“இப்போதே அனுக்கிரக காலம்”
“இதோ! இப்போதே அனுக்கிரக காலம். இதோ! இப்போதே மீட்பு நாள்.” —2 கொ. 6:2.
1. நமக்கிருக்கும் நேரத்தில் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை எதுவென்று நாம் நன்கு அறிந்திருப்பது ஏன் அவசியம்?
“ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.” (பிர. 3:1) விவசாயத்திற்கு, வியாபாரத்திற்கு, பயணிப்பதற்கு, பேசுவதற்கு என ஒவ்வொன்றிற்கும் ஏற்ற காலம் இருப்பதை நன்கு அறிந்திருப்பதன் அவசியத்தைப் பற்றியே சாலொமோன் இங்கு எழுதியிருக்கிறார். என்றாலும், நமக்கிருக்கும் நேரத்தில் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை எதுவென்றும் நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், நாம் எதற்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பது நம் மனதில் தெளிவாக இருக்க வேண்டும்.
2. இயேசு பிரசங்கித்தபோது தாம் வாழ்ந்த காலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
2 இயேசு பூமியிலிருந்தபோது தாம் வாழ்ந்த காலத்தின் முக்கியத்துவத்தையும் தாம் செய்ய வேண்டியிருந்த வேலையையும் பற்றி நன்கு அறிந்திருந்தார். வாழ்க்கையில் எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென்பது அவர் மனதில் தெளிவாக இருந்தது; ஏனென்றால், மேசியாவைப் பற்றி வெகு காலத்திற்கு முன்பு சொல்லப்பட்ட அநேக தீர்க்கதரிசனங்கள் அந்தச் சமயத்தில் நிறைவேறவிருந்ததை அறிந்திருந்தார். (1 பே. 1:11; வெளி. 19:10) தாம்தான் வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதை மக்களுக்கு உணர்த்த சில வேலைகளை அவர் செய்ய வேண்டியிருந்தது. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி முழுமையாகச் சாட்சி கொடுக்கவும், தம்மோடு ஆட்சி செய்யப்போகிறவர்களைக் கூட்டிச்சேர்க்கவும் வேண்டியிருந்தது. அதோடு, உலகெங்கும் பிரசங்க வேலையை வழிநடத்தப்போகிற கிறிஸ்தவ சபைக்கு அடித்தளம் போட வேண்டியிருந்தது.—மாற். 1:15.
3. இயேசு தாம் வாழ்ந்த காலத்தின் அவசரத்தன்மையை உணர்ந்திருந்ததால் என்ன செய்தார்?
3 காலத்தின் அவசரத்தன்மையை இயேசு உணர்ந்திருந்ததால் பக்திவைராக்கியத்தோடு தம் தகப்பனின் சித்தத்தைச் செய்தார். “அறுவடை மிகுதியாக இருக்கிறது, வேலையாட்களோ குறைவாக இருக்கிறார்கள். அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் எஜமானரிடம் கெஞ்சிக் கேளுங்கள்” என்று தம் சீடர்களிடம் சொன்னார். (லூக். 10:2; மல். 4:5, 6) இயேசு முதலில் 12 சீடர்களையும் பின்பு 70 பேரையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குச் சில அறிவுரைகளை வழங்கினார்; அதன்பின், “பரலோக அரசாங்கம் சீக்கிரம் வரப்போகிறது” என்ற ஆர்வத்தைத் தூண்டும் செய்தியைப் பிரசங்கிக்கும்படி அனுப்பினார். “தம்முடைய பன்னிரண்டு சீடர்களுக்கு இந்த அறிவுரைகளைக் கொடுத்து முடித்தபின், [அவரும்கூட] சுற்றியுள்ள நகரங்களில் கற்பிப்பதற்கும் பிரசங்கிப்பதற்கும் அங்கிருந்து புறப்பட்டுப் போனார்.”—மத். 10:5-7; 11:1; லூக். 10:1.
4. பவுல் எவ்வழியில் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றினார்?
4 பக்திவைராக்கியம் காட்டுவதில் தம்மைப் பின்பற்றிய எல்லாருக்கும் இயேசு பரிபூரண முன்மாதிரியாக இருந்தார். அதனால்தான், “நான் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதுபோல் நீங்கள் என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் சக கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். (1 கொ. 11:1) பவுல் எவ்வழியில் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றினார்? முக்கியமாக, நற்செய்தியை முழுமூச்சுடன் பிரசங்கிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். சபைகளுக்கு பவுல் எழுதிய கடிதங்களில் இதுபோன்ற வார்த்தைகளை நாம் கவனிக்கிறோம்: “உங்கள் வேலையில் மந்தமாக இருக்காதீர்கள்”; யெகோவாவுக்கு “அடிமைகளாக வேலை செய்யுங்கள்”; ‘எந்நேரமும் நம் எஜமானருடைய வேலையில் அதிகமதிகமாய் ஈடுபடுகிறவர்களாக இருங்கள்’; “நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனிதர்களுக்கென்று செய்யாமல், யெகோவாவுக்கென்றே முழுமூச்சோடு செய்யுங்கள்.” (ரோ. 12:11; 1 கொ. 15:58; கொலோ. 3:23) தமஸ்குவுக்குப் போகிற வழியில் நடந்த சம்பவத்தையும், சீடராகிய அனனியா மூலம் இயேசு சொன்ன வார்த்தைகளையும், அதாவது “புறதேசத்தாருக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் என்னுடைய பெயரை அறிவிப்பதற்கு அவனை ஒரு கருவியாக நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்ற வார்த்தைகளையும், பவுல் ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்.—அப். 9:15; ரோ. 1:1, 5; கலா. 1:16.
“அனுக்கிரக காலம்”
5. ஊழியத்தைப் பக்திவைராக்கியத்துடன் செய்ய பவுலைத் தூண்டியது எது?
5 அப்போஸ்தலர் புத்தகத்தை நாம் வாசிக்கும்போது பவுல் தன் ஊழியத்தில் காட்டிய தைரியமும் பக்திவைராக்கியமும் கண்ணில் படாமல் போகாது. (அப். 13:9, 10; 17:16, 17; 18:5) பவுல் தான் வாழ்ந்த காலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். “இதோ! இப்போதே அனுக்கிரக காலம். இதோ! இப்போதே மீட்பு நாள்” என்று சொன்னார். (2 கொ. 6:2) கி.மு. 537-ல், பாபிலோனில் சிறைப்பட்டிருந்த இஸ்ரவேலர் தாயகம் திரும்புவதற்கு அதுவே அனுக்கிரக காலமாக இருந்தது. (ஏசா. 49:8, 9) ஆனால், பவுல் இங்கு எந்த அனுக்கிரக காலத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்? அவர் எதை மனதில் வைத்துச் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ள சூழமைவு உதவுகிறது.
6, 7. இன்று பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொன்னான வாய்ப்பு என்ன, அவர்களுடன் சேர்ந்து யாரும் உழைக்கிறார்கள்?
6 பரலோக நம்பிக்கையுள்ள தனக்கும் சக கிறிஸ்தவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்த பெரும் வாய்ப்பைப் பற்றி கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில் பவுல் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார். (2 கொரிந்தியர் 5:18-20-ஐ வாசியுங்கள்.) அவர்கள் ஒரு விசேஷ நோக்கத்திற்காகக் கடவுளால் அழைக்கப்பட்டிருந்ததை விளக்கினார்; அதாவது “சமரசமாக்கும் ஊழியத்தை” செய்வதற்காக, ‘கடவுளோடு சமரசமாகும்படி’ மக்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வதற்காக, அழைக்கப்பட்டிருந்ததை விளக்கினார். இது மீண்டும் கடவுளோடு நட்புறவாவதை அல்லது சமாதானமாவதை அர்த்தப்படுத்தியது.
7 ஏதேனில் கலகம் நடந்தது முதற்கொண்டு மனிதவர்க்கம் கடவுளிடமிருந்து விலகியிருக்கிறது. (ரோ. 3:10, 23) அப்படி விலகியிருப்பது மக்களை ஆன்மீக இருளில் தள்ளியிருக்கிறது; இது துன்பத்திற்கும் மரணத்திற்கும் இழுத்துச் சென்றிருக்கிறது. “நாம் அறிந்திருக்கிறபடி, இதுவரை படைப்புகளெல்லாம் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன” என்று பவுல் எழுதினார். (ரோ. 8:22) ஆனால், மக்களைச் சமரசமாகும்படி ஊக்குவிப்பதற்கு, சொல்லப்போனால் ‘கெஞ்சிக் கேட்பதற்கு,’ கடவுள் நடவடிக்கை எடுத்தார். இந்த ஊழியம்தான் பரலோக நம்பிக்கையுள்ள பவுலிடமும் அவரது சக கிறிஸ்தவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது. அந்த “அனுக்கிரக காலம்” இயேசுவின்மீது விசுவாசம் வைத்தவர்களுக்கு ‘மீட்பு நாளாக’ இருந்தது. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் அவர்களுடைய தோழர்களான “வேறே ஆடுகளும்” ‘அனுக்கிரக காலத்திலிருந்து’ நன்மையடைய மக்களை அழைப்பதில் ஒன்றுசேர்ந்து உழைக்கிறார்கள்.—யோவா. 10:16.
8. சமரசமாவதற்கான அழைப்பு ஏன் ஒரு விசேஷ அழைப்பு?
8 சமரசமாவதற்கான இந்த அழைப்பு ஒரு விசேஷ அழைப்பு; எப்படியெனில், ஏதேனில் நடந்த கலகத்தின் காரணமாகக் கடவுளோடுள்ள உறவை மனிதர் முறித்திருந்தாலும், அதைச் சரிசெய்வதற்குக் கடவுளே முன்வந்தார். (1 யோ. 4:10, 19) அவர் என்ன செய்தார்? இதற்கு பவுல் இவ்வாறு பதிலளித்தார்: “உலகத்தாருடைய குற்றங்களை எண்ணிப் பார்க்காமல், கிறிஸ்து மூலம் அவர்களைத் தம்மோடு சமரசமாக்கி, சமரசம் உண்டாக்குகிற செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.”—2 கொ. 5:19; ஏசா. 55:6.
9. கடவுளின் இரக்கத்திற்கு நன்றி காட்டும் விதமாக பவுல் என்ன செய்தார்?
9 மீட்பு பலிக்கு யெகோவா ஏற்பாடு செய்ததன் மூலம், அதில் விசுவாசம் வைப்பவர்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெற்று தம்முடன் திரும்பவும் நட்புறவுக்குள் அல்லது சமாதான உறவுக்குள் வர வழிவகுத்தார். அதுமட்டுமல்ல, தம்முடன் சமாதானமாகும்படி எங்குமுள்ள மக்களை அழைப்பதற்காகத் தமது தூதுவர்களை அனுப்பினார். (1 தீமோத்தேயு 2:3-6-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய சித்தத்தையும் தான் வாழ்ந்த காலத்தின் முக்கியத்துவத்தையும் உணர்ந்த பவுல் “சமரசமாகும் ஊழியத்தை” செய்வதற்குக் கடுமையாக உழைத்தார். யெகோவாவின் சித்தம் மாறவில்லை. அவர் நம் நாளிலும் இந்த அழைப்பை விடுக்கிறார். “இப்போதே அனுக்கிரக காலம் . . . இப்போதே மீட்பு நாள்” என்று பவுல் சொன்னது இன்றும் பொருந்துகிறது. யெகோவா எந்தளவு இரக்கமும் கரிசனையும் உள்ள கடவுள்!—யாத். 34:6, 7.
“அதன் நோக்கத்தை நிறைவேற்றாமல் இருந்துவிடாதீர்கள்”
10. ‘மீட்பு நாளை’ பற்றி புரிந்துகொண்ட பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் அன்றும் இன்றும் என்ன செய்திருக்கிறார்கள்?
10 கடவுளோடு சமரசமாகும் இந்த ஏற்பாட்டிலிருந்து ‘கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருப்பவர்களே’ முதலாவது பயனடைகிறார்கள். (2 கொ. 5:17, 18) அவர்களுக்கு அந்த “மீட்பு நாள்” கி.பி. 33-ல் ஆரம்பமானது. அப்போதிலிருந்து “சமரசம் உண்டாக்குகிற செய்தியை” சொல்லும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இன்று, பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் மீதியானவர்கள் “சமரசமாக்கும் ஊழியத்தை” இன்னமும் செய்து வருகிறார்கள். அப்போஸ்தலன் யோவான் தரிசனத்தில் கண்ட நான்கு தேவதூதர்களும் ‘பூமியின் மீது . . . காற்று வீசாதபடி பூமியின் நான்கு காற்றுகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்பதை’ அவர்கள் புரிந்திருக்கிறார்கள். இதிலிருந்து ‘மீட்பு நாளும்,’ ‘அனுக்கிரக காலமும்’ இன்னமும் இருப்பது தெரிகிறது. (வெளி. 7:1-3) இதன் காரணமாக, 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதற்கொண்டு பரலோக நம்பிக்கையுள்ள மீதியானோர் “சமரசமாக்கும் ஊழியத்தை” பக்திவைராக்கியத்தோடு பூமியெங்கும் செய்து வந்திருக்கிறார்கள்.
11, 12. காலத்தின் அவசரத்தன்மையை உணர்ந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் என்னென்ன செய்தார்கள்? (பக்கம் 15-லுள்ள படத்தைக் காண்க.)
11 உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, “தாங்கள் அறுவடைக் காலத்தில் வாழ்வதையும் விடுதலை தரும் சத்தியத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் சி. டி. ரஸலும் அவருடைய தோழர்களும் [20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்] உறுதியாக நம்பினார்கள்.” அதனால், அவர்கள் என்ன செய்தார்கள்? தாங்கள் வாழ்வது அறுவடைக் காலம், அதாவது “அனுக்கிரக காலம்,” என்பதை உணர்ந்திருந்ததால் மக்களை வெறுமனே மத ஆராதனைக்கு வரும்படி அழைத்ததோடு அவர்கள் நிறுத்திக்கொள்ளவில்லை—கிறிஸ்தவமண்டல குருமார்கள் இதைத்தான் காலங்காலமாகச் செய்து வந்திருக்கிறார்கள். மாறாக, பரலோக நம்பிக்கையுள்ள அந்தக் கிறிஸ்தவர்கள் நற்செய்தியைப் பரப்புவதற்கு வேறு நடைமுறையான வழிகளைத் தேட ஆரம்பித்தார்கள். பிரசங்க வேலையை முன்னேற்றுவிப்பதற்கு நவீன தொழில்நுட்பத்தையும் அவர்கள் ஞானமாகப் பயன்படுத்தினார்கள்.
12 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எங்கும் அறிவிப்பதற்குத் துண்டுப்பிரதிகள், கைப்பிரதிகள், பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றைப் பக்திவைராக்கியமுள்ள அந்தச் சிறு தொகுதியினர் பயன்படுத்தினார்கள். பிரசங்கங்களையும் கட்டுரைகளையும் எழுதி ஆயிரக்கணக்கான செய்தித்தாள்களில் வெளியிட்டார்கள். ஆன்மீகச் சொற்பொழிவுகளைத் தேசிய மற்றும் சர்வதேச வானொலி மூலமாகவும் ஒலிபரப்பினார்கள். ஆடியோவுடன்கூடிய இயங்கு திரைப்படங்களைத் தயாரித்து மக்களுக்குக் காட்டினார்கள்; இதைத் திரை உலகம் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே அவர்கள் பயன்படுத்தினார்கள். அவர்களுடைய தணியாப் பக்திவைராக்கியத்திற்குக் கிடைத்த பலன்? “கடவுளோடு சமரசமாகுங்கள்” என்ற செய்திக்கு இன்று 70 லட்சத்திற்கும் அதிகமானோர் செவிகொடுத்திருக்கிறார்கள்; அதோடு, அதை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் அவர்களோடு சேர்ந்திருக்கிறார்கள். ஆம், அன்று அந்த ஊழியர்கள் எண்ணிக்கையிலும் அனுபவத்திலும் குறைவுபட்டிருந்தபோதிலும் பக்திவைராக்கியம் காட்டுவதில் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள்.
13. கடவுளுடைய எந்த நோக்கத்தை நாம் மனதில் வைக்க வேண்டும்?
13 “இப்போதே அனுக்கிரக காலம்” என்று பவுல் சொன்னது நமக்கும் பொருந்துகிறது. யெகோவாவின் அளவற்ற கருணையை ருசித்த நாம், சமரசமாகும்படியான செய்தியைக் கேட்கவும் அதை ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அதனால், மெத்தனமாக இருப்பதற்குப் பதிலாக பவுலின் பின்வரும் வார்த்தைகளை நாம் மனதில் வைக்க வேண்டும்: “கடவுளிடமிருந்து அளவற்ற கருணையைப் பெற்றுக்கொண்ட பின்பு அதன் நோக்கத்தை நிறைவேற்றாமல் இருந்துவிடாதீர்கள்.” (2 கொ. 6:1) கிறிஸ்து மூலமாக ‘உலகத்தாரைத் தம்மோடு சமரசமாக்குவதே’ கடவுளுடைய அளவற்ற கருணையின் நோக்கம்.—2 கொ. 5:19.
14. அநேக நாடுகளில் மக்கள் மத்தியில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது?
14 சாத்தானால் குருடாக்கப்பட்ட ஏராளமான மக்கள் இன்னமும் கடவுளிடமிருந்து விலகியிருக்கிறார்கள்; அவருடைய அளவற்ற கருணையின் நோக்கத்தையும் அறியாதிருக்கிறார்கள். (2 கொ. 4:3, 4; 1 யோ. 5:19) இருந்தாலும், கடவுளிடமிருந்து மக்கள் விலகியிருப்பதே துன்மார்க்கத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் என்பதைச் சொல்லும்போது அநேகர் ஏற்றுக்கொள்கிறார்கள். அதோடு, உலக நிலைமைகள் மோசமாகி வருவதைப் பார்ப்பதாலும் அவர்கள் செய்திக்குச் செவிகொடுக்கிறார்கள். அநேக நாடுகளில், முன்பு நற்செய்திக்கு ஆர்வம் காட்டாதிருந்த பெரும்பாலோர் இப்போது அதை ஏற்றுக்கொண்டு கடவுளோடு சமரசமாவதற்கு முயற்சி எடுக்கிறார்கள். அப்படியென்றால், “கடவுளோடு சமரசமாகுங்கள்” என்று அழைப்பு விடுப்பதில் இன்னும் பக்திவைராக்கியத்தோடு ஈடுபட இதுவே காலம் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?
15. இதமான வார்த்தைகளைச் சொல்லி மக்களை நம் பக்கம் இழுப்பதற்குப் பதிலாக, அவர்கள் எதை அறிந்துகொள்ள நாம் விரும்புகிறோம்?
15 கடவுளிடம் திரும்பினால் பிரச்சினைகளெல்லாம் தீர்ந்து, சந்தோஷமாக வாழலாம் என்று மக்களிடம் சொல்வது மட்டுமே நம்முடைய வேலையல்ல. அநேகர் இதை எதிர்பார்த்தே சர்ச்சுக்குச் செல்கிறார்கள்; சர்ச்சுகளும் அவர்களுடைய ஆசையைத் திருப்தி செய்யவே விரும்புகின்றன. (2 தீ. 4:3, 4) நம் ஊழியத்தின் நோக்கம் இதுவல்ல. மனிதர்மீது யெகோவா கொண்டுள்ள அன்பின் காரணமாக, கிறிஸ்து மூலம் பாவங்களை மன்னிக்கத் தயாராக இருக்கிறார் என்ற நற்செய்தியை நாம் பிரசங்கிக்கிறோம். இதனால், ஒருசமயம் கடவுளிடமிருந்து விலகியிருந்த ஆட்கள் அவரோடு சமரசமாக முடிகிறது. (ரோ. 5:10; 8:32) என்றாலும், “அனுக்கிரக காலம்” சீக்கிரத்தில் முடிவடையப்போகிறது.
“யெகோவாவுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்படுங்கள்”
16. தைரியத்துடனும் பக்திவைராக்கியத்துடனும் பிரசங்கிக்க பவுலுக்கு எது உதவியது?
16 அப்படியென்றால், பக்திவைராக்கியத்தை அதிகரிக்கவும் அதை இழந்துவிடாதிருக்கவும் நாம் என்ன செய்ய வேண்டும்? சிலர் கூச்ச சுபாவமுள்ளவர்களாக அல்லது அதிகம் பேசாதவர்களாக இருக்கலாம். என்றாலும், உணர்ச்சிபொங்க பேசுவதை வைத்தோ சுபாவத்தைப் பொறுத்தோ ஒருவருக்குப் பக்திவைராக்கியம் இருப்பதாகச் சொல்லிவிட முடியாது. அதற்கு ‘யெகோவாவுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்படுவது’ முக்கியம் எனச் சக கிறிஸ்தவர்களிடம் பவுல் சொன்னார். (ரோ. 12:11) தைரியத்துடனும் சகிப்புத்தன்மையுடனும் பிரசங்கிக்க யெகோவாவின் சக்தியே அப்போஸ்தலர்களுக்குப் பெரிதும் கைகொடுத்தது. இயேசுவின் அழைப்பைப் பெற்றதிலிருந்து ரோம சிறையில் தள்ளப்பட்டு தியாக மரணம் அடையும்வரை, 30 வருடங்களுக்கும் மேலாக பவுலின் பக்திவைராக்கியம் துளிகூட தணியவில்லை. அவர் தனக்குத் தேவையான சக்தியைக் கொடுத்த கடவுளையே எப்போதும் உதவிக்காக நம்பியிருந்தார். “என்னைப் பலப்படுத்துகிற கடவுள் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் உண்டு” என்று சொன்னார். (பிலி. 4:13) அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றினால் நமக்கு எவ்வளவு பயன்!
17. நாம் எப்படி ‘யெகோவாவின் சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்பட’ முடியும்?
17 “ஆர்வத்துடிப்பு” என்பதற்குரிய கிரேக்க வார்த்தையின் நேர்ப்பெயர்ப்பு “கொதித்தல்” என்பதாகும். (கிங்டம் இன்டர்லீனியர்) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதித்துக்கொண்டிருக்க வேண்டுமென்றால் அதற்கு அடுப்பில் தீ எரிந்துகொண்டே இருப்பது அவசியம். அதேபோல, ‘ஆர்வத்துடிப்புடன் செயல்பட’ வேண்டுமென்றால் யெகோவாவுடைய சக்தி நமக்கு எப்போதும் கிடைப்பது அவசியம். அதற்கு, யெகோவா செய்துள்ள எல்லா ஏற்பாடுகளையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; அதாவது, ஆன்மீக ரீதியில் பலப்படுவதற்கு உதவும் தனிப்பட்ட படிப்பு, குடும்ப படிப்பு, ஜெபம், கிறிஸ்தவக் கூட்டங்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தண்ணீர் தொடர்ந்து ‘கொதிப்பதற்கு’ உதவும் “தீயை” போல, எப்போதும் ‘கடவுளுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்பட’ இவையெல்லாம் நமக்கு உதவும்.—அப்போஸ்தலர் 4:20-ஐயும் 18:25-ஐயும் வாசியுங்கள்.
18. யெகோவாவுக்கு அர்ப்பணித்திருக்கிற நாம் எந்த வேலைக்குக் கவனம் செலுத்த வேண்டும்?
18 ஒரு வேலையில் தன்னை முற்றிலும் அர்ப்பணித்த ஒருவர் அந்த வேலையிலேயே கவனமாக இருப்பார்; அதை முடிக்கும் வரையில் அவர் மனம் வேறெங்கும் அலைபாயாது, சோர்வடையாது. யெகோவாவுக்கு அர்ப்பணித்திருக்கிற நாமும் அவர் கொடுத்த வேலையைச் செய்துமுடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இயேசுவும்கூட இதையே செய்தார். (எபி. 10:7) இன்று, முடிந்தவரை அநேகர் தம்முடன் சமரசமாக வேண்டும் என்பதே யெகோவாவின் சித்தம். எனவே, இயேசுவையும் பவுலையும் போல இந்த முக்கியமான வேலையில், ஆம் அவசரமான வேலையில், பக்திவைராக்கியத்துடன் ஈடுபடுவோமாக.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• பவுலிடமும் பரலோக நம்பிக்கையுள்ள மற்றவர்களிடமும் என்ன வேலை ஒப்படைக்கப்பட்டது?
• பரலோக நம்பிக்கையுள்ள மீதியானோர் ‘அனுக்கிரக காலத்தை’ எப்படி நன்கு பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்?
• கிறிஸ்தவ ஊழியர்கள் எப்படி ‘யெகோவாவின் சக்தியால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்படலாம்’?
[பக்கம் 12-ன் படம்]
தமஸ்குவுக்குப் போகிற வழியில் நடந்த சம்பவத்தை பவுல் எந்நாளும் மறக்கவே இல்லை