அல்பேனியா
அல்பேனியா சின்னஞ்சிறு நாடு; சிக்கலான சரித்திர நிகழ்வுகள் நிறைந்த நாடு. அதில் பல இனத்தவரும் நாட்டவரும் குடியிருந்திருக்கிறார்கள். அதைக் கைப்பற்ற உலக வல்லரசுகள் போட்டாப் போட்டி போட்டிருக்கின்றன; பல பத்தாண்டுகளுக்கு உலகோடு ஒட்டாமல் ஒதுங்கியே அது இருந்திருக்கிறது. அங்குள்ள யெகோவாவின் சாட்சிகள் பற்பல சவால்களையும் எக்கச்சக்கமான கஷ்டங்களையும் சந்தித்திருக்கிறார்கள்; ஆனாலும், யெகோவா தேவன் அவர்களை ஆதரித்து, ஆன்மீக ரீதியில் சீரும் சிறப்புமாக வாழும் சந்தோஷத்தைத் தந்து ஆசீர்வதித்திருக்கிறார். விறுவிறுப்பூட்டும் அவர்களுடைய சரித்திரம் பின்வரும் பக்கங்களில் சுருக்கமாகத் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது; அது, “யெகோவாவின் கரம்” இந்த நாட்டிலுள்ள அவருடைய எளிய மக்களை எப்படிக் காப்பாற்றியிருக்கிறது என்பதை விவரிக்கிறது.—அப். 11:21.
பல நூற்றாண்டுகளுக்கு, அல்பேனியாவைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அநேக நாடுகள் போராடின; அந்தப் போராட்டத்தால், நாட்டில் மத போராட்டமும் தலைதூக்கியது. 1500-களின் ஆரம்பத்தில், மதரீதியில் அந்த நாடு பிளவுற்றது; சிலர் தங்களை முஸ்லிம்கள் என்றும், சிலர் ஆர்த்தடாக்ஸ் மதப் பிரிவினர் என்றும், இன்னும் சிலர் கத்தோலிக்கர்கள் என்றும் சொல்லிக்கொண்டார்கள்.
அல்பேனியாவில், 1800-களின் பிற்பகுதியில் மக்களிடையே நாட்டுப்பற்று என்ற தீ கொழுந்துவிட்ட எரிய ஆரம்பித்தது; அதனால், தேசப்பற்றுமிக்க சமுதாயங்கள் பல உருவாயின. அல்பேனியர்களில் பெரும்பாலோர் விவசாயிகள்; ஆண்டாண்டு காலமாக அயல் நாட்டவரின் தலையீடே தங்கள் ஏழ்மைக்குக் காரணமென அநேகர் குற்றம் சாட்டினார்கள். 1900-களுக்குள், மக்கள் மத்தியில் சுயாட்சியையும் சுதந்திரத்தையும் குறித்த வேட்கை தீவிரமானதால், அவர்கள் கிரீஸ், செர்பியா, துருக்கி ஆகிய நாடுகளுடன் போரில் இறங்கினார்கள். கடைசியில், 1912-ல் அல்பேனியா தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது.
பிற்பாடு, அரசின் கொள்கைப்படி, கிட்டத்தட்ட எல்லா மத அமைப்புகளும் நாட்டிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, கம்யூனிஸ அதிகாரிகள் எல்லா மதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து அல்பேனியாவை உலகின் முதல் நாத்திக நாடாக அறிவித்தார்கள்.
‘சந்தோஷத்தோடு சத்தியத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்’
56-ஆம் வருடத்திற்கு முன்பு, ரோம மாகாணத்தின் பாகமாயிருந்த “இல்லிரிக்கம்வரை” தானும் தன் தோழர்களும் முழுமையாக நற்செய்தியை அறிவித்துவிட்டதாக அப்போஸ்தலன் பவுல் சொன்னார்; அந்த இல்லிரிக்கம், இன்றைய அல்பேனியாவின் ஒரு பாகமாகும். (ரோ. 15:19) அந்தச் சமயத்தில் அப்பகுதியில் வாழ்ந்த சிலர் உண்மைக் கிறிஸ்தவர்களாக ஆகியிருக்கலாம்; ஏனென்றால், முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவம் அல்பேனியாவில் வேரூன்றியதாகச் சரித்திரம் சான்றளிக்கிறது.
உண்மை வழிபாடு இந்தப் பகுதியில் 1921-ல் ஆரம்பமானதாக இன்றைய பதிவு காட்டுகிறது; அந்தச் சமயத்தில், கிரீட் தீவிலிருந்து ஜான் பாஸ்டாயானிஸ் என்பவர் புருக்லின் பெத்தேலுக்குக் கடிதம் எழுதினார்; அதில், தற்போது வட கிரீஸின் பாகமாக உள்ள யன்னினா நகரில் நடைபெற்று வந்த பைபிள் படிப்பு “வகுப்புக்கு” அவர் சென்று கொண்டிருந்ததைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். கிட்டத்தட்ட அந்தச் சமயத்தில்தான், அமெரிக்காவிலுள்ள நியு இங்கிலாந்து என்ற இடத்தில் அல்பேனியர்கள் பலர் குடியேறியிருந்தார்கள்; அவர்களில், தானாஸ் (நாஷோ) இட்ரிஸி, காஸ்டா மிட்செல் என்பவர்களும் இருந்தார்கள். அவர்கள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டபோது, உடனடியாக ஞானஸ்நானம் பெற்றார்கள். சகோதரர் இட்ரிஸி 1922-ல் அல்பேனியாவிலுள்ள கைரோகாஸ்டர் என்ற இடத்திற்குத் திரும்பிச் சென்றுவிட்டார்; அவர், பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு தன் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்ற முதல் அல்பேனியர் ஆவார். அவருடைய சுயதியாக மனப்பான்மையைக் கடவுள் ஆசீர்வதித்தார், மக்கள் நற்செய்திக்குச் செவிசாய்க்க ஆரம்பித்தார்கள். அவரைப் போலவே சத்தியத்தை ஏற்றுக்கொண்ட அல்பேனியரில் சிலர் அமெரிக்காவிலிருந்து தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்தார்கள். இதற்கிடையில், அமெரிக்காவில், மாஸசூஸெட்ஸிலுள்ள, பாஸ்டனில் வசித்துவந்த அல்பேனியர்களுக்கு காஸ்டா மிட்செல் நற்செய்தியைத் தொடர்ந்து அறிவித்து வந்தார்.
அல்பேனியாவில் பிறந்த அண்ணன் தம்பியான சோக்ராட் டூலியும் தானாஸ் டூலியும் (ஆதான் டூலிஸ்) சிறுவர்களாக இருக்கும்போதே துருக்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். 1922-ல் அல்பேனியாவுக்கு சோக்ராட் திரும்பி வந்தார். அதற்கு மறுவருடம் 14 வயது தானாஸும் தன் அண்ணனைத் தேடிக்கொண்டு அல்பேனியாவுக்கு வந்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “எங்களுடைய பழைய வீட்டுக்குப் போனேன்; என் அண்ணன் சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் வேலை செய்து வந்ததால் உடனடியாக அவரைப் பார்க்க முடியவில்லை. ஆனால், வேறொன்றைப் பார்த்தேன்; ஆம், வீட்டில் காவற்கோபுர பத்திரிகையையும், பைபிளையும், வேதாகமத்தில் படிப்புகள் (ஆங்கிலம்) புத்தகத்தின் ஏழு தொகுதிகளையும் பைபிள் தலைப்புகளிலுள்ள பல்வேறு துண்டுப்பிரதிகளையும் பார்த்தேன். மலைப்பாங்கான அந்த ஒதுக்குப்புற மாகாணத்தில்கூட ஊக்கமாய் ஊழியம் செய்துவந்த பைபிள் மாணாக்கர்கள் இருக்கத்தான் செய்தார்கள்; அவர்கள் அமெரிக்காவுக்குப் போய் வந்திருந்ததால் பைபிளைப் பற்றி அறிந்திருந்தார்கள், அதை நேசித்தார்கள்.” இருவரும் சந்தித்துக்கொண்டபோது, சோக்ராட் ஏற்கெனவே ஞானஸ்நானம் பெற்றிருந்தார்; தன் தம்பி தானாஸுக்குச் சத்தியத்தைக் கற்றுக்கொடுத்தார்.
1924-ல் அல்பேனியாவில் புதிதாகத் துவங்கப்பட்ட ஊழியத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்பு ருமேனியா அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இன்னும் குறைந்தளவே ஊழியம் செய்யப்பட்ட போதிலும் டிசம்பர் 1, 1925 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரம் இவ்வாறு குறிப்பிட்டது: “த ஹார்ப் ஆஃப் காட் புத்தகமும், த டிஸயரபிள் கவர்மன்ட், தி உவால்ட் டிஸ்டிரஸ் ஆகிய சிறுபுத்தகங்களும் உள்ளூர்வாசிகளின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, அச்சிடப்பட்டன . . . பெரும் எண்ணிக்கையில் அவை மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன, அல்பேனியர்கள் அதிக சந்தோஷத்தோடு சத்தியத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.”
அந்தச் சமயத்தில், அரசியல் சச்சரவால் அல்பேனியா பிளவுபட்டிருந்தது. யெகோவாவின் ஊழியர்கள் என்ன செய்தார்கள்? தானாஸ் இவ்வாறு எழுதினார்: “1925-ல் அல்பேனியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட மூன்று சபைகளும் அதோடு, ஆங்காங்கே சில பைபிள் மாணாக்கர்களும் இருந்தார்கள்.” அவர்களைச் சுற்றியிருந்த மக்களிடையே காணப்பட்ட சண்டை, தற்பெருமை, போட்டி ஆகியவற்றிற்கு நேர்மாறாக சகோதரர்களுக்கிடையே காணப்பட்ட அன்பைப் பற்றியும் அவர் எழுதினார். அல்பேனியாவைச் சேர்ந்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்த சமயத்தில், பிற நாடுகளில் சத்தியத்தைக் கற்றுக்கொண்ட அல்பேனியர் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் உற்றார் உறவினர்களுக்குப் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கிறிஸ்துவின் அரசாங்கத்தைப் பற்றிக் கற்றுக்கொடுக்க ஆவலாய் இருந்தார்கள்.
இதற்கிடையில், பாஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலையில் கூடிவந்த சுமார் 60 பேருக்கு அல்பேனியன் மொழியில் பொதுப் பேச்சுக்கள் கொடுக்கப்பட்டன. அங்கு கூடிவந்த மாணாக்கர்கள், வேதாகமத்தில் படிப்புகள் புத்தகத் தொகுதிகளைக் கவனமாய்ப் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். த ஹார்ப் ஆஃப் காட் புத்தகத்தில் மொழிபெயர்ப்பு பிழைகள் சில இருந்தபோதிலும் அந்தப் புத்தகத்தையும்கூட அவர்கள் முழுமையாய் ஆராய்ந்து படித்தார்கள். (உதாரணத்திற்கு, அதன் தலைப்பு முதலில் த கிட்டார் ஆஃப் காட் என மொழிபெயர்க்கப்பட்டது.) எனினும், இந்தப் புத்தகம் ஏராளமான அல்பேனியர்கள் பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ளவும் விசுவாசத்தில் பலப்படவும் உதவியது.
“அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்!”
1926-ல், அல்பேனியாவில் கிறிஸ்துவின் மரண நினைவுநாள் அனுசரிப்பில் 13 பேர் கலந்துகொண்டதாக காவற்கோபுர பத்திரிகை அறிக்கை செய்தது. இயர்புக் 1927 இவ்வாறு குறிப்பிட்டது: “அல்பேனியாவில் கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்த 15 சகோதரர்கள் மட்டுமே இருக்கிறார்கள்; இவர்கள் தங்களால் முடிந்தவரை, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை சிறந்த விதத்தில் அறிவித்து வருகிறார்கள். கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்த சுமார் 30 அல்பேனிய சகோதரர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள்; அவர்கள் சத்தியத்தைப் பற்றிய அறிவை தங்கள் சொந்த நாட்டவர் பெற்றுக்கொள்வதற்கு உதவ ஆவலாய் இருக்கிறார்கள்.” 1927-ல் நடந்த நினைவுநாள் அனுசரிப்பில் 27 பேர் கலந்துகொண்டதைக் குறித்து, அல்பேனியாவிலிருந்த 15 சகோதரர்கள் சந்தோஷப்பட்டார்கள்; அது, முந்தைய வருட அனுசரிப்பில் கலந்துகொண்டவர்களுடைய எண்ணிக்கையைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருந்தது.
1920-களின் பிற்பகுதியில், அல்பேனியாவில் அரசியல் கலவரம் அதிகரித்தது. ஆர்த்தடாக்ஸ் பிஷப்பாக இருந்த ஃபான் நோலி என்பவர் ஆட்சியைக் கைப்பற்றிய குறுகிய காலத்திலேயே ஜனாதிபதி அஹ்மட் பே ஸோக் என்பவர் அவருடைய ஆட்சியைக் கவிழ்த்தார். அல்பேனியா தனி நாடென்றும் தான் எடுக்கும், அதாவது முதலாம் ஸோக் ராஜா எடுக்கும், தீர்மானமே முடிவான தீர்மானமாய் இருக்கும் என்றும் அவர் அறிவித்தார்.
1928-ல், “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” என்ற இயங்கு படத்தைக் காட்ட அமெரிக்காவிலிருந்து லாசார் நாசோன், பெட்ரோ ஸ்டாவ்ரோ என்பவர்களுடன் இன்னும் இரண்டு சகோதரர்களும் அல்பேனியாவுக்கு வந்தார்கள். அந்தச் சமயத்தில், முதலாம் ஸோக் ராஜாவைச் சந்திக்க அமெரிக்காவிலிருந்து ஒரு கத்தோலிக்க பாதிரியும் ஓர் ஆர்த்தடாக்ஸ் பாதிரியும்கூட அல்பேனியாவுக்கு வந்திருந்தார்கள்.
“கவனமாய் இருங்கள்! உங்களுக்குத் தொல்லை கொடுக்க அமெரிக்காவிலிருந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள்” என்று கத்தோலிக்க பாதிரி ஸோக்கை எச்சரித்தார்.
ஆனால், ஆர்த்தடாக்ஸ் பாதிரி அதை ஆமோதிக்கவில்லை. அவருக்குச் சகோதரர்களைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது; ஏனென்றால், அவர்கள் கொஞ்ச காலம் முன்புதான் பாஸ்டனில் அவர் சேவை செய்துவந்த சர்ச்சிலிருந்து விலகியிருந்தார்கள். எனவே அவர், “அல்பேனியாவிலுள்ள எல்லாரும் அந்த ஆட்களைப் போல் இருந்தால் உங்கள் மாளிகையின் கதவுகளை நீங்கள் பூட்ட வேண்டிய அவசியமே இருக்காது!” என்று ஸோக்கிடம் சொன்னார்.
“அப்படியென்றால், அவர்களை விட்டுவிடுங்கள், அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்!” என்று ஸோக் பதிலளித்தார்.
அதே வருடத்தில், அல்பேனியன் மொழியில் யெகோவாவைத் துதிக்கும் பாடல்கள் என்ற புத்தகம் பாஸ்டனில் அச்சிடப்பட்டது; அதனால், அல்பேனியாவிலிருந்த சகோதரர்கள் நாளடைவில் அந்தப் பாடல்களின் இசையையும் வார்த்தைகளையும் கற்றுக்கொண்டார்கள். அவற்றில், “பயப்படாதே, சிறு மந்தையே,” “ஊழிய வேலைக்கு!” ஆகிய இரு பாடல்கள் சகோதரர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்களாக இருந்தன; அவை, அதற்குப் பின்வந்த கடினமான வருடங்களில் சகோதரர்களைப் பலப்படுத்தின.
பொதுவாக அல்பேனியர் சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பேசுபவர்கள்; ஒளிவுமறைவற்ற பேச்சை விரும்புகிறவர்கள். காரசாரமாக விவாதிப்பதுபோல் மற்றவர்கள் கருதுவதைப் பெரும்பாலும் அல்பேனியர் சாதாரணமான, உயிர்த்துடிப்புள்ள உரையாடலாக நினைக்கிறார்கள். ஒரு விஷயத்தை அல்பேனியர்கள் முழுமையாய் நம்பினால் அதைக் குறித்து ஆர்வத்துடன் மற்றவர்களிடம் பேசுகிறார்கள்; அவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அப்படிப் பேசவும், அதற்கேற்ப செயல்படவும் செய்கிறார்கள். அவர்களுடைய இந்த இயல்பினாலேயே, நற்செய்தியையும் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப செயல்பட்டிருக்கிறார்கள்.
கஷ்டங்களால் விளையும் நல்ல பலன்கள்
அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே வந்ததால், பெருவாரியான அல்பேனியர் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்; சிலர் நியு இங்கிலாந்திலும் நியு யார்க்கிலும் சத்தியத்தைக் கற்றுக்கொண்டிருந்தார்கள். எங்கெல்லாம் அல்பேனியர் எக்கச்சக்கமாகக் குடியிருந்தார்களோ அங்கெல்லாம் சத்தியத்தை அநேகர் ஏற்றுக்கொண்டார்கள். அதிகமான பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ள ஆவலாய் இருந்த சகோதரர்கள், கடவுளுடைய அரசாங்கம், நெருக்கடி நிலை என்ற தலைப்புகளை உடைய சிறுபுத்தகங்களை அல்பேனியன் மொழியில் பெற்றபோது அதிக சந்தோஷப்பட்டார்கள்.
அதே சமயத்தில், அல்பேனியாவிலிருந்த அதிகாரிகள் நம்முடைய பிரசுரங்களில் சிலவற்றைப் பறிமுதல் செய்திருந்தார்கள். எனினும், 1934-ல் அல்பேனியாவில் வெளியான புல்லட்டின் (இப்போது நம் ராஜ்ய ஊழியம்) இவ்வாறு அறிக்கை செய்தது: “நம்முடைய எல்லா பிரசுரங்களையும் தாராளமாய் எல்லா மாகாணங்களிலும் விநியோகிக்கலாம் என்ற ஆணையை நீதித்துறை செயலர் தற்போது பிறப்பித்திருப்பதை நீங்கள் தெரிந்துகொள்வதற்காக இந்தக் கடிதத்தை அதிக சந்தோஷத்துடன் நாங்கள் எழுதுகிறோம் . . . பல்வேறு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டிருந்த எல்லாப் புத்தகங்களும் சிறுபுத்தகங்களும் சகோதரர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன . . . இப்போது ஏழு சகோதரர்கள் ஒரு வண்டியை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு தொலைதூரத்திலுள்ள நகரங்களுக்குப் புத்தகங்களை எடுத்துச் செல்கிறார்கள்; மற்ற சகோதரர்களோ அருகிலுள்ள இடங்களில் ஊழியம் செய்கிறார்கள்.” இதனால், 1935-லும் 1936-லும் சகோதரர்கள் 6,500-க்கும் அதிகமான பிரசுரங்களை விநியோகித்தார்கள்!
‘சரித்திரத்திலேயே மிகப் பரந்தளவிலான ஒலிபரப்பென கருதப்படுகிற ஒன்று’
“சரித்திரத்திலேயே மிகப் பரந்தளவிலான ஒலிபரப்பென கருதப்படுகிற ஒன்றிற்காக முயற்சி மேற்கொள்ளப்படும். அது, லாஸ் ஏஞ்சல்ஸில் நற்செய்தியாளரான ஜட்ஜ் ரதர்ஃபர்ட் கொடுக்கப்போகும் பேச்சாக இருக்கும்” என்று லீட்ஸ் மெர்குரி என்ற பிரிட்டிஷ் செய்தித்தாள் 1936-ன் ஆரம்பத்தில் அறிவித்தது. அந்தச் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளை முன்நின்று வழிநடத்திய ஜே. எஃப். ரதர்ஃபர்ட் ஒரு பேச்சைக் கொடுக்கவிருந்தார்; அது, அமெரிக்கா, இங்கிலாந்து முழுவதும் ரேடியோடெலிஃபோன் மூலம் ஒலிபரப்பப்பட்டு, ஐரோப்பிய நாடுகளெங்கும் அஞ்சல் செய்யப்படவிருந்தது. “ஆனால், ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் மட்டும் அந்தப் பேச்சு கேட்கப்படாது. காரணம் அங்கு டெலிஃபோன் வசதி இல்லை” என்று மெர்குரி செய்தித்தாள் அந்தக் கட்டுரையை முடித்திருந்தது.
ஆனால், அந்தப் பேச்சுக் கொடுக்கப்பட்டு சில வாரங்களுக்குப் பிறகு, பாஸ்டனில் அல்பேனியன் சபையிலுள்ள நிக்கலாஸ் கிறிஸ்டோ என்பவர் உலக தலைமை அலுவலகத்திற்கு இவ்வாறு கடிதம் எழுதினார்: “அல்பேனியாவில் சமீபத்தில் செய்யப்பட்ட தொலைத்தொடர்பு வசதி காரணமாக, ‘தேசங்களைப் பிரித்தல்’ என்ற தலைப்பில் ஜட்ஜ் ரதர்ஃபர்ட் கொடுத்த பேச்சை அங்குள்ளவர்களும் கேட்டார்கள்; இவ்வாறு அந்தப் பேச்சைக் கேட்ட நாடுகளின் நீண்ட பட்டியலில் அந்த நாடும் சேருகிறது. இரண்டு அலைவரிசைகளில் . . . சொல்லப்போனால், சிற்றலை வரிசையில் அந்தப் பேச்சைக் கேட்க முடிந்தது. . . . ஜட்ஜ் ரதர்ஃபர்டின் குரலைக் கேட்டு நண்பர்கள் அடைந்த ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை.”
அல்பேனியன் மொழியில் காவற்கோபுரம் பிரசுரிக்கப்படுவதற்கு முன்பு அல்பேனிய பிரஸ்தாபிகள் எப்படிக் கூட்டங்களை நடத்தினார்கள்? அல்பேனியரில் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட பெரும்பாலோர் ஆண்களாக இருந்தார்கள்; அவர்கள் தென் அல்பேனியாவிலிருந்த கிரேக்க பள்ளிகளில் படித்தவர்கள். எனவே, கிரேக்க காவற்கோபுரத்தைப் படிப்பதில் அவர்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை. மற்றவர்கள் அதை இத்தாலியன் அல்லது பிரெஞ்சு மொழியில் படித்தார்கள். கூட்டங்கள் அல்பேனியன் மொழியில் நடத்தப்பட்டபோதிலும், சகோதரர்கள் பிரசுரத்தை மொழிபெயர்த்து சொன்னார்கள்.
பாஸ்டனிலும்கூட திங்கட்கிழமை இரவில், கிரேக்க மொழி பத்திரிகையைப் பயன்படுத்தி அல்பேனியன் மொழியில் காவற்கோபுர படிப்பு நடத்தப்பட்டது. ஆனாலும், அநேக சகோதரர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சத்தியத்தை நன்கு கற்பித்தார்கள்; அதனால், பல வருடங்களுக்குப் பிறகு, அவர்களுடைய மகன்களும் மகள்களும், உடன் பிறந்தவர்களின் மகன்களும் மகள்களும், பேரப்பிள்ளைகளும், கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் முழுநேர ஊழியர்களானார்கள். சொல்லப்போனால், அல்பேனிய சகோதரர்கள் ஊழியத்தில் பக்திவைராக்கியத்தோடு ஈடுபட்டதால் மக்கள் அவர்களை ஊன்ஜிலோர், அதாவது “நற்செய்தியாளர்கள்” என்று அழைத்தார்கள்.
உயர் அதிகாரிகள் நற்செய்தியைக் கேட்கிறார்கள்
1938-ல், ஸோக் ராஜாவின் ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு ஒரு வருடம் முன்பு, அவருடைய தங்கைகள் இருவர் பாஸ்டனுக்குச் சென்றார்கள். டிசம்பர் மாத கான்சலேஷன் (இப்போது விழித்தெழு!) பத்திரிகை இவ்வாறு அறிக்கை செய்தது: “அல்பேனிய இளவரசிகள் பாஸ்டனுக்கு வந்தபோது, அங்குள்ள அல்பேனியருடைய பிராந்தியத்தில் ஊழியம் செய்துவந்த யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் இருவர் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் அவர்களைச் சந்தித்தோம்; கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை அவர்களுக்கு அறிவித்தோம். நாங்கள் சொன்னதை அவர்கள் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டார்கள்.”
நிக்கலாஸ் கிறிஸ்டோவும் அவருடைய அக்கா லினாவும்தான் அந்த இரண்டு சாட்சிகள். அந்தச் சமயத்தில், அவர்கள் இளவரசிகளை மட்டும் சந்திக்கவில்லை, அல்பேனியாவின் தூதுவராக அப்போது அமெரிக்காவில் பணியாற்றிய ஃபாயிக் கோனிட்சா [கோனிகா] உட்பட ஐந்து உயர் அதிகாரிகளைச் சந்தித்தார்கள். அந்தச் சந்திப்புக்கு முன்பாக, அல்பேனியர் மத்தியில் எந்தளவுக்கு விரிவாகச் சத்தியம் அறிவிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை விளக்கும் அல்பேனியன் மொழி சாட்சி அட்டையிலுள்ள தகவலை அந்தத் தொகுதியினருக்கு வாசித்துக் காட்டினார்கள். அதன் ஒரு பகுதி இவ்வாறு குறிப்பிட்டது: “இந்தச் செய்தி அல்பேனியாவிலும்கூட பல வருடங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது; அறிவு புகட்டுவதற்கும் ஆறுதல் அளிப்பதற்கும் உதவுகிற லட்சக்கணக்கான புத்தகங்கள் அல்பேனியாவிலுள்ள அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் வினியோகிக்கப்பட்டிருக்கின்றன; இவற்றைத் தெரிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.”
தூதுவர் கோனிட்சா இளவரசிகளிடம் இவ்வாறு சொன்னார்: “அல்பேனியாவில் தடையின்றி ஊழியம் செய்வதற்கு உங்களுடைய உதவியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் ஒரு ‘புதிய’ மதத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்கள், இந்த உலகம் [தற்போதுள்ள உலக அமைப்பு] சீக்கிரத்தில் முடிவடையும், அதன் பிறகு கிறிஸ்து ஆட்சி செய்வார், இறந்தவர்கள்கூட மீண்டும் உயிரடைவார்கள் என்று நம்புகிறார்கள்.”
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தி திரு. கோனிட்சாவுக்கு எப்படி இந்தளவு தெரிந்திருந்தது? “ஒருவர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு யெகோவாவின் சாட்சி ஆவதற்குப் பல வருடங்களுக்கு . . . முன்பு . . . [அந்தத் தூதுவரை] நன்கு அறிந்திருந்ததால் . . . அவரிடம் சத்தியத்தைப் பற்றி அநேக முறை அவர் பேசியிருந்தார்” என்று கான்சலேஷன் விளக்கியது.
இரண்டாம் உலகப் போரால் வரும் சோதனைகள்
1930-களில் அல்பேனியாவை இத்தாலி கைப்பற்றியது; ஸோக் ராஜாவும் அவரது குடும்பத்தாரும் 1939-ல் நாட்டைவிட்டே ஓடிவிட்டார்கள். இத்தாலியிலிருந்து படையெடுத்து வந்த பாசிஸ ராணுவம் நம்முடைய பிரசுரங்களுக்குத் தடைவிதித்தது; 50 பிரஸ்தாபிகளும் நற்செய்தியை அறிவிப்பதைச் சட்டவிரோதமான செயலாக்கியது. 1940-ன் கோடைக்காலத்தில் சுமார் 15,000 பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 6-ல் கல்சைரா நகரில், பாசிஸவாதிகள் ஒன்பது சகோதரர்களைக் கைதுசெய்து, 6 அடி அகலமும் 12 அடி நீளமுமுள்ள சிறை அறையில் அடைத்தார்கள். பின்னர் அவர்கள் டிரானா சிறைக்கு மாற்றப்பட்டார்கள். அங்கே அவர்கள் எந்த விசாரணையுமின்றி எட்டு மாதங்களுக்குச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டார்கள்; பிறகு, பத்து மாதம்முதல் இரண்டரை வருடங்கள்வரை வெவ்வேறு கால அளவுகளில் சிறை தண்டனை பெற்றார்கள்.
இந்தச் சூழ்நிலைகளில், சிறைக் கைதிகளுக்கு அவர்களுடைய குடும்பத்தாரே உணவளிக்க வேண்டியிருந்தது. ஆனால், சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தவர்களே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அப்படியென்றால், அவர்கள் எப்படித் தங்கள் பசியைப் போக்கிக்கொண்டார்கள்?
நாஷோ டோரி இவ்வாறு சொல்கிறார்: “எங்களுக்கு 800 கிராம் காய்ந்துபோன ரொட்டியும், 3 கிலோ நிலக்கரியும், ஒரு சோப்பு கட்டியும் 15 நாட்களுக்கு ஒருமுறை கொடுக்கப்பட்டன. ஒரு கிலோ பீன்ஸ் வாங்குவதற்குப் போதுமான காசு என்னிடமும் ஜானி கோமினோவிடமும் இருந்தது. எங்களிடமிருந்த நிலக்கரியில் பீன்ஸை வேக வைத்தோம்; அதை மற்ற கைதிகள் தங்கள் கரண்டிகளில் விலைக்கு வாங்கிக்கொண்டார்கள். சீக்கிரத்தில் நாங்கள் ஐந்து பெரிய பானைகள் நிறைய பீன்ஸை வேக வைத்து விற்றோம். இப்படியாக, கொஞ்சம் இறைச்சி வாங்கப் போதுமான பணம் எங்களுக்குக் கிடைத்தது.”
1940/1941-ன் குளிர்காலத்தில், தென் அல்பேனியாமீது கிரேக்கர்கள் படையெடுத்து வந்தபோது படைத்துறையில் சேர ஆண்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஒரு கிராமத்திலிருந்த சகோதரர் தான் நடுநிலை வகிப்பதைச் சொல்லி படையில் சேர மறுத்தபோது, போர்வீரர்கள் அவருடைய தலைமுடியைப் பிடித்து தரத்தரவென இழுத்துச் சென்று, அவர் மயங்கி விழும்வரை அடித்து நொறுக்கினார்கள்.
அந்தச் சகோதரருக்கு மயக்கம் தெளிந்தபோது, உயர் அதிகாரி, “நீ இப்போது கீழ்ப்படியத் தயாரா?” என்று ஆவேசமாகக் கேட்டார்.
“நான் இன்னமும் நடுநிலைமை வகிக்கிறேன்!” என்று சகோதரர் பதிலளித்தார்.
விரக்தியடைந்த அந்தப் போர்வீரர்கள் அவரை அனுப்பிவிட்டார்கள்.
பல நாட்களுக்குப் பிறகு, அந்த உயர் அதிகாரி தான் துன்புறுத்திய அந்தச் சகோதரருடைய வீட்டுக்குச் சென்று, அவருடைய தைரியத்தைப் பாராட்டினார். அவர் இவ்வாறு சொன்னார்: “சில நாட்களுக்கு முன்பு, நான் 12 இத்தாலியர்களைக் கொன்றேன், அதற்காக ஒரு பதக்கத்தைப் பெற்றேன். ஆனால், என் மனசாட்சி உறுத்திக்கொண்டே இருக்கிறது, அதை அணியவே வெட்கமாக இருக்கிறது. அந்தப் பதக்கத்தை என் பாக்கெட்டிலேயே வைத்துக்கொண்டிருக்கிறேன்; ஏனென்றால், அது குற்றச்செயலின் அடையாளமென எனக்குத் தெரியும்” என்று சொன்னார்.
புதிய ஆட்சியாளர்கள்—அதே சோதனைகள்
பாசிஸவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடாதிருக்க போராடிய போதிலும், போரால் விளைந்த சண்டைகள், குழப்பங்கள் மத்தியில் அல்பேனிய கம்யூனிஸ்ட் கட்சி தந்திரமாய்க் காலூன்ற ஆரம்பித்தது. 1943-ல் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகச் சண்டைபோட்டுக்கொண்டிருந்த போர்வீரர்கள் ஒரு சகோதரரைப் பிடித்து, டிரக்கில் தூக்கிப் போட்டு, போர்முனைக்கு அழைத்துச் சென்று, கையில் துப்பாக்கியைக் கொடுத்தார்கள். அவரோ அதை வாங்கவில்லை.
“நீ ஒரு கம்யூனிஸவாதி! நீ ஒரு கிறிஸ்தவனாக இருந்திருந்தால் பாதிரிகளைப் போல போரிட்டிருப்பாய்!” என்று அதிகாரி கத்தினார்.
அந்தச் சகோதரரைக் கொன்றுபோடும்படி அந்த அதிகாரி கட்டளையிட்டார். சுட்டுத்தள்ளும் படையினர் அவரைச் சுடப்போன சமயத்தில், மற்றொரு அதிகாரி அங்கு வந்து என்ன நடக்கிறதென கேட்டார். அந்தச் சகோதரர் நடுநிலை வகிப்பதைப் பற்றி அறிந்தபோது, அவரைச் சுட வேண்டாமென மாற்றுக் கட்டளை பிறப்பித்தார். அதனால், அந்தச் சகோதரர் விடுதலை செய்யப்பட்டார்.
1943 செப்டம்பர் மாதத்தில், பாசிஸவாதிகள் பின்வாங்கினார்கள்; அப்போது ஜெர்மானியர் படையெடுத்து வந்து ஒரே இரவில் டிரானாவிலுள்ள 84 பேரைக் கொன்றார்கள். நூற்றுக்கணக்கானோர் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். இதற்கிடையில் சகோதரர்கள், பைபிளிலிருந்து நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கும் செய்திகளை டைப் செய்தார்கள். அந்தச் செய்தியை ஒருவர் வாசித்து முடித்ததும், வேறொருவர் வாசிப்பதற்காக அதைத் திரும்ப வாங்கிக்கொண்டார்கள். பிறகு, அவர்கள் ஒளித்து வைத்திருந்த ஒருசில சிறுபுத்தகங்களைப் பயன்படுத்தி சகோதரர்கள் தொடர்ந்து நற்செய்தியை அறிவித்து வந்தார்கள். அவர்கள் தங்களிடமிருந்த பைபிளின் சில பகுதிகளை மட்டுமே வைத்து நற்செய்தியை அறிவித்தார்கள். 1995 வாக்கில்தான் மொழிபெயர்க்கப்பட்ட முழு பைபிள் அவர்களுக்குக் கிடைத்தது.
1945-ற்குள், 15 சகோதரர்கள் சிறை தண்டனை அனுபவித்திருந்தார்கள். அவர்களில் இருவர் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள்; அங்கே ஒருவர் சித்திரவதை தாங்காமல் இறந்துபோனார். இதில் நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால், ஒருபுறம் அல்பேனியாவிலுள்ள சகோதரர்கள் அச்சு நாடுகளின் படைகளோடு சேர மறுத்ததால் துன்புறுத்தப்பட்டபோது, மறுபுறம் அமெரிக்காவிலுள்ள அல்பேனிய சகோதரர்கள் சிலர் அச்சு நாடுகளின் படைகளை எதிர்த்து போரிட மறுத்ததால் கைதுசெய்யப்பட்டார்கள்.
போரால் சின்னாபின்னமான அல்பேனியாவில், பறிமுதல் செய்யப்பட்ட பிரசுரங்கள் சுங்கச் சாவடியில் வைக்கப்பட்டிருந்தன. அதன் அருகே நடந்த படுபயங்கரமான போரில், அந்தச் சாவடி இடிந்து விழுந்தது, நம்முடைய பிரசுரங்கள் எல்லாம் நாலா புறமும் விழுந்து சிதறின. பின்னர், ஆர்வம் காட்டிய வழிப்போக்கர்கள் அந்தப் புத்தகங்களையும் சிறுபுத்தகங்களையும் எடுத்துச் சென்று வாசிக்க ஆரம்பித்தார்கள்! சகோதரர்கள் துளியும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக மீதமிருந்த பிரசுரங்களைச் சேகரித்தார்கள்.
1944-ல் ஜெர்மானியப் படைகள் அல்பேனியாவிலிருந்து பின்வாங்கின; கம்யூனிஸ ராணுவம் தற்காலிக அரசை ஏற்படுத்தியது. உடனடியாகச் சகோதரர்கள், சிறுபுத்தகங்களை மறுபதிப்பு செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பித்தார்கள்; ஆனால், அவர்களுடைய வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. “காவற்கோபுரம் மதகுருமாரைத் தாக்குகிறது, அல்பேனியாவில் நாங்களோ இன்னமும் குருமாரை மதிக்கிறோம்” என்ற பதிலைச் சகோதரர்கள் பெற்றார்கள்.
போர் முடிகிறது, துன்புறுத்தல் தொடர்கிறது
புதிய கம்யூனிஸ அரசு அதிக வரி விதித்தது; வீடு, நிலங்கள், தொழிற்சாலைகள், வியாபாரங்கள், கடைகள், திரையரங்குகள் என எல்லாவற்றையும் அபகரித்தது. நிலத்தை வாங்கவோ விற்கவோ வாடகைக்கு விடவோ மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது; உற்பத்தி செய்யப்பட்ட அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது. ஜனவரி 11, 1946-ல், அல்பேனிய மக்கள் குடியரசு என அந்நாட்டை அல்பேனியா பிரகடனம் செய்தது. தேர்தல்களில் கம்யூனிஸ கட்சி வெற்றி பெற்று, ஏன்வேர் ஹோஜா தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.
அநேக பள்ளிகள் திறக்கப்பட்டன, பிள்ளைகளுக்கு வாசிக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டது; ஆனால், கம்யூனிஸத்தை ஆதரிக்காத பிரசுரங்களை யாரும் வாசிப்பதை அரசு விரும்பவில்லை. நம்முடைய பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன, சகோதரர்களிடமிருந்த சில டைப்ரைட்டர்களையும் கொஞ்சம் பேப்பரையும்கூட அரசு பறிமுதல் செய்தது.
பிரசுரங்களைப் பிரசுரிப்பதற்குச் சகோதரர்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்த ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டதோடு, அவர்கள் பயமுறுத்தவும் பட்டார்கள். ஆனால், சகோதரர்கள் எதற்கும் மசியவில்லை. “யெகோவா தம்முடைய நோக்கத்தை அல்பேனிய மக்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார், நீங்கள் எங்களைத் தடை செய்கிறீர்கள். இப்போது நீங்கள்தான் அவருக்குப் பதில் சொல்ல வேண்டும்” என அவர்கள் அதிகாரிகளிடம் சொன்னார்கள்.
அதற்கு அரசு உடனடியாக இவ்வாறு பதிலளித்தது: ‘அல்பேனியாவில் நாங்கள்தான் கடவுட்கள்! உங்கள் கடவுளுடைய ஆட்சியை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு உங்களையும் உங்கள் கடவுளான யெகோவாவையும் பற்றிக் கவலையில்லை. அவரை நாங்கள் நம்புவதில்லை!’ எதற்கும் கலங்காத சகோதரர்கள், தங்களால் முடிந்த எல்லா இடங்களிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தொடர்ந்து நற்செய்தியை அறிவித்து வந்தார்கள்.
1946-ல் ஓட்டுப் போடுவது கட்டாயமாக்கப்பட்டது; ஓட்டுப்போட மறுத்தவர்கள் அரசின் எதிரிகளாகக் கருதப்பட்டார்கள். கூட்டங்கள் நடத்துவதைத் தடைசெய்வதற்குச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன; நற்செய்தியை அறிவிப்பது குற்றமாகக் கருதப்பட்டது. சகோதரர்கள் என்ன செய்தார்கள்?
டிரானாவிலிருந்த சுமார் 15 சகோதரர்கள் 1947-ல் பிரசங்க வேலையை ஒழுங்கமைத்தார்கள். அவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களுடைய பைபிள்கள் கிழித்தெறியப்பட்டன, அவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அவர்கள் விடுதலை செய்யப்பட்டபோது, போலீஸாரின் அனுமதியின்றி அவர்கள் எங்குமே பயணிக்கக் கூடாதென கட்டளையிடப்பட்டார்கள். செய்தித்தாள்கள் இயேசுவையும் யெகோவாவையும் பற்றிக் கிண்டல் கேலி செய்து எழுதின.
பாஸ்டனிலிருந்த அல்பேனிய சகோதரர்கள் இதைப் பற்றிக் கேள்விப்பட்டார்கள்; மார்ச் 22, 1947-ல் அவர்கள் அல்பேனியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் சார்பாக ஏன்வேர் ஹோஜாக்கு இரண்டு பக்க கடிதத்தை மரியாதைக்குரிய விதத்தில் எழுதினார்கள். அவர்கள் அதில், யெகோவாவின் சாட்சிகளால் அரசுக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தல் இல்லை என்றும், மத எதிரிகளின் தவறான பழக்கவழக்கங்களை நம்முடைய பிரசுரங்கள் வெட்டவெளிச்சமாக்குவதன் காரணமாகவே அவர்கள்மீது பொய்க் குற்றம் சாட்டப்படுகிறது என்றும் விளக்கியிருந்தார்கள். அந்தக் கடிதம் கடைசியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது: “திரு. காபோ தலைமையில் ஐ.நா.-வுக்குப் போன அல்பேனிய குழு பாஸ்டனுக்கு வந்தபோது, திரு. காபோ தங்கியிருந்த ஹோட்டலில் நாங்கள் அவரைச் சந்தித்தோம். அவர் எங்களை மரியாதையோடு அன்பாக வரவேற்று, பாரபட்சம் காட்டாமல் நாங்கள் சொன்ன செய்தியைக் காதுகொடுத்துக் கேட்டார்.” அல்பேனியாவில் பல வருடங்களுக்கு உயர் அதிகாரியாகப் பதவி வகித்தவர்களில் ஒருவரே ஹோஸ்னி காபோ. இப்படி முறையீடு செய்தபோதிலும், அல்பேனியாவில் பிரச்சினைகள் அதிகரிக்கவே செய்தன.
1947-ல் சோவியத் யூனியனுடனும் யுகோஸ்லாவியாவுடனும் அல்பேனியா சேர்ந்துகொண்டு, கிரீஸுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தது. அதற்கு அடுத்த வருடம், யுகோஸ்லாவியாவுடன் இருந்த எல்லா தொடர்பையும் அல்பேனியா துண்டித்துவிட்டு, சோவியத் யூனியனுடன் நெருக்கமான உறவை வைத்துக்கொண்டது. அரசின் கொள்கையை ஆதரிக்காத எவரும் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். சகோதரர்கள் நடுநிலை வகித்ததால், எதிர்ப்பும் விரோதமும் அதிகரித்தன.
உதாரணத்திற்கு, 1948-ல் ஆறு சகோதர சகோதரிகள் ஒரு சிறிய கிராமத்தில் நினைவுநாள் அனுசரிப்பிற்காகக் கூடிவந்தார்கள். கூட்டத்தின்போது திடீரென போலீஸார் புகுந்து, மணிக்கணக்காகப் பிரஸ்தாபிகளை அடிஅடியென அடித்தார்கள்; பின்னர் அவர்களைப் போகவிட்டார்கள். ஓரிரு வாரங்களுக்குப் பிறகு, அனுசரிப்பின்போது பேச்சுக் கொடுத்த சகோதரரைப் போலீஸார் கைதுசெய்து, 12 மணிநேரம் நிற்க வைத்தார்கள். நடுராத்திரியில் போலீஸ் அதிகாரி “ஏன் சட்டத்தை மீறினாய்?” என்று கத்தினார்.
“எஜமானருடைய சட்டத்திற்கு மேலாக அரசின் சட்டத்தை நாங்கள் வைக்க முடியாது!” என்று அந்தச் சகோதரர் பதிலளித்தார்.
அப்போது கோபத்தில் கொதித்தெழுந்த அந்த அதிகாரி சகோதரரைக் கன்னத்தில் அறைந்தார்; சகோதரர் தன் தலையை மறுபக்கத்திற்குத் திருப்பிக் கொண்டிருப்பதைப் பார்த்த அந்த அதிகாரி, “நீ என்ன செய்கிறாய்?” என்று கேட்டார்.
“நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று நான் முன்னமே சொன்னேன். யாராவது எங்களைக் கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்ட வேண்டுமென இயேசு எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்” என்று சகோதரர் பதிலளித்தார்.
கோபாவேசத்தோடு அந்த அதிகாரி, “உங்களுடைய எஜமானர் அப்படிக் கட்டளையிட்டிருப்பதால், நான் அவருக்குக் கீழ்ப்படிய மாட்டேன், நான் உன்னை இனி அடிக்க மாட்டேன்! இங்கிருந்து போய்விடு!” என்று எரிந்து விழுந்தார்.
“நான் பிரசங்கித்துக் கொண்டே இருப்பேன்”
ஆர்த்தடாக்ஸ் மதப் பற்றுள்ள சோடிர் ட்சேசி என்பவர் டிரானாவில் வசித்து வந்தார். குழந்தைப் பருவத்தில் அவருக்கு எலும்பு காச நோய் வந்ததால், தாங்க முடியாத கால் வலியில் அவர் துடித்தார். 17 வயதிருக்கையில் அவர் மனச்சோர்வடைந்து ஓடும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தார். அவ்வாறு செய்துகொள்வதற்குச் சற்று முன்பு, அவருடைய உறவினரான லேயோனிதா போப் அவரைப் போய்ச் சந்தித்தார். சோடிரின் திட்டத்தை அறியாத லேயோனிதா, வியாதிப்பட்டவர்களை இயேசு குணப்படுத்தியதைப் பற்றியும் இந்தப் பூமி பூஞ்சோலையாக மாறப்போவதைப் பற்றியும் அவரிடம் சொன்னார். கிரேக்க வேதாகமம் ஒன்றையும் சோடிருக்குப் படிக்கக் கொடுத்தார்; அவர் அதை உடனடியாக வாசிக்க ஆரம்பித்தார்.
“அது எனக்குள் தண்ணீர் ஊற்றியதைப் போல் இருந்தது. நான் சத்தியத்தைக் கண்டுபிடித்தேன்!” என்றார் சோடிர்.
சில நாட்களுக்குள், லேயோனிதாவை மீண்டும் சந்தித்துப் பேசாமாலேயே, சோடிர் இவ்வாறு யோசித்துப் பார்த்தார்: ‘இயேசு பிரசங்கித்ததாக பைபிள் சொல்கிறது. அப்போஸ்தலர்களும், சீடர்களும்கூட பிரசங்கித்தார்கள். அப்படியென்றால் நானும் அதைத்தான் செய்ய வேண்டும்.’
எனவே, சோடிர் பிரசங்கிக்க ஆரம்பித்தார். ஒரு கையில் கிரேக்க வேதாகமத்தையும் மறு கையில் ஊன்றுகோலையும் பிடித்துக்கொண்டு தைரியத்துடன் வீடு வீடாகச் சென்றார்.
அந்தக் காலப் பகுதியில், தேசத்தைப் பத்திரமாய்ப் பாதுகாக்கும் பொறுப்பு சிகூரீமி-க்கு, அதாவது அரசு பாதுகாப்பு இயக்குநரகத்திற்கு இருந்தது. கம்யூனிஸத்திற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாதபடி சதா விழிப்புடன் இருந்த அந்த இயக்குநரகத்தைச் சேர்ந்தவர்கள், சோடிர் தைரியமாகப் பிரசங்கித்து வந்ததைக் கவனித்தார்கள். அதனால், அவரைக் கைதுசெய்து, பல மணிநேரம் காவலில் வைத்து, அடித்து, பிரசங்கிக்கக் கூடாதென கட்டளையிட்டார்கள்.
சோடிர் விடுதலை செய்யப்பட்டபோது, அவர் லேயோனிதாவுடன் தொடர்புகொண்டார்; லேயோனிதா அவரை ஸ்பீரோ காராயேனி என்ற டாக்டரிடம் அழைத்துச் சென்றார். அந்த டாக்டர் சில வருடங்களுக்கு முன்பு சத்தியத்தைக் கற்றிருந்தார். அவர் சோடிருக்குச் சிகிச்சை அளித்ததோடு சத்தியத்தை நன்கு புரிந்துகொள்ளவும் உதவினார்.
அதோடு, இவ்வாறு ஆலோசனை கொடுத்தார்: “உங்களை மீண்டும் கைது செய்தால், எதிலும் கையெழுத்துப் போடுவதற்கு முன்பு ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு வரியையும் எண்ணுங்கள். அவர்களுடைய வார்த்தைகளின் முடிவில் கோடிடுங்கள். வெற்றிடம் எதையும் விட்டு வைக்காதீர்கள். எல்லாவற்றையும் கவனமாய் வாசியுங்கள். நீங்கள் சொன்னதுதான் அதில் உள்ளதா என உறுதிசெய்துகொண்ட பிறகே கையெழுத்துப் போடுங்கள்.”
இரண்டே நாட்களுக்குப் பிறகு, சோடிர் மீண்டும் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது போலீஸார் அவரைப் பிடித்தார்கள். காவல் நிலையத்தில் ஓர் ஆவணத்தில் கையெழுத்துப் போடும்படி அதிகாரிகள் அவரிடம் கட்டளையிட்டார்கள். அவர் கையெழுத்துப் போட போனபோது, ஸ்பீரோ கொடுத்த ஆலோசனை அவர் நினைவுக்கு வந்தது. உடனடியாகக் கையெழுத்துப் போடும்படி போலீஸ் வற்புறுத்தியபோதிலும் ஒவ்வொரு வார்த்தையையும் வாசிக்க அவர் நேரமெடுத்துக்கொண்டார்.
“மன்னிக்கவும், என்னால் இதில் கையெழுத்துப் போட முடியாது. இந்த வார்த்தைகளை நான் சொல்லவே இல்லை. இந்த ஆவணத்தில் நான் கையெழுத்துப் போட்டால் அது பொய்ச் சொல்வதுபோல் ஆகிவிடும். நான் பொய் சொல்ல மாட்டேன்” என்றார் அவர்.
ஒரு கயிற்றை எடுத்து அதைச் சாட்டையாக்கி பல மணிநேரம் அவரைப் போலீஸார் அடித்தார்கள். அதன் பின்பும் அவர் கையெழுத்துப் போட மறுத்தபோது, இரண்டு வயர்களைக் கையில் பிடிக்கச் சொல்லி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்; அதிக வேதனை அளிக்கும் எலெக்ட்ரிக் ஷாக்குகளை மறுபடியும் மறுபடியும் கொடுத்தார்கள்.
அதைப் பற்றி சோடிர் பிற்பாடு இவ்வாறு சொன்னார்: “என்னால் வலியைத் துளிகூட தாங்க முடியாமல் போனபோது கண்ணீருடன் ஜெபம் செய்தேன். திடீரென கதவு திறக்கப்பட்டது. அங்கு ஓர் உயர் அதிகாரி நின்றுகொண்டிருந்தார். அவர் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தலையைத் திருப்பிக்கொண்டார். ‘போதும் நிறுத்துங்கள்!’ என்று கட்டளையிட்டார். ‘நீங்கள் இதைச் செய்யக் கூடாதென தெரியாதா?’ என்று கேட்டார்.” சித்திரவதை செய்வது சட்டவிரோதமானது என்பதை அவர்கள் எல்லாரும் நன்கறிந்திருந்தார்கள். போலீஸார் துன்புறுத்துவதை நிறுத்தினார்கள்; ஆனால், அந்த ஆவணத்தில் கையெழுத்துப் போடும்படி வற்புறுத்துவதை அவர்கள் நிறுத்தவில்லை. அப்போதும் அவர் கையெழுத்துப் போட மறுத்தார்.
கடைசியில் அவர்கள் “நீ ஜெயித்துவிட்டாய்!” என்று சொன்னார்கள். வேண்டாவெறுப்பாக, சோடிர் சொன்னதை அவர்கள் எழுதினார்கள்; அவர் கொடுத்த சிறந்த சாட்சியையும் அதில் எழுதினார்கள். அந்த ஆவணத்தை அவர்கள் அவரிடம் கொடுத்தார்கள். பல மணிநேரம் அவரை அடித்து, எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்த பிறகும் சோடிர் அந்த ஆவணத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாய் வாசித்தார். ஒரு வாக்கியம் முடியாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தபோது அதன் முடிவில் அவர் கோடிட்டார்.
“இதையெல்லாம் எங்கிருந்து கற்றுக்கொண்டாய்?” என்று ஆச்சரியத்தோடு அதிகாரிகள் கேட்டார்கள்.
“நான் சொல்லாத விஷயங்கள் எழுதப்பட்டிருந்தால் அதில் கையெழுத்துப் போடக் கூடாதென யெகோவா கற்றுக்கொடுத்தார்” என்று சோடிர் பதிலளித்தார்.
அப்போது இரவு 9 மணி ஆகியிருந்தது; நாள் முழுவதும் சோடிர் எதுவுமே சாப்பிடாததால் பயங்கரப் பசி மயக்கத்தில் இருந்தார். அவரிடம் ஒரு ரொட்டித் துண்டையும் சிறிய சீஸையும் கொடுத்தபடி ஓர் அதிகாரி, “சரி, அப்படியானால் இதை யார் கொடுத்தார்?” என்று கேட்டார். “யெகோவாவா கொடுத்தார்? இல்லை. நாங்கள் கொடுத்தோம்” என்றார்.
“யெகோவா அநேக விதங்களில் உதவுகிறார். அவர் உங்கள் மனதை இளகச் செய்திருக்கிறார்” என்று சோடிர் பதிலளித்தார்.
வெறுத்துப்போன அதிகாரிகள், “சரி நீ போகலாம், ஆனால் திரும்பவும் நீ பிரசங்கித்தால் உனக்கே தெரியும் என்ன நடக்குமென்று” எனச் சொன்னார்கள்.
“அப்படியென்றால் நீங்கள் என்னை அனுப்பாதீர்கள், நான் பிரசங்கித்துக்கொண்டே இருப்பேன்” என்று சோடிர் சொன்னார்.
“இங்கே என்ன நடந்ததென யாரிடமும் சொல்லாதே!” என்று அந்த அதிகாரி கட்டளையிட்டார்.
“மற்றவர்கள் கேட்டால் நான் பொய்ச் சொல்ல மாட்டேன்” என்று சோடிர் சொன்னார்.
“தொலைந்துபோ!” என்று போலீஸ்காரர் கத்தினார்.
சோடிரைப் போல அநேகர் அப்படிச் சித்திரவதை செய்யப்பட்டார்கள். விசுவாசத்தைச் சோதித்த இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் சோடிர் ஞானஸ்நானம் பெற்றார்.
பல வருடங்களுக்கு, கடிதங்கள் தணிக்கை செய்யப்பட்டன, அல்பேனியாவிலிருந்து விவரமான அறிக்கைகளே கிடைக்கவில்லை. பயணம் செய்வதும் கூட்டங்களில் கலந்துகொள்வதும் அதிக ஆபத்தானபோது, அந்த நாட்டிலுள்ள சகோதரர்கள் ஒருவரோடொருவர் தொடர்புகொள்வது குறைய ஆரம்பித்தது. ஊழியத்தை ஒழுங்கமைக்க நாட்டு ஆலோசனைக் குழுவோ கிளை அலுவலகமோ இல்லாததால், உண்மையில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும், சத்தியத்தை ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. 1940-ல் அல்பேனியாவில் 50 சகோதர சகோதரிகள் இருந்தார்கள், 1949-ல் அந்த எண்ணிக்கை 71-ஆக உயர்ந்தது.
அரசியல் பதட்டத்தின் மத்தியிலும் ஊழிய அதிகரிப்பு
1950-களின்போது வாழ்க்கையின் எல்லா அம்சத்தின் மீதும் அரசின் கெடுபிடி இன்னும் பலத்தது. அல்பேனியாவுக்கும் கிரீஸுக்கும் இடையே நிலவிய பதட்டநிலை அதிகரித்துக்கொண்டே இருந்தது. இங்கிலாந்துடனும் அமெரிக்காவுடனும் இருந்த அரசியல் ரீதியான நல்லுறவு முறிந்துபோனது. சோவியத் யூனியனுடன் இருந்த தொடர்பும்கூட முறிந்துவிடும் நிலையிலிருந்தது. அல்பேனியா பிற நாட்டு விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க ஆரம்பித்தது; வெளி உலகத்தோடு யார் தொடர்புகொண்டாலும் அது கூர்ந்து கண்காணிக்கப்பட்டது.
எனினும், சுவிட்சர்லாந்திலிருந்த சகோதரர்களுக்குக் கடிதங்களையும் போஸ்ட் கார்டுகளையும் அனுப்புவதில் இரண்டு சகோதரர்கள் ஓரளவு வெற்றி பெற்றார்கள். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சகோதரர்கள் சங்கேத வார்த்தைகளைப் பயன்படுத்தி, பிரெஞ்சு அல்லது இத்தாலியன் மொழியில் பதில் எழுதினார்கள். அந்தப் போஸ்ட் கார்டுகளிலிருந்து, 1955-ல் நடைபெற்ற நூரெம்பர்க் மாவட்ட மாநாட்டைப் பற்றி அல்பேனிய சகோதரர்கள் அறிந்துகொண்டார்கள். ஹிட்லரின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு ஜெர்மனியிலுள்ள சகோதரர்கள் சுதந்திரமாய் செயல்பட முடிந்ததைப் பற்றிய செய்தி, விசுவாசத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க அல்பேனிய சகோதரர்களை உற்சாகப்படுத்தியது.
1957-க்குள்ளாக 75 பிரஸ்தாபிகள் இருந்ததாக அல்பேனியா அறிக்கை செய்தது. திட்டவட்டமான எண்ணிக்கை தெரியாதபோதிலும் நினைவுநாள் அனுசரிப்பில் “அநேகர்” கலந்துகொண்டார்கள் என்றும் “அல்பேனிய சகோதரர்கள் தொடர்ந்து ஊழியம் செய்து வருகிறார்கள்” என்றும் ஆங்கில இயர்புக் 1958 அறிக்கை செய்தது.
ஆங்கில இயர்புக் 1959 இவ்வாறு அறிக்கை செய்தது: “யெகோவாவுக்கு உண்மையாய் இருக்கும் இந்தச் சாட்சிகள் தங்களால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவர்கள் மற்றவர்களிடம் வெளிப்படையாகச் சத்தியத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள், சில பிரசுரங்களைப் பிரசுரிப்பதற்குக்கூட முயற்சி செய்திருக்கிறார்கள். அவ்வப்போது கிடைத்திருக்கிற ஏற்ற கால உணவுக்காக அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்; ஆனால், வெளி உலகத்துடனான எல்லாத் தொடர்புகளையும் கம்யூனிஸ அதிகாரிகள் துண்டித்திருக்கிறார்கள்.” இறுதியில் அந்த அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டது: “புதிய உலக சமுதாயத்திலுள்ள சகோதரர்களிடமிருந்து அல்பேனியாவிலுள்ள சகோதரர்களை அந்நாட்டு அதிகாரிகளால் பிரித்து வைக்க முடிந்தாலும், கடவுளுடைய சக்தி சகோதரர்கள்மீது செயல்படுவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது.”
போராட்டங்கள் தொடர்கின்றன
அந்தச் சமயத்தில், எங்கு போனாலும் ராணுவ அடையாள அட்டையை எடுத்துச் செல்லும்படி எல்லாரிடமும் எதிர்பார்க்கப்பட்டது. அப்படிச் செய்ய மறுப்பவர்கள் வேலையை இழந்துவிடுவார்கள் அல்லது சிறையிலிடப்படுவார்கள் என சொல்லப்பட்டது. இதனால், நாஷோ டோரியும் ஜானி கோமினோவும் மீண்டும் சில மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார்கள். சிலர் வேலை பறிபோகுமென பயந்து அதிகாரிகளுக்கு அடிபணிந்துவிட்ட போதிலும், பற்றுமிக்க சகோதரர்கள் இருக்கத்தான் செய்தார்கள்; அவர்கள் 1959-ஆம் ஆண்டில் இயேசுவின் மரண நினைவுநாளை அனுசரித்தார்கள்; அநேக சகோதர சகோதரிகள் தொடர்ந்து தைரியமாய் நற்செய்தியை அறிவித்து வந்தார்கள்.
1959-ல் நீதித்துறை அமைச்சகம் கலைக்கப்பட்டது, இனிமேலும் நீதிபதிகள் வேலை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. கம்யூனிஸ கட்சியே எல்லா சட்டங்களையும் உருவாக்கி அமல்படுத்தியது. தேர்தல்களில் ஓட்டுப் போடாதவர்கள் எதிரிகளாகக் கருதப்பட்டார்கள். எங்கு பார்த்தாலும் ஒரே பயம், எதிலும் ஒரே சந்தேகம்.
அல்பேனிய சகோதரர்கள் அனுப்பிய செய்திகள் அங்கே நிலைமை படுமோசமாக இருந்ததையும், அதேசமயத்தில் உண்மையாய் நிலைத்திருக்க அவர்கள் தீர்மானமாய் இருந்ததையும் தெரிவித்தன. இதற்கிடையில், புருக்லினிலுள்ள உலக தலைமை அலுவலகத்தில் உள்ளவர்கள் அல்பேனியாவிலுள்ள சகோதரர்களுடன் தொடர்புகொள்ள முயற்சி செய்துகொண்டே இருந்தார்கள். அதற்காக, தென் அல்பேனியாவில் பிறந்து, அமெரிக்காவில் வசித்து வந்த ஜான் மார்க்ஸ் என்பவரை, அல்பேனியா செல்வதற்கான விசாவைப் பெறும்படி கேட்டுக்கொண்டார்கள்.
ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, அல்பேனியாவுக்குச் செல்ல ஜானுக்கு விசா கிடைத்தது; ஆனால், அவருடைய மனைவிக்கு விசா கிடைக்கவில்லை. பிப்ரவரி 1961-ல் டுரஸ் என்ற நகருக்கு வந்தார்; அங்கிருந்து டிரானாவுக்குப் பயணித்தார். அங்கே சத்தியத்திடம் ஆர்வம் காட்டிய தன் தங்கை மேல்போவை அவர் சந்தித்தார். மறுநாளே சகோதரர்களை ஜான் சந்திக்க அவர் ஏற்பாடு செய்தார்.
சகோதரர்களுடன் ஜான் நீண்ட நேரம் பேசினார்; தன் பெட்டியின் ரகசிய அறையில் ஒளித்து எடுத்து வந்திருந்த சில பிரசுரங்களை அவர்களுக்குக் கொடுத்தார். சகோதரர்களுக்கு ஒரே சந்தோஷம். 24 வருடங்களுக்கு மேலாக அயல் நாட்டிலிருந்து எந்தச் சகோதரர்களும் அவர்களை வந்து சந்தித்திருக்கவே இல்லை.
ஐந்து நகரங்களில் 60 சகோதரர்களும் சிறிய கிராமங்களில் சில சகோதரர்களும் இருப்பதாக ஜான் கணக்கிட்டார். டிரானாவில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையில் சகோதரர்கள் ரகசியமாகச் சந்தித்து, 1938 முதல் தாங்கள் மறைத்து வைத்திருந்த பிரசுரங்களிலிருந்து கலந்தாலோசிக்க முயற்சி செய்தார்கள்.
நீண்ட காலத்திற்கு அமைப்புடன் எந்தத் தொடர்பும் இல்லாதிருந்ததால், அமைப்பு சார்ந்த விஷயங்களையும் சத்தியத்தையும் பற்றிய ‘அப்-டு-டேட்’ தகவல்களை அல்பேனிய சகோதரர்கள் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு, கூட்டங்களைச் சகோதரர்கள் மட்டுமல்ல, சகோதரிகளும் நடத்தினார்கள், சகோதரிகள் ஜெபங்களைக்கூட செய்தார்கள். ஜான் இவ்வாறு பின்னர் எழுதினார்: “செய்யப்பட்டுள்ள மாற்றங்களைச் சகோதரிகள் ஏற்றுக்கொள்வார்களோ மாட்டார்களோவென சகோதரர்கள் சந்தேகமும், கவலையும் பட்டார்கள்; எனவே, சகோதரிகளைத் தனியாகச் சந்தித்து, அவற்றை விளக்கும்படி அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். அந்த மாற்றங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டதைப் பார்த்தபோது நான் சந்தோஷப்பட்டேன்.”
அந்த உண்மையுள்ள ஊழியர்கள் ஏழ்மையில் வாடினாலும் பக்திவைராக்கியத்துடன் ஊழியத்திற்கு ஆதரவு காட்டினார்கள். உதாரணத்திற்கு, கைரோகாஸ்டரைச் சேர்ந்த இரண்டு வயதான சகோதரர்கள் “தங்களுக்குக் கிடைக்கும் கொஞ்சப் பணத்தையும் மிச்சப்படுத்தி ஒரு தொகையைச் சங்கத்திற்கு நன்கொடையாகக் கொடுத்திருந்தார்கள்” என்று ஜான் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவரும் 100 டாலருக்கும் மேல் தங்கக் காசுகளைச் சேர்த்திருந்தார்கள்.
டிரானாவிலுள்ள சகோதரர்கள், சமாதானத்தோடும் ஒற்றுமையோடும் பிரசங்கிப்பதும் கற்பிப்பதும் (ஆங்கிலம்) என்ற சிறுபுத்தகத்தைப் பெற்றுக்கொண்டபோது அதிக சந்தோஷப்பட்டார்கள்; இந்தச் சிறுபுத்தகத்தில், தடையுத்தரவு காலத்தில்கூட சபைகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற அறிவுரை கொடுக்கப்பட்டிருந்தது. பிறகு, மார்ச் மாதத்தில் நினைவுநாள் அனுசரிப்பை டிரானாவிலுள்ள சகோதரர் லேயோனிதா போப்பின் வீட்டில் ஜான் நடத்தினார்; அதில் 37 பேர் கலந்துகொண்டார்கள். அந்த அனுசரிப்பு பேச்சுக்குப் பிறகு, கிரீஸுக்குப் படகில் ஜான் திரும்பிச் சென்றுவிட்டார்.
அல்பேனியாவுக்குப் போய் வந்ததைப் பற்றி ஜான் அனுப்பிய அறிக்கையை தலைமை அலுவலகத்திலுள்ள சகோதரர்கள் சிந்தித்தார்கள்; பின்பு, டிரானா சபையைக் கவனித்துக்கொள்ளவும் அல்பேனியாவில் ஊழியம் செய்யவும் லேயோனிதா போப், சோடிர் பாபா, லூசி ஜேகா ஆகியோரை அவர்கள் நியமித்தார்கள். ஸ்பீரோ வ்ரூஹோ என்பவர் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டார். அவர் சபைகளைச் சந்திக்கவும், ஒவ்வொரு நாள் மாலையிலும் சகோதரர்களைப் போய்ப் பார்க்கவும், பேச்சுகளைக் கொடுக்கவும், பிரசுரங்களைக் கலந்தாலோசிக்கவும் வேண்டியிருந்தது. அல்பேனியாவிலுள்ள சகோதரர்கள் மேன்மேலும் ஆன்மீக பலத்தைப் பெற்றுக்கொள்ளவும் அமைப்பு சம்பந்தமாக ‘அப்-டு-டேட்’ தகவல்களை அறிந்துகொள்ளவும் அவர்களுக்கு உதவ அமைப்பு எல்லா விதமான முயற்சியையும் எடுத்தது.
கடிதங்கள் கவனமாகத் தணிக்கை செய்யப்பட்டதால், அந்த அறிவுரைகளைப் பற்றியெல்லாம் அமைப்பு கடிதம் எழுத முடியவில்லை. எனவே, ஜான் அந்தத் தகவலை அல்பேனியாவிலுள்ள சகோதரர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிவித்தார்; அப்படித் தெரிவிக்க அவர் பிரசுரங்களிலுள்ள பக்கங்களைக் குறிப்பிட்டு சங்கேத மொழியில் எழுதினார். சீக்கிரத்திலேயே, சகோதரர்கள் குறிப்புகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டதைப் பற்றிய அறிக்கைகள் கிடைத்தன. டிரானாவிலிருந்த மூன்று சகோதரர்கள் நாட்டு ஆலோசனைக் குழுவின் அங்கத்தினராகச் சேவை செய்தார்கள்; ஸ்பீரோ தவறாமல் சபைகளைச் சந்தித்து வந்தார்.
அல்பேனியாவிலுள்ள சகோதரர்கள் தங்கள் வெளி ஊழிய அறிக்கைகளைத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவதற்குப் புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அயல் நாடுகளில் வசிக்கும் சில சகோதரர்களுக்கு போஸ்ட் கார்டுகளை அனுப்புவது அதற்கு ஒரு வழியாக இருந்தது. அதில், சன்னமாக எழுதும் பேனாவை உபயோகித்துத் தபால்தலைக்குக் கீழே சங்கேத மொழியில் அறிக்கைகள் எழுதி அனுப்பப்பட்டன. உதாரணத்திற்கு, பிரசங்கிப்பதும் கற்பிப்பதும் சிறுபுத்தகத்தில் “பிரஸ்தாபிகள்” என்ற பொருள் சிந்திக்கப்பட்ட பக்கத்தின் எண்ணைத் தபால்தலைக்குக் கீழே எழுதுவார்கள். அதற்குப் பக்கத்தில் அந்த மாதம் அறிக்கை செய்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையை எழுதுவார்கள். அல்பேனியாவிலுள்ள சகோதரர்களுடன் தொடர்புகொள்ள அயல் நாட்டு சகோதரர்கள் பல வருடங்களுக்கு அதுபோன்ற முறைகளைப் பயன்படுத்தினார்கள்.
நல்ல ஆரம்பம்—பிறகு பின்னடைவு
உண்மை வணக்கத்தை முன்னேற்றுவிக்க நாட்டு ஆலோசனைக் குழுவினர் பெரும்பாடு பட்ட போதிலும் பிரச்சினை சீக்கிரத்தில் வரவிருந்தது. 1963-ல், மேல்போ மார்க்ஸ் தன்னுடைய அண்ணன் ஜானுக்குக் கடிதம் எழுதினார்; அதில், நாட்டு ஆலோசனைக் குழுவிலிருந்த மூன்று சகோதரர்களில் லேயோனிதா போப், லூசி ஜேகா ஆகிய இருவரும், “தங்கள் குடும்பத்தாரைவிட்டுத் தள்ளியிருக்கிறார்கள்” என்றும் கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை என்றும் எழுதினார். பின்னர் அப்போஸ்தலர் 8:1, 3-ஐக் குறிப்பிட்டு, ஸ்பீரோ வ்ரூஹோ மருத்துவமனையில் இருப்பதாகவும், லேயோனிதா போப்பும் லூசி ஜேகாவும் வியாதிப்பட்டிருப்பதாகவும் செய்தி வந்தது; அந்த வசனங்கள், தர்சு நகரைச் சேர்ந்த சவுல் கிறிஸ்தவர்களைச் சிறையில் தள்ளியதைப் பற்றிச் சொல்கின்றன. அங்கே என்ன நடந்துகொண்டிருந்தது?
லேயோனிதா போப்பும், லூசி ஜேகாவும் சோடிர் ட்சேசியும் வேலை செய்துகொண்டிருந்த தொழிற்சாலையில், கம்யூனிஸக் கொள்கைகளைப் பரப்புவதற்காக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லாத் தொழிலாளர்களுக்காகவும் பேச்சுகளைக் கொடுத்தார்கள். ஒருநாள் பரிணாமத்தைப் பற்றிய பேச்சுக் கொடுக்கப்பட்டபோது லேயோனிதாவும் லூசியும் எழுந்து நின்று, “தவறு, மனிதன் குரங்கிலிருந்து வரவில்லை!” என்று சொன்னார்கள். மறுநாள் அவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்டு தொலைதூரத்திலுள்ள நகரங்களில் வேலை செய்யும்படி அனுப்பப்பட்டார்கள்; இந்தத் தண்டனையை அல்பேனியர் இன்டர்நிம் (தடுப்புக்காவலில் வைத்தல்) என்று அழைத்தார்கள். கிராம்ஷ் மலைகளுக்கு லூசி அனுப்பி வைக்கப்பட்டார். லேயோனிதாவை அவர்கள் “முன்நின்று செயல்படுபவராக” கருதியதால், கரடுமுரடானதும், குளிர் மிகுந்ததுமான புர்ரேல் மலைகளுக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். டிரானாவிலிருந்த தன் வீட்டுக்கு அவர் ஏழு வருடங்களுக்குப் பிறகே திரும்பி வந்தார்.
1964 ஆகஸ்ட் மாதத்திற்குள், கூட்டங்கள் நடப்பது கிட்டத்தட்ட நின்றுவிட்டிருந்தது. சகோதரர்களைக் கண் கொத்தி பாம்புபோல் சிகூரீமி ஆட்கள் கவனித்துக்கொண்டிருந்த விஷயம், துளியளவு கசிந்த தகவலிலிருந்து தெரிந்தது. தபால்தலைக்குக் கீழே எழுதப்பட்டிருந்த ஒரு செய்தி இவ்வாறு தெரிவித்தது: “எங்களுக்காக எஜமானரிடம் ஜெபம் செய்யுங்கள். வீடு வீடாக புகுந்து பிரசுரங்கள் அபகரிக்கப்படுகின்றன. அவர்கள் எங்களைப் படிக்க விடுவதில்லை. மூன்று பேர் இன்டர்நிம்மில் இருக்கிறார்கள்.” முதலில், சகோதரர்களான போப்பும், ஜேகாவும் விடுதலை பெற்றுவிட்டதாகக் கருதப்பட்டது; ஏனென்றால், தபால்தலைகளுக்குக் கீழே எழுத அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. ஆனால், லூசியின் மனைவி ஃப்ரோசினாவே அந்தத் தகவலை எழுதியிருந்தார் என்பது பின்னர் தெரிய வந்தது.
முன்நின்று வழிநடத்திய சகோதரர்கள் தொலைதூரத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். சிகூரீமி ஆட்கள் சதா நோட்டம் விட்டுக்கொண்டிருந்ததால் சகோதரர்கள் யாரும் ஒருவரோடொருவர் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனாலும், தடுப்புக் காவலில் இருந்த சகோதரர்கள் தாங்கள் சந்தித்த ஆட்கள் எல்லா ஆட்களிடமும் நற்செய்தியை அறிவித்தார்கள். கிராம்ஷ்வாசிகள் இவ்வாறு சொன்னார்கள்: “ஊன்ஜிலோர் [நற்செய்தியாளர்கள்] இங்கிருக்கிறார்கள். அவர்கள் ராணுவத்திற்குப் போவதில்லை; ஆனால், எங்கள் பாலங்களைக் கட்டிக்கொடுக்கிறார்கள், எங்கள் ஜெனரேட்டர்களைப் பழுதுபார்த்துக் கொடுக்கிறார்கள்.” அந்த உண்மையுள்ள சகோதரர்கள் சம்பாதித்திருந்த நற்பெயரும் நன்மதிப்பும் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருந்தது.
நாத்திக நாடு பிறக்கிறது
அரசியல் ரீதியில் சோவியத் யூனியனுடன் வைத்திருந்த உறவை அல்பேனியா முற்றிலும் துண்டித்துக்கொண்டு சீனாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டது. கம்யூனிஸக் கொள்கை அந்தளவுக்கு வலுப்பெற்று வந்ததால், அல்பேனியர் சிலர் சீன கம்யூனிஸ கட்சியின் தலைவரான மா சே-துங் போல் உடை உடுத்தவும் ஆரம்பித்தார்கள். 1966-க்குள் ஏன்வேர் ஹோஜா ராணுவப் பதவிப் பெயர்களை நீக்கிவிட்டார்; நம்பிக்கையற்ற சூழல் நிலவியதால், எதிரான கருத்துகளுக்கு இடமளிக்கப்படவே இல்லை.
அரசு வெளியிடும் செய்தித்தாள்கள், மதத்திற்கு எதிரான கட்டுரைகளைப் பிரசுரித்து, அதை “ஆபத்தான சக்தி” என்றழைத்தன. பிறகு, டுரஸில் மாணவர்களின் கும்பல் ஒன்று புல்டோஸரைப் பயன்படுத்தி ஒரு சர்ச் கட்டிடத்தைத் தரைமட்டமாக்கியது. அடுத்தடுத்து, ஒவ்வொரு நகரத்திலுமுள்ள மதக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. 1967-ல் மதத்திற்கு எதிரான கொள்கைகளை அரசு ஊக்குவித்ததால், முழுக்க முழுக்க நாத்திக நாடு என்ற பட்டியலில் அல்பேனியா முதலிடம் பிடித்தது. ஆனால், மற்ற கம்யூனிஸ நாடுகள் மதத்தைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தன; அல்பேனியாவோ மதத்திற்குத் துளிகூட இடங்கொடுக்கவில்லை.
அரசியல் விவகாரங்களில் தலையிட்டதால் முஸ்லிம், ஆர்த்தடாக்ஸ், கத்தோலிக்க மதத் தலைவர்கள் சிலர் சிறையிலடைக்கப்பட்டார்கள். எண்ணற்ற பாதிரிகள் அரசாங்கத்திற்கு அடங்கிப் போய், மதக் காரியங்களில் ஈடுபடுவதை முற்றிலும் நிறுத்தியதால் தப்பித்துக்கொண்டார்கள். சரித்திரப் புகழ்பெற்ற சில மதக் கட்டிடங்கள் அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டன. சிலுவைகள் அல்லது உருவச் சிலைகள், மசூதிகள் அல்லது பள்ளிவாசல் தூபி போன்ற மதச் சின்னங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தரக்குறைவான விதத்தில் மட்டுமே “கடவுள்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இவையெல்லாம், சகோதரர்களின் நிலைமையை மோசமாக்கின.
1960-களில் சில சகோதரர்கள் இறந்துவிட்டார்கள். ஆங்காங்கே வசித்த மீதமிருந்த பிரஸ்தாபிகள் தங்களால் முடிந்த மட்டும் சத்தியத்தை ஆதரித்துப் பேசி வந்தார்கள். ஆனால், ஓரளவு ஆர்வம் காட்டிய சிலர்கூட நற்செய்தியைக் கேட்பதற்குப் பயப்பட்டார்கள்.
சத்தியத்தின் மீதுள்ள அன்பு ஒருபோதும் தணியாது
1968-ல், கோலே ஃப்லோகோ என்ற சகோதரர் ஜான் மார்க்ஸ், ஹெலன் மார்க்ஸ் தம்பதியருக்குத் தன்னுடைய உடல்நிலை மோசமாகிவருவதைக் குறித்துக் கடிதம் எழுதினார். நற்செய்தியை அறிவிப்பது சட்டவிரோத செயலாக இருந்தது, சபைக் கூட்டங்கள் நடத்துவது தடைசெய்யப்பட்டது. ஆனால், இப்போது 80 வயதைத் தாண்டியிருந்த கோலே, கடைவீதியில், பூங்காவில், அல்லது காபி கடையில் தான் சந்தித்த ஆட்களிடமும் நண்பர்களிடமும் எப்படித் தவறாமல் நற்செய்தியை அறிவித்தார் என்பதை விவரித்திருந்தார். அதன் பின் சீக்கிரத்திலேயே, உண்மையுள்ளவராக அந்தச் சகோதரர் இறந்துவிட்டார். அல்பேனியாவிலிருந்த அநேகரைப் போலவே, யெகோவாவிடமும் சத்தியத்திடமும் அவருக்கிருந்த கட்டுக்கடங்காத அன்பை எதுவும் தணிக்க முடியவில்லை.
வயதாக ஆக, ஸ்பீரோ வ்ரூஹோவால் முன்புபோல் வட்டாரச் சந்திப்புகளைச் செய்ய முடியவில்லை. பிறகு, 1969-ன் ஆரம்பத்தில், ஒரு கிணற்றில் அவர் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்துகொண்டதாக சிகூரீமி ஆட்கள் அறிக்கை செய்தார்கள். ஆனால், அது உண்மைதானா?
ஸ்பீரோ மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக அவரே கடிதம் எழுதி வைத்திருப்பதாய்ச் சொல்லப்பட்டாலும், அதிலிருந்தது அவருடைய கையெழுத்து அல்ல. அதோடு, அவர் இறப்பதற்கு முன்பாக நல்ல மனநிலையோடிருந்ததும் உறுதி செய்யப்பட்டது. மேலும், அவருடைய கழுத்தைச் சுற்றிக் காணப்பட்ட கருப்பு அடையாளங்கள் யாரோ தாக்கியிருப்பதைக் காட்டின. அவர் தூக்கு மாட்டிக்கொண்டதற்கு அத்தாட்சியாகக் கிணற்றில் எந்தக் கயிறும் கிடைக்கவில்லை, அவருடைய நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்திருக்கவில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு உண்மை வெட்டவெளிச்சமானது. ஓட்டுப் போடாவிட்டால் ஸ்பீரோவும் அவருடைய குடும்பத்தாரும் சிறையில் தள்ளப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு உணவு கொடுக்கப்படாது என்றும் அவரிடம் சொல்லப்பட்டிருந்தது. தேர்தல்களுக்கு முந்தைய தினம் ஸ்பீரோ கொல்லப்பட்டு கிணற்றில் தூக்கி வீசப்பட்டிருந்ததை டிரானாவிலிருந்த சகோதரர்கள் அறிந்துகொண்டார்கள். இது போல் யெகோவாவின் சாட்சிகள் தற்கொலை செய்துகொண்டதாக எத்தனையோ முறை பொய் அறிக்கைகள் கொடுக்கப்பட்டிருந்தன.
பத்தாண்டுகளுக்கு நீடித்த ஒதுக்கப்பட்ட நிலை
நியு யார்க், புருக்லினில் இயங்கும் ஆளும் குழுவில் இன்னும் சிலர் 1971-ல் சேர்க்கப்பட்டபோது, உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷப்பட்டார்கள். மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் நியமிப்பதற்கான ஏற்பாட்டைப் பற்றி அறிவிப்பு செய்யப்பட்டபோது அதை அவர்கள் அதிக ஆவலோடு எதிர்பார்த்தார்கள். அமைப்பு சார்ந்த இந்த மாற்றங்களைப் பற்றி அல்பேனியாவிலிருந்த சகோதரர்கள் பல வருடங்களுக்குப் பிறகே அறிந்துகொண்டார்கள். அமெரிக்காவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் டிரானாவிலிருந்த லோபி ப்ளானி என்ற சகோதரியோடு குறுகிய நேரம் தொடர்புகொண்ட சமயத்தில்தான் அதைப் பற்றி அறிந்துகொண்டார்கள். கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்றும், அந்த நகரத்தில் அநேக சாட்சிகள் இருந்தபோதிலும் மூன்று பேர்தான் பிரஸ்தாபிகளாக அறிக்கை செய்து வருகிறார்கள் என்றும் அவர்கள் அறிந்துகொண்டார்கள்.
கோஸ்டா டாபே என்பவர் 1966 முதல் கிரீஸில் இருந்தார்; தன் சொந்த நாடான அல்பேனியாவுக்குத் திரும்பிச் செல்வதற்கான விசாவைப் பெற முயற்சி செய்துகொண்டிருந்தார். 76 வயதில் அவர் தன்னுடைய பிள்ளைகளுக்குச் சத்தியத்தைக் கற்றுக்கொடுக்க விரும்பினார். விசாவைப் பெற முடியாததால், அல்பேனியாவின் எல்லையில் தன்னுடைய அமெரிக்க பாஸ்போர்ட்டைக் கொடுத்துவிட்டு அதற்குள் நுழைந்தார்; இனி அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாது என்பது தெரிந்தே அவ்வாறு செய்தார்.
1975-ல் அமெரிக்காவில் வசிக்கும் அல்பேனிய தம்பதியர் சுற்றுலாப் பயணிகளாக அல்பேனியாவுக்கு வந்தார்கள். கண்காணிப்பு இப்போது “மிகவும் கடுமையாக” இருக்கிறது என்றும், கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு யெகோவாவின் சாட்சிகள் கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் எழுதினார்கள். அரசு வழிகாட்டிகளே எல்லா இடங்களுக்கும் அயல் நாட்டவரை அழைத்துச் சென்றார்கள்; அவர்களில் பலர் சிகூரீமி ஆட்களாக இருந்தார்கள். அயல் நாட்டவர்கள் திரும்பிச் சென்றதும், அவர்கள் யாரையெல்லாம் போய்ச் சந்தித்தார்களோ அவர்கள்மீதே தங்கள் கண்களைப் பதித்தார்கள். சுற்றுலாப் பயணிகளைக்கூட சந்தேகக் கண்ணோடு பார்த்தார்கள், அவர்கள் விரும்பப்படாத விருந்தாளிகளாகவே கருதப்பட்டார்கள். அயல் நாட்டவரைப் பார்த்து மக்கள் பயப்பட்டார்கள்.
நவம்பர் 1976-ல் கோஸ்டா டாபே எழுதிய கடிதத்தில், வ்லோரா என்ற இடத்தில் நடைபெற்ற நினைவுநாள் அனுசரிப்பில் ஐந்து பேர் கலந்துகொண்டதாகத் தெரிவித்தார். பர்மெட், ஃபியெர் ஆகிய நகரங்களில் தலா ஒருவர் நினைவுநாள் அனுசரிப்பைத் தனியாக நடத்தியதையும் அவர் அறிந்திருந்தார். டிரானாவில், ஓர் இடத்தில் இருவரும், இன்னொரு இடத்தில் நான்கு பேரும் கலந்துகொண்டார்கள். எனவே, அவர் அறிந்தவரை சுமார் 13 பேர் 1976-ல் நினைவுநாள் அனுசரிப்பில் கலந்துகொண்டிருந்தார்கள்.
கூலா ஜித்தாரி என்ற சகோதரி தான் நடத்திய நினைவுநாள் அனுசரிப்பைப் பற்றி பல வருடங்களுக்குப் பிறகு இவ்வாறு சொன்னார்: “காலையில் நான் ரொட்டியையும் திராட்சரசத்தையும் தயாரித்தேன். அன்று மாலையில் திரைச்சீலைகளை மூடிவிட்டு, கழிவறையின் பின்புறமாக நான் மறைத்து வைத்திருந்த பைபிளை வெளியே எடுத்தேன். இயேசு எப்படி அந்த நினைவு அனுசரிப்பைச் செய்தார் என்பதை மத்தேயு 26-ஆம் அதிகாரத்தில் வாசித்தேன். ரொட்டியைக் கையில் தூக்கிப் பிடித்தபடி ஜெபம் செய்துவிட்டு, அதைக் கீழே வைத்தேன். பிறகு மத்தேயுவிலிருந்து இன்னும் சில வசனங்களைப் படித்துவிட்டு, திராட்சரசத்தைத் தூக்கிப் பிடித்தபடி ஜெபம் செய்துவிட்டு அதைக் கீழே வைத்தேன். பிறகு, நான் ஒரு பாட்டுப் பாடினேன். நான் தனியாக இருந்தாலும், உலகெங்குமுள்ள எல்லாச் சகோதரர்களுடனும் மனதளவில் சேர்ந்திருப்பதை அறிந்திருந்தேன்!”
கூலாவுக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள நிறையப் பேர் இருக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்பு அவர் சிறுமியாக இருந்தபோது ஸ்பீரோ காராயேனி அவரைத் தத்தெடுத்திருந்தார். ஸ்பீரோ காராயேனிவோடும் அவருடைய மகள் பினல்லோபியோடும் கூலா வசித்து வந்தார். ஸ்பீரோ சுமார் 1950-ல் இறந்துவிட்டார்.
அல்பேனியா மேன்மேலும் ஒதுங்கிக்கொள்கிறது
1978-ல் சீனாவுடனிருந்த உறவை அல்பேனியா முறித்துக்கொண்டபோது, எந்த நாட்டுடனும் எந்த ஒட்டுறவும் இல்லாத புதிய சகாப்தம் ஆரம்பமானது. முழுக்க முழுக்க தன்னிறைவான அல்பேனியாவை உருவாக்கும் இலக்குடன் புதிய அரசு அமைக்கப்பட்டது; அதோடு, சினிமா, நடனம், இலக்கியம், கலை என வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலுமே கட்டுப்பாடுமிக்க விதிமுறைகளை ஏற்படுத்தியது. தேசத்துரோகத்தைத் தூண்டுவதாகக் கருதப்பட்ட கிளாஸிக்கல் இசையை தடை செய்தது. அங்கீகாரம் பெற்ற சில எழுத்தாளர்கள் மட்டுமே சொந்தமாக டைப்ரைட்டரை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். பிற நாடுகளிலிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைத் தங்கள் டிவியில் பார்த்ததற்காகப் பிடிபடுகிற எவரையும் சிகூரீமி ஆட்கள் விசாரணை செய்தார்கள்.
கடும் அடக்குமுறை நிலவிய இந்தச் சமயத்தில், அமெரிக்கா, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, சுவீடன், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த சகோதரர்கள் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் அல்பேனிய சகோதரர்களுடன் தொடர்புகொள்ள வந்தார்கள். இப்படிச் சந்திப்பதற்கு எடுத்த முயற்சிகளுக்குச் சிலர் நன்றியுள்ளவர்களாய் இருந்தார்கள். ஆனால், பொதுவாகச் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார்கள்; எனவே, யாராவது அயல் நாட்டிலிருந்து வருகிறார் என்றால் அதை வெகு சிலரே அறிந்துகொண்டார்கள்.
1985-ல், சர்வாதிகாரியாக நீண்ட காலம் ஆட்சி செய்துவந்த ஏன்வேர் ஹோஜா இறந்தபோது அல்பேனியவாசிகள் துக்கித்தார்கள். விரைவிலேயே அரசியலிலும் சமுதாயத்திலும் மாற்றங்கள் நிகழவிருந்தன. மறுவருடம், ஜான் மார்க்ஸ் இறந்துபோனார்; கிட்டத்தட்ட 65 வயதாக இருந்த அவருடைய மனைவி ஹெலன், அல்பேனியாவுக்குப் போய்வரத் தீர்மானித்தார். அவர் பயணத்திற்கான விசாவைப் பெற்றுக்கொண்டபோது அதிகாரிகள் அவரிடம், “அங்கிருக்கும்போது உங்களுக்கு ஏதாவது சம்பவித்தால், எந்த நாட்டினுடைய உதவியையும் எதிர்பார்க்காதீர்கள்” என்று சொன்னார்கள்.
அல்பேனியாவிலிருந்த சொற்ப பிரஸ்தாபிகளுக்கு ஹெலனுடைய இரண்டு வாரப் பயணம் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது. ஹெலன் கடைசியில் ஜானின் தங்கையான மேல்போவைச் சந்தித்தார்; அவர் தன் அண்ணனிடமிருந்து 25 வருடங்களுக்கு முன்பு சத்தியத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். அவர் இன்னும் ஞானஸ்நானம் பெறாதிருந்தபோதிலும் பல வருடங்களுக்கு அமைப்பு தொடர்புகொண்ட முடிந்த முக்கிய நபராக அவர் இருந்தார்.
லேயோனிதா போப்பையும் 1960-ல் ஞானஸ்நானம் பெற்ற வாசில் ஜோகா என்பவரையும்கூட ஹெலன் சந்தித்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் உயிரோடிருக்கும் சுமார் ஏழு சகோதர சகோதரிகளைப் பற்றியும் அவர் அறிந்துகொண்டார். அமைப்பு சார்ந்த ‘அப்-டு-டேட்’ தகவலை அவர் சகோதரர்களுக்குத் தெரிவித்தார்; பிற கம்யூனிஸ நாடுகளில் ஊழியம் எவ்வாறு முன்னேறி வருகிறது என்பதையும் சொன்னார். தான் சந்தித்த ஆட்களுக்கு சர்வ ஜாக்கிரதையுடன் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தார். எனினும், அல்பேனியாவில் பொருளாதார நெருக்கடி மிகப் பெரிய பிரச்சினையாக இருந்ததையும் அவர் கவனித்தார்.
அவர் இவ்வாறு சொன்னார்: “நியாய விலைக் கடையில் கொஞ்சம் பாலை வாங்குவதற்குக் காலை மூன்று மணிமுதல் வரிசையில் நிற்பது சர்வ சாதாரணமாக இருந்தது. பல கடைகளில் எந்தப் பொருளுமே இல்லாதிருந்தது.”
1987-ல் ஆஸ்திரியா, கிரீஸ் கிளை அலுவலகங்கள் சேர்ந்து இன்னும் சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில் பலரை அல்பேனியாவுக்கு அனுப்ப முயற்சி எடுத்தன. 1988-ல் ஆஸ்திரியாவைச் சேர்ந்த பீட்டர் மாலோபாபைட்ஸும் அவருடைய மனைவியும் சுற்றுலாப் பயணிகளாக அல்பேனியாவுக்கு வந்தார்கள்; மேல்போவைச் சந்தித்து ஒரு சட்டையை அவருக்குக் கொடுத்தார்கள்; அதை அவர் பெற்றுக்கொண்டபோது பூரித்துப்போனார். அந்தச் சட்டைக்குள், “கடவுள் பொய்ச் சொல்லக்கூடாததாயுள்ள காரியங்கள்” என்ற புத்தகம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தபோது அளவிலா ஆனந்தம் அடைந்தார்.
பிறகு, அந்த வருடத்திலேயே மற்றொரு தம்பதியர் இன்னும் அதிக பிரசுரங்களோடு மேல்போவைச் சந்தித்தார்கள்; சிகூரீமி ஆட்கள் அந்தத் தம்பதியரின் ஒவ்வொரு அசைவையும் கழுகுக் கண்ணோடு கண்காணித்து வந்ததால் அவர்கள் ரொம்பவே ஜாக்கிரதையாய் இருக்க வேண்டியிருந்தது. சுற்றுலாப் பயணிகளுக்காக அரசு நியமித்த வழிகாட்டிகள் போல் காட்டிக்கொண்டவர்கள் சில நிமிடங்களுக்கு அந்தத் தம்பதியருடன் இல்லாதிருந்தபோது அவர்களால் மேல்போவைச் சந்திக்க முடிந்தது. லேயோனிதா வியாதிப்பட்டிருந்ததையும் அல்பேனியாவிலுள்ள பல சகோதரர்களுக்கு அதிக வயதாகிவிட்டதால் முன்பு போல் ஓடியாடி எதையும் செய்ய முடியாதிருந்ததையும் அவர்கள் அறிந்துகொண்டார்கள்.
நிலைமை மாற ஆரம்பிக்கிறது
1989-ல் அரசியலில் மாற்றம் ஏற்படத் துவங்கியது. அல்பேனியாவிலிருந்து தப்பித்துச் செல்பவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்துசெய்யப்பட்டது. அந்த வருட கோடையில் ஹெலன் மீண்டும் அல்பேனியாவுக்கு வந்தார். தன்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்த தகவலையும் அறிவுரைகளையும் சகோதரர்களிடம் சொல்ல பல மணிநேரங்கள் செலவிட்டார். வாசில் ஜோகா தன்னால் முடிந்தவரை சகோதரர்களை அடிக்கடி போய்ச் சந்தித்து அவர்களுடன் சிறிது நேரம் செலவிட்டார்.
ஹெலன் வந்திருப்பதை அறிந்த சிகூரீமி ஆட்கள் அவரைச் சந்திக்க வந்தார்கள். அவருக்குப் பிரச்சினைகளைக் கொடுப்பதற்குப் பதிலாக அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்திருக்கும் பொருள்களில் எதையாவது தங்களுக்குப் பரிசாகத் தரும்படி கேட்டார்கள். மக்கள் எவ்வளவு சீக்கிரம் மாறிவிடுகிறார்கள்!
நவம்பர் 9, 1989-ல் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது; உடனடியாக அதன் பாதிப்பு அல்பேனியாவிலும் எதிரொலித்தது. மார்ச், 1990-ல் காவாயா என்ற இடத்தில் கம்யூனிஸத்திற்கு எதிரான கலவரம் வெடித்தது. நாட்டை விட்டு வெளியேறும் எண்ணத்தில் மக்கள் ஆயிரக்கணக்கில் டிரானாவிலிருந்த அயல் நாட்டு தூதுவரகத்திற்குப் படையெடுத்தார்கள். சீர்திருத்தத்திற்குக் கோரிக்கை விடுத்து, இளைஞர்கள் உண்ணாவிரதத்தில் இறங்கினார்கள்.
பிப்ரவரி 1991-ல், பல ஆண்டுகள் டிரானாவிலுள்ள ஸ்கண்டர்பே சதுக்கத்தில் கம்பீரமாய் நிறுத்தப்பட்டிருந்த, 30 அடி உயரமுள்ள ஏன்வேர் ஹோஜாவின் உருவச் சிலையை மக்கள் வெள்ளம் தரையில் சாய்த்தது. அவர்களைப் பொறுத்தவரை, அந்தச் சர்வாதிகாரி இப்போது இல்லை, அவ்வளவுதான். மார்ச் மாதத்தில், சுமார் 30,000 அல்பேனியர் டுரஸ், வ்லோரா ஆகிய இடங்களிலுள்ள கப்பல்களைக் கடத்திக் கொண்டுபோய் இத்தாலியில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தார்கள். அந்த மாதத்தில் பல வருடங்களுக்குப் பிறகு, பல கட்சிகள் தேர்தல்களில் போட்டியிட்டன. கம்யூனிஸ் கட்சி வெற்றி பெற்ற போதிலும், அரசின் பிடி வலுவிழந்து வருவது தெளிவாகத் தெரிந்தது.
ஆகஸ்ட் 1991-ல் கடைசி தடவையாக ஹெலன் மார்க்ஸ் அல்பேனியாவுக்கு வந்தார்; இந்தத் தடவை நிலைமைகள் மாறியிருந்ததைக் கண்டார். அவர் வருவதற்கு ஒரு மாதம் முன்புதான், மத செயலகம் ஒன்றை அரசு ஏற்படுத்தியிருந்தது; அதன் மூலம், 24 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மத காரியங்களைச் சட்டப்பூர்வமாக்கியிருந்தது. சகோதரர்கள் உடனடியாக ஊழியத்தில் மும்முரமாக இறங்கினார்கள், சபைக் கூட்டங்களை ஒழுங்கமைத்தார்கள்.
வாசில் ஜோகா கிரீஸுக்குச் சென்றார்; அங்குள்ள கிளை அலுவலகத்தில் ஊழியத்தை எப்படி ஒழுங்கமைப்பது என்பதைக் கற்றுக்கொள்ள சிறிது காலம் அங்கே தங்கினார். அவருக்குக் கிரேக்க மொழி ஓரளவே தெரிந்திருந்தது; எனவே, ஓரளவு அல்பேனியன் மொழி தெரிந்திருந்த சகோதரர்கள் அதைத் தங்களால் முடிந்தவரை வாசிலுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். டிரானாவுக்குத் திரும்பி வந்ததும் தான் கற்றுக்கொண்டவற்றைக் கண்ணும் கருத்துமாய்ப் பின்பற்றினார்; அல்பேனியன் மொழியில் அந்தச் சமயத்தில் வெளிவர ஆரம்பித்திருந்த காவற்கோபுர பத்திரிகையைப் படிக்கும் கூட்டத்தையும் வார நாட்களில் நடந்த இன்னொரு கூட்டத்தையும் இன்னும் நன்கு ஒழுங்கமைக்க அவர் முயற்சி செய்தார்.
ஒரு சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “முன்பெல்லாம், முதிர்ந்த சகோதரர்கள் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த பாட்டுடனும் ஜெபத்துடனும் கூட்டங்கள் ஆரம்பமாயின. நாங்கள் படிப்பை வெகுவாக அனுபவித்தோம்; கூட்டத்தின் முடிவில் பாட்டைப் பாடினோம்; சொல்லப்போனால் இரண்டு, அல்லது மூன்று, அல்லது அதற்கும் அதிகமான பாட்டுகளைப் பாடினோம்! கடைசியில் ஜெபத்துடன் முடித்தோம்.”
அக்டோபர் 1991-லும் பிப்ரவரி 1992-லும் தோமஸ் ஜாஃபிராஸ், சிலாஸ் தோமாயிடிஸ் என்ற சகோதரர்கள் கிரீஸிலிருந்து பிரசுரங்களை அல்பேனியாவுக்குக் கொண்டு வந்தார்கள். டிரானாவிலிருந்த சகோதரர்களையும், பராட்டிலிருந்த ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபிகளையும் சந்தித்தார்கள்; சத்தியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பிய அநேக ஆட்களின் பெயர்களையும் எழுதிக்கொண்டார்கள். பல வருடங்களாக ஆன்மீக உதவியைப் பெற முடியாமல் போனதால் மக்கள் ஆன்மீக ரீதியில் பசிபட்டினியால் வாடினார்கள். உதாரணத்திற்கு, பராட் நகரில் ஞானஸ்நானம் பெற்ற சகோதரர்கள் யாருமே இல்லாதிருந்தபோதிலும் சத்தியத்திடம் ஆர்வம் காட்டியவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டங்களை நடத்தினார்கள். அவர்களுடைய ஆன்மீகத் தேவையை எப்படிப் பூர்த்தி செய்ய முடியும்?
எதிர்பாராத பொறுப்பு
மைக்கல் டிக்ரெகோர்யோ, லிண்டா டிக்ரெகோர்யோ தம்பதியர் டொமினிகன் குடியரசில் மிஷனரிகளாக ஊழியம் செய்துகொண்டிருந்தார்கள். 1920-களில் பாஸ்டனில் ஞானஸ்நானம் பெற்றவர்களில் மைக்கலுடைய தாத்தா பாட்டியும் இருந்தார்கள்; மைக்கலுக்கு ஓரளவு அல்பேனியன் மொழியும் தெரிந்திருந்தது. எனவே, 1992-ல் டிக்ரெகோர்யோ தம்பதியர் அல்பேனியாவிலுள்ள தங்கள் உறவினர்களைப் போய்ப் பார்க்கத் தீர்மானித்தபோது, மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து தங்கள் ஆன்மீக சகோதரர்களைப் போய்ப் பார்ப்பது நல்லதா என்று ஆளும் குழுவினரிடம் கேட்டார்கள். அதற்கு, வியப்பில் ஆழ்த்தும் பதிலை அவர்கள் பெற்றார்கள். அல்பேனியாவில் ஊழியத்தை ஒழுங்கமைப்பதற்காக அங்கேயே மூன்று மாதங்கள் தங்கும்படி ஆளும் குழுவினர் அவர்களிடம் தெரிவித்தார்கள்.
ரோம் கிளை அலுவலகத்தில், கிரீஸையும் இத்தாலியையும் சேர்ந்த சகோதரர்கள் அல்பேனியாவிலுள்ள சூழ்நிலையைப் பற்றிச் சுருக்கமாக டிக்ரெகோர்யோ தம்பதியருக்கு விளக்கினார்கள்; வாசில் ஜோகாவின் புகைப்படம் உட்பட அல்பேனியாவிலுள்ள சகோதரர்கள் சிலருடைய புகைப்படங்களை அவர்களிடம் காட்டினார்கள். ஏப்ரல் 1992-ல் டிக்ரெகோர்யோ தம்பதியர் டிரானாவுக்கு விமானத்தில் வந்தபோது, அயல் நாடுகளில் குடியிருக்கும் அல்பேனியருக்கு மீண்டும் நல்ல வரவேற்பு அங்கு கொடுக்கப்பட்டது. இருந்தாலும், இன்னும் அரசியல் கொந்தளிப்பு காணப்பட்டது, மக்கள் தங்கள் எதிர்காலத்தைக் குறித்துக் கவலைப்பட்டார்கள்.
மைக்கலும் லிண்டாவும் விமான நிலையத்தைவிட்டு வெளியே வரும்போது மைக்கலின் உறவுக்காரர்கள் ஓடிப்போய் அவர்களை வரவேற்றார்கள். அப்போது, டிக்ரெகோர்யோ தம்பதியர் அன்று வருவது ஏற்கெனவே வாசில் ஜோகாவுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்ததால் அவரும் அங்கு வந்திருந்தார்; அவரை மைக்கல் அடையாளம் கண்டுகொண்டார்.
மைக்கல், லிண்டாவிடம் “நீ உறவினர்களுடன் போ, நான் இதோ வந்துவிடுகிறேன்” என்று சொன்னார்.
லிண்டாவைக் கட்டித் தழுவிய உறவினர்கள் டிக்ரெகோர்யோ தம்பதியரின் பெட்டிகளை உடனடியாக எடுத்துக்கொண்டு, வேகமாக கார்களை நோக்கி நடந்தார்கள்; மைக்கலோ சட்டென வாசிலிடம் சென்றார்.
“ஞாயிற்றுக்கிழமை டிரானாவுக்கு வரும்போது உங்களை வந்து சந்திக்கிறேன்” என்று வாசிலிடம் அவசர அவசரமாக மைக்கல் சொன்னார்.
மைக்கலும் லிண்டாவும் யெகோவாவின் சாட்சிகள் என்பது அவருடைய உறவினரான கோசோ என்பவருக்குத் தெரியாததால் மைக்கலிடம் ஓடிப்போய், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? முன்பின் தெரியாதவர்களுடன் நாங்கள் பேச மாட்டோம்!” என்று சொன்னார்.
கோர்சா நகரத்துக்குப் போகும் வழியெங்கும் உள்ள காட்சிகளைப் பார்த்த டிக்ரெகோர்யோ தம்பதியர் கரிபியனிலிருந்து அது எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறதென புரிந்துகொண்டார்கள். மைக்கல் இவ்வாறு சொல்கிறார்: “எல்லாமே பழையதாக, செங்கல் நிறத்தில் அல்லது சாம்பல் நிறத்தில், புழுதி படிந்ததாக இருந்தன. எங்கு பார்த்தாலும் முள் கம்பி வேலிகள். மக்கள் முகத்தில் ஒரே வாட்டம். வாகனங்கள் கண்ணில் தட்டுப்படுவதே அபூர்வமாய் இருந்தது. ஜன்னல்கள் உடைந்து கிடந்தன. நிலத்தில் விவசாயிகள் கைகளால் வேலை செய்தார்கள். என் தாத்தா காலத்திலிருந்து எதுவும் மாறாமல் அப்படியே இருந்தது! கால ஓட்டத்தில் பின்னோக்கிப் போயிருந்ததைப் போல உணர்ந்தோம்!”
“உங்களைக் கடவுள்தான் அனுப்பியிருக்கிறார்”
கோசோ பல வருடங்களாக ஒன்றை மறைத்து வைத்திருந்தார்; அதை மைக்கலிடம் காட்ட ஆசைப்பட்டார். மைக்கலின் பாட்டி இறந்தபோது, பாஸ்டனிலுள்ள குடும்பத்தார் அல்பேனியாவிலுள்ள உறவுக்காரர்களுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார்கள். முதல் பத்து பக்கங்களில் குடும்ப விஷயங்களே பெரும்பாலும் காணப்பட்டன; ஆனால், கிட்டத்தட்ட அந்தக் கடிதத்தின் கடைசியில் அவர்கள் உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றி விளக்கியிருந்தார்கள்.
மைக்கலிடம் கோசோ இவ்வாறு சொன்னார்: “போலீஸார் கடிதத்தை ஆராய்ந்து பார்ப்பதற்காக முதல் சில பக்கங்களை வாசித்தார்கள். அவர்களுக்குச் சலித்துப் போனதால், ‘இதை எடுத்துக்கொள்ளுங்கள்! வெறும் குடும்ப விஷயங்கள்தான் உள்ளன!’ என்று கொடுத்தார்கள். அதன் கடைசிப் பகுதியை நான் வாசித்தபோது, கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டதில் அதிகம் சந்தோஷப்பட்டேன்!”
அப்போது மைக்கல், தானும் லிண்டாவும் யெகோவாவின் சாட்சிகள் என்பதைக் கோசோவிடம் சொன்னதோடு அவருக்கு முழுமையான சாட்சியும் கொடுத்தார்.
பைபிள் காலங்களில் ஆட்கள் செய்ததுபோல் விருந்தாளிகளைக் கவனித்து, பாதுகாப்பது தங்கள் கடமையென அல்பேனியர் நினைத்தார்கள். எனவே, மைக்கலும் லிண்டாவும் டிரானாவுக்குச் செல்ல புறப்பட்டபோது கோசோவும் அவர்களுடன் புறப்பட்டுவிட்டார்.
மைக்கல் இவ்வாறு சொல்கிறார்: “டிரானாவில் தெருப் பெயர் எதுவும் இல்லாததால் வாசிலுடைய வீட்டை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், தபால் நிலையத்திற்குப் போய் விசாரிக்கலாமென கோசோ சொன்னார்.”
லிண்டா இவ்வாறு சொல்கிறார்: “தபால் நிலையத்திலிருந்து கோசோ திரும்பி வந்தபோது அவர் அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பதைப் போல் தோன்றினார்; நாங்கள் நேராக வாசிலுடைய வீட்டுக்குச் சென்றோம்.”
பின்னர் கோசோ இவ்வாறு விளக்கினார்: “நான் தபால் நிலையத்திற்குப் போய் வாசிலைப் பற்றி விசாரித்தபோது, ‘அவர் ஒரு புனிதர்! அவர் என்னவெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவரைப் போல தங்கமான மனிதர் இந்த டிரானாவிலேயே கிடையாது!’ என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். அதை நான் கேட்டதும், உங்களைக் கடவுள்தான் அனுப்பியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன்! நீங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்களோ அதை என்னால் தடுக்க முடியாது!”
டிரானாவில் ஊழியம் ஒழுங்கமைக்கப்படுகிறது
டிக்ரெகோர்யோ தம்பதியரைப் பார்த்தும் வாசில் மிகவும் சந்தோஷப்பட்டார்; அவர்கள் மணிக்கணக்காக உட்கார்ந்து பேசினார்கள். இரவில்தான், நாஷோ டோரியுடன் சிறையிலடைக்கப்பட்டிருந்த ஜானி கோமினோ அன்று காலை இறந்துபோன செய்தியை வாசில் தெரிவித்தார். தன் அன்புச் சகோதரரும் நெருங்கிய நண்பருமான ஜானி கோமினோவின் சவ அடக்கத்துக்குச் செல்லாமல் வாசில் ஏன் வீட்டிலேயே இருந்தார்? “ஏனென்றால், ஆளும் குழுவினரால் அனுப்பப்பட்ட ஒருவர் வரவிருந்தார்” என்று அவர் சொன்னார்.
மைக்கலும் லிண்டாவும் டிரானாவில் தங்க வேண்டிய அவசியமிருந்தது; ஆனால், அந்தச் சமயத்திலிருந்த அரசு, அயல்நாட்டவர்கள் நகரத்தில் தங்குவதற்கு அனுமதி மறுத்தது. அவர்கள் என்ன செய்வார்கள்?
மைக்கல் இவ்வாறு சொன்னார்: “அந்தப் பிரச்சினையை நாங்கள் யெகோவாவிடம் விட்டுவிட்டோம்; கடைசியில் ஒரு சிறிய அப்பார்ட்மென்டைக் கண்டுபிடித்து, அங்கே போய் வசித்தோம்.”
லிண்டா இவ்வாறு சொல்கிறார்: “அந்த வீட்டின் சொந்தக்காரர் வீட்டுச் சாவியை அவரிடமே வைத்துக்கொண்டார்; அவர் நினைத்தபோதெல்லாம் வீட்டுக்கு வந்து போனார். அதோடு, வேறொருவடைய வீட்டின் வழியாக எங்கள் வீட்டுக்குப் போக வேண்டியிருந்தது. ஆனால், எங்கள் வீடு கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருந்தது; யாருடைய கண்ணிலும் படாமலிருக்கவே நாங்கள் விரும்பினோம்.”
டிரானாவிலிருந்த முதிர்ந்த சகோதரர்கள் தாங்கள் பட்ட கஷ்டங்களையெல்லாம் பற்றிச் சொன்னபோது டிக்ரெகோர்யோ தம்பதியர் மணிக்கணக்காக உட்கார்ந்து கேட்டார்கள். அந்த முதிர்ந்த சகோதரர்கள் சிலரிடமிருந்த ஒரு பிரச்சினை, அவர்கள் ஒருவரையொருவர் நம்பாதிருந்தார்கள்.
மைக்கல் இவ்வாறு சொல்கிறார்: “அவர்கள் தனிப்பட்ட விதத்தில் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தார்கள்; ஆனால், மற்றவர்களுடைய உண்மைத்தன்மையை அவர்கள் சந்தேகித்தார்கள். அவர்கள் ஒருவரைவிட்டு ஒருவர் ஓரளவு ஒதுங்கியிருந்தாலும், எங்களோடு நெருக்கமாகவே இருந்தார்கள். பிரச்சினையைக் குறித்துச் சாந்தமாகப் பேசிய பிறகு, யெகோவாவின் பெயரை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டுமென்பதே மிக முக்கியமான காரியம் என்பதை ஒப்புக்கொண்டார்கள். யெகோவாவிடம் காட்டும் அன்பில் அவர்கள் ஒன்றுபட்டிருந்தார்கள், எதிர்கால ஆசீர்வாதங்களை அனுபவிக்க அதிக ஆர்வத்தோடிருந்தார்கள்.”
ஒரு சபை இல்லாததன் விளைவு தெளிவாகத் தெரிந்தது. உதாரணத்திற்கு, கூலா ஜித்தாரியும் ஸ்டாவ்ரி ட்சேசியும் முதன்முதலாக தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் சிறுபுத்தகத்தைப் பார்த்தபோது, அது என்னவென்று தெரியாமலேயே அதன் பக்கங்களைப் புரட்டினார்கள்.
திடீரென ஸ்டாவ்ரி, “ஓ இது, மன்னா!” என்று ஆச்சரியத்துடன் சொன்னார்; விசுவாசக் குடும்பத்தாருக்கு அன்றாட பரலோக மன்னா என்ற ஆங்கில புத்தகம் அவருடைய நினைவுக்கு வந்திருக்கிறது; அந்தப் புத்தகம், ஸ்டாவ்ரி சத்தியத்தைக் கற்றுக்கொண்ட காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
“அதுசரி, தலைவரான சகோதரர் நார் எப்படி இருக்கிறார்? அவருடைய நண்பர் ஃப்ரெட் ஃபிரான்ஸ் சுகமாக இருக்கிறாரா?” என்று கூலா கேட்டார். அவர்கள் எத்தனை வருடங்களாக அமைப்போடு தொடர்புகொள்ள முடியாமல் ஒதுங்கிய நிலையில் இருந்திருக்கிறார்கள் என்பதை அது காட்டியது!
மறக்க முடியாத நினைவுநாள் அனுசரிப்பு!
வாசில் ஜோகாவின் வீட்டில் 9 அடி நீளமும் 12 அடி அகலமுள்ள அறையில்தான் சகோதரர்கள் பொதுவாகக் கூட்டங்களை நடத்தினார்கள்; நினைவுநாள் அனுசரிப்புக்கு அந்த அறை ரொம்பவே சிறியதாக இருந்தது. அதனால், கம்யூனிஸ கட்சி செய்தித்தாளின் தலைமை அலுவலகமாக ஒருகாலத்தில் பயன்படுத்தப்பட்ட அறையில் அந்த நிகழ்ச்சிக்காக 105 பேர் கூடிவந்தார்கள். டிரானாவில், நினைவுநாள் அனுசரிப்புக்காகத் தனியார் வீட்டில் கூடிவராதிருந்தது இதுவே முதல் தடவையாகும். அல்பேனியாவில் 1992-ல் 30 பிரஸ்தாபிகளே இருந்தபோதிலும் நினைவுநாள் அனுசரிப்புக்கு 325 பேர் வந்தபோது அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
டிரானாவில் சத்தியத்திடம் ஆர்வம் காட்டியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால் வாசில் வீட்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு 40 பேர் வரை வந்தார்கள். புதியவர்கள் சிலர் ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபிகள் ஆகவேண்டுமென ஆசைப்பட்டார்கள்; இன்னும் சிலர் ஞானஸ்நானம் பெற விரும்பினார்கள். ஞானஸ்நானம் பெற விரும்பியவர்களுடன் சகோதரர்கள் பல மணிநேரங்களைச் செலவிட்டார்கள். காரணம்? நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகம் அல்பேனியன் மொழியில் இல்லாதிருந்ததால், ஞானஸ்நானம் பெறவிருந்தவர்களுக்கு அந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கேள்வியையும் மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டியிருந்தது. புதியவர்கள் சத்தியத்தை நன்கு அறிந்திருக்கிறார்களா என்பதை உறுதிசெய்துகொள்ள அவர்களில் சிலருக்குக் கண்ணும் கருத்துமாய்ப் படிப்பு நடத்த வேண்டியிருந்தது. யாருக்கும் முறைப்படி பைபிள் படிப்பு நடத்தப்படாதிருந்த போதிலும், அவர்கள் பைபிளைப் பற்றி எந்தளவு நன்கு அறிந்திருந்தார்கள் என்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கடைசியில் சட்டப்பூர்வ அங்கீகாரம்!
அடுத்த சில வாரங்களில் பல மணிநேரங்களைச் சகோதரர்கள் வழக்கறிஞர்களோடும் அரசு அதிகாரிகளோடும் செலவிட்டார்கள்; நற்செய்தியை அறிவிக்கும் வேலையைச் சட்டப்படி பதிவுசெய்ய அவர்கள் முயற்சி செய்தார்கள். அதற்காக, டிரானாவிலிருந்த சகோதரர்களும் ஆர்வம் காட்டியவர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஏற்கெனவே முறைப்படி விண்ணப்பித்திருந்தார்கள்; ஆனால், புதிய அரசு ஆட்சியை அமைத்திருந்ததால் பொறுமையாய்க் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஒரு சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “நடந்து போகும்போதே எல்லாம் செய்து முடிக்கப்பட்டது. நகரத்தில் நடந்துகொண்டிருந்தபோது மனித உரிமைகளுக்கான அமைச்சர், உள்துறை அமைச்சர், நீதித்துறை அமைச்சர், போலீஸ் அதிகாரி, அரசியல் அமைப்புக்குரிய நீதிமன்ற அங்கத்தினர்கள், மற்ற முக்கியப் பிரமுகர்கள் என அனைவரையும் நாங்கள் சந்தித்தோம். அவர்கள் எல்லாரும் அன்பாகப் பழகினார்கள், நிலைமை சீரடைந்து வருவதைக் குறித்துச் சந்தோஷப்பட்டார்கள். அவர்களில் பலருக்கு ஊன்ஜிலோர் பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்தது. அல்பேனியாவில், யெகோவாவின் சாட்சிகள் இன்னமும் இருந்தார்கள், ஊக்கமாய் ஊழியம் செய்துவந்தார்கள் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.”
யெகோவாவின் சாட்சிகளுக்கு அரசு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்குமென பல வாரங்களாக அதிகாரிகள் சொல்லி வந்தபோதிலும் எதுவுமே நடக்கவில்லை. ஆனால், அல்பேனியரான ஆன்ஜேலோ ஃபேல்யோ என்ற சகோதரர் டிரானாவிலுள்ள தன் குடும்பத்தாரைச் சந்திக்க வந்தபோது வழி பிறந்தது. அவர் அல்பேனியாவில் இருந்தபோது சகோதரர்களுடன் போய்ச் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளிக்கும் அமைச்சருடைய சட்ட அறிவுரையாளரைச் சந்தித்தார். அல்பேனியாவில் தன்னுடைய சொந்த ஊரில்தான் ஆன்ஜேலோவின் குடும்பத்தாரும் வசிப்பதைப் பற்றித் தெரிந்துகொண்டபோது அந்த அறிவுரையாளர் சந்தோஷப்பட்டார்.
அவர் ஆன்ஜேலோவிடம், “உங்கள் குடும்பத்தார் எந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்?” என்று கேட்டார். அவர்கள் தன்னுடைய சொந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தபோது அவர் வியப்படைந்தார்.
“உங்கள் குடும்பப் பெயர் என்ன?” என்று அந்த அறிவுரையாளர் கேட்டார்.
பெயரைச் சொன்னதும் அவர்கள் இருவரும் சொந்தக்காரர்கள் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார்; பல வருடங்களாக இரண்டு குடும்பத்தாரும் சந்திக்க முடியாமல் போயிருந்தது.
அந்த அறிவுரையாளர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் கொடுத்துள்ள விண்ணப்பத்தைப் பார்த்தபோதே உங்களுக்கு உதவ வேண்டுமென்று விரும்பினேன். ஆனால் இப்போது, நீங்கள் என் சொந்தக்காரராகிவிட்டதால் உங்களுக்கு உதவ கடமைப்பட்டிருக்கிறேன்!”
சில நாட்களுக்குப் பிறகு, அல்பேனியாவில் யெகோவாவின் சாட்சிகளுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் ஆணை எண் 100-ஐ அந்தச் சட்ட அறிவுரையாளர் சகோதரர்களிடம் கொடுத்தார். இப்போது சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துவிட்டது; உண்மைக் கடவுளான யெகோவாவை வழிபடுவதற்கு 1939 முதல் விதிக்கப்பட்டிருந்த தடை ஒருவழியாக நீக்கப்பட்டது! “அன்று எங்கள் இருதயத்தில் பிறந்த உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை” என்று டிக்ரெகோர்யோ தம்பதியர் சொன்னார்கள்.
ஓரிரு வாரங்களுக்குப் பிறகு, அல்பேனியாவில் ஊழியத்தை மேற்பார்வை செய்துவந்த கிரீஸ் கிளை அலுவலகம், ராபர்ட் கார்ன் என்ற சகோதரரை டிரானாவுக்கு அனுப்பி வைத்தது. ஊழியம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டிருப்பதையும் டிரானா சபை உருவாக்கப்பட்டிருப்பதையும் அங்குள்ள சகோதரர்களுக்கு ராபர்ட் அறிவித்தார். “அல்பேனியா நாடு முழுவதுமே” அவர்களுடைய சபை பிராந்தியம் என்றும் சொன்னார். ஒழுங்கமைக்கப்பட்ட வீட்டுக்கு வீடு ஊழியத்தை முழுவீச்சுடன் தொடங்க வேண்டியிருந்தது. டிரானாவில் மிஷனரி இல்லமாகவும் அலுவலகமாகவும் பயன்படுத்துவதற்காக மூன்று படுக்கையறை வசதியுள்ள வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டது; அதை ஒட்டினால் போலிருந்த ஒரு பெரிய அறை, முதல் ராஜ்ய மன்றமாகப் பயன்படுத்தப்படவிருந்தது.
ஒதுக்குப்புறத்திலிருந்த ஆடு கண்டுபிடிக்கப்படுகிறது
அல்பேனியாவில் ஊழியம் எந்தளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதைக் குறித்து சகோதரர்கள் சிந்திக்கையில் “வ்லோராவில் யெகோவாவின் சாட்சிகள் யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டார்கள். முதுமையால் தளர்ந்து போயிருக்கும் ஒரேவொரு வயதான பெண்மணி இருப்பதைச் சிலர் அறிந்திருந்தார்கள். பின்னர், கிளை அலுவலகத்திற்கு ஒரு பெண் வந்து தானும் தன் குடும்பத்தாரும் ஊன்ஜிலோர் என்றும் வ்லோராவிலுள்ள ஆரேடி என்ற ஒருவர் தங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லிக்கொடுத்தார் என்றும் சொன்னார். எனவே, டிரானாவிலுள்ள சகோதரர்கள் அந்த ஆரேடியைக் கண்டுபிடிக்க வ்வோராவுக்குச் சென்றார்கள்.
வயதான ஆரேடி பினா குட்டையாக இருந்தார்; வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை உள்ளே அழைத்தார், ஆனால் ரொம்பவே அமைதியானவர் போல் தோன்றினார். அவர்கள் தங்களை அவருடைய ஆன்மீக சகோதரர்கள் என்று சொன்னபோதும்கூட அவரிடத்தில் எந்த மாற்றமும் இல்லை.
சில நிமிடங்களுக்குப் பிறகு திடீரென ஆரேடி, “நான் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்கலாமா?” என்றார். அவர்களிடம் பின்வரும் கேள்விகளைச் சரமாரியாகக் கேட்கத் தொடங்கினார்: “நீங்கள் திரித்துவத்தை நம்புகிறீர்களா? கடவுளுடைய பெயர் என்ன? நீங்கள் எரிநரகத்தை நம்புகிறீர்களா? நாம் இறக்கும்போது நமக்கு என்ன நடக்கிறது? பூமியைக் குறித்த உங்கள் கருத்தென்ன? எத்தனை பேர் பரலோகத்திற்குப் போவார்கள்?”
அந்தக் கேள்விகள் எல்லாவற்றிற்கும் சகோதரர்கள் பதிலளித்தார்கள்.
பிறகு அவர் சகோதரர்களிடம், “நீங்கள் பிரசங்க ஊழியம் செய்கிறீர்களா?” என்று கேட்டார்.
“ஆம் செய்கிறோம்” என்று ஒரு சகோதரர் பதிலளித்தார்.
“ஆனால், எப்படிப் பிரசங்கிக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
“நாங்கள் வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கிக்கிறோம்” என்று அந்தச் சகோதரர் பதிலளித்தார்.
ஆரேடி அழ ஆரம்பித்துவிட்டார், பாய்ந்து வந்து அந்தச் சகோதரரைக் கட்டியணைத்தார்.
“நீங்கள் என்னுடைய சகோதரர்கள் என்று இப்போது எனக்குத் தெளிவாகிவிட்டது! யெகோவாவின் மக்கள் மட்டுமே வீட்டுக்கு வீடு சென்று ஊழியம் செய்கிறார்கள்!” என்று உற்சாகம் பொங்கச் சொன்னார்.
வ்லோராவிலுள்ள புராட்டஸ்டன்ட் தொகுதியினர், கடவுள் பக்தியுள்ளவராக ஆரேடி இருந்ததை அறிந்திருந்ததால் தங்களுடன் சேர்ந்துகொள்ளும்படி அவரிடம் கேட்டிருக்கிறார்கள். “ஆனால், மகா பாபிலோனோடு எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை! அதனால்தான் நீங்கள் உண்மையிலேயே என் ஆன்மீகக் குடும்பத்தாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது!” என்று சகோதரர்களிடம் சொன்னார்.
1928-ல் 18 வயதாக இருக்கையில் ஆரேடி ஞானஸ்நானம் பெற்றிருந்தார். பைபிளைக் கையில் எடுத்துக்கொண்டு மலைகளில் மேலும் கீழும் நடந்தே போய் ஊழியம் செய்திருந்தார். பல வருடங்களுக்குச் சகோதரர்களுடன் ஆரேடிக்கு எந்தத் தொடர்பும் இல்லாதிருந்தபோதிலும் உண்மையுடன் அவர் தனியாகவே ஊழியம் செய்து வந்திருந்தார்.
கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, “யெகோவா ரொம்ப நல்லவர், அவர் என்னை மறக்கவே இல்லை!” என்று சொன்னார்.
அல்பேனியாவில் வலிமைமிக்க சர்வாதிபத்திய ஆட்சி நடக்கும் சமயத்தில் கடவுள்மீது நம்பிக்கை வைக்க ஆரேடிக்குப் பித்துப்பிடித்திருக்க வேண்டுமென மக்கள் நினைத்தார்கள். ஆனால், ஆரேடி முதுமையால் அப்படியே ஒடுங்கிப்போய்விடவில்லை. அவர் மனது எப்போதையும் போலவே அப்போதும் தெள்ளத் தெளிவாக இருந்தது!
செய்வதற்கு ஏராளமான வேலை!
இப்போது நம்முடைய ஊழியத்திற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துவிட்டதால், அல்பேனியாவில் நற்செய்தியிடம் ஆர்வத்தை வளர்க்க பெருமளவு ஊழியம் செய்யப்பட வேண்டியிருந்தது. அமைப்பு சார்ந்த விஷயங்களைப் பற்றி சகோதரர்களுக்கு ‘அப்-டு-டேட்’ தகவல் தெரிவிக்க வேண்டியிருந்தது; அதோடு, அவர்களை ஆன்மீக ரீதியில் பலப்படுத்த வேண்டியிருந்தது. சகோதரர்கள் படிப்பதற்கும் ஊழியத்தில் விநியோகிப்பதற்கும் அல்பேனியன் மொழியில் பிரசுரங்கள் தேவைப்பட்டன. ஊழியம் செய்ய அநேகர் அவசரமாகத் தேவைப்பட்டார்கள். யாரால் உதவ முடியும்?
1992-ல், இத்தாலியிலிருந்தும் கிரீஸிலிருந்தும் விசேஷ பயனியர்கள் வந்தார்கள்; அவர்கள் அல்பேனியன் மொழியைக் கற்றுக்கொள்ளும் வகுப்பில் கலந்துகொண்டார்கள். அதே சமயத்தில், ஒரு சிறிய தொகுதியினர் நமது பிரசுரங்களை மொழிபெயர்க்கிற வேலையில் இறங்கினார்கள். சில சமயங்களில், தொடர்ந்து 21 நாட்களுக்கு மின்சாரம் இல்லாதிருந்தபோதிலும் சகோதரர்கள் நகைச்சுவை உணர்வோடு, தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த வேலையில் தங்களை மும்முரமாய் ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
சின்னச் சின்ன வேலைகள் ஏராளம் இருந்தன. குளிர்காலத்தில், மிஷனரி இல்லத்தைக் கதகதப்பாக வைக்க வேண்டியிருந்தது. ஆனால், அல்பேனியாவில் விறகை வாங்கவே முடியாதிருந்தது. சகோதரர்கள் எப்படி அந்தக் குளிரைச் சமாளித்தார்கள்? கிரீஸிலிருந்த சகோதரர்கள் உதவிக்கரம் நீட்டினார்கள்; பெரிய பெரிய மரக்கட்டைகளையும் மின்சார ரம்பத்தையும் அனுப்பி வைத்தார்கள். ஆனாலும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை; ஏனெனில், மர அடுப்பின் திறப்பு சிறியதாக இருந்தது, ரம்பத்தைப் பயன்படுத்துவதற்கு மின்சாரமும் இல்லாதிருந்தது. நல்ல வேளையாக, டிரானாவின் மறுகோடியில் வசித்த சகோதரருக்குப் பழக்கமான ஒருவரிடம் கோடாலி இருந்தது. பஸ்ஸுகள் எதுவும் இல்லாததால் அந்தக் கோடாலியை மிஷனரி இல்லத்திற்குக் கொண்டுவர இரண்டு மணிநேரம் எடுத்தது; இருட்டுவதற்குள் அதை மீண்டும் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டியிருந்தது. “கோடாலி கைக்குக் கிடைத்ததும் மரக்கட்டைகளை நாங்கள் எல்லாருமே மாறி மாறி வெட்டினோம், அதே சமயத்தில் எங்களைக் கதகதப்பாகவும் வைத்துக்கொண்டோம்!” என்று மிஷனரிகளில் ஒருவர் சொல்கிறார்.
இப்படி மரக்கட்டைகளை வெட்டிப் பிளந்துகொண்டும் மொழிப் பயிற்சி வகுப்புகளில் படித்துக்கொண்டும் இருந்த வேளையில், நிக் அலாடஸ், ஏமி அலாடஸ் தம்பதியர் முதன்முறையாக அல்பேனியாவுக்கு வந்தார்கள்; தற்போது நியு யார்க், பேட்டர்ஸனில் செயல்பட்டுவரும் மொழிபெயர்ப்பு சேவைகளிலிருந்து அவர்கள் வந்தபோது அல்பேனியன் மொழிபெயர்ப்புக் குழுவினர் சந்தோஷப்பட்டார்கள்; இந்தத் தம்பதியர் அதன் பின்பு அந்தக் குழுவினருக்கு உதவ பல முறை வந்தார்கள். அந்தத் தம்பதியரின் அன்பான, சமநிலையான அணுகுமுறை காரணமாகப் புதிய மொழிபெயர்ப்பாளர்கள் விரைவில் கற்றுக்கொண்டு, நன்கு மொழிபெயர்க்க ஆரம்பித்தார்கள். இத்தாலிய கிளை அலுவலகம் பிரசுரங்களை அச்சிட்டு அல்பேனியாவுக்கு அனுப்பி வைத்தது.
ஊழியத்தில் பிரஸ்தாபிகள் பெற்ற அருமையான பலன்களைப் பார்த்தபோது பட்ட எந்தக் கஷ்டமும் வீணாகவில்லை என்பது தெளிவானது. புதிய பிரஸ்தாபிகளும்கூட ஊழியத்தில் அதிக பக்திவைராக்கியத்தைக் காட்டினார்கள். உதாரணத்திற்கு, லோலாவை எடுத்துக்கொள்வோம். அப்போதுதான் அவர் ஊழியம் செய்ய ஆரம்பித்திருந்தபோதிலும், 150, 200 அல்லது அதற்கும் அதிக மணிநேரத்தை ஒவ்வொரு மாதமும் ஊழியத்தில் செலவிட்டார்! கவனமாய் இருக்கும்படியும் ஊழியம் செய்யும் வேகத்தைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்கும்படியும் அவரிடம் சொல்லப்பட்டபோது, “இப்போதுவரை என் வாழ்க்கையை வீணாக்கிவிட்டேன்! மீதமுள்ள காலத்தில் செய்வதற்கு அதைவிடப் பயனுள்ள வேலை வேறு என்ன இருக்கிறது?” என்று கேட்டார்.
முன்னேறுகிற ஊழியம்
அல்பேனியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரத்தில் மார்ச் 1993 முக்கியமான வருடமாகும். பராட், டுராஸ், கைரோகாஸ்டர், ஷ்கோடர், டிரானா, வ்லோரா ஆகிய இடங்களில் விசேஷ பயனியர்கள் புதிதாக ஊழியம் செய்ய ஆரம்பித்திருந்தார்கள்; மார்ச் 1 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையே அல்பேனிய மொழிபெயர்ப்புக் குழு மொழிபெயர்த்த முதல் பத்திரிகையாகும்; சகோதரர்கள் முதன்முதலாக தேவராஜ்ய ஊழியப் பள்ளியை நடத்தினார்கள், இவ்வாறு முதன்முறையாக ஐந்து கூட்டங்களும் நடத்துவது ஆரம்பமானது; அல்பேனியன் மொழியில் நாம் ராஜ்ய ஊழியத்தின் முதல் பதிப்பு வெளியானது; டிரானாவில் ஸ்கண்டர்பே சதுக்கத்திலுள்ள, பாலட்-ஓபேரா தியேட்டரில் முதல் விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
சரித்திரம் படைத்த இந்த விசேஷ மாநாட்டு தினத்தில் கலந்துகொள்ள கிரீஸிலிருந்தும் இத்தாலியிலிருந்தும் சகோதர சகோதரிகள் வந்திருந்தார்கள். நாஷோ டோரி மாநாட்டை ஜெபத்துடன் ஆரம்பித்து வைத்தார்; அவர்கள் அனுபவித்து மகிழும் எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் யெகோவாவுக்கு நன்றி சொன்னார். அந்த மாநாட்டுக்கு 585 பேர் வந்திருந்தார்கள், 41 பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள்! அவர்களில், அல்பேனியாவில் யெகோவாவுக்கு உண்மையாய்ச் சேவை செய்திருந்த சகோதரர்களுடைய பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்.
1993-ல் அல்பேனியாவில் முதன்முறையாக மாவட்ட மாநாடு நடைபெற்றபோது ஆனந்தம் கரைபுரண்டோடியது. அதில், ஆஸ்திரியா, இத்தாலி, கிரீஸ், சுவிட்சர்லாந்து, பிரான்சு ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் உட்பட 600-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டார்கள். பல ஆண்டு காலம் தனிமையில் இருந்துவிட்டு, அநேக நாடுகளிலிருந்து வந்திருந்த எண்ணற்ற சகோதரர்களுடன் தடையின்றி கூட்டுறவுகொள்ள முடிந்தபோது அல்பேனியாவிலிருந்த சகோதரர்கள் எவ்வளவாய் பூரிப்படைந்தார்கள்!
இன்னும் நன்கு ஊழியத்தை ஒழுங்கமைப்பதற்காக ஆளும் குழுவினர் நாட்டு ஆலோசனைக் குழுவினரை ஏற்படுத்தினார்கள்; இத்தாலிய கிளை அலுவலகத்தின் மேற்பார்வையில் செயல்படுவதற்கு நாஷோ டோரி, விடோ மாஸ்ட்ரோரோசா, மைக்கல் டிக்ரெகோர்யோ ஆகியோரை நியமித்தார்கள். நாட்டு ஆலோசனைக் குழுவினரின் அலுவலகத்திற்காகவும் அதிகரித்து வந்த மொழிபெயர்ப்புக் குழுவினருக்காகவும் ஓர் இடத்தைக் கண்டுபிடிப்பதே அவர்களுடைய முதல் வேலையாக இருந்தது.
அடுத்ததாக, அல்பேனியன் மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த விசேஷ பயனியர்களில் இத்தாலியைச் சேர்ந்த ஸ்டிஃபானோ அனட்ரலியும் ஒருவர். ஐந்து வார மொழிப் பயிற்சிக்குப் பிறகு சகோதரர்கள் அவரை நாட்டு ஆலோசனைக் குழுவினரின் அலுவலகத்திற்கு அழைத்தார்கள்; அவர் போனபோது, “நீங்கள் வட்டாரக் கண்காணியாகப் போய் விசேஷ பயனியர்களையும் தொகுதிகளையும் சந்திக்க வேண்டுமென விரும்புகிறோம்” என்று சொன்னார்கள்.
அதைக் கேட்டதும் ஸ்டிஃபானோவுக்கு எப்படி இருந்தது? “ஆனால், எனக்கு அல்பேனியன் மொழியைச் சரியாகப் பேசக்கூடத் தெரியாதே!” என்றார். இருப்பினும் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பைப் பெரும் பாக்கியமாகக் கருதினார். மற்றவர்களுடைய உதவியோடு ஓரிரு பேச்சுகளைத் தயாரித்துக்கொண்டு, அல்பேனியாவின் மூலைமுடுக்கெல்லாம் செல்ல ஸ்டிஃபானோ புறப்பட்டார். தடையுத்தரவின்போது ஸ்பீரோ வ்ரூஹோ வட்டாரக் கண்காணியாகப் போய்ச் சகோதரர்களைச் சந்தித்து சுமார் 30 வருடங்கள் உருண்டோடியிருந்தன. 1995-ல் ஸ்டிஃபானோ நாட்டு ஆலோசனைக் குழுவின் அங்கத்தினராக நியமிக்கப்பட்டார்.
1994-ல் இத்தாலியைச் சேர்ந்த பயனியர்களின் மூன்றாவது தொகுதியினர் அல்பேனியாவுக்கு வந்தார்கள். இந்த பயனியர்களின் பக்திவைராக்கியத்தைப் பார்த்து அல்பேனியாவிலிருந்த புதிய பிரஸ்தாபிகள் ஊக்கம் பெற்றார்கள். 1994-ஆம் ஊழிய ஆண்டின் முடிவில் 354 பிரஸ்தாபிகள் ஊழியத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
இருந்தாலும், அநேக பிரஸ்தாபிகள் உணர்ச்சி ரீதியில் பல பிரச்சினைகளை எதிர்ப்பட்டார்கள். கடும் ஒடுக்குதல் நிலவிய சமுதாயத்திலிருந்து முழுக்க முழுக்க சுதந்திரமாய் செயல்படும் சமுதாய முறைக்குப் பழகிக்கொள்வது அவர்களுக்குக் கடினமாய் இருந்தது. சர்வாதிபத்திய ஆட்சியில் வாழ்க்கையை ஓட்டுவதற்கு அவர்கள் தங்கள் எண்ணத்தை யாரிடமும், முக்கியமாக அயல் நாட்டவரிடம், வாய்விட்டு சொல்லிவிடாதபடிக்கு அதிக கவனமாய் இருந்தார்கள். எனினும், அயல் நாட்டைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் இதைப் புரிந்துகொண்டு, புதியவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குப் பொறுமையாய்ப் பாடுபட்டார்கள்.
அதே வருடத்தில், வயதான சகோதர சகோதரிகளும் புதிய பிரஸ்தாபிகளும் தியோடர் ஜாரஸைச் சந்தித்தபோது அதிக சந்தோஷப்பட்டார்கள். அவர், அல்பேனியாவுக்கு வந்த முதல் ஆளும் குழு அங்கத்தினர் ஆவார். டிரானாவில் அவருடைய பேச்சைக் கேட்பதற்கு 600-க்கும் அதிகமானோர் கூடிவந்தார்கள்.
இதற்கிடையில், அலுவலகமாய் உபயோகிப்பதற்காக டிரானாவில் ஒரு கட்டிடம் விலைக்கு வாங்கப்பட்டது. ஆறு மாதத்திற்குள், கடினமாய் உழைத்த அயல் நாட்டு சகோதரர்களின் ஒரு குழுவினர் ஒரு பழைய வீட்டை மாற்றி, புதிய அலுவலகங்களாகவும் 24 பேர் தங்குவதற்குரிய அறைகளாகவும் வடிவமைத்தார்கள். மே 12, 1996-ல் அதன் அர்ப்பண விழா நடந்தது; ஆளும் குழுவின் அங்கத்தினரான மில்டன் ஹென்ஷல் அதில் கலந்துகொண்டார்.
அவர்கள் தனியாக ஊழியம் செய்தார்கள்
கார்ச்சாவைச் சேர்ந்த ஆர்பென் என்ற இளைஞன் தன் அக்கா அனுப்பியிருந்த பைபிள் பிரசுரங்களை வாசித்துவிட்டு, அதுதான் சத்தியம் என்பதைப் புரிந்துகொண்டார். அவர் அல்பேனியாவிலுள்ள அலுவலகத்துக்குக் கடிதம் எழுதினார்; சகோதரர்களுடன் கடிதத் தொடர்புகொண்டு கொஞ்ச காலத்திற்குச் சத்தியத்தைக் கற்று வந்தார். அவருக்குக் கூடுதல் ஆன்மீக உதவி அளிப்பதற்காக இரண்டு சகோதரர்கள் விசேஷப் பயணம் மேற்கொண்டார்கள். ஆர்பெனுடன் அவர்கள் உரையாடும்போது அவர் பிரஸ்தாபி ஆவதற்குத் தகுதிபெற்றிருப்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். அந்த இரண்டு சகோதரர்களும் அவரை கார்ச்சா நகரின் மையப் பகுதிக்கு அழைத்துச் சென்று, தாங்கள் ஊழியம் செய்வதைக் கவனிக்கும்படி சொன்னார்கள்.
ஆர்பென் இவ்வாறு சொல்கிறார்: “பிறகு அவர்கள் என்னிடம் பத்திரிகைகளைக் கொடுத்து, ‘இப்போது நீங்கள் போய்ப் பேசுங்கள்’ என்று என்னிடம் சொன்னார்கள். தனியாகப் போகச் சொன்னார்கள், நானும் போய்ப் பேசினேன்.”
அதற்குப் பிறகு சில மாதங்கள் கழித்து விசேஷ பயனியர்கள் அவருக்கு உதவ அங்கே சென்றார்கள். இதற்கிடையில், அவர் அறிவித்த நற்செய்தியை மக்கள் காதுகொடுத்துக் கேட்டார்கள். விசேஷ பயனியர்கள் வந்த பின் சீக்கிரத்திலேயே அங்கு ஒரு தொகுதி உருவானது.
அந்த வருடக் கடைசியில், வ்லோராவிலிருந்த பயனியர்கள் அந்த அலுவலகத்துடன் தொடர்புகொண்டு, ஆரேடி பினா வியாதிப்பட்டிருப்பதாகவும் பொறுப்பான சகோதரர்களில் ஒருவரை அவர் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்கள். ஒரு சகோதரர் அவரைப் பார்க்கச் சென்றபோது, அந்தச் சகோதரி அவருடன் தனியாகப் பேசுவதற்காக அறையிலிருந்த எல்லாரையும் அங்கிருந்து போகும்படி கேட்டுக்கொண்டார்.
மூச்சுவிடக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த அந்தச் சகோதரி இவ்வாறு சொன்னார்: “நான் இனி பிழைக்க மாட்டேன். நான் ஒரு விஷயத்தைக் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன், உங்களிடம் அதைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன். எல்லா விவரங்களையும் என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது; ஆனால், வெளிப்படுத்துதல் புத்தகம் நிறைவேறிவிட்டதா என்பதை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.”
“ஆம், ஆரேடி அதில் பெரும்பாலானவை நிறைவேறிவிட்டன” என்று அந்தச் சகோதரர் சொல்லிவிட்டு, நிறைவேற்றமடையக் காத்திருக்கும் சில விஷயங்களைப் பற்றி சுருக்கமாகச் சொன்னார். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் ஆரேடி கவனமாய்க் கேட்டார்.
“இப்போது நான் நிம்மதியாக இறக்கலாம். நாம் முடிவுக்கு எவ்வளவு சமீபமாய் வந்திருக்கிறோமெனத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன்” என்று சொன்னார்.
பல வருடங்களுக்கு ஆரேடி உற்சாகமுள்ள பிரஸ்தாபியாக இருந்தார்; மலைகளில் தன்னந்தனியாகப் பிரசங்கித்தபோதும்சரி, அவர் வியாதிப்பட்டு படுக்கையில் கிடந்தபோதும்சரி அவருடைய உற்சாகம் தணியவே இல்லை. அந்தச் சகோதரருடன் பேசிய பிறகு விரைவிலேயே ஆரேடியின் பூமிக்குரிய சேவை முடிவுக்கு வந்தது.
முடிவுவரை அவருடைய விசுவாசம் பலமாய் இருந்தது
80 வயதைத் தாண்டிய நாஷோ டோரி வியாதிப்பட்டு, பலமிழந்து வந்தார். ஆனால், சகோதரர்களின் ஒரு தொகுதிக்கு, குறிப்பாக ராணுவத்தில் சேவை செய்ய அழைக்கப்பட்ட இளைஞர்களுக்கு அவருடைய உற்சாகமூட்டுதல் தேவைப்பட்டது. யெகோவாவின் சாட்சிகள் மளமளவென அதிகரிப்பதைப் பார்த்துப் பொறாமைப்பட்ட பராட்டிலிருந்த ஆர்த்தடாக்ஸ் மதகுரு ஒருவர், அந்த இளைஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளைத் தூண்டிவிட்டார்.
ராணுவத்தில் சேர மறுத்த ஆறு இளம் சகோதரர்களுக்கு, பல மாத சிறைதண்டனை காத்திருந்தது. அவர்களுக்கு உற்சாகமூட்டுதல் தேவை என்பதை அறிந்த நாஷோ எழுந்து உட்கார்ந்து, அவர்களுக்கான செய்தியை வீடியோவில் பதிவு செய்யச் சொன்னார்.
அந்த இளம் சகோதரர்களை அவர் இவ்வாறு உற்சாகப்படுத்தினார்: “பயப்பட வேண்டாம். நாங்கள் இதையெல்லாம் சந்தித்திருக்கிறோம். யெகோவா உங்களுடன் இருப்பார். நீங்கள் சிறைக்குச் சென்றாலும் கவலைப்படாதீர்கள். அது, யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் அமையும்.”
நாஷோவின் உடல்நிலை வரவர மோசமானபோது அவர் சகோதரர்களைத் தன் படுக்கை அருகே அழைத்து இவ்வாறு சொன்னார்: “நான் மன்னிப்புக்குக் கேட்டு ஜெபம் செய்ய வேண்டியிருந்தது. கடந்த வாரம் என்னால் வலியைத் தாங்க முடியாதபோது இறந்துபோக வேண்டுமென ஜெபம் செய்தேன். பிறகு, ‘யெகோவாவே, உயிரைக் கொடுத்தவர் நீரே. உயிருள்ள எல்லாவற்றையும் நீரே ஆதரிக்கிறீர். உம்முடைய சித்தத்திற்கு இசைவாக இல்லாத ஒன்றிற்காக நான் ஜெபம் செய்தேன். என்னை மன்னித்து விடுங்கள்!’ என்றேன்.”
அல்பேனியாவிலுள்ள பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 942-ஆக அதிகரித்திருப்பதை நாஷோ அறிந்தபோது, “கடைசியில், அல்பேனியாவிலும் ஒரு திரள் கூட்டம் உருவாகியுள்ளது!” என்று சொன்னார். அதற்குச் சில நாட்களுக்குப் பிறகு அவர் இறந்துவிட்டார், அவருடைய பூமிக்குரிய சேவை முடிவுக்கு வந்தது.
ட்ராஸிரா—அராஜகக் காலம்
1997-க்குள், எங்கு பார்த்தாலும் மக்களைச் சுரண்டிப் பிழைப்பதும், லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடின. அல்பேனியர் பலர் தங்களிடமிருந்த எல்லாவற்றையும் விற்று, மொத்த பணத்தையும் திடீர் பணக்காரர் ஆகும் திட்டங்களில் முதலீடு செய்தார்கள். அவர்களுடைய முதலீடு எல்லாம் நஷ்டமானபோது, கோபத்தில் கொதித்தெழுந்த குடிமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க தெருவில் இறங்கினார்கள்.
சரியாக அந்தச் சமயத்தில், விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, உயர்பதவி வகிக்கும் அதிகாரியிடம் வேலை செய்துவந்த ஒரு சகோதரி, முதல் மந்திரி பதவி விலக்கப் போவதைப் பற்றிய செய்தியைச் சகோதரர்களிடம் தெரிவித்தார். கட்டுக்கடங்காத வன்முறை வெடிக்கப் போவதைப் பற்றியும் அவர் கேள்விப்பட்டிருந்தார். சகோதரர்கள் சீக்கிரம் வீடுகளுக்குத் திரும்புவதற்காக அந்த விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிகள் குறைக்கப்பட்டன. நிகழ்ச்சிகள் முடிந்து இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு, நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உண்மையில் என்ன நடக்கிறதென யாருக்குமே தெரியாதிருந்தது. எக்கச்சக்கமான வதந்திகள் பரவின. வன்முறைக்குக் காரணம், அயல் நாடுகளின் தலையீடா அல்லது உள்ளூர் அரசியலா? திடீர் பணக்காரராகும் திட்டங்கள் தவிடுபொடியாயின; பெரும்பாலோர் தாங்கள் முதலீடு செய்த எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாய் நின்றார்கள். வ்லோராவில் கலகம் வெடித்தது. தேசிய படைக்கலச்சாலையை உடைத்து, அங்குள்ள எல்லா ஆயுதங்களையும் போர்த் தளவாடங்களையும் மக்கள் சூறையாடினார்கள். நடப்பவற்றைப் பற்றிய செய்தி ஒலிபரப்பாகும் வேளையில் அடுத்தடுத்து ஒவ்வொரு நகரமும் வன்முறை களத்தில் இறங்கின. நாடே கூச்சலிலும் குழப்பத்திலும் மூழ்கிக் கிடந்தது, நிலைமை போலீஸாரின் கட்டுப்பாட்டை மீறியது. ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியும் அராஜகமும் அல்பேனியாவைக் கூறுபோட்டன.
அயல் நாடுகளிலிருந்து வந்து அல்பேனியாவில் முழுநேர ஊழியம் செய்துகொண்டிருந்த 125 பேரில் பெரும்பாலோர் பாதுகாப்பு கருதி டிரானாவுக்குச் சென்றார்கள். நடந்துகொண்டிருந்த காரியங்களுக்கு அயல் நாட்டவரே காரணமென அல்பேனியர் பலர் குற்றம்சாட்டினார்கள்; எனவே, அயல் நாட்டு பயனியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது விவேகமானதாய் இருந்தது. விமானநிலையம் அடைக்கப்பட்டுவிட்டதால், இத்தாலியைச் சேர்ந்த பயனியர்கள் சிலர் டுரஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்; ஆனால், அந்தத் துறைமுகத்தை அங்கிருந்த ஆயுதமேந்திய ஆட்கள் கைப்பற்றியிருந்தார்கள். அடுத்த 12 மணிநேரம் பதட்டத்துடன் காத்திருந்த பிறகு, தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்லும் ஒரு படகில் ஏறிக்கொண்டார்கள்.
நாட்டு ஆலோசனைக் குழுவினர் நாட்டின் பல்வேறு பகுதியிலுள்ள சகோதரர்களுடன் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டார்கள். விடியற்காலையில் தெருக்களில் அச்சமேற்படுத்தும் அமைதி நிலவியது. மதியத்திற்குள்ளாக ஆரம்பமாகும் துப்பாக்கி சூடு, விடிய விடிய ஓயாமல் விடியல்வரை தொடர்ந்தது. விமானங்களைத் தாக்கும் பீரங்கி குண்டுகளைச் சிலர் வைத்திருந்தார்கள். அந்தப் போராட்டம் ட்ராஸிரா, அதாவது கொந்தளிப்பு என்றறியப்பட்டது.
‘யெகோவாவின் பெயருக்குப் புகழ்’
பராட்டில், நடுநிலைமை வகித்ததால் சிறையிலடைக்கப்பட்ட ஆறு சகோதரர்களில் ஒருவரான ஆர்பென் மேர்கோ இவ்வாறு சொல்கிறார்: “என்னுடைய சிறையறையின் சுவற்றில் சிறிய துவாரம் இருந்தது. அடுத்த அறையிலிருந்த ஒருவர் என்னைப் பற்றி விசாரித்தார்.” அவருக்கு ஆர்பென் பல வாரங்களுக்குச் சத்தியத்தைப் பற்றிச் சொன்னார். திடீரென அந்த நபரின் சத்தம் கேட்பது நின்றுவிட்டது.
ஆர்பென் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பிறகு ஒருநாள், ஒரு வாலிபன் அவருடைய வீட்டுக்கு வந்தான். அவனுடைய முகத்தைப் பார்த்து அவனை ஆர்பெனால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை, ஆனால் அவனுடைய குரலை வைத்து அவனை அடையாளம் கண்டுகொண்டார்; அவன், சிறையில் அவருடைய பக்கத்து அறையிலிருந்த நபர்தான்.
ஆர்பெனிடம் ஓர் ஒலிபெருக்கியைக் கொடுத்தபடி, “இதை உங்களிடம் கொடுப்பதற்கே வந்தேன்” என்று சொன்னான்.
பிறகு, “ட்ராஸிராவின் சமயத்தில் உங்கள் ராஜ்ய மன்றத்திலிருந்த இந்த ஒலிபெருக்கியை நான் திருடிச் சென்றேன். ஆனால், சிறையிலிருந்தபோது நீங்கள் சொன்னவை என் இதயத்தைத் தொட்டன. கடவுளுக்கு முன்பாகச் சுத்தமான மனசாட்சியோடு இருக்க விரும்புகிறேன்; அதனால், இதைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போக வந்தேன்” என்றான்.
உத்தமத்தைக் காத்துக்கொண்ட இளைஞர்களுக்காக நாஷோ டோரி கடைசியில் சொன்ன வார்த்தைகளை ஆர்பெனால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை; “அது, யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் அமையும்” என்று அவர் சொல்லியிருந்தார்.
யெகோவாவின் மந்தையைப் பராமரித்தல்
அயல் நாடுகளிலிருந்து வந்திருந்த மூப்பர்கள் திரும்பிச் சென்றுவிட்டதால் பெரும்பாலான சபைகளையும் பெரிய தொகுதிகளையும் கவனித்துக்கொள்ள 19, 20 வயதுள்ள உதவி ஊழியர்களே இருந்தார்கள். ஒருநாள், தங்கள் உயிரைப் பணயம் வைத்து இவர்களில் மூன்று இளம் சகோதரர்கள் வ்லோராவிலிருந்து டிரானாவுக்குப் பயணம் செய்தார்கள். உணவு பற்றாக்குறை இருப்பதை அறிந்திருந்த நாட்டு ஆலோசனைக் குழுவினர் அந்தச் சகோதரர்களிடம் முக்கியமாக ஏதேனும் பொருள் உதவி தேவைப்படுகிறதா என்று கேட்டார்கள்.
“எங்களிடம் வெளி ஊழிய அறிக்கை படிவங்கள் இல்லை” என்று அந்த இளம் சகோதரர்கள் பதிலளித்தார்கள். பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உண்மையுள்ள முதிர்ந்த கிறிஸ்தவர்களைப் போலவே அவர்களும் சரீர தேவைகளைவிட ஆன்மீகத் தேவைகளைக் குறித்து அதிக கவலைப்பட்டார்கள். பிறகு அவர்கள், பயமும் நிச்சயமுமில்லாத நிலை நிலவுவதால் பலர் நற்செய்திக்குச் சாதகமாகப் பிரதிபலிப்பதாகச் சொன்னார்கள்.
நினைவுநாள் அனுசரிப்புக்குப் பிறகு சீக்கிரத்திலேயே ஆலோசனைக் குழுவினரின் அலுவலகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “நாங்கள் கூக்கஸ் நகரிலுள்ள உங்கள் சகோதரிகள். பயனியர்கள் சென்றதிலிருந்து நாங்கள் தனியாகக் கூட்டங்களை நடத்தி வருகிறோம்” என்று அவர்களில் ஒருவர் சொன்னார்.
கொந்தளிப்பின் காரணமாக, டிரானாவிலிருந்த சகோதரர்களுக்கு கூக்கஸிலிருந்த பிரஸ்தாபிகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், ஞானஸ்நானம் பெறாத ஏழு பிரஸ்தாபிகள் இரண்டு இடங்களில் நினைவுநாள் அனுசரிப்பை நடத்தியிருந்தார்கள். அந்த அனுசரிப்பை தாங்கள் சரிவர நடத்த முடியாததைக் குறித்துக் கவலைப்பட்டாலும், இரண்டு இடங்களிலும் மொத்தம் 19 பேர் கலந்துகொண்டதாகச் சந்தோஷத்துடன் அறிக்கை செய்தார்கள். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 1997-ல் ஊரடங்கு உத்தரவும், கஷ்டமான சூழ்நிலைகளும் இருந்தபோதிலும் அல்பேனியா முழுவதிலும் நினைவுநாள் அனுசரிப்பில் 3,154 பேர் கலந்துகொண்டார்கள். அராஜகம் நிலவியபோதிலும், பிரஸ்தாபிகள் தொடர்ந்து ஊழியம் செய்து வந்தார்கள், எச்சரிக்கையோடிருந்து ஆறுதலையும் அளித்து வந்தார்கள்.
கைரோகாஸ்டரில் இருந்த சகோதரர்களுக்கு உணவும் பிரசுரங்களும் தேவை என்பதை நாட்டு ஆலோசனைக் குழுவினர் அறிந்தபோது, அங்கு ஒரு டிரக் நிறையப் பொருள்களை அனுப்புவது பாதுகாப்பாய் இருக்குமா என்பதைக் குறித்துக் கலந்தாலோசித்தார்கள். அப்படி அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், செய்தி ஒலிபரப்பாளர் ஒருவர் அந்தச் சகோதரர்களைக் காண வந்திருக்கிறார் என்றும் அவரிடமிருந்து ஏதேனும் பயனுள்ள தகவல் கிடைக்கலாம் என்றும் ஒரு சகோதரி வந்து சொன்னார்.
அந்தக் குழுவினர் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியாமலேயே அந்தச் செய்தி ஒலிபரப்பாளர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் என்ன செய்தாலும், நாளைக்குத் தெற்குப் பக்கம் செல்லாதீர்கள். டேபேலேன் நகரில் பயங்கரமான ஏதோவொன்று நடக்கப்போவதாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்கிறது.” கைரோகாஸ்டருக்குப் போக வேண்டிய டிரக் டேபேலேன் வழியாகச் செல்ல வேண்டியிருந்ததால் சகோதரர்கள் அந்தப் பயணத்தை ரத்துசெய்ய தீர்மானித்தார்கள்.
மறுநாள், காலை 11 மணிக்குப் பிறகு ஒரு விசேஷ செய்தி அறிக்கை வெளியானது; அதில், டேபேலேனில் வன்முறையும் கைகலப்பும் இரத்தம் சொட்டுமளவுக்கு மிகப் பயங்கரமாக நிகழ்ந்ததாகவும், நகரிலிருந்த பாலம் தகர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அன்று அங்கு போகாதபடி நம்முடைய சகோதரர்களைக் காப்பாற்றியதற்காக அவர்கள் யெகோவாவுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருந்தார்கள்!
பல வாரங்களுக்கு, பெத்தேல் குடும்பத்தார் விடிய விடிய துப்பாக்கிகளின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்; இயந்திரத் துப்பாக்கியின் முழக்கத்திற்கும் வெடிகுண்டு சத்தத்திற்கும் இடையே அவர்கள் பெரும்பாலும் காலை வழிபாட்டை நடத்தினார்கள். கண்மூடித்தனமாக வானை நோக்கி துப்பாக்கிகள் முழங்கின, எதிர்பாராமல் துப்பாக்கி குண்டுகளுக்குப் பலியாகும் அபாயம் எப்போதுமே இருந்தது. பாதுகாப்பு கருதி பெத்தேல் குடும்பத்தார் உள்ளேயே இருந்தார்கள்; மொழிபெயர்ப்பாளர்கள் ஜன்னலை விட்டுத் தள்ளி தரையில் உட்கார்ந்து வேலை செய்தார்கள்.
ஏப்ரல் 1997-ல் நாட்டில் ஒழுங்கை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் அனுப்பி வைத்த 7,000 படைவீரர்கள் வந்தார்கள். ஆகஸ்ட் மாதத்திற்குள் ஐ.நா. படைகள் அல்பேனியாவை விட்டு வெளியேறின; அப்போது, ஒரு மாவட்ட மாநாட்டை சகோதரர்கள் ஏற்பாடு செய்ய வாய்ப்பு கிடைத்தது. பிரஸ்தாபிகளுக்கு ஒரே குஷியாகிவிட்டது; ஏனென்றால், பல மாதங்களுக்கு அவர்கள் சிறிய தொகுதிகளாக மட்டுமே கூடிவர முடிந்திருந்தது.
சகோதரர்கள் வாடகைக்கு எடுத்திருந்த பஸ்களில் மாநாட்டுக்குச் சென்றபோது ஆயுதமேந்திய கொள்ளைக்காரர்கள் சில பஸ்ஸுகளைத் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால், பயணிகள் யெகோவாவின் சாட்சிகள் என்பதை அறிந்தபோது, “நீங்கள் ரொம்பவே வித்தியாசமானவர்கள்! உங்களுக்கு நாங்கள் தீங்கு செய்ய முடியாது” என்று சொன்னார்கள்.
அல்பேனியாவில் நடைபெற்றுவந்த ஊழியத்தை ட்ராஸிரா எப்படிப் பாதித்தது? அது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாய் இருக்கவில்லை; மாறாக, அந்தப் பயங்கரமான நிலையாலும் கவலையாலும் அநேகர் ஆன்மீக விஷயங்களில் அதிக ஆர்வப் பசியோடிருப்பதுபோல் தெரிந்தது. அதனால், 15 மாதங்களுக்குள் 500 புதிய பிரஸ்தாபிகள் ஊழியத்தில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள்; இவ்வாறு, பிரஸ்தாபிகளின் மொத்த எண்ணிக்கை 1,500-ஐத் தாண்டியது.
காஸாவோ கவனத்தை ஈர்க்கிறது
ட்ராஸிராவுக்குப் பிறகு, குண்டுகளின் ஓசை அடங்கிவிட்டதாகத் தோன்றியது, சபைகள் தொடர்ந்து வளர ஆரம்பித்தன. ஆனால், அண்டை நாடான காஸாவோவில் பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்தன. அங்கு நடக்கும் போரின் பாதிப்பை அல்பேனியாவில் உணர முடிந்தது; ஏனெனில், அலைபோல் அகதிகள் அல்பேனியாவின் எல்லைக்குள் புகுந்தார்கள். அல்பேனியாவிலிருந்த பிரஸ்தாபிகள் காலம் தாழ்த்தாமல் அந்த அகதிகளுக்கு நம்பிக்கையின் செய்தியை அறிவித்து, ஆறுதல் தரும் பிரசுரங்களை அளித்தார்கள். 22 யெகோவாவின் சாட்சிகளும் அவர்களுடைய சிறு பிள்ளைகளும் இருந்த தொகுதியையும் அவர்கள் நன்கு கவனித்துக்கொண்டார்கள்.
ஆகஸ்ட் மாதத்தில் போர் முடிவடைந்தபோது காஸாவோ சகோதரர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள்; ஆனால், தனியாகச் செல்லவில்லை. அல்பேனியாவையும் இத்தாலியையும் சேர்ந்த சகோதரர்களுடன் சென்றார்கள்; அவர்களுள், தேவைப்படும் ஆன்மீக உதவியை அளிப்பதற்காகப் பத்து விசேஷ பயனியர்கள் இருந்தார்கள். 1999-ஆம் ஊழிய ஆண்டின் முடிவில், அல்பேனியாவில் 1,805 பிரஸ்தாபிகளும் காஸாவோவில் 40 பிரஸ்தாபிகளும் இருந்தார்கள்.
ஆன்மீக உறுதி அதிகரித்தது
“நாம் நிறையப் பிரசுரங்களை மொழிபெயர்ப்பதில் எனக்குச் சந்தோஷம்தான்; ஆனால், நம்முடைய விசுவாசத்தைக் கட்டுவதற்கு உதவும் தரமான புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள்தான் நமக்கு உண்மையில் தேவை!” என்று நாஷோ டோரி இறப்பதற்கு முன்பு சொன்னார். அவர் இறந்து மூன்றே வருடங்களுக்குப் பிறகு, 1999-ல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்—புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை அல்பேனியன் மொழியில் மொழிபெயர்க்க ஆளும் குழுவினர் அங்கீகாரம் அளித்தார்கள்.
2000-ல் நடந்த மாவட்ட மாநாட்டில் அல்பேனியருக்கு ஓர் ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது; ஆம், அல்பேனியன் மொழியில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்—புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் வெளியிடப்பட்டது! கடினமாய் உழைத்த மொழிபெயர்ப்பு குழுவினர் தங்கள் மனதையும் இருதயத்தையும் ஈடுபடுத்தி ஒரு வருடத்திற்குள்ளாகவே அந்த பைபிளை மொழிபெயர்த்து முடிந்திருந்தார்கள். கம்யூனிஸ கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது ஒழுங்கான பயனியராகச் சேவை செய்பவருமான ஒருவர் இவ்வாறு சொன்னார்: “அது அருமையிலும் அருமை! இந்த மொழிபெயர்ப்பைப் படித்த பிறகுதான், அதன் உரைநடை, கவிதை, அழகான வருணனை ஆகியவற்றை வைத்து பைபிள் எவ்வளவு அருமையான புத்தகம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. இயேசு எப்படி அற்புதங்களைச் செய்தார், எப்படிக் கண்டிக்கப்பட்டார், கேலிசெய்யப்பட்டார் ஆகியவற்றை வாசித்தபோது முன்னொருபோதும் உணர்ந்திராத மனவேதனையை அனுபவித்தேன். மனதை நெகிழ வைக்கும் ஒவ்வொரு பதிவையும் தெள்ளத் தெளிவாக என் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்த முடிகிறது!”
இதற்குள்ளாக, அல்பேனியாவில் 2,200 பிரஸ்தாபிகள் இருந்தார்கள், பெத்தேல் குடும்பத்தார் 40 பேராக அதிகரித்திருந்தார்கள். அடுக்குமாடிக் கட்டிடங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தன; ஆனாலும் அதிகமான அறைகள் தேவைப்பட்டன. எனவே, டிரானாவின் புறநகர் பகுதியில் முஸேஸ் என்ற இடத்தில் ஏழு ஏக்கர் நிலத்தை வாங்க ஆளும் குழுவினர் அனுமதி அளித்தார்கள். அல்பேனியாவிலும் காஸாவோவிலும் அதிகரித்துவரும் ஊழிய நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கு உதவியாக, 2000-ஆம் ஆண்டு முதற்கொண்டு நாட்டு ஆலோசனைக் குழுவினர் கிளை அலுவலகக் குழுவினராகச் செயல்பட ஆரம்பித்தார்கள்.
செப்டம்பர் 2003-ல் புதிய கிளை அலுவலக வளாகத்தின் கட்டுமானப் பணி தொடங்கியபோது அல்பேனியாவில் 3,122 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தார்கள். அதே சமயத்தில், அல்பேனியன் மொழியில் எபிரெய வேதாகமத்தின் மொழிபெயர்ப்பும் மும்முரமாய் நடைபெற்று வந்தது. வேகமான முன்னேற்றம் காணப்பட்டது ஊழியத்தில் மட்டுமல்ல; பிரஸ்தாபிகளும்கூட பாராட்டத்தக்க விதத்தில் ஆன்மீக முன்னேற்றம் செய்தார்கள். ஆகஸ்ட் 2004-ல் அல்பேனியாவில் நடைபெற்ற ஊழியப் பயிற்சிப் பள்ளியின் முதல் வகுப்பில் கலந்துகொண்ட 20 இளம் ஆண்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு ட்ராஸிராவின் சமயத்தில் பருவ வயதினராகச் சபைகளைக் கவனித்துக்கொண்டார்கள். தற்போது தேவராஜ்ய காரியங்களில் கூடுதல் பயிற்சி பெற்றபோது எவ்வளவாய் ஆனந்தப்பட்டார்கள்!
‘பிசாசு கோபமாக இருந்தான்’
“தங்களையே அழித்துக்கொள்ள மக்களுக்கு யெகோவா கற்பிக்கிறார்” என்பது தலைப்புச் செய்தியாக பிப்ரவரி 2005 தேதியிட்ட செய்தித்தாளில் வெளிவந்தது. டிவியிலும் செய்தித்தாளிலும் வந்த செய்தி அறிக்கைகள், யெகோவாவின் சாட்சியாக இருந்த ஒரு பருவ வயதுப் பெண் தற்கொலை செய்துகொண்டதாகப் பொய் வதந்திகளைப் பரப்பின. சொல்லப்போனால், அந்தப் பெண் பைபிள் படிக்கவும் இல்லை, கூட்டங்களுக்கு வந்ததும் இல்லை. ஆனாலும், இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி முற்றும் முழுமையாகத் தாக்க எதிரிகள் நினைத்தார்கள்.
யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளைப் பள்ளியில் ஆசிரியர்கள் கேலிகிண்டல் செய்தார்கள். சகோதரர்கள் தங்கள் வேலைகளை இழந்தார்கள். நம்முடைய ஊழியம் தடைசெய்யப்பட வேண்டுமென மக்கள் வற்புறுத்தினார்கள். மீடியாவிடம் நியாயத்தை எடுத்துச்சொல்ல சகோதரர்கள் முயற்சி செய்தபோதிலும் மேலும் மோசமான செய்திகளே அறிக்கை செய்யப்பட்டன.
இந்தப் புதிய தாக்குதலைச் சமாளிக்க யெகோவாவின் ஊழியர்களுக்கு வழிநடத்துதலும் ஆதரவும் தேவை என்பது தெளிவாகத் தெரிந்தது. எனவே, அப்பட்டமான பொய்களை அம்பலப்படுத்துவதற்குத் தொடர்ந்து சத்தியத்தை அறிவிப்பது எவ்வளவு முக்கியமென விளக்க ஒரு விசேஷப் பேச்சுக்குக் கிளை அலுவலகம் ஏற்பாடு செய்தது. மக்களிடம் நியாயத்தை எடுத்துரைக்கும்படியும் மனிதர்களைப் பார்த்து பயந்துவிடாதிருக்கும்படியும் சகோதரர்கள் உற்சாகப்படுத்தப்பட்டார்கள். கடந்த சில வருடங்களில் யெகோவாவின் சாட்சிகளின் எண்ணிக்கை வியப்பூட்டும் விதத்தில் அதிகரித்திருப்பதைப் பார்க்கையில், அவர்கள் தங்களையே அழித்துக்கொண்டிருந்தால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டிருக்காதென நல்மனமுள்ளவர்களிடம் சுட்டிக்காட்ட உற்சாகப்படுத்தப்பட்டார்கள். இத்தகைய தாக்குதல் ஒன்றும் புதிதல்ல. 1960-களில் ஸ்பீரோ வ்ரூஹோ தற்கொலை செய்துகொண்டதாகப் பொய்யான அறிக்கைகள் வெளிவந்தது சகோதரர்களுக்கு நினைப்பூட்டப்பட்டது. அதைப் போலவே தற்போதைய அறிக்கைகளும் அப்பட்டமான பொய்யென நிரூபிக்கப்படவிருந்தன; அது அப்படியே நடந்தது!
சில மாதங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்தில், அல்பேனியாவிலிருந்தும் காஸாவோவிலிருந்தும் 4,675 பேர் வந்திருந்த மாவட்ட மாநாட்டில் ஆளும் குழுவைச் சேர்ந்த டேவிட் ஸ்ப்லேன் கலந்துகொண்டார். சகோதரர் ஸ்ப்லேன் அல்பேனியன் மொழியில் பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு முழு பைபிளை வெளியிட்டபோது கூடிவந்தவர்களுக்குச் சந்தோஷம் தாளவில்லை!
முதிர்ந்த சகோதரர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நம் ஊழியத்தைத் தடுத்துநிறுத்த சாத்தான் கடினமாய் முயற்சி செய்ததில் ஆச்சரியமேதுமில்லை. யெகோவாவின் மக்களுக்கு எக்கச்சக்கமான நல்ல காரியங்கள் நடந்ததன் காரணமாக அவன் கோபமாக இருந்தான்.”
மீடியாக்கள் பொய்யான அறிக்கைகளைப் பரப்பி வந்தபோதிலும் அல்பேனியாவிலுள்ள கடவுளுடைய ஊழியர்கள் மேலும் மேலும் ஆன்மீக ரீதியில் பலப்பட்டு வந்தார்கள். அந்த அறிக்கைகள் பொய்யானவை என்பதைத் தெரிந்துகொண்ட, சத்தியத்தில் இல்லாத அநேக கணவர்களும் உறவினர்களும் பைபிளைப் படிக்க ஆரம்பித்து பிரஸ்தாபிகள் ஆனார்கள். சாத்தானுடைய மிக மூர்க்கத்தனமான தாக்குதல்களின் மத்தியிலும் யெகோவாவின் சித்தம் நிறைவேற்றமடைந்து வந்தது. பெத்தேல் குடும்பத்தார் புதிய கிளை அலுவலகத்திற்குக் குடிபெயர்ந்தார்கள்; ஊழியப் பயிற்சிப் பள்ளியின் இரண்டாவது வகுப்பு நடைபெற ஆரம்பித்தது.
கிளை அலுவலக அர்ப்பணம்
ஜூன் 2006-ல் ஆளும் குழுவைச் சேர்ந்த தியோடர் ஜாரஸும் கெரட் லாஷும் புதிய கிளை அலுவலக வளாகத்தின் அர்ப்பண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்; அதில், 32 நாடுகளைச் சேர்ந்த 350 பேர் கலந்துகொண்டார்கள். அந்த நிகழ்ச்சிக்கு சோடிர் ட்சேசியும் வந்திருந்தார்; அவர், 1940-களில் எலெக்ட்ரிக் ஷாக் மூலம் துன்புறுத்தப்பட்டிருந்தார். தனது 80 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அவர் தொடர்ந்து சந்தோஷமாகச் சேவை செய்து வருகிறார்.
“இந்த நாளைப் பற்றி நான் கனவு மட்டுமே கண்டிருந்தேன்” என்று ஃப்ரோசினா ஜேகா சொன்னார்; இவர், விவரிக்க இயலாத கஷ்டங்களைப் பல வருடங்களாகச் சகித்து இன்னமும் கடவுளுக்கு உண்மையாகச் சேவை செய்து வருகிறார். ஜானி கோமினோவை இழந்து தனிமரமாய் நிற்கும் அவருடைய மனைவி போலிக்சேனி கோமினோ ஒழுங்கான பயனியர்களாகச் சேவை செய்கிற தன்னுடைய மகள்களையும் பேத்தியையும் பற்றிச் சொல்ல அங்கிருந்தார். அந்த மாநாட்டில் வாசில் ஜோகாவும் இருந்தார்; பல வருட கால துன்பத்தால் அவருக்குக் கூன்விழுந்து போயிருந்தது. லேயோனிதா போப்பைப் போய்ச் சந்தித்ததையும் யாருக்கும் தெரியாமல் 1960-ல் ஞானஸ்நானம் பெற்றதையும் பற்றிச் சொல்லுகையில் அவருடைய கண்களில் கண்ணீர் முட்டி நின்றது.
டிரானாவிலிருந்த பழைய கிளை அலுவலகம் ராஜ்ய மன்ற வளாகமாகவும் 14 மிஷனரிகளின் மிஷனரி இல்லமாகவும் மாற்றப்பட்டது. நடந்து முடிந்த ஆறு ஊழியப் பயிற்சிப் பள்ளி வகுப்புகள், உண்மையும் சுயதியாகமும் மிக்க விசேஷ பயனியர்களை உருவாக்கியிருக்கின்றன; அந்த பயனியர்கள் அல்பேனியாவில் செய்யப்படுகிற ஊழியத்திற்கு மிகப் பெரிய சொத்தாக இருக்கிறார்கள். அல்பேனியாவைச் சேர்ந்த 950-க்கும் அதிகமான ஒழுங்கான பயனியர்களும் விசேஷ பயனியர்களும் நற்செய்தியை அறிவிப்பதில் அதே போன்ற பக்திவைராக்கியத்தைக் காட்டுகிறார்கள்.
அல்பேனியாவிலுள்ள சாட்சிகளின் எதிர்காலம்
அல்பேனியாவிலுள்ள நம்முடைய சகோதர சகோதரிகள் தங்கள் தாய்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் அதிகம் போற்றுகிறார்கள். இந்த நாட்டில் யெகோவாவின் ஊழியம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அமைப்பு சார்ந்த பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்குப் பயிற்றுவிக்கப்பட்ட ஆர்வமும் திறமையுமுள்ள ஆண்களைத் தவிர, நற்செய்தியைப் ‘பிரசித்தப்படுத்துகிற பெண்களின் கூட்டம் மிகுதியாய்’ இருக்கிறது.—சங். 68:11, NW.
கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட பின்வரும் வார்த்தைகளின் உண்மைத்தன்மைக்கு அல்பேனியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் உயிருள்ள அத்தாட்சியாய் இருக்கிறார்கள்: “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஏசா. 54:17) யெகோவா காட்டும் அளவற்ற கருணையாலும் அவர் தரும் பலத்தாலும், சர்வாதிபத்திய ஆட்சி, துன்புறுத்தல், ஒதுக்கப்பட்ட நிலை, மீடியாக்களின் பொய்யான வதந்திகள், சொந்தப் பிரச்சினைகள் ஆகியவற்றையெல்லாம் சமாளித்து அவர்கள் உறுதியாய் நிலைத்திருக்கிறார்கள்.
கடவுளுடைய பற்றுமாறாத அன்பும் ஆசீர்வாதமும் தங்களுக்கு நிச்சயம் உண்டு என்ற உறுதியோடு அல்பேனியாவிலுள்ள யெகோவாவின் மக்கள் எதிர்காலத்தை நோக்கியிருக்கிறார்கள். பிரச்சினைகள் வந்தபோதிலும், தங்கள் பரலோகத் தகப்பனின் இருதயத்தைக் குளிரப் பண்ணுவதற்குக் கிடைத்த பாக்கியத்தையும், தங்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையையும் குறித்து அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். (நீதி. 27:11; எபி. 12:1, 2) அல்பேனியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரத்தில் ஒரு முக்கிய விஷயம் உண்மையென திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டிருக்கிறது; அது: பெரியவர்களும்சரி சிறியவர்களும்சரி, யெகோவாவின் உண்மை ஊழியர்கள் அனைவரும் செய்கிற தியாகங்கள் பெரியதோ சிறியதோ அவற்றை அவர் ஒருபோதும் மறப்பதில்லை.—எபி. 6:10; 13:16.
[பக்கம் 130-ன் சிறுகுறிப்பு]
இப்புத்தகத்தின் தலைப்பு முதலில் த கிட்டார் ஆஃப் காட் என மொழிபெயர்க்கப்பட்டது
[பக்கம் 140-ன் சிறுகுறிப்பு]
“நீ ஒரு கிறிஸ்தவனாக இருந்திருந்தால் பாதிரிகளைப் போல போரிட்டிருப்பாய்!”
[பக்கம் 189-ன் சிறுகுறிப்பு]
“எங்களிடம் வெளி ஊழிய அறிக்கை படிவங்கள் இல்லை”
[பக்கம் 132-ன் பெட்டி/படம்]
அல்பேனியா—ஒரு கண்ணோட்டம்
நிலம்
அல்பேனியா தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது; அதன் தெற்கே கிரீஸும், மேற்கே பூட்ஸ் வடிவமுள்ள இத்தாலியின் குதிங்கால் போல் உள்ள அப்யூல்யாவும் உள்ளன. அதன் பரப்பளவு 28,750 சதுர கிலோமீட்டர்; ஏட்ரியாடிக் கடலிலிருந்து அயோனியன் கடல்வரை 362 கிலோமீட்டர் தூரத்திற்கு அதன் கடற்கரை நீண்டுகிடக்கிறது. பின்னணியில் உயரமான மலைகள் கம்பீரமாய் நிற்க, முன்னணியில் வெண்மணல் பரப்பிய கடற்கரையும் நீல-பச்சையில் மிளிரும் தண்ணீரும் அல்பேனியாவின் கடலோரப் பகுதிக்கு அழகு சேர்கின்றன. இந்தக் கடலோரப் பகுதி வ்லோராமுதல் சராண்டாவரை பரந்துகிடக்கிறது. அல்பேனியாவின் வட பகுதியும் உள்நாட்டுப் பகுதியும் கூரிய முனைகளுடைய மலைத்தொடர்களால் நிறைந்திருக்கின்றன; ஆனால் தென்மேற்குப் பகுதியில், விவசாயத்திற்குப் பயன்படும் வளமான தாழ்நிலங்கள் உள்ளன.
மக்கள்
இங்கே 36,00,000 பேர் குடியிருப்பதாகக் கணக்கிடப்படுகிறது; அவர்களில் பெரும்பாலோர் அல்பேனிய இனத்தவர்கள்; ரோமா, கிரேக்கர், செர்பியன் இனத் தொகுதியினரும் குறைவான எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.
சீதோஷ்ணம்
தென் பகுதியிலுள்ள கடற்கரை சமபூமியில், கோடைக்காலத்தில் சராசரியாக 26 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை காணப்படுகிறது. ஆனால், வடக்கே உள்ள டிபர் மலைகளில் குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 25 டிகிரி செல்ஷியஸுக்கும் கீழே சென்றுவிடுகிறது.
உணவு
பசலைக்கீரை, பாலாடைக் கட்டி, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றையோ பல்வேறு காய்கறிகளையோ இறைச்சியையோ மாவினுள் வைத்து வேக வைத்துத் தயாரிக்கப்படும் மொரமொரப்பான உணவுப் பதார்த்தம் ப்யூரெக் என்றழைக்கப்படுகிறது. சதகுப்பை மூலிகை கலந்த கெட்டித் தயிரில், கோழிக்கறி அல்லது ஆட்டுக் கறி சேர்த்து வேக வைக்கப்படும் உணவு டாவா ஏ கோசிட் என்றழைக்கப்படுகிறது. பொதுவாக அல்பேனியர் சூப்பையும், ஸ்ட்யூவையும் விரும்புவதால் கரண்டியில் சாப்பிடப் பிரியப்படுகிறார்கள். பெரும்பாலும், விருந்துகளில் ஆட்டுக்கறி சமைக்கப்பட்டால், முக்கிய விருந்தினருக்கு அதன் தலையைப் பரிமாறுகிறார்கள். அவர்கள் செய்கிற இனிப்பு வகைகளில் (வலப்பக்க படத்திலுள்ள) பாக்லவா, காடைஃப் ஆகியவை அடங்கும்; வேக வைக்கப்பட்ட அடையின்மீது சர்க்கரைப் பாகோ தேனோ ஊற்றி, கொட்டைப் பருப்புகள் தூவப்படும் பலகாரங்களே அவை. ரொட்டி, அல்பேனியரின் முக்கிய உணவாகும். நீங்கள் சாப்பிட்டுவிட்டீர்கள் என்பதை யாரிடமாவது சொல்ல விரும்பினால், “ஹங்ரா பூக்” என்று சொல்லுங்கள்; அதற்கு, “நான் ரொட்டி சாப்பிட்டேன்” என்று அர்த்தம்.
[பக்கம் 134-ன் பெட்டி/ படங்கள்]
ஆரம்பகால மாவட்ட மாநாடுகள்
அமெரிக்காவில் உள்ள நியு இங்கிலாந்தில் வசித்த அல்பேனியர், ஞாயிற்றுக்கிழமைகளில் அல்பேனியன் மொழியில் பொதுப் பேச்சுகளைக் கேட்டதோடு, அங்கிருந்த ஆங்கில அல்லது கிரேக்க மொழி சபைகளுடன் கூட்டுறவு வைத்திருந்தார்கள். 1920-லிருந்து 1940 வரையான ஆண்டுகளில் கிரேக்க மொழியில் நடைபெற்ற மாவட்ட மாநாடுகளில் அவர்கள் கலந்துகொண்டார்கள். என்றாலும், அவர்கள் “அல்பேனிய பைபிள் மாணாக்கரது மூன்று நாள் மாநாடு” என தங்கள் மொழியிலிருந்த பேட்ஜ் கார்டை அணிவதில் சந்தோஷப்பட்டார்கள்.
[படங்கள்]
போஸ்டனில் 1920-ன் பிற்பகுதியில் நடந்த மாவட்ட மாநாட்டில் பேட்ஜை (வலப்பக்கம்) அணிந்திருக்கும் அல்பேனிய சகோதரர்கள் (கீழே)
[பக்கம் 151, 152-ன் பெட்டி/ படங்கள்]
‘யெகோவா எங்களை ஒருபோதும் கைவிடவில்லை!’
ஃப்ரோசினா ஜேகா
பிறப்பு 1926
ஞானஸ்நானம் 1946
பின்னணிக் குறிப்பு பருவ வயதில் அவர் சத்தியத்தைக் கற்றார். பெற்றோர் எதிர்த்தபோதிலும், அதிகாரிகள் தனிமைப்படுத்தியபோதிலும், யெகோவாவோடும் அவரது அமைப்போடும் எப்போதும் நெருங்கியிருந்தார். அவர் 2007-ல் மரிக்கும்வரை உண்மையுள்ளவராய் இருந்தார்.
◼ ஃப்ரோசினா தன் அண்ணன்களிடமிருந்து 1940-களில் சத்தியத்தைக் கற்றார். சத்தியத்தில் இல்லாத அவருடைய அப்பாவும் அம்மாவும் ஏற்பாடு செய்த ஒருவரை அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், அவரை வீட்டைவிட்டே துரத்திவிட்டார்கள். கோலே ஃப்லோகோ என்ற ஒரு சகோதரர் அவரைத் தன் குடும்பத்தாருடன் தங்க வைத்து தன் மகள்போல் கவனித்துக்கொண்டார்.
ஃப்ரோசினா இவ்வாறு சொல்கிறார்: “ஒருசமயம், நான் ஓட்டுப்போட மறுத்ததால் கைதுசெய்யப்பட்டேன். ஓர் அறையில் நான் தனியாக இருந்தபோது கிட்டத்தட்ட 30 அதிகாரிகள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். ‘நாங்கள் உன்னை என்ன செய்யப் போகிறோமென உனக்குத் தெரியுமா?’ என்று அவர்களில் ஒருவர் கத்தினார். யெகோவா என்னுடன் இருப்பதாக உணர்ந்ததால் அவரிடம், ‘சர்வலோகப் பேரரசராகிய யெகோவா அனுமதிப்பதையே உங்களால் செய்ய முடியும்!’ என்று சொன்னேன். எனக்குப் பயித்தியம் பிடித்திருப்பதாக அவர்கள் நினைத்தார்கள்; எனவே அவர்கள், ‘இவளை இங்கிருந்து வெளியேற்றுங்கள்!’ என்று சொன்னார்கள். நான் சொன்னது சரியாகி போய்விட்டது, அல்லவா? யெகோவா என்னுடன் இருந்தார்!”
1957-ல் லூசி ஜேகா என்பவரை ஃப்ரோசினா திருமணம் செய்துகொண்டார்; அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். 1960-களின் ஆரம்பத்தில் லூசி, அல்பேனியாவில் செய்யப்பட்டு வந்த ஊழியத்தை மேற்பார்வை செய்வதற்குப் புதிதாக ஏற்படுத்தப்பட்ட நாட்டு ஆலோசனைக் குழுவின் அங்கத்தினராக ஆனார். சீக்கிரத்திலேயே, கிராம்ஷ் என்ற இடத்தில் ஐந்து வருடங்கள் இன்டர்நிம்மில் (தடுப்புக்காவலில்) வைக்கப்பட்டதால், ஃப்ரோசினாவையும் பிள்ளைகளையும் விட்டு தொலைதூரம் பிரிக்கப்பட்டார். அங்கே லூசி தொடர்ந்து ஊழியம் செய்துகொண்டும், அமைப்பைப் பற்றிப் பேசிக்கொண்டும் இருந்தார். கிராமிஷ்வாசிகள் அவரை இன்றும் மறக்கவில்லை.
அவர் தடுப்புக்காவலில் இருந்தபோது, கம்யூனிஸ கட்சி ஃப்ரோசினாவை கரும்பட்டியலில் சேர்த்தது; எனவே, எல்லாரையும் போல் அவரால் உணவுப் பொருள்களை வாங்க முடியவில்லை. அவர் இவ்வாறு சொல்கிறார்: “அது ஒரு பெரிய விஷயமே இல்லை. சில சகோதரர்கள் தங்களிடம் இருந்ததை எங்களுக்கும் கொடுத்தார்கள். யெகோவா எங்களை ஒருபோதும் கைவிடாததால் வாழ்க்கையை ஓட்ட முடிந்தது!”
லூசியின் மரணத்திற்குப் பிறகு, சகோதரர்களுடன் கூட்டுறவு கொள்வது கஷ்டமாகிவிட்டது. ஆனாலும், ஊழியம் செய்வதை ஃப்ரோசினா விட்டுவிடவில்லை. அவர் இவ்வாறு சொல்கிறார்: “ஜான் மார்க்ஸ் 1960-களில் எங்களை வந்து சந்தித்தார். அவருடைய மனைவியை 1986-ல் நான் சந்தித்தபோது, பல காலம் பழகியவர்களைப் போல் உணர்ந்தோம்! நானும் லூசியும் மார்க்ஸ் தம்பதியருக்கு இரகசியமாகச் செய்திகளை அனுப்பி வந்திருந்தோம், அவர்கள் அவற்றை புருக்லினிலுள்ள சகோதரர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.”
1992-ல் தடையுத்தரவு நீக்கப்பட்டபோது, அல்பேனியாவில் ஞானஸ்நானம் பெற்றிருந்த ஒன்பது சாட்சிகளில் ஃப்ரோசினாவும் ஒருவர். அவர் தவறாமல் கூட்டங்களில் கலந்துகொண்டார், 2007-ல் அவர் இறந்த அன்றுகூட ஊழியத்திற்குச் சென்றிருந்தார். அவர் இறப்பதற்குக் கொஞ்ச காலம் முன்பு, “என் முழு இருதயத்தோடும் யெகோவாவை நேசிக்கிறேன்! என் விசுவாசத்தைவிட்டு விலகுவதைப் பற்றி நான் நினைத்துப் பார்த்ததே இல்லை. எனக்கு உலகளாவிய மிகப் பெரிய குடும்பம் இருப்பது தெரியும், ஆனால் அல்பேனியாவிலுள்ள எங்கள் ஆன்மீகக் குடும்பம் எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதைப் பார்த்து வியந்துபோகிறேன். யெகோவா எப்போதும் எங்களுடன் இருந்தார், அவர் இன்னமும் எங்களை அவருடைய பாசக் கரங்களில் பாதுகாக்கிறார்!”
[படம்]
2007-ல் ஃப்ரோசினா ஜேகா
[பக்கம் 159, 160-ன் பெட்டி/ படங்கள்]
ஒருசில பிரசுரங்களிலிருந்து ஏராளமான பிரசுரங்கள்வரை
வாசில் ஜோகா
பிறப்பு 1930
ஞானஸ்நானம் 1960
பின்னணிக் குறிப்பு சர்வாதிபத்திய ஆட்சியின்போது சத்தியத்தின் சார்பாக அவர் உறுதியாய் நின்றார். இன்று அவர் டிரானாவில் மூப்பராகச் சேவை செய்து வருகிறார்.
◼ பார்மாஷ் என்ற என் கிராமத்தில் 1930-களின்போது கிரேக்க மொழி காவற்கோபுரத்தைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. என் அப்பா அந்தப் பத்திரிகையைக் காட்டி, “அந்த ஜனங்கள் சொல்வதுதான் சரி!” என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னதன் அர்த்தத்தைப் பல வருடங்களுக்குப் பிறகே புரிந்துகொண்டேன். பைபிளை வைத்திருப்பதே ஆபத்தானதாகி இருந்தபோதிலும், அதை வாசிப்பதென்றால் எனக்கு அவ்வளவு ஆசையாக இருந்தது. என் உறவினரது சவ அடக்கத்திற்கு நான் சென்றிருந்தபோது டிரானாவிலிருந்து வந்திருந்த ஒரு சகோதரரைச் சந்தித்தேன். மத்தேயு 24-ஆம் அதிகாரத்திலுள்ள ‘கடைசி நாட்களுக்கான’ அடையாளத்தைப் பற்றி அவரிடம் கேட்டேன். அவர் அதை எனக்கு விளக்கினார்; நான் என்ன கற்றுக்கொண்டேனோ அதை உடனடியாக முடிந்தவரை எல்லாரிடமும் சொன்னேன்.
1959-ல், லேயோனிதா போப் என்பவருடைய வீட்டில் நடந்த கூட்டத்தில் சகோதரர்களுடன் கலந்துகொண்டேன். வெளிப்படுத்துதல் புத்தகத்தை நான் படித்து வந்திருந்ததால் மூர்க்க மிருகத்தின் அடையாளத்தையும் மகா பாபிலோனின் அடையாளத்தையும் பற்றிக் கேட்டேன். அவற்றைச் சகோதரர்கள் எனக்கு விளக்கியபோது, இதுதான் சத்தியம் என்பதை அறிந்துகொண்டேன்! அதற்கு அடுத்த வருடம் ஞானஸ்நானம் பெற்றேன்.
ஊழியத்தில் மும்முரமாக ஈடுபட்டேன், அதனால் வேலையிலிருந்து நீக்கப்பட்டேன். எனவே, ஒரு பழைய ‘லொடலொட’ கைவண்டியில் பொருள்களை ஏற்றிச் சென்று டிரானாவில் கொண்டு இறக்கும் வேலையைப் பார்த்தேன். சகோதரர்களுடன் அதிக தொடர்புகொள்ள முடியவில்லை, கையில் பிரசுரங்களும் இருக்கவில்லை; ஆனாலும் நான் நற்செய்தியை அறிவித்து வந்தேன்.
1960-களின் ஆரம்பத்தில், லேயோனிதா போப் தடுப்புக்காவலில் போடப்படுவதற்கு முன்பு, அல்பேனியாவுக்குள் ரகசியமாகக் கொண்டுவரப்பட்ட ஓரிரு கிரேக்க பிரசுரங்களை அவர் பெற்றிருந்தார். அவர் அவற்றை மொழிபெயர்த்துச் சத்தமாகச் சொன்னபோது, அதை ஒரு நோட்டுப் புத்தகத்தில் நான் எழுதினேன். பிறகு, அவர் சொன்னபடி, அதைப் பிரதிகள் எடுத்து, பராட், ஃபியெர், வ்லோரா ஆகிய இடங்களிலிருந்த சில சகோதரர்களுக்கு அனுப்பி வைத்தேன்.
1990-களிலிருந்து எத்தனை எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன! யெகோவா எங்களுக்குக் கொடுத்திருக்கிற ஏராளமான பிரசுரங்களைப் பார்த்து நான் பூரித்துப் போகிறேன். 1992 முதல் இன்றுவரை, நாங்கள் 1 கோடியே 70 லட்சத்திற்கும் அதிகமான பிரசுரங்களை அல்பேனியாவில் விநியோகித்திருக்கிறோம்! புதிய பிரசுரங்கள் அல்பேனியன் மொழியில் மொழிபெயர்க்கப்படுகின்றன, எங்கள் மொழியில் முழுமையாக புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைப் பெற்றிருக்கிறோம்! பிரசுரங்களே இல்லாதிருந்த வருடங்களை நினைத்துப் பார்த்தால் இப்போது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. பல வருடங்களுக்கு ஒருசில பிரசுரங்களே கைவசம் இருந்ததால், இப்போது அவற்றை உயர்வாய் மதிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறோம்!
[பக்கம் 163, 164-ன் பெட்டி/ படங்கள்]
என் நாட்டில் உண்மையான வேலையைக் கண்டுபிடித்தேன்
ஆர்ட்யான் டூட்ரா
பிறப்பு 1969
ஞானஸ்நானம் 1992
பின்னணிக் குறிப்பு அவர் இத்தாலியில் சத்தியத்தைக் கற்றார், பிறகு அல்பேனியாவுக்குத் திரும்பி வந்தார். அல்பேனிய கிளை அலுவலகக் குழுவின் அங்கத்தினராக இருக்கிறார்.
◼ நான் 1991-ல் ஆயிரக்கணக்கான அகதிகளுடன் அல்பேனியாவை விட்டு வெளியேறிய போது எனக்கு 21 வயது. இத்தாலிக்குச் செல்கிற கப்பலை நாங்கள் கடத்தியிருந்தோம். அல்பேனியா ஏழ்மையில் வாடியதால் அங்கிருந்து தப்பிக்க முடிந்ததை நினைத்து அதிக சந்தோஷப்பட்டேன். என்னுடைய கனவு நனவானதுபோல் உணர்ந்தேன்.
இத்தாலியில், பிரின்டிஸி நகரில் இரண்டு நாட்கள் தங்கிய பிறகு, அகதிகள் முகாமைவிட்டு நைசாக வெளியேறி வேலை தேட ஆரம்பித்தேன். அல்பேனியன் மொழியிலிருந்த சுருக்கமான பைபிள் செய்தியின் நகலை ஒருவர் எனக்குக் கொடுத்தார், அன்று மதியம் நடைபெறவிருந்த கூட்டத்துக்கு வரும்படியும் என்னை அழைத்தார். சட்டென, ‘அங்கு போய்ப் பார்த்தாலென்ன? எனக்கு யாராவது அங்கே வேலை கொடுக்கலாமே!’ என்று யோசித்தேன்.
அவர்கள் என்னை அன்புடன் வரவேற்பார்கள் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. கூட்டத்திற்குப் பிறகு ராஜ்ய மன்றத்திலிருந்த எல்லாரும் என்னிடம் வந்து அன்பாகப் பேசினார்கள். ஒரு குடும்பத்தார் என்னை மாலை உணவுக்கு வரும்படி அழைத்தார்கள். அவர்கள் எவ்வளவு கனிவாயும் கண்ணியமாயும் என்னிடம் நடந்துகொண்டார்கள், அதுவும் அழுக்கான, முறைகேடு செய்த அல்பேனிய அகதியிடம்!
அடுத்த முறை கூட்டத்திற்குச் சென்றபோது வீடோ மாஸ்ட்ரோரோசா என்பவர் எனக்கு பைபிள் படிப்பு நடத்த முன்வந்தார். அதை நான் ஏற்றுக்கொண்டேன், அதுவே சத்தியம் என்பதைச் சீக்கிரத்தில் புரிந்துகொண்டேன். ஆகஸ்ட் 1992-ல் இத்தாலியில் ஞானஸ்நானம் பெற்றேன்.
ஒருவழியாக என்னுடைய குடியுரிமை ஆவணங்கள் எல்லாம் தயாராயின. எனக்கு நல்ல வேலை கிடைத்திருந்தது; அதனால் அல்பேனியாவிலிருந்த என் குடும்பத்தாருக்குப் பணம் அனுப்பிக்கொண்டிருந்தேன். ஆனால், இவ்வாறு யோசிக்க ஆரம்பித்தேன்: ‘அல்பேனியாவில் இப்போது ஊழியம் செய்ய எந்தத் தடையும் இல்லை; அங்கு ஊழியம் செய்வதற்கான தேவையும் அதிகம் இருக்கிறது. நான் அங்கு திரும்பப் போய் ஊழியம் செய்ய வேண்டுமா? ஆனால், என் குடும்பத்தார் என்ன சொல்வார்கள்? நான் அனுப்புகிற பணம் அவர்களுக்குத் தேவை. மற்றவர்கள் என்ன சொல்வார்கள்?’
பிறகு டிரானாவில் கிளை அலுவலகத்திலுள்ள சகோதரர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்கள். அந்த வருடம் நவம்பர் மாதத்தில் அல்பேனியாவுக்குச் செல்லவிருந்த இத்தாலிய விசேஷ பயனியர்களுக்கு அல்பேனியன் மொழியைக் கற்றுக்கொடுக்க அல்பேனியாவுக்குப் போக முடியுமா என்று என்னிடம் கேட்டார்கள். அந்த பயனியர்களுடைய முன்மாதிரி என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது. நான் விட்டுவந்த நாட்டுக்கு அவர்கள் போகிறார்கள். அவர்களுக்குப் பாஷை தெரியாது, ஆனாலும் அங்கு செல்ல ஆவலாய் இருந்தார்கள். நானோ அல்பேனிய மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் பற்றி அறிந்தவன். அப்படியென்றால், இங்கே இத்தாலியில் உட்கார்ந்துகொண்டு நான் என்ன செய்கிறேன்?
ஒரு முடிவுக்கு வந்தேன், அந்த விசேஷ பயனியர்களுடன் படகில் ஏறினேன். உடனடியாக, சிறிய பெத்தேல் குடும்பத்தாருடன் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பித்தேன். காலையில் அல்பேனியன் மொழியைக் கற்றுக்கொடுத்தேன், மதியம் மொழிபெயர்க்கும் வேலையில் ஈடுபட்டேன். முதலில் என் குடும்பத்தாருக்கு அதில் அவ்வளவு சந்தோஷம் இருக்கவில்லை. ஆனால், நான் ஏன் அல்பேனியாவுக்கு வந்தேன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டபோது நற்செய்திக்குச் செவிசாய்க்க ஆரம்பித்தார்கள். சீக்கிரத்தில் என் அப்பாவும் அம்மாவும் இரண்டு அக்காக்களும் ஓர் அண்ணனும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
இத்தாலியில் என்னுடைய வேலையையும் சம்பாத்தியத்தையும் விட்டு வந்ததற்காக நான் வருத்தப்படுகிறேனா? அதைப் பற்றி நினைப்பதே இல்லை! அல்பேனியாவில் நான் உண்மையான வேலையைக் கண்டுபிடித்தேன். என்னைப் பொறுத்தவரை, நம்மிடமுள்ள எல்லாவற்றையும் பயன்படுத்தி யெகோவாவுக்குச் சேவை செய்வதே, முக்கியமானதும் முடிவில்லா மகிழ்ச்சியைத் தருவதுமான வேலையாகும்!
[படம்]
தன் மனைவி நோவாட்யாவுடன் ஆர்டியன்
[பக்கம் 173, 174-ன் பெட்டி/ படங்கள்]
மறைவான கூட்டங்களுக்கு முடிவு
ஆட்ரியானா மாமூட்டை
பிறப்பு 1971
ஞானஸ்நானம் 1993
பின்னணிக் குறிப்பு மறைவாக நடத்தப்பட்ட கூட்டத்திற்கு வரும்படி அழைப்பைப் பெற்றார்; பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. தற்போது விசேஷ பயனியராகச் சேவை செய்கிறார்.
◼ என்னுடைய அத்தை மகள் 1991-ல் இறந்தபோது, பாரீயா என்ற பெண்மணி என் அத்தைக்கு பைபிளிலிருந்து ஆறுதல் சொல்வதைக் கேட்டேன். உடனடியாக நான் அவரிடம் சென்று கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தேன்; அப்போது, அவர் வேலை செய்யும் இடத்திற்கு வந்து அவருடைய சிநேகிதி ராஜ்மான்டாவைச் சந்திக்கும்படி என்னிடம் சொன்னார். ராஜ்மான்டாவின் குடும்பத்தார் “வகுப்பில்” சந்தித்தார்கள். புதியவர்கள் அந்த வகுப்புக்கு நேரடியாகச் செல்ல முடியாது என்றும், அதற்கு முன்பு கொஞ்சக் காலத்துக்கு பைபிள் கலந்தாலோசிப்புகளில் நான் பங்குகொள்ள வேண்டுமென்றும் ராஜ்மான்டா என்னிடம் சொன்னார். நான் படித்த விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்துவிட்டன, சீக்கிரத்திலேயே அந்த வகுப்பில் கலந்துகொள்ள நான் அனுமதிக்கப்பட்டேன்.
அந்த வகுப்பில் ஞானஸ்நானம் பெறாதவர்கள் இருந்தார்கள்; அவர்கள் ஆரம்பத்தில் சோடிர் பாபா, சூலோ ஹாசானி ஆகியோருடன் கூட்டுறவுகொள்ள ஆரம்பித்திருந்தார்கள். பல வருடங்களுக்கு முன்பு, சிகூரிமி ஆட்கள் அத்துமீறி அந்த வகுப்புகளுக்குள் நுழைந்து, சகோதரர்களைப் போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்திருந்தார்கள். எனவே, எல்லாரும் எச்சரிக்கையாக இருந்தார்கள்; கூட்டங்களுக்கு யார் அழைக்கப்படுகிறார்கள் என்பதில் கவனமாக இருந்தார்கள்!
முதன்முறையாக அந்தக் கூட்டத்திற்குச் சென்றபோது, எங்கள் நண்பர்களுடைய பெயர்களைப் பட்டியலிட்டு, நாங்கள் கற்றுக்கொள்கிற விஷயங்களை அவர்களுக்குச் சொல்ல வேண்டுமென்பதை அறிந்துகொண்டேன். உடனடியாக நான் இல்மா டானியிடம் விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். சீக்கிரத்திலேயே அவரும் வகுப்புக்கு வர அனுமதிக்கப்பட்டார். 15 பேர் இருந்த எங்கள் வகுப்பு விரைவில் வளர ஆரம்பித்தது.
ஏப்ரல் 1992-ல் பராட் நகருக்கு மைக்கல் டிக்ரெகோர்யோவும் லிண்டா டிக்ரெகோர்யோவும் வந்தார்கள். அவருடைய பேச்சைக் கேட்க நாங்கள் யாரை வேண்டுமானாலும் அழைக்கலாமென எங்களிடம் சொல்லப்பட்டது. இதனால், 54 பேர் கூட்டத்திற்கு வந்தார்கள். நாங்கள் யாருமே ஞானஸ்நானம் பெற்றிருக்கவில்லை. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு, பல மணிநேரம் டிக்ரெகோர்யோ தம்பதியரிடம் கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டு அவர்களைத் துளைத்தெடுத்தோம். நாங்கள் எப்படிக் கூட்டங்களை நடத்த வேண்டும், எப்படி ஊழியம் செய்ய வேண்டும் என்ற தகவலையெல்லாம் ஒருவழியாகத் தெரிந்துகொண்டோம்.
சீக்கிரத்திலேயே யெகோவாவின் சாட்சிகளுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது. வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது எப்படியென கற்றுக்கொள்ள, நானும், இல்மாவும், இரண்டு சகோதரர்களும் டிரானாவுக்குச் சென்றோம். நாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றிப் பராட்டிலுள்ள மற்றவர்களுக்குச் சொல்லும்படி நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம். எங்களால் முடிந்தவரை அதைச் சிறப்பாகச் செய்தோம். மார்ச் 1993-ல் இத்தாலியைச் சேர்ந்த நான்கு விசேஷ பயனியர்கள் பராட்டில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டபோது, அந்தச் சபை உண்மையிலேயே வளர ஆரம்பித்தது; வெளிப்படையாகவே, வாரத்தில் இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
மார்ச் மாதத்தில், முதன்முறையாக டிரானாவில் நடைபெற்ற விசேஷ மாநாட்டு தினத்தில் நானும் இல்மாவும் ஞானஸ்நானம் பெற்றோம். அந்த மாநாட்டுக்கு 585 பேர் வந்திருந்தார்கள். நாங்கள் ஒழுங்கான பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தோம்; சீக்கிரத்திலேயே உள்ளூரைச் சேர்ந்த முதல் விசேஷ பயனியர்களாக ஊழியம் செய்ய அழைப்பைப் பெற்றோம். எதுவுமே மறைவாக நடக்கவில்லை. ஊழியம் செய்ய நாங்கள் கார்ச்சாவுக்கு அனுப்பப்பட்டோம்.
இல்மா பின்னர், கார்ச்சாவில் சில மாதங்களுக்கு முன்பாகத் தன்னந்தனியாக ஊழியம் செய்ய ஆரம்பித்திருந்த ஆர்பென் லூபோன்யா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பிறகு அவர்கள் வட்டார ஊழியம் செய்ய சென்றுவிட்டார்கள்; இப்போது அவர்கள் பெத்தேலில் சேவை செய்கிறார்கள். அந்த வகுப்புக்கு இல்மாவை அழைத்துச் சென்றதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்!
சமீபத்தில், 5,500-க்கு அதிகமானோர் கலந்துகொண்ட ஒரு மாவட்ட மாநாட்டில் நான் உட்கார்ந்திருந்தபோது, மறைவாக நடத்தப்பட்ட அந்த வகுப்பைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். யெகோவா எப்பேர்ப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்! கூட்டங்களும் மாநாடுகளும் வெளிப்படையாக இப்போது நடத்தப்படுகின்றன. பொருளாதார நிலை மோசமானதால் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் பராட்டைவிட்டு வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டபோதிலும்கூட, சிறியதாக இருந்த எங்கள் வகுப்பு இப்போது ஐந்து சபைகளாக வளர்ந்திருக்கிறது!
[படம்]
இல்மா (டானி) லூபோன்யாவும் ஆர்பென் லூபோன்யாவும்
[பக்கம் 183-ன் பெட்டி/ படம்]
“சரி, செய்வோம்!”
ஆல்டின் ஹோஜா, ஆட்ரியான் ஷ்கம்பி
பிறப்பு 1973
ஞானஸ்நானம் 1993
பின்னணிக் குறிப்பு அவர்கள் கல்லூரிப் படிப்பை விட்டுவிட்டு பயனியர் செய்ய ஆரம்பித்தார்கள்; இப்போது சபை மூப்பர்களாக சேவை செய்கிறார்கள்.
◼ டிரானாவில் அவர்கள் 1993-ன் ஆரம்பத்தில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்கள். யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து கற்றுக்கொண்டு வந்த விஷயங்களை அவர்களுடைய நண்பர் ஒருவர் மணிக்கணக்காக அவர்களிடம் பேசினார். ஒவ்வொன்றுக்கும் பைபிளிலிருந்து ஆதாரத்தைக் காட்டினார். பின்னர், அவர்கள் அதிகம் கற்றுக்கொண்டார்கள், அவற்றைக் கடைப்பிடித்தார்கள், அதே வருடம் ஞானஸ்நானம் பெற்றார்கள். அந்த வருட கோடைக்காலத்தில், பிரஸ்தாபிகள் யாருமே இல்லாதிருந்த கூசோவ் நகரில் ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள்.
டிரானாவுக்குத் திரும்பி வந்ததும் ஆல்டினிடம் ஆட்ரியான் இவ்வாறு சொன்னார்: “நாம் ஏன் கல்லூரியில் படிக்க வேண்டும்? நாம் கூசோவ்வில் முழுமையாக ஊழியத்தில் ஈடுபடுவோம்!”
அதற்கு ஷ்கம்பி, “சரி, செய்வோம்!” என்றார். ஞானஸ்நானம் எடுத்து ஏழு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் திரும்பவும் கூசோவ்வுக்குச் சென்றார்கள்.
யெகோவா அவர்களுடைய முயற்சிகளை அபரிமிதமாய் ஆசீர்வதித்தார். இன்று கூசோவ்வில் 90-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் ஊக்கமாய் ஊழியம் செய்து வருகிறார்கள். பயனியர் ஊழியத்திற்காக அல்லது பெத்தேலில் சேவை செய்வதற்காகச் சுமார் 25 யெகோவாவின் சாட்சிகள் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார்கள். ஆட்ரியானும் ஷ்கம்பியும் அநேகருக்கு பைபிள் படிப்புகள் நடத்தினார்கள்.
கல்லூரியைப் பற்றி நினைக்கையில் முகத்தில் புன்முறுவலோடு ஷ்கம்பி இவ்வாறு சொல்கிறார்: “அப்போஸ்தலன் பவுல் கைநிறைய சம்பாதிக்க விரும்பவில்லை, நானும் 1993-ல் அதே போன்ற தீர்மானத்தை எடுத்தேன். ‘சரி, செல்வோம்!’ என்று சொன்னதற்காக நான் வருத்தப்பட்டதே இல்லை.”
[பக்கம் 191, 192-ன் பெட்டி/ படங்கள்]
நாத்திகத்தைக் கற்பித்தவர் இப்போது சத்தியத்தைக் கற்பிக்கிறார்
ஆனாஸ்டாஸ் ரூவினா
பிறப்பு 1942
ஞானஸ்நானம் 1997
பின்னணிக் குறிப்பு தன்னுடைய பிள்ளைகளிடமிருந்து சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு முன்பு அவர் ராணுவத்தில் தனக்குக் கீழ் பணிபுரிந்தவர்களுக்கு நாத்திகத்தைக் கற்றுக்கொடுத்தார். இன்று, அவர் மூப்பராகவும் விசேஷ பயனியராகவும் சேவை செய்கிறார்.
◼ ராணுவக் கல்விக் கழகத்தில் 1971-ல் பட்டம்பெற்ற பிறகு, அரசு படைப்பிரிவின் ஆணையராகப் பணிபுரிந்தேன். அந்தப் பதவிப் பெயருக்குக் காரணம், அரசு 1966-ல் ராணுவ பதவிப் பெயர்கள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டிருந்ததுதான். கடவுள் இல்லை என்ற கருத்தை, எனக்குக் கீழ் பணிபுரிந்தவர்களிடம் கற்பிப்பது என்னுடைய பொறுப்புகளில் ஒன்றாயிருந்தது. மதம் மக்களின் போதைப் பொருள் என்ற தத்துவத்தை நான் விளக்கமாகக் கற்பித்தேன்.
எனக்கு, மனைவியும் மூன்று பிள்ளைகளும் இருந்தார்கள். 1992-ல் என் மகன் ஆர்டான், டிரானாவில் நடைபெற்றுவந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மதக் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தான். பிறகு, தன் தங்கை ஆனிலாவையும் அழைத்துச் சென்றான். அப்படி நேரத்தைச் செலவிடுவது வீண், படு முட்டாள்தனமான செயல் என்று நினைத்தேன். அதனால், வீட்டில் அநேக முறை வாக்குவாதங்கள் வெடித்தன.
ஒருநாள், என்னதான் இருக்கிறதென தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் ஒரு காவற்கோபுர பத்திரிகையைக் கையிலெடுத்தேன். அதில் அத்தனை நல்ல விஷயங்கள் இருக்குமென்று நான் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆர்டானும் ஆனிலாவும் என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தியபோதிலும், நான் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை. கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவர் பைபிளைப் படிக்கக் கூடாது என்று நான் நியாயம் பேசினேன். 1995-ல் உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற புத்தகம் அல்பேனியன் மொழியில் வெளியானது. ஆர்டானும் ஆனிலாவும் ஒரு புத்தகத்தை எனக்குக் கொடுத்தார்கள். என் மனதை மாற்ற அதுவே போதுமானதாய் இருந்தது. கடவுள் ஒருவர் உண்மையிலேயே இருக்கிறார்! எனக்குச் சாக்குப்போக்குச் சொல்ல எந்தக் காரணமும் இல்லாததால் பைபிளைப் படிக்க வேண்டியிருந்தது. சீக்கிரத்தில் என் மனைவி லிரீயெ என்னோடு சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள்; இதுதான் சத்தியம் என்பதை நாங்கள் ஒத்துக்கொண்டோம்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நான் மெல்ல மெல்லவே முன்னேற்றம் செய்தேன். எனக்கு அப்போது 53 வயது. அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் சிந்திப்பதைத் தவிர்ப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. படைப்பாளரான யெகோவாதான் நான் முன்னேற எனக்கு உதவி செய்தாரென சொல்ல வேண்டும்.
நான் பிரஸ்தாபி ஆவதற்கு விரும்பவில்லை; காரணம், நான் யாருக்கு நாத்திகத்தைக் கற்றுக்கொடுத்தேனோ அவர்களையே சந்தித்துச் சத்தியத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமே என்று கவலைப்பட்டேன். அப்படிச் செய்தால் அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? ஒருநாள் எனக்குப் படிப்பு நடத்திக்கொண்டிருந்த வீடோ மாஸ்ட்ரோரோசா, தர்சு நகரத்தைச் சேர்ந்த சவுல் பற்றிய பதிவை எனக்கு வாசித்துக் காட்டினார். என் மனதை மாற்றிக்கொள்ள அது போதுமானதாய் இருந்தது! கிறிஸ்தவர்களைச் சவுல் துன்புறுத்தினார், சத்தியத்தைக் கற்றுக்கொண்டார், பிறகு பிரசங்க ஊழியம் செய்தார். யெகோவாவின் உதவியோடு, என்னாலும் அதைச் செய்ய முடியுமென நம்பினேன்.
நான் அந்தளவு கண்டிப்பு காட்டாமல், ராணுவ அதிகாரியைப் போல் கட்டளையிடாமல், அதிக நியாயமாக நடந்துகொள்ள யெகோவா எனக்குத் தொடர்ந்து உதவுவதைப் பார்க்கும்போது சில சமயங்களில், என்னை நினைத்தாலே எனக்குச் சிரிப்பு வரும். நான் மெல்ல மெல்ல முன்னேற்றம் செய்கிறேன்!
சத்தியத்தைக் குறித்து என் பிள்ளைகளிடம் இப்போதெல்லாம் நான் வாக்குவாதம் செய்வதில்லை. மாறாக, அவர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஆர்டான் விசேஷ பயனியராகவும் மூப்பராகவும் சேவை செய்கிறான். என் மகள்களான ஆனிலாவும் எல்யோனாவும் டிரானாவிலுள்ள பெத்தேலில் சேவை செய்து வருகிறார்கள்.
நானும் லிரீயெயும் விசேஷ பயனியர்களாகச் சேவை செய்கிறோம். நம்முடைய மகத்தான படைப்பாளரைப் பற்றிய சத்தியத்தை மக்களுக்குக் கற்றுக்கொடுப்பதையும், அவர்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வதைப் பார்ப்பதையும் நாங்கள் பாக்கியமாகக் கருதுகிறோம். உயிருள்ள ஒரே உண்மைக் கடவுள் தந்திருக்கும் வாக்குறுதிகளின் அடிப்படையில் நிஜமான எதிர்பார்ப்பை மக்களுக்கு அளிப்பது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியை அளிக்கிறது!
[படம்]
இடமிருந்து வலம்: ஆர்டான், ஆனிலா, லிரீயெ, ஆனாஸ்டாஸ், எல்யோனாவும் அவருடைய கணவர் ரினால்டோ கல்லியும்
[பக்கம் 176, 177-ன் அட்டவணை/ வரைபடம்]
கால வரலாறு அல்பேனியா
1920-1922 அல்பேனியர் சத்தியத்தை அமெரிக்காவில் கற்றுக்கொள்கிறார்கள்.
1922 தானாஸ் இட்ரிஸி சத்தியத்தைக் கற்றுக்கொண்டு கைரோகாஸ்டருக்குத் திரும்புகிறார்.
1925 அல்பேனியாவில் மூன்று சிறிய பைபிள் படிப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன.
1928 பல நகரங்களில் “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” காட்டப்படுகிறது.
1930
1935-1936 பரந்தளவில் பிரசங்க ஊழியம் நடைபெறுகிறது.
1939 யெகோவாவின் சாட்சிகளுக்குத் தடைவிதிக்கப்படுகிறது.
1940
1940 நடுநிலை வகித்ததால் ஒன்பது சகோதரர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
1946 கம்யூனிஸ அரசு ஆட்சிக்கு வருகிறது.
1950
1960
1960 அல்பேனியாவில் ஊழியத்தை மேற்பார்வை செய்ய நாட்டு ஆலோசனைக் குழு ஏற்படுத்தப்படுகிறது.
1962 ஆலோசனைக் குழுவிலுள்ள சகோதரர்கள் உழைப்பாளர் முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
1967 அல்பேனியா நாத்திக நாடென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
1980
1990
1992 யெகோவாவின் சாட்சிகளுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
1996 மில்டன் ஹென்ஷல் முதல் பெத்தேல் அர்ப்பண விழாவில் கலந்துகொள்கிறார்.
1997 ட்ராஸிரா ஆரம்பமாகிறது.
2000
2005 அல்பேனியன் மொழியில் முழுமையாகப் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் வெளியிடப்படுகிறது.
2006 டிரானாவிலுள்ள முஸேஸ் என்ற இடத்தில் கிளை அலுவலகம் அர்ப்பணம் செய்யப்படுகிறது.
2010
[வரைபடம்]
[பிரசுரத்தைக் காண்க]
மொத்த பிரஸ்தாபிகள்
மொத்த பயனியர்கள்
4,000
3,000
2,000
1,000
1930 1940 1950 1960 1980 1990 2000 2010
[பக்கம் 133-ன் தேசப்படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மான்டனீக்ரோ
காஸாவோ
மாசிடோனியா
கிரீஸ்
யன்னினா
ஸ்கூட்டாரி ஏரி
ஓக்ரிட் ஏரி
ப்ரெஸ்பா ஏரி
ஏட்ரியாடிக் கடல்
அல்பேனியா
டிரானா
ஷ்கோடர்
கூக்கஸ்
புர்ரேல்
மிசெஸ்
டுரஸ்
காவாயா
கிராம்ஷ்
கூசோவ்
ஃபியெர்
பராட்
கார்ச்சா
வ்லோரா
டேபேலேன்
கல்சைரா
பார்மஷ்
பர்மெட்
கைரோகாஸ்டர்
சராண்டா
[பக்கம் 126-ன் முழுபக்க படம்]
[பக்கம் 128-ன் படம்]
தானாஸ் இட்ரிஸி, அமெரிக்காவிலுள்ள நியு இங்கிலாந்தில் சத்தியத்தைக் கற்றுக்கொண்ட பிறகு, அல்பேனியாவிலுள்ள கைரோகாஸ்டருக்கு வந்து நற்செய்தியை அறிவித்தார்
[பக்கம் 129-ன் படம்]
சோக்ராட் டூலி தன் தம்பிக்கு சத்தியத்தைக் கற்றுக்கொடுத்தார்
[பக்கம் 137-ன் படம்]
நிக்கலாஸ் கிறிஸ்டோ, அல்பேனிய உயர் அதிகாரிகளுடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டார்
[பக்கம் 142-ன் படம்]
ஏன்வேர் ஹோஜாவுக்கு பாஸ்டனிலுள்ள அல்பேனிய சகோதரர்கள் அனுப்பிய இரண்டு பக்க கடிதம்
[பக்கம் 145-ன் படம்]
லேயோனிதா போப்
[பக்கம் 147-ன் படம்]
“நான் சொல்லாத விஷயங்கள் எழுதப்பட்டிருந்தால் அதில் கையெழுத்துப் போடக் கூடாதென யெகோவா கற்றுக்கொடுத்தார்.”—சோடிர் ட்சேசி
[பக்கம் 149-ன் படம்]
ஜான் மார்க்ஸ் அல்பேனியாவுக்குத் திரும்புவதற்கு முன் ஹெலன் மார்க்ஸுடன்
[பக்கம் 154-ன் படம்]
பயணக் கண்காணியாகச் சேவை செய்த ஸ்பீரோ வ்ரூஹோ
[பக்கம் 157-ன் படம்]
லோபி ப்ளானி
[பக்கம் 158-ன் படம்]
தனியாக இருந்தபோதிலும் கூலா ஜித்தாரி நினைவுநாள் அனுசரிப்பை நடத்தினார்
[பக்கம் 167-ன் படம்]
மைக்கல் டிக்ரெகோர்யோவும் லிண்டா டிக்ரெகோர்யோவும்
[பக்கம் 172-ன் படம்]
ஆணை எண் 100, யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளித்தது
[பக்கம் 175-ன் படம்]
1992-ல் டிரானாவில் கட்டப்பட்ட முதல் ராஜ்ய மன்றத்தில் சபைக் கூட்டம்
[பக்கம் 178-ன் படம்]
உண்மையுள்ள ஆரேடி பினா தனியாகவே பிரசங்கித்தார்
[பக்கம் 184-ன் படங்கள்]
ஒரு பழைய வீடு புதிய அலுவலகங்களாக மாற்றப்பட்டது
[பக்கம் 186-ன் படம்]
“நீங்கள் சிறைக்குச் சென்றாலும் கவலைப்படாதீர்கள்.”—நாஷோ டோரி
[பக்கம் 194-ன் படங்கள்]
டேவிட் ஸ்ப்லேன், அல்பேனியன் மொழியில் “புதிய உலக மொழிபெயர்ப்பு” முழு பைபிளை வெளியிடுகிறார்
[பக்கம் 197-ன் படம்]
தற்போது அல்பேனியாவில் சேவை செய்கிற மிஷனரிகள்
[பக்கம் 199-ன் படங்கள்]
அல்பேனிய கிளை அலுவலகம்
கிளை அலுவலகக் குழுவினர்: ஆர்டன் ட்யூகா, ஆர்ட்யான் டூட்ரா, மைக்கல் டிக்ரெகோர்யோ, டாவிடெ ஆபின்யானேஸி, ஸ்டிஃபானோ அனட்ரலி