புதிய உடன்படிக்கையின் மூலம் பெரிய ஆசீர்வாதங்கள்
“இயேசு . . . மேலான உடன்படிக்கைக்கும் மத்தியஸ்தராயிருக்கிறார்.”—எபிரெயர் 8:6, NW.
1. ஏதேனில் வாக்குப்பண்ணப்பட்ட ‘ஸ்திரீயின் வித்தாக’ யார் நிரூபித்தது, அவர் எவ்வாறு ‘குதிங்காலில் நசுக்கப்பட்டார்’?
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபிறகு, ஏவாளை வஞ்சித்த சாத்தான்மீது யெகோவா நியாயத்தீர்ப்பை அறிவித்தார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதியாகமம் 3:15) பொ.ச. 29-ல் இயேசு யோர்தான் நதியில் முழுக்காட்டப்பட்டபோது, ஏதேனில் வாக்குப்பண்ணப்பட்ட வித்துவானவர் கடைசியில் தோன்றினார். பொ.ச. 33-ல் ஒரு கழுமரத்தில் அவர் மரித்தபோது, அந்தப் பூர்வ தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதி நிறைவேறியது. சாத்தான் அந்த வித்தின் ‘குதிங்காலை நசுக்கியிருந்தான்.’
2. இயேசுவின் சொந்த வார்த்தைகளின்படி, அவருடைய மரணம் எவ்வாறு மனிதவர்க்கத்துக்கு பயனளிக்கிறது?
2 அந்தக் காயம் கடும் வேதனை தருகிற வலியாய் இருந்தபோதிலும் நிரந்தரமானதாய் இல்லை என்பது மகிழ்ச்சிக்குரியது. இயேசு மரித்தோரிலிருந்து அழியாமையுள்ள ஆவி ஆளாக எழுப்பப்பட்டு பரலோகத்திலுள்ள தம் தகப்பனிடத்திற்கு ஏறிப்போனார்; “அநேகரை மீட்கும்பொருளாக” தாம் சிந்திய இரத்தத்தின் கிரயத்தை அங்கே செலுத்தினார். இவ்வாறு அவரே கூறிய வார்த்தைகள் உண்மையாய் நிறைவேறின: “மனுஷகுமாரனும் தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (மத்தேயு 20:28; யோவான் 3:14-16; எபிரெயர் 9:12-14) இயேசுவினுடைய தீர்க்கதரிசன நிறைவேற்றத்தில் புதிய உடன்படிக்கை ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.
புதிய உடன்படிக்கை
3. புதிய உடன்படிக்கை செயல்படுவது எப்போது முதலாவதாக காணப்பட்டது?
3 இயேசு தம் மரணத்திற்கு சற்றுமுன்பு, தாம் சிந்தப்போகிற இரத்தம், “புது உடன்படிக்கைக்குரிய இரத்தமாயிருக்கிறது” என்று தம்மைப் பின்பற்றினோரிடம் சொன்னார். (மத்தேயு 26:28; லூக்கா 22:20) பரலோகத்திற்கு ஏறிப்போய் பத்து நாட்களுக்குப் பிறகு, எருசலேமில் ஒரு மேலறையிலே ஏறக்குறைய 120 சீஷர்கள் கூடியிருக்கையில் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டபோது புதிய உடன்படிக்கை செயல்படுவதை காணமுடிந்தது. (அப்போஸ்தலர் 1:15; 2:1-4) புதிய உடன்படிக்கைக்குள் இந்த 120 சீஷர்களை கொண்டுவருவது, “முந்தின” உடன்படிக்கை, அதாவது நியாயப்பிரமாண உடன்படிக்கை இப்போது பழமையாகி விட்டதை காண்பித்தது.—எபிரெயர் 8:13.
4. பழைய உடன்படிக்கை ஒரு தோல்வியா? விளக்குங்கள்.
4 பழைய உடன்படிக்கை தோல்வியடைந்ததா? இல்லவே இல்லை. அது இப்போது மாற்றீடு செய்யப்பட்டிருந்ததால், மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர் இனிமேலும் கடவுளுடைய விசேஷித்த ஜனங்களாக இல்லை என்பது உண்மை. (மத்தேயு 23:38) ஆனால் அது இஸ்ரவேலர் கீழ்ப்படியாததினாலும் யெகோவா அபிஷேகம்செய்திருந்தவரை நிராகரித்ததினாலும் ஏற்பட்டது. (யாத்திராகமம் 19:5; அப்போஸ்தலர் 2:22, 23) எனினும், நியாயப்பிரமாணம் மாற்றீடு செய்யப்படுவதற்கு முன், அது அதிகத்தைச் சாதித்தது. பல நூற்றாண்டுகளாக அது கடவுளை அணுகும் வழிமுறையை ஏற்பாடு செய்தது, பொய் மதத்திலிருந்து பாதுகாப்பையும் அளித்தது. அதில் புதிய உடன்படிக்கையை முன்நிழலாகக் காட்டிய அம்சங்கள் அடங்கியிருந்தன, மேலும் அதில் திரும்பத் திரும்ப செலுத்தப்பட்ட பலிகள், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதனுக்கு மிகவும் அவசரமாகத் தேவைப்பட்ட மீட்பை வெளிப்படுத்திக் காட்டின. நியாயப்பிரமாணம் உண்மையிலேயே “கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய்” இருந்தது. (கலாத்தியர் 3:19, 24; ரோமர் 3:20; 4:15; 5:12; எபிரெயர் 10:1, 2) எனினும், ஆபிரகாமுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட ஆசீர்வாதம் புதிய உடன்படிக்கையின் மூலமே முழுமையாய் நிறைவேறும்படி செய்யப்படும்.
ஆபிரகாமின் வித்தின் மூலம் தேசங்கள் ஆசீர்வதிக்கப்பட்டன
5, 6. ஆபிரகாமிய உடன்படிக்கையின் அடிப்படையான, ஆவிக்குரிய நிறைவேற்றத்தில் ஆபிரகாமின் வித்து யார், அவர் மூலமாய் எந்தத் தேசம் முதலாவது ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டது?
5 யெகோவா ஆபிரகாமுக்கு இவ்வாறு வாக்குறுதி அளித்தார்: “பூமியிலுள்ள சகல ஜாதிகளும் உன் சந்ததியின் ஆசீர்வாதத்தைச் சொல்லித் தங்களை ஆசீர்வதித்துக்கொள்வார்கள்.” (ஆதியாகமம் 22:18, தி.மொ.) பழைய உடன்படிக்கையின்கீழ், அநேக சாந்தகுணமுள்ள புறஜாதியார் ஆபிரகாமின் தேசிய வித்தாகிய இஸ்ரவேலோடு கூட்டுறவுகொள்வதன் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டனர். இருப்பினும், அதன் அடிப்படையான ஆவிக்குரிய நிறைவேற்றத்தில், ஆபிரகாமின் வித்துவானவர் ஒரு பரிபூரண மனிதராக இருந்தார். பின்வருமாறு சொல்லும்போது பவுல் இதை விளக்கினார்: “ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக் குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.”—கலாத்தியர் 3:16.
6 ஆம், இயேசுவே ஆபிரகாமின் வித்து, மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலுக்கு கிடைக்கக்கூடிய எதைக்காட்டிலும் மிக உயர்மதிப்பு வாய்ந்த ஆசீர்வாதத்தை அவர் மூலமாய் தேசங்கள் பெறுகின்றன. உண்மையில் இஸ்ரவேலே இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளும் முதல் தேசமாக இருந்தது. பொ.ச. 33-ல், பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு உடனடியாக, அப்போஸ்தலனாகிய பேதுரு யூதர்கள் அடங்கிய ஒரு தொகுதியினரிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்கும் புத்திரராயிருக்கிறீர்கள். அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார்.”—அப்போஸ்தலர் 3:25, 26.
7. ஆபிரகாமின் வித்தாகிய இயேசுவின் மூலம் எந்தத் தேசங்கள் ஆசீர்வதிக்கப்பட்டன?
7 விரைவில் அந்த ஆசீர்வாதத்தைப் பெறும்படி சமாரியரும் பிறகு புறஜாதியாரும் அழைக்கப்பட்டனர். (அப்போஸ்தலர் 8:14-17; 10:34-48) பொ.ச. 50-க்கும் 52-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு சமயம் ஆசியா மைனரிலுள்ள கலாத்தியாவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் பின்வருமாறு எழுதினார்: “தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.” (கலாத்தியர் 3:8, 9; ஆதியாகமம் 12:3) கலாத்தியாவில் இருந்த பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ‘புறஜாதியாராய்’ இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் விசுவாசத்தின் காரணமாக இயேசுவின் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டனர். எந்த விதத்தில்?
8. பவுலின் நாளிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு ஆபிரகாமின் வித்தின் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவது எதை உட்படுத்தியது, மொத்தத்தில் எத்தனை பேர் அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை பெறுகின்றனர்?
8 பவுல் கலாத்திய கிறிஸ்தவர்களிடம் பின்வருமாறு சொன்னார், எந்தப் பின்னணியிலிருந்து வந்தவர்களாய் இருந்தாலும்: “நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.” (கலாத்தியர் 3:29) அந்தக் கலாத்தியருக்கு, ஆபிரகாமின் வித்தின் மூலம் வரும் ஆசீர்வாதம், புதிய உடன்படிக்கையில் அவர்கள் பங்குகொள்வோராய் இருப்பதையும் ஆபிரகாமின் வித்தில் இயேசுவோடு கூட்டாளிகளாக அவரோடு உடன் அரசர்களாக இருப்பதையும் உட்படுத்தியது. பூர்வ இஸ்ரவேலின் ஜனத்தொகை நமக்குத் தெரியாது. அது, ‘கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்தது’ என்று மட்டுமே நமக்குத் தெரியும். (1 இராஜாக்கள் 4:20) இருப்பினும், ஆவிக்குரிய வித்தில் இயேசுவினுடைய கூட்டாளிகளின் மொத்த எண்ணிக்கை 1,44,000 பேர் என்பது நமக்குத் தெரியும். (வெளிப்படுத்துதல் 7:4; 14:1) அந்த 1,44,000 பேர், மனிதவர்க்கத்தின் “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து” வருகின்றனர்; மேலும் ஆபிரகாமிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை இன்னும் கூடுதலான மக்களுக்கு வழங்குவதில் பங்குகொள்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 5:9.
ஒரு தீர்க்கதரிசனம் நிறைவேறியது
9. புதிய உடன்படிக்கையில் இருப்போர் எப்படி யெகோவாவின் நியாயப்பிரமாணத்தை தங்களுக்குள் பெற்றிருக்கின்றனர்?
9 புதிய உடன்படிக்கையை முன்னறிவிக்கையில் எரேமியா பின்வருமாறு எழுதினார்: “அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழு[துவேன்].” (எரேமியா 31:33) யெகோவாவை அன்பின் காரணமாக சேவிப்பதே புதிய உடன்படிக்கையில் இருப்போரின் தனிச்சிறப்பான பண்பு. (யோவான் 13:35; எபிரெயர் 1:9) யெகோவாவின் நியாயப்பிரமாணம் அவர்களுடைய இருதயத்திலே எழுதப்பட்டிருக்கிறது, அவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு அவருடைய சித்தத்தை செய்ய விரும்புகின்றனர். பூர்வ இஸ்ரவேலில் சில உண்மையுள்ள நபர்கள் யெகோவாவின் நியாயப்பிரமாணத்தை மிகவும் அதிகமாய் நேசித்தனர் என்பது உண்மை. (சங்கீதம் 119:97) ஆனால் அநேகர் அவ்வாறு இருக்கவில்லை. இருந்தாலும் அவர்கள் அத்தேசத்தின் பாகமாகவே தொடர்ந்து இருந்தனர். கடவுளுடைய நியாயப்பிரமாணம் இருதயத்தில் எழுதப்படவில்லை என்றால், எவருமே புதிய உடன்படிக்கையில் தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது.
10, 11. புதிய உடன்படிக்கையில் இருப்போருக்கு எந்த விதத்தில் யெகோவா ‘அவர்களுடைய தேவனாயிருப்பார்,’ அவர்கள் எல்லாரும் எவ்வாறு அவரை அறிந்துகொள்வார்கள்?
10 புதிய உடன்படிக்கையில் இருப்போரைக் குறித்து யெகோவா கூடுதலாக சொன்னார்: “நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.” (எரேமியா 31:33) பூர்வ இஸ்ரவேலில் அநேகர் புறஜாதியாரின் கடவுட்களை வணங்கிவந்தபோதிலும் இஸ்ரவேலராக தொடர்ந்து இருந்தனர். மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலை மாற்றீடு செய்வதற்கு, புதிய உடன்படிக்கையின் அடிப்படையில், ‘தேவனுடைய இஸ்ரவேலர்’ என்ற ஒரு ஆவிக்குரிய தேசத்தாரை யெகோவா சிருஷ்டித்தார். (கலாத்தியர் 6:16; மத்தேயு 21:43; ரோமர் 9:6-8) இருந்தபோதிலும், யெகோவாவை மட்டுமே வணங்குவதை நிறுத்திவிடும் எவரும் புதிய ஆவிக்குரிய தேசத்தின் பாகமாக நிலைத்திருப்பதில்லை.
11 யெகோவா கூடுதலாக சொன்னார்: “அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும் எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள்.” (எரேமியா 31:34) இஸ்ரவேலில் அநேகர் யெகோவாவை அசட்டை செய்தார்கள், உண்மையில் அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்: “கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லை.” (செப்பனியா 1:12) யெகோவாவை அசட்டை செய்யும் அல்லது மெய் வணக்கத்தை அசுத்தம் செய்யும் எந்தவொரு நபரும் தேவனுடைய இஸ்ரவேலின் பாகமாக நிலைத்திருப்பதில்லை. (மத்தேயு 6:24; கொலோசெயர் 3:5) ‘தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்களே’ ஆவிக்குரிய இஸ்ரவேலர். (தானியேல் 11:32) அவர்கள் ‘ஒன்றான மெய்த்தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை எடுத்துக்கொள்வதில்’ இன்பம் காண்கின்றனர். (யோவான் 17:3, NW) இயேசுவை அறிந்திருப்பது, கடவுளைப் பற்றிய அவர்களுடைய அறிவை அதிகரிக்கச் செய்கிறது, ஏனென்றால் இயேசுவே தனிச்சிறப்பான முறையில் “அவரை [கடவுளை] வெளிப்படுத்தினார்.”—யோவான் 1:18; 14:9-11.
12, 13. (அ) புதிய உடன்படிக்கையில் இருப்போரின் பாவங்களை எதன் அடிப்படையில் யெகோவா மன்னிக்கிறார்? (ஆ) பாவங்கள் மன்னிக்கப்படுவது சம்பந்தமாக, புதிய உடன்படிக்கை எவ்வாறு பழைய உடன்படிக்கையைக் காட்டிலும் மேம்பட்டது?
12 இறுதியில் யெகோவா இவ்வாறு வாக்குறுதி அளித்தார்: “நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.” (எரேமியா 31:34ஆ) இஸ்ரவேலர் கீழ்ப்படிய வேண்டுமென்று கட்டளையிடப்பட்ட, நூற்றுக்கணக்கான எழுதப்பட்ட சட்டங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் அடங்கியிருந்தன. (உபாகமம் 28:1, 2, 15) நியாயப்பிரமாணத்தை மீறிய அனைவரும் தங்கள் பாவங்களை மூடுவதற்கு பலிகளைச் செலுத்தினர். (லேவியராகமம் 4:1-7; 16:1-31) நியாயப்பிரமாணத்தின்படி தங்கள் சொந்த கிரியைகளின் மூலம் நீதிமான்களாக ஆகமுடியும் என்று அநேக யூதர்கள் நம்பினர். ஆனால், கிறிஸ்தவர்களோ, தங்கள் சொந்த கிரியைகளின் மூலம் ஒருபோதும் நீதியை சம்பாதிக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கின்றனர். அவர்கள் பாவம் செய்வதை தவிர்க்கமுடியாது. (ரோமர் 5:12) புதிய உடன்படிக்கையின்கீழ், இயேசுவின் கிரயபலியின் அடிப்படையில் மட்டுமே கடவுளுக்கு முன் நீதியான நிலைநிற்கை சாத்தியம். இருப்பினும், அப்படிப்பட்ட நிலைநிற்கை ஒரு வெகுமதி, கடவுளிடமிருந்து வரும் தகுதியற்ற தயவு. (ரோமர் 3:20, 23, 24) அப்படி இருந்தபோதிலும், யெகோவா முன்போலவே தம் ஊழியர்களிடமிருந்து கீழ்ப்படிதலை வற்புறுத்திக் கேட்கிறார். புதிய உடன்படிக்கையில் இருப்போர் ‘கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவர்களாய்’ இருக்கின்றனர் என்று பவுல் சொல்கிறார்.—1 கொரிந்தியர் 9:21.
13 எனவே, கிறிஸ்தவர்களுக்கும்கூட பாவத்துக்காக செலுத்தத்தக்க ஒரு பலி உள்ளது, ஆனால் நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ் உள்ள பலிகளைக் காட்டிலும் மிகவும் மதிப்புவாய்ந்த ஒன்றாய் அது உள்ளது. பவுல் எழுதினார்: “அன்றியும், எந்த ஆசாரியனும் [நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ்] நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். [இயேசுவோ] பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.” (எபிரெயர் 10:11, 12) புதிய உடன்படிக்கையிலுள்ள கிறிஸ்தவர்கள் இயேசுவின் பலியில் விசுவாசம் வைத்திருப்பதால், யெகோவா அவர்களை நீதிமான்களாக, பாவமில்லாதவர்களாக அறிவிக்கிறார், இவ்வாறு அவருடைய ஆவிக்குரிய குமாரர்களாக அபிஷேகம்செய்யப்படும் நிலையில் அவர்கள் இருக்கின்றனர். (ரோமர் 5:1; 8:33, 34; எபிரெயர் 10:14-18) அவர்கள் மானிட அபூரணத்தின் காரணமாக பாவம் செய்தால், யெகோவாவின் மன்னிப்புக்காக கெஞ்சிக் கேட்கலாம், இயேசுவின் பலியின் அடிப்படையில் யெகோவா அவர்களை மன்னிக்கிறார். (1 யோவான் 2:1, 2) எனினும், அவர்கள் வேண்டுமென்றே பாவம் செய்யும் போக்கை தெரிந்துகொண்டால், அவர்கள் தங்கள் நீதியான நிலைநிற்கையையும் புதிய உடன்படிக்கையில் பங்குகொள்ளும் சிலாக்கியத்தையும் இழந்துவிடுவார்கள்.—எபிரெயர் 2:2, 4; 6:4-8; 10:26-31.
பழைய உடன்படிக்கையும் புதிய உடன்படிக்கையும்
14. என்ன விருத்தசேதனம் தேவைப்பட்டது: நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ்? புதிய உடன்படிக்கையின்கீழ்?
14 நியாயப்பிரமாணத்தின்கீழ் இருந்ததற்கு ஓர் அடையாளமாக பழைய உடன்படிக்கையில் இருந்த ஆண்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டனர். (லேவியராகமம் 12:2, 3; கலாத்தியர் 5:3) கிறிஸ்தவ சபை ஆரம்பமான பிறகு, யூதரல்லாத கிறிஸ்தவர்களும்கூட விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று சிலர் நினைத்தனர். ஆனால் அது அவசியமல்ல என்று கடவுளுடைய வார்த்தையாலும் பரிசுத்த ஆவியாலும் வழிநடத்தப்பட்ட எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் புரிந்துகொண்டனர். (அப்போஸ்தலர் 15:1, 5, 28, 29) ஒருசில வருடங்களுக்குப் பிறகு பவுல் சொன்னார்: “ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்.” (ரோமர் 2:28, 29) மாம்சப்பிரகாரமான யூதருக்கும்கூட சொல்லர்த்தமான விருத்தசேதனம், யெகோவாவின் கண்களில் கூடுதலான ஆவிக்குரிய மதிப்பை உடையதாய் இருக்கவில்லை. புதிய உடன்படிக்கையில் இருப்போருக்கு, மாம்சமல்ல, இருதயமே விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். அவர்களுடைய சிந்தனையில், விருப்பங்களில், உள்நோக்கங்களில் யெகோவாவுக்குப் பிரியமில்லாமலிருக்கும் அல்லது யெகோவாவின் கண்களுக்கு அசுத்தமாயிருக்கும் அனைத்தையும் வெட்டியெடுத்துவிட வேண்டும். a இந்த விதத்தில் சிந்தனா பாங்குகளை மாற்றுவதற்கு பரிசுத்த ஆவிக்கு இருக்கும் வல்லமைக்கு இன்றுள்ள அநேகர் உயிருள்ள அத்தாட்சியாய் இருக்கின்றனர்.—1 கொரிந்தியர் 6:9-11; கலாத்தியர் 5:22-24; எபேசியர் 4:22-24.
15. ராஜரீக அரசாட்சியைக் குறித்ததில், மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலையும் தேவனுடைய இஸ்ரவேலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எவ்வாறு உள்ளன?
15 நியாயப்பிரமாண உடன்படிக்கை ஏற்பாட்டில், யெகோவாவே இஸ்ரவேலின் ராஜாவாக இருந்தார், காலப்போக்கில் எருசலேமிலிருந்த மனித ராஜாக்களின் மூலம் தம் அரசதிகாரத்தை செலுத்தினார். (ஏசாயா 33:22) தேவனுடைய இஸ்ரவேலர், அதாவது ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கும்கூட யெகோவா ராஜாவாக இருக்கிறார்; பொ.ச. 33 முதற்கொண்டு, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்” பெற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் மூலம் அவர் அரசாட்சி செய்து வந்திருக்கிறார். (மத்தேயு 28:18; எபேசியர் 1:19-23; கொலோசெயர் 1:13, 14) இன்று, தேவனுடைய இஸ்ரவேல் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்ட கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக இயேசுவை அங்கீகரிக்கிறது. எசேக்கியா, யோசியா, மேலும் மற்ற பூர்வ இஸ்ரவேலின் உண்மையுள்ள ராஜாக்களைக் காட்டிலும் இயேசு மிகவும் மேம்பட்ட ராஜாவாக இருக்கிறார்.—எபிரெயர் 1:8, 9; வெளிப்படுத்துதல் 11:15.
16. தேவனுடைய இஸ்ரவேல் என்ன வகையான ஆசாரியத்துவம்?
16 இஸ்ரவேல் ஒரு தேசமாக மட்டுமல்லாமல் அபிஷேகம்செய்யப்பட்ட ஆசாரியத்துவத்தையும் பெற்றிருந்தது. பொ.ச. 33-ல் தேவனுடைய இஸ்ரவேல் மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலை மாற்றீடு செய்து, யெகோவாவின் ‘தாசனும்’ அவருடைய ‘சாட்சிகளுமாய்’ ஆனது. (ஏசாயா 43:10) ஏசாயா 43:21, யாத்திராகமம் 19:5, 6 ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்டிருக்கும், இஸ்ரவேலுக்கு கூறப்பட்ட யெகோவாவின் வார்த்தைகள், அதுமுதற்கொண்டு ஆவிக்குரிய தேவனுடைய-இஸ்ரவேலுக்கு பொருந்தின. கடவுளுடைய புதிய ஆவிக்குரிய தேசம் இப்போது ‘தேவனுடைய புண்ணியங்களை அறிவிக்கும்’ பொறுப்புள்ள “தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும்” இருந்தது. (1 பேதுரு 2:9) தேவனுடைய இஸ்ரவேலில் உள்ள அனைவரும், ஆண்களும் பெண்களும், ஒரு கூட்டு ஆசாரியத்துவமாக அமைகிறார்கள். (கலாத்தியர் 3:28, 29) ஆபிரகாமினுடைய வித்தின் இரண்டாவது பாகமாக அவர்கள் இப்போது இவ்வாறு சொல்கிறார்கள்: “ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள்.” (உபாகமம் 32:43) பூமியில் இன்னும் மீந்திருக்கும் ஆவிக்குரிய இஸ்ரவேலைச் சேர்ந்தவர்கள் “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார” வகுப்பை உண்டுபண்ணுகின்றனர். (மத்தேயு 24:45-47) அவர்களோடு கூட்டுறவுகொண்டால் மட்டுமே ஏற்கத்தகுந்த பரிசுத்த சேவையை கடவுளுக்கு செலுத்தமுடியும்.
கடவுளுடைய ராஜ்யம் —முடிவான நிறைவேற்றம்
17. புதிய உடன்படிக்கையில் இருப்போர் என்ன பிறப்பை அனுபவிக்கின்றனர்?
17 பொ.ச.மு. 1513-க்குப் பின் பிறந்த இஸ்ரவேலர் பிறப்பின் சமயத்தில் நியாயப்பிரமாண உடன்படிக்கைக்குள் வந்தனர். புதிய உடன்படிக்கைக்குள் யெகோவா எடுத்துக்கொள்ளும் நபர்களும்கூட ஒரு பிறப்பை அனுபவிக்கின்றனர்—அவர்களுடைய விஷயத்தில் அது ஒரு ஆவிக்குரிய பிறப்பு. இயேசு பரிசேயனாகிய நிக்கொதேமுவிடம் இதைக் குறிப்பிட்டு சொன்னார்: “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.” (யோவான் 3:3) பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளன்று கூடியிருந்த 120 சீஷர்களே இந்தப் புதிய பிறப்பை அனுபவிக்கும் முதல் அபூரண மனிதர்களாய் இருந்தனர். புதிய உடன்படிக்கையின்கீழ் நீதிமான்களாக அறிவிக்கப்பட்டு, தங்களுடைய ராஜரீக சுதந்தரத்திற்கு ‘அச்சாரமாக’ பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டனர். (எபேசியர் 1:14) அவர்கள் கடவுளுடைய சுவிகார புத்திரர்களாக ஆவதற்கு ‘ஆவியினால் பிறப்பிக்கப்பட்டார்கள்,’ அது அவர்களை இயேசுவின் சகோதரர்களாக ஆக்கியது; இவ்வாறு ‘கிறிஸ்துவுக்கு உடன்சுதந்தரராக’ ஆனார்கள். (யோவான் 3:6; ரோமர் 8:16, 17) அவர்கள் ‘மறுபடியும் பிறந்தது’ மகத்தான எதிர்பார்ப்புகளுக்கு வழியைத் திறந்து வைத்தது.
18. புதிய உடன்படிக்கையில் இருப்போருக்கு மறுபடியும் பிறத்தல் என்ன அதிசயமான எதிர்பார்ப்புகளுக்கு வழியைத் திறக்கிறது?
18 புதிய உடன்படிக்கையை மத்தியஸ்தம் செய்கையில், இயேசு தம்மைப் பின்பற்றுவோரோடு ஒரு கூடுதலான உடன்படிக்கையை செய்து இவ்வாறு சொன்னார்: “என் பிதா ஒரு ராஜ்யத்துக்காக என்னோடு ஒரு உடன்படிக்கை செய்ததுபோல நானும் உங்களோடு ஒரு உடன்படிக்கை செய்கிறேன்.” (லூக்கா 22:29, NW) இந்த ராஜ்ய உடன்படிக்கை தானியேல் 7:13, 14, 21, 27-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க தரிசனத்தின் நிறைவேற்றத்திற்கு வழியை ஆயத்தம் செய்கிறது. ‘நீண்ட ஆயுசுள்ளவராகிய’ யெகோவா தேவன் “மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவ[ரிடம்]” ராஜ்ய அதிகாரத்தை அளிப்பதை தானியேல் பார்த்தார். பின்பு, ‘பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வதை’ தானியேல் பார்த்தார். அந்த ‘மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர்’ இயேசுவே; அவர் 1914-ல் யெகோவா தேவனிடமிருந்து பரலோக ராஜ்யத்தை பெற்றுக்கொண்டார். அந்த ராஜ்யத்தில் அவரோடு பகிர்ந்துகொள்ளும் அவருடைய ஆவியால்-அபிஷேகம்செய்யப்பட்ட சீஷர்களே “பரிசுத்தவான்கள்.” (1 தெசலோனிக்கேயர் 2:11) எப்படி?
19, 20. (அ) யெகோவா ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குறுதி புதிய உடன்படிக்கையில் இருப்போருக்கு என்ன இறுதியான மகத்தான நிறைவேற்றத்தை உடையதாய் இருக்கும்? (ஆ) என்ன கூடுதலான கேள்வி சிந்திக்கப்படுவது அவசியம்?
19 இந்த அபிஷேகம்செய்யப்பட்டவர்கள் தங்கள் மரணத்திற்குப் பின், இயேசுவைப் போல் பரலோகத்தில் ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் அவரோடு சேவிப்பதற்கு மரித்தோரிலிருந்து அழியாமையுள்ள ஆவி சிருஷ்டிகளாக உயிர்த்தெழுப்பப்படுகின்றனர். (1 கொரிந்தியர் 15:50-53; வெளிப்படுத்துதல் 20:4, 6) எப்பேர்ப்பட்ட மகத்தான நம்பிக்கை! அவர்கள் வெறுமனே கானான் தேசத்தை மட்டுமல்ல, ‘பூமியின் மேல் ராஜாக்களாக அரசாளுவார்கள்.’ (வெளிப்படுத்துதல் 5:10, NW) அவர்கள் ‘தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்களா’? (ஆதியாகமம் 22:17) ஆம், பகைமை காட்டும் மத வேசியான மகா பாபிலோனின் அழிவை அவர்கள் நேரில் காணும்போதும், இந்த உயிர்த்தெழுப்பப்பட்ட அபிஷேகம்செய்யப்பட்டவர்கள் இயேசுவோடு சேர்ந்து தேசங்களை “இருப்புக்கோலால்” ஆளுகைசெய்து, சாத்தானின் தலையை நசுக்குவதில் பங்குகொள்ளும்போதும் அவர்கள் இறுதியில் சுதந்தரித்துக்கொள்பவர்களாய் இருப்பார்கள். இவ்வாறு அவர்கள் ஆதியாகமம் 3:15-ல் உள்ள தீர்க்கதரிசனத்தின் கடைசி விவரத்தின் நிறைவேற்றத்தில் பங்குகொள்வார்கள்.—வெளிப்படுத்துதல் 2:26, 27; 17:14; 18:20, 21; ரோமர் 16:20.
20 இருப்பினும், ஆபிரகாமிய உடன்படிக்கையிலும் புதிய உடன்படிக்கையிலும் இந்த 1,44,000 உண்மையுள்ள நபர்கள் மட்டுமே உட்பட்டிருக்கின்றனரா என்று நாம் ஒருவேளை கேட்கலாம். இல்லை, இந்த உடன்படிக்கைகளில் நேரடியாக உட்பட்டிராத மற்றவர்கள் அவர்கள் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவர் என்பதை அடுத்து வரும் கட்டுரையில் பார்க்கலாம்.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் வேதாகமங்களின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 1, பக்கம் 470-ஐப் பாருங்கள்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ புதிய உடன்படிக்கை எப்போது முதலாவது செயல்படுவதாக காணப்பட்டது?
◻ பழைய உடன்படிக்கையின் மூலம் என்ன சாதிக்கப்பட்டது?
◻ ஆபிரகாமின் வித்தின் பிரதானமானவர் யார், அந்த வித்தின் மூலம் எந்த வரிசைக்கிரமத்தில் தேசங்கள் ஆசீர்வதிக்கப்பட்டன?
◻ ஆபிரகாமிய உடன்படிக்கை மற்றும் புதிய உடன்படிக்கையின் முடிவான நிறைவேற்றம் 1,44,000 பேருக்கு என்னவாய் இருக்கிறது?
[பக்கம் 15-ன் படம்]
பழைய உடன்படிக்கையின்கீழ் இருப்போரைக் காட்டிலும் புதிய உடன்படிக்கையின்கீழ் இருப்போருக்கு பாவங்களுக்கான மன்னிப்பு ஆழமான அர்த்தத்தை உடையதாய் இருக்கிறது