தெர்தியு பவுலின் உண்மையுள்ள செயலர்
தெர்தியு கடினமான ஒரு வேலையை எதிர்ப்பட்டார். அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியிலிருந்த உடன் கிறிஸ்தவர்களுக்கு நீண்டதொரு கடிதத்தை எழுதியபோது இவரை செயலராக பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். இது கடினமான ஒரு வேலையாக இருக்கும்.
பொ.ச. முதல் நூற்றாண்டில் ஒரு செயலராக இருப்பது ஏன் அவ்வளவு கடினமாக இருந்தது? இந்த வேலை எவ்வாறு செய்யப்பட்டது? எழுதுவதற்கு என்ன பொருட்கள் அப்போது பயன்படுத்தப்பட்டன?
பண்டைய காலங்களில் செயலர்கள்
பண்டைய கிரேக்க-ரோம சமுதாயத்தில், பல்வேறு வகையான செயலர்கள் இருந்தனர். சிலர் அரசாங்க செயலராக சேவித்தனர்—பல்கலைக் கழக வேந்தர்களின் அலுவலகத்தில் வேலைசெய்துவந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள். சந்தைவெளிகளில் குடிமக்களுக்கு தங்களுடைய சேவையை அளித்த சமுதாய செயலர்களும்கூட இருந்தனர். தனி செயலர்களை (அநேகமாக அடிமைகளை) செல்வந்தர்கள் வைத்துக்கொண்டார்கள். மேலுமாக, மற்றவர்களுக்காக கடிதங்களை எழுதுவதற்கு பிரியமுள்ளவர்களாயிருந்து அதைச் செய்ய முன்வந்த நண்பர்களும்கூட அங்கே இருந்தார்கள். கல்விமான் இ. ராண்டால்ஃப் ரிச்சர்ட்ஸ் என்பவரின்படி, இந்த உத்தியோகப்பூர்வமற்ற செயலர்கள், “மொழியில் மற்றும்/அல்லது எழுதும் முறையில் குறைந்தபட்ச திறமை பெற்றவர்களிலிருந்து, திருத்தமாகவும், சரியாகவும் கவர்ச்சியாகவும் வேகமாக ஒரு கடிதத்தைத் தயார் செய்யக்கூடிய மிக அதிக தேர்ச்சிபெற்றவர்கள் வரையாக இருந்தார்கள்.”
செயலர்களை யார் பயன்படுத்துவார்? முதலாவதாக, எழுதவும் படிக்கவும் தெரியாதவர்கள். அநேக பண்டைய ஒப்பந்தங்களிலும் வியாபார கடிதங்களிலும் தன்னிடமாக இந்த வேலையை ஒப்படைத்த அந்த நபரின் இயலாமையின் காரணமாக தான் அந்த ஆவணத்தை எழுதியதாக செயலர் கையொப்பமிட்டு எழுதிய குறிப்புகள் முடிவில் காணப்பட்டன. ஒரு செயலரைப் பயன்படுத்துவதற்கு இரண்டாவது காரணத்தை எகிப்திலிருந்த தேபேசுவிலிருந்து பெறப்பட்ட பண்டைய கடிதம் விளக்குகிறது. ஆஸ்கிலிப்பேடிஸ் என்ற ஒருவருக்கு எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதம் முடிவில் இவ்விதமாக சொன்னது: “அவர் கொஞ்சம் மெதுவாக எழுதுவதன் காரணமாக . . . எர்மாவின் மகன் இவ்மேலஸ் அவருக்காக இதை எழுதியிருக்கிறார்.”
இருப்பினும், எழுதப் படிக்க தெரிந்திருப்பதுதானே செயலர் ஒருவரைப் பயன்படுத்திக்கொள்ளுவதை தீர்மானிக்கும் ஒரு காரணியாக தோன்றவில்லை. பைபிள் விளக்கவுரையாளர் ஜான் எல். மெக்கன்சியின் பிரகாரம், “தெளிவாக வாசிக்கும்படியாக இருக்கவேண்டும் என்பதற்காககூட இல்லை, ஆனால் அழகாகவும் குறைந்தபட்சம் நேர்த்தியாகவும்” இருக்கவேண்டும் என்பதற்காகவே செயலரின் சேவைகளை மக்கள் நாடினார்கள். விசேஷமாக நீளமாகவும் விளக்கமாகவும் விஷயங்கள் எழுதப்பட வேண்டியதாக இருக்கையில் கல்வி கற்றவர்களுக்கும்கூட எழுதுவது சலிப்பூட்டுவதாக இருந்தது. செயலர்களைப் பயன்படுத்திக்கொள்ள முடிகிற எவரும் “இதை அடிமைகளான தொழில்முறை வேதபாரகர்கள் கவனித்துக்கொள்ளும்படியாக ஒப்படைத்துவிட்டு தாங்கள் எழுதாமலேயே இருந்துவிட்டனர்” என்பதாக கல்விமான் ஜே. ஏ. எஷ்லிமேன் சொல்லுகிறார். மேலுமாக, எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் வேலை நிலைமைகளையும் சிந்திக்கையில் மக்கள் ஏன் சொந்தமாக கடிதங்களை எழுத விரும்பவில்லை என்பதை புரிந்துகொள்வது எளிதாக இருக்கிறது.
நாணல் புல்லே எழுதுவதற்கு பொ.ச. முதல் நூற்றாண்டில் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டது. இந்தத் தாவரத்தின் நடுத்தண்டுகளின் மெல்லிய உள்ளீட்டுக்குரிய மையப்பகுதியை நீளவாட்டில் வெட்டுவதன் மூலம் நீண்ட குறுகிய மெல்லிய துண்டுகள் கிடைத்தன. பல மெல்லிய துண்டுகளாலான அடுக்கு ஒன்று பரப்பி வைக்கப்பட்டது. மற்றொரு அடுக்கு முதல் அடுக்கின்மீது நேர்கோணத்தில் வைக்கப்பட்டது. இரண்டும் அழுத்த ஆற்றலால் ஒட்டவைக்கப்பட்டு ஒரு “தாள்” உருவாக்கப்பட்டது.
இந்த மேற்பரப்பின்மீது எழுதுவது எளிதாக இல்லை. அது கரடுமுரடாகவும் நார்நாராகவும் இருந்தது. அன்ஜெலோ பென்னா என்ற கல்விமானின் பிரகாரம், “நாணற்புல்லின் சிறு துவாரங்கள் நிறைந்த நார்களினால், குறிப்பாக மெல்லிய துண்டுகளுக்கிடையே எப்போதும் இருந்த சிறிய பள்ளங்களின் ஓரமாக மை பரவியது.” செயலர் சப்பணம் போட்டுத் தரையில் அமர்ந்து பலகையின்மீது நாணற்புல் தாளை வைத்து ஒரு கையால் பிடித்துக்கொண்டு வேலைசெய்வார். அவர் அனுபவமில்லாதவராக இருந்து பொருட்கள் தரமுள்ளவையாக இல்லாமல் இருந்தால், அவருடைய இறகு பேனா அல்லது நாணல் பேனா நாணற்புல்லில்பட்டு தாள் கிழிந்துபோகலாம் அல்லது எழுத்துக்கள் படிக்க முடியாதபடி ஆகிவிடலாம்.
புகைக்கரியும் பிசினும் கலந்து மை தயாரிக்கப்பட்டது. துண்டுகளாக விற்கப்படுவதால், அதை எழுதப் பயன்படுத்துவதற்கு முன்பாக ஒரு மைக்கூட்டில் வைத்து அது தண்ணீரில் கரையும்படி செய்யப்படவேண்டும். தெர்தியு போன்ற ஒரு செயலர் நாணல் பேனாவை கூர்மையாக்குவதற்கு ஒரு கத்தி, தன்னுடைய பிழைகளை அழித்துவிடுவதற்கு ஈரமான உறிஞ்சக்கூடிய ஒரு பஞ்சு போன்ற மற்ற கருவிகளையும்கூட வைத்திருப்பார். ஒவ்வொரு எழுத்தையும் கவனமாக எழுதவேண்டும். ஆகவே எழுதுவது மெதுவாகவும் கொஞ்சம் சிரமத்தோடுமே செய்யப்பட்டது.
‘தெர்தியுவாகிய நான் உங்களை வாழ்த்துகிறேன்’
ரோமர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்தின் முடிவில் சேர்க்கப்பட்டிருக்கும் வாழ்த்துதல்களில் அவருடைய செயலரின் வாழ்த்துதலும் இடம்பெறுகிறது. அவர் பின்வருமாறு எழுதினார்: “இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.” (ரோமர் 16:22) இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரமே பவுலின் எழுத்துக்களில் அவருடைய செயலர்களில் ஒருவரைப்பற்றி தெளிவான குறிப்பு உள்ளது.
தெர்தியுவைப்பற்றி நமக்கு அதிகம் தெரியாது. ‘கர்த்தருக்குள்’ என்ற அவருடைய வாழ்த்துதலிலிருந்து அவர் ஒரு உண்மையுள்ள கிறிஸ்தவராக இருந்தார் என்ற முடிவுக்கு நாம் ஒருவேளை வரலாம். அவர் கொரிந்துவிலிருந்த சபையில் ஒரு உறுப்பினராக இருந்திருக்கவேண்டும்; ரோமாபுரியில் அநேக கிறிஸ்தவர்களை அறிந்தவராக இருக்கவேண்டும். பைபிள் கல்விமான் ஜூசப்பா பார்காலியோ, தெர்தியு ஒரு அடிமையாக அல்லது விடுதலைபெற்ற அடிமையாக இருக்கவேண்டும் என்பதாக தெரிவிக்கிறார். ஏன்? முதலாவதாக, “வேதபாரகர் பொதுவாக இந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்; அடுத்து, அவருடைய லத்தீன் பெயர் . . . அடிமைகள் மற்றும் விடுதலைபெற்றவர்கள் மத்தியில் மிகவும் சாதாரணமாக இருந்தது.” “ஆகவே, அவர் ‘நடுநிலைமை வகிக்கும்’ தொழில்முறை எழுத்தாளர் அல்ல, அவர் ஒரு உடன்வேலையாளாக இருந்தார்; இந்த விதத்தில் பவுலுக்கு அவருடைய மிக நீளமான, அதிக தெளிவான எழுத்துக்களில் ஒன்றைத் தொகுப்பதற்கு ஒத்தாசையாக இருந்தார். இது, பவுலுக்கு நேரத்தையும் களைப்பையும் மிச்சப்படுத்த உதவிய மிகவும் மதிப்புள்ள ஒரு சேவையாக இருந்தது” என்பதாக பார்காலியோ சொல்லுகிறார்.
தெர்தியுவின் இந்த எழுத்துக்கள் நிச்சயமாகவே விலைமதிப்புள்ளவை. பாருக், எரேமியாவுக்கு இதே போன்ற ஒரு வேலையைச் செய்தார்; சில்வானும் பேதுருவுக்கு இதைச் செய்தார். (எரேமியா 36:4; 1 பேதுரு 5:12) இப்படிப்பட்ட உடன்வேலையாட்கள் என்னே ஒரு சிலாக்கியத்தைக் கொண்டிருந்தனர்!
ரோமர்களுக்கு எழுதுகையில்
பவுல் ஒருவேளை கொரிந்துவில் காயுவின் வீட்டில் விருந்தாளியாக இருந்தபோது ரோமர்களுக்கு கடிதம் எழுதினார். அது சுமார் பொ.ச. 56-ல் அப்போஸ்தலனின் மூன்றாவது மிஷனரி பிரயாணத்தின்போது எழுதப்பட்டது. (ரோமர் 16:23) பவுல் இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு தெர்தியுவை தன்னுடைய செயலராக பயன்படுத்தினார் என்பதை நாம் நிச்சயமாக அறிந்திருக்கிறபோதிலும், அவரை சரியாக எப்படி பயன்படுத்தினார் என்பது நமக்குத் தெரியாது. எந்த முறை கையாளப்பட்டிருந்தாலும் சரி, வேலை சுலபமாக செய்யப்பட்டிருக்க முடியாது. ஆனால் நாம் இதைக் குறித்து நிச்சயமாயிருக்கலாம்: பைபிளின் மீதமுள்ள பாகத்தைப் போலவே, ரோமர்களுக்கு பவுல் எழுதின கடிதம் “தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.”—2 தீமோத்தேயு 3:16, 17.
இந்தக் கடிதம் எழுதி முடிக்கப்பட்டபோது, அநேக நாணற்புல் தாள்களைப் பயன்படுத்தி தெர்தியுவும் பவுலும் ஆயிரக்கணக்கான வார்த்தைகளை எழுதியிருந்தார்கள். ஓரத்தில் அவை ஒன்றோடொன்று ஒட்ட வைக்கப்பட்டபின்பு, இந்தத் தாள்கள் சுமார் மூன்றிலிருந்து நான்கு மீட்டர்கள் நீளமுள்ள ஒரு சுருளாக உருவானது. கடிதம் கவனமாக சுருட்டப்பட்டு முத்திரையிடப்பட்டது. பின்னர் பவுல் அதை ரோமாபுரிக்கு பயணத்தை மேற்கொள்ளவிருந்த கெங்கிரேயா ஊர் சபையைச் சேர்ந்த பெபேயாள் என்ற சகோதரியிடம் கொடுத்து அனுப்பியதாக தெரிகிறது.—ரோமர் 16:1, 2.
முதல் நூற்றாண்டு முதற்கொண்டு, எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் முறைகள் வெகுவாக மாறிவிட்டிருக்கின்றன. ஆனால் நூற்றாண்டுகளினூடாக, ரோம கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்ட கடிதம் கடவுளால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. பவுலின் உண்மையும் கடின உழைப்பாளியுமான செயலர் தெர்தியுவின் உதவியினால் எழுதப்பட்ட யெகோவாவின் வார்த்தையினுடைய இந்தப் பாகத்துக்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்!