கு அர்ப்பணிக்கவும், நம்முடைய எதிரிகளிடமும் அன்பு காட்டும்படியான கட்டளை உட்பட அவருடைய எல்லாக் கட்டளைகளுக்கும் மனப்பூர்வமாகக் கீழ்ப்படியவும் வேண்டும். இரண்டாவது, தீமைக்குத் தீமை செய்யாதிருப்பது பின்பற்றுவதற்குரிய அன்பான வழியாகும். பழிவாங்காமல் இருப்பதாலும், சமாதானத்தை அதிகரிக்கச் செய்வதாலும் கடுமையாய் எதிர்ப்பவர்களும்கூட யெகோவாவின் வணக்கத்தாராக மாறுவதற்கு அன்போடு நாம் உதவலாம். மூன்றாவது, தீமைக்குத் தீமை செய்யாதிருப்பது பின்பற்றுவதற்குரிய தன்னடக்கமான வழியாகும். “பழிவாங்குதல் எனக்குரியது” என்று யெகோவா சொல்லியிருப்பதால் நாமே பழிவாங்குவது துணிகரச் செயலாகும். மேலும், கடவுளுடைய வார்த்தை இவ்வாறு எச்சரிக்கிறது: “அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.” (நீதிமொழிகள் 11:2) பழிவாங்குவதை கடவுளுடைய கைகளில் ஞானமாக விட்டுவிடுவது நாம் தன்னடக்கத்தோடு நடந்துகொள்கிறோம் என்பதைக் காட்டுகிறது.
19. அடுத்த கட்டுரையில் நாம் எவற்றைக் கலந்தாலோசிப்போம்?
19 மற்றவர்களை நாம் எவ்வாறு நடத்த வேண்டுமென்று சிந்தித்த விஷயங்களை பவுல் சுருக்கமாகத் தொகுத்துரைக்கிறார். “நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு” என்று கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்துகிறார். (ரோமர் 12:21) இன்று என்ன தீய சக்திகளை நாம் எதிர்ப்படுகிறோம்? அவற்றை நாம் எவ்வாறு வெற்றிகொள்ளலாம்? இந்தக் கேள்விகளுக்கும் இது சம்பந்தமான பிற கேள்விகளுக்கும் பதில்களை நாம் அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிப்போம்.
உங்களால் விளக்க முடியுமா?
• ரோமர் 12-ஆம் அதிகாரத்தில் என்ன அறிவுரை திரும்பத் திரும்பக் காணப்படுகிறது?
• பழிவாங்காதிருக்க எது நம்மைத் தூண்டுகிறது?
• நாம் “தீமைக்குத் தீமை” செய்யாதிருந்தால் நாமும் மற்றவர்களும் என்ன நன்மைகளைப் பெறுவோம்?
[பக்கம் 22-ன் பெட்டி]
ஒரு கிறிஸ்தவர் பின்வரும் நபர்களுடன் வைத்திருக்கிற உறவை ரோமர் 12-ஆம் அதிகாரம் விளக்குகிறது:
• யெகோவா
• சகவிசுவாசிகள்
• சத்தியத்தில் இல்லாதவர்கள்
[பக்கம் 23-ன் படம்]
ரோமர்களுக்கு பவுல் எழுதிய கடிதம் கிறிஸ்தவர்களுக்கு நடைமுறையான அறிவுரையைக் கொடுக்கிறது
[பக்கம் 25-ன் படம்]
சீஷனாகிய ஸ்தேவானுடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?