“தூக்கத்திலிருந்து எழ” மக்களுக்கு உதவுங்கள்
‘எப்படிப்பட்ட காலத்தில் வாழ்கிறீர்களென்று, அதாவது தூக்கத்திலிருந்து எழ வேண்டிய நேரம் வந்துவிட்டதென்று, நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.’ —ரோ. 13:11.
விளக்க முடியுமா?
கிறிஸ்தவர்கள் ஆன்மீக ரீதியில் விழிப்புடன் இருப்பது ஏன் மிக முக்கியம்?
விழிப்புள்ள ஊழியர்கள் ஏன் செவிசாய்க்கிறவர்களாகவும் கூர்ந்து கவனிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்?
ஊழியத்தில் கனிவாகவும் மென்மையாகவும் நடந்துகொள்வது எப்படி உதவுகிறது?
1, 2. எந்த அர்த்தத்தில் பலர் விழித்தெழ வேண்டியிருக்கிறது?
வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது சிலர் தூக்க மயக்கத்தில் இருக்கிறார்கள், சிலர் தூங்கியே விடுகிறார்கள். இதனால், ஆண்டுதோறும் ஆயிரமாயிரம் பேர் அகால மரணம் அடைகிறார்கள். வேலைக்குக் காலதாமதமாய் எழுந்துபோவதால் அல்லது வேலையில் தூங்கி விடுவதால் பலருடைய வேலை பறிபோகிறது. ஆனால், ஆன்மீக ரீதியில் தூங்கிவிடுவது இதையெல்லாம்விட பயங்கர விளைவுகளை உண்டாக்கும். அதனால்தான், ‘விழிப்புடன் இருப்பவன் . . . சந்தோஷமானவன்’ என்று பைபிள் சொல்கிறது.—வெளி. 16:14-16.
2 யெகோவாவின் மகா நாள் நெருங்கிவரும் இந்த வேளையில், மனிதகுலம் ஆன்மீக உறக்கத்தில் இருக்கிறது. கிறிஸ்தவமண்டலத் தலைவர்கள் சிலரும்கூட தங்களுடைய மதத்தவர் ஆன்மீக ரீதியில் தூங்கிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆன்மீகத் தூக்கம் என்றால் என்ன? உண்மைக் கிறிஸ்தவர்கள் விழிப்புடன் இருப்பது ஏன் முக்கியம்? ஆன்மீகத் தூக்கத்திலிருந்து விழித்தெழ மக்களுக்கு நாம் எப்படி உதவலாம்?
ஆன்மீகத் தூக்கம் என்றால் என்ன?
3. ஆன்மீக ரீதியில் தூங்குகிறவர்களை எப்படி விவரிப்பீர்கள்?
3 தூங்குபவர்கள் பொதுவாகச் செயலற்று இருப்பார்கள். ஆன்மீக ரீதியில் தூங்குகிறவர்களோ சுறுசுறுப்பாக இருக்கலாம்—ஆனால் ஆன்மீக காரியங்களில் அல்ல. அவர்கள் அன்றாட காரியங்களில் மூழ்கியிருக்கலாம் அல்லது இன்பத்தை... கௌரவத்தை... செல்வத்தை... நாடுவதில் முழுமூச்சாய் ஈடுபட்டுக்கொண்டிருக்கலாம். இதுபோன்ற காரியங்களில் சுறுசுறுப்பாக இருப்பதால் ஆன்மீகக் காரியங்களில் அவர்கள் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள். ஆனால், ஆன்மீக ரீதியில் விழித்திருப்பவர்கள் தாங்கள் “கடைசி நாட்களில்” வாழ்வதை உணர்ந்திருக்கிறார்கள். அதனால், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் முடிந்தவரை சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள்.—2 பே. 3:3, 4; லூக். 21:34-36.
4. “மற்றவர்கள் தூங்குவதுபோல் நாம் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது” என்ற அறிவுரையின் அர்த்தமென்ன?
4 1 தெசலோனிக்கேயர் 5:4-8-ஐ வாசியுங்கள். இந்த வசனத்தில், “மற்றவர்கள் தூங்குவதுபோல் . . . தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது” எனக் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் அறிவுரை கூறினார். என்ன அர்த்தத்தில் கிறிஸ்தவர்கள் தூங்கிவிட வாய்ப்பிருக்கிறது? ஒன்று, யெகோவாவின் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்க தவறுவதன் மூலம் நாம் தூங்கிவிடலாம். இரண்டு, தேவபக்தி இல்லாதவர்களை யெகோவா அழிக்கும் காலம் நெருங்கிவிட்டதை உணராமல் இருப்பதன் மூலம் நாம் தூங்கிவிடலாம். எனவே, ஆன்மீக ரீதியில் தூங்குபவர்கள் தங்களுடைய வழிகளை... மனநிலைகளை... நம்மீது திணிக்காதவாறு நாம் கவனமாக இருக்க வேண்டும்.
5. ஆன்மீகத் தூக்கத்தில் இருப்பவர்களின் தவறான எண்ணங்கள் யாவை?
5 கடவுள் இல்லை... அவர் நம்மிடம் கணக்குக் கேட்க மாட்டார்... என்று சிலர் நினைக்கிறார்கள். (சங். 53:1) ‘கடவுளுக்கு நம்மீது அக்கறை இல்லை, அப்படியிருக்கும்போது நாம் ஏன் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்றும் சிலர் நினைக்கிறார்கள். இன்னும் சிலர், ஏதாவது ஒரு சர்ச்சில் அங்கத்தினராக இருந்தாலே போதும், கடவுளைப் பிரியப்படுத்திவிடலாம் என நினைக்கிறார்கள். இவர்களெல்லாரும் ஆன்மீகத் தூக்கத்தில் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் விழித்தெழ வேண்டும். இவர்களை எப்படி நாம் தட்டியெழுப்பலாம்?
நாம் தூங்கிவிடாமல் இருக்க வேண்டும்
6. கிறிஸ்தவர்கள் ஏன் ஆன்மீக ரீதியில் விழித்திருக்க வேண்டும்?
6 மற்றவர்களைத் தட்டியெழுப்ப வேண்டுமானால், நாம் முதலாவது விழித்திருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? கடவுளது வார்த்தை ஆன்மீகத் தூக்கத்தை ‘இருளுக்குரிய செயல்களோடு’ சம்பந்தப்படுத்திப் பேசுகிறது; அதாவது, குடித்துக் கும்மாளம் போடுதல், வெறிக்கவெறிக்கக் குடித்தல், பாலியல் ஒழுக்கக்கேடு, வெட்கங்கெட்ட நடத்தை, சண்டை சச்சரவு, பொறாமை போன்ற செயல்களோடு சம்பந்தப்படுத்திப் பேசுகிறது. (ரோமர் 13:11-14-ஐ வாசியுங்கள்.) இப்படிப்பட்ட காரியங்களிலிருந்து விலகியிருப்பது கஷ்டமாக இருக்கலாம். என்றாலும், நாம் விழித்திருப்பது மிக மிக முக்கியம். கார் ஓட்டும்போது தூங்கி விழுந்தால் நிரந்தரமாகத் தூங்க நேரலாம் என்பதை ஓட்டுநர் மனதில் வைக்க வேண்டும். அப்படியிருக்க... ஆன்மீக ரீதியில் தூங்கி விழுந்தால் தான் சாக நேரலாம் என்பதை ஒரு கிறிஸ்தவர் எப்போதும் மனதில் வைத்திருப்பது இன்னும் எந்தளவு முக்கியம்!
7. மக்களைப் பற்றிய தவறான கண்ணோட்டம் எப்படி நம்மைப் பாதிக்கலாம்?
7 உதாரணத்திற்கு, ஒரு கிறிஸ்தவர் தன்னுடைய பிராந்தியத்தில் உள்ள யாருமே நற்செய்திக்குச் செவிசாய்க்க மாட்டார்கள் என்று நினைக்கலாம். (நீதி. 6:10, 11) ‘யாருமே காதுகொடுத்துக் கேட்கப் போவதில்லை, நான் ஏன் மெனக்கெட்டுப் போய்ச் சொல்ல வேண்டும்?’ என்று அவர் ஒருவேளை யோசிக்கலாம். அநேகர் ஆன்மீக நித்திரையில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்; ஆனால், அவர்களுடைய சூழ்நிலைகளும் மனநிலைகளும் மாறலாம். சிலர் விழித்தெழுந்து காதுகொடுத்துக் கேட்கிறார்கள். நாம் விழிப்புடன் இருந்தால் அவர்களுக்கு உதவ முடியும். இதற்கு, மனம்கவரும் விதத்தில் நற்செய்தியைச் சொல்ல புதுப்புது வழிகளைத் தேட வேண்டும். அதோடு, நம் ஊழியம் ஏன் முக்கியம் என்பதை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும்.
நம் ஊழியம் ஏன் மிக முக்கியம்?
8. நம் கிறிஸ்தவ ஊழியம் ஏன் மிக முக்கியம்?
8 இன்றைக்கு மக்கள் நம் செய்தியை ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, ஒரு விஷயத்தை நாம் மனதில் வைக்க வேண்டும்: நம் ஊழியம் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிறது; அதோடு, அவரது நோக்கம் நிறைவேறுவதில் பங்கு வகிக்கிறது. நாம் அறிவிக்கும் செய்திக்கு மக்கள் பிரதிபலிக்கும் விதத்தைப் பொறுத்து நியாயம் தீர்க்கப்படுவார்கள். நற்செய்திக்குச் செவிசாய்க்காதவர்கள் விரைவில் தண்டனைத் தீர்ப்பைப் பெறுவார்கள். (2 தெ. 1:8, 9) “‘நீதிமான்களும் அநீதிமான்களும்தான் உயிர்த்தெழுப்பப்படுவார்களே,’ அப்படியிருக்கும்போது எதற்குக் கஷ்டப்பட்டு ஊழியம் செய்ய வேண்டும்” என்று ஒரு கிறிஸ்தவர் யோசிப்பது தவறு. (அப். 24:15) ஏனென்றால், சிலர் ‘வெள்ளாடுகள்’ எனத் தீர்க்கப்பட்டு “நிரந்தர அழிவை” பெறுவார்கள் எனக் கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. நாம் செய்யும் பிரசங்க வேலை கடவுளுடைய இரக்கத்தைக் காட்டுகிறது; மக்கள் மனம் மாறுவதற்கும் “நிரந்தர வாழ்வை” பெறுவதற்கும் வழியைத் திறந்து வைக்கிறது. (மத். 25:32, 41, 46; ரோ. 10:13-15) நாம் பிரசங்கிக்காவிட்டால், வாழ்வுக்கு வழிநடத்தும் செய்தியைக் காதுகொடுத்து கேட்க மக்களுக்கு எப்படி வாய்ப்புக் கிடைக்கும்?
9. பிரசங்க வேலையில் ஈடுபடுவது எப்படி உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயனளித்திருக்கிறது?
9 நற்செய்தியை அறிவிப்பது நமக்கும் பயனளிக்கிறது. (1 தீமோத்தேயு 4:16-ஐ வாசியுங்கள்.) யெகோவாவையும் அவரது அரசாங்கத்தையும் பற்றிப் பேசும்போது அவர் மீதுள்ள உங்கள் விசுவாசமும் அன்பும் உறுதியாகிறது, அல்லவா? கிறிஸ்தவப் பண்புகளை வளர்த்துக்கொள்ள அது உங்களுக்கு உதவி செய்கிறது, அல்லவா? கடவுள் மீதுள்ள பக்தியை ஊழியத்தில் காட்டும்போது உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிகிறது, அல்லவா? சத்தியத்தைக் கற்பிக்கும் பாக்கியம் பெற்றிருக்கிற அநேகர், கடவுளது சக்தியால் மற்றவர்களுடைய வாழ்க்கை வளமாவதைக் கண்டு ஆனந்தம் அடைந்திருக்கிறார்கள்.
கூர்ந்து கவனியுங்கள்
10, 11. (அ) இயேசுவும் பவுலும் எப்படி விழிப்புள்ளவர்களாகவும் கூர்ந்து கவனிப்பவர்களாகவும் இருந்தார்கள்? (ஆ) விழிப்புள்ளவர்களாகவும் கூர்ந்து கவனிப்பவர்களாகவும் இருப்பது நம் ஊழியத்தை எப்படி மேம்படுத்தலாம் என்பதை விளக்குங்கள்.
10 நற்செய்தியின் மீது ஒருவருடைய ஆர்வத்தைப் பல்வேறு வழிகளில் ஈர்க்கலாம். ஆகவே, கிறிஸ்தவ ஊழியர்கள் கூர்ந்து கவனிப்பவர்களாய் இருக்க வேண்டும். இதில், இயேசு நமக்குச் சிறந்த முன்மாதிரியாய் விளங்குகிறார். அவர் பரிபூரணராய் இருந்ததால், ஒரு பரிசேயன் வாய் திறந்து சொல்லாவிட்டாலும் அவன் கோபமாய் இருந்ததைப் புரிந்துகொண்டார். அதோடு, பாவியென அறியப்பட்டிருந்த ஒரு பெண் உள்ளப்பூர்வமாய் மனந்திரும்பியதையும் ஒரு விதவை தன்னிடமிருந்த எல்லாவற்றையுமே காணிக்கையாய்ப் போட்டதையும் புரிந்துகொண்டார். (லூக். 7:37-50; 21:1-4) ஒவ்வொருவருடைய ஆன்மீகத் தேவையையும் அவரால் அறிந்துகொள்ள முடிந்தது. ஆனால், கடவுளுடைய ஊழியர்கள் மக்களைக் கூர்ந்து கவனிப்பதற்குப் பரிபூரணராய் இருக்க வேண்டியதில்லை. இதற்கு அப்போஸ்தலன் பவுல் எடுத்துக்காட்டாய் விளங்கினார். பலதரப்பட்ட ஆட்களை... மாறுபட்ட மனோபாவம் கொண்டவர்களை... கவர அவர் வெவ்வேறு வழிகளில் பிரசங்கித்தார்.—அப். 17:22, 23, 34; 1 கொ. 9:19-23.
11 இயேசுவையும் பவுலையும் போல நாம் விழிப்புள்ளவர்களாகவும் கூர்ந்து கவனிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்; அப்போதுதான், நாம் சந்திக்கும் ஆட்களின் ஆர்வத்தை எப்படிச் சிறந்த விதத்தில் தட்டியெழுப்பலாம் என்பதைப் பகுத்துணர முடியும். உதாரணமாக, ஆட்களை அணுகும்போது அவர்களுடைய கலாச்சாரத்தை... ஆர்வத்தை... குடும்ப சூழ்நிலையை... சுட்டிக்காட்டுகிற அம்சங்கள் கண்ணில் படுகிறதா என்று பாருங்கள். நீங்கள் சந்திக்கும் சமயத்தில் அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனித்து, உரையாடலைத் துவங்கும்போது அதைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள்.
12. ஊழியம் செய்யும்போது ஒருவருக்கொருவர் பேசுவதைக் குறித்து ஏன் கவனமாய் இருக்க வேண்டும்?
12 கூர்ந்து கவனிப்பவர் ஊழியத்தைத் தவிர மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாதிருக்க முயற்சி செய்கிறார். நம்முடன் சேர்ந்து ஊழியம் செய்பவரோடு பேசுவது ஊக்கம் தரலாம். இருந்தாலும், ஊழியத்தில் ஈடுபடுவதன் நோக்கமே மற்றவர்களுக்கு நற்செய்தியைச் சொல்லத்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. (பிர. 3:1, 7) ஆகவே, ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்குச் செல்லும்போது அநாவசியமாகப் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. நம் நோக்கத்தின்மீது மனதை ஒருமுகப்படுத்த சிறந்த வழி, வீட்டுக்காரருடன் பகிர்ந்துகொள்ள விரும்பும் விஷயங்களைப் பற்றிப் பேசுவதாகும். அதோடு, கைப்பேசி சிலசமயங்களில் ஊழியத்திற்குக் கைகொடுத்தாலும், வீட்டுக்காரருடன் நாம் உரையாடுகையில் அது இடைஞ்சலாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்
13, 14. (அ) ஒருவருக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? (ஆ) ஆன்மீக விஷயங்களில் மக்களுடைய ஆர்வத்தைத் தட்டியெழுப்ப என்ன செய்யலாம்?
13 விழிப்புடன் இருக்கிற ஊழியர்கள் வீட்டுக்காரர் சொல்வதைக் கவனமாகக் கேட்கிறார்கள். உங்கள் பிராந்தியத்தில் வசிக்கும் நபரை மனம் திறந்து பேச வைக்க என்ன கேள்விகளைக் கேட்கலாம்? ஏன் இத்தனை மதங்கள்... ஏன் எங்கு பார்த்தாலும் பயங்கர வன்முறை... ஏன் அரசாங்கங்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடிவதில்லை... போன்ற எந்த விஷயத்திலாவது அவர் ஆர்வம் காட்டுகிறாரா? உயிரினங்கள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருப்பதைப் பற்றி... பைபிள் அறிவுரை நடைமுறையானது என்பதைப் பற்றி... பேசி ஆன்மீக விஷயங்களில் ஒருவருடைய ஆர்வத்தைத் தட்டியெழுப்ப முடியுமா? கிட்டத்தட்ட எல்லாக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களையும்... ஏன் நாத்திகர்களையும்கூட... ஈர்க்கும் விஷயம்தான் பிரார்த்தனை. நம்முடைய பிரார்த்தனையை யாராவது கேட்கிறார்களா என அநேகர் யோசிக்கிறார்கள். வேறு சிலர், ‘எல்லாப் பிரார்த்தனைகளையும் கடவுள் கேட்கிறாரா? நம் பிரார்த்தனையைக் கடவுள் கேட்க நாம் என்ன செய்ய வேண்டும்?’ என்ற கேள்விகளில் ஆர்வம் காட்டலாம்.
14 உரையாடலைத் துவங்கும் கலையைப் பற்றி அனுபவமிக்க பிரஸ்தாபிகளிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ளலாம். விசாரணை செய்வதுபோல் கேள்வி கேட்பதை அல்லது அநாவசியமாக மற்றவர்களுடைய விஷயத்தில் தலையிடுவதை அவர்கள் எப்படித் தவிர்க்கிறார்கள் என்று கவனியுங்கள். வீட்டுக்காரருடைய கருத்துகளைப் புரிந்துகொள்ள விரும்புவதை அவர்கள் எப்படித் தங்களுடைய தொனியிலும் முகபாவத்திலும் காட்டுகிறார்கள் என்றும் கவனியுங்கள்.—நீதி. 15:13.
கனிவும் திறமையும்
15. நற்செய்தியை அறிவிக்கும்போது நாம் ஏன் கனிவாக நடந்துகொள்ள வேண்டும்?
15 ஆழ்ந்து தூங்கும்போது யாராவது எழுப்புவதை நீங்கள் விரும்புவீர்களா? திடீரென உலுக்கி எழுப்பினால் சிலருக்கு எரிச்சல்தான் வரும். அதனால், மெல்லத் தட்டியெழுப்புவதே நல்லது. ஆன்மீகத் தூக்கத்தில் இருப்பவர்களைத் தட்டியெழுப்பும்போதும் இப்படித்தான் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, வீட்டுக்காரர் உங்களைப் பார்த்துக் கோபப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? அவருடைய உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுங்கள், வெளிப்படையாய் தன் கருத்தைத் தெரிவித்ததற்கு நன்றி சொல்லுங்கள், பின்பு அமைதியாய் அங்கிருந்து போய்விடுங்கள். (நீதி. 15:1; 17:14; 2 தீ. 2:24) இப்படி நீங்கள் கனிவுடன் நடந்துகொண்டால், அடுத்த முறை சாட்சிகள் அவரைச் சந்திக்கச் செல்லும்போது அவர் ஒருவேளை காதுகொடுத்துக் கேட்கலாம்.
16, 17. ஊழியத்தில் நாம் எப்படி ஞானமாக நடந்துகொள்ளலாம்?
16 வேறு சந்தர்ப்பங்களில், வீட்டுக்காரர் ஆர்வம் காட்டாவிட்டாலும் அவருடன் உரையாடலைத் தொடர முடியும். சிலர், “எனக்குன்னு ஒரு மதம் இருக்கு” என்றோ “எனக்கு விருப்பமில்லை” என்றோ சொல்லி நம் உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்யலாம். என்றாலும், திறமையுடனும் கனிவுடனும் முயற்சி செய்தால், சிந்தனையைத் தூண்டும் ஒரு கேள்வியைக் கேட்டு ஆன்மீக விஷயங்களில் வீட்டுக்காரரின் ஆர்வத்தைத் தட்டியெழுப்பலாம்.—கொலோசெயர் 4:6-ஐ வாசியுங்கள்.
17 சில சமயங்களில், “நேரமில்லை,” “வேலையாக இருக்கிறேன்” என்று யாராவது சொன்னால், சூழ்நிலையைப் புரிந்துகொண்டு வந்துவிடுங்கள். ஆனால், சில நேரங்களில், சுருக்கமாக... நச்சென்று... பேசுவது ஞானமாக இருக்கலாம். சிலர் பைபிளைத் திறந்து, சிந்திக்க வைக்கும் ஒரு வசனத்தை வாசித்து, ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு வருகிறார்கள்—அதுவும் ஒரே நிமிடத்திற்குள்! அப்படிச் சுருக்கமாகப் பேசும்போது சிலருக்கு ஆர்வம் ஏற்பட்டு இன்னும் கொஞ்ச நேரம்கூட பேச மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். சூழ்நிலை அனுமதித்தால் நீங்கள் ஏன் இதை முயன்று பார்க்கக் கூடாது?
18. திறம்பட்ட விதத்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க நாம் என்ன செய்யலாம்?
18 சந்தர்ப்ப சாட்சி கொடுக்கத் தயாராய் இருந்தால், அன்றாடச் சூழ்நிலைகளில் ஆட்களைச் சந்திக்கும்போது நாம் அவர்களுடைய ஆர்வத்தைத் தட்டியெழுப்பலாம். சகோதர சகோதரிகள் பலர் தங்கள் பாக்கெட்டிலோ பையிலோ ஏதாவது பிரசுரங்களை எடுத்துச் செல்கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால் மற்றவர்களுக்கு ஒரு பைபிள் வசனத்தை எடுத்துக்காட்ட முன்கூட்டியே யோசித்து வைக்கிறார்கள். சந்தர்ப்ப சாட்சி கொடுப்பது குறித்து ஊழியக் கண்காணியிடம் அல்லது பயனியர்களிடம் நீங்கள் ஆலோசனை கேட்கலாம்.
உறவினரை மெல்லத் தட்டியெழுப்புங்கள்
19. நம் உறவினருக்கு உதவி செய்வதை ஏன் விட்டுவிடக் கூடாது?
19 நம் உறவினரும் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புவது இயல்புதான். (யோசு. 2:13; அப். 10:24, 48; 16:31, 32) அவர்கள் ஆரம்பத்தில் கேட்காவிட்டால், மீண்டும் அவர்களிடம் பேச வேண்டுமென்ற ஆர்வம் நமக்குத் தணிந்துவிடலாம். இனிமேல் என்ன செய்தாலும்... சொன்னாலும்... அவர்களுடைய மனதை மாற்ற முடியாது என ஒருவேளை நினைத்துக்கொள்ளலாம். இருந்தாலும், ஏதாவதொரு சம்பவம் உங்கள் உறவினருடைய வாழ்க்கையில் அல்லது கண்ணோட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அல்லது, சத்தியத்தை எடுத்துச் சொல்லும் உங்கள் திறமை முன்பைவிட மெருகேறியிருக்கலாம் என்பதால் இப்போது நீங்கள் நல்ல பலனைப் பெறலாம்.
20. உறவினரிடம் ஏன் கனிவுடன் பேச வேண்டும்?
20 உறவினருடைய உணர்ச்சிகளை நாம் புண்படுத்திவிடக் கூடாது. (ரோ. 2:4) ஊழியத்தில் சந்திப்பவர்களிடம் நாம் எப்படிக் கனிவுடன் பேசுவோமோ அப்படியே இவர்களிடமும் பேச வேண்டும். சாந்தத்துடனும் மரியாதையுடனும் பேசுங்கள். எப்போதும் சத்தியத்தைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, சத்தியம் எப்படி உங்களுக்கு உதவியிருக்கிறது என்பதைச் செயலில் காட்டுங்கள். (எபே. 4:23, 24) ‘பிரயோஜனமாயிருக்கிறதை உங்களுக்குப் போதித்து,’ யெகோவா எப்படி உங்களைச் சந்தோஷமாக வாழ வைத்திருக்கிறார் என்பதை உங்கள் உறவினர் புரிந்துகொள்ள உதவுங்கள். (ஏசா. 48:17) ஒரு கிறிஸ்தவர் எப்படி வாழ வேண்டும் என்பதை உங்களைப் பார்த்து அவர்கள் தெரிந்துகொள்ளட்டும்.
21, 22. உறவினருக்குச் சத்தியத்தைக் கற்பிக்க விடாமுயற்சி அவசியம் என்பதற்கு ஓர் அனுபவத்தைச் சொல்லுங்கள்.
21 சமீபத்தில் ஒரு சகோதரி இவ்வாறு எழுதியிருந்தார்: “என் கூடப்பிறந்தவர்கள் 13 பேர். என் பேச்சின் மூலம்... நடத்தையின் மூலம்... அவர்கள் எல்லாருக்கும் சாட்சி கொடுக்க எப்போதும் முயற்சி செய்திருக்கிறேன். வருஷம் தவறாமல் அவர்கள் எல்லாருக்கும் தனித்தனியாகக் கடிதம் எழுதியிருக்கிறேன். ஆனாலும், 30 வருஷமாக நான் மட்டும்தான் என் குடும்பத்தில் யெகோவாவின் சாட்சியாக இருந்தேன்.”
22 அந்தச் சகோதரி தொடர்ந்து சொல்கிறார்: “ஒருநாள், நூற்றுக்கணக்கான மைலுக்கு அப்பால் இருக்கிற என் அக்காவுக்கு ஃபோன் செய்தேன். பைபிளைக் கற்றுத் தரச் சொல்லி பாதிரியிடம் கேட்டும் அவர் கற்றுத்தரவே இல்லையென்று சொன்னாள். நான் அவளுக்குக் கற்றுக்கொடுப்பதாகச் சொன்னேன். அதற்கு அவள், ‘சரி, ஆனா ஒன்னு, நான் யெகோவாவின் சாட்சியா மட்டும் ஆகமாட்டேன்’ என்றாள். பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தைத் தபாலில் அனுப்பி வைத்தேன். சில நாட்களுக்கு ஒருமுறை அவளுக்கு ஃபோன் செய்தேன். ஆனால், அவள் அந்தப் புத்தகத்தைத் திறந்துகூட பார்க்கவில்லை. கடைசியில், ஃபோனிலேயே சுமார் 15 நிமிஷம் படிக்கலாம் என்று சொல்லி அந்தப் புத்தகத்தை எடுத்துவரச் சொன்னேன்; அதில் கொடுக்கப்பட்டிருந்த சில வசனங்களை நாங்கள் வாசித்து, அதைப் பற்றிப் பேசினோம். இப்படிச் சில தடவை ஃபோனில் பேசிய பிறகு அவள் 15 நிமிஷத்திற்கு மேல் படிக்க ஆசைப்பட்டாள். பின்னர், படிப்பதற்காக அவளே எனக்கு ஃபோன் செய்ய ஆரம்பித்தாள்; சில சமயம், நான் தூங்கி எழுவதற்கு முன்னாடியே விடியக்காலையில் ஃபோன் செய்யத் தொடங்கினாள்... சில சமயம் ஒரே நாளில் இரண்டு தடவை ஃபோனில் படிக்க ஆரம்பித்தாள். அடுத்த வருஷமே ஞானஸ்நானம் எடுத்துவிட்டாள்; அதற்கு அடுத்த வருஷத்தில் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.”
23. ஆன்மீகத் தூக்கத்திலிருந்து மக்களைத் தட்டியெழுப்புவதில் நாம் ஏன் சோர்ந்துவிடக் கூடாது?
23 ஆன்மீகத் தூக்கத்திலிருந்து மக்களைத் தட்டியெழுப்புவது சாதாரண காரியம் அல்ல... அது ஒரு கலை; அதற்கு விடாமுயற்சி தேவை. இருந்தாலும், சாந்தகுணமுள்ளோரை எழுப்ப நாம் எடுக்கும் முயற்சிக்குப் பலன் கிடைக்கிறது. சராசரியாக, ஒவ்வொரு மாதமும் 20,000-க்கும் அதிகமானோர் ஞானஸ்நானம் பெற்று யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராய் ஆகிறார்கள். எனவே, “எஜமானருடைய சீடனாக நீ பெற்றிருக்கிற ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு எப்போதும் கவனமாயிரு” என்று அர்க்கிப்புவுக்கு பவுல் கொடுத்த அறிவுரையை நாம் மனதில் வைப்போமாக. (கொலோ. 4:17) அவசர உணர்வுடன் பிரசங்கிப்பது என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள அடுத்த கட்டுரை நம் அனைவருக்கும் உதவும்.
[பக்கம் 13-ன் பெட்டி]
விழிப்புடன் இருக்க இதோ சில வழிகள்...
▪ கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் சுறுசுறுப்பாய் இருங்கள்
▪ இருளுக்குரிய செயல்களைத் தவிருங்கள்
▪ ஆன்மீகத் தூக்கத்தால் வரும் ஆபத்தைக் குறித்து ஜாக்கிரதையாய் இருங்கள்
▪ உங்கள் பிராந்தியத்தில் உள்ளவர்கள்மீது எப்போதும் அக்கறை காட்டுங்கள்
▪ பிரசங்கிக்க புதிய முறைகளைப் பயன்படுத்துங்கள்
▪ ஊழியத்தின் முக்கியத்துவத்தை மனதில் வையுங்கள்