“யெகோவாவுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்படுங்கள்”
“உங்கள் வேலையில் மந்தமாக இருக்காதீர்கள். யெகோவாவுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்படுங்கள்; அவருக்கு அடிமைகளாக வேலை செய்யுங்கள்.”—ரோ. 12:11.
1. இஸ்ரவேலர்கள் ஏன் மிருக பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினார்கள்?
யெகோவாவின் ஊழியர்கள் யெகோவாவை நேசிப்பதையும் அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவதையும் காட்டுவதற்காக மனமுவந்து பலிகளைச் செலுத்துகிறார்கள், அதாவது தியாகங்களைச் செய்கிறார்கள்; அவற்றை அவர் பிரியத்தோடு ஏற்றுக்கொள்கிறார். பூர்வகாலங்களில், இஸ்ரவேலர்கள் செலுத்திய வெவ்வேறு மிருக பலிகளையும் காணிக்கைகளையும் அவர் ஏற்றுக்கொண்டார். திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தபடி, தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பைப் பெறுவதற்காகவும் நன்றியைத் தெரிவிப்பதற்காகவும் அவர்கள் இந்தப் பலிகளைச் செலுத்தினார்கள். இன்றோ கிறிஸ்தவர்கள் அதுபோன்ற பலிகளை அல்லது காணிக்கைகளைச் செலுத்தும்படி அவர் எதிர்பார்ப்பதில்லை. என்றாலும், ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதத்தின் 12-ஆம் அதிகாரத்தில், இன்றும்கூட நாம் பலிகளைச் செலுத்தும்படி எதிர்பார்க்கப்படுவதாகச் சுட்டிக்காட்டினார். அவற்றை எப்படிச் செலுத்தலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
நம்மையே பலியாக அர்ப்பணித்தல்
2. கிறிஸ்தவர்களான நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறோம், அதில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது?
2 ரோமர் 12:1, 2-ஐ வாசியுங்கள். பரலோக நம்பிக்கை கொண்டிருந்த கிறிஸ்தவர்கள், யூதர்களாக இருந்தாலும் சரி புறதேசத்தாராக இருந்தாலும் சரி, விசுவாசத்தினால்தான் கடவுளுக்குமுன் நீதிமான்களாக அங்கீகரிக்கப்பட்டார்களே தவிர திருச்சட்டத்தின் செயல்களினால் அல்ல என இந்தக் கடிதத்தின் ஆரம்பப் பகுதியில் பவுல் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். (ரோ. 1:16; 3:20-24) ரோமர் 12-ஆம் அதிகாரத்தில், கிறிஸ்தவர்கள் தங்களுடைய நன்றியுணர்வைக் காட்டுவதற்காகத் தங்களையே அர்ப்பணிக்கும் விதத்தில் வாழ வேண்டும் என்று விளக்குகிறார். அப்படி அர்ப்பணிக்க நம்முடைய மனதை நாம் புதிதாக்கிக்கொள்ள வேண்டும். ஆனால், வழிவழியாய்ப் பெற்றிருக்கும் அபூரணத்தின் காரணமாக, நாம் ‘பாவத்தின் சட்டத்திற்கும் மரணத்தின் சட்டத்திற்கும்’ கட்டுப்பட்டிருக்கிறோம். (ரோ. 8:2) ஆகவே, நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் நம் குணாதிசயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்; அதாவது, ‘நம்முடைய மனதை உந்துவிக்கிற சக்தியினால் நாம் புதுப்பிக்கப்பட’ வேண்டும். (எபே. 4:23) இப்படிப்பட்ட தலைகீழ் மாற்றத்திற்கு, கடவுளுடைய உதவியும் அவருடைய சக்தியின் வழிநடத்துதலுமே முக்கியமாகத் தேவைப்படுகிறது. அதோடு, நம் பங்கிலும் மும்முரமான முயற்சி தேவைப்படுகிறது; இதற்காக நம்முடைய ‘சிந்திக்கும் திறனை நாம் பயன்படுத்த’ வேண்டும். அப்படியென்றால், “இந்த உலகத்தின் பாணியின்படி நடப்பதை” தவிர்த்து, அதன் ஒழுக்கங்கெட்ட நடத்தையையும், கீழ்த்தரமான பொழுதுபோக்கையும் ஏறுமாறான சிந்தனையையும் அறவே ஒதுக்க நம்மாலான அனைத்தையும் செய்ய வேண்டும்.—எபே. 2:1-3.
3. நாம் ஏன் கிறிஸ்தவ நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம்?
3 “நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய சித்தம்” என்னவென்பதை நமக்கு நாமே நிச்சயப்படுத்திக்கொள்ள நம்முடைய ‘சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தும்படியும்’ பவுல் அறிவுறுத்துகிறார். நாம் ஏன் தினமும் பைபிளை வாசித்து அதை ஆழ்ந்து சிந்திக்கிறோம்? ஏன் ஜெபம் செய்கிறோம்? ஏன் தவறாமல் கூட்டங்களுக்குச் செல்கிறோம்? ஏன் பிரசங்க வேலையில் ஈடுபடுகிறோம்? மூப்பர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகவா? மூப்பர்கள் அடிக்கடி இவற்றைக் குறித்து நமக்கு நினைப்பூட்டுவதற்காக அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். என்றாலும், யெகோவாமீது நமக்கிருக்கும் ஆழ்ந்த அன்பை வெளிக்காட்டுவதற்காகவே அவருடைய சக்தியின் உதவியுடன் கிறிஸ்தவ நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். அதோடு, அவற்றில் ஈடுபடுவது கடவுளுடைய சித்தம் என உறுதியாக நம்புகிறோம். (சக. 4:6; எபே. 5:10) இப்படி, உண்மையான கிறிஸ்தவர்களாக வாழும்போதுதான் நாம் கடவுளுக்குப் பிரியமுள்ளவர்களாய் இருக்க முடியும்; இதைப் புரிந்துகொள்வது நமக்கு அளவில்லா சந்தோஷத்தையும் திருப்தியையும் அளிக்கும்.
வெவ்வேறு வரங்கள்
4, 5. மூப்பர்கள் தங்களுடைய வரங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
4 ரோமர் 12:6-8, 11-ஐ வாசியுங்கள். “நமக்கு அருளப்பட்ட அளவற்ற கருணையின்படி நாம் ஒவ்வொருவரும் வித்தியாசமான வரங்களைப் பெற்றிருக்கிறோம்” என்று பவுல் இங்கே விளக்குகிறார். அவர் குறிப்பிடுகிற சில வரங்கள், அதாவது அறிவுரை அளிப்பது, தலைமை தாங்குவது போன்ற வரங்கள், முக்கியமாகக் கிறிஸ்தவ மூப்பர்களுக்குப் பொருந்துகின்றன. அவர்கள் “ஊக்கந்தளராமல்” தலைமை தாங்கும்படி அவர் அறிவுறுத்துகிறார்.
5 கண்காணிகள், கற்பிப்பவர்களாக ‘ஊழியம்’ செய்யும்போதுகூட அவ்வாறே ஊக்கந்தளராமல் செய்ய வேண்டும் என்று பவுல் சொல்கிறார். இந்த வசனத்தின் சூழமைவைப் பார்க்கும்போது, ‘ஒரே உடலாக’ இருக்கிற சபைக்குள் செய்யப்படும் ‘ஊழியத்தையே’ பவுல் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. (ரோ. 12:4, 5) இந்த ஊழியம், அப்போஸ்தலர் 6:4-ன் அடிக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ள ஊழியத்தைப் போன்றது; ஜெபத்திற்கும் ‘கடவுளுடைய வார்த்தை சம்பந்தமான ஊழியத்திற்கும்’ நாங்கள் முழு கவனம் செலுத்துவோம் என்று அப்போஸ்தலர்கள் அறிவித்தார்கள். கிறிஸ்தவ மூப்பர்கள் இந்த ‘ஊழியத்தை’ எவ்வாறு செய்கிறார்கள்? சபையின் அங்கத்தினர்களைப் பலப்படுத்துவதற்காக அவர்கள் தங்களுடைய வரங்களைப் பயன்படுத்துகிறார்கள். கடவுளுடைய வார்த்தையிலிருந்து சபைக்கு வழிநடத்துதலையும் அறிவுரையையும் ஊக்கத்தோடு அளிக்கிறார்கள். இதற்காக அவர்கள் ஜெபசிந்தையோடு கடவுளுடைய வார்த்தையைப் படிக்கிறார்கள், ஆராய்ச்சி செய்கிறார்கள், கற்பிக்கிறார்கள், மேய்ப்பர்களாகச் சேவை செய்கிறார்கள். கண்காணிகள் தங்களுடைய வரங்களைச் சர்வ ஜாக்கிரதையோடு பயன்படுத்தி, ஆடுகளை “உற்சாகமாய்” பராமரிக்க வேண்டும்.—ரோ. 12:7, 8; 1 பே. 5:1-3.
6. இந்தக் கட்டுரையின் முக்கிய வசனமான ரோமர் 12:11-ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரையை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
6 பவுல் மேலும் இவ்வாறு சொல்கிறார்: “உங்கள் வேலையில் மந்தமாக இருக்காதீர்கள். யெகோவாவுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்படுங்கள்; அவருக்கு அடிமைகளாக வேலை செய்யுங்கள்.” ஊழியத்தில் நாம் ஏனோதானோவென்று இருப்பதுபோல் தெரிந்தால் நம்முடைய படிப்புப் பழக்கங்களைச் சரிசெய்ய வேண்டியிருக்கலாம்; அதிக ஊக்கத்தோடு அடிக்கடி ஜெபிக்க வேண்டியிருக்கலாம். அப்படிச் செய்யும்போது நாம் மந்தமாக இருக்க மாட்டோம்; மாறாக, ஆர்வக் கனலை வெளிக்காட்டுபவர்களாக இருப்போம். (லூக். 11:9, 13; வெளி. 2:4; 3:14, 15, 19) ‘கடவுளுடைய மகத்தான செயல்களை’ குறித்துப் பேச முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு அவருடைய சக்தி உத்வேகத்தை அளித்தது. (அப். 2:4, 11) அவ்வாறே, நாமும் ‘அந்தச் சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன்’ ஊழியத்தில் ஈடுபட அது நமக்கு உத்வேகத்தை அளிக்கும்.
மனத்தாழ்மையும் தன்னடக்கமும்
7. நாம் ஏன் மனத்தாழ்மையோடும் தன்னடக்கத்தோடும் ஊழியம் செய்ய வேண்டும்?
7 ரோமர் 12:3, 16-ஐ வாசியுங்கள். நாம் வரங்கள் ஏதேனும் பெற்றிருந்தால், யெகோவாவுடைய ‘அளவற்ற கருணையினாலேயே’ அவை நமக்குக் கிடைத்திருக்கின்றன. “கடவுளே [நமக்கு] போதிய தகுதியை அளித்திருக்கிறார்” என்று மற்றொரு சந்தர்ப்பத்தில் பவுல் சொன்னார். (2 கொ. 3:5) ஆகையால் நாம் பேரும் புகழும் தேடக் கூடாது. ஊழியத்தில் நமக்குக் கிடைக்கும் பலன்கள், நம்முடைய சொந்தத் திறமையினால் அல்லாமல் கடவுளுடைய ஆசீர்வாதத்தினாலேயே கிடைத்தன என்று நாம் மனத்தாழ்மையோடு ஒத்துக்கொள்ள வேண்டும். (1 கொ. 3:6, 7) அதனால்தான், ‘உங்களில் எவரும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ண வேண்டாம்’ என்று பவுல் சொல்கிறார். உண்மைதான், நமக்கென்று சுயமரியாதை இருக்க வேண்டும்; யெகோவாவின் ஊழியத்தில் சந்தோஷத்தையும் திருப்தியையும் அனுபவிக்க வேண்டும். என்றாலும், நாம் தன்னடக்கமாக இருந்தால், அதாவது நம்முடைய வரையரைகளை அறிந்திருந்தால், ‘நான் சொல்வதுதான் சரி’ என்று பிடிவாதமாக இருக்க மாட்டோம். மாறாக, நாம் “தெளிந்த மனம்” உள்ளவர்கள் என்பதைக் காட்டுவோம்.
8. நாம் எப்படி ‘நம்மையே விவேகிகள் என்று எண்ணாதிருக்கலாம்’?
8 நாம் சாதித்திருப்பவற்றைக் குறித்துப் பெருமையடிப்பது முட்டாள்தனமாகும். ஏனென்றால், உண்மையில் “வளரச் செய்கிற கடவுளுக்கே பெருமை சேரும்.” (1 கொ. 3:7) ‘அவரவருக்குக் கடவுள் அளித்துள்ள விசுவாசத்தையே’ சபை அங்கத்தினர் ஒவ்வொருவரும் பெற்றிருப்பதாக பவுல் குறிப்பிடுகிறார். ஆகையால், மற்றவர்களைவிட நாம் அதிகம் சாதித்திருக்கிறோம் என்று நினைக்காமல், அவர்கள் பெற்றுள்ள விசுவாசத்திற்கு ஏற்பவே அவர்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். “உங்களைப் பற்றி எப்படி நினைக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களைப் பற்றியும் நினையுங்கள்” என்றும் பவுல் சொல்கிறார். அவர் எழுதிய வேறொரு கடிதத்தில், ‘எதையும் பகைமையினாலோ வறட்டு கௌரவத்தினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினால் செய்யுங்கள்; மற்றவர்களை உங்களைவிட மேலானவர்களாகக் கருதுங்கள்’ என்று அறிவுறுத்துகிறார். (பிலி. 2:3) நம்முடைய சகோதர சகோதரிகள் ஏதோவொரு விதத்தில் நம்மைவிட மேலானவர்கள் என்பதை மனதில் வைக்க உண்மையான மனத்தாழ்மையும் உள்ளப்பூர்வமான முயற்சியும் தேவைப்படுகிறது. நமக்கு மனத்தாழ்மை இருந்தால், ‘நம்மையே விவேகிகள் என்று எண்ண’ மாட்டோம். நம்மில் சிலர் விசேஷ பொறுப்புகளைப் பெற்றிருப்பதால் முக்கியமானவர்களாகக் கருதப்பட்டாலும், ‘தாழ்மையான காரியங்களை,’ அதாவது மற்றவர்கள் கவனிக்காத சின்னச் சின்ன வேலைகளை, செய்வதில் நாம் எல்லாருமே அளவில்லா சந்தோஷத்தை அடையலாம்.—1 பே. 5:5.
சபையில் ஒற்றுமை
9. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை ஓர் உடலின் உறுப்புகளோடு பவுல் ஏன் ஒப்பிடுகிறார்?
9 ரோமர் 12:4, 5, 9, 10-ஐ வாசியுங்கள். பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை, ஓர் உடலின் உறுப்புகளுக்குப் பவுல் ஒப்பிடுகிறார்; தலையாக இருக்கும் கிறிஸ்துவுக்கு அவர்கள் கீழ்ப்பட்டு ஒற்றுமையாய்ச் செயல்படுவதாக அவர் கூறுகிறார். (கொலோ. 1:18) வெவ்வேறு வேலைகளைச் செய்வதற்கென்று பல உறுப்புகள் இருந்தாலும் அவை ஒரே உடலின் பாகமாக இருக்கின்றன; அதைப் போலவே, அந்தக் கிறிஸ்தவர்கள் ‘பலராக இருந்தாலும் கிறிஸ்துவோடு ஒன்றுபட்டு ஒரே உடலாக இருக்கிறார்கள்’ என்று அவர்களுக்கு நினைப்பூட்டுகிறார். எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கும் பவுல் இதுபோன்ற அறிவுரையை அளித்தார்: “கிறிஸ்துவின் கீழ் எல்லாவற்றிலேயும் அன்பினால் வளருகிறவர்களாய் இருக்க வேண்டும். அவரால்தான் உடலுறுப்புகள் அனைத்தும், அவற்றுக்கு உதவியளிக்கிற எல்லா மூட்டுகளாலும் ஒன்றோடொன்று இசைவாக இணைக்கப்பட்டு ஒற்றுமையாய் இயங்குகின்றன; ஒவ்வொரு உறுப்பும் அதனதன் முக்கிய வேலையைச் செய்வதால் முழு உடலும் வளர்ச்சியடைந்து அன்பினால் பலப்படுத்தப்படுகிறது.”—எபே. 4:15, 16.
10. ‘வேறே ஆடுகள்’ எந்த அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்?
10 பூமியில் வாழும் நம்பிக்கையுள்ள ‘வேறே ஆடுகள்,’ கிறிஸ்துவுடைய உடலின் பாகமாக இல்லாதபோதிலும், அந்த உவமையிலிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். (யோவா. 10:16) யெகோவா, “எல்லாவற்றையும் [கிறிஸ்துவின்] காலடியில் கீழ்ப்படுத்தி, சபையின் நன்மைக்கென்று எல்லாவற்றுக்கும் தலையாக அவரை நியமித்தார்” என்று பவுல் குறிப்பிடுகிறார். (எபே. 1:22) இன்று வேறே ஆடுகள், யெகோவா தம்முடைய மகனுக்குக் கீழ்ப்படுத்தியிருக்கிற ‘எல்லாவற்றின்’ பாகமாக இருக்கிறார்கள். அதோடு, ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையிடம்’ கிறிஸ்து ஒப்படைத்துள்ள ‘உடமைகளின்’ பாகமாகவும் இருக்கிறார்கள். (மத். 24:45-47) ஆகையால், பூமியில் வாழும் நம்பிக்கையுடையோர் கிறிஸ்துவே தங்களுக்குத் தலையாக இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்; உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கும், அதனுடைய ஆளும் குழுவுக்கும், அந்தக் குழுவால் நியமிக்கப்பட்ட சபைக் கண்காணிகளுக்கும் அடிபணிந்து நடக்க வேண்டும். (எபி. 13:7, 17) இது சபையின் ஒற்றுமைக்குப் பேருதவியாக இருக்கும்.
11. நம்முடைய ஒற்றுமை எதன் அடிப்படையில் இருக்க வேண்டும், பவுல் வேறு என்ன அறிவுரையை அளித்தார்?
11 ‘எல்லாரையும் பரிபூரணமாகப் பிணைக்கிற’ அன்பே அப்படிப்பட்ட ஒற்றுமைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். (கொலோ. 3:14) இதைத்தான் பவுல் ரோமர் 12-ஆம் அதிகாரத்தில் வலியுறுத்தி, நம்முடைய அன்பு ‘போலித்தனமான அன்பாக இருக்க வேண்டாம்’ என்றும், ‘சகோதர அன்பில்’ ‘ஒருவருக்கொருவர் கனிவான பாசத்தைக் காட்ட’ வேண்டும் என்றும் சொல்கிறார். இத்தகைய அன்பு ஒருவருக்கொருவர் மரியாதை காட்டத் தூண்டுகிறது. “ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்” என்று பவுல் குறிப்பிடுகிறார். அதே சமயத்தில், ஒருவர்மீது நமக்கு அன்பு இருக்கிறது என்பதற்காக அவர் தவறு செய்யும்போது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால் அது உண்மையான அன்பாக இருக்காது. சபையின் சுத்தம்காக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அன்பைக் குறித்து அறிவுரை அளித்தபோது, ‘பொல்லாததை அறவே வெறுத்து, நல்லதை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்’ என்று பவுல் சொல்கிறார்.
உபசரிக்கும் பழக்கம்
12. பகிர்ந்துகொள்வதைக் குறித்து பூர்வ மக்கதோனிய கிறிஸ்தவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
12 ரோமர் 12:13-ஐ வாசியுங்கள். நம் சகோதரர்கள்மீது நமக்கு அன்பிருந்தால், நம்மால் முடிந்தளவு அவர்களுடைய ‘தேவைகளுக்கு ஏற்ப அவர்களோடு பகிர்ந்துகொள்வோம்.’ நாம் ஏழையாக இருந்தாலும், நம்மிடம் இருப்பவற்றை அவர்களோடு பகிர்ந்துகொள்வோம். மக்கதோனியாவிலிருந்த கிறிஸ்தவர்களைப் பற்றி பவுல் தன் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: “கடும் சோதனையில் அவர்கள் கஷ்டப்பட்டபோதிலும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தார்கள்; கொடிய வறுமையில் வாடியபோதிலும் தாராள குணத்தைக் காட்டுவதில் செல்வந்தர்களாக விளங்கினார்கள். தங்களால் முடிந்த அளவுக்குக் கொடுத்தார்கள்; ஏன், அதைவிட அதிகமாகவே கொடுத்தார்கள்; அதற்கு நான் சாட்சி. [யூதேயாவிலிருந்த] பரிசுத்தவான்களுக்கு நிவாரணத் தொகை வழங்கி சேவை செய்கிற பாக்கியத்தைத் தர வேண்டுமென அவர்களாகவே வந்து திரும்பத்திரும்ப எங்களைக் கெஞ்சிக் கேட்டார்கள்.” (2 கொ. 8:2-4) ஆம், மக்கதோனியாவிலிருந்த கிறிஸ்தவர்கள் ஏழைகளாக இருந்தபோதிலும், தாராள குணம் படைத்தவர்களாக இருந்தார்கள். யூதேயாவிலிருந்த ஏழைச் சகோதரர்களுக்குத் தங்களிடமிருந்தவற்றைப் பகிர்ந்து கொடுப்பதைப் பாக்கியமாகக் கருதினார்கள்.
13. “உபசரிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்” என்ற சொற்றொடரின் அர்த்தம் என்ன?
13 “உபசரிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கச் சொற்றொடர், முன்முயற்சி எடுப்பதை அர்த்தப்படுத்துகிறது. த நியூ ஜெருசலேம் பைபிள் இந்தச் சொற்றொடரை, “உபசரிக்க எப்போது வாய்ப்புக் கிடைக்குமென்று காத்திருங்கள்” என மொழிபெயர்த்துள்ளது. உபசரிப்பு என்பது, சாப்பிடுவதற்காக ஒருவரை வீட்டிற்கு அழைப்பதைச் சில சமயம் குறிக்கிறது; அன்பினால் தூண்டப்பட்டு இப்படிச் செய்வது பாராட்டத்தக்கதே. ஆனாலும், உபசரிப்பதற்கு முன்முயற்சி எடுத்தால், அதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். நமக்குப் பணவசதி இல்லாதபோது, அல்லது உடல்நிலை சரியில்லாதபோது, சாப்பாட்டுக்கென்று ஒருவரை அழைக்க முடியாமற்போகலாம்; அதுபோன்ற சமயங்களில், வெறுமனே காபி, டீ போன்ற பானங்களுக்காக அழைக்கலாம். அதுவும்கூட உபசரிப்பதையே அர்த்தப்படுத்துகிறது.
14. (அ) ‘உபசரிப்பு’ என்ற வார்த்தைக்கு இணையான கிரேக்க வார்த்தை, எந்தச் சொற்களிலிருந்து பிறந்தது? (ஆ) ஊழியம் செய்யும்போது அயல் நாட்டவர்மீது நமக்கிருக்கும் அக்கறையை எவ்வாறு காட்டலாம்?
14 உபசரிக்கும் குணத்தைக் காட்டுவதில் நம் மனப்பான்மை உட்பட்டுள்ளது. ‘உபசரிப்பு’ என்ற வார்த்தைக்கு இணையான கிரேக்க வார்த்தை, ‘அன்பு,’ ‘அந்நியர்’ என்ற இரு சொற்களிலிருந்து பிறந்தது. அந்நியர் அல்லது அயல் நாட்டவரைக் குறித்து நாம் எப்படி உணருகிறோம்? கிறிஸ்தவர்கள் தங்களுடைய சபைப் பிராந்தியத்திலுள்ள அயல் நாட்டவருக்கு நற்செய்தியை அறிவிப்பதற்காக வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ளக் கடினமாய் முயற்சியெடுக்கும்போது, உபசரிக்கிற பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்களென்று நிச்சயமாகச் சொல்லலாம். சூழ்நிலை காரணமாக நம்மில் அநேகரால் வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். என்றாலும், நாம் எல்லாருமே அயல் நாட்டவருக்கு உதவி செய்யலாம். எப்படி? சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி என்ற சிறுபுத்தகத்தை நன்றாகப் பயன்படுத்துவதன் மூலம். அதில் பைபிள் செய்தி பல மொழிகளில் அடங்கியுள்ளது. அதை ஊழியத்தில் பயன்படுத்தியதால் நல்ல பலன்கள் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றனவா?
மற்றவர்களுடைய இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்
15. ரோமர் 12:15-ல் உள்ள அறிவுரைக்கு முன்மாதிரியாக இயேசு எப்படிச் செயல்பட்டார்?
15 ரோமர் 12:15-ஐ வாசியுங்கள். இந்த வசனத்தில் பவுல் அளித்துள்ள அறிவுரையை இப்படிச் சொல்லலாம்: மற்றவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு, அவர்களுடைய இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள். நாம் யெகோவாவுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்பட்டோம் என்றால், மற்றவர்களுடைய இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்கிறோம் என்பது தெளிவாகத் தெரியும். இயேசுவின் 70 சீடர்கள் நற்செய்தியைப் பிரசங்கித்துவிட்டுச் சந்தோஷமாகத் திரும்பிவந்து, தாங்கள் பெற்ற நல்ல அனுபவங்களை அவரிடம் விவரித்தபோது, அவரும்கூட ‘மகிழ்ச்சியினாலும் கடவுளுடைய சக்தியினாலும் நிறைந்தவரானார்.’ (லூக். 10:17-21) அவர்களுடைய இன்பத்தைப் பகிர்ந்துகொண்டார். மறுபட்சத்தில், தமது சிநேகிதனாகிய லாசரு இறந்த சமயத்தில், ‘அழுதுகொண்டிருந்தவர்களோடு சேர்ந்து அவரும் அழுதார்.’—யோவா. 11:32-35.
16. மற்றவர்களுடைய இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்வதை நாம் எப்படிக் காட்டலாம், முக்கியமாக யார் அதைக் காட்ட வேண்டும்?
16 மற்றவர்களுடைய இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்வதில் இயேசுவின் முன்மாதிரியை நாம் பின்பற்ற வேண்டும். சக வணக்கத்தார் ஒருவர் சந்தோஷமாக இருக்கிறார் என்றால், நாமும் அவருடைய சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதுபோலவே, நம் சகோதர சகோதரிகள் படுகிற கஷ்டங்களையும் வேதனைகளையும் நமக்கு வந்த துன்பங்களாகக் கருதி அவற்றைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். உணர்ச்சி ரீதியில் துன்பப்படுகிற சக வணக்கத்தார் ஒருவர் தன் கஷ்டங்களை நம்மிடம் சொல்லும்போது அவருக்கென்று நேரத்தை ஒதுக்கி அனுதாபத்தோடு கேட்டால் அவருடைய பாரம் பெருமளவு குறைந்துவிடும். அவர் சொல்வதைக் கேட்கக் கேட்க நம் உள்ளம் உருகி, சில சமயம் நம்மை அறியாமலேயே நம் கண்கள் குளமாகிவிடும். (1 பே. 1:22) மற்றவர்களுடைய இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி பவுல் அளித்த அறிவுரையை முக்கியமாக மூப்பர்கள் பின்பற்ற வேண்டும்.
17. ரோமர் 12-ஆம் அதிகாரத்தில் இதுவரை நாம் சிந்தித்த வசனங்களிலிருந்து என்ன கற்றுக்கொண்டோம், அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிச் சிந்திப்போம்?
17 ரோமர் 12-ஆம் அதிகாரத்தில் இதுவரை நாம் சிந்தித்த வசனங்களிலிருந்து, கிறிஸ்தவர்களாக நாம் எப்படி வாழ வேண்டுமென்றும், சக கிறிஸ்தவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்றும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டோம். அடுத்த கட்டுரையில், இதே அதிகாரத்தின் மற்ற வசனங்களை ஆராய்வோம்; நம்மை எதிர்ப்பவர்கள், துன்புறுத்துபவர்கள் உட்பட வெளியாட்கள் எல்லாரிடமும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திப்போம்.
மீண்டும் சிந்திக்க. . .
• ‘யெகோவாவுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்படுவதை’ நாம் எப்படிக் காட்டுகிறோம்?
• நாம் ஏன் மனத்தாழ்மையோடும் தன்னடக்கத்தோடும் கடவுளுக்கு ஊழியம் செய்ய வேண்டும்?
• சக வணக்கத்தாருடைய துன்பங்களை எவ்வழிகளில் நாம் பகிர்ந்துகொள்ளலாம்?
[பக்கம் 4-ன் படங்கள்]
இப்படிப்பட்ட கிறிஸ்தவ நடவடிக்கைகளில் நாம் ஏன் ஈடுபடுகிறோம்?
[பக்கம் 6-ன் படம்]
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ள அயல் நாட்டவருக்கு நாம் ஒவ்வொருவரும் எப்படி உதவலாம்?