நம்முடைய சகோதரர்களுக்குப் போற்றுதல்
“நீங்கள் மாயமற்ற சகோதர பாசமுள்ளவர்களாய் . . . இருதயத்திலிருந்து ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்.” —1 பேதுரு 1:22, NW.
அன்பு மெய்க்கிறிஸ்தவத்தின் அதிகாரப்பூர்வமான முத்திரையாகும். இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களோடு புசித்த கடைசி போஜனத்தின்போது, அவர் இதை வலியுறுத்திச் சொன்னதாவது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.” (யோவான் 13:34, 35) யெகோவாவின் சாட்சிகள் மெய்க் கிறிஸ்தவத்தை அப்பியாசித்து வருகிறார்கள் என்று அநேக ஆட்களை நம்பச் செய்தது, அவர்கள் ராஜ்ய மன்றத்தில் ஒரு கூட்டத்துக்கு அல்லது ஒரு பெரிய மாநாட்டுக்கு முதல் முறையாகச் சென்றிருந்த சமயமாக இருந்திருக்கிறது. அவர்கள் செயலில் அன்பைக் கவனித்தார்கள். இதன் மூலமாக தாங்கள் கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் மத்தியிலிருப்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள்.
2 மெய்க்கிறிஸ்தவத்தின் இந்தக் குறிப்பிடத்தக்க அடையாளத்தை இன்று யெகோவாவின் ஜனங்கள் மத்தியில் கண்டுணர முடிவது குறித்து நாம் அனைவருமே களிகூருகிறோம். என்றபோதிலும், பூர்வ கிறிஸ்தவர்களைப் போலவே, நாம் நம்முடைய சகோதரர்களுக்கு போற்றுதலை வெளிக்காட்ட கூடுதலான வழிகளை இடைவிடாமல் தேடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் உணருகிறோம். தெசலோனிக்கேயாவிலிருந்த சபைக்கு பவுல் எழுதியதாவது: “நீங்கள் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பில் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்வாராக.” (1 தெசலோனிக்கேயர் 3:12) ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பில் நாம் எவ்விதமாக பெருகலாம்?
அன்பும் அதோடுகூட சகோதர பாசமும்
3 சிறிய ஆசியாவிலிருந்த கிறிஸ்தவ சபைக்கு முகவரியிட்டு எழுதிய பொதுவான கடிதமொன்றில், அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதியதாவது: “நீங்கள் மாயமற்ற சகோதர பாசமுள்ளவர்களாகும்படி [பிலெதெல்பியா] ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் [அல்லது வாழ்க்கையை] சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள் [அகாப்பேயோ கருத்தில்].” (1 பேதுரு 1:22) நம்முடைய வாழ்க்கையைச் சுத்தமாக்குவது மட்டுமே போதாது என்பதைப் பேதுரு காண்பிக்கிறான். புதிதான கட்டளை உட்பட சத்தியத்துக்கு நாம் கீழ்ப்படிந்திருப்பது மாயமற்ற சகோதர பாசத்திலும் ஒருவருக்கொருவர் ஊக்கமான அன்பைக் காட்டுவதிலும் விளைவடைய வேண்டும்.
4 நம்முடைய சகோதரர்களிடத்தில் நம்முடைய அன்பையும் போற்றுதலையும் நாம் விரும்புகிறவர்களிடம் மாத்திரமே வெளியிடும் மனச்சாய்வு நமக்கிருக்கிறதா? இவர்கள் செய்யும் தவறுகளுக்கு நம்முடைய கண்களை மூடிக்கொண்டு இவர்களிடம் பெருந்தன்மையுள்ளவர்களாக நடந்துகொள்கையில் இயற்கையாக நமக்கு ஒரு கவர்ச்சி ஏற்படாத மற்றவர்களுடைய தப்பிதங்களையும் குறைகளையும் நாம் கவனிக்க விரைவுபடுகிறோமா? இயேசு சொன்னார்: “உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால் [அகாப்பேயோ கருத்தில்] உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?”—மத்தேயு 5:46.
5 புதிய ஏற்பாட்டு வார்த்தைகள் என்ற தன்னுடைய புத்தகத்தில் பேராசிரியர் வில்லியம் பார்க்லே “பாசம்” என்பதாகவும் “அன்பு” என்பதாகவும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தையைப் பற்றி பின்வரும் இந்தக் குறிப்புகளைத் தருகிறார்: “இந்த வார்த்தைகளில் [“பாசம்” என்று பொருள்படும் பிலியா என்ற சொல்லிலும் அதோடு சம்பந்தப்பட்ட வினைச் சொல்லாகிய பிலியோ என்பதிலும்] அழகான உணர்ச்சிகள் உட்படும் ஒரு மனநிலை இருக்கிறது. அவை பாசமுள்ள மரியாதையோடு ஒருவரைப் பாவித்து நடத்துவதை அர்த்தப்படுத்துகின்றன. . . . பெரிய அளவில், அன்புக்கு மிகப் பொதுவான புதிய ஏற்பாட்டு வார்த்தைகள் பெயர்ச்சொல் அகாப்பே மற்றும் வினைச்சொல் அகாப்பேன். . . . பிலியா ஓர் அழகான வார்த்தையாக இருந்தது. ஆனால் அது நிச்சயமாகவே உணர்ச்சிகளை உட்படுத்தும் நெருக்கமான மற்றும் பாசமான ஒரு வார்த்தையாகும். . . . அகாப்பே என்ற சொல் மனதோடு சம்பந்தப்பட்டதாக உள்ளது: இது நம்முடைய இருதயங்களில் தற்போக்காக எழும் வெறும் ஓர் உணர்ச்சி அல்ல; அது நாம் மனமார விரும்பி அதன்படி வாழுகின்ற ஒரு கொள்கையாக இருக்கிறது. அகாப்பே என்பது உச்ச உயர் அளவாக விரும்பி செய்கிறதோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. இது வெற்றி கொள்வதாக, வெற்றியாக, ஒரு சாதனையாக இருக்கிறது. எவருமே தன் சத்துருக்களை ஒருபோதும் இயல்பாக நேசிப்பதில்லை. ஒருவருடைய சத்துருக்களை சிநேகிப்பது என்பது, நம்முடைய எல்லா இயல்பான மனச்சாய்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் மீதும் பெறப்படும் ஒரு வெற்றியாக இருக்கிறது. இந்த அகாப்பே . . . விரும்பத்தகாததாக இருப்பவர்களில் அன்புகூரும் சக்தியாக, நாம் விரும்பாத ஆட்களில் அன்புகூருவதாக இருக்கிறது.”
6 சகோதரர்களில் மற்றவர்களைவிட சிலரிடமாக நெருக்கமான உணர்ச்சிகளைக் கொண்டிருப்பதை வேதாகமம் அனுமதிக்கிறது என்பதைச் சாக்காக வைத்துக் கொண்டு நம்முடைய உணர்ச்சிகளுக்கு நியாயங்காட்டி வாதிடும் மனச்சாய்வு நமக்கிருக்கிறதா? (யோவான் 19:26; 20:2) கட்டாயத்தின் பேரில் நாம் சிலரிடமாக ஒட்டாத, காரணத்தோடுக்கூடிய “அன்பை” வெளியிட்டு, அதே சமயத்தில் நாம் எவரிடமாக கவர்ந்திழுக்கப்படுகிறோமோ அவர்களுக்காக உணர்ச்சிகளை உட்படுத்தும் சகோதர பாசத்தை நாம் ஒதுக்கி வைக்கலாமா? அப்படியானால், பேதுருவினுடைய அறிவுரையின் குறிப்பை நாம் தவறவிட்டுவிட்டோம். சத்தியத்துக்கு நாம் கீழ்ப்படிவதன் மூலம் நம்முடைய ஆத்துமாக்களை போதிய அளவு நாம் சுத்தமாக்கவில்லை. ஏனென்றால் பேதுரு சொல்வதாவது: “இப்பொழுது சத்தியத்துக்குக் கீழ்ப்படிகிறதினாலே நீங்கள் உங்கள் ஆத்துமாக்களை சுத்தமுள்ளதாக்கியிருக்க, உங்கள் கிறிஸ்தவ சகோதரர்களிடமாக மெய்யான பாசம் ஏற்படும் வரையாக உங்கள் எல்லாப் பலத்தோடு ஒருவரிலொருவர் முழு இருதயத்தோடே அன்புகூருங்கள்.”—1 பேதுரு 1:22, புதிய ஆங்கில பைபிள்.
“மாயமற்ற சகோதர பாசம்”
7 அப்போஸ்தலனாகிய பேதுரு இன்னும் ஒரு படி மேலே செல்கிறான். நம்முடைய சகோதர பாசம் மாயமற்றதாக இருக்க வேண்டும் என்று அவன் சொல்கிறான். “மாயமற்ற” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை கிரேக்க வார்த்தையின் ஓர் எதிர்மறையான உருவிலிருந்து வருகிறது. இது முகமூடியால் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்டு பேசிய மேடை நடிகர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாகும். இது ஒரு நாடகத்தின் போது வித்தியாசமான பல கதாபாத்திரங்களை நடித்துக் காட்ட அவர்களுக்கு உதவியது. இந்த வார்த்தை பின்னர் மாய்மாலம், பாசாங்கு அல்லது நடிப்பு என்ற அடையாள அர்த்தமுள்ள பொருளை ஏற்றுக் கொண்டதாயிற்று.
8 சபையிலுள்ள ஒரு சில சகோதர சகோதரிகளிடமாக நாம் நம்முடைய இருதயத்தின் ஆழத்தில் எவ்விதமாக உணருகிறோம்? கூட்டங்களில் ஒரு புன்சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டு, வேகமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு அல்லது நடந்துகொண்டே அவர்களை வாழ்த்துகிறோமா? இதைவிட மோசமாக, அவர்களை வாழ்த்துவதையே தவிர்க்க நாம் முயற்சி செய்கிறோமா? அப்படியானால் நம்முடைய உடன் கிறிஸ்தவர்களிடமாக மெய்யான பாச உணர்ச்சிகளை ஏற்படுத்துமளவுக்கு நம்முடைய ஆத்துமாக்களைச் சுத்திகரித்திருக்க வேண்டிய நம்முடைய “சத்தியத்துக்குக் கீழ்ப்படிதலைப்” பற்றி என்ன சொல்லப்படலாம்? “மாயமற்ற” என்ற வார்த்தையை உபயோகிப்பதன் மூலம், நம்முடைய சகோதரர்களிடமாக நம்முடைய பாசம் போலி நடிப்பாக இருக்கக்கூடாது என்று பேதுரு சொல்கிறான். அது போலியல்லாததாக இருதயப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.
“இருதயத்திலிருந்து ஊக்கமாய்”
9 பேதுரு கூடுதலாக: “இருதயத்திலிருந்து ஒருவரிலொருவர் ஊக்கமாய் [சொல்லர்த்தமாக, “முழு அளவில் விரிந்து செல்கிற விதமாய்”] அன்புகூருங்கள்” என்கிறான். இயல்பாக நாம் விரும்புகின்றவர்களுக்கும் நம்மை விரும்புகின்றவர்களுக்கும் அன்பைக் காட்டுவதற்கு இருதயத்தை விரிவாக்கி நீட்ட வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவருக்கொருவர் “முழு அளவில் விரிந்து செல்கிற விதமாய்” அன்புகூரும்படியாக பேதுரு நமக்குச் சொல்கிறான். கிறிஸ்தவர்கள் மத்தியில் காண்பிக்கப்படுகையில், அகாப்பே அன்பானது, நம்முடைய சத்துருக்களிடமாக நாம் கொண்டிருக்க வேண்டிய வெறும் அறிவுப்பூர்வமான, காரணங்கொண்ட அன்பாக மாத்திரம் இருப்பதில்லை. (மத்தேயு 5:44) அது ஓர் ஊக்கமான அன்பாக, முயற்சியைத் தேவைப்படுத்துகிறது. அது நம்முடைய இருதயங்களை விரிவாக்குவதை, இயல்பாக நாம் கவர்ந்திழுக்கப்படாத ஆட்களை ஏற்றுக் கொள்ளும் வகையில் அவைகளை அகலமாக்குவதை உட்படுத்துகிறது.
10 கிரேக்க புதிய ஏற்பாட்டுக்கு மொழி ஆய்வு திறவுகோல் (Linguistic Key to the Greek New Testament) என்ற தன்னுடைய புத்தகத்தில், பிரிட்ஸ் ரிநெக்கர் 1 பேதுரு 1:22-ல் “ஊக்கமாய்” அல்லது “முழு அளவில் விரிந்து செல்கிற விதமாய்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தையைப் பற்றி குறிப்பு சொல்கிறார். அவர் எழுதுகிறார்: “அடிப்படை கருத்தானது, சிரத்தையோடு, வைராக்கியத்தோடு என்பதாகும். (கவலையீனமாக ஒரு காரியத்தைச் செய்யாமல் . . . ஆனால் கடுமையாக முயற்சி எடுத்து அதைச் செய்வது) (ஹோர்ட்).” கடுமையாக முயற்சி செய்வது என்பது, மற்ற காரியங்களோடுகூட “உச்ச அளவு விரிவாக்க நீட்டுவது” என்று அர்த்தமாகிறது. ஆகவே இருதயத்திலிருந்து ஒருவரிலொருவர் ஊக்கமாக அன்புகூருவது என்பது, நம்முடைய எல்லாக் கிறிஸ்தவ தோழர்களிடமாகவும் சகோதர பாசத்தைக் கொண்டிருக்க நம்முடைய முயற்சியில் இயன்ற அளவு மும்முரமாக பிரயாசப்படுவதை அர்த்தப்படுத்துகிறது. நம்முடைய கனிவான பாசத்தில் இடத்துக்காக நம்முடைய சகோதர சகோதரிகளில் சிலர் நெருக்கப்படுகிறார்களா? அப்படியென்றால் அதை நாம் விசாலமாக்க வேண்டும்.
“விசாலமாக்குங்கள்”
11 பவுல் அப்போஸ்தலன் கொரிந்து சபையில் இதற்கான தேவை இருப்பதை உணர்ந்திருக்க வேண்டும். அங்கிருந்த கிறிஸ்தவர்களுக்கு அவன் எழுதியதாவது: “கொரிந்தியரே, எங்கள் வாய் உங்களோடே பேசத் திறந்திருக்கிறது, எங்கள் இருதயம் விசாலமாயிருக்கிறது. எங்கள் உள்ளம் உங்களைக் குறித்து நெருக்கமடையவில்லை, உங்கள் உள்ளமே எங்களைக் குறித்து நெருக்கமடைந்திருக்கிறது. ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் விசாலமாகுங்களென்று பிள்ளைகளுக்குச் சொல்கிறது போல, உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—2 கொரிந்தியர் 6:11–13.
12 நம்முடைய எல்லாச் சகோதர சகோதரிகளையும் உள்ளடக்குவதற்கு நம்முடைய இருதயங்களை நாம் எவ்விதமாக விசாலமாக்கலாம்? இந்த விஷயத்தில் பவுல் ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்தான். அவன் தன்னுடைய சகோதரர்களில் மிகச் சிறந்ததைத் தேடினான், அவன் அவர்களை அவர்களுடைய குறைகளுக்காக அல்ல, ஆனால் அவர்களுடைய நல்ல பண்புகளுக்காகவே நினைவுகூர்ந்தான் என்பது தெளிவாக இருக்கிறது. ரோமாபுரியிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அவன் எழுதிய கடிதத்தின் கடைசி அதிகாரம் இதை விளக்குகிறது. ரோமர் 16-ம் அதிகாரத்தை ஆராய்ந்து, இது அவனுடைய சகோதர சகோதரிகளிடமாக பவுலினுடைய நம்பிக்கையான மனநிலையை எவ்விதமாக பிரதிபலிக்கிறது என்பதை நாம் காணலாம்.
அனலான போற்றுதல்
13 பவுல் ரோமர்களுக்கு இந்தக் கடிதத்தைத் தன்னுடைய மூன்றாவது மிஷனரி பிரயாணத்தின் போது பொ.ச. 56-ம் ஆண்டு கொரிந்துவிலிருந்து எழுதினான். ரோமுக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்த, அருகிலிருந்த கெங்கிரேயா ஊர் சபையை சேர்ந்தவளாகிய பெபேயாள் என்ற பெயர் கொண்ட ஒரு கிறிஸ்தவ பெண்ணிடம் இந்தக் கையெழுத்துப் பிரதியை அவன் ஒப்படைத்திருக்க வேண்டும். (வசனம் 1, 2 வாசிக்கவும்.) ரோமாபுரியிலிருந்த சகோதரர்களுக்கு அவளை எத்தனை அனலோடு அவன் சிபாரிசு செய்கிறான் என்பதை கவனியுங்கள். பவுல் உட்பட அநேக கிறிஸ்தவர்களுக்கு, ஒருவேளை சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்த கெங்கிரேயா துறைமுகப்பட்டணத்தின் வழியாக அவர்களுடைய பிரயாணங்களின் போது அவள் ஏதோ ஒரு வகையில் அநேக கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாயிருந்திருக்கிறாள். மற்ற எல்லா மனிதர்களையும் போலவே ஓர் ஆபூரணமான பாவியாக, பெபேயாளுக்கும் அவளுடைய பலவீனங்கள் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பெபேயாளின் குறைகளுக்கு எதிராக ரோம சபையை எச்சரிப்பதற்குப் பதிலாக, பவுல் அவளை “கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக் கொள்ளும்”படியாக அவர்களுக்குக் கட்டளையிட்டான். என்னே ஒரு நேர்த்தியான, நம்பிக்கையான மனநிலை!
14 வசனங்கள் 3-லிருந்து 15 வரையாக பவுல் பெயரால் குறிப்பிடப்பட்ட 20-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் இன்னும் மற்ற அநேகருக்கும் தனிப்படவோ அல்லது கூட்டாகவோ குறிப்பிட்டு வாழ்த்துதல்களை அனுப்புகிறான். (வசனம் 3, 4 வாசிக்கவும்.) பிரிஸ்கா (அல்லது பிரிஸ்கில்லாள்; அப்போஸ்தலர் 18:2 ஒப்பிடவும்) மற்றும் ஆக்கில்லாவிடமாக பவுல் கொண்டிருந்த சகோதர பாசத்தை உங்களால் உணரமுடிகிறதா? இந்தத் தம்பதி பவுலுக்காகத் தங்களை ஆபத்துக்குள்ளாக உட்படுத்திக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவன் இந்த உடன்வேலையாட்களுக்கு நன்றியுணர்வோடு வாழ்த்துதல் சொல்லி, புறஜாதியார் சபையின் சார்பாக நன்றியை தெரிவிக்கிறான். இருதயப்பூர்வமான இந்த வாழ்த்துதல்களினால் ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் எவ்வளவு ஊக்கமடைந்திருக்க வேண்டும்!
15 கிறிஸ்துவின் மரணத்துக்குப் பின் ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் பவுல் பக்தியுள்ள ஒரு கிறிஸ்தவனாக மாறினான். அவன் ரோமர்களுக்குத் தன் கடிதத்தை எழுதிய சமயத்துக்குள் கிறிஸ்துவால் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாக அநேக ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்ததான். (அப்போஸ்தலர் 9:15; ரோமர் 1:1; 11:13) என்றபோதிலும் அவனுடைய பெருந்தன்மையையும் மனத்தாழ்மையையும் கவனியுங்கள். (வசனம் 7 வாசிக்கவும்.) அவன் அன்றோனீக்கையும் யூனியாவையும் “அப்போஸ்தலருக்குள் [அனுப்பப்பட்டவர்களுக்குள்] பெயர் பெற்றவர்கள்” என்பதாக வாழ்த்தி, அவர்கள் தன்னைக் காட்டிலும் நீண்டகாலம் கிறிஸ்துவை சேவித்தவர்கள் என்தாக ஒப்புக்கொள்கிறான். கீழ்த்தரமான பொறாமையின் எந்தத் தடமும் அங்கு இல்லை!
16 எப்பனெத், அம்பிலியா மற்றும் ஸ்தாக்கி போன்ற பூர்வ கிறிஸ்தவர்களைப் பற்றி நாம் எதையும் அறியாதவர்களாக இருக்கிறோம். (வசனம் 5, 8, 9 வாசிக்கவும்.) ஆனால் பவுல் இம்மூவரை வாழ்த்திய விதத்திலிருந்தே அவர்கள் உண்மையுள்ள மனிதர்களாக இருந்தனர் என்பதைக் குறித்து நாம் நிச்சயமாயிருக்கலாம். அவர்கள் பவுலிடம் அவ்வளவாகப் பிரியங்கொண்டிருந்ததால் பவுல் அவர்கள் ஒவ்வொருவரையும் “என் பிரியமான” என்பதாக அழைத்தான். பவுல் அப்பெல்லேயுக்கும் ரூபைக்கும் கூட தயவான வார்த்தைகளைக் கொண்டிருந்து, முறையே அவர்களைக் “கிறிஸ்துவுக்குள் உத்தமன்” என்றும் “கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்டவன்” என்றும் குறிப்பிடுகிறான். (வசனம் 10, 13 வாசிக்கவும்.) இந்த இரண்டு கிறிஸ்தவர்களுக்குச் சொல்ல என்னே நேர்த்தியான பாராட்டுக்கள்! பவுலினுடைய கபடமில்லா சுபாவத்தை அறிந்தவர்களாய் இவை வெறும் சம்பிரதாயத்துக்காகச் சொல்லப்பட்டவை அல்ல என்று நாம் நிச்சயமாயிருக்கலாம். (2 கொரிந்தியர் 10:18 ஒப்பிடவும்.) இதற்கிடையில் பவுல் ரூபையின் தாயை வாழ்த்த மறந்துவிடவில்லை.
17 இது பவுல் அவனுடைய சகோதரிகளிடம் கொண்டிருந்த போற்றுதலுக்கு நம்மைக் கொண்டுவந்துவிடுகிறது. ரூபையின் தாயோடுக்கூட பவுல் ஆறு மற்ற கிறிஸ்தவ பெண்களையும் பற்றி குறிப்பிடுகிறான். அவன் பெபேயாளிடமும் பிரிஸ்காவிடமும் எவ்வளவு தயவாகப் பேசினான் என்பதை நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். ஆனால் மரியாளையும், திரிபேனாளையும், திரிபோசாளையும், பெர்சியாளையும் அவன் எவ்வளவு சகோதர பாசத்தோடு வாழ்த்துகிறான் என்பதைக் கவனியுங்கள். (வசனம் 6, 12 வாசிக்கவும்.) தங்களுடைய சகோதரர்களுக்காக “மிகவும் பிரயாசப்பட்ட” கடினமாக உழைத்த இந்தச் சகோதரிகளிடம் அவனுடைய உள்ளக்கனிவை ஒருவரால் உணரமுடியும். அவர்களுடைய அபூரணங்களின் மத்தியிலும் தன்னுடைய சகோதர சகோதரிகளுக்காக பவுல் கொண்டிருந்த இருதயப்பூர்வமான போற்றுதலைக் காண்பது எவ்வளவு கட்டியெழுப்புவதாக இருக்கிறது!
நமது சகோதரர்களின் உள்ளெண்ணங்களை சந்தேகிக்காமலிருத்தல்
18 ஏன் பவுலைப் பின்பற்றி, சபையிலுள்ள ஒவ்வொரு சகோதர சகோதரியையும் பற்றி சொல்வதற்கு பாராட்டத்தக்க எதையாவது கண்டுபிடிக்க முயற்சி செய்யக்கூடாது? சிலரிடம் இதைக் காண்பதில் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. மற்றவர்களிடமாக ஓரளவு தேடி கண்டுபிடிக்க வேண்டியிருக்கலாம். அவர்களை நல்ல விதத்தில் தெரிந்துகொள்வதற்காக அவர்களோடு கொஞ்சம் நேரத்தைச் செலவிட ஏன் முயற்சி செய்யக்கூடாது? நிச்சயமாகவே நீங்கள் அவர்களில் விரும்பத்தக்க குணங்களை கண்டுபிடிப்பீர்கள், யாருக்குத் தெரியும், கடந்த காலத்திலிருந்ததைவிட உங்களை அவர்கள் அதிகமாக போற்ற ஆரம்பிக்கக்கூடும்.
19 நம்முடைய சகோதரர்களின் உள்ளெண்ணங்களை நாம் சந்தேகிக்கக்கூடாது. அவர்கள் அனைவரும் யெகோவாவை நேசிக்கிறார்கள்; மற்றபடி அவர்கள் தங்களுடய வாழ்க்கையை அவருக்கு ஒப்புக்கொடுத்திருக்க மாட்டார்கள். உலகத்தின் சோம்பலான வழிகளைப் பின்பற்றி அதற்குள் மீண்டும் சென்றுவிடுவதிலிருந்து அவர்களை பாதுகாப்பது என்ன? யெகோவாவையும் அவருடைய நீதியையும் கிறிஸ்துவின் கீழ் அவருடைய ராஜ்யத்தையும் அவர்கள் நேசிப்பதே ஆகும். (மத்தேயு 6:33) ஆனால் அவர்கள் அனைவருமே உண்மையுள்ளவர்களாக நிலைத்திருப்பதற்காக பல்வேறு வழிகளில் கடினமாக போராட வேண்டியிருக்கிறது. (நீதிமொழிகள் 27:11) அவர்களுடைய குறைகள் மற்றும் தப்பிதங்களின் மத்தியிலும் அவர் அவர்களை தம்முடைய ஊழியர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். இது இவ்வாறு இருக்க, நம்முடைய கனிவான பாசத்துக்குள் அவர்களை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கு நாம் யார்?—ரோமர் 12:9, 10; 14:4.
20 “பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களையும்” மற்றும் “நீங்கள் கற்றுக் கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்” செயல்படுகிறவர்களையும் மாத்திரமே சந்தேகிக்கும்படியாக பவுல் நம்மை எச்சரிக்கிறான். இப்படிப்பட்டவர்களைக் குறித்து விழிப்புள்ளவர்களாயிருந்து அவர்களை விட்டு விலகும்படியாக பவுல் நமக்குச் சொல்கிறான். (ரோமர் 16:17) சபை மூப்பர்கள் இவர்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்திருப்பார்கள். (யூதா 22, 23) ஆகவே குறிப்பிட்ட சிலர் தவிர்க்கப்பட வேண்டுமா என்பது குறித்து மூப்பர்கள் நமக்குத் தெரிவிக்க நாம் அவர்களை நம்பியிருக்கலாம். மற்றபடி, நம்முடைய எல்லாச் சகோதரர்களையும் மாயமற்ற சகோதர பாசத்துக்குப் பாத்திரமுள்ளவர்களாகக் கருதி, இருதயத்திலிருந்து ஊக்கமாக அவர்களை நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
21 சாத்தானும், அவனுடைய பேய்களும், அவனுடைய முழு உலக ஒழுங்கு முறையும் நமக்கு எதிராக இருக்கிறார்கள். அர்மகெதோன் நமக்கு முன்பாக இருக்கிறது. அது மாகோகுவின் கோகின் தாக்குதலில் ஆரம்பமாகும். (எசேக்கியேல் 38, 39 அதிகாரங்கள்) அந்தச் சமயத்தில் நமக்கு நம்முடைய சகோதரர்கள் முன்னொருபோதும் இராத வகையில் தேவைப்படுவார்கள். தனிப்பட நாம் போற்றாத அவர்களின் உதவியே நமக்குத் தேவையாக இருப்பதை நாம் காணக்கூடும். அல்லது இவர்களுக்கே நம்முடைய உதவி அவசரமாகத் தேவைப்படலாம். நம்முடைய எல்லாச் சகோதரர்களுக்காகவும் போற்றுதலை விரிவாக்கி அதை அதிகரிப்பதற்கு இப்பொழுதே சமயமாக இருக்கிறது.
22 நம்முடைய சகோதரர்களுக்குப் போற்றுதல் என்பது நிச்சயமாகவே சபை மூப்பர்களுக்குச் சரியான மரியாதை காண்பிப்பதை உட்படுத்துகிறது. இந்த விஷயத்தில், எல்லாச் சகோதரர்களுக்கு மாத்திரம் அல்ல, ஆனால் தங்கள் உடன்மூப்பர்களுக்கும்கூட சரியான போற்றுதலைக் காண்பிப்பதன் மூலம் மூப்பர்கள் தாமே சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தை பின்வரும் கட்டுரை சிந்திக்கிறது. (w88 10⁄1)
விமர்சனத்துக்குக் குறிப்புகள்
◻ மெய்க் கிறிஸ்தவத்தின் குறிப்பிடத்தக்க அடையாளம் என்ன?
◻ அன்பு, சகோதரபாசம் ஆகிய இரண்டுமே ஏன் அவசியமாயிருக்கிறது?
◻ நாம் எவ்விதமாக ஒருவரிலொருவர் “ஊக்கமாய்,” “முழு அளவில் விரிந்து செல்கிற விதமாய்” அன்புகூரலாம்?
◻ ரோமர் 16-ம் அதிகாரத்தில், பவுல் எவ்விதமாக தன்னுடைய சகோதர சகோதரிகளுக்குப் போற்றுதலைக் காண்பித்தான்?
◻ நம்முடைய சகோதரர்களின் உள்ளெண்ணங்களை நாம் ஏன் சந்தேகிக்கக்கூடாது?
[கேள்விகள்]
1. யெகோவாவின் சாட்சிகள் மெய்க் கிறிஸ்தவத்தை அப்பியாசித்து வருகிறார்கள் என்பதை அநேக ஆட்கள் நம்பும்படியாகச் செய்தது எது?
2. கிறிஸ்தவத்தின் குறிப்பிடத்தக்க அடையாளமாகிய அன்பின் சம்பந்தமாக அப்போஸ்தலனாகிய பவுல் என்ன சொன்னான்?
3. சுத்தமான ஒரு வாழ்க்கையை நடத்துவதோடுகூட, கிறிஸ்தவர்களுக்கு எது அவசியம் என்பதாக அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்னான்?
4. நாம் என்ன கேள்விகளைக் கேட்க வேண்டும்? இதன் சம்பந்தமாக இயேசு என்ன சொன்னார்?
5. “அன்பு” என்றும் “பாசம்” என்றும் பொருள்படும் கிரேக்க வார்த்தைகளிடையே ஒரு பைபிள் பண்டிதர் என்ன வேறுபாட்டைக் காண்பிக்கிறார்?
6. (எ) ஊடுருவுகிற என்ன கேள்விகளை நம்மைநாமே கேட்டுக்கொள்ள வேண்டும்? (பி) பேதுருவின் பிரகாரம், நாம் இயல்பாகக் கவர்ந்திழுக்கப்படும் ஆட்களுக்கு மாத்திரமே நம்முடைய சகோதர பாசத்தை நாம் ஏன் கட்டுப்படுத்த முடியாது?
7, 8. “மாயமற்ற” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தையின் ஆரம்பம் என்ன? ஆகவே பேதுரு ஏன் இந்தப் பதத்தை உபயோகித்தான்?
9, 10. பேதுரு, நாம் ஒருவரிலொருவர் “ஊக்கமாய்” அல்லது “முழு அளவில் விரிந்து செல்கிற விதமாய்” அன்புகூர வேண்டும் என்று சொன்னபோது அவன் எதை அர்த்தப்படுத்தினான்?
11, 12. (எ) கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்குப் பவுல் என்ன புத்திமதியைக் கொடுத்தான்? (பி) இந்த விஷயத்தில் பவுல் எவ்விதமாக ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்தான்?
13. பவுல் பெபேயாளுக்கு எவ்விதமாக போற்றுதலை வெளியிட்டான்? ஏன்?
14. பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் பற்றி பவுல் என்ன தயவான காரியங்களைச் சொன்னான்?
15. அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துகையில் பவுல் எவ்விதமாக தன் பெருந்தன்மையையும் மனத்தாழ்மையையும் காண்பித்தான்?
16. (எ) ரோமில் வாழ்ந்துவந்த மற்ற கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன அன்பான வார்த்தைகளில் பவுல் பேசினான்? (பி) இந்த வாழ்த்துதல்கள் “மாயமற்ற சகோதர பாசத்துக்கு” உதாரணங்களாக இருந்தன என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?
17. பவுல் தன்னுடைய சகோதரிகளுக்கு எவ்விதமாக ஆழ்ந்த போற்றுதலை வெளியிட்டான்?
18. நாம் எவ்விதமாக பவுலை பின்பற்ற பிரயாசப்படலாம்? ஆனால் எது தேவையாக இருக்கலாம்?
19. நாம் ஏன் நம்முடைய சகோதரர்களின் உள்ளெண்ணங்களை சந்தேகிக்கக்கூடாது? யெகோவா எவ்விதமாக அன்புக்கு நேர்த்தியான ஒரு முன்மாதிரியை வைக்கிறார்?
20. (எ) ரோமர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்தின் பிரகாரம், யாரைக் குறித்து மாத்திரமே நாம் சந்தேகிக்க வேண்டும்? இந்த விஷயத்தில் யாருடைய வழிநடத்துதலை நாம் நம்பிக்கையோடு பின்பற்ற முடியும்? (பி) மற்றபடி, நம்முடைய எல்லாச் சகோதரர்களையும் நாம் எவ்விதமாகக் கருத வேண்டும்?
21, 22. (எ) நமக்கு முன்னால் என்ன இருக்கிறது? (பி) என்ன நிலைமை எழக்கூடும்? ஆகவே எதைச் செய்வது அவசரமாக இருக்கிறது? (சி) அடுத்தக் கட்டுரையில் என்ன சிந்திக்கப்படப் போகிறது?
[பக்கம் 16-ன் படம்]
நீங்கள் இயல்பாகவே கவர்ந்திழுக்கப்படாதவர்களிடத்தில் இருக்கும் விரும்பத்தக்க பண்புகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்