அதிகாரத்தை மதித்தல்—ஏன் அவசியம்?
நம்முடைய பொருட்களை திருடிய அல்லது நம்முடைய குடும்பத்தை பயமுறுத்திய கிரிமினல்களை போலீஸ் அதிகாரிகள் வலைவீசி பிடித்துவிட்டால், அந்த அதிகாரிகளுக்கு நன்றி சொல்லாதிருப்போமா? சமூகத்தை பாதுகாக்க குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி கம்பி எண்ண வைக்கும் அதிகாரமுடைய நீதிமன்றங்களை நாம் பாராட்டாமல் இருப்போமா?
இது மட்டுமா? சாலை வசதி, சுகாதாரம், கல்வி ஆகிய பொதுநல சேவைகளும் உங்களுடைய மனதிற்கு வரலாம். ஆகவே, அதிகாரத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்; இதை ஒத்துக்கொள்பவர்களில் மெய் கிறிஸ்தவர்களே முன்னணியில் இருக்கிறார்கள். ஆனால் எந்தளவுக்கு மதிக்கிறார்கள்? வாழ்க்கையின் எந்தெந்த அம்சங்களில் அதிகாரத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்?
சமுதாயத்தில் அதிகாரம்
கிறிஸ்தவர்களாக இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி, அனைவரும் அதிகாரத்தை மதிக்க வேண்டும் என பைபிள் சொல்கிறது. இது, சமுதாயத்தின் நன்மைக்காக செயல்படுகிறது. இதைப் பற்றி ரோமிலிருந்த விசுவாசிகளுக்கு கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் ரோமர் 13:1-7-ல் எழுதினார்; அவர் எழுதியதை ஆராய்ந்து பார்ப்பது பயனுள்ளது.
ரோம் உலக வல்லரசாக திகழ்ந்த காலத்தில் பவுல் ஒரு ரோம குடிமகன். சுமார் பொ.ச. 56-ல் அவர் எழுதிய கடிதம், கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும் என அறிவுரை அளித்தது. அவர் இவ்வாறு எழுதினார்: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால் தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.”
எந்த அதிகாரத்தையும் கடவுளே நேரடியாக நியமிப்பதில்லை, ஆனால் அவருடைய அனுமதியினால் மாத்திரமே எந்த மனித அதிகாரமும் இருக்க முடியும் என்ற கருத்தில்தான் இங்கே பவுல் விளக்குகிறார். ஆதலால், “அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்.”
நன்மை செய்கிற குடிமக்களை மேலான அதிகாரிகள் பாராட்டுகின்றனர், அதேசமயத்தில் தவறு செய்கிறவர்களை தண்டிக்கவும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கின்றனர். தீமை செய்கிறவர்கள் அதிகாரிகளுக்கு பயந்து நடக்க போதுமான காரணமிருக்கிறது. ஏனெனில் அரசாங்கங்கள் ‘தேவ ஊழியர்கள்,’ தீமை செய்கிறவர்களை ‘பழிவாங்கும்’ உரிமை அவற்றிற்கு இருக்கிறது.
பவுல் இவ்வாறு தன்னுடைய விவாதத்தை முடிக்கிறார்: “நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படிய வேண்டும். இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவ ஊழியக்காரராயிருக்கிறார்களே.”
வரிகளை நிர்வகிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு, வரி செலுத்துகிறவருடையதல்ல. கிறிஸ்தவன் நேர்மையுள்ள ஒரு குடிமகனாக நல்மனசாட்சியை காத்துக்கொள்கிறான். மேலான அதிகாரங்களுக்கு கீழ்ப்படிந்து வரி செலுத்துகையில் தான் வாழும் சமுதாயத்தின் தரத்தை முன்னேற்றுவிக்கிறான் என்பதை அவன் அறிந்திருக்கிறான்; அது மட்டுமல்ல, தெய்வீக கட்டளைகளுக்கு இசைவாகவும் வாழ்கிறான்.
குடும்பமும் அதிகாரமும்
குடும்பத்தில் நிலவும் அதிகாரத்தைப் பற்றியென்ன? பிஞ்சு குழந்தை அழுதாலோ அலறினாலோ உடனே பெற்றோர் அதன் தேவையை புரிந்துகொண்டு பூர்த்திசெய்கிறார்கள். ஆனால் அது வளருகையில் கத்தி கூச்சல்போட்டு அடம்பிடிக்க பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள். அதேசமயத்தில் பிள்ளைகள் ஓரளவுக்கு பெரியவர்களாகையில் பெற்றோர் அவர்களுக்கு சுதந்திரம் தருகிறார்கள். அவர்களே நல்லது கெட்டதை அனுபவத்தில் தெரிந்துகொள்ள பெற்றோர் அனுமதிக்கிறார்கள். அனுபவமில்லாமல் ஏதாவது குற்றச்செயலிலோ தவறான பழக்கத்திலோ அவர்கள் ஈடுபடலாம். அதன்மூலம் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் தொல்லையுண்டாக்கலாம், இது அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்ததே.
“காலம் கடந்த பின்னரே பிள்ளைகளை பெற்றோர்கள் கண்டிக்கிறார்கள்” என சொல்கிறார் சில்ரன் வி டிசர்வ் என்ற நூலின் ஆசிரியர் ராஸ்லின்டு மைல்ஸ். “குழந்தை பிறந்ததிலிருந்தே கண்டிக்க தொடங்க வேண்டும்.” ஆரம்பத்திலிருந்தே பிள்ளைகளிடம் பெற்றோர்கள் அன்பு காட்ட வேண்டிய நேரத்தில் அன்பு காட்டியும் அதட்ட வேண்டிய நேரத்தில் அதட்டியும் வளர்க்க வேண்டும். அதேசமயத்தில் பெற்றோர்களும் தாங்கள் சொல்வதை செயலில் காண்பிக்கவும் வேண்டும். அப்படி செய்தால், பிள்ளைகள் பெற்றோர்களுடைய அதிகாரத்தை மதித்து, அவர்களுடைய அன்பான கண்டிப்புக்கு கீழ்ப்படிவார்கள்.
குடும்ப அதிகாரம் சம்பந்தமாக பைபிளில் ஏராளமான தகவல்கள் உள்ளன. பிள்ளைகளை வளர்ப்பதில் தாயும் தந்தையும் ஒன்றுபட்டிருக்க வேண்டியதைப் பற்றி நீதிமொழிகள் புத்தகத்தில் சாலொமோன் சொல்கிறார். “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.” (நீதிமொழிகள் 1:8) இப்படி ஒருமனப்பட்டு பிள்ளைகளை வளர்க்கும்போது, பெற்றோர்களுடைய கருத்தையும் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் பிள்ளைகள் தெரிந்துகொள்கிறார்கள். தாங்கள் விரும்பியதை சாதிப்பதற்காக அப்பாவையோ அம்மாவையோ அவர்கள் ‘நைஸ்’ பண்ணலாம். ஆனால் அதிகாரம் செலுத்துவதில் பெற்றோர்கள் ஒன்றுபட்டிருப்பது பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக அமைகிறது.
பிள்ளைகளுடைய ஆவிக்குரிய நலனில் மட்டுமல்ல, மனைவியுடைய ஆவிக்குரிய நலனிலும் கணவன் அக்கறை காட்ட வேண்டும்; இது கணவனுடைய முக்கியமான உத்தரவாதம் என பைபிள் விளக்குகிறது. இது தலைமை ஸ்தானம் என விவரிக்கப்படுகிறது. தலைமை ஸ்தானத்தை எவ்வாறு காட்ட வேண்டும்? கிறிஸ்து சபையின் தலைவராக இருக்கிறார்; அதுபோல, கணவனும் மனைவிக்கு தலையாக இருக்கிறார் என பவுல் சுட்டிக்காட்டுகிறார். பிற்பாடு பவுல் இவ்வாறு சொல்கிறார்: “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” (எபேசியர் 5:25-27) இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி குடும்பத்தை அன்பாக தலைமை தாங்கி நடத்துகையில், மனைவியின் ‘ஆழ்ந்த மரியாதையை’ கணவன் சம்பாதித்துக்கொள்வார். (எபேசியர் 5:33, NW) இப்படிப்பட்ட குடும்பத்தில் வளரும் பிள்ளைகள் கடவுளால் கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் மதிப்பை உணர்ந்துகொள்வார்கள், மேலும் அதற்குக் கீழ்ப்பட்டு நடக்க தூண்டுவிக்கப்படுவார்கள்.—எபேசியர் 6:1-3.
ஒற்றை பெற்றோர்கள் எவ்வாறு இந்தப் பிரச்சினையை சமாளிக்கலாம்? அப்பாவும்சரி அம்மாவும்சரி, யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் செலுத்தும் அதிகாரத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம். இயேசு எப்பொழுதும் பிதாவின் அதிகாரத்தையும் ஏவப்பட்டு எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையின் அதிகாரத்தையும் பயன்படுத்தி பேசினார்.—மத்தேயு 4:1-10; 7:29; யோவான் 5:19, 30; 8:28.
பிள்ளைகள் எதிர்ப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் மதிப்புமிக்க நியமங்கள் பைபிளில் ஏராளம் உள்ளன. இந்த நியமங்களை கண்டுபிடித்து அவற்றை பின்பற்றும்போது, பிள்ளைகளுக்கு அன்பான, பயனுள்ள அறிவுரையை பெற்றோர் கொடுக்க முடியும். (ஆதியாகமம் 6:22; நீதிமொழிகள் 13:20; மத்தேயு 6:33; 1 கொரிந்தியர் 15:33; பிலிப்பியர் 4:8, 9) பைபிளின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவதால் வரும் நன்மைகளை பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவுவதற்கு பைபிள்-சார்ந்த புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றை பெற்றோர் படித்துப் பார்க்கலாம்.a
கிறிஸ்தவ சபையும் அதிகாரமும்
“இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்.” (மத்தேயு 17:5) தெய்வீக அதிகாரத்துடன் இயேசு பேசியதை யெகோவா அங்கீகரிப்பதையே இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. நாம் படித்துப் பார்ப்பதற்கு வசதியாக, அவர் சொன்னவையெல்லாம் நான்கு சுவிசேஷங்களில் நமக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இயேசு பரலோகத்திற்கு செல்வதற்கு சற்றுமுன்பு, தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.” (மத்தேயு 28:18) சபையின் தலைவராகிய இயேசு, பூமியிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களை கண்காணிக்கிறார்; அதோடு பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி ஊற்றியது முதற்கொண்டு ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ மூலமாகவே சத்தியத்தை போதித்து வருகிறார். (மத்தேயு 24:45-47, NW; அப்போஸ்தலர் 2:1-36) கிறிஸ்தவ சபையைப் பலப்படுத்துவதற்கு அவர் என்ன செய்திருக்கிறார்? “அவர் உன்னதத்திற்கு ஏறி, . . . மனித வடிவில் வரங்களை அளித்தார்.” (எபேசியர் 4:8, NW) கிறிஸ்தவ மூப்பர்களே இந்த “வரங்கள்.” இவர்கள் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்டவர்கள்; உடன் விசுவாசிகளுடைய ஆவிக்குரிய தேவைகளை கவனிப்பதற்கு அதிகாரம் பெற்றவர்கள்.—அப்போஸ்தலர் 20:28.
இதன் காரணமாகவே பவுல் இவ்வாறு அறிவுரை கூறுகிறார்: “தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.” உண்மையுள்ள இந்த மனிதர்கள் இயேசுவின் அடிச்சுவடுகளை முடிந்தவரை அப்படியே பின்பற்றுவதால், அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுவது நிச்சயமாகவே ஞானமான செயல். பின்பு பவுல் இவ்வாறு கூறுகிறார்: “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, [“உங்கள்மீது அவர்கள் செலுத்தும் அதிகாரத்தை தொடர்ந்து அங்கீகரித்து,” தி ஆம்பிளிஃபைடு பைபிள்] அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்.”—எபிரெயர் 13:7, 17.
இப்படிப்பட்ட அறிவுரைகளை புறக்கணிக்கும்போது என்ன ஏற்படுகிறது? விசுவாச துரோகம். இப்படித்தான் பூர்வ கிறிஸ்தவ சபையிலிருந்த சிலர் துரோகிகள் ஆனார்கள். இம்மேனேயும் பிலேத்தும் சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப் போட்டார்கள், அவர்களுடைய வெற்றுப் பேச்சு ‘பரிசுத்தமானதை மீறியது.’ ஆவிக்குரிய விதத்தில் அல்லது அடையாளப்பூர்வ விதத்தில் உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நடந்துவிட்டது என்றும் கடவுளுடைய ராஜ்யத்தில் உயிர்த்தெழுதல் இல்லை என்றும் அடித்துக் கூறினார்கள்.—2 தீமோத்தேயு 2:16-18.
நியமிக்கப்பட்ட அதிகாரம் இந்தச் சமயத்தில் உதவிக்கரம் நீட்டியது. கிறிஸ்தவ மூப்பர்கள் இப்படிப்பட்ட வாக்குவாதங்களை பொய் என நிரூபித்தார்கள், ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக, அவர்கள் பைபிளின் அதிகாரத்தை பயன்படுத்தினார்கள். (2 தீமோத்தேயு 3:16, 17) இன்று, ‘சத்தியத்திற்கு தூணும் ஆதாரமுமாக’ விளங்கும் கிறிஸ்தவ சபையின் விஷயத்திலும் இதுவே உண்மை. (1 தீமோத்தேயு 3:15) பொய் போதனைகள் ‘ஆரோக்கியமான சட்டங்களின் மாதிரியை’ கொள்ளையிட அனுமதிக்கக் கூடாது. இந்த சட்டங்கள் பைபிளில் சிறந்த பொக்கிஷமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.—2 தீமோத்தேயு 1:13, 14, NW.
இந்த உலகில் அதிகாரத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்பு வேகமாக மறைந்துவருகிறது. என்றபோதிலும், சமூகத்தில், குடும்பத்தில், கிறிஸ்தவ சபையில் கொடுக்கப்பட்டுள்ள தகுந்த அதிகாரம் நம்முடைய நன்மைக்காகவே என்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் உணர்ந்துகொள்கிறோம். அதிகாரத்தை மதிப்பது நம்முடைய உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆவிக்குரிய நலத்திற்கும் நல்லது. கடவுளால் நியமிக்கப்பட்ட இத்தகைய அதிகாரங்களை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிகையில், மிகப் பெரிய அதிகாரிகளாகிய யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் நம்மை பாதுகாப்பார்கள்—இன்றும் என்றும்.—சங்கீதம் 119:165; எபிரெயர் 12:9.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள், குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற இந்த இரண்டு புத்தகங்களை காண்க.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
குடும்ப அதிகாரத்தைக் குறித்ததில் பைபிள் தகவல் களஞ்சியம்
[பக்கம் 6-ன் படம்]
யெகோவா தேவன், இயேசு கிறிஸ்து செலுத்தும் அதிகாரத்திலிருந்து ஒற்றை பெற்றோர்கள் கற்றுக்கொள்ளலாம்
[பக்கம் 7-ன் படங்கள்]
சமூகத்தில், குடும்பத்தில், கிறிஸ்தவ சபையில் நியமிக்கப்பட்டுள்ள தகுந்த அதிகாரம் தங்களுடைய நன்மைக்காகவே என்பதை கிறிஸ்தவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள்
[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]
Photo by Josh Mathes, Collection of the Supreme Court of the United States