பழிவாங்குதல் தவறா?
ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒரு நெடுஞ்சாலையில், ஒரு மோட்டார் வண்டி ஒதுங்கி மற்றொன்றைப் போகவிடுவதற்குச் சற்று தாமதமாகியது. இரண்டாவது மோட்டார் வண்டியை ஓட்டுபவன் அந்தத் தாமதமுண்டாக்கின வண்டியைத் துப்பாக்கியால் சுட்டுப் பழிவாங்கினான், இவ்வாறு குற்றமற்ற ஒரு பயணரைக் கொன்றான்.
பருவ வயது பெண் ஒருத்தி பள்ளி நாடகத்தில் தன் பங்கை இழந்துவிட்டாள் அது மற்றொரு பெண்ணுக்குக் கிடைத்தது. அந்தப் பெண்ணின் காதல் நண்பனிடம் அவள் மற்றொரு பள்ளியிலுள்ள ஒரு பையனிடம் காதல் பார்வை செலுத்துகிறாள் என்று சொல்வதனால் பழிவாங்கினாள். இவ்வாறு அவள் அந்தக் காதல் நண்பனோடு அந்தப் பெண்ணின் உறவைக் கெடுத்தாள்.
பலர் தங்களுக்குக் கேடு செய்யப்பட்டதென நினைக்கையில் பழிக்குப்பழி வாங்குவது சரியென உணருகின்றனர். “கோபத்தைவிடு, வெறுமென பழிக்குப்பழி செய்துவிடு,” என்ற உரையை அவர்கள் ஏதோ ஒரு வகையில் பின்பற்றுகின்றனர். இன்று அயலானை நேசிப்பது மிகக் குறைந்த நிலையிலுள்ளது, பழிவாங்கும் ஆவியே மேலெழும்பிக்கொண்டிருக்கிறது.—மத்தேயு 24:12.
எனினும், பழிக்குப்பழி வாங்குவதை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்? நீங்கள் பைபிளை நம்பினால், பழிவாங்குவது அடிப்படையில் தவறென ஒருவேளை உணரலாம். ஆனால் நாம் இருப்பதுபோல், தெய்வபக்தியற்ற உலகத்தில் வாழ்வதில், பழிவாங்குவதற்கு எதிர்மாறான மன்னித்தல், பெரும்பாலும் நடைமுறைக்குரியதாயில்லையென நீங்கள் ஒருவேளை உணரலாம். உங்களை வஞ்சித்தால் அல்லது வழிபறிசெய்தால் எவ்வாறு பிரதிபலிப்பீர்கள்? எவராவது உங்களை அசட்டை செய்தால் அல்லது மற்றவர்களிடம் உங்களைப்பற்றி இகழ்வாய்ப் பேசினால் நீங்கள் பழிக்குப் பழிவாங்கும் இயல்புடையவராகிறீர்களா? நீங்கள் பழிவாங்கும் இயல்புடையவரா அல்லது மன்னிக்கும் இயல்புடையவரா?
பழிவாங்கும் மனப்பான்மை தீங்குண்டாக்குகிறது
நிச்சயமாகவே, குற்றம் பல அளவுத்தரங்களில் இருக்கின்றன. ஆனால் எவர்மீதாவது பழிவாங்க விரும்பும் ஆட்களில் பெரும்பான்மையர் வழிப்பறி செய்யப்படவில்லை அல்லது குற்றப்பழியுடைய முறையில் கடுமையாய்த் தாக்கப்படவுமில்லை. இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட அந்தக் “குற்றங்கள்,” பழிக்குப்பழி வாங்கவேண்டுமெனத் தீர்மானித்தவர்களின் மனதில் பெரியவையாகத் தோன்றினபோதிலும், வெகு அற்பமானவையே.
நாம் பழிவாங்கும் மனப்பான்மையை வளர்க்கக்கூடாதென பைபிளில் சொல்லியிருக்கிறது. “அவன் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், . . . என்று நீ சொல்லாதே,” என நீதிமொழிகள் 24:29 அறிவுரை கொடுக்கிறது. ஏன் அவ்வாறு செய்யக்கூடாது? ஒரு காரணம், அத்தகைய மனப்பான்மை உணர்ச்சிசார்ந்த மற்றும் உடல்சார்ந்த முறையில் தீங்கிழைக்கின்றன. பழிக்குப்பழி வாங்கவேண்டுமென்ற எண்ணங்கள் மனச் சமாதானத்தை எடுத்துப்போடுகின்றன மற்றும் நேர்மையாய்ச் சிந்திப்பதைத் தடைசெய்கின்றன. பின்வரும் இந்தச் செய்தி அறிக்கையைக் கவனியுங்கள்: “உந்துவண்டிகள் நிற்குமிடத்தில் இரண்டு விவசாயிகள் தங்கள் சுமைவண்டிகளிலிருந்து துப்பாக்கியால் சுட்டு ஒருவரையொருவர் கொன்றுகொண்டனர், இவ்வாறு அவர்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபோது தொடங்கின 40-ஆண்டு ஓயாப்பகையைத் தீர்த்துக்கொண்டனர்.” கற்பனைசெய்து பாருங்கள், இந்த இரண்டு ஆண்களின் சிந்தனை அவர்களுடைய வாழ்க்கை முழுவதிலும் மனக்கொதிப்புள்ள பழிவாங்கும் ஆவியால் நச்சுப்படுத்தப்பட்டிருந்தன!—நீதிமொழிகள் 14:29, 30.
பழிவாங்கும் மனப்பான்மையை வளர்க்காதிருப்பதற்கு மற்றொரு காரணம், தவறுசெய்தவர்கள்—வினைமையான தவறுசெய்தவர்களுங்கூட—மாறலாம். உதாரணமாக, அப்போஸ்தலன் பவுல், ஒரு காலத்தில், சீஷனாகிய ஸ்தேவானைக் ‘கொலைசெய்வதற்குச் சம்மதித்திருந்தான்,’ மேலும் ‘கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிக்கொண்டிருந்தான்.’ எனினும் அவன் மாறினான். பல ஆண்டுகளுக்கப்பால் அப்போஸ்தலன் பேதுரு—தொடக்கக் காலத்தில் இவன் உயிர் பவுலின் கைகளில் ஆபத்திலிருந்தது—இவனை “நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுல்,” என்றழைத்தான். (அப்போஸ்தலர் 8:1; 9:1; 2 பேதுரு 3:15) கிறிஸ்தவர்கள் பவுலின்பேரில் பழிவாங்க முயன்றிருக்கலாம், முக்கியமாய் அவன் தமஸ்குவில், குருடனாகக் காத்துக்கொண்டிருக்கையில் அவ்வாறு செய்திருக்கலாம். (அப்போஸ்தலர் 9:3-15) அவ்வாறு செய்திருந்தால் அது எத்தகைய வருத்தந்தரும் பிழையாக இருந்திருக்கும்!
ஆகையால், ரோமர் 12:20-ல் பவுல் பின்வருமாறு நன்றாய் அறிவுரை கூற முடிந்தது: “உன் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங்கொடு, அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு.” ஏன்? ஏனெனில் நாம் நம் சத்துருவின்பேரில் பழிவாங்கினால், அவனுடைய மனப்பான்மையை நாம் கடினப்படுத்தி அவனுக்கும் நமக்கும் இடையேயுள்ள பகைமையை நிலையானதாக்குகிறோம். ஆனால் நமக்குத் தீங்குசெய்கிற அல்லது வருத்தம் உண்டாக்குகிற ஒருவருக்கு நாம் நன்மை செய்தால், நாம் ஒருவேளை அவருடைய மனப்பான்மையை இளகச் செய்து முன்னாள் சத்துருவை ஒரு நண்பனாக்கிக்கொள்வோம்.
நம்முடைய சொந்த பலவீனங்களை உணர்ந்து ஒப்புக்கொள்வதும் பழிவாங்க விரும்புவதற்கு வழிநடத்தும் மனக்கசப்பை அடக்கியாளுவதில் உதவிசெய்கிறது. சங்கீதக்காரன் பின்வருமாறு கேட்டான்: “யெகோவா, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால் நிலைநிற்கக்கூடியவன் யார் ஆண்டவரே?” (சங்கீதம் 130:3, தி.மொ.) நாம் எல்லாரும் மற்றவர்கள் உணர்ச்சியைப் புண்படுத்தியிருக்கிறோம் அல்லது அவர்களுக்கு வருத்தமுண்டாக்கியிருக்கிறோம். அவர்கள் பழிக்குப்பழி வாங்க முயற்சி செய்யாதிருந்ததால் நாம் மகிழ்ச்சியடைந்தோம் அல்லவா? அப்படியானால், நாமும் அதைப்போன்ற கட்டுப்பாடுடன் நடக்க வேண்டுமல்லவா? இயேசு பின்வருமாறு அறிவுரை கூறினார்: “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”—மத்தேயு 7:12.
“தீமையைப் பகையுங்கள்,” என்று பைபிள் சொல்வது உண்மையே. (சங்கீதம் 97:10, தி.மொ.; ஆமோஸ் 5:15) ஆனால் அந்தத் தீமைச் செய்பவனைப் பகைக்கும்படி அது நமக்குச் சொல்லுகிறதில்லை. உண்மையில், இயேசு நமக்குக் கட்டளையிட்டதாவது: தொடர்ந்து “உங்கள் சத்துருக்களில் அன்புகூருங்கள்; உங்களை இம்சைப்படுத்துகிறவர்களுக்காக ஜெபஞ்செய்யுங்கள்.” (மத்தேயு 5:44, தி.மொ.) நாம் தீங்குக்குத் தீங்கு செய்தால், தவறுசெய்தவனின் மனப்பான்மையைப் பின்பற்றுகிறோம். பூர்வ நீதிமொழி பின்வருமாறு கூறுகிறது: “தீமைக்குப் பதிற்செய்வேன் என்று சொல்லாதே, யெகோவாவுக்கே காத்திரு, அவர் உனக்கு உதவி செய்வார்.” (நீதிமொழிகள் 20:22, தி.மொ.) எத்தகைய ஞானமான மனப்பான்மை! தவறுசெய்தவர்களின் மாதிரியைப் பின்பற்றும் சோதனையை எதிர்த்து மேற்கொள்வதால் வெற்றிப்பெற்றவர்களாக நம்மைக் காட்டுவது எவ்வளவு அதிக மேன்மையானது.—யோவான் 16:33; ரோமர் 12:17, 21.
தண்டனை—யாரால்?
நிச்சயமாகவே, சில செயல்கள் ஒருவரை நேரில் அவமதிக்கும் காரியங்கள் அல்லது புண்படுத்துதல்களைப் பார்க்கிலும் மிக வினைமையானவை. நாம் வன்முறைக் குற்றச் செயலுக்கு ஆளானால் என்ன செய்வது? நீதியினிமித்தம் ஏதாவது செய்யப்படவேண்டுமென இயல்பாகவே நாம் உணருகிறோம். ஆனால் என்ன செய்வது? சில சமுதாயங்களில் காரியங்களைத் தாங்களே கையாண்டு பழிவாங்குவது வழக்கத்துக்கு மாறாக இல்லை. ஆனால் அத்தகைய சமுதாயங்கள் பெரும்பாலும் இரத்தஞ்சிந்தும் ஓயாச் சண்டைகளால் பிளவுபட்டிருப்பதில் முடிவடைந்திருக்கின்றன. இன்று, குற்றச் செயல்களுக்கு அவரவரே பழிவாங்குவதைக் கடவுளுடைய சட்டங்களோ பெரும்பான்மையான காரியங்களில் மனிதனின் சட்டங்களோ அனுமதிக்கிறதில்லை, நல்ல காரணத்தினிமித்தமே அவ்வாறு செய்கிறதில்லை. அத்தகைய தனிப்பட்டவர் வன்முறை மேலும் அதிக வன்முறையையே பெருக்குகிறது.
அவ்வாறெனில், வன்முறைக் குற்றச் செயலுக்கு ஆளான ஒருவர், அந்தத் தீமையைப் பொறுத்துக்கொண்டு வெறுமென இருந்துவிட வேண்டுமா? இல்லை. நாமோ நம்முடைய உடைமையோ வன்முறைக்கு உட்படுத்தப்படுகையில், நாம் உதவி நாடியடைவதற்கு அதிகாரிகள் இருக்கின்றனர். காவல்துறையினரை அழைக்க நீங்கள் விரும்பலாம். வேலைசெய்யுமிடத்தில், மேற்பார்வையாளரிடம் செல்லுங்கள். பள்ளியில், பள்ளித் தலைவரைக் காண நீங்கள் விரும்பலாம். அவர்கள் அங்கிருப்பதற்கு இது—நீதியைக் கடைப்பிடிப்பது—ஒரு காரணமாகும். அரசாங்க அதிகாரிகளைக் குறித்து: “அவன் பழி வாங்குகிறவன், தீமை செய்கிறவன்மேல் கோபாக்கினை வருவிக்கிற தெய்வ ஊழியக்காரன்,” என பைபிளில் நமக்குச் சொல்லியிருக்கிறது. (ரோமர் 13:4, தி.மொ.) அரசாங்கம் அதன் அதிகாரத்தைச் செலுத்தவும், குற்றச்செயலை நிறுத்தவும், குற்றஞ்செய்வோரைத் தண்டிக்கவும் வேண்டுமென நீதி தேவைப்படுத்துகிறது.
சில சமயங்களில் நீதியைச் செலுத்துவது தாமதமாயிருப்பது மெய்யே. சலிப்புற்ற-உலகம் என்பதன் எழுத்தாளர் ஒருவர் பின்வருமாறு கூறினார்: “நீதி பெரும்பாலும் எப்பொழுதுமே பிந்திவரும் ரயில்வண்டியைப்போல் இருக்கிறது.” சிலசமயங்களில், நிச்சயமாகவே, அந்த ரயில்வண்டி ஒருபோதும் வந்துசேருகிறதில்லை. அநீதி செய்வோர் ஒருவேளை அவ்வளவு மிக வல்லமைவாய்ந்தவர்களாக இருப்பதால் அதிகாரிகள் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமற்போகலாம். இருப்பினும், தற்கட்டுப்பாடே ஞானமான போக்காகும். “மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்,” என்று பைபிளில் சொல்லியிருக்கிறது.—நீதிமொழிகள் 29:11.
பழிவாங்குதல்—யாரால்?
பழிவாங்குவதிலிருந்து நம்மைக் கட்டுப்படுத்தி வைப்பது இவ்வாறு நமக்கு நன்மைகளைக் கொண்டுவருகிறது, நீதி வழங்கப்பட வேண்டியதிருந்தால், கடவுள் சரியான காலத்தில் அதைச் செய்வாரென்று அறிந்து, நாம் மன அமைதியுடன் காத்திருக்கலாம். குற்றஞ்செய்வதைக் கட்டுப்படுத்தாமல் விடுவது துணிகர பொல்லாங்குக்கு வழிநடத்துகிறதென யெகோவா அறிந்திருக்கிறார். (பிரசங்கி 8:11) தீமைசெய்வதில் கடினப்பட்டுப்போன தீயோர் மனிதவர்க்கத்தை என்றென்றும் ஒடுக்கிக்கொண்டிருக்க அவர் அனுமதிக்கமாட்டார். இதனிமித்தமே அப்போஸ்தலன் பவுல் நமக்குப் பின்வருமாறு அறிவுரைக் கூறினான்: “பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் [யெகோவா, NW] சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.” (ரோமர் 12:19) நிச்சயமாகவே, சிருஷ்டிகர் பழிவாங்கவிருக்கும் ஒரு நாளைக்குறித்து பைபிள் பேசுகிறது. இந்தப் பழிவாங்கும் நாள் என்னவாயிருக்கும்? எவர்மீது கடவுள் பழிவாங்குவார்? இதை நாம் அடுத்தக் கட்டுரையில் கலந்தாராய்வோம். (w91 11⁄1)
[பக்கம் 4-ன் பெட்டி]
பழிவாங்கும் பாங்கான உணர்ச்சிகளை அடக்கியாளுவதற்கு, இவற்றை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்:
◻ நீதியைக் குறித்து கடவுள் அக்கறையுடன் இருக்கிறார்
◻ பழிவாங்கும் மனப்பான்மையை மனதில்பேணி வைப்பது தீங்குண்டாக்கும்
◻ தயவுடனிருப்பது மற்றவர்களுடன் பிரச்னைகளுக்குட்டுவதைப் பெரும்பாலும் குறைக்கிறது
◻ நம்முடைய சொந்த மீறுதல்கள் பல கவனிக்கப்படாமற் விடப்பட்டிருக்கின்றன
◻ குற்றஞ்செய்வோர் மாறலாம்
◻ உலகத்தின் வழிகளை எதிர்த்து மேற்கொள்வதன்மூலம் நாம் உலகத்தை வெல்லுகிறோம்