“[இந்த] விஷயங்களை உண்மையுள்ள ஆட்களிடம் சொல்”
“[இந்த] விஷயங்களை உண்மையுள்ள ஆட்களிடம் சொல்; அப்போது, மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க அவர்கள் போதிய தகுதி பெறுவார்கள்.”—2 தீ. 2:2.
1, 2. தங்களுடைய வேலையைப் பற்றி நிறைய மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
தாங்கள் செய்யும் வேலையை வைத்துதான், தாங்கள் முக்கியமானவர்கள் என்றோ, முக்கியம் இல்லாதவர்கள் என்றோ நிறைய பேர் நினைக்கிறார்கள். சில கலாச்சாரங்களில், ஒருவரைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக, அவர்கள் கேட்கிற முதல் கேள்வி: “நீங்க என்ன வேலை செய்றீங்க?”
2 சில நபர்களைப் பற்றி பைபிள் விவரிக்கும்போது, அவர்கள் செய்த வேலையைப் பற்றி சில சமயங்களில் சொல்கிறது. உதாரணத்துக்கு, “வரி வசூலிப்பவரான மத்தேயு,” ‘தோல் பதனிடுபவரான சீமோன்,’ “அன்பான மருத்துவர் லூக்கா” என்றெல்லாம் பைபிள் சொல்கிறது. (மத். 10:3; அப். 10:6; கொலோ. 4:14) வேறு சில சமயங்களில், யெகோவாவுடைய சேவையில் மக்களுக்கு இருந்த நியமிப்புகளை பற்றியும் சொல்கிறது. ராஜாவான தாவீது, தீர்க்கதரிசியான எலியா, அப்போஸ்தலனாகிய பவுல் ஆகியவர்களைப் பற்றி நாம் பைபிளில் வாசிக்கிறோம். இவர்கள் எல்லாரும் யெகோவா கொடுத்த நியமிப்புகளை உயர்வாக மதித்தார்கள். அதேபோல், யெகோவாவுடைய சேவையில் நமக்கு இருக்கும் எந்தவொரு நியமிப்பையும் நாமும் உயர்வாக மதிக்க வேண்டும்.
3. வயதானவர்கள் ஏன் இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்? (ஆரம்பப் படம்)
3 நம்மில் நிறைய பேர் நம்முடைய வேலைகளைச் சந்தோஷமாகச் செய்கிறோம். இந்த வேலைகளை எவ்வளவு நாள் செய்ய முடியுமோ, அவ்வளவு நாள் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆதாமுடைய நாட்களில் இருந்தே எல்லாருக்கும் வயதாகிறது. அதனால், ஒரு தலைமுறை போகிறது, இன்னொரு தலைமுறை வருகிறது. இளம் வயதில் தாங்கள் செய்த வேலைகளை வயதானவர்களால் இப்போது செய்ய முடிவதில்லை. (பிர. 1:4) இது யெகோவாவின் மக்களுக்குச் சவாலாக இருக்கிறது. இன்று, பிரசங்கிப்பு வேலை வளர்ந்துகொண்டே போகிறது. நல்ல செய்தி நிறைய பேருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக யெகோவாவின் அமைப்பு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. ஆனால், புதிய முறைகளைக் கற்றுக்கொள்வது சில சமயங்களில் வயதானவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். (லூக். 5:39) அதோடு, வயதாகும்போது இயல்பாகவே மக்களுக்கு பலமும் தெம்பும் குறைந்துவிடுகிறது. (நீதி. 20:29) அதனால், யெகோவாவின் அமைப்பில் கூடுதல் பொறுப்புகளை எடுத்துச் செய்ய, இளைஞர்களுக்கு வயதானவர்கள் பயிற்சி கொடுக்க வேண்டும். இப்படிச் செய்வது அன்பானதாகவும், நடைமுறையானதாகவும் இருக்கும்!—சங்கீதம் 71:18-ஐ வாசியுங்கள்.
4. பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுப்பது சிலருக்கு ஏன் கஷ்டமாக இருக்கலாம்? (“சிலர் ஏன் மற்றவர்களுக்குப் பொறுப்புகளைக் கொடுப்பதில்லை?” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
4 அதிகாரத்தில் இருக்கிற வயதானவர்களுக்கு, தங்களுடைய பொறுப்புகளை இளைஞர்களுக்குக் கொடுப்பது எப்போதுமே சுலபமாக இருப்பதில்லை. தாங்கள் ஆசை ஆசையாக செய்துவந்த பொறுப்புகளை விட்டுக்கொடுப்பது சிலருக்குக் கஷ்டமாக இருக்கலாம். இன்னும் சிலர், தாங்கள் அந்த வேலையை வழிநடத்தவில்லை என்றால், அது சரியாக நடக்காது என்று நினைத்து கவலைப்படலாம். மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்க தங்களுக்கு நேரம் இல்லை என்றும் அவர்கள் நினைக்கலாம். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்? தங்களுக்குப் பொறுப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.
5. இந்தக் கட்டுரையில் என்னென்ன கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கப்போகிறோம்?
5 இந்தக் கட்டுரையில் இரண்டு கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம். முதலாவதாக, கூடுதல் பொறுப்புகளை எடுத்துச் செய்ய, இளைஞர்களுக்கு வயதானவர்கள் உதவி செய்வது ஏன் முக்கியம், இதை அவர்கள் எப்படிச் செய்யலாம்? (2 தீ. 2:2) இரண்டாவதாக, அனுபவமுள்ள வயதான சகோதரர்களோடு சேர்ந்து இளைஞர்கள் வேலை செய்யும்போது சரியான மனநிலையோடு இருப்பதும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதும் ஏன் முக்கியம்? இதைத் தெரிந்துகொள்வதற்கு, முதலில் தாவீதின் உதாரணத்தைப் பார்க்கலாம். முக்கியமான ஒரு வேலையைச் செய்ய தன்னுடைய மகனை அவர் எப்படித் தயார்படுத்தினார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
தாவீது சாலொமோனைத் தயார்படுத்தினார்
6. தாவீது என்ன செய்ய ஆசைப்பட்டார்? ஆனால், யெகோவா என்ன சொன்னார்?
6 பல வருடங்களாக, தாவீது நாடோடியாக வாழ்ந்தார். ஆனால், ராஜாவான பிறகு, வசதியான மாளிகையில் வாழ்ந்தார். அதனால் அவர் நாத்தான் தீர்க்கதரிசியிடம், “பாருங்கள், தேவதாரு மரத்தால் கட்டப்பட்ட அரண்மனையில் நான் குடியிருக்கிறேன், ஆனால் யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டி சாதாரண கூடாரத்தில் இருக்கிறது” என்று சொன்னார். யெகோவாவுக்கு ஓர் அழகான ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று தாவீது ஏங்கினார். அதற்கு நாத்தான், “உங்கள் மனதில் என்ன நினைத்திருக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள், உண்மைக் கடவுள் உங்களுக்குத் துணையாக இருக்கிறார்” என்று சொன்னார். ஆனால், யெகோவா வேறு விதமாக நினைத்தார். ‘நான் குடியிருக்க ஒரு ஆலயத்தை அவன் கட்டப்போவதில்லை’ என்று தாவீதிடம் சொல்லச் சொல்லி நாத்தான் தீர்க்கதரிசியிடம் சொன்னார். தாவீதைத் தொடர்ந்து ஆசீர்வதிப்பதாக வாக்குக் கொடுத்தாலும், ஆலயத்தைக் கட்டும் பொறுப்பை யெகோவா சாலொமோனுக்குக் கொடுத்தார். அப்போது, தாவீது என்ன செய்தார்?—1 நா. 17:1-4, 8, 11, 12; 29:1.
7. யெகோவாவின் வழிநடத்துதலுக்கு தாவீது எப்படிப் பிரதிபலித்தார்?
7 யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று தாவீது உண்மையிலேயே ரொம்ப ஆசையாக இருந்தார். அதனால், இது அவருக்கு ஏமாற்றமாக இருந்திருக்கலாம். இருந்தாலும், தன்னுடைய மகன் சாலொமோன் முன்நின்று செய்யவிருந்த அந்த வேலைக்கு தாவீது முழு ஆதரவு கொடுத்தார். வேலையாட்களை ஒழுங்கமைக்கவும், இரும்பு, செம்பு, வெள்ளி, தங்கம், மற்றும் மரங்கள் ஆகியவற்றைச் சேகரிக்கவும் தாவீது உதவி செய்தார். அந்த ஆலயம், சாலொமோனின் ஆலயம் என்று பிற்பாடு அழைக்கப்பட்டது. ஆலயத்தைக் கட்டிய பெருமை யாருக்குப் போய்ச் சேரும் என்பதைப் பற்றியெல்லாம் தாவீது கவலைப்படவில்லை. அதற்குப் பதிலாக, “என் மகனே, உன் கடவுளாகிய யெகோவா உனக்குத் துணையாக இருப்பார்; அவர் உன்னைப் பற்றிச் சொன்னபடியே உன் கடவுளாகிய யெகோவாவுக்கு நீ வெற்றிகரமாக ஒரு ஆலயத்தைக் கட்டு” என்று சொல்லி சாலொமோனுக்கு உற்சாகம் கொடுத்தார்.—1 நா. 22:11, 14-16.
8. ஆலயத்தைக் கட்டுமளவுக்குச் சாலொமோனுக்குத் தகுதி இல்லை என்று தாவீது ஏன் நினைத்திருக்கலாம்? ஆனால், தாவீது என்ன செய்தார்?
8 ஒன்று நாளாகமம் 22:5-ஐ வாசியுங்கள். இவ்வளவு பெரிய வேலையைச் செய்வதற்குச் சாலொமோனுக்கு அனுபவம் போதாது என்று தாவீது நினைத்திருக்கலாம். அந்த ஆலயம் “மிக மிகப் பிரமாண்டமாய்” கட்டப்பட வேண்டியிருந்தது. சாலொமோனோ ‘சின்னப் பையனாகவும் அனுபவம் போதாதவராகவும்’ இருந்தார். ஆனாலும், இந்த விசேஷமான வேலையைச் செய்து முடிப்பதற்கு யெகோவா சாலொமோனுக்கு உதவி செய்வார் என்று தாவீதுக்குத் தெரிந்திருந்தது. அதனால், அந்தப் பிரமாண்டமான வேலையைச் செய்து முடிப்பதற்குத் தன்னால் முடிந்ததையெல்லாம் செய்தார்.
மற்றவர்களுக்குச் சந்தோஷமாகப் பயிற்சி கொடுங்கள்
9. இளைஞர்களுக்குப் பொறுப்புகளைக் கொடுப்பதை நினைத்து வயதானவர்கள் ஏன் சந்தோஷப்படலாம்? உதாரணம் கொடுங்கள்.
9 இளைஞர்களுக்குச் சில பொறுப்புகளைக் கொடுக்க வேண்டியிருப்பதை நினைத்து வயதானவர்கள் கவலைப்படக் கூடாது. இன்று யெகோவாவுடைய வேலைதான் மிக முக்கியமான வேலை என்பது நம் எல்லாருக்கும் தெரியும். அதனால், இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுப்பது, இந்த முக்கியமான வேலையைச் செய்து முடிக்க உதவியாக இருக்கும். இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் சின்னப் பிள்ளையாக இருந்தபோது, உங்கள் அப்பா கார் ஓட்டுவதைக் கவனித்திருப்பீர்கள். நீங்கள் கொஞ்சம் வளர்ந்த பிறகு, அவர் எப்படி கார் ஓட்டுகிறார் என்பதை அவர் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லியிருப்பார். பிறகு, லைசன்ஸ் எடுத்தவுடன் நீங்களாகவே கார் ஓட்ட ஆரம்பித்திருப்பீர்கள். உங்கள் அப்பாவும் உங்களுக்குச் சில ஆலோசனைகளைக் கொடுத்திருப்பார். சில சமயங்களில், நீங்களும் உங்கள் அப்பாவும் மாறி மாறி கார் ஓட்டியிருப்பீர்கள். ஆனால், உங்கள் அப்பாவுக்கு வயதான பிறகு, பெரும்பாலும் நீங்கள்தான் கார் ஓட்டினீர்கள். அதற்காக உங்கள் அப்பா வருத்தப்பட்டாரா? நிச்சயமாக இல்லை! நீங்கள் அவருக்காக கார் ஓட்டியதை நினைத்து அவர் கண்டிப்பாகச் சந்தோஷப்பட்டிருப்பார். அதேபோல், தங்களால் பயிற்சி பெற்ற இளைஞர்கள் யெகோவாவுடைய அமைப்பில் பொறுப்புகளை எடுத்துச் செய்வதைப் பார்க்கும்போது வயதானவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.
10. மதிப்பும் அதிகாரமும் இருப்பதைப் பற்றி மோசே என்ன நினைத்தார்?
10 பொறாமை என்ற குணம் வந்துவிடாமல் இருக்க வயதானவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சில இஸ்ரவேலர்கள் தீர்க்கதரிசிகள் போல் நடந்துகொண்டபோது, மோசே என்ன செய்தார்? (எண்ணாகமம் 11:24-29-ஐ வாசியுங்கள்.) அந்தத் தீர்க்கதரிசிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மோசேக்கு உதவியாளராக இருந்த யோசுவா நினைத்தார். மோசேக்கு இருந்த மதிப்பும் அதிகாரமும் பறிபோய்விடுமோ என்று பயந்தார். ஆனால், மோசே அவரிடம், “இப்போது என்னுடைய மதிப்புக் குறைந்துவிடும் என்று பயப்படுகிறாயா? யெகோவாவின் ஜனங்கள் எல்லாருமே யெகோவாவின் சக்தியைப் பெற்று தீர்க்கதரிசிகளாய் ஆக வேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன்” என்று சொன்னார். யெகோவாதான் அந்த வேலையை வழிநடத்துகிறார் என்பது மோசேக்குத் தெரிந்திருந்தது. தனக்குப் புகழ் சேர வேண்டும் என்று நினைப்பதற்குப் பதிலாக, யெகோவாவின் ஊழியர்கள் எல்லாருக்கும் நியமிப்புகள் கிடைக்க வேண்டும் என்று மோசே நினைத்தார். இந்த விஷயத்தில் நாம் எப்படி இருக்கிறோம்? யெகோவாவின் சேவையில் மற்றவர்களுக்கு நியமிப்புகள் கிடைக்கும்போது, மோசேயைப் போல நாமும் சந்தோஷப்படுகிறோமா?
11. தன்னுடைய பொறுப்பு இன்னொருவருக்குக் கொடுக்கப்பட்டபோது ஒரு சகோதரர் என்ன சொன்னார்?
11 நிறைய சகோதரர்கள், யெகோவாவின் சேவையில் பல பத்தாண்டுகளாகக் கடினமாக உழைத்திருக்கிறார்கள், கூடுதல் பொறுப்புகளை எடுத்துச் செய்ய இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, பீட்டர் என்ற சகோதரரைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவர் 74 வருடங்களாக யெகோவாவுக்கு முழுநேர சேவை செய்திருக்கிறார். அதில் 35 வருடங்கள், ஐரோப்பாவில் இருக்கிற ஒரு கிளை அலுவலகத்தில் சேவை செய்திருக்கிறார். அங்கே பல வருடங்களாக அவர் ஊழிய இலாகாவின் கண்காணியாகச் சேவை செய்தார். பிறகு, அவருக்குப் பதிலாக, அவரால் பயிற்சி பெற்ற பால் என்ற இளம் சகோதரர் கண்காணியாக நியமிக்கப்பட்டார். இதை நினைத்து பீட்டர் கவலைப்பட்டாரா? இல்லை! “கூடுதல் பொறுப்புகளை ஏத்துக்கிறதுக்கும், அந்த வேலைகள நல்லா செய்றதுக்கும் பயிற்சி பெற்ற சகோதரர்கள் இருக்கிறத நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்” என்று சகோதரர் பீட்டர் சொன்னார்.
வயதானவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள்
12. ரெகொபெயாமின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
12 சாலொமோனுடைய மகன் ரெகொபெயாம், தான் ஆட்சிக்கு வந்தவுடனே, அந்தப் புதிய நியமிப்பைச் செய்வது சம்பந்தமாக வயதானவர்களிடம் ஆலோசனை கேட்டான். பிறகு, அவர்களுடைய ஆலோசனையை ஒதுக்கித் தள்ளிவிட்டு, சிறுவயதிலிருந்து தன்னோடு சேர்ந்து வளர்ந்த இளைஞர்களுடைய ஆலோசனையின்படி செய்தான். அதனால், மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டன. (2 நா. 10:6-11, 19) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? வயதானவர்களிடமும், நம்மைவிட அனுபவசாலிகளிடமும் ஆலோசனை கேட்பது ஞானமானது. வயதானவர்கள் இதுவரை செய்து வந்ததைப் போல தாங்களும் இப்போது செய்ய வேண்டியிருப்பதாக இளைஞர்கள் நினைக்கக் கூடாது. வயதானவர்களின் ஆலோசனைகளை அவர்கள் மனதார மதிக்க வேண்டும். அதோடு, வயதானவர்கள் சொல்வது போல செய்வதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என்று முடிவுகட்டிவிடக் கூடாது.
13. வயதானவர்களோடு சேர்ந்து இளம் சகோதரர்கள் எப்படி வேலை செய்ய வேண்டும்?
13 வயதானவர்கள் செய்துகொண்டிருந்த வேலைகளை இப்போது சில இளம் சகோதரர்கள் செய்யலாம். அனுபவமுள்ள அந்த வயதான சகோதரர்களிடமிருந்து இளம் சகோதரர்கள் கற்றுக்கொள்வது ஞானமானதாக இருக்கும். சகோதரர் பீட்டருக்குப் பதிலாக, ஊழிய இலாகாவின் கண்காணியாக ஆன சகோதரர் பால் இப்படிச் சொன்னார்: “சகோதரர் பீட்டர்கிட்ட ஆலோசனை கேட்குறதுக்கு நேரம் ஒதுக்குனேன். என்னோட டிபார்ட்மண்ட்ல இருந்த மத்தவங்களையும் அவர்கிட்ட ஆலோசனை கேட்க சொன்னேன்.”
14. தீமோத்தேயுவும் பவுலும் ஒன்றாகச் சேர்ந்து சேவை செய்தததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
14 தீமோத்தேயுவைவிட அப்போஸ்தலன் பவுல் பல வருடங்கள் மூத்தவர். அவர்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து பல வருடங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்திருக்கிறார்கள். (பிலிப்பியர் 2:20-22-ஐ வாசியுங்கள்.) “நம் எஜமானுடைய சேவையை உண்மையோடு செய்கிற என் அன்புப் பிள்ளை தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புகிறேன். கிறிஸ்து இயேசுவின் சேவையில் நான் பயன்படுத்தும் முறைகளை அவர் உங்களுக்கு ஞாபகப்படுத்துவார். நான் எல்லா இடங்களிலும் எல்லா சபைகளிலும் அந்த முறைகளையே கற்றுக்கொடுத்து வருகிறேன்” என்று தீமோத்தேயுவைப் பற்றி கொரிந்திய சபையில் இருந்தவர்களிடம் பவுல் சொன்னார். (1 கொ. 4:17) இதிலிருந்து என்ன தெரிகிறது? பவுலும் தீமோத்தேயுவும் சேர்ந்து நன்றாக வேலை செய்தார்கள் என்றும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தார்கள் என்றும் தெரிகிறது. ‘கிறிஸ்து இயேசுவின் சேவையில் தான் பயன்படுத்தின முறைகளை’ பற்றி தீமோத்தேயுவுக்குக் கற்றுக்கொடுக்க பவுல் நேரம் ஒதுக்கினார்; தீமோத்தேயுவும் நன்றாகக் கற்றுக்கொண்டார். பவுலுக்குத் தீமோத்தேயுவை ரொம்ப பிடித்திருந்தது. கொரிந்து சபையிலிருந்த சகோதர சகோதரிகளைத் தீமோத்தேயு நன்றாகப் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை பவுலுக்கு இருந்தது. இன்று, முன்நின்று வழிநடத்துவதற்காக மூப்பர்கள் நிறைய சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். இந்த விஷயத்தில், மூப்பர்கள் பவுலைப் போல நடந்துகொள்ளலாம்!
நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிற முக்கியமான பங்கு
15. மாற்றங்களைச் சமாளிக்க ரோமர் 12:3-5 எப்படி நமக்கு உதவும்?
15 முக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகம் நிறைய விதங்களில் தொடர்ந்து வளர்ந்துகொண்டே போகிறது. அதனால், தொடர்ந்து சில மாற்றங்கள் ஏற்படும். சில மாற்றங்கள், தனிப்பட்ட விதத்தில் நம்மைப் பாதிக்கலாம், அதைச் சமாளிப்பது நமக்குக் கஷ்டமாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில், நாம் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும்; நமக்குப் பிடித்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவதைவிட கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும். இப்படிச் செய்யும்போது, நம்மால் ஒற்றுமையாக இருக்க முடியும். அப்போஸ்தலன் பவுல் ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு இப்படி எழுதினார்: “உங்களில் யாரும் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக எண்ணாமல், அவரவருக்குக் கடவுள் கொடுத்திருக்கிற விசுவாசத்தின்படியே எண்ண வேண்டும். அப்படிச் செய்வது உங்களுக்குத் தெளிந்த புத்தி இருப்பதைக் காட்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட அளவற்ற கருணையால் இதை உங்கள் எல்லாருக்கும் சொல்கிறேன். ஒரே உடலில் பல உறுப்புகள் இருந்தாலும் எல்லா உறுப்புகளும் ஒரே வேலையைச் செய்வதில்லை; அதேபோல், நாமும் பலராக இருந்தாலும் கிறிஸ்துவோடு ஒன்றுபட்டு ஒரே உடலாக இருக்கிறோம். ஆனால், ஒன்றையொன்று சார்ந்திருக்கிற தனித்தனி உறுப்புகளாக இருக்கிறோம்.”—ரோ. 12:3-5.
16. யெகோவாவின் அமைப்பில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் காத்துக்கொள்ள ஒவ்வொரு கிறிஸ்தவரும் என்ன செய்ய வேண்டும்?
16 நம்முடைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும் சரி, கடவுளுடைய அரசாங்கத்தை ஆதரிக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். வயதானவர்களே, நீங்கள் செய்துவரும் வேலைகளை இளம் சகோதரர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள். இளம் சகோதரர்களே, பொறுப்புகள் கிடைக்கும்போது அதை ஏற்றுக்கொள்ளுங்கள், மனத்தாழ்மையாக இருங்கள், வயதானவர்களிடம் மரியாதைக்குரிய விதத்தில் நடந்துகொள்ளுங்கள். மனைவிகளே, ஆக்கில்லாவின் மனைவி பிரிஸ்கில்லாவைப் போல நடந்துகொள்ளுங்கள். சூழ்நிலைகள் மாறியபோதும், அவள் தன்னுடைய கணவன் ஆக்கில்லாவுக்கு உண்மையான ஆதரவு காட்டினாள்.—அப். 18:2.
17. சீஷர்கள்மீது இயேசுவுக்கு என்ன நம்பிக்கை இருந்தது? எந்த வேலையைச் செய்வதற்கு இயேசு அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார்?
17 மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிற விஷயத்தில் இயேசு நமக்குச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்க இயேசு எப்போதும் தயாராக இருந்தார். தன்னுடைய வேலையை மற்றவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. தன்னுடைய சீஷர்கள் தவறு செய்யும் இயல்புள்ளவர்கள் என்பதும் இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், பிரசங்கிப்பு வேலையில் தன்னைவிட பெரிய செயல்களை அவர்கள் செய்வார்கள் என்று இயேசு நம்பினார். (யோவா. 14:12) இயேசு அவர்களுக்கு நன்றாகப் பயிற்சி கொடுத்தார். அந்தச் சமயத்தில், அவர்களும், நல்ல செய்தியை வானத்தின் கீழ் இருக்கிற எல்லா மக்களுக்கும் பிரசங்கித்தார்கள்.—கொலோ. 1:23.
18. எதிர்காலத்தில் நாம் என்ன வேலையைச் செய்யப்போகிறோம்? இப்போது நமக்கு என்ன வேலை இருக்கிறது?
18 இயேசு இறந்த பிறகு, யெகோவா அவரை உயிர்த்தெழுப்பினார். ‘எல்லா அரசாங்கத்துக்கும் அதிகாரத்துக்கும் வல்லமைக்கும் தலைமை ஸ்தானத்துக்கும் மேலான’ அதிகாரத்தை அவருக்குக் கொடுத்தார். (எபே. 1:19-21) அர்மகெதோனுக்கு முன்பாகவே உண்மையுள்ளவர்களாக நாம் இறந்துவிட்டால், புதிய உலகத்தில் மறுபடியும் வாழ்வோம், திருப்தியான பல வேலைகளை அங்கே செய்வோம். ஆனால், இப்போது, நல்ல செய்தியைப் பிரசங்கித்து, சீஷர்களை உருவாக்குகிற அருமையான வேலை நமக்கு இருக்கிறது. நாம் இளைஞர்களாக இருந்தாலும் சரி, வயதானவர்களாக இருந்தாலும் சரி, நாம் எல்லாரும் தொடர்ந்து “எஜமானுடைய வேலையை அதிகமதிகமாகச் செய்கிறவர்களாக” இருக்க வேண்டும்.—1 கொ. 15:58.