மணமாகாதிருத்தல்—கவனம் சிதறாமல் செயல்படுவதற்கு வழி
‘[இது] கவனம் சிதறாமல் ஆண்டவரை தொடர்ந்து சேவிப்பதைக் குறிக்கிறது.’
—1 கொரிந்தியர் 7:35, NW.
1. கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களைப் பற்றி, கலங்கச் செய்யும் என்ன செய்திகள் பவுலுக்குக் கிடைத்தன?
கிரீஸில் உள்ள கொரிந்துவிலிருந்த தன் கிறிஸ்தவ சகோதரரைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் கவலையுள்ளவராக இருந்தார். ஒழுக்கக்கேட்டுக்குப் பெயர்பெற்றதாக இருந்த செழுமையான அந்த நகரத்தில், ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, அவர் ஒரு சபையை ஸ்தாபித்திருந்தார். ஏறக்குறைய பொ.ச. 55 ஆன இப்போது, ஆசியா மைனரில் உள்ள எபேசுவிலிருக்கையில், கொரிந்து சபையில் கட்சி பிரிவினைகள் இருப்பதையும், மோசமான ஒழுக்கக்கேட்டு நடத்தை ஒன்றைக் கண்டியாது விட்டிருப்பதையும் பற்றி கலங்கச் செய்யும் செய்திகளை அவர் பெற்றார். மேலும், பாலுறவுகள், மணமாகாத நிலை, திருமணம், மணத்துணைவர் பிரிந்திருத்தல், மறுமணம் ஆகியவற்றின்பேரில் வழிநடத்துதலுக்காகக் கேட்டு, கொரிந்திய கிறிஸ்தவர்களிடமிருந்து ஒரு கடிதத்தையும் பவுல் பெற்றிருந்தார்.
2. கொரிந்துவில் பரவலாக இருந்த ஒழுக்கக்கேடு, அந்த நகரத்திலிருந்த கிறிஸ்தவர்களை எவ்வாறு பாதித்துக்கொண்டிருந்ததாகத் தோன்றினது?
2 கொரிந்துவில் பரவலாக இருந்த படுமோசமான ஒழுக்கக்கேடு, அவ்விடத்து சபையை இரு வகைகளில் பாதித்ததாகத் தோன்றினது. கிறிஸ்தவர்கள் சிலர் ஒழுக்கக் கண்டிப்பில்லாத சூழ்நிலைக்கு இடங்கொடுத்து, ஒழுக்கக்கேட்டைக் கண்டியாது விட்டனர். (1 கொரிந்தியர் 5:1; 6:15-17) மற்றவர்கள், அந்த நகரமெங்கும் நிலவியிருந்த பாலின இன்பங்களுக்கு எதிர்ச்செயலாற்றுவோராக, மணமான தம்பதிகளுங்கூட, பாலுறவு சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலிருந்துமே விலகியிருக்கும்படி அறிவுரை வழங்கும் மிதமீறிய நிலைக்குச் சென்றனரென்று தெரிகிறது.—1 கொரிந்தியர் 7:5.
3. கொரிந்தியருக்கு எழுதின தன் முதல் நிருபத்தில் என்ன காரியங்களை பவுல் முதலாவதாகக் கையாண்டார்?
3 பவுல் கொரிந்தியருக்கு எழுதின நீண்ட நிருபத்தில், ஒற்றுமை இல்லாமையின் பிரச்சினையை முதல் குறிப்பிட்டு பேசினார். (1 கொரிந்தியர், அதிகாரங்கள் 1-4) மனிதரைப் பின்பற்றுவதைத் தவிர்க்கும்படி அவர்களுக்கு அறிவுரை கூறினார், அது தீங்கான உட்பிரிவினைகளுக்கே வழிநடத்தும். கடவுளின் “உடன்வேலையாட்களாக” அவர்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டும். பின்பு, ஒழுக்கப் பிரகாரமாகச் சபையைச் சுத்தமாய் வைப்பதன்பேரில் திட்டமான போதனைகளை அவர்களுக்கு அளித்தார். (அதிகாரங்கள் 5, 6) அடுத்தபடியாக அவர்களுடைய கடிதத்தைப் பரிசீலனை செய்தார்.
மணமாகாதிருத்தல் சிபாரிசு செய்யப்பட்டது
4. “ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது,” என்று பவுல் சொன்னபோது எதைக் குறிப்பிட்டார்?
4 இவ்வாறு அவர் தொடங்கினார்: “நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது.” (1 கொரிந்தியர் 7:1) “ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது” என்ற இந்தக் கூற்று, பாலுறவு அவாவைத் திருப்தி செய்துகொள்வதற்கு ஒரு பெண்ணோடு உடல்தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதை இங்கு குறிக்கிறது. வேசித்தனத்தை ஏற்கெனவே பவுல் கண்டனம் செய்திருந்ததால், திருமண ஏற்பாட்டுக்குள் பாலுறவுகளை இப்போது குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். ஆகையால் மணமாகாத நிலையை அவர் இப்போது சிபாரிசு செய்துகொண்டிருந்தார். (1 கொரிந்தியர் 6:9, 16, 18; ஆதியாகமம் 20:6-ஐ ஒப்பிடுக; நீதிமொழிகள் 6:29.) இதற்குச் சற்று மேலும்கூட அவர் இவ்வாறு எழுதினார்: “விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.” (1 கொரிந்தியர் 7:8) பவுல் மணம் செய்யாதவராக, ஒருவேளை மனைவியை இழந்தவராக இருந்திருக்கலாம்.—1 கொரிந்தியர் 9:5.
5, 6. (அ) சந்நியாசி மடத்தில் துறவி வாழ்க்கையை பவுல் சிபாரிசு செய்துகொண்டில்லை என்பது ஏன் தெளிவாயிருக்கிறது? (ஆ) ஏன் மணமாகாத நிலையை பவுல் சிபாரிசு செய்தார்?
5 கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்கள், கிரேக்க தத்துவ ஞானத்தைப் பற்றி ஏதாவது அறிந்திருக்கலாம்; அதில் சில தொகுதியினர் மிதமீறிய துறவு வாழ்வை, அல்லது இன்பமறுப்பை வரவேற்றனர். கிறிஸ்தவர்கள் பாலுறவு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் தவிர்ப்பது ‘நல்லதா’ என்று கொரிந்தியர் பவுலைக் கேட்டதற்கு அது காரணமாக இருந்திருக்கலாமா? பவுலின் பதில் கிரேக்க தத்துவ ஞானத்தைப் பிரதிபலிக்கவில்லை. (கொலோசெயர் 2:8) கத்தோலிக்க இறையியலரைப் போலிராமல், சந்நியாசி மடம் அல்லது கன்னி மடம் ஒன்றில் மணஞ்செய்யா உறுதிகொண்ட துறவி வாழ்க்கையை, அவர் தன் எழுத்துக்கள் எதிலும் சிபாரிசு செய்யவில்லை; மணமாகாத ஆட்கள் குறிப்பாக பரிசுத்தமானவர்கள், தங்கள் வாழ்க்கை முறையாலும் ஜெபங்களாலும் தங்களுடைய சொந்த இரட்சிப்புக்கு உதவிசெய்யக்கூடும் என்பதுபோல் அவ்வாறு செய்யவில்லை.
6 “இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம்,” மணமாகாத நிலையைப் பவுல் சிபாரிசு செய்தார். (1 கொரிந்தியர் 7:26) கிறிஸ்தவர்கள் அனுபவித்துக்கொண்டிருந்த கடினமான காலங்களை அவர் பெரும்பாலும் குறிப்பிட்டு பேசியிருக்கலாம், திருமணம் செய்வதால் அது ஒருவேளை மேலும் சிக்கலாகலாம். (1 கொரிந்தியர் 7:28) மணமாகாத கிறிஸ்தவர்களுக்கு அவர் கொடுத்த அறிவுரை: “அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.” மனைவியை இழந்தவர்களுக்கு, அவர் கூறினது: “நீ மனைவி இல்லாதவனாயிருந்தால், மனைவியைத் தேடாதே.” கிறிஸ்தவ விதவையைக் குறித்து, அவர் இவ்வாறு எழுதினார்: “என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.”—1 கொரிந்தியர் 7:8, 27, 40.
மணமாகாதிருக்கும்படி வற்புறுத்தப்படுகிறதில்லை
7, 8. மணம்செய்யாதிருக்கும்படி கிறிஸ்தவர் எவரையும் பவுல் வற்புறுத்திக்கொண்டில்லை என்று எது காட்டுகிறது?
7 பவுல் இந்த அறிவுரையை கொடுத்தபோது, சந்தேகமில்லாமல் யெகோவாவின் பரிசுத்த ஆவி அவரை வழிநடத்திக்கொண்டிருந்தது. மணமாகாத நிலையையும் மணம் செய்தலையும் பற்றிய அவருடைய முழு பேச்சும், சமநிலையையும் கட்டுப்பாட்டையும் காட்டுகிறது. உண்மையோடிருத்தல் அல்லது உண்மையற்றுப்போதலைப் பற்றிய ஒரு காரியமாக அவர் அதைச் செய்யவில்லை. மாறாக, சுயாதீனத் தெரிவுக்குரிய ஒரு விஷயமாக அது இருக்கிறது, மணமாகாத நிலையில் கற்புடன் நிலைத்திருக்கக்கூடியவர்களுக்கு அந்த நிலை சமநிலையுடன் சிபாரிசு செய்யப்படுகிறது.
8 “ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது,” என்று சொன்னதை அடுத்து உடனடியாக பவுல் இவ்வாறு மேலும் சொன்னார்: “ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.” (1 கொரிந்தியர் 7:1, 2) ‘தன்னைப்போல் இருந்துவிடும்படி’ விவாகமாகாத ஆட்களுக்கும் விதவைகளுக்கும் அறிவுரை கொடுத்த பின்பு, அவர் உடனடியாக இவ்வாறு மேலும் சொன்னார்: “ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம்.” (1 கொரிந்தியர் 7:8, 9) மறுபடியுமாக, மனைவியை இழந்தவர்களுக்கு அவர் இவ்வாறு அறிவுரை கொடுத்தார்: “மனைவியைத் தேடாதே. நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல.” (1 கொரிந்தியர் 7:27, 28) இந்தச் சமநிலைப்பட்ட அறிவுரை தெரிவு சுயாதீனத்தைப் பிரதிபலிக்கிறது.
9. இயேசுவும் பவுலும் சொன்னபடி, மணம் செய்திருப்பதும் மணமாகாதிருப்பதும் இரண்டும் எவ்வாறு கடவுளிடமிருந்து வந்த வரங்கள்?
9 திருமணம், மணமாகாத நிலை ஆகிய இரண்டுமே கடவுள் அளித்த வரங்கள் என்று பவுல் காட்டினார். “எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்குத் தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது.” (1 கொரிந்தியர் 7:7) சந்தேகமில்லாமல் அவர், இயேசு சொன்னதை மனதில் வைத்திருந்தார். திருமணம் கடவுளிடமிருந்து வந்ததென்பதை இயேசு உறுதிசெய்த பின்பு, ராஜ்ய அக்கறைகளைச் சேவிப்பதற்காக தாங்களாக மனமுவந்து மணமாகாதிருப்பது தனிப்பட்ட ஒரு வரம் என்று காட்டினார்: “வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன்.”—மத்தேயு 19:4-6, 11, 12.
மணமாகாதிருக்கும் வரத்தை ஏற்பது
10. மணமாகாதிருக்கும் வரத்தை ஒருவர் எவ்வாறு ‘ஏற்றுக்கொள்ள’ முடியும்?
10 மணமாகாதிருப்பதை ஒரு “வரம்” என்பதாக, இயேசுவும் பவுலும் பேசியிருக்கையில், அது சிலர் மாத்திரமே கொண்டிருக்கும் ஓர் அற்புத வரம் என்று அவர்கள் ஒருவரும் சொல்லவில்லை. அந்த வரத்தை ‘எல்லாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்று இயேசு சொல்லி, ஏற்கக்கூடியவர்கள் ‘ஏற்றுக்கொள்ளக்கடவர்கள்’ என்று அறிவுரை கூறினார்; இயேசுவும் பவுலும் அவ்வாறு செய்தார்கள். “வேகிறதைப்பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம்,” என்று பவுல் எழுதினது உண்மையே; ஆனால் அவர் ‘விரத்தராயிருக்கக்கூடாதவர்களைக் [“தன்னடக்கமில்லாதவர்களை,” NW]’ குறித்து பேசிக்கொண்டிருந்தார். (1 கொரிந்தியர் 7:9) கிறிஸ்தவர்கள் மாம்ச இச்சையால் தூண்டப்படுவதைத் தவிர்க்க முடியுமென்று இதற்கு முந்தின எழுத்துக்களில் பவுல் காட்டினார். (கலாத்தியர் 5:16, 22-24) ஆவியின்படி நடப்பதென்பது, யெகோவாவின் ஆவி நம்முடைய ஒவ்வொரு படியையும் வழிநடத்துவதற்கு அனுமதிப்பதைக் குறிக்கிறது. இளைஞராயிருக்கும் கிறிஸ்தவர்கள் இதைச் செய்ய முடியுமா? ஆம், யெகோவாவின் வார்த்தையை அவர்கள் நெருங்க பின்பற்றினால் முடியும். சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “வாலிபன் [அல்லது வாலிபப் பெண்] தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்[ள்]? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.”—சங்கீதம் 119:9.
11. ‘ஆவியின்படி நடப்பது’ என்பது எதைக் குறிக்கிறது?
11 டெலிவிஷன் நிகழ்ச்சிநிரல்கள், சினிமா படக் காட்சிகள், பத்திரிகை கட்டுரைகள், புத்தகங்கள், மற்றும் உணர்ச்சிப் பாடல்கள் பலவற்றின் மூலமாகப் பரவச் செய்யப்படும் கட்டுப்பாடற்ற எண்ணங்களுக்கு எதிராகக் காத்துக்கொள்வதை இது உட்படுத்துகிறது. அத்தகைய எண்ணங்கள் மாம்ச உணர்ச்சிவேக போக்குடையவை. மணம் செய்யாதிருக்க விரும்புகிற ஒரு கிறிஸ்தவ இளம் ஆணோ இளம் பெண்ணோ, ‘மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்க’ வேண்டும். ஏனெனில், ‘மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.’ (ரோமர் 8:4, 5) ஆவிக்குரிய காரியங்கள் நீதியுள்ளவை, கற்புள்ளவை, அன்புள்ளவை, ஒழுக்கமுள்ளவை. கிறிஸ்தவர்கள், இளைஞரும் முதியோரும், ‘இவைகளையே சிந்தித்துக்கொண்டிருப்பது’ நல்லது.—பிலிப்பியர் 4:8, 9.
12. மணமாகாதிருக்கும் வரத்தை ஏற்பதில் எது பெரும்பாலும் உட்பட்டுள்ளது?
12 மணமாகாதிருக்கும் வரத்தை ஏற்பதானது, ஒருவர் அந்த இலக்கின்பேரில் தன் இருதயத்தை ஊன்றவைத்து, அதை நோக்கித் தொடருவதில் உதவிக்காக யெகோவாவிடம் ஜெபித்துவரும் ஒரு காரியமாகப் பெரும்பாலும் உள்ளது. (பிலிப்பியர் 4:6, 7) பவுல் இவ்வாறு எழுதினார்: ‘ஒருவன் அதற்கு அவசியத்தைக் காணாமல், தன் இருதயத்தில் தீர்மானமாயிருந்து, தன் சொந்த கன்னிமையைக் காத்துக்கொள்ள, தன் சொந்த சித்தத்தின்மீது அதிகாரமுடையவனாயும் தன் சொந்த இருதயத்தில் இந்தத் தீர்மானம் செய்திருப்பவனாயும் இருந்தால், அவன் நலமாயிருப்பான். இப்படியிருக்க, தன் கன்னிமையை விவாகத்தில் அளிக்கிறவனும் நல்லதைச் செய்கிறான், ஆனால் அதை விவாகத்தில் அளிக்காதிருக்கிறவன் மேலுமதிக நலமானதைச் செய்கிறான்.’—1 கொரிந்தியர் 7:37, 38, NW.
ஒரு நோக்கத்துடன் மணமாகாதிருத்தல்
13, 14. (அ) மணமாகாத மற்றும் மணமாகிய கிறிஸ்தவர்களுக்கிடையே என்ன ஒப்பிடுதலை அப்போஸ்தலன் பவுல் செய்தார்? (ஆ) மணமாகியவர்களைப் பார்க்கிலும் மணமாகாத கிறிஸ்தவன் எவ்வாறு மாத்திரமே ‘மேலுமதிக நலமானதைச்’ செய்ய முடியும்?
13 மணமாகாதிருப்பதுதானே மதிப்புக்குரியதல்ல. அப்படியானால், என்ன கருத்தில் அது ‘மேலுமதிக நலமானதாக’ இருக்கலாம்? அது கொண்டுவரும் சுயாதீனத்தை ஒருவன் எவ்வாறு பயன்படுத்துகிறான் என்பதன்பேரில் அது உண்மையில் சார்ந்திருக்கிறது. பவுல் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். அதுபோல, மனைவியானவளுக்கும் கன்னிகைக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; விவாகம்பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள். இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.”—1 கொரிந்தியர் 7:32-35.
14 தன்னல இலக்குகளை நாடித் தொடரும்படி தன் மணமாகாத நிலையைப் பயன்படுத்துகிற ஒரு கிறிஸ்தவன், மணம்செய்த கிறிஸ்தவர்களைப் பார்க்கிலும் ‘மேலுமதிக நலமானதைச்’ செய்கிறதில்லை. அவன் மணம் செய்யாதிருப்பது “பரலோகராஜ்யத்தினிமித்தம்” அல்ல, தன் சொந்த காரணங்களினிமித்தமேயாகும். (மத்தேயு 19:12) மணமாகாத ஆண் அல்லது பெண் “கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படு”கிறவனாக[ளாக], ‘[“கவனச்சிதறலில்லாமல்,” NW] கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டும்.’ யெகோவாவையும் கிறிஸ்து இயேசுவையும் சேவிப்பதில் சிதறாத முழு கவனத்தையும் ஈடுபடுத்துவதை இது குறிக்கிறது. அவ்வாறு செய்வதன்மூலமே, மணமாகாத கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும், மணமாகிய கிறிஸ்தவர்களைப் பார்க்கிலும் ‘மேலுமதிக நலமானதைச்’ செய்கிறார்கள்.
கவனஞ்சிதறாத நடவடிக்கை
15. 1 கொரிந்தியர் 7-ம் அதிகாரத்தில் பவுலின் விவாதத்தினுடைய முக்கியக் குறிப்பு என்ன?
15 இந்த அதிகாரத்தில் பவுலின் முழு விவாதமும் இதுவே: திருமணம் நேர்மையானதாகவும், சில சந்தர்ப்பங்களில், சிலருக்கு அது உசிதமானதாகவும் இருக்கையில், கவனச்சிதறதல் பெரும்பாலும் இல்லாமல் யெகோவாவைச் சேவிக்க விரும்புகிற கிறிஸ்தவ ஆணுக்கு அல்லது பெண்ணுக்கு, மணமாகாத நிலை மறுக்கமுடையாதவண்ணம் அனுகூலமானது. மணமாகிய ஆள் ‘இருமனப்பட்டிருக்கையில்’ (தி.மொ.) மணமாகாத கிறிஸ்தவர், ‘கர்த்தருக்குரியவைகளின்பேரில்’ கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு சுயாதீனமுள்ளவராக இருக்கிறார்.
16, 17. மணமாகாத ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு ‘கர்த்தருக்குரியவைகளில்’ கவனத்தை மேலும் நன்றாய் ஒருமுகப்படுத்த முடியும்?
16 மணமாகாத கிறிஸ்தவர் ஒருவர், மணமாகிய ஆட்களைப் பார்க்கிலும் அதிகமாய், தடங்கலில்லாத கவனத்தைச் செலுத்தக்கூடிய, கர்த்தருக்குரிய காரியங்கள் யாவை? “கடவுளுடையதை”—ஒரு கிறிஸ்தவன் இராயனுக்குக் கொடுக்க முடியாதக் காரியங்களைப்—பற்றி வேறொரு சூழமைவில் இயேசு பேசினார். (மத்தேயு 22:21, தி.மொ.) இந்தக் காரியங்கள் முக்கியமாய், ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கை, வணக்கம், மற்றும் ஊழியம் சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன.—மத்தேயு 4:10; ரோமர் 14:8; 2 கொரிந்தியர் 2:17; 3:5, 6; 4:1.
17 மணமாகாத ஆட்கள் யெகோவாவின் சேவையில் நேரத்தை முழுமையாக ஈடுபடுத்துவதற்குப் பொதுவாக தடங்கலில்லாமல் இருக்கின்றனர்; இது அவர்களுடைய ஆவிக்குரிய நலத்துக்கும் அவர்களுடைய ஊழிய பெருக்கத்துக்கும் நன்மை பயக்கும். தனிப்பட்ட படிப்புக்கும் தியானிப்புக்கும் அவர்கள் அதிக நேரம் செலவிட முடியும். மணமாகியவர்கள் செய்யக்கூடியதைப் பார்க்கிலும் மணமாகாத கிறிஸ்தவர்கள், தங்கள் பைபிள் வாசிப்பைத் தங்கள் திட்டத்துக்குள் பெரும்பாலும் அதிக எளிதாய்ப் பொருத்தலாம். கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்துக்கும் மேலும் நன்றாக அவர்கள் ஆயத்தம் செய்யலாம். இவை யாவும் அவர்களுடைய “சுயபிரயோஜனத்துக்காகவே” உள்ளன.—1 கொரிந்தியர் 7:35.
18. மணமாகாத சகோதரர் பலர் எவ்வாறு ‘கவனச்சிதறலில்லாமல்’ யெகோவாவைச் சேவிக்கத் தாங்கள் விரும்புவதைக் காட்டலாம்?
18 ஏற்கெனவே உதவி ஊழியர்களாக சேவிக்கும் மணமாகாத சகோதரர் பலர்: “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று யெகோவாவிடம் சொல்லத் தடங்கலில்லாமல் இருக்கின்றனர். (ஏசாயா 6:8) ஊழியப் பயிற்சி பள்ளிக்கு செல்ல அவர்கள் மனு செய்யலாம்; தேவை அதிகமாயிருக்கும் இடங்களில் சேவிப்பதற்குத் தடங்கலில்லாமல் இருக்கிற, மணமாகாத உதவி ஊழியர்களுக்காகவும் மூப்பர்களுக்காகவுமே அது தனிப்பட வைக்கப்பட்டுள்ளது. தங்கள் சபையை விட்டுச் செல்ல முடியாத நிலையில் இருக்கிற சகோதரரும், உதவி ஊழியர்களாக அல்லது மூப்பர்களாக தங்கள் சகோதரருக்குச் சேவை செய்யும்படி தங்களைப் பயன்படுத்த இடமளிக்கலாம்.—பிலிப்பியர் 2:20-23.
19. மணமாகாத சகோதரிகள் பலர் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள், எந்த ஒரு வழியில் அவர்கள் சபைக்கு ஆசீர்வாதமாயிருக்க முடியும்?
19 கலந்துபேச அல்லது நம்பிக்கையாகத் தெரிவிக்க குடும்பத் தலைவரில்லாத மணமாகாத சகோதரிகள், ‘யெகோவாவின்மேல் தங்கள் பாரத்தைப் போட்டுவிடும்’ பாங்கை உடையோராக பெரும்பாலும் இருக்கலாம். (சங்கீதம் 55:22, NW; 1 கொரிந்தியர் 11:3) யெகோவாவின்மீதுள்ள அன்பினிமித்தமாக மணம் செய்யாதிருக்கும் சகோதரிகளுக்கு இது தனிப்பட முக்கியமாயிருக்கிறது. காலப்போக்கில் அவர்கள் மணம் செய்தால், ‘கர்த்தருக்குட்பட்டவராயிருக்கிற’ ஒருவரையே, அதாவது, யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிற ஒருவரை மாத்திரமே அவர்கள் மணம் செய்வார்கள். (1 கொரிந்தியர் 7:39) தங்கள் சபைகளில் மணமாகாத சகோதரிகளைக் கொண்டிருப்பதில் மூப்பர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்; நோயுற்றோரையும் வயதானவர்களையும் இவர்கள் அடிக்கடி சென்று சந்தித்து உதவிசெய்கிறார்கள். சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் இது மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது.—அப்போஸ்தலர் 20:35.
20. ‘கவனச்சிதறலில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருப்போராக,’ கிறிஸ்தவர்கள் பலர் எவ்வாறு காட்டுகின்றனர்?
20 ‘கவனச்சிதறலில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி,’ கிறிஸ்தவ இளைஞர் பலர் தங்கள் விவகாரங்களை ஒழுங்குபடுத்தியிருக்கின்றனர். (1 கொரிந்தியர் 7:35) அவர்கள் முழுநேர பயனியர் ஊழியர்களாக, மிஷனரிகளாக, அல்லது உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகங்கள் ஒன்றில் சேவிப்போராக இருக்கின்றனர். எத்தகைய மகிழ்ச்சியுள்ள தொகுதியாக அவர்கள் இருக்கின்றனர்! அவர்களைப் பார்ப்பது எவ்வளவு புத்துயிரளிப்பதாக இருக்கிறது! யெகோவாவின் பார்வையிலும் இயேசுவின் பார்வையிலும் அவர்கள் “பனித்துளிகளைப்போல்” இருக்கிறார்களே.—சங்கீதம் 110:3, NW.
நிரந்தர மணமாகாத நிலைக்குரிய பொருத்தனை அல்ல
21. (அ) மணம் செய்யாதிருக்க உறுதிமொழி எடுப்பதை பவுல் ஊக்குவிக்கவில்லை என்பது ஏன் தெளிவாயிருக்கிறது? (ஆ) ‘இளமை மலர்ச்சி கடந்திருப்பதைப்’ பற்றி அவர் பேசினபோது அவர் குறிப்பாக உணர்த்தினது என்ன?
21 மணமாகாதிருக்க கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் இடமுண்டாக்குவது “நலமாயிருக்கும்” என்பதே பவுலின் அறிவுரையில் ஒரு முக்கிய குறிப்பாக உள்ளது. (1 கொரிந்தியர் 7:1, 8, 26, 37) எனினும், மணம்செய்யாதிருக்கும்படி உறுதிமொழி எடுப்பதற்கு அவர் எவ்வகையிலும் அவர்களை அழைப்பதில்லை. மாறாக, அவர் எழுதினதாவது: “தன் கன்னிமையிடமாகத் தகாதமுறையில் தான் நடப்பதாக எவராவது எண்ணினால், அது இளமை மலர்ச்சி கடந்ததாக இருந்தால், மற்றும் இவ்வாறே நடைபெற வேண்டுமானால், தான் விரும்புகிறதை அவன் செய்யட்டும்; அவன் பாவம் செய்கிறதில்லை. அவர்கள் மணம் செய்துகொள்ளட்டும்.” (1 கொரிந்தியர் 7:36, NW) ‘இளமை மலர்ச்சி கடந்தது’ என்று மொழிபெயர்க்கப்பட்ட அந்த ஒரு கிரேக்கச் சொல் (ஹைபெராக்மாஸ் [hy·peʹra·kmos]), “மிக உச்ச நிலைக்கு அப்பால்” என்ற நேர்பொருளை உடையதாக இருக்கிறது, பாலின வேட்கையின் உச்ச எழுச்சியைக் கடந்துசெல்லுதலைக் குறிக்கிறது. ஆகையால் மணமாகாத நிலையில் பல ஆண்டுகளைக் கழித்திருந்து, முடிவில் தாங்கள் மணம்செய்ய வேண்டுமென்று உணருவோர், உடன் விசுவாசி ஒருவரை மணம் செய்துகொள்ள முற்றிலும் சுயாதீனராக இருக்கின்றனர்.—2 கொரிந்தியர் 6:14.
22. எல்லா நோக்குநிலையிலிருந்தும் காண, ஒரு கிறிஸ்தவன் மிக இளைஞனாயிருக்கையில் மணம் செய்யாதிருப்பது ஏன் அனுகூலமாயுள்ளது?
22 கவனச்சிதறலில்லாமல் யெகோவாவைச் சேவிப்பதில் ஓர் கிறிஸ்தவ இளைஞன் செலவிடுகிற ஆண்டுகள் ஞானமான ஒரு முதலீடாக உள்ளன. அவன் அல்லது அவள், நடைமுறைக்குரிய ஞானத்தையும், அனுபவத்தையும், உட்பார்வையையும் அடையும்படி அவை உதவிசெய்கின்றன. (நீதிமொழிகள் 1:3, 4) ராஜ்யத்தினிமித்தமாக மணம்செய்யாது நிலைத்திருந்திருக்கிற ஒருவன், பின்னால், மண வாழ்க்கையின் மற்றும் ஒருவேளை பெற்றோர் நிலையின் பொறுப்புகளை ஏற்கத் தீர்மானித்தால், அதற்கு மிக மேம்பட்ட நிலையில் இருப்பான்.
23. மணம் செய்ய சிந்தனை செய்வோர் சிலர் எதை மனதில் வைத்திருக்கக்கூடும், ஆனால் பின்வரும் கட்டுரைகளில் என்ன கேள்வி ஆலோசிக்கப்படும்?
23 மணமாகாத நிலையில் முழுநேரமாக யெகோவாவைச் சேவிப்பதில் பல ஆண்டுகள் செலவிட்டிருக்கிற சில கிறிஸ்தவர்கள், ஏதாவது ஒரு வகை முழுநேர சேவையில் தொடர்ந்திருக்கும் நோக்கத்துடன் தங்கள் எதிர்கால மணத்துணையைக் கவனமாய்த் தெரிந்துகொள்கிறார்கள். இது நிச்சயமாகவே மிகவும் போற்றத்தக்கது. சிலர் தாங்கள் மணம் செய்வது எவ்வகையிலாவது தங்கள் சேவையைத் தடைசெய்ய இடமளிக்க விடக்கூடாதென்ற எண்ணத்துடனும் மணம்செய்தலைக் கருதலாம். ஆனால் மணமான ஒரு கிறிஸ்தவர், அவன் அல்லது அவள், தான் மணமாகாதிருந்தபோது யெகோவாவுக்குச் செய்த தன் சேவையில் கருத்தூன்றியிருந்தபடி இருப்பதற்கு சுயாதீனராயிருப்பதாக உணரவேண்டுமா? பின்வரும் கட்டுரைகளில் இந்தக் கேள்வி ஆலோசிக்கப்படும்.
மறுபார்வையிடுதல்
◻ கொரிந்துவிலிருந்த சபைக்கு எழுதும்படியான அவசியத்தை அப்போஸ்தலன் பவுல் ஏன் உணர்ந்தார்?
◻ துறவி மட வாழ்க்கைமுறையை பவுல் சிபாரிசு செய்துகொண்டில்லை என்று நாம் ஏன் அறிகிறோம்?
◻ மணமாகாதிருக்கும் நிலையை ஒருவர் எவ்வாறு ‘ஏற்கலாம்’?
◻ மணமாகாத சகோதரிகள் தங்கள் மணமாகாத நிலையிலிருந்து எவ்வாறு பயனடையலாம்?
◻ மணமாகாத சகோதரர் “கவனச்சிதறலில்லாமல்” யெகோவாவைச் சேவிப்பதற்கு, தங்கள் சுயாதீனத்தை என்ன வழிகளில் அனுகூலப்படுத்திக்கொள்ளலாம்?