வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஒரு கிறிஸ்தவன் எவ்விதமாக (பைபிள் கண்டனம் செய்யும்) பரிதானத்துக்கும், ஆற்றப்பட்ட ஒரு சேவைக்காக கொடுக்கப்படும் “அன்பளிப்பு” அல்லது “நன்கொடை”க்குமிடையே வேறுபாட்டை காணமுடியும்?
பழக்க வழக்கங்கள் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுவதை நாம் மதித்துணருவது அவசியமாக இருக்கிறது. சில தேசங்களில் ஏற்றுக் கொள்ளப்படும் வழக்கங்கள் வேறு இடங்களில் தவறானதாக அல்லது முறையற்றதாக ஒரு வேளை இருக்கக்கூடும். உதாரணமாக ஒரு தேசத்தில் மக்கள் ஒரு அதிகாரிக்கு முன் தலை வணங்கக்கூடும். ஆனால் வேறொரு தேசத்தில் இது விக்கிரகாராதனையாக கருதப்படக்கூடும்.a அதேவிதமாகவே ஒரு தேசத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் “அன்பளிப்பு” பழக்கம் மற்றொரு தேசத்தில் அதிர்ச்சியூட்டுவதாக அல்லது முறைகேடானதாக இருக்கக்கூடும். இப்படிப்பட்ட வித்தியாசங்களை மனதில் கொண்டு பரிதானத்துக்கு எதிராக கடவுளின் புத்திமதியை எல்லா கிறிஸ்தவர்களும் பின்பற்ற வேண்டும்.
பரிதானம் என்பது என்ன, பைபிள் அதைப் பற்றி என்ன சொல்லுகிறது? தி வோர்ல்ட் புக் என்சைக்ளோப்பீடியா இதை விளக்குகிறது: “பரிதானம் என்பது பொறுப்புள்ள ஸ்தானத்திலிருக்கும் ஒரு நபருக்கு மதிப்புள்ள ஒன்றை கொடுப்பதும் அவர் இதற்குக் கைமாராக, கொடுத்தவருக்கு நன்மையுண்டாக தன்னுடைய கடமையை அல்லது சட்டத்தை மீறுவதுமே ஆகும்.” இதன் காரணமாகவே, ஒரு தீர்ப்பை மாற்ற அல்லது நியாயத்தைப் புரட்ட ஒரு நீதிபதிக்குப் பணத்தை [அல்லது ஒரு நன்கொடையை] கொடுப்பது பரிதானமாக இருக்கிறது. சட்டத்தை ஏமாற்றுவதற்காக பணத்தைக் கொடுப்பதும் கூட பரிதானமாக இருக்கிறது. அதாவது ஒரு மீறுதலை பொருட்படுத்தாமல் விட்டு விடும்படியாக ஒரு கட்டட அல்லது வாகன மேலாளரை கேட்பது போன்ற இப்படிப்பட்டவையாக இது இருக்கலாம்.
கடவுள் பரிதானத்தைக் கண்டனம் செய்கிறார். அவர் இஸ்ரவேல் நியாயாதிபதிகளிடம் பின்வருமாறு சொன்னார்: “நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக: முகதாட்சிணியம் பண்ணாமலும் பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.” (உபாகமம் 16:19; நீதிமொழிகள் 17:23; ஏசாயா 1:23; 5:23; 1 சாமுவேல் 8:3-5 ஒப்பிடவும்.) யெகோவா தேவன் தாமே ஒரு முன்மாதிரியை வைக்கிறார். ஏனென்றால் அவரிடத்திலே “அநியாயமும் முகதாட்சிணியமும் இல்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது.” (2 நாளாகமம் 19:7; உபாகமம் 10:17) கடவுளுடைய அங்கீகாரத்தை விரும்பும் கிறிஸ்தவர்கள் பரிதானத்தின் உதவியை நாட மறுத்து விடுகிறார்கள்.—அப்போஸ்தலர் 24:26 ஒப்பிடவும்.
உலகம் முழுவதிலுமுள்ள மனிதர்கள் பரிதானத்துக்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்து அதற்கு எதிராக சட்டங்களைக் கொண்டிருந்தாலும், மேலே காணப்படும் கேள்வியில் பிரதிபலிக்கப்படும் பிரச்னையை அநேகர் எதிர்படுகின்றனர். தங்களின் வேலை முடிய அல்லது அது நன்றாக முடிய, தங்கள் தேசத்திலுள்ள சிறிய அதிகாரிகளுக்கு “நன்கொடை” அல்லது “அன்பளிப்பு” கொடுப்பது அவசியமாயிருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். உதாரணமாக பணவீக்கம் மிகுதியாக உள்ள ஒரு தேசத்தைக் குறித்து தி வால் ஸ்டீரீட் ஜர்னல் இவ்விதமாகச் சொன்னது: “சமாளிப்பதற்குத் தேவையான கூடுதல் பணத்தைப் பெற்றுக் கொள்ள, அரசாங்க ஊழியர்கள் சிறிய இலஞ்ச ஊழல்களின் துணையை நாடுகிறார்கள். ‘ஏதாவது ஒரு பாரத்தை நீங்கள் வாங்க வேண்டுமானால் அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும்’ என்பதாக தேசீய ஏஜென்ஸியின் தலைவர் சொல்கிறார். இதற்கிடையில், குடியேறுபவர்களைக் கையாளும் அலுவலகத்தின் அதிகாரிகள், சர்வ தேசீய விமான நிலையத்தில், தங்கள் விமானங்களைத் தவறவிட்டுவிடுவோமோ என்ற தடுமாற்றத்திலிருக்கும் அயல் நாட்டு பயணிகளின் பயண இசைவு சீட்டில் முத்திரைபோட 260 ரூபாய் கேட்டு நச்சரிக்கிறார்கள்.”
உலகம் முழுவதிலும் சாதாரணமாக இருக்கும் மேலிடத்து தாமதத்தைப் பற்றியும் இதன் விளைவாக ஏற்படும் இலஞ்ச ஊழல் பற்றியும் சமீபத்தில் ஐக்கிய மாகாணங்கள் செய்தியும் உலக அறிக்கையும் குறிப்பிட்டிருந்தது. உதாரணமாக அது சொன்னது: இப்பொழுதெல்லாம் ஒரு இந்திய மனிதன், பள்ளியில் தன் பிள்ளையை சேர்ப்பதற்கு, மருத்துவமனையில் சேருவதற்கு, மற்றும் இரயிலில் இருக்கை ஒதுக்கீட்டுக்கும் கூட அதிகாரிக்குப் பணத்தை இரகசியமாக கொடுத்தாக வேண்டும்.” இதற்கு மற்ற உதாரணங்கள்:
—ஒரு தொழிலாளி, தொழிலை தொடங்குவதற்கு முன்னர் அவன் அனுமதி பெறுவது அவசியமாயிருக்கிறது. அரசாங்க கட்டணத்தை அவன் அரசாங்க அலுவலகத்தில் கட்டி விடுகிறான். என்றாலும் ஒரு “அன்பளிப்பில்லா”விட்டால் அவனுடைய விண்ணப்பத்தாள், காகித குவியலின் அடியில் தானே தங்கிவிடும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கிறது. மற்றவர்களுக்கு முன்னால் தன்னுடையது வைக்கப்பட வேண்டும் என்று அவன் கேட்காவிட்டாலும் அவன் மாமுலாக கொடுக்கப்படும் “தொகையை” கொடுத்தால் தானே அது சரியாக கையாளப்படும்.
—குறிப்பிட்ட ஒரு தேசத்தில் போக்குவரத்து வாகன அதிகாரிகளுக்குக் குறைந்த சம்பளமே கொடுக்கப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரியும். அவர்கள் அதோடு கூட “அன்பளிப்பு”களினால் அறுதலடையும்படியாக எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஒரு அதிகாரி ஓட்டுநர் ஒருவரை நிறுத்தி சட்டம் மீறப்பட்டுவிட்டது என்று சொல்கிறார். அந்த மனிதன் அபராதத்தைக் கட்டியாக வேண்டும். ஓட்டுநர் தான் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை என்று எதிர்த்து பேசினால் விஷயம் நீதிமன்றம் வரை சென்றால், ஒரு அதிகாரியைத் தாக்கியதாகவும் கூட புகார் கொடுக்கப்படும் என்பதாக அதிகாரி மிரட்டுகிறார். இதன் காரணமாக அநேகர் வாய் திறவாமல், இதைச் சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு வரி என்பதாக நினைத்துக்கொண்டு அபராதத்தைச் செலுத்திவிடுகிறார்கள். மற்றவர்கள் அதைச் செலுத்த மறுத்து அதன் விளைவுகளை எதிர்பட மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
—ஒரு நகராட்சியின் வேலை குப்பை கூளங்களை அப்புறப்படுத்துவதாகும். ஆனால் வீட்டுக்காரர் குப்பைக்காரனுக்கு மாமுலாக “அன்பளிப்பு” கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. எவராவது இதைத் தராவிட்டால் அவருடைய குப்பைத் தொட்டி “மறக்கப்படுகிறது” அசுத்தமாக சுற்றுப்புறத்தை வைத்திருப்பதற்காக அவருக்கு அபராதம் போடுவதும் சாத்தியமாக இருக்கிறது.
அதிகாரத்திலிருக்கும் அநேகர் அநியாயமான இலாபத்துக்காக தங்களின் அரசாங்க அந்தஸ்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை இப்படிப்பட்ட பிரச்னைகள் காண்பிக்கின்றன. (பிரசங்கி 8:9) கிறிஸ்தவர்கள் கடவுளுடைய நீதியுள்ள புதிய ஒழுங்குக்காக ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தச் சமயம் வரும் வரையாக தற்போதைய ஒழுங்கை அவர்கள் சமாளிக்க வேண்டும். (2 பேதுரு 3:13) பொதுப்பணியிலுள்ளவர்கள் தங்கள் வேலையை செய்வதற்காக “அன்பளிப்பு”களை இவ்விதமாக எதிர்பார்ப்பதை அறிந்துகொள்வதை இது அர்த்தப்படுத்தலாம். இது வழக்கமாக இருக்கும் தேசங்களிலும்கூட, மேலாளர்களோடும் சுங்க அதிகாரிகளோடும் செயல் தொடர்பு கொள்ளும் அநேக யெகோவாவின் சாட்சிகள், சட்டம் அவர்களுக்கு உறுதிசெய்யும் காரியங்களுக்கு “அன்பளிப்பு”களைக் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். அவர்களுடைய இந்த நிலைக்காக அவர்கள் அறியப்பட்டிருப்பதன் காரணமாக, பெரும்பாலான ஆட்கள் பணத்தின் மூலமாக மாத்திரமே பெற்றுக்கொள்ளும் சலுகைகளை இவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். (நீதிமொழிகள் 10:9) என்றபோதிலும், உள்ளூர் நிலைமைகளுக்கேற்ப ஒவ்வொரு கிறிஸ்தவனும் பைபிளினால் கற்பிக்கப்பட்ட மனசாட்சியினால் வழிநடத்தப்பட வேண்டும்.
அயலான் பேரிலுள்ள அன்பு சிந்திக்கப்பட வேண்டிய மற்றொரு காரியமாக இருக்கிறது. (மத்தேயு 22:39) காத்துக்கொண்டிருப்பவர்களை எல்லாம் தாண்டி வரிசையில் முன்னால் போய் நிற்பது, போன்ற நாம் விரும்பும் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, “அன்பளிப்பை” பயன்படுத்துவது அன்பற்ற ஒரு காரியமாக இருக்கும். நாம் எவ்விதமாக நடத்தப்பட விரும்புகிறோமோ, அதே விதமாகவே மற்றவர்களை நடத்தும்படியாக இயேசு நமக்குப் புத்திமதி சொன்னார். (மத்தேயு 7:12) வரிசையில் தங்களுடைய முறை வரும்போது, அந்தத் தேசத்தின் பழக்கத்தின்படி தங்கள் வேலையை முடித்துக் கொடுக்க ஒரு அதிகாரிக்குத் தாங்கள் ஒரு “அன்பளிப்பைக்” கொடுக்கலாம் என்பதாக கிறிஸ்தவர்கள் யோசிக்கக்கூடும். இப்படிப்பட்ட “அன்பளிப்பு”களைக் கொடுப்பது வழக்கமாக இல்லாமலும் அல்லது பொதுவான உணர்ச்சிகளுக்கு அதிர்ச்சியூட்டுவதாகவும் இருக்கும் தேசங்களில், அன்புள்ள கிறிஸ்தவன் நிச்சயமாகவே மற்றவர்களை இடறலடையச் செய்யாத வகையில் நடந்து கொள்வான்.—1 கொரிந்தியர் 10:31-33.
மற்றொரு காரியம் சட்டத்துக்குக் கீழ்ப்படிதலாகும். இயேசு, “இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்” என்று உற்சாகப்படுத்தினார்.b (மாற்கு 12:17; மத்தேயு 17:24-27-ஐயும் பார்க்கவும்) சட்டத்தை மீறாத ஒரு கிறிஸ்தவன், அரசாங்க ஊழியருக்கோ வேறு ஒரு அதிகாரிக்கோ “அன்பளிப்புக்” கொடுக்க எதிர்பார்க்கப்படுவது ஒரு காரியமாகும். ஆனால் ஒரு கிறிஸ்தவன் உண்மையில், சட்டத்தை மீறியிருந்தால் எப்படி? அந்தச் சந்தர்ப்பத்தில், மீறுதலைக் கவனியாமல் விட்டுவிடும் படியாக ஒரு அதிகாரியைத் தூண்டுவதற்கு நல்மனசாட்சியோடு அவன் எவ்விதமாக பரிதானம் கொடுக்கமுடியும்? “தீமை செய்கிறவன் மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி” அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கும் அரசாங்க மேலான அதிகாரங்களுக்கு நாம் பயந்திருக்க வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினான். (ரோமர் 13:3, 4) பவுலும் கூட தான் அநியாயம் செய்திருந்தால் அதற்குத் தகுந்த தண்டனையை ஏற்றுக் கொள்வேன் என்று தானே சொன்னான். (அப்போஸ்தலர் 25: 10, 11) இதன் காரணமாகவே போக்குவரத்து சட்டத்தை மீறிவிட்ட ஒரு கிறிஸ்தவன் ஒரு அதிகாரியோ நீதிபதியோ உத்தரவிடும் அபராதத்தை அல்லது தொகையை செலுத்தி ஆக வேண்டும்
அரசாங்கங்கள், “உனக்கு நன்மை உண்டாகும் பொருட்டு ஊழியக்காரர்களாக” இருக்கிறார்கள் என்பதாகவும் கூட பவுல் சொன்னான். சில அதிகாரிகள், பேராசையுள்ளவர்களாக இருந்தபோதிலும் அரசாங்கங்கள் நிச்சயமாகவே பொதுமக்களின் நன்மைக்காக சேவைகளைச் செய்கின்றன. உதாரணமாக வாகனங்கள் சாலையில் செல்ல தகுதியுள்ளவையா என்பதையும் கட்டடங்கள் தீக்கு எதிரான பாதுகாப்பு விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதையும் அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள். ஆகவே சட்டத்துக்குக் கட்டுப்பட்டே செய்த பணிக்காக “அன்பளிப்பை” எதிர்பார்க்கும் ஒரு அதிகாரிக்கு அதைக் கொடுக்கலாம் என்று ஒரு கிறிஸ்தவன் நினைத்தால், அது சட்டம் மீறுதலைக் கவனியாமல் விட்டு விடுவதற்காக ஒரு மேலாளருக்குப் பரிதானம் கொடுப்பதிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது என்பது தெளிவாக இருக்கிறது.
எந்தத் தேசத்தில் வாழ்ந்துவந்தாலும் சரி, உள்ளூர் நிலைமைகளோடு போராடும்போது கிறிஸ்தவர்கள் நடைமுறைக்கு ஏற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டும். ‘தேவனுடைய கூடாரத்தில் தங்கி அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணப்’போகிறவர்கள் பரிதானத்தை நாடக்கூடாது என்பதைக் கடவுளுடைய ஊழியர்கள் மனதில் கொள்ள வேண்டும். (சங்கீதம் 15:1, 5) உரிமையோடு பெற்றுக்கொள்ள வேண்டிய பணிகளுக்காக அல்லது அதிகாரிகள் நியாயமற்ற விதமாக நடந்துகொள்வதைத் தவிர்ப்பதற்காக “அன்பளிப்பு”களைக் கொடுக்கும் விஷயத்தில் ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய மனசாட்சி அனுமதிப்பதை வைத்து தீர்மானித்து இதனால் வரக்கூடிய சிக்கல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளக்கூடியவனாக இருக்க வேண்டும். நிச்சயமாகவே தனிப்பட்ட வகையில் ஒரு நல்மனசாட்சியை விட்டுச் சென்று, கிறிஸ்தவத்தின் நற்பெயரை கெடுக்காமல் அல்லது மற்றவர்களை இடறலடையச் செய்யாத ஒரு போக்கிலேயே அவன் செல்ல வேண்டும்.—2 கொரிந்தியர் 6:3. (w86 10/1)
[அடிக்குறிப்புகள்]
a ஜூன் 1, 1968 ஆங்கில காவற்கோபுரம், “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்”.
b கிறிஸ்தவ சபையிலுள்ள மூப்பர்கள், திருடு, கொலை மற்றும் ஒழுக்கயீனம் போன்ற தெய்வீக சட்ட மீறுதல்களைக் கையாளும் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் சபை மூப்பர்கள், இராயனுடைய சட்டங்களையும் சட்டத் தொகுப்புகளையும் அமுல் படுத்த வேண்டும் என்று கடவுள் கேட்கவில்லை. இதன் காரணமாகவே ரோம சட்டத்தின் கீழ் அகதியாக இருந்த ஒநேசிமுவை ரோம அதிகாரிகளிடம் ஒப்புவிக்க வேண்டும் என்று பவுல் நினைக்கவில்லை. (பிலேமோன் 10, 15) அரசாங்க சட்டத்தை அப்பட்டமாக மீறி, சட்டத்தை மீறுகிறவன் என்ற பெயரை ஒருவன் சம்பாதித்துக் கொள்வானேயானால், அவன் ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க மாட்டான். அவன் சபை நீக்கமும் செய்யப்படலாம். (1 தீமோத்தேயு 3:2, 7, 10) மற்றொருவரின் மரணத்துக்குக் காரணமாக இருக்கும் சட்ட மீறுதல் சட்டபடியிருந்தால், இரத்தப் பழிக்காக சபை விசாரணை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.