மேலான அதிகாரங்கள் வகிக்கும் பாகம்
“உன்னுடைய நன்மைக்காக அது தேவ ஊழியக்காரனாயிருக்கிறது. ஆனால் நீ தீமை செய்தால் பயந்திரு.”—ரோமர் 13:4, NW.
1, 2. கிறிஸ்தவமண்டலத்திலுள்ள பலர் எவ்விதம் புரட்சி நடவடிக்கைகளில் தங்களை உட்படுத்தியிருக்கின்றனர்?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டனிலுள்ள பேராயர்களின் ஒரு கூட்டம் நியு யார்க் போஸ்ட் என்ற பத்திரிகையில் வன்மையான ஒரு தலையங்கக் கட்டுரைக்கு காரணமாயிருந்தது. அதுதான் லாம்பெத் மாநாடு, 500-க்கும் மேற்பட்ட ஆங்கில நாட்டுத் திருச்சபை பேராயர்கள் கூடிவந்தனர். “எல்லா வழிகளையும் முயன்றுபார்த்த பின்பு ஆயுதங்களைக்கொண்ட போராட்டத்தை நீதிக்கு ஒரே வழியாகத் தெரிந்துகொள்கின்ற” மக்களைப் புரிந்துகொள்ளும் வகையில் அந்த மாநாடு நிறைவேற்றிய தீர்மானம்தானே சீற்றத்தின் பொறிக்குக் காரணமாயிருந்தது.
2 இது உண்மையில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாயிருக்கிறது என்று போஸ்ட் கூறியது. என்றபோதிலும், பேராயர்கள் வளர்ந்துவரும் ஒரு நடத்தைப்போக்கைத்தானே பின்பற்றுகிறவர்களாயிருந்தார்கள். ஆப்பிரிக்காவை விடுதலை செய்ய வேகமான, உறுதியான, பாதுகாப்பான ஒரே வழியாக முறையற்ற கொரில்லா போரைச் சிபாரிசு செய்த கானாவின் கத்தோலிக்கப் பாதிரி; அல்லது “விடுதலைப் போரை அதன் கசப்பான முடிவு வரை” நடத்திட உறுதிபூண்ட ஆப்பிரிக்காவின் மெத்தடிஸ்ட் பேராயர்; அல்லது ஆசியாவிலும் தென் அமெரிக்காவிலும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் அரசாங்கங்களுக்கு எதிராகப் போராளிகளுடன் சேர்ந்து போரிட்டிருக்கும் அநேக மிஷனரிகள் போன்றவர்களுடைய மனப்பான்மையிலிருந்து அவர்களுடைய மனப்பான்மை எவ்விதத்திலும் வித்தியாசமாக இருக்கவில்லை.
உண்மைக் கிறிஸ்தவர்கள் ‘அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்பதில்லை’
3, 4. (எ) புரட்சியை ஊக்குவிக்கும் கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படுகிறவர்களால் என்ன நியமங்கள் மீறப்படுகின்றன? (பி) யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ஒருவர் என்ன காரியத்தைக் கண்டுபிடித்தார்?
3 முதல் நுற்றாண்டில் இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களைக் குறித்து இப்படியாகச் சொன்னார்: “நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல.” (யோவான் 17:14) புரட்சியை ஊக்குவிக்கும் எந்த ஒரு பெயர் கிறிஸ்தவனும் உலகத்தின் பாகமாயிருக்கிறான். அவன் இயேசுவைப் பின்பற்றுகிறவனல்ல; அல்லது அவன் “மேலான அதிகாரங்களுக்கு அடங்கி நடக்கிற”வனாக இல்லை. (ரோமர் 13:1) அவன் அப்போஸ்தலனாகிய பவுலின் பின்வரும் எச்சரிக்கைக்குச் செவிகொடுப்பது நல்லது: “அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு (ஏற்பாட்டிற்கு, NW) எதிர்த்துநிற்கிறான்; அப்படி எதிர்த்துநிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.”—ரோமர் 13:2.
4 கிறிஸ்தவமண்டலத்திலுள்ள பலருக்கு எதிர்மாறாக யெகோவாவின் சாட்சிகள் ஆயுத வன்முறையுடன் எந்தத் தொடர்பையும் கொண்டில்லை. ஐரோப்பாவிலுள்ள ஒருவர் இதைக் கண்டுபிடித்தார். அவர் எழுதுகிறார்: “மதமும் அரசியலும் உருவாக்கியிருப்பவற்றைப் பார்த்து நான் ஸ்தாபிக்கப்பட்ட சமுதாய ஒழுங்கைக் கவிழ்ந்திட என்னை அர்ப்பணித்தேன். நான் ஒரு வன்முறைக் கும்பலில் சேர்ந்து, எல்லாவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்திடுவதற்கான பயிற்சியைப் பெற்றேன்; ஆயுதங்களைத் திருடுவதிலும் பலமுறை ஈடுபட்டேன். என்னுடைய உயிர் எப்பொழுதுமே ஆபத்திலிருந்தது. காலம் கடந்திட, நாங்கள் தோல்விகாணும் ஒரு போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம் என்பது தெளிவானது. நான் ஏமாற்றமடைந்த ஒரு மனிதனாக இருந்தேன். நான், வாழ்க்கையில் எந்தவித நம்பிக்கையும் இழந்தநிலையில் இருந்தேன். அந்தச் சமயத்தில் ஒரு சாட்சி என்னுடைய வீட்டின் கதவைத் தட்டினாள். அவள் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து என்னிடம் பேசினாள். அவள் என்னுடைய நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறாள் என்று நான் சொல்லி, என்னுடைய மனைவியிடம் பேசச் சொன்னேன். அவள் பேசினாள், ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. கடைசியில் நானும் அந்தப் படிப்பில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டேன். மனிதவர்க்கத்தைத் தீமையினிடமாக உந்துவிக்கும் அந்தச் சக்தியைக் குறித்துப் புரிந்துகொண்ட காரியம் எனக்குள்ளிருந்த சுமையை தணித்த அந்த உணர்வை வார்த்தைகள் விவரிக்க முடியாது. மகத்தான ராஜ்ய வாக்குறுதி என்னைக் காத்திடும் ஒரு நம்பிக்கையையும் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தையும் அளித்துள்ளது.”
5. கிறிஸ்தவர்கள் ஏன் மேலான அதிகாரங்களுக்கு அமைதியாக அடங்கி நடக்கிறார்கள்? இது எப்பொழுது வரை நீடித்திருக்கும்?
5 கிறிஸ்தவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் ஸ்தானாபதிகளாக அல்லது தூதுவர்களாக இருக்கிறார்கள். (ஏசாயா 61:1, 2; 2 கொரிந்தியர் 5:20; எபேசியர் 6:19, 20) இப்படியாக அவர்கள் இந்த உலக போராட்டங்களில் நடுநிலை வகிக்கிறார்கள். சில அரசியல் முறைகள் மற்றவற்றைவிட பொருளாதார ரீதியில் அதிக வெற்றியாய்க் காணப்பட்டாலும், சில மற்றவற்றைவிட அதிக சுதந்திரத்தை அளிப்பதாயிருந்தாலும், கிறிஸ்தவர்கள் ஒன்றை இன்னொன்றைவிட மேன்மைப்படுத்துவதோ அல்லது சிறப்பிப்பதோ கிடையாது. எல்லா அமைப்பு முறைகளுமே அபூரணமானவை என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். கடவுளுடைய ராஜ்யம் இவற்றை எடுத்துப்போடும் வரை இது “தேவனுடைய ஏற்பா”டாக இருக்கிறது. (தானியேல் 2:44) எனவே, கிறிஸ்தவர்கள் மேலான அதிகாரங்களுக்கு அடங்கி நடப்பவர்களாக அமைதியாக இருக்கிறார்கள், அதேசமயத்தில் ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் மற்றவர்களுடைய நித்திய நலனை முன்னேற்றுவிப்பவர்களாயிருக்கிறார்கள்.—மத்தேயு 24:14; 1 பேதுரு 3:11, 12.
சட்டத்திற்குக் கீழ்ப்படிதல்
6. “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது” என்றாலும் ஏன் பெரும்பாலான மனித சட்டங்கள் நல்லவையாக இருக்கின்றன?
6 தேசிய அரசுகள் சட்ட முறைகளை அமைக்கின்றன, இவற்றில் பெரும்பாலான சட்டங்கள் நல்லவையே. “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது” என்ற உண்மையை நோக்குமிடத்து, இந்தக் காரியம் நம்மை ஆச்சரியமடையச் செய்ய வேண்டுமா? (1 யோவான் 5:19) இல்லை. யெகோவா நம்முடைய ஆதி தகப்பனாகிய ஆதாமுக்கு ஒரு மனச்சாட்சியைக் கொடுத்தார், சரி, தவறு என்ற இந்த உள்ளுணர்வு மனித சட்டங்களில் பலவகையில் பிரதிபலிக்கின்றன. (ரோமர் 2:13–16) ஒரு பூர்வ பாபிலோனிய சட்டப்பிரமாணிகனாகிய ஹமுராபி தன்னுடைய சட்டத்தொகுப்புக்குப் பின்வரும் அறிமுக வார்த்தைகளைக் கொண்டிருந்தான்: “அந்தச் சமயத்தில் மனிதருடைய நலனை மேன்மைப்படுத்த, தேசத்தில் நீதி நிலவிட, பொல்லாதவர்களையும் தீமையையும் அழித்திட, பலமுள்ளவர்கள் பலவீனர்களை ஒடுக்காதிருக்க, [அவர்கள்] என் பெயரை, என்னை, ஹமுராபியை, கடவுள் பயமுள்ள பிரபுவை மொழிந்தார்கள்.”
7. எவரேனும் சட்டத்தை மீறினால், அவரைத் தண்டிப்பதற்குரிய உரிமை யாருக்கு இருக்கிறது? ஏன்?
7 தங்களுடைய சட்டங்களின் நோக்கம் ஒன்றுபோலிருக்கின்றன என்று பெரும்பாலான அரசுகள் கூறுகின்றன: குடிமக்களின் நலனை முன்னேற்றுவிப்பதும் சமுதாயத்தில் ஒழுங்கை நிலைநாட்டுவதும். எனவே, கொலை, திருட்டு போன்ற சமூக நலனுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அவர்கள் தண்டனை அளிக்கிறார்கள், வேகத் தடை மற்றும் வாகனங்களை நிறுத்தும் இடம் போன்ற விதிகளை ஏற்படுத்துகிறார்கள். இந்தச் சட்டங்களை வேண்டுமென்றே மீறுகிறவர்கள் அதிகாரத்தை எதிர்த்துநிற்கிறவர்களாய் “தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.” ஆக்கினையை யாரிடமிருந்து வருவித்துக்கொள்கிறார்கள்? கடவுளிடமிருந்து இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆக்கினை என்று இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்கச் சொல் யெகோவாவிடமிருந்து வரும் நியாயத்தீர்ப்புகள் அல்லது ஆக்கினைத்தீர்ப்புகளுக்குப் பதிலாகக் குடிமுறை வழிமுறைகளைக் குறிக்கக்கூடும். (1 கொரிந்தியர் 6:7-ஐ ஒப்பிடவும்.) எவராவது சட்டவிரோதமாகச் செயல்பட்டால், அவரைத் தண்டிப்பதற்குரிய உரிமை மேலான அதிகாரத்திற்கு இருக்கிறது.
8. ஓர் அங்கத்தினர் வினைமையான ஒரு குற்றத்தைச் செய்தால் சபை எவ்வாறு பிரதிபலிக்கும்?
8 யெகோவாவின் சாட்சிகள் மனித அதிகாரங்களை எதிர்க்காமல் இருப்பதற்கான நல்ல பெயரைப் பெற்றிருக்கிறார்கள். சபையிலுள்ள ஒரு நபர் சட்டத்தை மீறுவாரானால், அவர் சட்டப்படியான தண்டனையிலிருந்து தப்பிடுவதற்கு சபை உதவி செய்யாது. எவராவது திருடினால், கொலை செய்தால், அவதூறாக எழுதுபவராயிருந்தால், வரி ஏய்ப்பு செய்தால், கற்பழித்தால், ஏமாற்றினால், சட்டத்துக்கு விரோதமான போதை மருந்துகளைப் பயன்படுத்தினால், அல்லது வேறு எந்த வழியிலாவது சட்ட அதிகாரத்தை எதிர்ப்பவராயிருந்தால் அவர் சபையிலிருந்து கடுமையான சிட்சையை எதிர்ப்படுவார்—உலக அதிகாரத்தால் அவர் தண்டிக்கப்படும்போது தான் துன்புறுத்தப்படுவதாக உணரக்கூடாது.—1 கொரிந்தியர் 5:12, 13; 1 பேதுரு 2:13–17, 20.
பயத்துக்குரிய ஒன்று
9. சட்டமுரணான மூலங்களின் தாக்குதலுக்குள்ளாகும்போது கிறிஸ்தவர்களுக்கு என்ன தகுந்த வழி இருக்கிறது?
9 பவுல் மேலான அதிகாரங்கள் குறித்து தொடர்ந்து கூறுகிறான்: “மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மை செய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.” (ரோமர் 13:3) அதிகாரத்திடமிருந்து தண்டனைக்குப் பயப்படுவது உத்தம கிறிஸ்தவர்கள் அல்ல, ஆனால் குற்றம் செய்கிறவர்கள், ‘துர்க்கிரியைகள்’ செய்கிறவர்கள், குற்றச்செயலில் ஈடுபடுகிறவர்களே. அப்படிப்பட்ட சட்டமுரணான மூலங்களின் தாக்குதலுக்குள்ளாகும்போது, யெகோவாவின் சாட்சிகள் சரியாகவே காவல் அல்லது இராணுவ அதிகாரத்தின் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.—அப்போஸ்தலர் 23:12–22.
10. யெகோவாவின் சாட்சிகள் எவ்விதம் அதிகாரத்திடமிருந்து ‘புகழ்ச்சியைப் பெற்றிருக்கின்றனர்’?
10 மேலான அதிகாரத்தின் சட்டத்தைக் கைக்கொள்ளும் கிறிஸ்தவனுக்குப் பவுல் சொல்வதாவது: “அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.” இதற்கு உதாரணமாக, அவர்களுடைய மாவட்ட மாநாடுகளுக்குப் பின்பு பிரேசிலிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் பெற்ற சில கடிதங்களைக் கவனியுங்கள். ஊராட்சி விளையாட்டுத் துறை வேந்தரிடமிருந்து வந்த கடிதம்: “உங்களுடைய அமைதியான நடத்தைக்கு உச்சமான போற்றுதல் உங்களுக்குத் தகுந்தது. இன்றைய தொல்லை மிகுந்த உலகில் இன்னும் இத்தனை அநேகர் கடவுளில் நம்பிக்கை வைத்து அவரை வணங்கிவருவதை அறியவருவது அத்துணை ஆறுதலாக இருக்கிறது.” ஓர் ஊராட்சி விளையாட்டரங்கத்தின் இயக்குநரிடமிருந்து வந்த கடிதம்: “வருகைதந்தவர்களின் எண்ணிக்கை இவ்வளவு பெரியதாயிருந்த போதிலும், வைபவத்திற்கு மாசு ஏற்படுத்தும் எவ்வித சம்பவமும் பதிவுசெய்யப்படவில்லை, பழிக்கமுடியாத அமைப்புக்கு நன்றி. மாநகர் தலைவரின் அலுவலகத்திலிருந்து: “உங்களுடைய ஒழுங்கு மற்றும் ஆச்சரியமான, தன்னியலார்ந்த கட்டுப்பாட்டிற்கு உங்களை வாழ்த்திட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறேன், உங்களுடைய வருங்கால வைபவங்களும் வெற்றிபெற எங்கள் வாழ்த்துகள்.”
11. நற்செய்தியைப் பிரசங்கித்தல் எவ்விதத்திலும் ஒரு தீய செயல் என்று ஏன் சொல்ல முடியாது?
11 “நற்கிரியைகள்” என்ற பதம் மேலான அதிகாரங்களின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் செயல்களைக் குறிக்கிறது. மேலும், மனிதனால் அல்ல, ஆனால் கடவுளால் கட்டளையிடப்பட்ட நம்முடைய பிரசங்க வேலை ஒரு கெட்ட செயல் அல்ல—அரசியல் அதிகாரிகள் உணர்ந்துகொள்ளவேண்டிய ஒரு குறிப்பு. செவிகொடுப்பவர்களின் ஒழுக்கப் பண்பை மேம்படுத்தும் ஒரு பொது சேவையாக அது இருக்கிறது. எனவே, மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கும் நம்முடைய உரிமையை மேலான அதிகாரங்கள் பாதுகாத்திடும் என்று நம்புகிறோம். நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதைச் சட்டப்பூர்வமாக்கிட பவுல் அதிகாரங்களைக் கேட்டுக்கொண்டான். (அப்போஸ்தலர் 16:35–40; 25:8–12; பிலிப்பியர் 1:7) அதுபோன்று யெகோவாவின் சாட்சிகள் கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, போலந்து, ரொமேனியா, பெனின், மற்றும் மியான்மார் (பர்மா) ஆகிய இடங்களில் தங்களுடைய வேலைக்கு சட்ட அங்கீகாரம் பெறுவதற்கு அண்மையில் முயற்சிகள் மேற்கொண்டு பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
“அது தேவ ஊழியக்காரன்”
12–14. மேலான அதிகாரங்கள் எவ்விதம் தேவ ஊழியக்காரராக செயல்பட்டிருக்கின்றனர் (எ) பைபிள் காலங்களில்? (பி) நவீன காலங்களில்?
12 உலக அதிகாரத்தைக் குறித்துப் பவுல் தொடர்ந்து கூறுகிறான்: “உன்னுடைய நன்மைக்காக அது தேவ ஊழியக்காரனாயிருக்கிறது. நீ தீமை செய்தால் பயந்திரு; அது விருதாவாய்ப் பட்டயத்தை பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அது நீதியைச் செலுத்துகிற தேவ ஊழியக்காரனாயிருக்கிறது.”—ரோமர் 13:4, NW.
13 தேசிய அதிகாரிகள் சில சமயங்களில் குறிப்பிட்ட வழிகளில் தேவ ஊழியக்காரனாய் சேவித்திருக்கின்றனர். கோரேசு யூதர்களைப் பாபிலோனிலிருந்து திரும்பி வரும்படியாகவும் கடவுளுடைய வீட்டைக் கட்டும்படியாகவும் ஆணையிட்டபொழுது அப்படிச் செய்தான். (எஸ்றா 1:1–4; ஏசாயா 44:28) அந்த வீட்டைக் கட்டுவதற்காக அர்தசஷ்டா எஸ்றாவை ஒரு நன்கொடையோடு அனுப்பியபோதும் அதற்குப் பின்னர் எருசலேமின் மதில்களை மறுபடியும் கட்டும்படியாக நெகேமியாவுக்கு ஆணைபிறப்பித்த போதும் கடவுளுடைய ஊழியக்காரனாயிருந்தான். (எஸ்றா 7:11–26; 8:25–30; நெகேமியா 2:1–8) ரோம் தேச மேலான அதிகாரம் எருசலேமில் பவுலைக் கலகக் கும்பலிடமிருந்து மீட்டபோதும், கப்பற்சேதத்தின்போது அவனைப் பாதுகாத்த போதும், ரோமில் அவனுக்கென்று சொந்தமாக ஒரு வீட்டைக் கொண்டிருக்க ஏற்பாடு செய்தபோதும் அவ்விதம் சேவித்தது.—அப்போஸ்தலர் 21:31, 32; 28:7–10, 30, 31.
14 அதுபோல, உலகப்பிரகாரமான அதிகாரங்கள் நவீன காலங்களில் கடவுளுடைய ஊழியக்காரராக சேவித்திருக்கின்றன. உதாரணமாக, 1959-ல், கியூபெக்கில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் தேசவிரோதமான அவதூறான காரியங்களை எழுதும் குற்றமுள்ளவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டபோது, கானடாவின் உச்ச நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது—இப்படியாக அந்தச் சமயத்தில் கியூபெக் பிரதமராயிருந்த மாரிஸ் டூப்லெசிஸின் தப்பெண்ணத்தையும் எதிர்த்துச் செயல்பட்டது.
15. என்ன பொதுவான வழியில் அதிகாரங்கள் தேவ ஊழியக்காரராக செயல்படுகின்றனர்? இது அவர்களுக்கு என்ன உரிமையை வழங்குகிறது?
15 மேலும், ஒரு பொதுவான வழியில், பொது ஒழுங்கைக் காத்துக்கொள்ளும் பொறுப்பைக் கடவுளுடைய ராஜ்யம் ஏற்கும் வரையில் தேசிய அரசாங்கங்கள் கடவுளுடைய ஊழியக்காரனாகச் சேவிக்கின்றன. பவுல் குறிப்பிடுகிறபடி, இதற்காக அதிகாரம் ‘பட்டயத்தைப் பிடித்திருக்கிறது,’ இது தண்டனை அளிப்பதற்கான அதன் உரிமையை அடையாளப்படுத்துகிறது. சாதாரணமாக, இது சிறைத் தண்டனையை அல்லது அபராதங்களை உட்படுத்துகின்றன. சில நாடுகளில் இது மரண தண்டனையையுங்கூட உட்படுத்தக்கூடும்.a மறுபட்சத்தில், மரண தண்டனை அளிக்காதிருப்பதை அநேக தேசங்கள் தெரிந்துகொண்டிருக்கின்றன, அதுவும் அவர்களுடைய உரிமை.
16. (எ) அதிகாரம் கடவுளுடைய ஊழியக்காரராக இருப்பதால், என்ன செய்வதைக் கடவுளுடைய ஊழியர்களில் சிலர் தகுந்ததாகக் காண்கின்றனர்? (பி) ஒரு கிறிஸ்தவன் எப்படிப்பட்ட வேலையை ஏற்றுக்கொள்ள மாட்டான்? ஏன் ஏற்றுக்கொள்ளமாட்டான்?
16 மேலான அதிகாரங்கள் கடவுளுடைய ஊழியக்காரர் என்ற உண்மைதானே தானியேல், அந்த மூன்று எபிரெயர்கள், நெகேமியா மற்றும் மொர்தெகாய் ஆகியவர்கள் ஏன் பாபிலோனிய மற்றும் பெர்சியா அரசாங்கங்களில் பொறுப்புள்ள நிலைகளை ஏற்றுக்கொள்ள முடிந்தது என்பதை விளக்குகிறது. இப்படியாக அவர்கள் கடவுளுடைய மக்களின் நன்மைக்காக அவர்கள் அதிகாரத்திடம் மேல்முறையீடு செய்ய முடிந்தது. (நெகேமியா 1:11, எஸ்தர் 10:3; தானியேல் 2:48; 49; 6:1, 2) இன்று சில கிறிஸ்தவர்களுங்கூட அரசாங்கப் பணிகளில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இவ்வுலகத்திலிருந்து பிரிந்தவர்களாதலால், அவர்கள் அரசியல் கட்சிகளில் கலந்து கொள்வதில்லை, அரசியல் பதவிகளை நாடுவதில்லை, அல்லது அரசியல் அமைப்புகளில் கொள்கைகளை வரையறுக்கும் ஸ்தானங்களை ஏற்றுக்கொள்வதில்லை.
விசுவாசம் தேவைப்படுகிறது
17. கிறிஸ்தவமல்லாதவர்களின் எரிச்சலைத் தூண்டி அதிகாரத்தை எதிர்க்கும்படியாகச் செய்யும் நிலைமைகள் என்னவாயிருக்கக்கூடும்?
17 அதிகாரம் ஊழலை அல்லது ஒடுக்குதலைப் பொறுத்துக்கொள்கிறது என்றால், அப்பொழுது என்ன? மேன்மையானதாகத் தென்படும் ஒன்றால் அந்த அதிகாரத்தை மாற்றிடுவதற்காகக் கிறிஸ்தவர்கள் முயன்றிட வேண்டுமா? சரி, அரசாங்க அநீதியும் ஊழலும் புதியவை அல்ல. முதல் நூற்றாண்டில், ரோம பேரரசு அடிமைத்தனம் போன்ற அநீதிகளை இழைத்துவந்தது. ஊழல் மிகுந்த அதிகாரிகளையுங்கூட அது பொறுத்துவந்தது. வஞ்சித்த வரி வசூலிப்பவர்கள், ஓர் அநீதியான நீதிபதி, இலஞ்சத்தை எதிர்பார்த்த ஓர் அதிபதி ஆகியவர்களைக் குறித்து பைபிள் பேசுகிறது.—லூக்கா 3:12, 13; 18:2–5; அப்போஸ்தலர் 24:26, 27.
18, 19. (எ) அரசாங்க அதிகாரிகளின் பேரில் துர்ப்பிரயோகம் அல்லது ஊழல் காணப்படுமானால் கிறிஸ்தவர்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்? (பி) ஒரு சரித்திராசிரியனாலும் கீழ்க்காணும் பெட்டியிலும் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல், கிறிஸ்தவர்கள் எவ்விதம் தனிப்பட்டவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கிறார்கள்?
18 துர்ப்பிரயோகம் செய்யப்பட்ட அப்படிப்பட்ட காரியங்களுக்கு முடிவுகட்ட கிறிஸ்தவர்கள் அப்பொழுது முயன்றிருக்கலாம், ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. உதாரணமாக, அடிமைத்தனத்துக்கு முடிவைக் குறித்துப் பவுல் பிரசங்கிக்கவில்லை, கிறிஸ்தவ அடிமை எஜமானர்கள் அவர்களுடைய அடிமைகளை விடுவிக்கும்படியாக அவன் சொல்லவில்லை. மாறாக, ஒருவருக்கொருவர் இருக்கும் தொடர்புகளில் கிறிஸ்தவ தயவைக் காண்பிக்கும்படியாக அவன் அடிமைகளுக்கும் அடிமை எஜமானருக்கும் புத்திமதி கொடுத்தான். (1 கொரிந்தியர் 7:20–24; எபேசியர் 6:1–9; பிலேமோன் 10–16; 1 பேதுரு 2:18-ஐயும் பாருங்கள்.) அதுபோல, கிறிஸ்தவர்கள் புரட்சி நடவடிக்கைகளில் உட்படவில்லை. அவர்கள் “சமாதான சுவிசேஷத்தைப்” பிரசங்கிப்பதில் அதிக சுறுசுறுப்பாய் இருந்தார்கள். (அப்போஸ்தலர் 10:36, NW) பொ.ச. 66-ல் ரோம சேனை எருசலேமை முற்றுகையிட்டு பின்பு பின்வாங்கியது. அந்த நகரைத் தற்காக்கும் கலகக்காரருடன் சேர்ந்து இருந்துவிடுவதற்குப் பதிலாக, எபிரெய கிறிஸ்தவர்கள் இயேசுவின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிகிறவர்களாக ‘மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.’—லூக்கா 21:20, 21.
19 பூர்வ கிறிஸ்தவர்கள் காரியங்கள் இருந்த விதமாகவே வாழ்ந்தார்கள், மற்றும் பைபிள் நியமங்களைப் பின்பற்ற தனிப்பட்டவர்களுக்கு உதவியளிப்பதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த முயன்றனர். சரித்திராசிரியர் ஜான் லார்டு, பழைய ரோமர் உலகம் என்ற தன்னுடைய நூலில் பின்வருமாறு எழுதினார்: “கிறிஸ்தவத்தின் உண்மையான வெற்றி புறம்பாகப் பிரபலமாயிருந்த நிறுவனங்கள், அல்லது அரசாங்கங்கள், அல்லது சட்டங்களை மாற்றுவதற்குப் பதிலாக, அவளுடைய கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவர்களை நல்ல மனிதராக ஆக்குவதில் காணப்பட்டது.” இன்றைய கிறிஸ்தவர்கள் எவ்விதத்திலும் வித்தியாசமாக நடந்துகொள்ள வேண்டுமா?
அரசு உதவியளிக்காதபோது
20, 21. (எ) உலகப்பிரகாரமான அதிகாரம் ஒன்று எவ்வாறு நன்மைக்கான தேவ ஊழியக்காரராக செயல்படத் தவறியது? (பி) அரசு உடந்தையாயிருந்து ஏற்படும் துன்புறுத்தலுக்கு யெகோவாவின் சாட்சிகள் எவ்விதம் பிரதிபலிக்க வேண்டும்?
20 செப்டம்பர் 1972-ல் மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு தேசத்தில் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராகக் கடுமையான துன்புறுத்தல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கானவர்களுடைய உடைமைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டன, அடிக்கப்பட்டார்கள், வாதிக்கப்பட்டார்கள், கொலைசெய்யப்பட்டார்கள், கொடுமைப்படுத்தப்பட்டார்கள். சாட்சிகளைப் பாதுகாக்கும் அதன் கடமையை மேலான அதிகாரம் நிறைவேற்றியதா? இல்லை! மாறாக, அது வன்முறையை ஊக்குவித்தது, குற்றமிழைக்காத கிறிஸ்தவர்களை பாதுகாப்புக்காக அண்மை தேசங்களுக்கு ஓடச்செய்தது.
21 யெகோவாவின் சாட்சிகள் இப்படிப்பட்ட கொடுமைக்காரர்களுக்கு எதிராக எரிச்சல் கொண்டு எழுந்திட வேண்டாமா? இல்லை. அப்படிப்பட்ட கீழ்த்தரமான நடத்தைகளைக் கிறிஸ்தவர்கள் பொறுமையோடு சகித்துக்கொள்ள வேண்டும். இயேசுவை பின்பற்றுகிறவர்களாக இவ்விதம் மனத்தாழ்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்: “அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.” (1 பேதுரு 2:23) இயேசு கெத்செமனே தோட்டத்தில் கைதுசெய்யப்பட்டபோது, ஒரு பட்டயத்தோடு தம்மைத் தற்காக்க வந்த ஒரு சீஷனை அவர் கடிந்துகொண்டார் என்பது அவர்கள் நினைவில் இருக்கிறது. பின்னர் அவர் பொந்தியு பிலாத்துவிடம் பின்வருமாறு சென்னார்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல.”—யோவான் 18:36; மத்தேயு 26:52; லூக்கா 22:50, 51.
22. ஆப்பிரிக்காவிலுள்ள சில சாட்சிகள் கடுமையாக துன்புறுத்தப்பட்டபோது, அவர்கள் என்ன நல்ல முன்மாதிரியை வைத்தார்கள்?
22 இயேசுவின் முன்மாதிரியை மனதிற் கொண்டு, அந்த ஆப்பிரிக்க சாட்சிகள் பவுலின் ஆலோசனையைப் பின்பற்றுவதற்குரிய தைரியத்தைக் கொண்டிருந்தார்கள்: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் [யெகோவா, NW] சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.” (ரோமர் 12:17–19; எபிரெயர் 10:32–34-ஐ ஒப்பிடவும்.) இன்றுள்ள நம் அனைவருக்கும் நம்முடைய ஆப்பிரிக்க சகோதரர்கள் என்னே ஓர் ஊக்கமுள்ள முன்மாதிரி! அதிகாரங்கள் கனத்துக்குரிய விதத்தில் செயல்பட மறுத்தாலும், உண்மைக் கிறிஸ்தவர்கள் பைபிள் நியமங்களைக் கைவிட மாட்டார்கள்.
23. சிந்திக்கப்படவேண்டிய கேள்விகள் என்ன?
23 என்றபோதிலும், மேலான அதிகாரங்கள் கிறிஸ்தவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம்? அவர்கள் உரிமையோடு கேட்கும் காரியங்களுக்கு ஏதாகிலும் வரம்பு உண்டா? இது அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும். (w90 11/1)
[அடிக்குறிப்புகள்]
a பூர்வீக இஸ்ரவேல் கொண்டிருந்த தெய்வீகப் பிரமாணம் வினைமையான குற்றங்களுக்கு மரண தண்டனையை உட்படுத்தியது.—யாத்திராகமம் 31:14; லேவியராகமம் 18:29; 20:2–6; எண்ணாகமம் 35:30.
நீங்கள் விளக்க முடியமா?
◻ தனிப்பட்ட ஒருவர் மேலான அதிகாரங்களுக்கு எதிராக “எதிர்த்து நிற்கக்”கூடிய சில வழிகள் யாவை?
◻ அரசாங்க ஏற்பாடுகள் சம்பந்தமாக “தேவனுடைய ஏற்பாடு” என்ன?
◻ அதிகாரங்கள் எவ்விதத்தில் “பயத்துக்குரிய ஒன்றாக” இருக்கிறார்கள்?
◻ மனித அரசாங்கங்கள் எவ்வாறு “தேவ ஊழியக்காரராய்” சேவிக்கின்றன?
[பக்கம் 21-ன் பெட்டி]
ஒரு காவல் துறை தலைமையதிகாரியிடமிருந்து வந்தக் கடிதம்
பிரேசிலில் இருக்கும் காவற்கோபுர சங்கத்தின் கிளைக்காரியாலயத்திற்கு “மினாஸ் கெராய்ஸ் அரசுப் பொதுப் பணி” என்ற சிறப்புரிமைச் சின்னம் தாங்கிய ஒரு கடிதம் வந்தது. இது கான்குவிஸ்டா நகர காவல் துறை தலைமையதிகாரியிடமிருந்து வந்தது. ஏதாவது தவறு நிகழ்ந்துவிட்டதா? கடிதம் விவரிக்கட்டும். அது கூறுகிறது:
“அன்புள்ள ஐயா:
“இந்தக் கடிதத்தின் மூலம் என்னை அறிமுகப்படுத்திக்கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏறக்குறைய கடந்த மூன்று ஆண்டுகளாக மினாஸ் கொராஸில் கான்குவிஸ்டா நகர காவல் தலைமையதிகாரியாக இருந்துவந்திருக்கிறேன். பணியில் நான் எப்பொழுதுமே மனச்சாட்சியோடு பணிபுரிய முயன்றிருக்கிறேன், ஆனால் சிறையில் அமைதியைக் காத்திடுவதில் நான் பிரச்னைகளைச் சந்திப்பதுண்டு. சிறைவாசிகள் சில வேலைகளில் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிற போதிலும் அமைதியிழந்தவர்களாக இருந்தார்கள்.
“ஒரு சில மாதங்களுக்கு முன்பு, செனார் O—எங்கள் நகரத்துக்கு வந்து, தன்னை ஒரு யெகோவாவின் சாட்சியாக அறிமுகப்படுத்தினார். அவர் சிறைவாசிகள் சிலரிடம் பைபிளைப் பிரசங்கிக்க ஆரம்பித்ததோடு, அவர்களுக்கு வாசிக்கவும், எழுதவும் கற்றுக்கொடுத்து, சுத்தம் சுகாதாரத்தின் அடிப்படைகளையும் சமுதாய வாழ்வுக்கான திறமைகளையும் கற்றுக்கொடுத்தார். அதே சமயத்தில் பரிசுத்த பைபிளைக் குறித்தும் அவர்களிடம் பேசினார். இந்தப் பிரசங்கியின் பணி அர்ப்பணிப்பையும், அன்பையும், சுய தியாகத்தையும் வெளிப்படுத்தியது. சிறைவாசிகளின் நடத்தை, அவர்களைக் கவனித்துவந்தவர்களை ஆச்சரியத்திலும் போற்றுதலிலும் ஆழ்த்திடும்வகையில் விரைவிலேயே நல்லவிதத்தில் மாற்றம் கண்டது.
“எங்களுடைய சிறையில் நடந்ததைக் கருத்திற்கொண்டு, எங்கள் சமுதாயத்தில் இந்தப் பயனுள்ள பிரசங்கியின் அருமையான வேலைக்கான போற்றுதலைக் காவற்கோபுர பைபிள் மற்றும் துண்டுப்பிரதி சங்கத்துக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரியப்படுத்த நான் விரும்புகிறேன்.”
அரசாங்க அதிகாரத்தைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு சொன்னான்: “நன்மை செய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.” (ரோமர் 13:3) மேற்கூறப்பட்ட காரியத்தில் இது நிச்சயமாகவே உண்மையாயிருந்தது. தண்டனை நிறைவேற்றும் முறைகள் பல ஆண்டுகளாகச் செய்ய முடியாததை நற்செய்தி ஒருசில மாதங்களில் சாதிக்க முடிந்திருப்பது கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் மாற்றும் வல்லமைக்குத்தானே என்னே ஒரு சாட்சியம்!—சங்கீதம் 19:7–9.