படிப்புக் கட்டுரை 46
தைரியமாயிருங்கள்—யெகோவா உங்களுக்குத் துணையாக இருக்கிறார்!
“நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்.”—எபி. 13:5.
பாட்டு 33 வேண்டாம் பயமே!
இந்தக் கட்டுரையில்...a
1. பிரச்சினைகள் நம்மைத் தாக்கும்போது, எது நமக்கு ஆறுதல் கொடுக்கும்? (சங்கீதம் 118:5-7)
புயல் போன்ற பிரச்சினைகள் உங்களைத் தாக்கிய சமயத்தில், தனிமரமாய்த் தவிப்பதுபோல் நீங்கள் நினைத்திருக்கிறீர்களா? நிறைய பேர் அப்படி நினைத்திருக்கிறார்கள். யெகோவாவின் உண்மை ஊழியர்கள்கூட அப்படி நினைத்திருக்கிறார்கள். (1 ரா. 19:14) உங்களுக்கு அதுபோன்ற எண்ணம் எப்போதாவது வந்தால், இதை மறந்துவிடாதீர்கள்: “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று யெகோவா வாக்கு கொடுத்திருக்கிறார். அதனால், “யெகோவா எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன்” என்று நாம் நம்பிக்கையோடு சொல்லலாம். (எபி. 13:5, 6) கிட்டத்தட்ட கி.பி. 61-ல், யூதேயாவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இந்த வார்த்தைகளை எழுதினார். சங்கீதம் 118:5-7-ல் இருப்பதை இந்த வார்த்தைகள் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன.—வாசியுங்கள்.
2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம், ஏன்?
2 யெகோவா தனக்கு துணையாக இருக்கிறார் என்பதை சங்கீதக்காரரைப் போலவே அப்போஸ்தலன் பவுலும் தன்னுடைய அனுபவத்தில் தெரிந்துகொண்டார். உதாரணத்துக்கு, எபிரெயர்களுக்கு கடிதம் எழுதுவதற்கு இரண்டு வருஷங்களுக்கும் முன்பு, கொந்தளிக்கிற கடலில் அவர் ஆபத்தான பயணம் செய்தார். (அப். 27:4, 15, 20) அந்தப் பயணத்தின்போதும் சரி அதற்கு முன்பும் சரி, யெகோவா நிறைய விதங்களில் அவருக்குத் துணையாக இருந்திருக்கிறார். அதில் மூன்று விதங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். (1) இயேசு மற்றும் தேவதூதர்கள் மூலம் யெகோவா உதவினார், (2) அதிகாரத்தில் இருப்பவர்கள் மூலம் உதவினார், (3) சகோதர சகோதரிகள் மூலம் உதவினார். அப்போஸ்தலன் பவுலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது, யெகோவா நமக்கும் துணையாக இருப்பார் என்று நாம் இன்னும் அதிகமாக நம்புவோம்.
இயேசு மற்றும் தேவதூதர்களின் உதவி
3. பவுல் என்ன நினைத்திருக்கலாம்?
3 கிட்டத்தட்ட கி.பி. 56-ல், அப்போஸ்தலன் பவுல் எருசலேம் ஆலயத்தில் இருந்தபோது, அவரை இழுத்துக்கொண்டுபோய் கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்தது. அடுத்த நாள், நியாயசங்கத்துக்கு முன்பாகப் பவுல் கொண்டுவந்து நிறுத்தப்பட்டபோது அவருடைய உடல் முழுக்க காயங்கள் இருந்தன. (அப். 21:30-32; 22:30; 23:6-10) அப்போது, ‘இன்னும் நான் எத்தனை நாளைக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும்னு தெரியலயே’ என்று பவுல் நினைத்திருக்கலாம்.
4. இயேசுவைப் பயன்படுத்தி பவுலுக்கு யெகோவா எப்படி உதவினார்?
4 பவுலுக்கு என்ன உதவி கிடைத்தது? பவுல் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் ராத்திரி, ‘எஜமானாகிய’ இயேசு அவருக்குப் பக்கத்தில் வந்து நின்று, “தைரியமாயிரு! எருசலேமில் நீ என்னைப் பற்றி முழுமையாகச் சாட்சி கொடுத்துவந்திருப்பது போலவே, ரோமிலும் சாட்சி கொடுக்க வேண்டும்” என்று சொன்னார். (அப். 23:11) இயேசுவின் வார்த்தைகள் பவுலை ரொம்பவே பலப்படுத்தியிருக்கும்! எருசலேமில் பவுல் சாட்சி கொடுத்ததை இயேசு பாராட்டிப் பேசினார். அதோடு, ரோமுக்கு பவுல் பத்திரமாக போய்ச் சேருவார் என்றும் அங்கேயும் சாட்சி கொடுப்பார் என்றும் சொன்னார். அதைக் கேட்டபோது, அப்பாவின் அன்பான அரவணைப்பில் பத்திரமாக இருக்கும் ஒரு குழந்தையைப் போல் பவுல் உணர்ந்திருப்பார்.
5. தேவதூதரைப் பயன்படுத்தி பவுலுக்கு யெகோவா எப்படி உதவினார்? (அட்டைப் படம்)
5 பவுலுக்கு வேறு என்னென்ன பிரச்சினைகள் வந்தன? மேலே பார்த்த சம்பவங்கள் நடந்து கிட்டத்தட்ட இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, பவுல் இத்தாலிக்கு கப்பலில் போய்க்கொண்டிருந்தார். அப்போது பயங்கர புயல்காற்று வந்ததால், ‘நாம செத்துடுவோமோ’ என்று நினைத்து கப்பலில் பயணம் செய்த எல்லாரும் பயந்தார்கள். ஆனால், பவுல் பயப்படவில்லை. ஏன்? “என்மேல் உரிமையுள்ளவரும் நான் பரிசுத்த சேவை செய்கிறவருமான கடவுள் தன்னுடைய தூதரை அனுப்பினார். அவர் நேற்று ராத்திரி என் பக்கத்தில் வந்து நின்று, ‘பவுலே, பயப்படாதே. நீ ரோம அரசனுக்கு முன்னால் நிற்க வேண்டும். இதோ! உன்னோடு பயணம் செய்கிற எல்லாருடைய உயிரையும் கடவுள் காப்பாற்றுவார்’” என்று தேவதூதர் தன்னிடம் சொன்னதாக பயணிகளிடம் பவுல் சொன்னார். இதற்கு முன்பு இயேசுவைப் பயன்படுத்தி பவுலிடம் சொன்ன அதே விஷயத்தை இப்போது தேவதூதரைப் பயன்படுத்தி யெகோவா சொன்னார். யெகோவா சொன்னபடியே பவுல் ரோமுக்கு போய்ச் சேர்ந்தார்.—அப். 27:20-25; 28:16.
6. இயேசு கொடுத்த எந்த வாக்குறுதி நம்மைப் பலப்படுத்துகிறது, ஏன்?
6 நமக்கு என்ன உதவி கிடைக்கிறது? பவுலுக்கு உதவியதைப் போலவே இயேசு நமக்கும் உதவுவார். “இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்” என்று தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் வாக்குக் கொடுத்தார். (மத். 28:20) இயேசுவின் இந்த வார்த்தைகள் நமக்குத் தெம்பைத் தருகின்றன. ஏனென்றால், என்ன செய்வதென்றே தெரியாமல் சிலசமயங்களில் நாம் கவலையில் மூழ்கிவிடலாம். உதாரணத்துக்கு, உங்கள் பாசத்துக்குரிய ஒருவர் இறந்திருக்கலாம். அதனால், சில நாட்களுக்கு அல்ல நிறைய வருஷங்களுக்கு அந்த வலியோடு நீங்கள் போராட வேண்டியிருக்கலாம். அல்லது, உங்களுக்கு வயதாகியிருக்கலாம். அதனால், ஒவ்வொரு நாளையும் ஓட்டுவதே உங்களுக்கு பெரும்பாடாக இருக்கலாம். அல்லது, சில நாட்களில் மனச்சோர்வு உங்களைப் பாடாய்ப்படுத்தலாம். இப்படி எவ்வளவுதான் கஷ்டம் வந்தாலும் ஒவ்வொரு நாளையும் சமாளிப்பதற்குத் தேவையான பலம் நமக்குக் கிடைக்கிறது. ஏனென்றால், “எல்லா நாட்களிலும்,” நாம் கஷ்டத்தில் துவண்டுபோய் இருக்கிற நாட்களிலும், நம் கூடவே இருப்பதாக இயேசு வாக்குக் கொடுத்திருக்கிறார்.—மத். 11:28-30.
7. வெளிப்படுத்துதல் 14:6 சொல்வதுபோல், யெகோவா இன்று நமக்கு எப்படி உதவுகிறார்?
7 தேவதூதர்களைப் பயன்படுத்தியும் யெகோவா நமக்கு உதவுவதாக பைபிள் சொல்கிறது. (எபி. 1:7, 14) ‘எல்லா தேசத்தையும் கோத்திரத்தையும் மொழியையும்’ சேர்ந்த மக்களுக்கு ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய . . . நல்ல செய்தியை’ சொல்வதில் தேவதூதர்கள் நமக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள். நம்மை வழிநடத்துகிறார்கள்.—மத். 24:13, 14; வெளிப்படுத்துதல் 14:6-ஐ வாசியுங்கள்.
அதிகாரத்தில் இருப்பவர்களிடமிருந்து கிடைக்கும் உதவி
8. படைத் தளபதியைப் பயன்படுத்தி பவுலை யெகோவா எப்படிக் காப்பாற்றினார்?
8 பவுலுக்கு என்ன உதவி கிடைத்தது? பவுல் ரோமுக்கு போய்ச் சேருவார் என்று கி.பி. 56-ல் இயேசு சொன்னார். ஆனால், பவுலைத் தீர்த்துக்கட்டுவதற்கு எருசலேமில் இருந்த யூதர்கள் சதித்திட்டம் போட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட படைத் தளபதி கிலவுதியு லீசியா, அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார். உடனடியாக, நிறைய படைவீரர்களின் பாதுகாப்போடு செசரியாவுக்கு அவரை அனுப்பிவைத்தார். எருசலேமிலிருந்து 105 கி.மீ. பயணம் செய்து அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்தார்கள். அங்கே, “ஏரோதுவின் மாளிகையில் [பவுலை] காவல் வைக்கும்படி” ஆளுநர் பேலிக்ஸ் கட்டளை கொடுத்தார். இப்படி, தன்னை கொலை செய்ய சதித்திட்டம் போட்டவர்களின் கைக்கு பவுல் தப்பினார்.—அப். 23:12-35.
9. ஆளுநர் பெஸ்து பவுலுக்கு எப்படி உதவினார்?
9 இப்போது இரண்டு வருஷங்கள் உருண்டோடிவிடுகின்றன! பவுல் இன்னமும் செசரியாவில் காவலில் இருக்கிறார். பேலிக்ஸுக்கு அடுத்ததாக, பெஸ்து செசரியாவின் ஆளுநராக ஆகிறார். விசாரணைக்காக பவுலை எருசலேமுக்கு அனுப்பிவைக்கும்படி யூதர்கள் அவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஆனால், பெஸ்து அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். ஒருவேளை, ‘வழியில் பதுங்கியிருந்து [பவுலை] கொன்றுபோட அவர்கள் திட்டம் போட்டிருந்தது’ அவருக்குத் தெரிந்திருக்கலாம்.—அப். 24:27–25:5.
10. “ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!” என்று பவுல் சொன்னபோது ஆளுநர் பெஸ்து என்ன செய்தார்?
10 பிற்பாடு, செசரியாவிலேயே பவுல் விசாரிக்கப்படுகிறார். “பெஸ்து யூதர்களுடைய தயவைப் பெற விரும்பியதால், ‘நீ எருசலேமுக்கு வந்து, அங்கே என் முன்னால் இந்தக் குற்றச்சாட்டுகளைப் பற்றி விசாரிக்கப்பட விரும்புகிறாயா?’ என்று பவுலிடம் கேட்டார்.” ஆனால், எருசலேமுக்கு போனால் தன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்பது பவுலுக்குத் தெரிந்திருந்தது. அதோடு, பத்திரமாக ரோமுக்குப் போய்ச் சேர்ந்து ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால், “ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!” என்று சொன்னார். அப்போது, பெஸ்து தன்னுடைய ஆலோசகர் குழுவிடம் கலந்துபேசிவிட்டு, “ரோம அரசனிடம் நீ மேல்முறையீடு செய்திருக்கிறாய். அதனால் ரோம அரசனிடமே நீ போகலாம்” என்று சொன்னார். பெஸ்து கொடுத்த இந்தச் சாதகமான தீர்ப்பால் எதிரிகளின் கையில் பவுல் மாட்டிக்கொள்ளவில்லை. கடைசியில், அந்தச் சதிகாரர்களின் கண்ணுக்கு எட்டாத தூரத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.—அப். 25:6-12.
11. ஏசாயா சொன்ன எந்த வார்த்தைகளை பவுல் நினைத்துப் பார்த்திருக்கலாம்?
11 இத்தாலிக்குப் போவதற்கு பவுல் தயாராகிக் கொண்டிருந்தபோது, ஏசாயா சொன்ன வார்த்தைகளை நினைத்துப் பார்த்திருப்பார். “நீங்கள் என்னதான் சதி செய்தாலும் அது பலிக்காது. என்னதான் கூடிப் பேசினாலும் அது நடக்காது. ஏனென்றால், கடவுள் எங்களோடு இருக்கிறார்!” என்று யெகோவாவை எதிர்த்தவர்களிடம் ஏசாயா சொல்லியிருந்தார். (ஏசா. 8:10) யெகோவா தனக்குத் துணையாக இருக்கிறார் என்பது பவுலுக்குத் தெரிந்திருந்தது. அதனால், வரவிருந்த சோதனைகளைத் தைரியமாக அவரால் சந்திக்க முடிந்தது.
12. பவுலை யூலியு எப்படி நடத்தினார், அதிலிருந்து பவுலுக்கு எது புரிந்திருக்கலாம்?
12 இப்போது கி.பி. 58! இத்தாலிக்குப் போக பவுல் கப்பல் ஏறுகிறார். அவர் சிறைக் கைதியாக இருப்பதால் ரோமப் படை அதிகாரியான யூலியுவின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். யூலியு நினைத்தால் பவுலிடம் கனிவாகவும் நடந்துகொள்ளலாம் கறாராகவும் நடந்துகொள்ளலாம். ஆனால், அவர் எப்படி நடந்துகொண்டார்? அடுத்த நாள் கப்பல் ஓர் இடத்தில் நின்றது. அப்போது, “பவுலை யூலியு மனிதாபிமானத்தோடு நடத்தினார். அதோடு, பவுல் தன்னுடைய நண்பர்களைப் போய்ப் பார்ப்பதற்கும் . . . அனுமதி கொடுத்தார்.” பிற்பாடு, கப்பலில் இருந்த கைதிகள் எல்லாரையும் தீர்த்துக்கட்ட படைவீரர்கள் திட்டம் போட்டார்கள். யூலியு “பவுலைக் காப்பாற்ற விரும்பியதால்” அந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தினார். கனிவுள்ளம் படைத்த அந்த அதிகாரியைப் பயன்படுத்தி யெகோவா தனக்கு உதவுகிறார் என்பது பவுலுக்குப் புரிந்திருக்கும்.—அப். 27:1-3, 42-44.
13. அதிகாரத்தில் இருப்பவர்களை யெகோவா எப்படிப் பயன்படுத்தலாம்?
13 நமக்கு என்ன உதவி கிடைக்கிறது? தன்னுடைய விருப்பத்தைச் செய்ய, அதிகாரத்தில் இருப்பவர்களை யெகோவாவால் தூண்ட முடியும். “ராஜாவின் இதயம் யெகோவாவின் கையில் நீரோடைபோல் இருக்கிறது. தான் விரும்பும் திசையில் அதை அவர் திருப்பிவிடுகிறார்” என்று சாலொமோன் ராஜா எழுதினார். (நீதி. 21:1) இதன் அர்த்தம் என்ன? வாய்க்கால்களை வெட்டுவதன் மூலம், தண்ணீர் எந்தத் திசையில் பாய வேண்டுமென்று மனிதர்கள் ஆசைப்படுகிறார்களோ அந்தத் திசையில் திருப்பிவிட அவர்களால் முடியும். அதேபோல், தன்னுடைய சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அதிகாரத்தில் இருப்பவர்களின் யோசனைகளை எப்படி மாற்ற வேண்டுமென்று யெகோவா ஆசைப்படுகிறாரோ அப்படி மாற்ற அவரால் முடியும். யெகோவா அப்படிச் செய்யும்போது, அவருடைய மக்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு வருகிறது.—எஸ்றா 7:21, 25, 26-ஐ ஒப்பிடுங்கள்.
14. அப்போஸ்தலர் 12:5-ன்படி, நாம் யாருக்காக ஜெபம் செய்ய வேண்டும்?
14 நாம் என்ன செய்யலாம்? ‘ராஜாக்களும் உயர் பதவியில் இருக்கிறவர்களும்’ நம்முடைய வழிபாடு மற்றும் ஊழியம் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்கும்போது, அவர்களுக்காக நாம் ஜெபம் செய்ய வேண்டும். (1 தீ. 2:1, 2, அடிக்குறிப்பு; நெ. 1:11) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே, சிறையில் இருப்பவர்களுக்காக நாம் உருக்கமாக ஜெபம் செய்ய வேண்டும். (அப்போஸ்தலர் 12:5-ஐ வாசியுங்கள்; எபி. 13:3) சிறையில் இருக்கிற நம் சகோதர சகோதரிகளைக் காவல் காப்பவர்களுக்காகவும் நாம் ஜெபம் செய்யலாம். சிறையில் இருக்கிற நம் சகோதர சகோதரிகளை யூலியுவைப் போலவே அவர்கள் “மனிதாபிமானத்தோடு” நடத்த வேண்டுமென்று யெகோவாவிடம் நாம் கெஞ்சிக் கேட்கலாம்.—அப். 27:3.
சகோதர சகோதரிகளிடமிருந்து கிடைக்கும் உதவி
15-16. லூக்காவையும் அரிஸ்தர்க்குவையும் பயன்படுத்தி பவுலுக்கு யெகோவா எப்படி உதவினார்?
15 பவுலுக்கு என்ன உதவி கிடைத்தது? பவுல் ரோமுக்குப் பயணம் செய்தபோது, அடிக்கடி சகோதர சகோதரிகள் மூலம் யெகோவா அவருக்கு உதவினார். சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.
16 பவுலின் நண்பர்களான அரிஸ்தர்க்குவும் லூக்காவும் அவரோடு ரோமுக்குப் போவதென்று முடிவெடுத்தார்கள்.b அவர்கள் ரோமுக்குப் பத்திரமாகப் போய்ச் சேருவார்கள் என்று அவர்கள் இரண்டு பேரில் யாருக்கும் இயேசு வாக்குக் கொடுக்கவில்லை. இருந்தாலும், பவுல்கூடவே இருக்க வேண்டும் என்பதற்காகத் தங்களுடைய உயிரையே பணயம் வைத்தார்கள். பிற்பாடுதான், அதாவது ஆபத்தான அந்தப் பயணத்தின்போதுதான், தங்கள் உயிருக்கு எதுவும் ஆகி விடாது என்பதை அவர்கள் தெரிந்துகொண்டார்கள். அரிஸ்தர்க்குவும் லூக்காவும் செசரியாவில் கப்பல் ஏறியபோது, தன்னோடு அவர்கள் வந்ததற்காக பவுல் மனப்பூர்வமாக யெகோவாவுக்கு நன்றி சொல்லியிருப்பார்.—அப். 27:1, 2, 20-25.
17. சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி பவுலுக்கு யெகோவா எப்படி உதவினார்?
17 பவுல் ரோமுக்குப் போகிற வழியில், சகோதர சகோதரிகள் நிறைய சமயங்களில் அவருக்கு உதவினார்கள். உதாரணத்துக்கு, துறைமுக நகரமான சீதோனுக்கு கப்பல் போய்ச் சேர்ந்தபோது, பவுல் “தன்னுடைய நண்பர்களைப் போய்ப் பார்ப்பதற்கும் அவர்களுடைய உதவியைப் பெறுவதற்கும்” யூலியு அவரை அனுமதித்தார். பிற்பாடு, புத்தேயோலி நகரத்துக்குக் கப்பல் போய்ச் சேர்ந்ததும் பவுலும் அவருடைய நண்பர்களும் ‘அங்கேயிருந்த சகோதரர்களைச் சந்தித்தார்கள். ஏழு நாட்கள் தங்களோடு தங்கும்படி அவர்கள் . . . கேட்டுக்கொண்டார்கள்.’ சீதோனிலும் புத்தேயோலியிலும் இருந்த சகோதரர்கள், பவுலையும் அவருடைய நண்பர்களையும் நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். பவுலும் உற்சாகமளிக்கிற அனுபவங்களைச் சொல்லி அவர்களைச் சந்தோஷப்படுத்தியிருப்பார். (அப்போஸ்தலர் 15:2, 3-ஐ ஒப்பிடுங்கள்.) அவர்களைப் பார்த்த தெம்பில் பவுலும் அவருடைய நண்பர்களும் மீதி பயணத்தைத் தொடர்ந்தார்கள்.—அப். 27:3; 28:13, 14.
18. பவுல் ஏன் கடவுளுக்கு நன்றி சொல்லி, தைரியம் அடைந்தார்?
18 இப்போது பவுல் கால்நடையாக ரோமுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்! மூன்று வருஷங்களுக்கு முன்பு ரோம கிறிஸ்தவர்களுக்கு எழுதிய வார்த்தைகள் அவருடைய ஞாபகத்துக்கு வருகின்றன. “உங்களிடம் வருவதற்குப் பல வருஷங்களாக நான் ஏங்கிக்கொண்டிருக்கிறேன்” என்று அவர் எழுதியிருந்தார். (ரோ. 15:23) ஆனால், ஒரு கைதியாக ரோமுக்குப் போக வேண்டியிருக்கும் என்று அவர் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார். அவரை வரவேற்பதற்காக ரோமில் இருந்த சகோதரர்கள் சாலையோரமாகக் காத்துக்கொண்டிருந்தார்கள். “பவுல் அவர்களைப் பார்த்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லி, தைரியம் அடைந்தார்.” (அப். 28:15) சகோதரர்களைப் பார்த்ததற்காக கடவுளுக்கு ஏன் அவர் நன்றி சொன்னார்? ஏனென்றால், அவர்கள் மூலம் கடவுள் தனக்கு மறுபடியும் உதவி செய்ததை அவர் புரிந்துகொண்டார்!
19. ஒன்று பேதுரு 4:10 சொல்வதுபோல், மற்றவர்களுக்கு உதவ யெகோவா நம்மை எப்படிப் பயன்படுத்தலாம்?
19 நாம் என்ன செய்யலாம்? நோயாலோ மற்ற பிரச்சினைகளாலோ உங்கள் சபையில் யாராவது துவண்டுபோயிருக்கலாம். அல்லது, அவர்களுக்கு நெருக்கமாக இருந்த யாராவது இறந்துபோயிருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு, அன்பாகவும் கனிவாகவும் ஏதாவது சொல்லவோ செய்யவோ உதவும்படி கேட்டு யெகோவாவிடம் நாம் ஜெபம் செய்யலாம். நாம் சொல்கிற வார்த்தைகளும் செய்கிற செயல்களும் அவர்களுக்குத் தெம்பைக் கொடுக்கும். (1 பேதுரு 4:10-ஐ வாசியுங்கள்.)c அதுமட்டுமல்ல, “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று யெகோவா கொடுத்த வாக்குறுதிமேல் மறுபடியும் அவர்களுக்கு நம்பிக்கை வரும். அதைப் பார்த்து நீங்கள் சந்தோஷப்படுவீர்கள், இல்லையா?
20. “யெகோவா எனக்குத் துணையாக இருக்கிறார்” என்று நாம் ஏன் நம்பிக்கையோடு சொல்லலாம்?
20 பவுலும் அவருடைய நண்பர்களும் கப்பல் பயணம் செய்ததுபோல், இன்று நாமும் வாழ்க்கையெனும் ஓடத்தில் பயணம் செய்கிறோம். அவர்களைப் புயல் தாக்கியதுபோல் இன்று நம்மைப் புயல் போன்ற பிரச்சினைகள் தாக்குகின்றன. ஆனால், யெகோவா நமக்குத் துணையாக இருப்பதால் நாம் தைரியமாக இந்தப் பயணத்தைத் தொடரலாம். இயேசுவையும் தேவதூதர்களையும் பயன்படுத்தி யெகோவா நமக்கு உதவுவார். சிலசமயங்களில், அதிகாரத்தில் இருப்பவர்களைப் பயன்படுத்தியும் நமக்கு உதவுவார். அதுமட்டுமல்ல, தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி நமக்கு உதவுவதற்காக சகோதர சகோதரிகளுடைய மனதைத் தூண்டுவார். நம்மில் நிறைய பேர் இதை அனுபவித்திருப்போம்! அதனால், அப்போஸ்தலன் பவுலைப் போலவே நாமும் நம்பிக்கையோடு இப்படிச் சொல்லலாம்: “யெகோவா எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன், மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?”—எபி. 13:6.
பாட்டு 60 அவர் உன்னைப் பலப்படுத்துவார்
a அப்போஸ்தலன் பவுலுக்கு பிரச்சினைகள் வந்தபோது யெகோவா அவருக்கு உதவிய மூன்று வழிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இவற்றைப் பற்றித் தெரிந்துகொண்டால், புயல்போன்ற பிரச்சினைகள் தாக்கும்போது யெகோவா நமக்கும் துணையாக இருப்பார் என்ற நம்பிக்கை அதிகமாகும்.
b அரிஸ்தர்க்குவும் லூக்காவும் ஏற்கெனவே பவுலோடு சேர்ந்து மற்ற இடங்களுக்குப் பயணம் செய்திருக்கிறார்கள். பவுல் ரோமில் சிறையில் இருந்தபோது இவர்களும் ரோமில் இருந்தார்கள்.—அப். 16:10-12; 20:4; கொலோ. 4:10, 14.
c காவற்கோபுரம், ஜனவரி 15, 2009, பக். 13- 14, பாரா. 5-9-ஐப் பாருங்கள்.