சந்தோஷ இருதயத்தோடு யெகோவாவை சேவியுங்கள்
‘நீ களிகூருதலோடும் சந்தோஷ இருதயத்தோடும் யெகோவாவாகிய உன் தேவனைச் சேவியாமற்போனதினிமித்தம் இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வரும்.’—உபாகமம் 28:45-57,NW.
1. யெகோவாவை சேவிப்பவர்கள், அவரை எங்கு சேவித்தாலும் சந்தோஷமுள்ளவர்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
யெகோவாவின் ஊழியர்கள், அவருடைய சித்தத்தைப் பரலோகத்தில் செய்துகொண்டிருந்தாலும் சரி அல்லது பூமியில் செய்துகொண்டிருந்தாலும் சரி, அவர்கள் சந்தோஷமுள்ளவர்கள். பூமியை அஸ்திபாரப்படுத்தும்போது தேவதூத “விடியற்காலத்து நட்சத்திரங்கள்” சந்தோஷமாக ஆர்ப்பரித்தனர், சந்தேகமின்றி சந்தோஷத்தோடே கோடான கோடி தேவதூதர்கள் ‘கடவுளுடைய வார்த்தையை நிறைவேற்றுகின்றனர்.’ (யோபு 38:4-7; சங்கீதம் 103:20, NW) யெகோவாவின் ஒரே பேறான மகன் பரலோகத்தில் ‘கைத்தேர்ந்த வேலையாளாக’ இருந்து, பூமியில் இயேசு கிறிஸ்து என்ற மனிதனாக தெய்வீக சித்தத்தைச் செய்வதில் அகமகிழ்ந்தார். மேலுமாக, “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.”—நீதிமொழிகள் 8:30, 31, NW; எபிரெயர் 10:5-10; 12:2.
2. இஸ்ரவேலர் ஆசீர்வாதங்களையா, சாபங்களையா அனுபவித்தனர் என்பதை எது தீர்மானித்தது?
2 இஸ்ரவேலர் கடவுளைப் பிரியப்படுத்தியபோது சந்தோஷத்தை அனுபவித்தனர். ஆனால் அவர்கள் அவருக்குக் கீழ்ப்படியாமல் போனால் அப்போது என்ன? அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கப்பட்டனர்: “[இந்தச் சாபங்கள்] எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத் தொடர்ந்து பிடித்து, உன்னிலும் உன் சந்ததியிலும் என்றைக்கும் அடையாளமாகவும் அற்புதமாகவும் இருக்கும். சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் [களிகூருதலோடும் சந்தோஷ இருதயத்தோடும், NW] உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம், சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய். அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.” (உபாகமம் 28:45-48) ஆசீர்வாதங்களும் சாபங்களும் யெகோவாவின் ஊழியர்கள் யார், யார் இல்லை என்பதைத் தெளிவாக்கின. கடவுளுடைய நியமங்களும் நோக்கங்களும் அவமரியாதையாக கருதப்படவோ இகழப்படவோ முடியாது என்பதையும்கூட இப்படிப்பட்ட சாபங்கள் உறுதிசெய்தன. பாழ்க்கடிப்பையும் நாடுகடத்தப்படுவதையும் பற்றிய யெகோவாவின் எச்சரிப்புகளுக்கு இஸ்ரவேலர் கவனம்செலுத்த மறுத்த காரணத்தால், எருசலேம் “பூமியிலுள்ள எல்லா ஜாதிகளுக்கு முன்பாகவும் சாபமாக்கிப்போ”டப்பட்டது. (எரேமியா 26:6) ஆகவே கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய தயவை அனுபவித்துக்களிப்போமாக. தேவபக்தியுள்ளவர்கள் அனுபவித்து மகிழும் அநேக தெய்வீக ஆசீர்வாதங்களில் சந்தோஷம் ஒன்றாகும்.
“சந்தோஷ இருதயத்தோடு” எவ்வாறு சேவிப்பது
3. அடையாள அர்த்தமுள்ள இருதயம் என்ன?
3 இஸ்ரவேலர் யெகோவாவை “களிகூருதலோடும் சந்தோஷ இருதயத்தோடும்” சேவிக்க வேண்டியவர்களாக இருந்தனர். கடவுளுடைய நவீன நாளைய ஊழியர்களும் அவ்வாறே செய்யவேண்டும். களிகூருவது என்பது “களிப்புற்றிருப்பது; சந்தோஷத்தால் நிரப்பப்பட்டிருப்பது,” ஆகும். சரீர சம்பந்தமான இருதயம் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது சொல்லர்த்தமாகவே யோசிப்பதோ நியாயவிவாதம் செய்வதோ கிடையாது. (யாத்திராகமம் 28:30) உடலின் அணுக்களை ஊட்டி வளர்ப்பதற்கு இரத்தத்தை உந்திச்செலுத்துவதே அதன் முக்கிய செயலாகும். என்றாலும், மிகப் பெரும்பாலான சமயங்களில், பைபிள் வெறுமனே பாசம், தூண்டுதல் மற்றும் புத்திக்கூர்மையின் இருப்பிடமாக இருப்பதைக் காட்டிலும் மிக அதிகமாக இருக்கும் அடையாள அர்த்தமுள்ள இருதயத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. அது “பொதுவாக மையப்பகுதிக்கு, உள்ளிருப்பதற்கு, அவனுடைய பல்வேறு நடவடிக்கைகளில், அவனுடைய ஆசைகளில், பாசங்களில், உணர்ச்சிகளில், பேரார்வங்களில், நோக்கங்களில், அவனுடைய எண்ணங்களில், புலனுணர்வுகளில், கற்பனைகளில், அவனுடைய ஞானம், அறிவு, திறமை, அவனுடைய நம்பிக்கைகளில் மற்றும் அவனுடைய நியாயவிவாதங்களில், அவனுடைய நினைவாற்றல் மற்றும் அவனுடைய மனச்சாட்சியில் தன்னை வெளிப்படுத்தும் உள்ளான மனுஷனைக் குறித்துநிற்கிறது,” என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. (ஜர்னல் ஆஃப் தி சொஸையிட்டி ஆஃப் பிப்ளிக்கல் லிட்டரேச்சர் அண்ட் எக்ஸிஜிஸிஸ், 1882, பக்கம் 67) நம்முடைய அடையாள அர்த்தமுள்ள இருதயம் சந்தோஷம் உட்பட நம்முடைய மன உணர்ச்சிகளையும் மனக்கிளர்ச்சிகளையும் உட்படுத்துகிறது.—யோவான் 16:22.
4. சந்தோஷ இருதயத்தோடு யெகோவா தேவனைச் சேவிக்க நமக்கு எது உதவக்கூடும்?
4 சந்தோஷ இருதயத்தோடு யெகோவாவைச் சேவிக்க எது நமக்கு உதவக்கூடும்? நம்முடைய ஆசீர்வாதங்களையும் கடவுளால் கொடுக்கப்பட்ட சிலாக்கியங்களையும் பற்றிய உடன்பாடான மற்றும் போற்றுதலுள்ள நோக்குநிலை பிரயோஜனமாயிருக்கிறது. உதாரணமாக, மெய் கடவுளுக்கு ‘பரிசுத்த சேவை’ செய்யக்கூடிய நம்முடைய சிலாக்கியத்தை சந்தோஷத்தோடே எண்ணிப்பார்க்கலாம். (லூக்கா 1:74, NW) யெகோவாவின் பெயரை அவருடைய சாட்சிகளாக தாங்கியிருக்கும் அதோடு சம்பந்தப்பட்ட சிலாக்கியம் இருக்கிறது. (ஏசாயா 43:10-12) கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்றுவதன் மூலம் நாம் அவரைப் பிரியப்படுத்துகிறோம் என்று அறிந்திருப்பதால் வரும் சந்தோஷத்தை இதோடு சேர்த்துக்கொள்ளலாம். ஆவிக்குரிய வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்து, இவ்விதமாக அநேகர் இருளிலிருந்து வெளியேறுவதற்கு உதவிசெய்வதில் எவ்வளவு சந்தோஷம் இருக்கிறது!—மத்தேயு 5:14-16; 1 பேதுரு 2:9-ஐ ஒப்பிடவும்.
5. தெய்வீக சந்தோஷத்தின் ஊற்றுமூலம் என்னவாக இருக்கிறது?
5 என்றபோதிலும், சந்தோஷ இருதயத்தோடு யெகோவாவைச் சேவிப்பது வெறுமனே உடன்பாடாக சிந்திப்பதை மாத்திரம் உட்படுத்தும் ஒரு காரியமல்ல. நோக்குநிலையில் உடன்பாடாக இருப்பது பிரயோஜனமாயிருக்கிறது. ஆனால் தெய்வீக சந்தோஷம் என்பது நன்நடத்தையை வளர்ப்பதன் மூலம் நாம் உண்டுபண்ணும் ஏதோவொன்றல்ல. அது யெகோவாவின் ஆவியினுடைய ஒரு கனியாகும். (கலாத்தியர் 5:22, 23) இப்படிப்பட்ட சந்தோஷம் நமக்கு இல்லையென்றால், கடவுளுடைய ஆவியைத் துக்கப்படுத்தக்கூடிய ஏதோவொரு வேதப்பூர்வமற்ற முறையில் சிந்திப்பதை அல்லது செயல்படுவதைத் தவிர்க்கும்பொருட்டு நாம் சரிப்படுத்தல்களைச் செய்வது அவசியமாயிருக்கலாம். (எபேசியர் 4:30) என்றபோதிலும், யெகோவாவுக்கு அர்ப்பணித்தவர்களாக, ஏதோ ஒரு சமயத்தில் இருதயப்பூர்வமான சந்தோஷம் குறைவுபடும்போது தெய்வீக நிராகரிப்புக்கு ஒரு அத்தாட்சி என்பதாக நாம் பயப்படவேண்டாம். நாம் அபூரணராக இருக்கிறோம், துன்பம், துயரம் மற்றும் சில சமயங்களில் மனச்சோர்வுக்குக்கூட ஆளாகிறோம், ஆனால் யெகோவா நம்மைப் புரிந்துகொள்கிறார். (சங்கீதம் 103:10-14) ஆகவே அவருடைய பரிசுத்த ஆவிக்காக, அதனுடைய சந்தோஷத்தின் கனி கடவுளால் கொடுக்கப்பட்டது என்பதை நினைவில் வைத்தவர்களாக அதற்காக ஜெபிப்போமாக. நம்முடைய அன்புள்ள பரலோகத் தகப்பன் இப்படிப்பட்ட ஜெபங்களுக்குப் பதிலளித்து அவரை சந்தோஷ இருதயத்தோடு சேவிப்பதற்கு நமக்கு உதவிசெய்வார்.—லூக்கா 11:13.
சந்தோஷம் இல்லாதபோது
6. கடவுளுக்குச் செய்யும் நம்முடைய சேவையில் சந்தோஷம் இல்லாதபோது, நாம் என்ன செய்யவேண்டும்?
6 நம்முடைய சேவையில் சந்தோஷம் இல்லாதபோது, நாம் கடைசியில் யெகோவாவைச் சேவிப்பதில் வைராக்கியம் குன்றியவர்களாய் அல்லது அவருக்கு உண்மையற்றவர்களாகவும்கூட ஆகிவிடலாம். ஆகவே, நம்முடைய உள்நோக்கங்களை மனத்தாழ்மையோடும் ஜெபசிந்தையோடும் சிந்தித்துப்பார்த்து தேவையான சரிப்படுத்துதல்களைச் செய்வது ஞானமான காரியமாகும். கடவுளால் கொடுக்கப்பட்ட சந்தோஷத்தைக் கொண்டிருப்பதற்கு, அன்பினால் தூண்டப்பட்டு நம்முடைய முழு இருதயம், ஆத்துமா மற்றும் மனதோடும் யெகோவாவை நாம் சேவிக்கவேண்டும். (மத்தேயு 22:37) நாம் போட்டி மனப்பான்மையோடு சேவிக்கக்கூடாது, ஏனென்றால் பவுல் எழுதினார்: “நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.” (கலாத்தியர் 5:25, 26) நாம் மற்றவர்களை மிஞ்சவேண்டும் என்று விரும்புகிறவர்களாய் அல்லது புகழை நாடுகிறவர்களாய் சேவித்துக்கொண்டிருந்தால் உண்மையான சந்தோஷம் நமக்கிராது.
7. நம்முடைய சந்தோஷ இருதயத்தை நாம் எவ்வாறு மீண்டும் தூண்டி எழுப்ப முடியும்?
7 யெகோவாவுக்கு நம்முடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக வாழ்வதில் சந்தோஷம் இருக்கிறது. கடவுளுக்கு நாம் புதிதாக ஒப்புக்கொடுத்தவர்களாக இருந்தபோது, கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்குள் வைராக்கியமாக இறங்கினோம். நாம் வேதவாக்கியங்களைப் படித்து கூட்டங்களில் ஒழுங்காக பங்குகொண்டோம். (எபிரெயர் 10:24, 25) ஊழியத்தில் பங்குகொள்வது நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. என்றபோதிலும், நம்முடைய சந்தோஷம் குறைந்துவிட்டிருந்தால் அப்போது என்ன? பைபிள் படிப்பு, கூட்டங்களில் ஆஜராயிருத்தல், ஊழியத்தில் பங்கெடுத்தல்—ஆம், கிறிஸ்தவத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் முழு ஈடுபாடு—நம்முடைய வாழ்க்கைக்கு ஆவிக்குரிய ஸ்திரத்தன்மையை அளித்து ஆரம்பத்தில் நாம் கொண்டிருந்த அன்பையும் முந்தைய நாட்களில் நமக்கிருந்த சந்தோஷ இருதயத்தையும் மீண்டும் தூண்டி எழுப்பவேண்டும். (வெளிப்படுத்துதல் 2:4) அப்பொழுது ஓரளவு சந்தோஷமில்லாதவர்களாய், அடிக்கடி ஆவிக்குரிய உதவி தேவைப்படும் நிலையிலிருக்கும் சிலரைப் போல நாம் இருக்கமாட்டோம். மூப்பர்கள் உதவிசெய்ய மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறார்கள், ஆனால் கடவுளுக்கு நம்முடைய ஒப்புக்கொடுத்தலை நாம் தனிப்பட்டவர்களாக நிறைவேற்றவேண்டும். இதை நமக்காக வேறு எவரும் செய்யமுடியாது. ஆகவே யெகோவாவுக்கு நம்முடைய ஒப்புக்கொடுத்தலை நிறைவேற்றி உண்மையான சந்தோஷத்தைக் கொண்டிருக்கும்பொருட்டு வழக்கமான கிறிஸ்தவ நடைமுறையொழுங்கை பின்பற்றுவதை நம்முடைய இலக்காக ஆக்கிக்கொள்வோமாக.
8. நாம் சந்தோஷமுள்ளவர்களாக இருக்க விரும்பினால், சுத்தமான மனச்சாட்சி ஏன் முக்கியமானதாக இருக்கிறது?
8 கடவுளுடைய ஆவியின் ஒரு கனியாக இருக்கும் சந்தோஷத்தை நாம் கொண்டிருக்க விரும்பினால், நமக்கு சுத்தமான மனச்சாட்சி தேவையாக இருக்கிறது. இஸ்ரவேலின் தாவீது அரசன் தன்னுடைய பாவத்தை மறைப்பதற்கு முயன்றவரையில், அவர் துக்கமாக இருந்தார். உண்மையில் உயிரின் ஈரம் ஆவியாகிவிட்டது போல தோன்றியது, அவர் சரீரப்பிரகாரமாய் நோயுற்றவராகி இருக்கலாம். மனந்திரும்புதலும் பாவ அறிக்கையும் செய்யப்பட்டபோது என்னே நிம்மதி அவருக்குக் கிடைத்தது! (சங்கீதம் 32:1-5) ஏதோவொரு வினைமையான பாவத்தை நாம் மறைத்துக்கொண்டிருந்தால் சந்தோஷமாக இருக்கமுடியாது. அது கலக்கமுற்ற ஒரு வாழ்க்கையை நாம் வாழும்படிச் செய்யலாம். நிச்சயமாகவே, சந்தோஷத்தை அனுபவிப்பதற்குரிய வழி அதுவல்ல. ஆனால் அறிக்கைசெய்வதும் மனந்திரும்புவதும் விடுதலையையும் மீண்டும் சந்தோஷமுள்ள ஆவியையும் கொண்டுவருகிறது.—நீதிமொழிகள் 28:13.
சந்தோஷத்தோடே காத்திருத்தல்
9, 10. (அ) ஆபிரகாம் என்ன வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டார், அவருடைய விசுவாசமும் சந்தோஷமும் எவ்வாறு சோதிக்கப்பட்டிருக்கலாம்? (ஆ) ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் உதாரணங்களிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
9 தெய்வீக நோக்கங்களைப்பற்றி நாம் முதன்முதலாக கற்றறிகையில் சந்தோஷத்தைக் கொண்டிருப்பது ஒரு காரியமாகும், ஆனால் வருடங்கள் கடந்துசெல்கையில் சந்தோஷமுள்ளவர்களாக நிலைத்திருப்பது முற்றிலும் வேறொரு காரியமாகும். இது உண்மையுள்ள ஆபிரகாமின் விஷயத்தில் விளக்கப்படலாம். கடவுளுடைய கட்டளையின்பேரில் அவர் தன்னுடைய மகன் ஈசாக்கை பலியாக கொடுக்க முயன்றபின்பு, ஒரு தேவதூதன் இந்தச் செய்தியை கொண்டுவந்தான்: “நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.” (ஆதியாகமம் 22:15-18) ஆபிரகாம் இந்த வாக்குறுதியில் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
10 ஈசாக்கு வித்தாக இருப்பான், அவன் மூலமாக வாக்குப்பண்ணப்பட்ட ஆசீர்வாதங்கள் வரும் என்பதாக ஆபிரகாம் எதிர்பார்த்திருக்கக்கூடும். ஆனால் ஈசாக்கின் மூலமாக அதிசயமான எதுவும் சாதிக்கப்படாமலே வருடங்கள் கடந்துசென்றபோது அது ஆபிரகாம் மற்றும் அவருடைய குடும்பத்தின் விசுவாசத்தையும் சந்தோஷத்தையும் கடுமையாக சோதித்திருக்கலாம். ஈசாக்கிடமும் பின்னால் அவருடைய மகனாகிய யாக்கோபிடமும் வாக்குறுதியைக் கடவுள் ஊர்ஜிதப்படுத்தியது வித்துவின் வருகை எதிர்காலத்தில் நிகழவிருப்பதை அவர்களுக்கு உறுதிசெய்தது, இது அவர்களுடைய விசுவாசத்தையும் சந்தோஷத்தையும் காத்துக்கொள்ள உதவியது. என்றபோதிலும், ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு கடவுள் அவர்களிடமாக கொடுத்திருந்த வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தைக் காணாமலே மரித்துப்போனார்கள், ஆனால் அவர்கள் யெகோவாவின் சந்தோஷமற்ற ஊழியர்களாக இருக்கவில்லை. (எபிரெயர் 11:13) நாமும்கூட அவருடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்துக்காக காத்துக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் யெகோவாவை தொடர்ந்து விசுவாசத்தோடும் சந்தோஷத்தோடும் சேவித்துக்கொண்டிருக்கலாம்.
துன்புறுத்தலின் மத்தியிலும் சந்தோஷம்
11. துன்புறுத்தலின் மத்தியிலும் நாம் ஏன் சந்தோஷமாயிருக்கலாம்?
11 யெகோவாவின் ஊழியர்களாக, நாம் துன்புறுத்தலை அனுபவித்தப்போதிலும்கூட, யெகோவாவை சந்தோஷ இருதயத்தோடு சேவிக்க முடியும். இயேசு தம் நிமித்தமாக துன்புறுத்தப்படுகிறவர்களை சந்தோஷமுள்ளவர்களென அறிவித்தார், அப்போஸ்தலன் பேதுரு இவ்விதமாகச் சொன்னார்: “கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள் மேல் தங்கியிருக்கிறார்.” (1 பேதுரு 4:13, 14; மத்தேயு 5:11, 12) நீதியினிமித்தமாக நீங்கள் துன்புறுத்தலையும் கஷ்டத்தையும் சகித்துக்கொண்டிருந்தால், உங்களிடம் யெகோவாவின் ஆவியும் அங்கீகாரமும் இருக்கிறது, அது நிச்சயமாகவே சந்தோஷத்தை மேம்படுத்துகிறது.
12. (அ) நாம் ஏன் விசுவாசத்தின் சோதனைகளைச் சந்தோஷத்தோடு சந்திக்கமுடியும்? (ஆ) நாடுகடத்தப்பட்டிருந்த குறிப்பிட்ட ஒரு லேவியனின் விஷயத்திலிருந்து என்ன முக்கிய பாடம் கற்றுக்கொள்ளப்படலாம்?
12 விசுவாசத்தின் சோதனைகளை நாம் சந்தோஷத்தோடு சந்திக்கலாம், ஏனென்றால் கடவுள் நம்முடைய அடைக்கலமாக இருக்கிறார். இது சங்கீதங்கள் 42 மற்றும் 43-லிருந்து தெளிவாக தெரிகிறது. ஏதோ ஒரு காரணத்துக்காக, குறிப்பிட்ட லேவியன் ஒருவன் நாடுகடத்தப்பட்டிருந்தான். கடவுளுடைய பரிசுத்த ஸ்தலத்தில் வணக்கத்தை அவ்வளவாக இழந்த வருத்தத்தின் காரணமாக வறட்சியான ஒரு தரிசு நிலப்பகுதியில் தண்ணீருக்காக ஏங்கும் தாகமுள்ள ஒரு மான் அல்லது பெண் மானைப் போல அவன் உணர்ந்தான். அவன் யெகோவாவுக்காகவும் அவருடைய பரிசுத்த ஸ்தலத்திலே கடவுளை வணங்கும் சிலாக்கியத்துக்காகவும் “தாகமாயி”ருந்தான் அல்லது வாஞ்சையாயிருந்தான். (சங்கீதம் 42:1, 2) நாடுகடத்தப்பட்டிருந்த இவனுடைய அனுபவம், யெகோவாவின் மக்களோடு நாம் அனுபவித்து மகிழும் கூட்டுறவுக்கு நன்றியுணர்வைக் காண்பிக்கும்படி நம்மைத் தூண்டவேண்டும். துன்புறுத்தலின் காரணமாக சிறைவாசம் போன்ற ஒரு நிலைமை நாம் அவர்களோடு இருப்பதை தற்காலிகமாக தடைசெய்தால், பரிசுத்த சேவையில் ஒன்றாக சேர்ந்து அனுபவித்து மகிழ்ந்த சந்தோஷங்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டு அவருடைய வணக்கத்தாரோடு வழக்கமான நடவடிக்கைகளில் மீண்டும் நம்மை கொண்டுவரும்படியாக “தேவனை நோக்கிக் காத்திரு”க்கையில் சகிப்புத்தன்மைக்காக ஜெபிப்போமாக.—சங்கீதம் 42:4, 5, 11; 43:3-5.
‘களிகூருதலோடே யெகோவாவைச் சேவியுங்கள்’
13. கடவுளுக்கு நம்முடைய சேவையின் முக்கியமான அம்சம் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று சங்கீதம் 100:1, 2 எவ்விதமாக காண்பிக்கிறது?
13 கடவுளுக்கு நம்முடைய சேவையில் சந்தோஷம் முக்கியமான ஒரு அம்சமாக இருக்கவேண்டும். சங்கீதக்காரன் பாடிய ஸ்தோத்திரப் பாடல் ஒன்றில் இது காண்பிக்கப்பட்டது: “பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.” (சங்கீதம் 100:1, 2) யெகோவா “நித்தியானந்த தேவ”னாயிருக்கிறார், தம்முடைய ஊழியர்கள் அவர்களுடைய ஒப்புக்கொடுத்தலோடு சம்பந்தப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதில் சந்தோஷத்தைக் காணவேண்டும் என்று அவர் விரும்புகிறார். (1 தீமோத்தேயு 1:11) எல்லா தேசத்து ஜனங்களும் யெகோவாவில் மகிழவேண்டும், நம்முடைய துதியின் சொற்கள் ஜெயங்கொண்டுவரும் ஒரு சேனையின் ‘கெம்பீர சத்தம்’ போல பலமாக இருக்கவேண்டும். கடவுளுக்குச் சேவைசெய்வது புத்துயிரளிப்பதாக இருப்பதன் காரணமாக, அது களிகூருதலோடேகூட செய்யப்படவேண்டும். ஆகவே சங்கீதக்காரன் கடவுளுடைய சந்நிதிக்கு மக்களை “ஆனந்தசத்தத்தோடே” வரும்படியாக துரிதப்படுத்தினார்.
14, 15. சங்கீதம் 100:3-5 இன்று எவ்வாறு யெகோவாவின் சந்தோஷமுள்ள மக்களுக்குப் பொருந்துகிறது?
14 சங்கீதக்காரன் மேலுமாக சொன்னார்: “கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.” (சங்கீதம் 100:3) யெகோவா நம்முடைய படைப்பாளராக இருப்பதன் காரணமாக, மேய்ப்பனுக்கு ஆடுகள் சொந்தமாயிருப்பது போல நாம் அவருக்குச் சொந்தமாயிருக்கிறோம். அவர் நம்மை அவ்வளவு நன்றாக கவனித்துக்கொள்வதால் நாம் நன்றியோடு அவரைத் துதிக்கிறோம். (சங்கீதம் 23) யெகோவாவைக் குறித்து, சங்கீதக்காரன் பின்வருமாறுகூட பாடினார்: “அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள். கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.”—சங்கீதம் 100:4, 5.
15 இன்று, எல்லா ஜாதிகளிலுமிருந்து சந்தோஷமுள்ள மக்கள் யெகோவாவின் பரிசுத்த ஸ்தலத்தின் பிராகாரங்களுக்குள் ஸ்தோத்திரத்தையும் துதியையும் செலுத்துவதற்காக பிரவேசித்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் யெகோவாவைப் பற்றி எப்பொழுதும் நன்றாகப் பேசுவதன் மூலம் அவரைச் சந்தோஷத்தோடு ஸ்தோத்திரிக்கிறோம், அவருடைய மகத்தான குணங்கள் அவரைத் துதிக்கும்படியாக நம்மைச் செய்விக்கின்றன. அவர் முற்றும்முடிய நல்லவராய் இருக்கிறார். அவருடைய கிருபை அல்லது அவருடைய ஊழியர்களிடமாக அவருடைய இரக்கமான அக்கறை எப்பொழுதும் நம்பத்தகுந்தது, ஏனென்றால் அது என்றென்றைக்கும் உள்ளது. “தலைமுறை தலைமுறைக்கும்” அவருடைய சித்தத்தைச் செய்கிறவர்களிடமாக அன்பைக் காண்பிப்பதில் யெகோவா உண்மையுள்ளவராயிருக்கிறார். (ரோமர் 8:38, 39) அப்படியென்றால், நிச்சயமாகவே ‘களிகூருதலோடு யெகோவாவைச் சேவிப்பதற்கு’ நமக்கு நல்ல காரணமிருக்கிறது.
உங்கள் நம்பிக்கையில் களிகூருங்கள்
16. கிறிஸ்தவர்கள் என்ன நம்பிக்கைகளிலும் எதிர்பார்ப்புகளிலும் களிகூரலாம்?
16 பவுல் எழுதினார்: “நம்பிக்கையிலே களிகூருங்கள்.” (ரோமர் 12:12, NW) இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் தம்முடைய மகனின் மூலமாக கடவுள் திறந்துவைத்த சாவாமையுள்ள பரலோக வாழ்க்கையின் மகிமையுள்ள நம்பிக்கையில் களிகூருகிறார்கள். (ரோமர் 8:16, 17; பிலிப்பியர் 3:20, 21) பூமியில் பரதீஸில் நித்திய வாழ்க்கையின் நம்பிக்கையைக் கொண்ட கிறிஸ்தவர்களும்கூட களிகூருவதற்கு ஆதாரத்தைக் கொண்டிருக்கின்றனர். (லூக்கா 23:43) யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் அனைவரும் ராஜ்ய நம்பிக்கையில் களிகூருவதற்கு காரணமிருக்கிறது, ஏனென்றால் அவர்கள் அந்தப் பரம அரசாங்கத்தின் பாகமாகவோ அல்லது அதனுடைய பூமிக்குரிய பகுதியிலோ வாழ்வார்கள். என்னே சந்தோஷமுள்ள ஓர் ஆசீர்வாதம்!—மத்தேயு 6:9, 10; ரோமர் 8:18-21.
17, 18. (அ) ஏசாயா 25:6-8-ல் என்ன முன்னறிவிக்கப்பட்டது? (ஆ) ஏசாயாவின் இந்தத் தீர்க்கதரிசனம் எவ்வாறு இப்பொழுது நிறைவேறிவருகிறது, மேலும் எதிர்காலத்தில் அதனுடைய நிறைவேற்றத்தைப் பற்றி என்ன?
17 கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்குச் சந்தோஷமுள்ள ஒரு எதிர்காலத்தைப் பற்றி ஏசாயாவும்கூட முன்னுரைத்தார். அவர் எழுதினார்: “சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும். சகல ஜனங்கள் மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார். அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.”—ஏசாயா 25:6-8.
18 யெகோவாவின் வணக்கத்தாராக நாம் இன்று பங்குகொள்ளும் ஆவிக்குரிய விருந்து நிச்சயமாகவே சந்தோஷமான ஒரு விருந்தாகும். உண்மையில், புதிய உலகில் அவர் வாக்களித்திருக்கும் நல்ல காரியங்களின் சொல்லர்த்தமான ஒரு விருந்தை எதிர்நோக்கியவர்களாக நாம் கடவுளை வைராக்கியமாக சேவிக்கையில் நம்முடைய சந்தோஷம் பொங்கிவழிகிறது. (2 பேதுரு 3:13) இயேசுவின் பலியின் அடிப்படையில் ஆதாமின் பாவத்தின் காரணமாக மனிதவர்க்கத்தை மூடிக்கொண்டிருக்கும் “மூடலை” யெகோவா நீக்கிவிடுவார். பாவமும் மரணமும் நீக்கப்படுவதைக் காண்பது எத்தனை சந்தோஷமாக இருக்கும்! மரித்துப்போன அன்பானவர்களைத் திரும்ப வரவேற்பதும், கண்ணீர் மறைந்துவிட்டதைக் கவனிப்பதும், யெகோவாவின் மக்கள் நிந்திக்கப்படுவதற்குப் பதிலாக, பெரிய நிந்தனைக்காரனாகிய பிசாசாகிய சாத்தானுக்குக் கடவுள் பதிலைக் கொடுத்திருக்கும் ஒரு பரதீஸிய பூமியில் வாழ்வதும் என்னே மகிழ்ச்சியாக இருக்கும்!—நீதிமொழிகள் 27:11.
19. அவருடைய சாட்சிகளாக நமக்கு முன்பாக யெகோவா வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளுக்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
19 யெகோவா தம்முடைய ஊழியர்களுக்காக என்ன செய்வார் என்பதை அறிந்துகொள்கையில் அது உங்களை சந்தோஷத்தினாலும் நன்றியுணர்வினாலும் நிரப்பவில்லையா? ஆம், இப்படிப்பட்ட மகத்தான எதிர்பார்ப்புகள் நம்முடைய சந்தோஷத்துக்கு உதவுகின்றன! மேலுமாக, ஆசீர்வாதமான நம்பிக்கை பின்வருவது போன்ற உணர்வுகளோடு நம்முடைய சந்தோஷமுள்ள, அன்புள்ள, தயாள குணமுள்ள கடவுளை நோக்கியிருக்கும்படி செய்கிறது: “இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், [யெகோவா, NW] இவருக்காக காத்திருந்தோம்; இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம்.” (ஏசாயா 25:9) நம்முடைய நம்பிக்கையை மனதில் உறுதியாகப் பதித்தவர்களாக, யெகோவாவை சந்தோஷ இருதயத்தோடே சேவிக்க ஒவ்வொரு முயற்சியையும் சுறுசுறுப்பாக ஈடுபடுத்துவோமாக.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ நாம் எவ்வாறு யெகோவாவை “சந்தோஷ இருதயத்தோடு” சேவிக்க முடியும்?
◻ கடவுளுக்கு நம்முடைய சேவையில் சந்தோஷம் இல்லாதிருந்தால் நாம் என்ன செய்யக்கூடும்?
◻ துன்புறுத்தலின் மத்தியிலும் யெகோவாவின் மக்கள் ஏன் சந்தோஷத்தைக் கொண்டிருக்கலாம்?
◻ நம்முடைய நம்பிக்கையில் களிகூருவதற்கு நமக்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
[பக்கம் 17-ன் படங்கள்]
கிறிஸ்தவ வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் பங்குகொள்வது நம்முடைய சந்தோஷத்தை அதிகரிக்கும்