பஸ்கா போஜனத்திலிருந்து இரட்சிப்புக்கு
“இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு யெகோவாவின் திருநாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.”—சங்கீதம் 116:13, தி.மொ.
1. எப்பொழுதுமே விருப்பப் பாடலாக இருக்கும் என்ன பாடல் உங்கள் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும்?
நீங்கள் நீண்ட, மகிழ்ச்சியான எதிர்காலத்தைக் கொண்டிருப்பது குறித்த ஒரு பாடலை எவ்விதம் அனுபவிப்பீர்கள்? உண்மையில், அப்படிப்பட்ட ஒரு பாடல் எப்பொழுதுமே விருப்பப் பாடலாக இருக்கிறது. என்றபோதிலும், இந்தக் கருத்துள்ள பாடலைப் புரிந்து அனுபவிப்பதில் பெரும்பான்மையினரைவிட நீங்கள் மேன்மையான நிலையில் இருக்கிறீர்கள். யூதர்கள் அதை அல்லேல் (துதி) என்று அழைக்கிறார்கள். சங்கீதம் 113 முதல் 118-ஐக் கொண்டு இயற்றப்பட்ட இந்தப் பாடல் நம்மை “அல்லேலூயா” அல்லது “யாவைத் துதி” என்று பாடும்படித் தூண்டுகிறது.
2. இந்தப் பாட்டு எவ்விதம் பயன்படுத்தப்படுகிறது? இது செடார் அல்லது இராப்போஜனத்துக்கு எவ்விதம் சம்பந்தமுடையதாயிருக்கிறது?
2 யூதர்கள் அல்லேலைத் தங்களுடைய பஸ்கா ஆசரிப்பின்போது பாடுவார்கள், இந்தப் பாடுதல் மிருக பலிகள் கொடுக்கப்பட்ட ஆலயத்தைக் கடவுள் கொண்டிருந்த நாட்களுக்குப் பின்செல்லக்கூடியதாயிருக்கிறது. இன்று, அது யூதரின் வீடுகளில் செடார் (Sedar) என்று அழைக்கப்படும் பஸ்கா ஆசரிப்பு மற்றும் போஜனத்தின்போது பாடப்படுகிறது. ஆனால் அதைத் தங்களுடைய பஸ்கா போஜனத்தின்போது பாடுகிறவர்களில் வெகு சிலரே சங்கீதம் 116:13-ன் உண்மையான கருத்தைப் புரிந்து பாடுகின்றனர்: “இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, யெகோவாவின் திருநாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.” (தி.மொ.) இரட்சிப்பு ஏன் பஸ்காவுடன் இணைக்கப்பட்டிருக்கிறது? உங்களுடைய இரட்சிப்பு உட்பட்டிருக்கக்கூடுமா?
பஸ்கா—இரட்சிப்பின் பண்டிகை
3. செடாரின் பின்னணி என்ன?
3 இஸ்ரவேலர் ஒடுக்குகிற ஒரு பார்வோனின்கீழ் எகிப்தில் அடிமைகளாக இருந்தார்கள் என்பதை நினைவு கூருங்கள். கடைசியாக யெகோவா தம்முடைய மக்களை சுதந்திரத்துக்கு வழிநடத்துவதற்காக மோசேயை எழுப்பினார். கடவுள் எகிப்தின் மேல் ஒன்பது வாதைகளைக் கொண்டுவந்த பின்பு மோசே பத்தாவது வாதையை அறிவித்தான். எகிப்தியர் குடும்பங்களிலுள்ள எல்லாத் தலைப்பிள்ளைகளையும் யெகோவா சங்கரிப்பார். (யாத்திராகமம் 11:1–10) என்றபோதிலும், இஸ்ரவேலர் சங்கரிக்கப்படுவதிலிருந்து காக்கப்படலாம். எப்படி? அவர்கள் ஓர் ஆட்டுக்குட்டியை அடித்து, அதின் இரத்தத்தை வீட்டு வாசல் நிலைக்கால்களிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, வீட்டிற்குள் தங்கி ஆட்டுக்குட்டியின் மாம்சமும், புளிப்பில்லா அப்பமும், கசப்பான கீரையும் அடங்கிய ஒரு போஜனத்தை அருந்த வேண்டியதாயிருந்தது. அந்தப் போஜனத்தின்போது, கடவுள் அவர்களுடைய தலைப்பிள்ளைகளைச் சங்கரிக்காமல் “கடந்து போவார்.”—யாத்திராகமம் 12:1–13.
4, 5. பஸ்கா எவ்விதம் பலரை இரட்சிப்புக்கு வழிநடத்தியது? (சங்கீதம் 106:7–10)
4 இந்தப் பத்தாவது வாதைக்குப் பிரதிபலிப்பவனாகப் பார்வோன் சொன்னதாவது: “நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப் புறப்பட்டுப்போய், நீங்கள் சொன்னபடியே யெகோவாவுக்கு ஆராதனைசெய்யுங்கள்.” (யாத்திராகமம் 12:29–32, தி.மொ.) அந்த எபிரெயரும் அவர்கள்பால் இரக்கங்கொண்ட “பல ஜாதியான ஜனங்கள் அநேகரும்” அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டுச் சென்ற பின்பு, பார்வோன் தன்னுடைய மனதை மாற்றி, அவர்களைத் துரத்திக்கொண்டு பின்சென்றான். அப்பொழுது கடவுள் தம்முடைய ஜனத்தை செங்கடலினூடே உயிர்தப்பிட அற்புதமாக உதவினார், பார்வோனும் துரத்திக்கொண்டுவந்த சேனையும் அதில் மாண்டார்கள்.—யாத்திராகமம் 12:38; 14:5–28; சங்கீதம் 78:51–53; 136:13–15.
5 செங்கடலிலே மோசே இஸ்ரவேலரிடம் சொன்னதாவது: “பயப்படாதிருங்கள், நீங்கள் சும்மா நின்றுகொண்டு யெகோவா உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்.” பின்பு அவர்கள் இப்படியாகப் பாடினார்கள்: “யெகோவா என் பலம், என் கீதம், அவர் எனக்கு இரட்சிப்பானார். அவரே என் கடவுள்; நான் அவரை மகிமைப்படுத்துவேன்.” (யாத்திராகமம் 14:13; 15:2, தி.மொ.) ஆம், பத்து வாதைகளிலிருந்தும் செங்கடலினூடேயும் இஸ்ரவேலர் மீட்பு அடைந்தது ஓர் இரட்சிப்பு. சரியாகவே சங்கீதக்காரன் யெகோவாவை, “பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன்” என்று விவரித்தான்.—சங்கீதம் 68:6, 20; 74:12–14; 78:12, 13, 22.
6, 7. பஸ்கா ஏன் ஏற்படுத்தப்பட்டது? என்றபோதிலும் முதல் பஸ்காவிலிருந்து இது வித்தியாசங்களுடன் இப்பொழுது ஆசரிக்கப்படுவதற்குக் காரணம் என்ன?
6 எபிரெயர்கள் பஸ்காவை ஓர் இரட்சிப்பு ஞாபகார்த்தமாகக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. கடவுள் சொன்னார்: “அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலுக்கென்று இருக்கும்; அதை யெகோவாவுக்கு உற்சவநாளாகக் கொண்டாடவேண்டும்; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாகக் கொண்டாட வேண்டும்.” (யாத்திராகமம் 12:14, தி.மொ.) ஒவ்வொரு பஸ்கா போஜனம் அல்லது செடாரின் (Sedar) போதும், தகப்பன் அந்த இரட்சிப்பைக் குறித்து தன் குடும்பத்துக்கு ஞாபகப்படுத்தவேண்டும். யெகோவா செய்யச் சொன்னதாவது: “உங்கள் பிள்ளைகள் இதை ஆசரிப்பதின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால், இது யெகோவாவின் பஸ்காவுக்குரிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலே இஸ்ரவேல் புத்திரரின் வீடுகளைக் கடந்துபோனார்.”—யாத்திராகமம் 12:25–27, தி.மொ.
7 யூதர்கள் இந்நாள்மட்டும் பஸ்கா போஜனத்தை ஆசரித்துவருவதுதானே அந்தப் பதிவு சரித்திரப்பூர்வமானது என்பதை உறுதிப்படுத்துகிறது. என்றபோதிலும், அவர்களுடைய சில பழக்கங்கள் கடவுள் செய்யச்சொன்னதற்கு வித்தியாசப்பட்டிருக்கிறது. செடாரின் ஆரம்பங்கள் சொல்லுகிறது: “பைபிள் பஸ்காவைப் பற்றியும் புளிப்பில்லா அப்பப்பண்டிகையைப் பற்றியும் விவரமாகக் குறிப்பிடுகிறது; என்றபோதிலும் இந்த விவரிப்புகள் அந்த நாளின் பின் ஆசரிப்புகளுக்கு ஒத்திருக்கவில்லை. குறிப்பாக பைபிள் ஆசரிப்பு முறை பஸ்கா பலியினிடமாகக் கவனத்தைத் திருப்புகிறது, இது பைபிளுக்குப் பின் வந்த இலக்கியங்களில் மைய இடத்தைக் கொண்டில்லை.” இதற்கு முக்கியமான ஒரு காரணம், மிருக பலிகள் செலுத்துவதற்கு யூதர்களுக்கு ஓர் ஆலயம் இல்லை.
8. பஸ்காவைக் குறித்து சிந்திப்பதற்கு நமக்கு என்ன விசேஷ காரணம் இருக்கிறது?
8 பூர்வ இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த எல்லாப் பண்டிகைகளையும் கிறிஸ்தவர்கள் பயனுள்ள விதத்தில் படிக்கலாம்,a ஆனால் இப்போதைக்கு பஸ்காவின் சில அம்சங்கள் நம்முடைய விசேஷ கவனத்திற்கு உகந்தது. இயேசு, ஒரு யூதனாகப் பஸ்காவை ஆசரித்தார். அப்படி அவர் கடைசியாக ஆசரித்த சமயத்தில், கிறிஸ்தவர்களுக்கான ஒரே தெய்வீக ஆசரிப்பைக் குறித்துப் பேசினார்—கர்த்தருடைய இராப் போஜனம், இயேசுவின் மரண ஞாபகார்த்தம். எனவே கிறிஸ்தவ ஆசரிப்பு பஸ்காவுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.
பஸ்கா ஆட்டுக்குட்டியைவிட மேன்மையானது
9, 10. பஸ்கா ஆட்டுக்குட்டி எப்படி விசேஷமான அல்லது தனித்தன்மை வாய்ந்த ஒரு பலியாக இருந்தது?
9 ‘நியாயப்பிரமாணம் வரப்போகிற நன்மைகளின் நிழலாயிருந்தது,’ என்று எபிரெயர் 10:1 கூறுகிறது. மெக்ளின்டாக் மற்றும் ஸ்ட்ராங்கின் சைக்ளோபீடியா ஆஃப் பிப்ளிக்கல், தியலாஜிக்கல் அண்டு எக்ளிசியாஸ்டிக்கல் லிட்டரேச்சர் கூறுகிறது: “நியாயப்பிரமாணத்திலடங்கிய வரப்போகிற நன்மைகளின் வேறு எந்த நிழலும் பஸ்கா பண்டிகையைவிட மேன்மையாகிவிட முடியாது.” கடவுள் தலைப்பிள்ளைகளையும் அதற்குப் பின்பு எகிப்திலிருந்து எல்லா எபிரெயரையும் இரட்சித்த விதத்தை நினைவுகூரும் ஓர் ஆசரிப்பாயிருப்பதைக் காட்டிலும், பஸ்கா ஆட்டுக்குட்டி விசேஷமான ஓர் அர்த்தத்தைக் கொண்டிருந்தது.
10 ஆட்டுக்குட்டி அநேக அம்சங்களில் தனித்தன்மை கொண்டதாயிருந்தது. உதாரணமாக, மோசேயின் நியாயப்பிரமாணம் தேவைப்படுத்திய மிருக பலிகள் தனிப்பட்ட பாவங்கள் அல்லது குற்றங்கள் சம்பந்தமாக ஒரு தனிநபரால் செலுத்தப்பட்டன, மற்றும் மிருகங்களின் பாகங்கள் பலிபீடத்தில் தகனிக்கப்பட்டன. (லேவியராகமம் 4:22–35) சமாதான பலிகளின் மாம்சத்தில் கொஞ்சம் பலிசெலுத்தும் ஆசாரியனுக்கு அல்லது மற்ற ஆசாரியர்களுக்குக் கொடுக்கப்பட்டது. (லேவியராகமம் 7:11–38) என்றபோதிலும், பஸ்கா ஆட்டுக்குட்டி பலிபீடத்தில் பயன்படுத்தப்படவில்லை, ஒரு மக்கள் தொகுதியால், பொதுவாக அதைப் புசிக்கும் ஒரு குடும்பத்தால் செலுத்தப்பட்டது.—யாத்திராகமம் 12:4, 8–11.
11. பஸ்கா ஆட்டுக்குட்டியைக் குறித்த யெகோவாவின் நோக்குநிலை என்னவாக இருந்தது? அது எதைக் குறிப்பிடுவதாயிருந்தது? (எண்ணாகமம் 9:13)
11 பஸ்கா ஆட்டுக்குட்டியை யெகோவா அவ்வளவு உயர்வாக மதித்ததனால், அதை அவர் “என்னுடைய பலி” என்று அழைக்கிறார். (யாத்திராகமம் 23:18; 34:25) “பஸ்கா பலி யெகோவாவின் உயர் சிறப்புவாய்ந்த பலி” என்று அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த ஆட்டுக்குட்டி மறுக்கமுடியாதளவுக்கு இயேசுவின் பலியைக் குறித்துக்காட்டுவதாய், அல்லது ஒரு மாதிரியாய் இருந்தது. இதை நாம் அறிந்திருப்பதற்குக் காரணம் அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுவை நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிற “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து” என்று அழைக்கிறார். (1 கொரிந்தியர் 5:7) இயேசு “தேவ ஆட்டுக்குட்டி” என்றும் “அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர்” என்றும் அடையாளங்காட்டப்படுகிறார்.—யோவான் 1:29; வெளிப்படுத்துதல் 5:12; அப்போஸ்தலர் 8:32.
ஜீவனைக்காக்கும் இரத்தம்
12. முதல் பஸ்காவில் ஆட்டுக்குட்டியின் இரத்தம் வகித்த பாகம் என்ன?
12 அந்தச் சமயத்திலே எகிப்தில் அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தம் இரட்சிப்புக்கு மையமாகச் செயல்பட்டது. யெகோவா தலைப்பிள்ளைகளைச் சங்கரித்தபோது, நிலைக்கால்களில் இரத்தம் தெளிக்கப்பட்டிருந்த வீடுகளைக் கடந்துபோய்விட்டார். மேலும், எபிரெயர்கள் தங்களுடைய தலைப்பிள்ளைகளின் மரணத்தின்பேரில் துக்கங்கொண்டாடிக்கொண்டில்லாததால், அவர்கள் விடுதலைநோக்கி செங்கடலினூடேக் கடந்து செல்லும் நிலையில் இருந்தார்கள்.
13, 14. இயேசுவின் இரத்தம் எப்படி ஜீவனைக் காக்கவும் இரட்சிப்படையவும் அவசியமாயிருக்கிறது? (எபேசியர் 1:13)
13 இன்று இரட்சிப்பைப் பெறுவதிலும் இரத்தம் உட்பட்டிருக்கிறது—இயேசு சிந்திய இரத்தம். பொ.ச. 32-ல் “யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்த”போது, இயேசு ஒரு பெரிய கூட்டத்திடம் இப்படியாகச் சொன்னார்: “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.” (யோவான் 6:4, 54, 55) அவருக்குச் செவிகொடுத்துக்கொண்டிருந்த யூதர்கள் அனைவருமே வருகின்ற பஸ்காவையும் எகிப்தில் ஓர் ஆட்டுக்குட்டியின் இரத்தம் பயன்படுத்தப்பட்டது என்பதையும் மனதிற்கொண்டிருப்பார்கள்.
14 கர்த்தருடைய இராப்போஜனத்தில் பயன்படுத்தப்படும் சின்னங்களைக் குறித்து இயேசு அந்தச் சமயத்தில் பேசிக்கொண்டில்லை. கிறிஸ்தவர்களுக்கான அந்தப் புதிய ஆசரிப்பு ஓர் ஆண்டு கழித்துதான் நிறுவப்பட்டது, எனவே பொ.ச. 32-ல் இயேசுவுக்குச் செவிகொடுத்துக்கொண்டிருந்த அப்போஸ்தலர்களுங்கூட அதைப்பற்றி ஒன்றும் அறியாதவர்களாகவே இருந்தனர். இருந்தபோதிலும், நித்திய ஜீவனுக்குத் தம்முடைய இரத்தம் மிகவும் அவசியம் என்பதை இயேசு காட்டிக்கொண்டிருந்தார். பவுல் விளக்கினான்: “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.” (எபேசியர் 1:7) இயேசுவின் இரத்தத்தின் அடிப்படையிலான பாவமன்னிப்பின் மூலம் மட்டுமே நான் என்றென்றும் வாழ முடியும்.
எந்த இரட்சிப்பு, எங்கே?
15. எகிப்திலிருந்த எபிரெயருக்கு என்ன இரட்சிப்பும் சிலாக்கியங்களும் கூடிய காரியமானது? எது கூடாமற்போனது? (1 கொரிந்தியர் 10:1–5)
15 பூர்வ எகிப்தில் ஓரளவு இரட்சிப்பே உட்பட்டிருந்தது. எகிப்திலிருந்து புறப்பட்டுப்போன எவருமே முடிவற்ற வாழ்க்கையின் எதிர்பார்ப்பைக் கொண்டில்லை. தேசத்துக்கு ஆசாரியராயிருக்கும்படிக்குக் கடவுள் லேவியரை நியமித்ததும், யூதா கோத்திரத்தாரில் சிலர் அரசர்களாக ஆனார்கள் என்பதும் உண்மைதான், ஆனால் இவர்கள் எல்லாருமே மரித்தார்கள். (அப்போஸ்தலர் 2:29; எபிரெயர் 7:11, 23, 27) எகிப்தைவிட்டுவந்த “பல ஜாதியான ஜனங்கள் அநேகரும்” அந்த சிலாக்கியத்தை உடையவர்களாயில்லை என்றபோதிலும், அந்தச் எபிரெயருடன் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை அடைந்து, கடவுளை வணங்கிவரும் ஓர் இயல்பான வாழ்க்கையை அனுபவிக்கும் நம்பிக்கையைக் கொண்டிருக்கக்கூடும். இருந்தாலும், கிறிஸ்தவத்துக்கு முன்னான யெகோவாவின் ஊழியர்கள், காலப்போக்கில், மனிதவர்க்கம் வாழ்வதற்கான இடமாகக் கடவுள் நோக்கங்கொண்டிருக்கும் இந்தப் பூமியில் முடிவில்லா வாழ்வை எதிர்பார்த்திருப்பதற்கு ஓர் ஆதாரம் இருந்தது. இது யோவான் 6:54-ல் இயேசு கொடுத்த வாக்குத்தத்தத்துக்கு இசைவாக இருக்கும்.
16. கடவுளுடைய பூர்வீக ஊழியர்கள் எப்படிப்பட்ட இரட்சிப்பில் நம்பிக்கை வைத்திருக்கக்கூடும்?
16 இந்தப் பூமி குடியிருப்புக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது என்றும் நீதிமான்கள் அதில் என்றும் வாழ்வார்கள் என்பது குறித்தும் எழுதுவதற்குக் கடவுள் தம்முடைய பூர்வீக ஊழியர்களில் சிலரைப் பயன்படுத்தினார். (சங்கீதம் 37:9–11; நீதிமொழிகள் 2:21, 22; ஏசாயா 45:18) என்றாலும், உண்மை வணக்கத்தார் மரிப்பார்களானால், அவர்கள் எவ்விதம் இப்படிப்பட்ட இரட்சிப்பு அடைந்திட முடியும்? கடவுள் அவர்களை இந்தப் பூமியின்மீது மீண்டும் உயிரோடு கொண்டுவருவதன் மூலமே. உதாரணமாக யோபு, தான் நினைவுகூரப்பட்டு மீண்டும் உயிர்வாழ அழைக்கப்படுவான் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினான். (யோபு 14:13–15; தானியேல் 12:13) இரட்சிப்பின் ஒரு வகை பூமியில் நித்திய ஜீவனோடு வாழ்வது என்பது தெளிவாக இருக்கிறது.—மத்தேயு 11:11.
17. மற்றவர்கள் என்ன வித்தியாசமான இரட்சிப்பை அடைவார்கள் என்று பைபிள் காண்பிக்கிறது?
17 இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின் சென்ற பரலோகத்தில் வாழ்வதற்காக இரட்சிக்கப்படுதல் குறித்துங்கூட பைபிள் பேசுகிறது. “அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.” (1 பேதுரு 3:18, 22; எபேசியர் 1:20–22; எபிரெயர் 9:24) ஆனால் பரலோகத்துக்கு எடுத்துச்செல்லப்படும் மனிதரில் இயேசு ஒருவர் மட்டுமே இல்லை. மற்றவர்களிலிருந்தும் ஒரு சிறுபான்மையான எண்ணிக்கையைக் கடவுள் பூமியிலிருந்து எடுக்க தீர்மானித்திருக்கிறார். இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களிடம் சொன்னார்: “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; . . . ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்வேன்.”—யோவான் 14:2, 3.
18. பரலோக வாழ்க்கைக்குரிய இரட்சிப்பில் கவனத்தை ஒருமுகப்படுத்த நமக்கு இப்பொழுது என்ன காரணம் இருக்கிறது?
18 இயேசுவோடு ஒன்றாயிருக்க பரலோக வாழ்க்கைக்கு இரட்சிக்கப்படுவது முதல் பஸ்காவில் உட்பட்டிருந்த ஓரளவு இரட்சிப்பைக் காட்டிலும் நிச்சயமாகவே அதிக மகத்தான ஒன்று. (2 தீமோத்தேயு 2:10) கடவுளுடைய அங்கீகாரம் பெற்ற கடைசி செடாரில் அல்லது பஸ்கா போஜனம் ஆசரிக்கப்பட்ட அந்தச் சாயங்காலம்தானே இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்குப் புதிய ஆசரிப்பை நிறுவினார். இது பரலோக வாழ்க்கைக்குரிய இரட்சிப்பினிடமாகக் கவனத்தை ஒருமுகப்படுத்தியது. அவர் அப்போஸ்தலர்களிடம் சொன்னார்: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” (லூக்கா 22:19) இந்த ஆசரிப்பை கிறிஸ்தவர்கள் எவ்விதம் செய்யவேண்டும் என்பதை நாம் சிந்திப்பதற்கு முன்பு, அவ்விதம் எப்பொழுது செய்யவேண்டும் என்பதை நாம் சிந்திப்போம்.
“குறித்த காலம்”
19. பஸ்காவையும் கர்த்தருடைய இராப்போஜனத்தையும் இணைப்பது ஏன் தர்க்கரீதியான ஒன்று?
19 இயேசு ஏற்கெனவே சொன்னார்: “நான் பாடுபடுகிறதற்கு முன்னே, உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.” (லூக்கா 22:15) அதைத் தொடர்ந்து கர்த்தருடைய இராப்போஜனத்தைக் குறித்துப் பேசினார்; இதைத்தான் சீஷர்கள் அவருடைய மரண ஞாபகார்த்தமாக அனுசரிக்க வேண்டும். (லூக்கா 22:19, 20) பஸ்கா வருடத்துக்கு ஒருமுறை ஆசரிக்கப்பட்டது. எனவே, கர்த்தருடைய இராப்போஜனமும் வருடந்தோறும் அனுசரிக்கப்படுவது நியாயமானது. எப்பொழுது? தர்க்கரீதியாகவே, இளவேனிற்காலமாகிய பஸ்கா ஆசரிப்பின்போது. இதை எப்பொழுதுமே இயேசு மரித்த தினமாகிய வெள்ளிக்கிழமையில் கொண்டிருப்பதற்குப் பதிலாக, இது நைசான் 14-ம் (யூத நாள்காட்டி) தேதிக்குரிய தினத்தைக் குறிக்கும்.
20. யெகோவாவின் சாட்சிகள் ஏன் நைசான் 14-ல் அக்கறையுடையவர்களாக இருக்கிறார்கள்?
20 “ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்,” என்று எழுதிய போது பவுல் நைசான் 14-ஐத்தான் மனதில் கொண்டிருந்தான். (1 கொரிந்தியர் 11:26) அடுத்த இரண்டு நூற்றாண்டுகளாக அநேகக் கிறிஸ்தவர்கள் நைசான் 14-ஐ கடைப்பிடித்தார்கள். அவர்கள் “14-வது” என்பதற்குரிய லத்தீன் சொல் மூலத்தைக் கொண்டிருக்கும் குவார்ட்டோடெசிமன்ஸ் (Quartodecimans), அதாவது ‘பதினான்கை கடைப்பிடித்தவர்’ என்று அறியப்பட்டனர். மெக்ளின்டாக் அண்டு ஸ்ட்ராங் கொடுக்கும் அறிக்கை: “கர்த்தருடைய மரணத்தை சிறிய ஆசியாவிலுள்ள சர்ச்சுகள் நைசான் மாதம் 14-ம் தேதிக்கு ஒத்த நாளில் அனுசரித்தார்கள்; பூர்வீக சர்ச் முழுவதும் கருதியவிதமாக, அந்த நாளில்தான் கிறிஸ்து அறையப்பட்டார்.” இன்று, யெகோவாவின் சாட்சிகள் கர்த்தருடைய இராப் போஜன ஆசரிப்பை ஆண்டுதோறும் நைசான் 14-க்கு ஒத்த தேதியில் கொண்டிருக்கிறார்கள். என்றபோதிலும், சிலர் இது யூதர்கள் பஸ்காவை ஆசரிக்கும் தேதியிலிருந்து வித்தியாசப்படக்கூடும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன்?
21. பஸ்கா ஆட்டுக்குட்டி எப்பொழுது பலி செலுத்தப்படவேண்டியதாயிருந்தது? ஆனால் இன்றுள்ள யூதர்கள் என்ன செய்கிறார்கள்?
21 எபிரெயருடைய நாள் சூரிய அஸ்தமனத்திலிருந்து (ஏறக்குறைய ஆறு மணி) மறுநாள் சூரிய அஸ்தமனம் வரையும் தொடர்ந்தது. பஸ்கா ஆட்டுக்குட்டி நைசான் 14-ம் தேதி “இரு சாயங்காலங்களுக்கும் இடையே” அடிக்கப்படவேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டார். (யாத்திராகமம் 12:6, NW) அது எப்பொழுது இருக்கும்? ஆட்டுக்குட்டி நைசான் 14-ன் முடிவுக்குச் சற்றே முன்னர், சூரியன் அஸ்தமனமாக ஆரம்பிப்பதற்கும் (ஏறக்குறைய மூன்று மணி) சரியான அஸ்தமன நேரத்திற்கும் இடையில் வெட்டப்படவேண்டும் என்ற யூத ரபீக்களின் கருத்தை நவீன நாளைய யூதர்கள் பற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் தங்களுடைய செடாரை அல்லது பஸ்கா போஜனத்தை சூரிய அஸ்தமனத்திற்குப் பின், நைசான் 15 ஆரம்பித்துவிட்டதும் கொண்டிருக்கிறார்கள்.—மாற்கு 1:32.
22. ஞாபகார்த்தத்துக்கான தேதி யூதர்கள் தங்கள் பஸ்காவை ஆசரிக்கும் தேதியிலிருந்து ஏன் வித்தியாசப்படக்கூடும் என்பதற்கு ஒரு காரணம் என்ன? (மாற்கு 14:17; யோவான் 13:30)
22 என்றபோதிலும் அந்தக் கூற்றை இதற்கு வித்தியாசமாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு நல்ல காரணம் இருக்கிறது. “சாயங்காலத்தில் சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில், . . . பஸ்காவை அடிக்க வேண்டும்” என்று உபாகமம் 16:6 இஸ்ரவேலருக்குத் தெளிவாகக் கூறியது. (தி.மொ.) இது “இரு சாயங்காலங்களுக்கும் இடையே” என்ற கூற்று (நைசான் 14-ல் ஆரம்பமாகும்) சூரிய அஸ்தமனத்திலிருந்து உண்மையிலேயே இருள் ஏற்படும் வரையிலாக இருக்கும் மருள்மாலைப் பகுதியைக் குறித்தது. இன்றுவரை சமாரியர்கள்b செய்துவருவதுபோன்று, பூர்வீக கேரெய்ட்c யூதர்கள் இதை இப்படித்தான் புரிந்துகொண்டார்கள். பஸ்கா ஆட்டுக்குட்டி நைசான் 15-ம் தேதி அல்ல, நைசான் 14-ம் தேதி “குறித்த காலத்திலே” பலிசெலுத்தப்பட்டு புசிக்கப்பட்டது என்பதை நாம் ஏற்றுக்கொள்வது, நம்முடைய ஞாபகார்த்த நாளின் தேதி யூதர்களுடைய தேதியிலிருந்து சில சமயங்களில் ஏன் வித்தியாசப்படுகிறது என்பதற்கு ஒரு காரணமாகும்.—எண்ணாகமம் 9:2–5.
23. எபிரெயர் நாள்காட்டிக்கு மாதங்கள் கூட்டப்படுவது ஏன்? நவீன நாளைய யூதர்களால் இது எவ்விதம் கையாளப்படுகிறது?
23 நம்முடைய தேதி யூதர்களுடைய தேதியிலிருந்து வித்தியாசப்படக்கூடியதற்கு இன்னொரு காரணம் என்னவென்றால், அவர்கள் முன்தீர்மானிக்கப்பட்ட நாள்காட்டியைப் பயன்படுத்துகிறார்கள், இந்த முறை பொ.ச. நான்காவது நூற்றாண்டு வரை நிர்ணயிக்கப்படவில்லை. இதைப் பயன்படுத்தி, அவர்கள் நைசான் 1-க்கு அல்லது பண்டிகைகளுக்கு, பல பத்தாண்டுகளுக்கு அல்லது நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே தேதி குறித்துவிட முடியும். மேலும், பூர்வீக சந்திர நாள்காட்டி பருவகாலங்களுக்கு இசைவாக அமையும்பொருட்டு அவ்வப்போது ஒரு 13-வது மாதத்தைக் கூட கொண்டிருக்கவேண்டியதாய் இருந்தது. இன்றைய யூத நாள்காட்டி இந்த மாதத்தை ஒரு குறிப்பிட்ட சமயத்தில் சேர்க்கிறது; ஒரு 19-வருட சூழற்சியில், 3, 6, 8, 11, 14, 17, மற்றும் 19 என்ற வருடங்களோடு சேர்க்கப்படுகிறது.
24, 25. (எ) இயேசுவின் காலத்தில் மாதங்கள் எப்படி நிர்ணயிக்கப்பட்டன? கூடுதல் மாதங்களுக்கான தேவை எப்படி தீர்மானிக்கப்பட்டது? (பி) கர்த்தருடைய இராப்போஜனத்துக்கான தேதியை யெகோவாவின் சாட்சிகள் எவ்விதம் நிர்ணயிக்கிறார்கள்?
24 என்றபோதிலும், “இயேசுவின் காலத்தில் [யூதர்கள்] வரையறுக்கப்பட்ட ஒரு நாள்காட்டியைக் கொண்டில்லை, ஆனால் முற்றிலும் அனுபவரீதியிலாகக் கவனிக்கப்பட்டதன் அடிப்படையில்தானே, ஒவ்வொரு புதிய மாதமும் ஒவ்வொரு அமாவாசியுடன் ஆரம்பமானது, அதுபோலவே அப்படிப்பட்ட கவனிப்பின் அடிப்படையில்தானே” தேவைக்கேற்ப ஒரு மாதத்தைக் கூட்டினர் என்று எமில் ஷுரர் சொல்கிறார். “பஸ்கா இளவேனிற்காலத்தில் சூரியன் நிலநடுக்கோட்டைக் கடந்து செல்லுதலுக்கு [ஏறக்குறைய மார்ச் 21] முன் வருவதாக வருடத்தின் கடைசியில் கவனிக்கப்பட்டால், வருடத்தின் இடையில் நைசானுக்கு முன்னதாக ஒரு மாதம் சேர்க்கப்படும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.” (இயேசு கிறிஸ்துவின் சகாப்தத்தில் யூத மக்களின் சரித்திரம், புத்தகம் 1) இப்படியாக இந்தக் கூடுதல் மாதம் இயல்பாகவே இணைந்துவிடுகிறது, வெறுமென ஊகத்தின் அடிப்படையில் சேர்க்கப்படுவதில்லை.
25 யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழு பூர்வீக முறையின் அடிப்படையில் கர்த்தருடைய இராப்போஜனத்திற்கான தேதியை நிர்ணயிக்கிறது. இளவேனிற்காலத்தில் சூரியன் பூமத்தியரேகையைத் தாண்டுகிற நாளுக்கு வெகு அருகில் வரக்கூடிய அமாவாசி, எருசலேமில் சூரிய அஸ்தமனத்தில் எப்பொழுது காணப்படக்கூடும் என்பதை வைத்து நைசான் 1 நிர்ணயிக்கப்படுகிறது. அதிலிருந்து 14 நாட்களைக் கணக்கிடுவது ஒருவரை நைசான் 14-க்கு கொண்டுவருகிறது, இது பொதுவாக முழு நிலா காணப்படும் சமயத்திற்கு ஒத்திருக்கிறது. (ஆங்கிய காவற்கோபுரம் ஜூன் 15, 1977, பக்கங்கள் 383–4-ஐ பார்க்கவும்.) பைபிள் சார்ந்த இந்த முறையின் அடிப்படையில் இந்த வருடத்துக்கான ஞாபகார்த்த ஆசரிப்பு மார்ச் 30 அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பின் இருக்கும் என்று உலகமுழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
26. கர்த்தருடைய இராப்போஜனம் சம்பந்தமாகக் கூடுதலான என்ன அம்சங்கள் நம் கவனத்திற்குத் தகுந்ததாயிருக்கிறது?
26 இந்தத் தேதி இயேசு முறையான கடைசி பஸ்காவை ஆசரித்த நைசான் 14-க்கு ஒத்திருக்கிறது. என்றபோதிலும், ஞாபகார்த்த ஆசரிப்பு யூதரின் செடார் அல்லது பஸ்கா போஜனம் நினைவுபடுத்திடுவதைக் காட்டிலும் பெரிய இரட்சிப்பினிடமாகக் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. கர்த்தருடைய இராப்போஜனத்தின்போது என்ன நடக்கிறது, அதன் அர்த்தம் என்ன, நம்முடைய இரட்சிப்பு எவ்விதத்தில் உட்படுகிறது என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. (w90 2/15)
[அடிக்குறிப்புகள்]
a 1980, பிப்ரவரி 15 ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 8–24 பார்க்கவும்.
b “அவர்கள் ஆட்டுக்குட்டியை சாயங்காலத்தில் அடிக்கிறார்கள். . . . ஒவ்வொரு குடும்பத் தொகுதியும் அதன் மாம்சத்தை நள்ளிரவில் புசிக்கிறார்கள் . . . பின்பு எஞ்சியுள்ள மாம்சத்தையும் எலும்புகளையும் காலைக்குள்ளாக எரித்துவிடுகிறார்கள் . . . ரபீக்கள் சார்ந்த யூத மதம் சமாரிய மதத்தை மாற்றியமைப்பதற்கு முன்பு அது பைபிள் மதத்திற்கு நெருங்க ஒத்திருக்கக்கூடும் என்று சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.”—செடாரின் ஆரம்பங்கள்.
c மெக்ளின்டாக் அண்டு ஸ்ட்ராங் அவர்களை “யூத ஜெபாலயத்தின் பழமையானதும் மிகவும் குறிப்பிடத்தக்கதுமான ஒரு பிரிவு, அவர்களைத் தனித்துக்காட்டும் அம்சம் எழுதப்பட்ட பிரமாணத்திற்குக் கண்டிப்புடன் கீழ்ப்படிதலாகும்,” என்று விளக்குகின்றனர்.
நீங்கள் எவ்விதம் பதிலளிப்பீர்கள்?
◻ பஸ்கா ஏன் பொருத்தமாகவே இரட்சிப்புடன் இணைக்கப்படுகிறது?
◻ பஸ்கா ஆட்டுக்குட்டி சாதித்ததைவிட இயேசுவின் பலி எவ்விதம் அதிகத்தை சாதிக்கமுடியும்?
◻ இயேசுவின் மூலம் என்ன இரட்சிப்பு கிடைக்கப்பெறுகிறது?
◻ கர்த்தருடைய இராப்போஜனத்திற்குரிய சரியான நேரத்தை யெகோவாவின் சாட்சிகள் எவ்விதம் நிர்ணயிக்கிறார்கள்?