வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
விவாகரத்து செய்யத் துடிக்கும் கணவரிடம் சத்தியத்திலுள்ள மனைவி எப்படி நடந்துகொள்வது?
மணவாழ்க்கையை ஆரம்பித்து வைத்த கடவுள், கணவனும் மனைவியும் ‘இசைந்திருக்க’ வேண்டும் என சொன்னார். (ஆதியாகமம் 2:18-24) மனிதர்கள் அபூரணத்தில் வீழ்ந்தனர்; எனவே அநேகரது மண வாழ்க்கையில் பிரச்சினைகள் சூறாவளியாய் கிளம்பின. ஆனாலும் தம்பதிகள் மனம் ஒத்து வாழ வேண்டும் என்பதே இன்னமும் கடவுளின் விருப்பம். “விவாகம் பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது” என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்.—1 கொரிந்தியர் 7:10, 11.
இந்த வார்த்தைகள், அபூரண தம்பதியரில் ஒருவர், சில சமயங்களில் பிரிந்து செல்ல தீர்மானிக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக, தம்பதியினரில் ஒருவர் பிரிந்து செல்லுகையில் இருவருமே ‘விவாகம் செய்யாதிருக்கும்படி’ பவுல் சொன்னார். ஏன்? ஏனெனில் தம்பதியரில் ஒருவர் பிரிந்து சென்றாலும் கடவுளைப் பொறுத்த வரை அவர்கள் இருவரும் இன்னும் தம்பதியினரே. பவுல் இவ்வாறு சொன்னதற்குக் காரணம் இருந்தது; “வேசித்தனஞ் [கிரேக்கில், போர்னியா] செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்” என கிறிஸ்தவ மணவாழ்க்கைக்குரிய தராதரத்தை பற்றி இயேசு சொல்லியிருந்தார். (மத்தேயு 19:9) மணவிலக்கு செய்வதற்கு ஒரேவொரு வேதப்பூர்வ காரணம் ‘விபசாரம்,’ அதாவது பாலியல் ஒழுக்கக்கேடு மட்டுமே. பவுல் குறிப்பிட்ட விஷயத்தில், கணவன் மனைவி இருவருமே ஒழுக்கக்கேட்டில் ஈடுபடவில்லை; எனவே, அவர்களில் ஒருவர் பிரிந்து சென்றாலும் கடவுளுடைய பார்வையில் அவர்களுடைய திருமண பந்தம் முடிவுறவில்லை.
அடுத்து, சத்தியத்தில் இல்லாத துணைவரை உடைய உண்மை கிறிஸ்தவரின் சூழ்நிலையைப் பற்றி பவுல் கலந்தாலோசித்தார். பவுலின் புத்திமதிகளைக் கவனியுங்கள்: “அவிசுவாசி பிரிந்து போனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.” (1 கொரிந்தியர் 7:12-16) சத்தியத்தில் இல்லாத கணவர் உண்மை மாறா மனைவியை விட்டுப் பிரிந்து சென்றால், ஒருவேளை, சட்டப்பூர்வமாய் மணவிலக்கு செய்ய முயன்றால் அவள் என்ன செய்யலாம்?
அவள் அவரோடு தொடர்ந்து வாழ நினைக்கலாம். தங்களுக்கு இடையே நிலவும் பரஸ்பர உணர்ச்சிப்பூர்வ, மற்றும் பாலியல் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்ளலாம்; தனக்கும், மைனராக இருக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் பொருளாதார தேவை இருப்பதையும் புரிந்துகொள்ளலாம். அவள் தன் கணவனை இன்னமும் நேசிக்கலாம். போகப்போக தன்னுடைய கணவரும் சத்தியத்தை ஏற்றுக்கொள்வார், அழிவிலிருந்து காப்பாற்றப்படுவார் என்ற நம்பிக்கையுடன் அவள் காத்திருக்கலாம். எனினும் (வேதப்பூர்வமற்ற ஏதோ காரணம் காட்டி) மணவிலக்குத்தான் தன் முடிவு என அவர் சொல்கையில் பவுல் எழுதியபடி ‘பிரிந்துபோகும்படி’ அந்த மனைவி அவரை விட்டுவிடலாம். ஒருவேளை சத்தியத்திலிருக்கும் கணவரே மணவாழ்க்கையைப் பற்றிய கடவுளுடைய கருத்தை மதிக்காமல் பிரிந்து போக துடித்தால், அப்போதும் இதே நியமம் பொருந்தும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிள்ளைகளின்மீது பாசத்தைப் பொழிவதற்கும், ஒழுக்க சம்பந்தமாக அவர்களைப் பயிற்றுவிப்பதற்கும், முத்தான பைபிள் போதனைகளுக்கு இசைவான விசுவாசத்தை அவர்கள் மனதில் பதிய வைப்பதற்கும் அவர்களைத் தன்னுடைய பராமரிப்பில் வைத்துக்கொள்ள மனைவி விரும்பலாம். (2 தீமோத்தேயு 3:15) இப்படிப்பட்ட அவளது உரிமைகள் மணவிலக்கால் பறிபோகலாம். அப்போது, தன்னையும் தன் பிள்ளைகளையும் பாதுகாத்துக்கொள்ள சட்டத்தின் உதவியை நாடலாம். தன் விருப்பப்படி பிள்ளைகளை வளர்ப்பதற்கு உரிமை கோரவும், கைவிட்டு சென்ற குடும்பத்திற்கு கணவன் ஜீவனாம்சம் கொடுத்து தொடர்ந்து ஆதரிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அதிகாரிகள் மூலம் அவள் முறைப்படியான நடவடிக்கை எடுக்கலாம். இதற்காக, சில நாடுகளில் அதற்குரிய ஆவணங்களில் அவள் கையெழுத்திட வேண்டியிருக்கலாம். இத்தகைய ஆவணங்களில் அவள் கையெழுத்திடுவது அந்த மணவிலக்குக்கு ஒப்புக்கொள்வதை அர்த்தப்படுத்தாது. எனினும், இன்னும் சில நாடுகளில், அவள் மணவிலக்கிற்கு ஒப்புக்கொள்வதைக் குறிப்பிடும் வார்த்தைகள் அடங்கிய ஆவணங்களில் கையெழுத்திட வேண்டியிருக்கலாம்; ஒருவேளை கணவன் விபசார குற்றத்தில் ஈடுபட்டிருந்தால், மனைவி கையெழுத்திடுவது அவரை அவளே புறக்கணிப்பதாக அர்த்தப்படுத்தும்.
பைபிள் அடிப்படையிலான காரணங்களால் விவாகரத்து செய்யப்பட்டிருக்கிறதா இல்லையா என்பது பற்றிய முழு விவரமும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் சபையில் உள்ளவர்களுக்கும் தெரியாது. எனவே, மணவாழ்க்கை விவாகரத்து வரை போவதற்கு முன்பாகவே சபையின் நடத்தும் கண்காணியும் இன்னும் ஒரு மூப்பரும் மட்டுமே அறியும் விதத்தில் உண்மைகளை அவர்களிடம் தெரிவிப்பது (கடிதம் மூலம் தெரிவிப்பது விரும்பத்தக்கது) மனைவிக்கு நல்லது. இவ்வாறு, மணவிலக்கு செய்த உடனேயோ பின்னரோ, மணவிலக்கு சம்பந்தமாக ஏதேனும் பிரச்சினை வந்தால் உண்மையில் நடந்தது என்ன என்பதை தெரிந்துகொள்ள இது பெரிதும் உதவும்.
இப்போது, “வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்” என்ற இயேசுவின் குறிப்புக்கு நாம் கவனம் செலுத்துவோம். விபசார குற்றத்தில் கணவர் ஈடுபட்டிருக்கலாம், இருப்பினும் தன் மனைவியோடு சேர்ந்து வாழ விரும்பலாம்; (இயேசுவின் உதாரணத்தில் குறிப்பிடப்பட்ட குற்றமற்ற) மனைவியோ, அவரை மன்னித்து தொடர்ந்து அவருடன் குடும்பம் நடத்தலாம் அல்லது அவரை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கலாம். இதில் எதை வேண்டுமானாலும் செய்ய அவளுக்கு உரிமை உண்டு. சட்டப்படி மணந்த தன் கணவனை மன்னித்து அவருடன் குடும்பம் நடத்த மனமுள்ளவளாக இருந்தால், அவள் ஒழுக்கங்கெட்டவள் அல்ல, உத்தமியே.—ஓசியா 1:1-3; 3:1-3.
ஒழுக்கங்கெட்ட கணவர் விஷயத்தில் அவர் மணவிலக்கை நாடினாலும், சேர்ந்து வாழும் நம்பிக்கையில் மனைவி அவரை மன்னிக்கவும் தயாராய் இருக்கலாம். எப்படியிருந்தாலும், தன் மனசாட்சியும் சூழ்நிலையும் அனுமதிப்பதைப் பொறுத்து, மணவிலக்கு நடவடிக்கையில் ஈடுபடுவதா வேண்டாமா என்பதை அவளே தீர்மானிக்க வேண்டும். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும், சில இடங்களில், மணவிலக்கு விவகாரத்தை எதிர்ப்படும் பெண், மணவிலக்கை ஏற்றுக்கொள்கிறாளா என்பதற்கு பதில் சொல்லாமலேயே பிள்ளைகளைத் தன் பொறுப்பில் வைத்துக்கொள்வதற்கும், ஜீவனாம்சம் பெறுவதற்கும் உரிய ஆவணங்களில் கையெழுத்திட வேண்டியிருக்கலாம். இத்தகைய ஆவணங்களில் அவள் கையெழுத்திடுவதுதானே அந்த மணவிலக்குக்கு ஒப்புக்கொள்வதை அர்த்தப்படுத்தாது. எனினும், இன்னும் சில இடங்களில், மனைவி மணவிலக்கு விவகாரத்தில் ஈடுபடுகையில் அவள் ஆவணங்களில் கையெழுத்திட வேண்டியிருக்கலாம். இப்படி கையெழுத்திடுவது தவறுசெய்த தன் கணவனை அவள் புறக்கணிப்பதை வெளிப்படையாய் தெரிவிக்கும்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், தவறாக புரிந்துகொள்ளப்படுவதைத் தவிர்ப்பதற்கு, என்னென்ன நடந்தன என்பதையும் அதன் சம்பந்தமான தன் கருத்துக்களையும் தெரிவிக்கும் கடிதத்தை பாதிக்கப்பட்ட மனைவி சபை மூப்பர்களிடம் கொடுத்து வைப்பது புத்திசாலித்தனமான காரியம். மன்னித்து அவருடன் சேர்ந்து வாழ்வதற்கு அவள் தயாராய் இருந்ததை அவரிடம் தெரிவித்ததையும் அதில் குறிப்பிடலாம். இது, அவளுடைய விருப்பத்திற்கு எதிராக மணவிலக்கு பெறப்பட்டதை அர்த்தப்படுத்தும்; இன்னும் அவரைப் புறக்கணிக்காமல் மன்னிக்க மனமுள்ளவளாய் இருந்ததையும் வெளிப்படுத்தும். இவ்வாறு மன்னிக்க மனமுள்ளவளாக, சேர்ந்து வாழ விரும்பியதை தெளிவுபடுத்திய பின்பு, ஜீவனாம்சத்திற்காகவோ பிள்ளைகளை வளர்ப்பதற்காகவோ அல்லது இரண்டையும் வேண்டி அவை சம்பந்தப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திடுவது அவளாகவே தன் கணவரை புறக்கணிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும்.a
மணவிலக்கிற்குப் பின்னரும் தான் மன்னிக்க மனமுள்ளவளாய் இருப்பதை தெளிவுபடுத்தினால் அவளோ அவளுடைய கணவரோ மறுமணம் செய்ய முடியாது. அவள் கணவரோ, மன்னிக்கும் மனம் படைத்த அந்த அபலையை உதாசீனப்படுத்தி, ஒழுக்கக்கேடான வாழ்க்கைப் போக்கைத் தொடருகையில் அவள் அவரை வெறுத்து ஒதுக்கலாம்; இந்நிலையில் கடவுள் பார்வையிலேயே இவர்களது திருமண பந்தம் முறிந்துவிடும். அப்போது வேறு யாரை வேண்டுமானாலும் மறுமணம் செய்துகொள்ள பைபிள் இடமளிக்கும். அந்த அபலைக்கு அத்தகைய தீர்மானம் எடுக்க உரிமையிருப்பதை இயேசு சுட்டிக்காட்டினார்.—மத்தேயு 5:32; 19:9; லூக்கா 16:18.
[அடிக்குறிப்பு]
a இடத்திற்கு இடம் சட்ட நடவடிக்கைகளும் ஆவணங்களும் வேறுபடும். சட்ட பத்திரங்களில் குறிப்பிடப்படும் மணவிலக்கு ஷரத்துக்களை, கையெழுத்திடும் முன்பு வெகு கவனமாய் வாசிப்பது அவசியம். மணவிலக்கில் ஆட்சேபணை இல்லையென குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களில் கையெழுத்திடுகையில், அது அவளே தன் துணையை புறக்கணிப்பதற்கு சமமாகிவிடும்.—மத்தேயு 5:37.