“ஒருவரையொருவர் உபசரியுங்கள்”
முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பெபேயாள் என்ற கிறிஸ்தவப் பெண் ஒரு பிரச்சினையை எதிர்ப்பட்டாள். இவள் கிரீஸிலுள்ள கெங்கிரேயா பட்டணத்திலிருந்து ரோமாபுரியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தாள். இவளுக்கு அந்தப் பட்டணத்திலிருந்த சக விசுவாசிகள் யாரையும் தெரியாது. (ரோமர் 16:1, 2) “[அன்றைய] ரோம உலகம் படுமோசமானதாக, கொடூரமானதாக இருந்தது. அங்கிருந்த விடுதிகளோ ஒழுக்கநெறி தவறாத ஒரு பெண்ணுக்கு, முக்கியமாகக் கிறிஸ்தவப் பெண்ணுக்கு லாயக்கற்றவையாக, அவப்பெயர் பெற்றவையாக இருந்தன” என்கிறார் பைபிள் மொழிபெயர்ப்பாளரான எட்கர் குட்ஸ்பீட். அப்படியென்றால் பெபேயாள் எங்கே தங்க முடியும்?
பைபிள் காலங்களில் மக்கள் பல இடங்களுக்கும் பயணித்தார்கள். யூதேயா, கலிலேயா முழுவதிலும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக இயேசு கிறிஸ்துவும் அவரது சீஷர்களும்கூட பயணித்தார்கள். அதற்குப் பிறகு சீக்கிரத்திலேயே, பவுல் போன்ற கிறிஸ்தவ மிஷனரிகள் மத்தியதரைக் கடலைச் சுற்றியிருந்த வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள்; ரோம சாம்ராஜ்யத்தின் தலைநகரான ரோமாபுரிக்கும் சென்றார்கள். யூத பிராந்தியத்திற்கு உள்ளேயும்சரி வெளியேயும்சரி முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பயணித்த சமயங்களில் அவர்கள் எங்கே தங்கினார்கள்? தங்குமிடத்தைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் என்ன பிரச்சினைகளை எதிர்ப்பட்டார்கள்? உபசரிப்பது சம்பந்தமாக அவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
“இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்”
உபசரித்தல் என்பதற்கு, விருந்தினரை அன்போடு வரவேற்று, தேவையானவற்றைத் தாராளமாகச் செய்தல் என விளக்கம் அளிக்கப்படுகிறது. இது யெகோவாவின் மெய் வணக்கத்தாருக்கே உரிய பண்பாக இருந்து வருகிறது. உதாரணமாக, ஆபிரகாம், லோத்து, ரெபெக்காள் ஆகியோர் அந்நியரை உபசரித்தார்கள். (ஆதியாகமம் 18:1-8; 19:1-3; 24:17-20) கோத்திரப் பிதாவான யோபு, அந்நியரிடம் தான் நடந்துகொண்ட விதத்தைப் பற்றி சொல்லுகையில், “பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்” என்பதாகக் குறிப்பிட்டார்.—யோபு 31:32.
சக இஸ்ரவேலரின் உபசரிப்பைப் பெற விரும்பிய பயணிகள், அத்தகைய அழைப்பைப் பெறுவதற்குப் பெரும்பாலும் நகரத்தின் வீதியில், அதாவது சதுக்கத்தில் உட்கார்ந்திருந்தாலே போதுமானதாக இருந்தது. (நியாயாதிபதிகள் 19:15-21) உபசரிப்பவர்கள் பொதுவாக தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளின் கால்களைக் கழுவிவிட்டு, அவர்களுக்கு உணவையும் பானத்தையும் கொடுத்தார்கள், அவர்களுடைய மிருகங்களுக்குத் தீவனமும் கொடுத்தார்கள். (ஆதியாகமம் 18:4, 5; 19:2; 24:32, 33) உபசரிப்பவர்களுக்குப் பாரமாக இருக்க விரும்பாத பயணிகளோ தங்களுக்குத் தேவையான ரொட்டியையும் திராட்சரசத்தையும், தங்கள் கழுதைகளுக்குத் தேவையான தீவனத்தையும் கையோடு எடுத்து வந்தார்கள். இராப் பொழுதைக் கழிக்க அவர்களுக்கு இடம் மட்டுமே தேவைப்பட்டது.
பிரசங்கிப்பதற்காகப் பயணித்த சமயங்களில் இயேசு எங்கு தங்கினார் என்பதைப் பற்றி பைபிள் அவ்வளவாகச் சொல்வதில்லை; ஆனால் அவரும் அவரது சீஷர்களும் ஏதோவொரு இடத்தில் தூங்க வேண்டியிருந்தது. (லூக்கா 9:58) எரிகோவுக்குச் சென்றபோது அவர் சகேயுவிடம் “இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்” என்பதாக மட்டுமே சொன்னார். தன் விருந்தாளியை சகேயு “சந்தோஷத்தோடே” ஏற்றுக்கொண்டார். (லூக்கா 19:5, 6) இயேசு பெத்தானியாவுக்குச் செல்கையில் அவரது நண்பர்களாக இருந்த மார்த்தாள், மரியாள், லாசரு என்பவர்களின் வீட்டில் பெரும்பாலும் தங்கினார். (லூக்கா 10:38; யோவான் 11:1, 5, 18) கப்பர்நகூமுக்குச் செல்கையில் அவர் சீமோன் பேதுருவின் வீட்டில் தங்கினதாகத் தெரிகிறது.—மாற்கு 1:21, 29-35.
ஊழியம் சம்பந்தமாகத் தம்முடைய 12 அப்போஸ்தலர்களுக்கு இயேசு கொடுத்த அறிவுரையிலிருந்து, இஸ்ரவேலிலே அவர்கள் எப்படிப்பட்ட வரவேற்பை எதிர்பார்க்கலாம் என்பது தெரிய வருகிறது. “உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது செம்பையாவது, வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்க வேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான். எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும் போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்” என அவர்களிடம் கூறினார். (மத்தேயு 10:9-11) நல்மனமுள்ள ஆட்கள் தம் சீஷர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு உணவையும் உறைவிடத்தையும் தேவையான மற்றவற்றையும் கொடுப்பார்கள் என அவர் அறிந்திருந்தார்.
இருப்பினும், பயணம் செய்யும் சுவிசேஷகர்கள் தங்களுடைய தேவைகளையும் தங்களுக்கு ஆகும் செலவுகளையும் தாங்களே கவனித்துக்கொள்ள வேண்டிய காலம் வரவிருந்தது. தம் சீஷர்கள் இனி வரவிருந்த நாட்களில் பகைமையை எதிர்ப்படப் போவதையும் இஸ்ரவேல் தேசத்திற்கு வெளியே பிரசங்க ஊழியம் விஸ்தரிக்கப்படவிருந்ததையும் மனதில் வைத்து, “பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்” என்று இயேசு சொன்னார். (லூக்கா 22:36) நற்செய்தியைப் பரப்புவதற்காகப் பயணிப்பதும் தங்குவதும் தவிர்க்க முடியாதவையாகிவிடும்.
“உபசரிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்”
முதல் நூற்றாண்டின்போது ரோம சாம்ராஜ்யத்தில் ஓரளவு சமாதானம் நிலவியதாலும், எங்கும் தளம் பாவப்பட்ட சாலைகள் பெருமளவு இருந்ததாலும் மக்கள் அடிக்கடி பயணித்தார்கள்.a எக்கச்சக்கமானோர் இப்படி பயணித்ததால் தங்கும் இடங்களுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டது. முக்கிய சாலைகளில் வழிநெடுக ஒருநாள் பயண தூரத்தில் இருந்த விடுதிகள் இந்தக் கிராக்கிக்கு ஈடுகொடுத்தன. இருந்தாலும் கிரேக்க-ரோம சூழலில் அப்போஸ்தலரின் நடபடிகள் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “இத்தகைய தங்குமிடங்களைப் பற்றி இலக்கியத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளும் தகவல்கள் சங்கடத்தை அளிக்கின்றன. இன்று வரையுள்ள இலக்கியமும், தொல்லியல் ஆதாரங்களும் பொதுவாக அளிக்கும் அத்தாட்சிப்படி அந்தத் தங்குமிடங்கள் பாழடைந்தவையாக, அசுத்தமானவையாக, தங்கும் வசதிகள் இல்லாதவையாக, மூட்டைப் பூச்சிகள் நிறைந்தவையாக, உணவும் பானமும் வாயில் வைக்க முடியாதவையாக இருந்தன; அதன் நடத்துனர்களும் வேலையாட்களும் நம்பகமற்றவர்களாகவும், தங்க வருபவர்கள் மரியாதையற்றவர்களாகவும், பொதுவாக ஒழுக்கங்கெட்டவர்களாகவும் இருந்தார்கள்.” ஒழுக்கநெறி தவறாத பயணி ஒருவர் முடிந்த மட்டும் இப்படிப்பட்ட விடுதிகளில் தங்குவதைத் தவிர்ப்பார் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே.
அதனால்தான், மற்றவர்களை உபசரிக்கும்படி கிறிஸ்தவர்களை வேதவசனங்கள் அடிக்கடி அறிவுறுத்தியதில் ஆச்சரியமேதுமில்லை. “பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்; உபசரிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்” என ரோமிலிருந்த கிறிஸ்தவர்களை பவுல் ஊக்குவித்தார். (ரோமர் 12:13; NW) “அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு” என யூத கிறிஸ்தவர்களுக்கு அவர் நினைப்பூட்டினார். (எபிரெயர் 13:2) “முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்” என பேதுரு சக வணக்கத்தாருக்குப் புத்திமதி கூறினார்.—1 பேதுரு 4:9.
இருப்பினும், உபசரிக்காதிருக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் இருந்தன. “கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற” யாரையும் “வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்” என அப்போஸ்தலர் யோவான் சொன்னார். (2 யோவான் 9-11) மனந்திரும்பாத பாவிகளைக் குறித்து பவுல் இவ்வாறு எழுதினார்: “சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.”—1 கொரிந்தியர் 5:11.
மெய்க் கிறிஸ்தவர்கள் அன்புடன் உபசரிப்பதை ஏமாற்றுகிறவர்களும் மற்றவர்களும் தங்களுடைய சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முயன்றிருக்க வேண்டும். டீடாஹி அல்லது பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் போதனைகள் (ஆங்கிலம்) எனப்படும் ஓர் ஆவணம் உள்ளது; இது பொ.ச. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிய பைபிள் சாராத ஆவணமாகும். இது பரிந்துரைக்கிறபடி, பயணிக்கும் பிரசங்கிகளை “ஒரு நாளோ, தேவைப்பட்டால் இரண்டு நாட்களோ” உபசரிக்கலாம். பிறகு அவர் புறப்பட்டு செல்லுகையில் “உணவை மட்டுமே அவருக்குக் கொடுக்க வேண்டும் . . . பணத்தைக் கேட்டால் அவர் ஒரு பொய் தீர்க்கதரிசியாவார். அவர் உங்களுடனேயே தங்கியிருக்க விரும்பினால் அவருக்குக் கைவேலையும் தெரிந்திருந்தால் தன் சாப்பாட்டிற்காக அவர் வேலை செய்யட்டும். ஆனால் அவருக்குக் கைவேலை எதுவும் தெரியாதபட்சத்தில் அவரைப் பராமரித்தால் அவருக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும், ஏனெனில் ஒரு கிறிஸ்தவர் வெறுமனே வேலை செய்யாமல் இருக்கக்கூடாது. அப்படி அவர் இருந்தால் கிறிஸ்தவத்தைச் சுரண்டிப் பிழைப்பவராக இருப்பார். அப்படிப்பட்டவர்களைக் குறித்து ஜாக்கிரதை” என்பதாக அந்த ஆவணம் சொல்கிறது.
அப்போஸ்தலன் பவுல் சில நகரங்களில் நீண்ட காலம் தங்கியிருக்கையில், தன்னை விருந்தாளியாக ஏற்றுக்கொண்டவர்களுக்குப் பெரும் சுமையாகி விடாதபடிக்குக் கவனமாக இருந்தார். தன்னைப் பராமரித்துக் கொள்வதற்குக் கூடாரத் தொழில் செய்தார். (அப்போஸ்தலர் 18:1-3; 2 தெசலோனிக்கேயர் 3:7-12) தங்கள் மத்தியில் இப்படி பயணித்து வந்த, பராமரிப்பைப் பெற தகுதியானவர்களுக்கு உதவுவதற்காக, ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் சிபாரிசு கடிதங்களைக் கொடுத்து அனுப்பியதாகத் தெரிகிறது; இந்த விதத்தில்தான் பவுலும் பெபேயாளை அறிமுகம் செய்து வைத்தார். “நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் . . . ஏற்றுக்கொண்டு, எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்ய வேண்டு”மென்று அவர் எழுதினார்.—ரோமர் 16:1, 2.
உபசரிப்பதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
தங்களுடைய தேவைகள் அனைத்தையும் யெகோவா கவனித்துக் கொள்வார் என முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ மிஷனரிகள் அவர் மீது நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் சக விசுவாசிகளின் உபசரிப்பிலிருந்து பயனடையும்படி அவர்கள் எதிர்பார்த்தார்களா? பவுலும் மற்றவர்களும் தங்குவதற்கு லீதியாள் தன் வீட்டைக் கொடுத்தாள். கொரிந்து பட்டணத்தில் ஆக்கில்லாவோடும் பிரிஸ்கில்லாளோடும் பவுல் தங்கினார். பிலிப்பியிலிருந்த ஒரு சிறைச்சாலைக்காரன் பவுலுக்கும் சீலாவுக்கும் உணவளித்தார். தெசலோனிக்கேயிலிருந்த யாசோன், செசரியாவிலிருந்த பிலிப்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்கு செல்லும் வழியில் இருந்த மினாசோன் ஆகியோர் பவுலை வரவேற்று உபசரித்தார்கள். ரோமாபுரிக்குச் செல்லும் வழியில் புத்தேயோலியிலிருந்த சகோதரர்கள் பவுலுக்கு விருந்தளித்தார்கள். இப்படி உபசரித்தவர்கள் அவருடன் நேரம் செலவிட்டது ஆன்மீக ரீதியில் பயனளித்திருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை!—அப்போஸ்தலர் 16:33, 34; 17:7; 18:1-3; 21:8, 16; 28:13, 14.
ஃபிரெட்ரிக் எஃப். ப்ரூஸ் என்ற கல்விமான் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கிறார்: “பவுல் மீது இருந்த அன்பும் அவர் யாருக்கு ஊழியம் செய்தாரோ அந்த எஜமானர் மீதிருந்த அன்புமே நண்பர்களாகவும், சக ஊழியர்களாகவும் இருந்த ஆண்களையும், பெண்களையும் உபசரிக்கும்படி தூண்டியதே அல்லாமல் வேறு உள்நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை. பவுலுக்குச் சேவை செய்கையில் அது கிறிஸ்துவுக்குச் செய்வதைப் போல் நினைத்தார்கள்.” இதுவே உபசரிப்பதற்கு அருமையான உள்நோக்கமாகும்.
இன்றும் உபசரிப்பதற்கான தேவை இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளின் மத்தியிலுள்ள ஆயிரக்கணக்கான பயணப் பிரதிநிதிகள் சக விசுவாசிகளின் உபசரிப்பை அனுபவிக்கிறார்கள். நற்செய்தி சென்றெட்ட முடியாத இடங்களுக்குத் தங்கள் சொந்த செலவில் சென்று சில ராஜ்ய பிரஸ்தாபிகள் பிரசங்கிக்கிறார்கள். நம் வீடு எவ்வளவு எளிமையானதாக இருந்தாலும் இப்படிப்பட்டவர்களுக்கு இடமளிப்பது பெரும் ஆசீர்வாதங்களைத் தரும். எளிய உணவுடன் அன்போடு உபசரிப்பது, ‘ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுதலைப் பெறுவதற்கும்’ நம் சகோதரர்களிடமும் கடவுளிடமும் அன்பு காட்டுவதற்கும் அருமையான வாய்ப்புகளை அளிக்கிறது. (ரோமர் [உரோமையர்] 1:11, 12, பொது மொழிபெயர்ப்பு) இத்தகைய சந்தர்ப்பங்கள் விருந்தளிப்பவருக்கு முக்கியமாய் பயனளிக்கும் சந்தர்ப்பங்களாகும், ஏனெனில் “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி” இருக்கிறது.—அப்போஸ்தலர் 20:35, NW.
[அடிக்குறிப்பு]
a பொ.ச. 100-ம் வருடத்திற்குள் ரோமர்கள் சுமார் 80,000 கிலோமீட்டருக்குத் தளம் பாவப்பட்ட சாலைகளை அமைத்திருந்தார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
[பக்கம் 23-ன் படம்]
கிறிஸ்தவர்கள் ‘உபசரிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்’