உலகமுழுவதும் சந்தோஷமாய் துதிப்போராயிருக்க பிரிந்திருத்தல்
“மக்களே, யாவை துதியுங்கள்! யெகோவாவுடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; யெகோவாவுடைய நாமத்தைத் துதியுங்கள்.”—சங்கீதம் 113:1, NW.
1, 2. (அ) சங்கீதம் 113:1-3-க்கு இசைவாக, நம்முடைய ஊக்கமான துதிக்கு யார் தகுதியானவர்? (ஆ) கேட்டுக்கொள்ள வேண்டிய பொருத்தமான கேள்வி என்ன?
யெகோவா தேவனே வானத்துக்கும் பூமிக்கும் மகத்தான சிருஷ்டிகர், நித்தியத்துக்கும் நம்முடைய சர்வலோக உன்னத பேரரசர். நம்முடைய ஊக்கமான துதிக்கு அவரே முழுவதும் தகுதியானவர். இதன் காரணமாகவே சங்கீதம் 113:1-3 (NW) நமக்கு இவ்வாறு கட்டளையிடுகிறது: “மக்களே, யாவை துதியுங்கள்! யெகோவாவுடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; யெகோவாவுடைய நாமத்தைத் துதியுங்கள். இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஆசீர்வதிக்கப்படக்கடவது. சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் யெகோவாவின் நாமம் துதிக்கப்படுவதாக.”
2 கடவுளுடைய சாட்சிகளாக, இதைச் செய்வதற்கு நாம் சந்தோஷப்படுகிறோம். இந்த முழு பூமியையும் சீக்கிரத்தில் யெகோவா தேவன் நாம் இன்று பாடிவரும் இந்த சந்தோஷ துதிப் பாடலால் நிரப்புவார் என்பது எவ்வளவு கிளர்ச்சியூட்டுகிறது! (சங்கீதம் 22:27) உலகளாவிய இந்த மிகப் பெரிய பாடகர் குழுவில் உங்களுடைய சத்தமும் கேட்கப்படுகிறதா? அப்படியானால், பிளவுற்றிருக்கும் சந்தோஷமற்ற இந்த உலகிலிருந்து பிரிந்திருப்பது உங்களை எவ்வளவாய் மகிழ்ச்சியடையச் செய்யவேண்டும்!
3. (அ) யெகோவாவின் மக்களை எது தனித்தன்மை வாய்ந்தவர்களாக, ஒப்பற்றவர்களாக ஆக்குகிறது? (ஆ) என்ன வழிகளில் நாம் பிரித்து வைக்கப்பட்டவர்களாய் இருக்கிறோம்?
3 நாம் ஐக்கியமாய் யெகோவாவை துதிப்பது நிச்சயமாகவே நம்மை தனித்தன்மை வாய்ந்தவர்களாய், ஒப்பற்றவர்களாய் ஆக்குகிறது. நாம் ஒருமனதாய் பேசுகிறோம், போதிக்கிறோம், ‘யெகோவாவின் மிகுந்த நற்குணத்தை’ அறிவிப்பதற்கு அதே முறைகளையே பயன்படுத்துகிறோம். (சங்கீதம் 145:7, NW) ஆம், யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட மக்களாக, நம் தேவனாகிய யெகோவாவின் சேவைக்காக பிரித்துவைக்கப்பட்டவர்களாய் இருக்கிறோம். ஒப்புக்கொடுக்கப்பட்ட பூர்வ இஸ்ரவேல் மக்கள் தங்களை சுற்றியிருந்த தேசத்தாரிலிருந்து பிரிந்திருக்கும்படியும் அந்தத் தேசத்தாருடைய பழக்கவழக்கங்களால் கறைபடாமல் இருக்கும்படியும் கடவுள் அவர்களிடம் சொன்னார். (யாத்திராகமம் 34:12-16) இதைச் செய்வதற்கு அவர் தம்முடைய மக்களுக்கு சட்டங்களைக் கொடுத்தார். அதைப் போலவே இன்றும், யெகோவா தம்முடைய பரிசுத்த வார்த்தையாகிய பைபிளை நமக்கு கொடுத்திருக்கிறார். இந்த உலகிலிருந்து நம்மை எவ்வாறு பிரித்து வைத்துக்கொள்ளலாம் என்பதை அதன் அறிவுரைகள் நமக்கு காட்டுகின்றன. (2 கொரிந்தியர் 6:17; 2 தீமோத்தேயு 3:16, 17) மகா பாபிலோனின் துறவிகளையும் கன்னியாஸ்திரீகளையும் போல ஆசிரமங்களிலும் மடங்களிலும் தனிமையாய் இருப்பதன் மூலம் நாம் பிரிந்திருப்பதில்லை. இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன்மூலம், நாம் யெகோவாவை வெளிப்படையாய் துதிப்போராய் இருக்கிறோம்.
யெகோவாவின் பிரதான துதிப்பாளரை பின்பற்றுங்கள்
4. யெகோவாவைத் துதிப்பதில் இயேசு எவ்விதம் முன்மாதிரி வைத்தார்?
4 யெகோவாவை துதிக்கும் தம்முடைய நோக்கத்திலிருந்து இயேசு ஒருபோதும் வழிவிலகிச் செல்லவில்லை. இது அவரை இந்த உலகிலிருந்து தனியே பிரித்துவைத்தது. ஜெப ஆலயங்களிலும் எருசலேமிலுள்ள ஆலயத்திலும் கடவுளுடைய பரிசுத்த பெயரை அவர் துதித்தார். மலையுச்சியில் இருந்தாலும்சரி அல்லது கடற்கரையில் இருந்தாலும்சரி, எங்கெல்லாம் மக்கள் கூடிவருகிறார்களோ அங்கெல்லாம் இயேசு வெளிப்படையாக யெகோவாவைப் பற்றிய சத்தியங்களைப் பிரசங்கித்தார். அவர் சொன்னார்: “பிதாவே, வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே, . . . உம்மை [“வெளிப்படையாக,” NW] ஸ்தோத்திரிக்கிறேன். (மத்தேயு 11:25) பொந்தியு பிலாத்துவுக்கு முன்பு விசாரணை செய்யப்படும்போதுகூட, இயேசு இவ்வாறு சாட்சிபகர்ந்தார்: “சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்.” (யோவான் 18:37) இயேசு தம்முடைய வேலையின் முக்கியத்துவத்தை மதித்துணர்ந்தார். இயேசு எங்கெல்லாம் இருந்தாரோ அங்கெல்லாம் யெகோவாவைக் குறித்து சாட்சிகொடுத்து, அவரை வெளிப்படையாக துதித்தார்.
5. சங்கீதம் 22:22 யாருக்குப் பொருந்துகிறது, நம்முடைய மனநிலை என்னவாக இருக்க வேண்டும்?
5 யெகோவாவின் பிரதான துதிப்பாளரைப் பற்றி சொல்லப்பட்ட இந்தத் தீர்க்கதரிசன கூற்றை சங்கீதம் 22:22-ல் நாம் காண்கிறோம்: “உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.” எபிரெயர் 2:11, 12-ல், அப்போஸ்தலன் பவுல், இந்த வசனங்களை கர்த்தராகிய இயேசுவுக்கும் பரலோக மகிமைக்காக யெகோவா தேவன் பரிசுத்தப்படுத்தியிருக்கிறவர்களுக்கும் பொருத்துகிறார். அவரைப் போலவே, சபை நடுவே யெகோவாவின் பெயரை துதிப்பதற்கு அவர்கள் வெட்கப்படுவதில்லை. நம்முடைய சபை கூட்டங்களுக்கு ஆஜராகையில் நாமும் இதே போன்ற மனநிலையைக் கொண்டிருக்கிறோமா? மனோ ரீதியிலும் குரல் ரீதியிலும் கூட்டங்களில் நாம் ஊக்கமாய் பங்குகொள்வது யெகோவாவைத் துதிக்கிறது. ஆனால் நம்முடைய சந்தோஷ துதி அங்கேயே முடிவடைந்து விடுகிறதா?
6. இயேசு தம்முடைய சீஷர்களுக்கு என்ன வேலை பொறுப்பை அளித்தார், வெளிச்சத்தை நேசிப்போர் எவ்வாறு கடவுளை மகிமைப்படுத்துகின்றனர்?
6 மத்தேயு 5:14-16-ன்படி, மற்றவர்களும் யெகோவாவை துதிக்கும்படி தங்கள் வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்வதற்கும்கூட இயேசு தம்முடைய சீஷர்களுக்கு வேலை பொறுப்பளித்தார். அவர் சொன்னார்: “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; . . . மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது.” வெளிச்சத்தை நேசிப்போர் கடவுளுக்கு மகிமையைக் கொண்டுவருகிறார்கள். வெறுமனே பேசுவதன் மூலமும் மனிதாபிமான நற்காரியங்களைச் செய்வதன் மூலமுமே இதை அவர்கள் செய்கிறார்களா? இல்லை, அதற்குப் பதிலாக, ஐக்கியப்பட்டவர்களாய் யெகோவாவை மகிமைப்படுத்துவதன் மூலம் இதைச் செய்கிறார்கள். ஆம், வெளிச்சத்தை நேசிப்போர் தங்களையே கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, அவரை சந்தோஷமாய் துதிப்போராக ஆகிறார்கள். மகிழ்ச்சிக்குரிய இந்த நடவடிக்கையை நீங்கள் எடுத்துவிட்டீர்களா?
யெகோவாவை துதிப்பதனால் வரும் சந்தோஷம்
7. யெகோவாவை துதிப்போர் ஏன் மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கிறார்கள், பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று என்ன சந்தோஷம் அவர்களுடையதாய் இருந்தது?
7 யெகோவாவை துதிப்போர் ஏன் மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கிறார்கள்? ஏனென்றால் சந்தோஷம் என்பது கடவுளுடைய பரிசுத்த ஆவியின் கனிகளில் ஒன்று. கலாத்தியர் 5:22-ல், அன்புக்கு அடுத்ததாகவே இது பட்டியலிடப்பட்டுள்ளது. முதல் நூற்றாண்டிலிருந்த இயேசுவின் சீஷர்கள் யெகோவாவுடைய ஆவியின் இந்தக் கனியை வெளிப்படுத்திக் காண்பித்தார்கள். ஏன், கடவுள் தம்முடைய ஆவியை இயேசுவின் சீஷர்களாகிய சுமார் 120 பேர்மீது ஊற்றிய சமயமாகிய பொ.ச. 33 பெந்தெகொஸ்தே அன்றே அவர்களில் அனைவரும் பல்வேறு பாஷைகளில் யெகோவாவை துதிக்க ஆரம்பித்துவிட்டார்களே. பல தேசங்களிலிருந்து எருசலேமுக்கு வந்திருந்த தேவ பக்தியுள்ள யூதர்கள் ‘பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.’ அவர்கள் வியந்து சொன்னதாவது: “நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே”! (அப்போஸ்தலர் 2:1-11) இப்படி ஆச்சரியம் தரும் விதத்தில் பலபாஷைகளில் யெகோவாவை துதித்ததனால் ஏற்பட்ட விளைவு என்னவாயிருந்தது? மேசியாவைப் பற்றிய ராஜ்ய நற்செய்தியை சுமார் 3,000 யூதர்களும் யூத மதத்திற்கு மாறியிருந்தவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் முழுக்காட்டப்பட்டார்கள், பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள், யெகோவாவை சந்தோஷத்துடன் துதிப்போராக தங்களுடைய குரல்களை ஆர்வத்துடன் கூட்டினார்கள். (அப்போஸ்தலர் 2:37-42) அது என்னே ஓர் ஆசீர்வாதமாய் இருந்தது!
8. பெந்தெகொஸ்தேவுக்குப் பின், தங்களுடைய சந்தோஷத்தை அதிகரிக்க கிறிஸ்தவர்கள் என்ன செய்தார்கள்?
8 அந்த அறிக்கை தொடர்ந்து சொல்கிறது: “அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள், இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.” (அப்போஸ்தலர் 2:46, 47) அவர்கள் ஒன்றாக கூடி போஜனம் பண்ணினதுதான் அவர்களுக்குச் சந்தோஷத்தைக் கொண்டுவந்ததா? இல்லை, அவர்களுடைய பிரதான சந்தோஷம் யெகோவா தேவனை அநுதினமும் துதித்ததிலிருந்தே வந்தது. ஆயிரக்கணக்கானோர் அவர்கள் பிரசங்கித்த இரட்சிப்பின் செய்திக்கு செவிசாய்த்தபோது அவர்களுடைய சந்தோஷம் அதிகரித்தது. அதுவே இன்று நம்முடைய காரியத்திலும் உண்மையாய் இருக்கிறது.
எல்லா தேசங்களிலும் சந்தோஷமாய் துதிப்போர்
9. (அ) கடவுள் தம்முடைய நற்செய்தியைக் கேட்கும்படியான வாய்ப்பை எல்லா தேசத்து மக்களுக்கும் எப்பொழுது மற்றும் எப்படி கொடுக்க ஆரம்பித்தார்? (ஆ) முழுக்காட்டுதல் பெறுவதற்கு முன்பே கொர்நேலியுவின்மீதும் அவருடைய கூட்டாளிகளின்மீதும் ஏன் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது?
9 யெகோவா, ஒளி கொண்டுசெல்லும் தம்முடைய ஊழியர்களின் வேலையை ஒரு தேசத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்த விரும்பவில்லை. எனவே, பொ.ச. 36 முதற்கொண்டு, தம்முடைய நற்செய்தியை கேட்கும் வாய்ப்பை எல்லா தேசங்களிலும் உள்ள மக்களுக்கும் அவர் கொடுத்தார். செசரியாவில் இருந்த புறஜாதி இராணுவ அதிகாரியின் வீட்டிற்கு கடவுளுடைய வழிநடத்துதலினால் பேதுரு சென்றார். கொர்நேலியு தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடனும் வீட்டாருடனும் கூடியிருந்ததை அவர் கண்டார். அவர்கள் பேதுருவின் வார்த்தைகளை உன்னிப்பாக செவிகொடுத்துக் கேட்கையில், இயேசுவை தங்களுடைய இருதயங்களில் விசுவாசித்தார்கள். நமக்கு எப்படி தெரியும்? ஏனென்றால் கடவுளுடைய பரிசுத்த ஆவி அந்தப் புறஜாதியாரான விசுவாசிகள்மீது வந்திறங்கியது. பொதுவாக, கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வரம் முழுக்காட்டுதலுக்குப் பின்பே கொடுக்கப்பட்டது; ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில், அவர்களுடைய முழுக்காட்டுதலுக்கு முன்பே யூதரல்லாத இவர்கள்மீது யெகோவா தம்முடைய அங்கீகாரத்தை காண்பித்தார். யெகோவா அதைச் செய்யவில்லையென்றால், கடவுள் தம்முடைய ஊழியர்களாக இப்பொழுது இந்தப் புறஜாதியாரையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதையும் தண்ணீர் முழுக்காட்டுதலுக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்பதையும் குறித்து பேதுரு நிச்சயமாய் இருந்திருக்க முடியாது.—அப்போஸ்தலர் 10:34, 35, 47, 48.
10. எல்லா தேசத்து மக்களும் யெகோவாவைத் துதிப்பார்கள் என எவ்வாறு பூர்வ காலத்திலிருந்தே முன்னுரைக்கப்பட்டது?
10 எல்லா தேசத்தாரும் தம்மை துதிப்பார்கள் என்பதை பூர்வ காலங்களிலிருந்தே யெகோவா முன்னுரைத்தார். சந்தோஷமாய் துதிப்போர் எல்லா தேசத்திலும் அவருக்கு இருப்பார்கள். இதை நிரூபிப்பதற்கு, அப்போஸ்தலனாகிய பவுல் எபிரெய வேதாகமத்திலிருந்து தீர்க்கதரிசனங்களை மேற்கோள் காண்பித்தார். ரோமிலிருந்த கிறிஸ்தவர்களின் சர்வதேச சபையிடம் இவ்வாறு சொன்னார்: ‘தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். மேலும் பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்; புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: [சங்கீதம் 18:49-ல் எழுதப்பட்டுள்ளபடி] இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது. மேலும், [உபாகமம் 32:43-ல்] புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார். மேலும், [சங்கீதம் 117:1-ல்] எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள்.’—ரோமர் 15:7-11.
11. சத்தியங்களைக் கற்றுக்கொள்வதற்கு எல்லா தேசத்து மக்களுக்கும் கடவுள் எவ்வாறு உதவியிருக்கிறார், மேலும் அதன் விளைவு என்ன?
11 எல்லா தேசத்தாரையும் ஆளுவதற்கு கடவுளால் நியமிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின்மீது மக்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்தால் தவிர, யெகோவாவை அவர்கள் ஐக்கியமாய் துதிக்க முடியாது. நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் அவருடைய சத்தியங்களை அவர்கள் மதித்துணர உதவிசெய்வதற்கு, கடவுள் ஒரு சர்வதேச போதிக்கும் திட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவர் தம்முடைய உண்மையும் விவேகமுள்ள அடிமை வகுப்பின் மூலம் வழிநடத்துதலை கொடுத்துவருகிறார். (மத்தேயு 24:45-47, NW) அதன் விளைவு? 50 லட்சத்திற்கும் மேலான சந்தோஷமுள்ள குரல்கள் 230-க்கும் அதிகமான நாடுகளில் யெகோவாவின் துதிகளை பாடிவருகின்றன. இதைச் செய்வதில் இன்னும் லட்சக்கணக்கானோர் அக்கறை காண்பித்து வருகிறார்கள். 1996-ல் நடந்த நினைவு ஆசரிப்புக்கு எத்தனை பேர் வந்திருந்தார்கள் என்பதை கவனியுங்கள்: 1,29,21,933 பேர். வியக்கத்தக்க எண்ணிக்கையானோர்!
சந்தோஷமாய் துதிப்போராகிய திரளான கூட்டம் முன்னறிவிக்கப்படுகிறது
12. அப்போஸ்தலன் யோவான் கண்ட தூண்டுவிக்கும் தரிசனம் என்ன, மேலும் அதன் உயிருள்ள அத்தாட்சியாக இருப்பது எது?
12 ஒரு தரிசனத்தில், எல்லா தேசங்களிலுமிருந்து வந்த ‘திரளான கூட்டத்தினரை’ அப்போஸ்தலன் யோவான் கண்டார். (வெளிப்படுத்துதல் 7:9) கடவுளுடைய அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோருடன் சேர்ந்து இந்தத் திரள் கூட்டத்தார் பாடிவரும் துதிகளின் முக்கிய பொருள் என்ன? யோவான் நமக்குச் சொல்லுகிறார்: “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக.” (வெளிப்படுத்துதல் 7:10) இது உலகின் எல்லா பாகத்திலும் தைரியமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது. அடையாளப்பூர்வமாய் சொல்லப்போனால், குருத்தோலைகளை அசைத்துக்கொண்டு, சர்வலோக உன்னத பேரரசராகிய கடவுளை நாம் ஐக்கியப்பட்டோராய் வாழ்த்தி வரவேற்று, அவருக்கும் அவருடைய குமாரனும் ஆட்டுக்குட்டியானவருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் நம்முடைய இரட்சிப்பை ‘உரித்தாக்குகிறோம்’ என்று வானத்திற்கும் பூமிக்கும் முன்பாக சந்தோஷமாய் அறிக்கையிடுகிறோம். ஆ, திரள் கூட்டத்தாரைப் பற்றிய உணர்ச்சியைத் தூண்டும் இந்தத் தரிசனத்தைப் பார்க்கையில் அப்போஸ்தலன் யோவான் என்னே ஒரு கிளர்ச்சியை அனுபவித்தார்! யோவான் எதைப் பார்த்தாரோ அதன் உயிருள்ள அத்தாட்சியாக, நாம் இன்று அதைப் பார்ப்பதிலும், அதன் பாகமாய் இருப்பதிலும்கூட, என்னே ஒரு கிளர்ச்சியை அனுபவிக்கிறோம்!
13. யெகோவாவின் மக்களை உலகத்திலிருந்து பிரித்துவைப்பது எது?
13 யெகோவாவின் ஊழியர்களாக, நாம் பெருமிதத்துடன் அவருடைய பெயரை தாங்கியிருக்கிறோம். (ஏசாயா 43:10, 12) நாம் யெகோவாவுக்கு சாட்சிகளாயிருப்பது, இந்த உலகிலிருந்து நம்மை வித்தியாசப்பட்டவர்களாய் ஆக்குகிறது. கடவுளுடைய தனிச்சிறப்புமிக்க பெயரை தாங்கியிருப்பதும் வாழ்க்கையில் நம்முடைய நோக்கமாக அவருடைய தெய்வீக வேலையை செய்வதும் என்னே ஓர் சந்தோஷம்! ராஜ்யத்தின் மூலம் தம்முடைய பெயரை பரிசுத்தப்படுத்துவதற்கும் தம்முடைய சர்வலோக உன்னத அரசதிகாரத்தை நியாயநிரூபணம் செய்வதற்கும் யெகோவா கொண்டுள்ள மகத்தான நோக்கம் நம்முடைய வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறது. அவருடைய பெயர் மற்றும் ராஜ்யம் சம்பந்தமாக அவருடைய தெய்வீக நோக்கத்தில் ஓர் இடத்தை வகிப்பதற்கு அவர் நமக்கு உதவியும் செய்திருக்கிறார். இதை அவர் மூன்று வழிகளில் செய்திருக்கிறார்.
சத்தியத்தைக் கொடுத்திருக்கிறார்
14, 15. (அ) கடவுள் தம்முடைய பெயர் மற்றும் ராஜ்யம் சம்பந்தமாக அவருடைய தெய்வீக நோக்கத்தில் நாம் ஓர் இடத்தை வகிப்பதற்கு நமக்கு உதவியிருக்கும் ஒரு வழி என்ன? (ஆ) பொ.ச. 1914-ல் ஸ்தாபிக்கப்பட்ட அந்த ராஜ்யம், பொ.ச.மு. 607-ல் கவிழ்க்கப்பட்ட ராஜ்யத்திலிருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறது?
14 முதலாவதாக, யெகோவா தம்முடைய மக்களுக்கு சத்தியத்தை கொடுத்திருக்கிறார். மிகவும் கிளர்ச்சியூட்டும் வெளிப்படுத்துதலானது, அவருடைய ராஜ்யம் 1914-ல் ஆட்சிசெய்ய ஆரம்பித்ததாகும். (வெளிப்படுத்துதல் 12:10) இந்தப் பரலோக அரசாங்கம் எருசலேமிலிருந்த மாதிரிப்படிவ ராஜ்யத்திலிருந்து வித்தியாசப்படுகிறது; அதில் தாவீதின் வம்சாவளியில் வந்தவர்கள் ராஜாக்களாய் சிங்காசனத்தில் அமர்த்தப்படுவது வழக்கமாய் இருந்தது. அந்த ராஜ்யம் கவிழ்க்கப்பட்டது; பொ.ச.மு. 607 முதற்கொண்டு, எருசலேம் புறஜாதி உலக வல்லரசுகளின் ஆட்சிக்கு முழுவதுமாக கீழ்ப்படுத்தப்பட்டிருந்தது. 1914-ல் யெகோவா ஏற்படுத்திய புதிய ராஜ்யம் ஒரு பரலோக ஆட்சியாகும்; அது யெகோவாவைத் தவிர யாருக்கும் ஒருபோதும் கீழ்ப்படுத்தப்படாது அழிக்கவும்படாது. (தானியேல் 2:44) மேலும், அதன் அரசதிகாரம் வித்தியாசமானது. எப்படி? வெளிப்படுத்துதல் 11:15 இவ்வாறு பதிலளிக்கிறது: ‘உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.’
15 ‘நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யம்’ முழு மனிதவர்க்க உலகத்தின்மீதும் அதிகாரம் செலுத்துகிறது. யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தின் இந்தப் புதிய வெளிப்பாடு, வெறுமனே கல்வியறிவு சம்பந்தப்பட்ட அக்கறைக்குரிய விஷயமோ—மாணவர்கள் கலந்துபேசுவதற்கு விரும்புகிற நடைமுறைக்கு ஒவ்வாத ஏதோவொன்றோ—அல்ல. இந்த ராஜ்யத்தில் அவருடைய மேசியானிய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் இயேசுவின் சகோதரர்களாகிய 1,44,000 பேரும் அடங்குவர்; அவர்களில் பெரும்பாலானோர் இப்பொழுது பரலோக மகிமைக்கு உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பரலோக ராஜ்யம் ஓர் உண்மையான அரசாங்கம். அந்த ஆட்சியின் விளைவாக என்றென்றும் பரிபூரணத்தில் வாழும் நம்முடைய சந்தோஷமான எதிர்பார்ப்பு, நாம் தொடர்ந்து களிகூருவதற்கு மேலுமான காரணத்தை கொடுக்கிறது. யெகோவாவின் வார்த்தையிலுள்ள இத்தகைய சத்தியம் ஒப்படைக்கப்பட்டிருப்பதானது அதைக் குறித்து உயர்வாக பேசுவதற்கு எப்பொழுதும் நம்மை உந்துவிக்கிறது. (சங்கீதம் 56:10) கடவுளுடைய மேசியானிய ராஜ்யம் இப்பொழுது பரலோகத்தில் ஆட்சிசெய்து கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொருவருக்கும் சொல்லுவதன் மூலம் இதை நீங்கள் தவறாமல் செய்துவருகிறீர்களா?
பரிசுத்த ஆவியினாலும் உலகளாவிய சகோதரத்துவத்தினாலும் உதவப்படுதல்
16, 17. கடவுள் தம்முடைய தெய்வீக நோக்கத்தில் ஓர் இடத்தை வகிப்பதற்கு நமக்கு உதவியிருக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது வழிகள் யாவை?
16 தம்முடைய தெய்வீக நோக்கத்தில் ஓர் இடத்தை வகிப்பதற்கு கடவுள் நமக்கு உதவியிருக்கிற இரண்டாவது வழியானது, அவருடைய பரிசுத்த ஆவியைக் கொடுப்பதன் மூலமாகும்; அது நம்முடைய வாழ்க்கையில் இனிய கனிகளைப் பிறப்பிப்பதற்கும் அவருடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் நமக்கு உதவிசெய்கிறது. (கலாத்தியர் 5:22, 23) மேலும், அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “நாங்களோ . . . , தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.” (1 கொரிந்தியர் 2:12) நாம் யெகோவாவின் ஆவிக்குக் கீழ்ப்படிவதன் மூலம், அவர் நமக்கு அன்புடன் கொடுத்திருக்கிற தற்போதைய நற்காரியங்களை—அவருடைய வாக்குறுதிகளை, சட்டங்களை, நியமங்களை, இன்னும் பிறவற்றை—நாமனைவரும் இப்பொழுது அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடியும்.—ஒப்பிடுக: மத்தேயு 13:11.
17 யெகோவா நமக்கு உதவுகிற மூன்றாவது வழியைக் குறித்ததில், நம்மிடம் உலகளாவிய சகோதரத்துவமும் வணங்குவதற்காக யெகோவாவின் மகிழ்ச்சியான அமைப்புக்குரிய ஏற்பாடும் உள்ளது. ‘முழு சகோதர கூட்டுறவிலும் அன்புகூரும்படி’ நமக்கு புத்திமதி கூறியபோது அதைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு பேசினார். (1 பேதுரு 2:17, NW) நம்முடைய அன்பான, சகோதர சகோதரிகள் அடங்கிய சர்வதேச குடும்பம், சந்தோஷ இருதயத்தோடு யெகோவாவை சேவிப்பதற்கு நமக்கு உதவிசெய்கிறது; சங்கீதம் 100:2 இவ்வாறு கட்டளையிடுகிறது: “மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.” 4-ம் வசனம் மேலும் சொல்லுகிறது: “அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.” ஆகவே, நாம் வெளிப்படையாக பிரசங்கித்தாலும்சரி அல்லது நம்முடைய கூட்டங்களுக்கு ஆஜரானாலும்சரி, நாம் சந்தோஷத்தை அனுபவிக்கலாம். யெகோவாவின் அழகிய ஆவிக்குரிய ஆலய பிரகாரத்தில் எப்பேர்ப்பட்ட சமாதானத்தையும் பாதுகாப்பையும் நாம் கண்டடைந்திருக்கிறோம்!
சந்தோஷத்தோடே யெகோவாவை துதியுங்கள்!
18. துன்புறுத்துதல் அல்லது நம்மை சூழ்ந்திருக்கிற வேறுசில பிரச்சினைகளின் மத்தியிலும் யெகோவாவை துதிப்பதில் நாம் ஏன் களிகூர முடியும்?
18 எப்பேர்ப்பட்ட கஷ்டமான சூழ்நிலைமைகள் வந்தாலும்சரி, துன்புறுத்துதலோ மற்ற பிரச்சினைகளோ நம்மை சூழ்ந்துகொண்டாலும்சரி, யெகோவாவுடைய வணக்க ஸ்தலத்தில் இருக்கிறோமென நாம் களிகூருவோமாக. (ஏசாயா 2:2, 3) அந்த சந்தோஷம், இருதயத்தின் பண்பு என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். நம்முடைய ஆரம்பகால கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் தங்களுக்கு ஏற்பட்ட அநேக கஷ்டங்கள் மற்றும் இழப்புகளின் மத்தியிலும் யெகோவாவை சந்தோஷமாய் துதிப்போராக இருந்தார்கள். (எபிரெயர் 10:34) இன்று நம்முடைய உடன் விசுவாசிகளும் அவர்களைப் போலவே இருக்கிறார்கள்.—மத்தேயு 5:10-12.
19. (அ) அடிக்கடி கொடுக்கப்படும் என்ன கட்டளைகள் யெகோவாவை துதிப்பதற்கு நம்மைத் தூண்டிகின்றன? (ஆ) நம்முடைய நித்திய ஜீவன் எதன்பேரில் சார்ந்துள்ளது, நம்முடைய திடதீர்மானம் என்ன?
19 யெகோவாவை சேவிக்கிற நாமனைவரும் அவரைத் துதிக்கும்படி சொல்லப்பட்டிருக்கிற பைபிள் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதில் மகிழ்ச்சியடைகிறோம். திரும்பத் திரும்ப வெளிப்படுத்துதல் புத்தகம் ‘யாவைத் துதி’ என்ற சொற்றொடரால் கடவுளுடைய துதிகளை இடையிடையே சொல்லுகிறது. (வெளிப்படுத்துதல் 19:1-6, NW) சங்கீதம் 150-ல் (NW) உள்ள ஆறு வசனங்கள், யெகோவாவைத் துதிக்கும்படி 13 முறை நமக்கு சொல்லுகின்றன. இது, யெகோவாவின் துதியை மகிழ்ச்சியுடன் பாடுவதில் சேர்ந்துகொள்ளும்படி அனைத்து சிருஷ்டிகளுக்கும் விடுக்கப்படும் சர்வலோக அழைப்பாகும். இந்தப் பெரிய அல்லேலூயா பாடகர் குழுவில் நாம் சேர்ந்துகொள்வதன் பேரிலேயே நம்முடைய நித்திய வாழ்க்கை சார்ந்திருக்கிறது! ஆம், யெகோவாவுக்கு இடைவிடாமல் துதிசெலுத்துகிறவர்கள் மட்டுமே என்றென்றும் வாழும் மக்கள். ஆகையால், முடிவு சமீபித்து வருகையில், உண்மைப் பற்றுறுதியுள்ள அவருடைய உலகளாவிய சபையோடு மிக நெருங்கிய வண்ணமாக சேர்ந்திருப்பதற்கு நாம் திடதீர்மானத்துடன் இருக்கிறோம். அப்படியானால், சங்கீதம் 150-ன் (NW) கடைசி வார்த்தைகள் முழுமையாக நிறைவேற்றமடைவதைக் காண நாம் நம்பிக்கையோடிருக்கலாம்: “சுவாசமுள்ள யாவும், யெகோவாவைத் துதிப்பதாக, மக்களே, யாவை துதியுங்கள்!”
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவாவின் மக்களை தனித்தன்மை வாய்ந்தவர்களாய், ஒப்பற்றவர்களாய் ஆக்குவது எது?
◻ ஏன் யெகோவாவின் ஊழியர்கள் மிகவும் சந்தோஷமுள்ளவர்களாய் இருக்கின்றனர்?
◻ உலகிலிருந்து எது நம்மை பிரித்துவைக்கிறது?
◻ தெய்வீக நோக்கத்தில் ஓர் இடத்தை வகிப்பதற்கு என்ன மூன்று வழிகளில் யெகோவா நமக்கு உதவிசெய்திருக்கிறார்?
[பக்கம் 17-ன் படம்]
இயேசு எங்கிருந்தாலும்சரி, யெகோவாவுக்கு சாட்சிபகர்ந்து வெளிப்படையாய் அவரைத் துதித்தார்