மேலான அதிகாரங்கள் குறித்து கிறிஸ்தவ நோக்குநிலை
“எந்த ஆத்துமாவும் மேலான அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டு நடக்கக்கடவது, ஏனென்றால் கடவுளாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; இப்பொழுது இருக்கும் அதிகாரங்கள் அவற்றிற்குரிய சம்பந்தப்பட்ட நிலைகளில் கடவுளால் நிறுத்தப்பட்டிருக்கின்றன.”—ரோமர் 13:1, NW.
1, 2. (எ) பவுல் ஏன் ரோமில் கைதியாக இருந்தான்? (பி) பவுல் இராயனிடம் மேல் முறையீடு செய்தது என்ன கேள்விகளை எழுப்புகிறது?
மேற்காணும் வார்த்தைகளை அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு பொ.ச. 56-ல் எழுதினான். ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர், அவன் தன்னைத்தானே ரோமில் ஒரு சிறைக் கைதியாகக் கண்டான். ஏன்? எருசலேமில் அவன் ஒரு கலகக் கும்பலால் தாக்கப்பட்டு, ரோம வீரரால் காப்பாற்றப்பட்டான். செசரியாவுக்கு எடுத்துச்செல்லப்பட்ட பவுல் பொய்க் குற்றச்சாட்டை சந்திக்க வேண்டியிருந்தது, ஆனால் ரோமின் அதிபதி பேலிக்ஸ் முன்னிலையில் அவனால் தன் நிலையைத் தற்காத்திட முடிந்தது. பேலிக்ஸ் இலஞ்சம் எதிர்பார்த்தவனாய் அவனை இரண்டு ஆண்டு சிறையில் வைத்தான். கடைசியில் பவுல் அடுத்த அதிபதி பெஸ்துவிடம், தன்னுடைய வழக்கு இராயனால் கேட்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.—அப்போஸ்தலர் 21:27–32; 24:1–25:12.
2 ஒரு ரோம குடிமகனாக இது அவனுக்கிருந்த உரிமை. ஆனால் இயேசு சாத்தானை “இந்த உலகத்தின் அதிபதி” என்று குறிப்பிட்டிருக்க, பவுல் தானே சாத்தானை “இப்பிரபஞ்சத்தின் தேவன்” என்று அழைத்திருக்க, பவுல் அந்தப் பேரரசு அதிகாரத்தினிடம் மேல் முறையீடு செய்வது பொருத்தமாயிருந்ததா? (யோவான் 14:30; 2 கொரிந்தியர் 4:4) அல்லது அந்த ரோம அதிகாரம் ஏதோ ‘சம்பந்தப்பட்ட நிலை’யிலிருந்ததால், தன்னுடைய உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு அவன் அந்த அதிகாரத்தை நோக்கியிருப்பதைத் தகுந்ததாக்கியதா? ஆம், “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது,” என்று முன்னதாக அப்போஸ்தலர் சொன்ன வார்த்தைகள், கடவுளுக்குக் கீழ்ப்படியாமை உட்படாதிருக்கும்போதெல்லாம் மனித ஆட்சியாளருக்குக் கிறிஸ்தவ கீழ்ப்படிதலை அனுமதிக்கின்றனவா?—அப்போஸ்தலர் 5:29.
3. பவுல் என்ன முதிர்ச்சியான கருத்தை வெளிப்படுத்துகிறார்? மனச்சாட்சி எவ்விதம் உட்பட்டிருக்கிறது?
3 இந்தக் கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு பவுல் ரோமருக்கு எழுதிய கடிதத்தில் உதவுகிறான். இதில் மனித ஆட்சி குறித்து ஒரு முதிர்ச்சியான நோக்குநிலையை வெளிப்படுத்துகிறான். ரோமர் 13:1–7-ல் உன்னத அதிகாரத்துக்கு, யெகோவா தேவனுக்கு, முழுமையாகக் கீழ்ப்படிதலை, “மேலான அதிகாரங்களுக்கு” சம்பந்தப்பட்ட அளவுக்குக் கீழ்ப்படிதல் காண்பிப்பதுடன் சமநிலைப்படுத்துவதில் கிறிஸ்தவ மனச்சாட்சி வகிக்க வேண்டிய பாகத்தைப் பவுல் தெளிவுபடுத்துகிறான்.
மேலான அதிகாரங்களை அடையாளங்காணுதல்
4. 1962-ல் என்ன கருத்து மாற்றம் செய்யப்பட்டது? இது என்ன கேள்விகளை எழுப்புகிறது?
4 சில ஆண்டுகளாக, 1962 வரை, அந்த மேலான அதிகாரமுடையவர்கள் யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் என்ற கருத்தை யெகோவாவின் சாட்சிகள் கொண்டிருந்தனர். என்றபோதிலும், நீதிமொழிகள் 4:18-ற்கு இசைவாக, வெளிச்சம் கூடுதலாகப் பிரகாசித்தது, இந்தக் கருத்து சரி செய்யப்பட்டது. இது சிலருடைய மனதில் கேள்விகளை எழுப்பக்கூடும். இந்த அதிகாரமுடையவர்கள் அரசர்கள், ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள், மாநகர் முதல்வர்கள், குற்றவியல் நீதிபதிகள், மற்றும் உலகில் மதம் சாராத அரசியல் அதிகாரம் செலுத்திவருகிற மற்றவர்கள், அவர்களுக்கு நாம் சம்பந்தப்பட்ட வகையில் கீழ்ப்படிதல் காண்பிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று நாம் சரியாக சொல்கிறோமா?
5. ரோமர் 13:1-ன் சந்தர்ப்பச் சூழமைவு மேலான அதிகாரங்களை எவ்விதம் அடையாளம் காட்ட உதவுகிறது? இதை பல்வேறு பைபிள் மொழிபெயர்ப்புகள் எவ்விதம் ஆதரிக்கின்றன?
5 இரேனியஸ், பொ.ச. இரண்டாம் நூற்றாண்டு எழுத்தாளர் ஒருவர் சொன்னதாவது, ரோமர் 13:1-ல் பவுல் “தேவதூதர் சார்ந்த அதிகாரங்கள் [அல்லது] காணக்கூடாத ஆட்சியாளர்கள்” குறித்து பேசிக்கொண்டிருந்தான் என்பது தன்னுடைய நாட்களில் சிலருடைய கருத்தாக இருந்தது என்றான். என்றபோதிலும் இரேனியஸ் தானே இந்த மேலான அதிகாரங்கள் “உண்மையில் மனித அதிகாரங்கள்” என்று கருதினான். பவுலின் வார்த்தைகளுடைய சூழமைவு இரேனியஸ் சரி என்பதைக் காண்பிக்கிறது. ரோமர் 12-ம் அதிகாரத்தின் முடிவு வார்த்தைகளில், கிறிஸ்தவர்கள் எவ்விதம் தங்களை “எல்லா மனுஷருக்கு” முன்பாகவும் நடத்த வேண்டும், ‘சத்துருக்களையுங்கூட’ அன்போடும் கரிசனையோடும் நடத்த வேண்டும் என்று பவுல் விளக்குகிறான். (ரோமர் 12:17–21) தெளிவாகவே, “எல்லா மனுஷருக்கு” என்ற கூற்று கிறிஸ்தவ சபைக்கு வெளியே இருக்கும் மனுஷருக்குப் பொருந்துகிறது. எனவே பவுல் விளக்கிக்கொண்டு போகும் “மேலான அதிகாரங்கள்”கூட கிறிஸ்தவ சபைக்கு வெளியே இருக்க வேண்டும். இதற்கு இசைவாக, ரோமர் 13:1-ன் முதல் பகுதியைப் பல்வேறு மொழிபெயர்ப்புகள் எவ்விதம் மொழிபெயர்த்திருக்கின்றன என்பதைக் கவனியுங்கள்: “ஒவ்வொருவரும் அரசு அதிகாரங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்” (இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு); “ஒவ்வொருவரும் ஆளும் அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும்” (புதிய சர்வதேச மொழிபெயர்ப்பு); “ஒவ்வொருவரும் குடிமுறை அதிகாரங்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்”—பிலிப்பின் நவீன ஆங்கிலத்தில் புதிய ஏற்பாடு.
6. வரி மற்றும் தீர்வை செலுத்துதல் குறித்த பவுலின் வார்த்தைகள் எவ்விதம் இந்த மேலான அதிகாரங்கள் மதம் சாராத அதிகாரங்கள் என்பதைக் காண்பிக்கிறது?
6 இந்த அதிகாரங்கள் வரியையும் தீர்வையையும் கேட்கிறார்கள் என்று பவுல் தொடர்ந்து கூறுகிறான். (ரோமர் 13:6, 7) கிறிஸ்தவ சபை வரி அல்லது தீர்வைக் கேட்பதில்லை; யெகோவா அல்லது இயேசு அல்லது வேறு எந்தக் “காணக்கூடாத அரசர்கள்”கூட அதைக் கேட்பதில்லை. (2 கொரிந்தியர் 9:7) வரிகள் மதம் சாராத அதிகாரங்களுக்குத்தான் செலுத்தப்படுகிறது. இதற்கு இசைவாக, பவுல் ரோமர் 13:7-ல் பயன்படுத்திய “வரி” அல்லது “தீர்வு” ஆகிய வார்த்தைகளுக்குரிய கிரேக்க சொற்கள் குறிப்பாக அரசுக்குச் செலுத்தும் பணத்தை மட்டுமே குறிக்கின்றன.a
7, 8. (எ) கிறிஸ்தவர்கள் இந்த உலகின் அரசியல் அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்துக்கு பல்வேறு வசனங்கள் எவ்வாறு ஒத்திருக்கின்றன? (பி) கிறிஸ்தவன் எப்பொழுது மாத்திரமே அந்த “அதிகாரத்தின்” உத்தரவுகளுக்கு இணங்கிச்செல்ல மாட்டான்?
7 மேலும் மேலான அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கவேண்டும் என்ற பவுலின் புத்திமதி, “இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்” என்ற இயேசுவின் கட்டளைக்கு இசைவாக இருக்கிறது, இங்கே “இராயன்” உலகப்பிரகாரமான அதிகாரத்தைக் குறிக்கிறது. (மத்தேயு 22:21) இது பவுல் பின்னர் தீத்துவுக்குக் கூறிய வார்த்தைகளுக்கும் இசைவாக இருக்கிறது: “துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும் . . . அவர்களுக்கு நினைப்பூட்டு.” (தீத்து 3:1, 2) எனவே சமுதாய வேலைகளில் பங்குகொள்ளும்படியாக அரசாங்கங்கள் கிறிஸ்தவர்களுக்கு ஆணையிடும்போது, அந்த வேலைகள் வேதப்பூர்வமற்ற சில சேவைக்கு அல்லது ஏசாயா 2:4-ல் காணப்படும் வேதப்பூர்வமான நியமங்களை மீறுகின்ற சேவைக்கு இணங்கிச் செல்லும் ஒரு பதில் சேவையாக இல்லாதவரைக்கும் அவற்றிற்குச் சரியாகவே இணங்குகிறார்கள்.
8 இந்த உலகின் மதம் சார்பற்ற அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்பதை பேதுருவுங்கூட உறுதிப்படுத்துகிறான். அவன் சொன்னான்: “நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள். மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மை செய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள்.” (1 பேதுரு 2:13, 14) இதற்கு இசைவாக, பவுல் தீமோத்தேயுக்குக் கொடுத்த புத்திமதிக்கும் கிறிஸ்தவர்கள் செவிகொடுப்பார்கள்: “நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும். நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்ய வேண்டும்.”b—1 தீமோத்தேயு 2:1, 2.
9. மனித அதிகாரங்களை ‘மேலானவை’ என்று குறிப்பிடுவது யெகோவாவுக்குரிய மகிமையிலிருந்து ஏன் திசைத்திருப்புவதாயில்லை?
9 உலகப்பிரகாரமான அதிகாரங்களை “மேலான” என்று அழைப்பதால், நாம் யெகோவாவுக்குக் கொடுக்கும் கனத்திலிருந்து எவ்விதத்திலாவது விலகிச்செல்கிறோமா? இல்லை, ஏனென்றால் யெகோவா தேவன் வெறும் மேலானவராக இருப்பதிலும் உயர்ந்தவர். அவர் “பேரரசராகிய ஆண்டவர்,” “உன்னதமானவர்.” (சங்கீதம் 73:28; தானியேல் 7:18, 22, 25, 27; வெளிப்படுத்துதல் 4:11; 6:10) மனித அதிகாரங்களுக்குச் சரியான கீழ்ப்படிதல் உன்னத அதிகாரமுடைய, பேரரசராகிய ஆண்டவர் யெகோவாவுக்கு நம்முடைய வணக்கத்திலிருந்து நம்மை எந்த விதத்திலும் வழிவிலக்குவதாயில்லை. அப்படியென்றால், இந்த அதிகாரங்கள் எந்தளவுக்கு மேலானவை? மற்ற மனிதர் சம்பந்தமாகவும் அதனுடைய சொந்த செயல் பகுதி சம்பந்தமாகவும் மட்டுமே. அவை மனித சமுதாயங்களை ஆளவும் பாதுகாக்கவும் கடமைப்பட்டிருக்கின்றன, இதற்காக, பொது நடத்தை விவகாரங்கள் சம்பந்தமாக அவை சட்டங்களை விதிக்கின்றன.
“அவற்றிற்குரிய சம்பந்தப்பட்ட நிலைகளில் கடவுளால் நிறுத்தப்பட்டிருக்கின்றன”
10. (எ) மேலான அதிகாரங்களை ‘நிறுத்துவது’ குறித்த பவுலின் கூற்று யெகோவாவின் சொந்த அதிகாரத்தைக் குறித்து எதை நிரூபிக்கிறது? (பி) சில அரசர்களை ‘நிறுத்துவது’ சம்பந்தமாக யெகோவா எதை அனுமதித்திருக்கிறார்? இப்படியாக அவருடைய ஊழியர்கள் எவ்விதம் சோதிக்கப்படுகிறார்கள்?
10 உலகப்பிரகாரமான அதிகாரங்கள் மீது யெகோவா தேவன் உன்னதராயிருப்பது இந்த அதிகாரங்கள் “அவற்றிற்குரிய சம்பந்தப்பட்ட நிலைகளில் கடவுளால் நிறுத்தப்பட்டிருக்கின்றன” என்ற காரியத்தில் தெரிகிறது. என்றபோதிலும், இந்தக் கூற்று ஒரு கேள்வியை எழுப்புகிறது. பவுல் இந்த வார்த்தைகளை எழுதி சில ஆண்டுகளுக்குப் பின்பு ரோம சக்கரவர்த்தியாயிருந்த நீரோ கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஒரு கொடுமையான துன்புறுத்தலை ஆரம்பித்தான். கடவுள் நீரோவைத் தனிப்பட்ட விதத்தில் அவனுடைய ஸ்தானத்தில் ‘கடவுளுடைய கிருபையால்’ அமர்த்தினாரா? அப்படியிருக்க முடியாது! ஒவ்வொரு தனிப்பட்ட ஆட்சியாளனும் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டு, அவன் வகிக்கும் ஸ்தானத்தில் நிறுத்தப்படுகிறான் என்பது அல்ல. மாறாக, சாத்தான் சில சமயங்களில் கொடுமையான மனிதரை அரசாட்சியில் அமர்த்துமளவுக்கு காரியங்களை வழிநடத்துகிறான், இதையும் அப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் தம்முடைய ஊழியர்கள் மீது கொண்டுவரும் சோதனைகளையும் யெகோவா அனுமதிக்கிறார்.—யோபு 2:2–10-ஐ ஒப்பிடவும்.
11, 12. யெகோவா தேவன் தனிப்பட்டவிதத்தில் உலகப்பிரகாரமான அதிகாரமுள்ளவர்களை அந்த நிலையில் நிறுத்தியது அல்லது நீக்கியது சம்பந்தமாக பதிவில் என்ன சம்பவங்கள் காணப்படுகின்றன?
11 என்றபோதிலும், தம்முடைய உன்னத நோக்கத்தை நிறைவேற்றும்வகையில் யெகோவா சில அரசர்கள் அல்லது அரசாங்கங்கள் விஷயத்தில் தனிப்பட்டவிதத்தில் தலையிட்டிருக்கிறார். உதாரணமாக, ஆபிரகாமின் காலத்தில் கானானியர் கானான் தேசத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். என்றபோதிலும், பின்னர் யெகோவா தேவன் அவர்களை வேரோடு நீக்கி அந்தத் தேசத்தை ஆபிரகாமின் வித்துக்குக் கொடுத்தார். இஸ்ரவேலர் வனாந்திரத்தில் பயணம் செய்த போது, அவர்கள் அம்மோனையும் மோவாபையும் சேயீர் மலைநாட்டையும் தாக்கி அழித்திட யெகோவா அவர்களை அனுமதிக்கவில்லை. ஆனால் அவர் சீகோன் மற்றும் ஓக் அரசர்களின் ராஜ்யங்களை அழித்திடும்படிக் கட்டளையிட்டார்.—ஆதியாகமம் 15:18–21; 24:37; யாத்திராகமம் 34:11; உபாகமம் 2:4, 5, 9, 19, 24; 3:1, 2.
12 இஸ்ரவேல் கானானில் குடியேறிய பின்பு, தம்முடைய மக்களைப் பாதித்த அதிகாரங்கள் மீது யெகோவா நேரடியான அக்கறை கொள்ள ஆரம்பித்தார். சிலசமயங்களில் இஸ்ரவேல் பாவம் செய்தபோது, அவர்கள் புறமத அதிகாரத்தின் கீழ் வரும்படி அனுமதித்தார். அவர்கள் மனந்திரும்பியபோது, அந்தத் தேசத்திலிருந்து அந்த அதிகாரத்தை நீக்கினார். (நியாயாதிபதிகள் 2:11–23) கடைசியில் அவர் யூதாவை மற்ற தேசங்களோடுகூட பாபிலோன் ஆதிக்கத்தின் கீழ் வரும்படி அனுமதித்தார். (ஏசாயா 14:28–19:17; 23:1–12; 39:5–7) இஸ்ரவேல் பாபிலோனின் சிறையிருப்புக்குள்ளான பின்பு, பாபிலோனின் காலமுதல் நம்முடைய நாட்கள் வரையிலுமாகத் தம்முடைய மக்களைப் பாதிக்கும் உலக வல்லரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் குறித்து யெகோவா முன்னறிவித்தார்.—தானியேல் 2, 7, 8, மற்றும் 11 அதிகாரங்கள்.
13. (எ) மோசேயின் பாடல் பிரகாரம், யெகோவா ஏன் மக்களுடைய எல்லைகளைக் குறித்தார்? (பி) கடவுள் ஏன் இஸ்ரவேலைப் பின்னர் அதன் தேசத்தில் குடியேறச்செய்தார்?
13 மோசே யெகோவாவைக் குறித்து இப்படியாகப் பாடினான்: “உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்த காலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார். யெகோவாவின் (NW) ஜனமே அவருடைய பங்கு; யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம்.” (உபாகமம் 32:8, 9; அப்போஸ்தலர் 17:26-ஐ ஒப்பிடவும்.) ஆம், தம்முடைய நோக்கங்களை செயல்படுத்துவதற்காக, எந்த அதிகாரங்கள் நிலைக்கும், எது அழிக்கப்படும் என்பதைக் கடவுள் அந்தச் சமயத்தில் தீர்மானித்தார். இப்படியாக, ஆபிரகாமின் பிள்ளைகளுக்கு ஒரு தேசத்தைச் சுதந்தரமாக ஒதுக்கினார், பின்னர் அவர்களை அந்தத் தேசத்திற்குக் கொண்டுவந்தார், இப்படியாக வாக்குப்பண்ணப்பட்ட வித்து தீர்க்கதரிசனத்திற்கேற்ப அங்கு தோன்றுவது கூடிய காரியமாயிருந்தது.—தானியேல் 9:25, 26; மீகா 5:2.
14. மனித அதிகாரங்களை யெகோவா பெரும்பாலும் எந்தக் கருத்தில் அவற்றிற்கு சம்பந்தப்பட்ட நிலைகளில் நிறுத்துகிறார்?
14 என்றபோதிலும் அநேக சந்தர்ப்பங்களில், மனிதர்கள் ஒருவருக்கொருவர் சம்பந்தப்பட்ட நிலையில், ஆனால் எச்சமயத்திலும் தமக்குக் கீழ்நிலையிலேயே அதிகாரம் ஏற்க யெகோவா அனுமதிக்கிறார் என்ற கருத்தில் ஆட்சியாளர்களை அவர்களுக்குரிய சம்பந்தப்பட்ட நிலைகளில் நிறுத்துகிறார். இப்படியாக, இயேசு பொந்தியு பிலாத்துக்கு முன் நின்றபோது, அவர் அந்த ஆட்சியாளனிடம் சொன்னார்: “பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது.” (யோவான் 19:11) பிலாத்து கடவுளால் தனிப்பட்டவிதத்தில் அந்த ஸ்தானத்தில் வைக்கப்பட்டான் என்பதை இது குறிக்காது, ஆனால் இயேசுவின் மீதான அவருடைய ஜீவன் மற்றும் மரணத்தின் அதிகாரம் கடவுளுடைய அனுமதியின் பேரில் மட்டுமே சார்ந்ததாயிருந்தது என்பதைக் குறித்தது.
“இந்த ஒழுங்குமுறையின் கடவுள்”
15. இவ்வுலகில் சாத்தான் எவ்வாறு அதிகாரம் செலுத்துகிறான்?
15 என்றபோதிலும் சாத்தான் இந்த உலகத்தின் கடவுள், அல்லது அதிபதி என்ற பைபிள் கூற்றைப் பற்றியது என்ன? (யோவான் 12:31; 2 கொரிந்தியர் 4:4) சாத்தான் இந்த உலக ராஜ்யங்களையெல்லாம் இயேசுவுக்குக் காண்பித்து, “இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரம் . . . எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்,” என்று இயேசுவினிடம் பெருமையடித்துக்கொண்டதைப்பற்றி என்ன? (லூக்கா 4:6) இயேசு சாத்தானின் பெருமையான வார்த்தைகளுக்கு முரணாகப் பேசவில்லை. சாத்தானின் வார்த்தைகள் பவுல் பின்னர் எபேசியருக்கு எழுதிய காரியத்திற்கு இசைவாகவே இருந்தன: “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” (எபேசியர் 6:12) மேலும், வெளிப்படுத்துதல் புத்தகம் சாத்தானை “தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும்” உலக அரசியல் முறையாகிய ஒரு மிருக சின்னத்திற்குக் கொடுக்கும் ஒரு பெரிய வலுசர்ப்பமாக விவரிக்கிறது.—வெளிப்படுத்துதல் 13:2.
16. (எ) சாத்தானுடைய அதிகாரம் வரம்புக்குட்பட்டது என்பதை எவ்விதம் காணலாம்? (பி) மனிதவர்க்கத்தின் மத்தியில் சாத்தான் அதிகாரத்தைக் கொண்டிருக்கும்படி யெகோவா ஏன் அனுமதிக்கிறார்?
16 என்றபோதிலும், சாத்தான் இயேசுவினிடம் சொன்ன, “இவைகள் எல்லாவற்றின் மேலுமுள்ள அதிகாரம் . . . எனக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது” என்ற கூற்று, அவனும் அனுமதிக்கப்பட்டிருப்பதன் பேரிலேயே அதிகாரம் செலுத்துகிறான் என்பதைக் காண்பிக்கிறது. கடவுள் ஏன் இந்த அனுமதியை வழங்கியிருக்கிறார்? உலக அரசனாக சாத்தானின் வாழ்க்கைப்பணி அவன் ஏதேன் தோட்டத்தில் கடவுளை பொய்யரென்றும் தம்முடைய அரசுரிமையை நீதியற்றவிதத்தில் செலுத்துகிறார் என்றும் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியபோது துவங்கியது. (ஆதியாகமம் 3:1–6) ஆதாம் ஏவாள் சாத்தானைப் பின்பற்றி யெகோவா தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போனார்கள். அந்தச் சமயத்தில் யெகோவா தேவன் பரிபூரண நீதியின் அடிப்படையில் சாத்தானையும் அவனைப் பின்பற்றிய இரண்டு புதிய சீஷர்களையும் அழித்திருக்கலாம். (ஆதியாகமம் 2:16, 17) ஆனால் சாத்தானின் வார்த்தைகள் உண்மையில் யெகோவாவுக்கு ஒரு தனிப்பட்ட சவாலாக இருந்தது. எனவே கடவுள் தம்முடைய ஞானத்தின் அடிப்படையில் சாத்தானை சில காலத்துக்கு வாழ அனுமதித்தார். மற்றும் ஆதாமும் ஏவாளும் மரிப்பதற்கு முன்பு பிள்ளைகளைப் பிறப்பித்திட அனுமதிக்கப்பட்டனர். இப்படியாக, சாத்தானுடைய சவாலின் பொய்மை நிரூபிக்கப்படுவதற்குக் கடவுள் காலத்தையும் வாய்ப்பையும் அளித்தார்.—ஆதியாகமம் 3:15–19.
17, 18. (எ) சாத்தான் இந்த உலகத்தின் கடவுள் என்று ஏன் சொல்லலாம்? (பி) இந்த உலகில் எவ்விதம் “கடவுளாலேயன்றி” எந்த “அதிகாரமுமில்லை”?
17 ஏதேன் முதலான சம்பவங்கள் சாத்தானின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் என்று காண்பித்திருக்கின்றன. ஆதாமின் சந்ததியார் சாத்தானின் ஆட்சியிலோ அல்லது மனிதனின் ஆட்சியிலோ மகிழ்ச்சியைக் கண்டதில்லை. (பிரசங்கி 8:9) மறுபட்சத்தில், தம்முடைய சொந்த மக்களுடன் கடவுள் கொண்டிருந்த செயல்தொடர்பு தெய்வீக ஆட்சியின் மேன்மையை நிரூபித்திருக்கிறது. (ஏசாயா 33:22) ஆனால் ஆதாமின் பெரும்பாலான சந்ததியார் யெகோவாவின் அரசுரிமையை ஏற்றுக்கொள்ளாததால், அவர்கள் அறிந்தோ அறியாமலோ சாத்தானைத் தங்களுடைய கடவுளாக சேவித்துவருகின்றனர்.—சங்கீதம் 14:1; 1 யோவான் 5:19.
18 ஏதேனில் எழுப்பப்பட்ட அந்த விவாதம் விரையில் தீர்வுகாணும். மனிதவர்க்கத்தின் விவகாரங்கள் மீதான நிர்வகிப்பைக் கடவுளுடைய ராஜ்யம் முழுவதுமாக எடுத்துக்கொள்ளும், சாத்தானும் அபிஸில் போடப்படுவான். (ஏசாயா 11:1–5; வெளிப்படுத்துதல் 20:1–6) என்றபோதிலும், இதற்கிடையில், ஓர் ஒழுங்கான வாழ்க்கை கூடிய காரியமாயிருப்பதற்கு மனிதவர்க்கத்தினரிடையே ஏதோ ஒரு வகையான நிர்வாக ஏற்பாடு அல்லது நிர்வாக முறை தேவைப்பட்டிருக்கிறது. யெகோவா “கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதனத்திற்குத் தேவனாயிருக்கிறார்.” (1 கொரிந்தியர் 14:33) எனவே, ஏதேன் தோட்டத்திற்கு வெளியே உருவான அதிகார நிர்வாக முறைகள் சமுதாயங்களில் தோன்றுவதை அவர் அனுமதித்திருக்கிறார், மற்றும் இந்த ஏற்பாட்டில் மனிதர் அதிகாரம் செலுத்துவதற்கு அவர் அனுமதித்திருக்கிறார். இப்படியாக, “கடவுளாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை.”
நேர்மனம் கொண்ட அதிகாரங்கள்
19. ஒவ்வொரு ஆட்சியாளனும் சாத்தானின் நேரடியான கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறானா?
19 ஏதேன் முதல் சாத்தான் மனிதவர்க்கத்தினரிடையே பரந்த சுதந்திரமுடையவனாயிருந்திருக்கிறான். இந்தச் சுதந்திரத்தை அவன் இயேசுவிடம் பெருமைப்பட்டுக்கொண்டதற்கேற்ப பூமியில் சம்பவங்களைத் தன் நோக்கிற்கிசைவாக செயல்படுவதற்குப் பயன்படுத்தியிருக்கிறான். (யோபு 1:7; மத்தேயு 4:1–10) என்றபோதிலும் இந்த உலகிலுள்ள ஒவ்வொரு அரசனும் சாத்தானுக்கு நேரடியாகத் தன்னைக் கீழ்ப்படுத்துகிறான் என்பதை இது குறிக்காது. சிலர்—முதல் நூற்றாண்டு நீரோவைப் போன்றும் நம்முடைய நூற்றாண்டு ஹிட்லரைப் போன்றும்—உண்மையிலேயே சாத்தானின் ஆவியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், மற்றவர்கள் அப்படிச் செய்ததில்லை. சீப்புருவின் அதிபதி செர்கியுபவுல் “விவேகமுள்ள மனுஷனாக . . . தேவ வசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.” (அப்போஸ்தலர் 13:7) அகாயாவின் அதிபதி கல்லியோன் பவுலைக் குற்றஞ்சாட்டிய யூதரின் வற்புறுத்தலுக்கு இடமளிக்க மறுத்தான். (அப்போஸ்தலர் 18:12–17) மற்றும் அநேக அரசர்கள் கனத்துக்குரிய விதத்தில் தங்களுடைய அதிகாரத்தை மனச்சாட்சியினடிப்படையில் செலுத்திவந்திருக்கின்றனர்.—ரோமர் 2:15-ஐ ஒப்பிடவும்.
20 1914-ல் ஆரம்பமான “கர்த்தருடைய நாளில்” சாத்தானின் நோக்கங்களை முறியடிக்க யெகோவா மனித அதிகாரங்களையும் தம் நோக்கத்திற்கிசைவாக செயல்படச்செய்வார் என்று வெளிப்படுத்துதல் புத்தகம் முன்னறிவித்தது. அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எதிராக சாத்தானால் கொண்டுவரப்படும் துன்புறுத்தலின் வெள்ளத்தைக் குறித்து வெளிப்படுத்துதல் விவரிக்கிறது; இது “பூமி”யால் விழுங்கப்படும். (வெளிப்படுத்துதல் 1:10; 12:16) இந்தப் “பூமி”க்குள்ளாக அமைந்த மூலங்கள், இப்பொழுது பூமியிலிருக்கும் மனித சமுதாயம், யெகோவாவின் மக்களை சாத்தானின் துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்கும்.
20, 21. மனித ஆட்சியாளர்கள் எல்லாச் சமயத்திலும் சாத்தானின் சித்தத்தைச் செய்வதில்லை என்பதை இந்த 20-வது நூற்றாண்டில் என்ன சம்பவங்கள் காண்பிக்கின்றன?
21 இது உண்மையிலேயே சம்பவித்ததா? ஆம். உதாரணமாக, 1930-களில் மற்றும் 1940-களில் ஐக்கிய மாகாணங்களிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் மிகுந்த அழுத்தத்தின்கீழ், கலகக் கும்பல்களின் தாக்குதல்களை அனுபவித்தும் அடிக்கடி அநியாயமாகக் கைது செய்யப்பட்டும் வந்தார்கள். அவர்களுடைய வேலை சட்டப்பூர்வமானது என்பதை அங்கீகரிக்கும் அநேக தீர்ப்புகளை ஐ.மா. உச்ச நீதிமன்றம் வழங்கியபோது, அவர்கள் துயரம் தணிந்தது. மற்ற இடங்களிலுங்கூட, அதிகாரிகள் கடவுளுடைய மக்களின் சார்பாக உதவியிருக்கின்றனர். ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்னர், அயர்லாந்தில் கார்க் என்னும் நகரில் ஒரு ரோமன் கத்தோலிக்க கலகக் கும்பல் இரண்டு சாட்சிகளைத் தாக்கியது. உள்ளூர் காவலர் சாட்சிகளுடைய உதவிக்கு வந்ததுமட்டுமின்றி, நீதிமன்றம் தாக்குதலை நடத்திய அந்த ஆட்களை சிட்சித்தது. 1989-ல் தானே, ஃபீஜியில் யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கைகளைத் தடை செய்வது குறித்து கொண்டுவரப்பட்ட ஒரு யோசனையைப் பிரதான அதிகாரிகள் கூட்டம் சிந்தித்தது. அதில் ஒரு பிரதான அதிகாரி யெகோவாவின் சாட்சிகள் சார்பாக தைரியத்தோடு பேசினார், கொண்டுவரப்பட்ட அந்த யோசனையும் மிக எளிதில் தோல்வி கண்டது.
22. அடுத்து என்ன கேள்விகள் சிந்திக்கப்படும்?
22 இல்லை, உலகப்பிரகாரமான அதிகாரங்கள் எப்பொழுதுமே சாத்தானின் நோக்கங்களை நிறைவேற்றுவதில்லை. கிறிஸ்தவர்கள் சாத்தானுக்குத் தானே கீழ்ப்பட்டிராமல் மேலான அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டிருக்க முடியும். ஆம், இந்த அதிகாரங்களைக் கடவுள் அனுமதிக்கும் வரையாக அவர்கள் அதற்குக் கீழ்ப்படிந்திருப்பார்கள். என்றபோதிலும் அப்படிப்பட்ட கீழ்ப்படிதல் எதைக் குறிக்கிறது? அதற்குக் கைமாறாக அந்த மேலான அதிகாரங்களிடமிருந்து கிறிஸ்தவர்கள் எதை எதிர்பார்க்கலாம்? இந்தக் கேள்விகள் பின்வரும் கட்டுரையில் சிந்திக்கப்படும். (w90 11/1)
[அடிக்குறிப்புகள்]
a உதாரணமாக, லூக்கா 20:22-ல் “வரி” (ஃபோரஸ்) என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். மேலும் டெலாஸ் என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் கவனியுங்கள், இவ்விடத்தில் தீர்வை என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது, மத்தேயு 17:25-ல் “தீர்வை” [“duties,” NW] என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
b “அதிகாரமுள்ள” [உயர்ந்த ஸ்தானத்திலுள்ள, NW] என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஹைபரோக்கி என்ற கிரேக்கப் பெயர்ச்சொல் ஹைபரேக்கோ என்ற வினைச்சொல்லுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. “மேலான அதிகாரங்கள்,” என்ற கூற்றிலுள்ள “மேலான” என்ற சொல் அதே கிரேக்க வினைச்சொல்லிலிருந்து வருகிறது, இது மேலான அதிகாரங்கள் மதம் சாராத உலகப்பிரகாரமான அதிகாரங்கள் என்பதற்கு அத்தாட்சியைக் கூட்டுகிறது. புதிய ஆங்கில பைபிள் ரோமர் 13:1-ஐ, “ஒவ்வொருவரும் உன்னத அதிகாரத்துக்குக் கீழ்ப்படியவேண்டும்,” என்று மொழிபெயர்த்திருப்பது சரியல்ல. “உயர்ந்த ஸ்தானத்திலுள்ள” மனிதர் மற்ற மனிதரிலும் மேலானவர்களாக இருந்தாலும், உன்னதர் அல்ல.
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
◻ மேலான அதிகாரமுடையவர்கள் யார்?
◻ “கடவுளாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை” என்று எப்படிச் சொல்லலாம்?
◻ யெகோவா ஏன் உலகத்தைச் சாத்தானின் அதிகாரத்தின் கீழ் இருக்க அனுமதிக்கிறார்?
◻ கடவுள் எந்த விதத்தில் மனித அதிகாரங்களை “அவற்றிற்குரிய சம்பந்தப்பட்ட நிலைகளில் நிறுத்துகிறார்”?
[பக்கம் 13-ன் படம்]
ரோமை எரித்தப் பின்பு, நீரோ உண்மையிலேயே சாத்தானிய ஆவியை வெளிப்படுத்தினான்
[பக்கம் 15-ன் படம்]
செர்கியுபவுல், சீப்புருவின் அதிபதி, தேவ வசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்