பைபிளின் கருத்து
திருமணத்திற்குமுன் சேர்ந்து வாழ்ந்து பார்ப்பது சரியா?
நீங்கள் ரெடிமேட் ஆடைகளை முதலில் போட்டுப் பார்க்காமல் வாங்கிவிடுவீர்களா? பெரும்பாலும் வாங்க மாட்டீர்கள். அப்படி ஒருவேளை வாங்கிவிட்டு, பின்னர் அது பொருந்தாமல் போனால் நீங்கள் செலவிட்ட நேரமும் நஷ்டம், காசும் நஷ்டம்.
அநேகர் இந்த வாதத்தைத் திருமணத்திற்குப் பொருத்துகிறார்கள். கணவன்-மனைவி என்ற பந்தத்தில் சட்டப்படி இணைவதற்கு முன்பு, ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து பார்ப்பது நல்லதென அவர்கள் நினைக்கிறார்கள். ‘ஒருவேளை இருவருக்கும் ஒத்துப்போகாவிட்டால், பிரச்சினையே இல்லாமல் விலகிவிடலாம்; விவாகரத்துக்குப் பணத்தை வாரியிறைக்கவும் வேண்டாம், அதைப் பெற அலைந்து திரியவும் வேண்டாம்’ என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
அப்படி நினைக்கிற சிலர் ஒருவேளை, தங்கள் நண்பர் திருமணம் செய்துகொண்டு அவதிப்படுவதைப் பார்த்திருக்கலாம். அல்லது, ஒரு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டாமல் கீரியும் பாம்பும்போல் வாழ்வதால் படும் பாடுகளைப் பார்த்திருக்கலாம். அதனால், திருமணம் செய்வதற்குமுன் சேர்ந்து வாழ்ந்து பார்ப்பதே புத்திசாலித்தனமான, சர்வ ஜாக்கிரதையான செயலென்ற முடிவுக்கு வந்திருக்கலாம்.
இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? இதற்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, திருமண ஏற்பாட்டைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை முதலாவதாகச் சிந்திக்க வேண்டும்.
‘ஒரே உடல்’
திருமணத்தை பைபிள் மிக உயர்வாகக் கருதுவதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால், யெகோவா தேவனே அதை ஆரம்பித்து வைத்தார், அதை அங்கீகரித்தார். (ஆதியாகமம் 2:21-24) திருமணத்தின் மூலம் ஓர் ஆணும் பெண்ணும், “ஒரே உடலாக” ஆக வேண்டும் என்பதே ஆரம்பம் முதல் அவருடைய நோக்கமாக இருக்கிறது. (ஆதியாகமம் 2:24, NW) பைபிளிலுள்ள அந்த வார்த்தைகளை இயேசு மேற்கோள் காட்டிய பிறகு, “கடவுள் இணைத்திருப்பதை எந்த மனிதனும் பிரிக்காதிருக்கட்டும்” என்று சொன்னார்.—மத்தேயு 19:6.
திருமணம் செய்துகொள்கிற சிலர் பின்னர் விவாகரத்து செய்கிறார்கள் என்பது உண்மைதான்.a ஆனால், அது திருமண ஏற்பாட்டில் ஏதோ குறையிருப்பதால் நிகழ்வதில்லை; மாறாக, தம்பதியரில் ஒருவர் அல்லது இருவருமே திருமண உறுதிமொழிக்கு ஏற்ப நடக்காததால்தான் நிகழ்கிறது.
ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு கணவன் மனைவிக்குச் சொந்தமாக ஒரு கார் இருக்கிறது. அவர்கள் அந்தக் காரின் தயாரிப்பாளர்கள் கொடுத்த அறிவுரைக்கு இசைய அதைப் பேணிப் பாதுகாப்பதில்லை. அதனால், கார் ஓடாமல் நின்றுவிடுகிறது. இப்போது யாரைக் குறைசொல்வது? அதன் தயாரிப்பாளர்களையா அல்லது அதை ஒழுங்காகப் பேணிப் பாதுகாக்காத அந்தத் தம்பதியரையா?
அதே நியமம் திருமணத்திற்கும் பொருந்துகிறது. கணவனும் மனைவியும் தங்கள் பந்தத்தைப் பேணிப் பாதுகாத்துக்கொண்டு, பிரச்சினைகள் வருகையில் பைபிள் நியமங்களைப் பொருத்தி அவற்றைச் சரிசெய்யத் தீர்மானித்தால், அவர்கள் மத்தியில் விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமிருக்காது. திருமணத்தின்போது தம்பதியர் ஒருவருக்கொருவர் உறுதிமொழி அளித்திருப்பதால் அது அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இவ்வகையில் திருமணம், அன்பான உறவுக்கு அஸ்திவாரமாய் அமைகிறது.
‘பாலியல் முறைகேட்டிற்கு விலகியிருங்கள்’
எனினும், ‘முதலில் ஏன் சேர்ந்து வாழ்ந்து பார்க்கக் கூடாது? என்று சிலர் யோசிக்கலாம். ‘திருமண உறுதிமொழியை எடுப்பதற்கு முன்பு சேர்ந்து வாழ்ந்து பார்ப்பது, திருமணத்தின் புனிதத் தன்மையை மதிப்பதாக இருக்காதா?’ என்றும் அவர்கள் யோசிக்கலாம்.
பைபிளைப் பொறுத்தவரை இதற்கான பதில் தெளிவாக உள்ளது. ‘பாலியல் முறைகேட்டிற்கு விலகியிருங்கள்’ என்று பவுல் எழுதினார். (1 தெசலோனிக்கேயர் 4:3) ‘பாலியல் முறைகேடு’ என்பது திருமணம் செய்யாத ஒருவருடன் ஈடுபடும் எல்லா விதமான பாலுறவு பழக்கங்களையும் குறிக்கிறது. இது, மணமாகாதவர்கள் பாலுறவில் ஈடுபடுவதையும் குறிக்கிறது; ஒருவேளை பின்னர் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தோடு இருப்பவர்கள் பாலுறவில் ஈடுபடுவதையும் குறிக்கிறது. அப்படியென்றால் பைபிள்படி, திருமணமாகாத இருவர் சேர்ந்து வாழ்வது தவறாகும், பின்னர் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தோடு அவர்கள் இருந்தாலும்கூட சேர்ந்து வாழ்வது தவறாகும்.
பைபிளின் கருத்து இந்தக் காலத்துக்கு ஒத்துவராத ஒன்றா? அப்படித்தான் சிலர் நினைக்கிறார்கள். ஏனென்றால், பின்னர் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்துடன் அல்லது அப்படிச் செய்துகொள்ளும் எண்ணமே இல்லாமல் இருவர் சேர்ந்து வாழ்வது சகஜமான ஒன்றாக அநேக நாடுகளில் இன்று கருதப்படுகிறது. ஆனால், விளைவுகளைச் சற்று யோசித்துப் பாருங்கள். அப்படிச் சேர்ந்து வாழ்கிறவர்கள், சந்தோஷமாகக் குடும்பம் நடத்துவதற்கான வழிகளை அறிந்திருக்கிறார்களா? திருமணம் செய்துகொண்டவர்களைவிட அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா? திருமணத்திற்குப் பின்பு அவர்கள் அதிக உண்மையுள்ளவர்களாய் நடந்துகொள்வார்களா? இல்லை என்றே ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. சொல்லப்போனால், சேர்ந்து வாழ்ந்த பிறகு திருமணம் செய்துகொண்ட தம்பதியர் மணவாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்ப்படுவதும், கடைசியில் விவாகரத்து செய்துகொள்வதும் மிக அதிகமென தெரிய வந்திருக்கிறது.
அத்தகைய ஆராய்ச்சியின் முடிவுகள் தவறானவை என்று சில நிபுணர்கள் சொல்லலாம். உதாரணத்திற்கு, ஓர் உளவியலாளர் எழுதியபடி, “முதலில் சேர்ந்து வாழ்ந்து பார்க்காமல் திருமணம் செய்துகொள்கிறவர்களின் சூழ்நிலைகளும், முதலில் சேர்ந்து வாழ்ந்து பார்க்கிறவர்களின் சூழ்நிலைகளும் வேறுபடுகின்றன.” உண்மையில், சேர்ந்து வாழ்வது ஒரு பிரச்சினை அல்ல, ஆனால் “திருமண உறவை உயர்வாய் மதிப்பதே” முக்கியம் என அவர் சொல்கிறார்.
அது உண்மையென்றே வைத்துக்கொண்டாலும், திருமணத்தைக் குறித்ததில் கடவுளுடைய கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தைத்தான் அது வலியுறுத்திக் காட்டுகிறது. “திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 13:4) ஓர் ஆணும் பெண்ணும் ஒரே உடலாய் இருப்பதாக வாக்குக் கொடுத்து, திருமண ஏற்பாட்டுக்கு மரியாதை காட்டும்போது, எளிதில் முறிக்க முடியாத பந்தத்தில் அவர்கள் பிணைக்கப்படுகிறார்கள்.—பிரசங்கி 4:12.
ஆரம்பத்தில் சொல்லப்பட்ட உதாரணத்தை மறுபடியும் எடுத்துக்கொள்வோம். ரெடிமேட் ஆடைகளை வாங்குவதற்கு முன்பாகப் போட்டுப் பார்ப்பது சரிதான். ஆனால், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து பார்க்கும் விஷயத்தோடு அதைத் தொடர்புபடுத்த முடியாது. மாறாக, திருமணம் செய்துகொள்ள நீங்கள் நினைக்கிற நபரைப் பற்றித் தெரிந்துகொள்ள போதுமான கால அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விஷயத்தோடுதான் அதைத் தொடர்புபடுத்த முடியும். பெரும்பாலும் அசட்டை செய்யப்படுகிற இந்தச் செயல், இல்லறம் நல்லறமாவதற்கான மிக முக்கிய வழிகளில் ஒன்றாகும். (g09 10)
[அடிக்குறிப்பு]
a ஒருவர் தன் மணத்துணைக்குத் துரோகம் செய்யும்போது அந்த மணத்துணை அவரை விவாகரத்து செய்யலாம் என்றும் மறுமணம் செய்துகொள்ளலாம் என்றும் பைபிள் சொல்கிறது.—மத்தேயு 19:9.
நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?
◼ திருமணமான தம்பதியருக்கு இடையில் மட்டுமே தம்பத்திய உறவு இருக்க வேண்டுமென பைபிள் ஏன் சொல்கிறது?—சங்கீதம் 84:11; 1 கொரிந்தியர் 6:18.
◼ திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவரிடம் என்ன குணங்களை நீங்கள் எதிர்பார்க்க வேண்டும்?—ரூத் 1:16, 17; நீதிமொழிகள் 31:10-31.
[பக்கம் 29-ன் பெட்டி]
“தன் உடலுக்கு எதிராகவே பாவம் செய்கிறான்”
“பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவன் தன் உடலுக்கு எதிராகவே பாவம் செய்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 6:18) அந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை, சமீப பத்தாண்டுகளில் எய்ட்ஸாலும் மற்ற பாலியல் நோய்களாலும் லட்சக்கணக்கானோர் இறந்திருப்பதைப் பற்றிய புள்ளிவிவரம் காட்டுகிறது. அதுமட்டுமல்ல, பாலுறவில் ஈடுபடும் இளைஞர்கள் மத்தியில் மனச்சோர்வும் தற்கொலை முயற்சியும் சர்வசாதாரணமாகி வருவதாகவும் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. முறையற்ற பாலுறவு பழக்கங்கள், எதிர்பாராத கருத்தரிப்புக்கும், சிலருடைய விஷயத்தில் கருக்கலைப்புக்கும் வழிநடத்தலாம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பைபிள் நெறிமுறை இந்தக் காலத்துக்கு ஒத்துவராத ஒன்று அல்ல என நாம் ஆணித்தரமாக சொல்லலாம்.