பொல்லாத உலகில் “தற்காலிகக் குடிகள்”
“மேற்சொல்லப்பட்ட எல்லாரும் விசுவாசமுள்ளவர்களாக . . . தாங்கள் குடியிருந்த தேசத்தில் தங்களை அந்நியர்கள் என்றும், தற்காலிகக் குடிகள் என்றும் அறிவித்தார்கள்.”—எபி. 11:13.
1. இந்த உலகத்தில் தம்மைப் பின்பற்றுகிறவர்களின் நிலையைக் குறித்து இயேசு என்ன சொன்னார்?
“இவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்” என்று இயேசு தம்முடைய சீடர்களைக் குறித்துச் சொன்னார். என்றாலும், “நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை” என்றார். (யோவா. 17:11, 14) இவ்வாறு, சாத்தானைக் கடவுளாகக் கொண்ட ‘இந்த உலகத்தில்’ தம்மை உண்மையாய்ப் பின்பற்றுகிறவர்களின் நிலையை இயேசு தெளிவுபடுத்தினார். (2 கொ. 4:4) இந்தப் பொல்லாத உலகில் வாழ்ந்தாலும் அவர்கள் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதிருப்பார்கள். இந்த உலகத்தில் அவர்கள் ‘அந்நியர்களும் தற்காலிகக் குடிகளுமாயிருப்பார்கள்.’—1 பே. 2:11.
அவர்கள் ‘தற்காலிகக் குடிகளாக’ வாழ்ந்தார்கள்
2, 3. ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், சாராள் ஆகியோர் ‘அந்நியர்களும் தற்காலிகக் குடிகளுமாய்’ வாழ்ந்தார்கள் என்று ஏன் சொல்லலாம்?
2 ஆரம்ப காலம்தொட்டே யெகோவாவின் உண்மை ஊழியர்கள் தாங்கள் வாழ்ந்துவந்த தேவபக்தியற்ற உலகத்துடன் ஒட்டாமல் வித்தியாசமானவர்களாக வாழ்ந்தார்கள். ஜலப்பிரளயத்திற்கு முன்பு ஏனோக்கும் நோவாவும் ‘உண்மைக் கடவுளோடு நடந்தார்கள்.’ (ஆதி. 5:22-24; 6:9; NW) சாத்தானுடைய பொல்லாத உலகிற்கு எதிரான யெகோவாவின் நியாயத்தீர்ப்பு செய்தியை அவர்கள் இருவரும் தைரியமாக அறிவித்தார்கள். (2 பேதுரு 2:5-ஐயும் யூதா 14, 15-ஐயும் வாசியுங்கள்.) தேவபக்தியற்ற உலகில் கடவுளுடன் நடந்ததால், ஏனோக்கு ‘கடவுளை நன்கு பிரியப்படுத்தினார்,’ நோவா ‘தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே . . . உத்தமராயிருந்தார்.’—எபி. 11:5; ஆதி. 6:9.
3 கடவுளுடைய அழைப்புக்கு இணங்கி ஆபிரகாமும் சாராளும் ஊர் என்ற கல்தேயர் தேசத்தில் வசதியாக வாழ்வதை விட்டுவிட்டு முன்பின் தெரியாத தேசத்தில் நாடோடிகளாய் வாழும் சவாலை ஏற்றுக்கொண்டார்கள். (ஆதி. 11:27, 28; 12:1) அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “விசுவாசத்தினால்தான் ஆபிரகாம், தான் ஆஸ்தியாகப் பெறவிருந்த இடத்திற்குப் போகும்படி சொல்லப்பட்டபோது, அந்த இடம் எங்கே இருக்கிறதென்று தெரியாதிருந்தும் கீழ்ப்படிந்து புறப்பட்டுப் போனார். விசுவாசத்தினால்தான் அவர், வாக்குறுதி அளிக்கப்பட்ட தேசத்தில் ஓர் அந்நியனாக வசித்து வந்தார், அந்த வாக்குறுதிக்குச் சக வாரிசுகளாயிருந்த ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களில் தங்கியிருந்தார்.” (எபி. 11:8, 9) அத்தகைய உண்மை ஊழியர்களைக் குறித்து பவுல் இவ்வாறும் எழுதினார்: “மேற்சொல்லப்பட்ட எல்லாரும் விசுவாசமுள்ளவர்களாக இறந்தார்கள்; வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தை அவர்கள் பார்க்கவில்லை என்றாலும், தொலைவிலிருந்து அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்; தாங்கள் குடியிருந்த தேசத்தில் தங்களை அந்நியர்கள் என்றும், தற்காலிகக் குடிகள் என்றும் அறிவித்தார்கள்.”—எபி. 11:13.
இஸ்ரவேலருக்கு ஓர் எச்சரிக்கை
4. கொடுக்கப்பட்ட தேசத்தில் குடியிருக்க ஆரம்பிப்பதற்கு முன்பு இஸ்ரவேலருக்கு என்ன எச்சரிக்கை தரப்பட்டது?
4 ஆபிரகாமின் வம்சத்தாரான இஸ்ரவேலர் ஏராளமாய்ப் பெருகினார்கள்; பிற்பாடு, கடவுள் அவர்களை ஒழுங்கமைத்து, அவர்களுக்குச் சட்டங்களையும் ஒரு தேசத்தையும் கொடுத்தார். (ஆதி. 48:4; உபா. 6:1, 2) யெகோவாவே உண்மையில் தங்களுடைய தேசத்தின் சொந்தக்காரர் என்பதை இஸ்ரவேலர் என்றும் நினைவில் வைக்க வேண்டியிருந்தது. (லேவி. 25:23) அவர்கள் அந்தத் தேசத்தில் குடியிருந்ததால், அதன் சொந்தக்காரரின் விருப்பங்களுக்கு மதிப்புக்கொடுத்து நடக்க வேண்டியிருந்தது. அதோடு, “மனுஷன் அப்பத்தினால் மாத்திரம்” பிழைப்பதில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டியிருந்தது; செல்வச்செழிப்பு காரணமாக யெகோவாவை மறந்துவிடாதிருக்கவும் வேண்டியிருந்தது. (உபா. 8:1-3) கொடுக்கப்பட்ட தேசத்தில் குடியிருக்க ஆரம்பிப்பதற்கு முன்பு இஸ்ரவேலருக்குப் பின்வரும் எச்சரிக்கை தரப்பட்டது: “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும் போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திர்ப்தியாகும்போதும், நீ . . . கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.”—உபா. 6:10-12.
5. இஸ்ரவேலரை யெகோவா ஏன் புறக்கணித்தார், எந்தப் புதிய தேசத்துக்குத் தயவுகாட்ட ஆரம்பித்தார்?
5 இந்த எச்சரிக்கை காரணமில்லாமல் கொடுக்கப்படவில்லை. நெகேமியாவின் காலத்தில் வாழ்ந்த லேவியரின் ஒரு தொகுதியினர், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைச் சொந்தமாக்கிக் கொண்ட பிறகு இஸ்ரவேலருக்குச் சம்பவித்ததை நினைத்து வெட்கப்பட்டார்கள். ஆம், இஸ்ரவேலர் வசதியான வீடுகளில் குடியேறி, ஏராளமான உணவையும் திராட்சைமதுவையும் பெற்றபோது, ‘புசித்துத் திருப்தியாகிக் கொழுத்தார்கள்.’ அவர்கள் கடவுளை எதிர்த்துக் கலகம் செய்தார்கள்; அவர்களை எச்சரிக்கும்படி அவர் அனுப்பிய தீர்க்கதரிசிகளைக் கொலையும் செய்தார்கள். எனவே, பகைவர்களின் கையில் அவதிப்படும்படி யெகோவா அவர்களை விட்டுவிட்டார். (நெகேமியா 9:25-27-ஐ வாசியுங்கள்; ஓசி. 13:6-9) பின்னர் ரோமர்களின் ஆட்சியில், உண்மையற்ற யூதர்கள் வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவையே கொன்றுபோட்டார்கள்! அதனால் யெகோவா அவர்களைப் புறக்கணித்துவிட்டு, புதிய தேசமாகிய ஆன்மீக இஸ்ரவேலருக்குத் தயவுகாட்ட ஆரம்பித்தார்.—மத். 21:43; அப். 7:51, 52; கலா. 6:16.
‘இந்த உலகத்தின் பாகமாக இல்லை’
6, 7. (அ) இந்த உலகத்தில் தம்மைப் பின்பற்றுகிறவர்கள் எப்படி இருப்பார்களென இயேசு சொன்னதை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்? (ஆ) உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏன் சாத்தானுடைய இந்த உலகத்தின் பாகமாய் இருக்கக் கூடாதென பேதுரு சொன்னார்?
6 இந்தக் கட்டுரையில் முன்பு குறிப்பிடப்பட்டதுபோல, கிறிஸ்தவச் சபையின் தலைவரான இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றுகிறவர்கள் சாத்தானுடைய பொல்லாத உலகத்திலிருந்து விலகியிருப்பார்கள் என்று தெளிவாகச் சொன்னார். தம்முடைய மரணத்திற்குச் சற்று முன்பு தம் சீடர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், அதற்குச் சொந்தமான உங்களை இந்த உலகம் நேசித்திருக்கும். ஆனால், நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லாததாலும், நான் இந்த உலகத்திலிருந்து உங்களைத் தேர்ந்தெடுத்திருப்பதாலும் உலகம் உங்களை வெறுக்கிறது.”—யோவா. 15:19.
7 கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்தபோது, கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தின் பழக்கவழக்கங்களுக்கு ஒத்துப்போய் அதன் பாகமாய் ஆக வேண்டியிருந்ததா? இல்லவே இல்லை. அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் சாத்தானின் உலகோடு ஒட்டாமல் வாழ வேண்டியிருந்தது. கிறிஸ்து இறந்து சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு, ரோமப் பேரரசின் பல்வேறு பகுதிகளில் வசித்துவந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “அன்பானவர்களே, இந்த உலகில் அந்நியர்களும் தற்காலிகக் குடிகளுமாயிருக்கிற நீங்கள், உங்களுக்கு எதிராகப் போர் செய்துகொண்டிருக்கிற பாவ இச்சைகளிலிருந்து விலகியிருக்க வேண்டுமென அறிவுறுத்துகிறேன்; உலகத்தார் மத்தியில் எப்போதும் நன்னடத்தை உள்ளவர்களாக இருங்கள்.”—1 பே. 1:1; 2:11, 12.
8. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்த விதத்தைப் பற்றிச் சரித்திராசிரியர் ஒருவர் என்ன சொன்னார்?
8 ஆரம்பகால கிறிஸ்தவர்கள் ரோமப் பேரரசில் ‘அந்நியர்களும் தற்காலிகக் குடிகளுமாக’ நடந்துகொண்டதை உறுதிசெய்பவராய் கென்னெத் ஸ்காட் லாட்டூரெட் என்ற சரித்திராசிரியர் இவ்வாறு எழுதினார்: “முதல் மூன்று நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தலைத் தொடர்ந்து சந்தித்தார்கள், அதுவும் கடும் துன்புறுத்தலை அடிக்கடி சந்தித்தார்கள் என்பது உலகறிந்த உண்மை . . . அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் வேறுபட்டன. அவர்கள் புறமதக் கொண்டாட்டங்களில் பங்குகொள்ள மறுத்ததால் நாத்திகர்கள் என முத்திரை குத்தப்பட்டார்கள். அவர்கள் சமூக வாழ்விலிருந்து பெரும்பாலும் விலகியிருந்ததால்—புறமத நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் ஒழுக்கக்கேடுகளும் நிறைந்திருந்த பொழுதுபோக்குகள், பண்டிகைகள் ஆகியவற்றிலிருந்து விலகியிருந்ததால்—மனிதகுலத்தைப் பகைப்பவர்கள் என இகழப்பட்டார்கள்.”
உலகத்தை முழுமையாகப் பயன்படுத்தாதிருத்தல்
9. உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம் “மனிதகுலத்தைப் பகைப்பவர்கள்” அல்ல என்பதற்கு எவ்விதத்தில் அத்தாட்சி அளிக்கிறோம்?
9 இன்றைய நிலைமை என்ன? ‘தற்போதைய பொல்லாத உலகத்தில்’ நாம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே வாழ்கிறோம். (கலா. 1:4) அதனால், அநேகர் நம்மைத் தவறாக எடைபோடுகிறார்கள், சிலர் நம்மைப் பகைக்கவும் செய்கிறார்கள். என்றாலும், நாம் “மனிதகுலத்தைப் பகைப்பவர்கள்” அல்ல. சக மனிதரிடமுள்ள அன்பின் காரணமாக நாம் வீடு வீடாய்ச் சென்று ஒவ்வொருவருக்கும் ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை’ அறிவிக்க எல்லா முயற்சியும் எடுக்கிறோம். (மத். 22:39; 24:14) கிறிஸ்துவால் ஆளப்படும் யெகோவாவின் அரசாங்கம் மனித ஆட்சிக்குச் சீக்கிரத்தில் முடிவுகட்டி, நீதியுள்ள புதிய பூமியைக் கொண்டுவரும் என்பதை நாம் உறுதியாய் நம்புவதால் இப்படிச் செய்கிறோம்.—தானி. 2:44; 2 பே. 3:13.
10, 11. (அ) இந்த உலகத்தை நாம் எப்படி ஓரளவு பயன்படுத்திக்கொள்கிறோம்? (ஆ) விழிப்புடன் இருக்கிற கிறிஸ்தவர்கள், எந்த விதங்களில் இந்த உலகத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கிறார்கள்?
10 இந்த உலகிற்கு முடிவு சீக்கிரத்தில் வரவிருப்பதால் சகல சௌகரியங்களோடும் வாழ்வதற்கு இது காலமல்ல என்பதை யெகோவாவின் ஊழியர்களான நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே, அப்போஸ்தலன் பவுலுடைய பின்வரும் அறிவுரைக்குக் கீழ்ப்படிகிறோம்: “இன்னும் கொஞ்சக் காலமே மீந்திருக்கிறது. அதனால் . . . பொருள்களை வாங்குகிறவர்கள் அவை இல்லாதவர்கள் போலவும், உலகத்தைப் பயன்படுத்துகிறவர்கள் அதை முழுமையாகப் பயன்படுத்தாதவர்கள் போலவும் இருக்கட்டும்; ஏனென்றால், இந்த உலகத்தின் காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது.” (1 கொ. 7:29-31) என்றாலும், இன்றுள்ள கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தை எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்? நூற்றுக்கணக்கான மொழிகளில் பைபிள் செய்தியை உலகெங்கும் பரப்புவதற்கு நவீன தொழில்நுட்பத்தையும் தொலைத்தொடர்பையும் பிரயோஜனப்படுத்திக் கொள்வதன் மூலமாகும். தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உலகை அவர்கள் ஓரளவே பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த உலகில் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்கிறார்கள், தேவையான சேவைகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். என்றாலும், பணம், பொருள், வேலை, வியாபாரம் ஆகியவற்றை அவற்றிற்குரிய இடத்தில் வைப்பதன் மூலம் இந்த உலகத்தை முழுமையாகப் பயன்படுத்தாதிருக்கிறார்கள்.—1 தீமோத்தேயு 6:9, 10-ஐ வாசியுங்கள்.
11 விழிப்புடன் இருக்கிற கிறிஸ்தவர்கள், உயர் கல்வியைப் பொறுத்ததில் இந்த உலகத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இந்த உலகில் பலர் கௌரவமான, செல்வச்செழிப்பான வாழ்க்கைக்கு முக்கியமான படிக்கல்லாக உயர் கல்வியைக் கருதுகிறார்கள். ஆனால், கிறிஸ்தவர்களாகிய நாம் தற்காலிகக் குடிகளாக இருப்பதால் வேறு குறிக்கோள்களைப் பெற்றிருக்கிறோம். “மேட்டிமையான காரியங்களில் சிந்தையாக இல்லாமல்” இருக்கிறோம். (ரோ. 12:16; எரே. 45:5) நாம் இயேசுவின் சீடர்களாக இருப்பதால், அவருடைய இந்த எச்சரிக்கைக்குக் கீழ்ப்படிகிறோம்: “விழித்திருங்கள், எல்லா விதமான பேராசையைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு ஏராளமான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது.” (லூக். 12:15) அதனால், ஆன்மீகக் குறிக்கோள்களை நாடும்படி கிறிஸ்தவ இளைஞர்கள் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்; ஆம், தங்களுடைய அடிப்படை தேவைகளைக் கவனித்துக்கொள்ள உதவும் அளவுக்கு மட்டுமே கல்வி கற்கும்படி... ‘முழு இருதயத்தோடும் முழு மூச்சோடும் முழு பலத்தோடும் முழு மனதோடும்’ யெகோவாவைச் சேவிக்கத் தங்களைத் தயார்படுத்திக்கொள்வதில் கவனத்தை ஒருமுகப்படுத்தும்படி... உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். (லூக். 10:27) இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள், ‘கடவுளுடைய பார்வையில் செல்வந்தர்களாக’ ஆக முடியும்.—லூக். 12:21; மத்தேயு 6:19-21-ஐ வாசியுங்கள்.
கவலைகளில் மூழ்கிவிடாதிருங்கள்
12, 13. மத்தேயு 6:31-33-லுள்ள இயேசுவின் வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படிவது இந்த உலகத்தாரிலிருந்து நம்மை எப்படி வேறுபடுத்திக் காட்டுகிறது?
12 பொருளாதார விஷயங்களில் யெகோவாவின் ஊழியர்களுடைய மனநிலை இந்த உலகத்தாரின் மனநிலையிலிருந்து வேறுபடுகிறது. இது சம்பந்தமாக இயேசு தம் சீடர்களிடம் இவ்வாறு சொன்னார்: “‘எதைச் சாப்பிடுவோம்?’ ‘எதைக் குடிப்போம்?’ ‘எதை உடுத்துவோம்?’ என்று ஒருபோதும் கவலைப்படாமல் இருங்கள். இவற்றையெல்லாம் பெறுவதற்கு இந்த உலகத்தார்தான் அலைந்து திரிகிறார்கள். இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பன் அறிந்திருக்கிறார். அதனால், முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருங்கள், அப்போது இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.” (மத். 6:31-33) நம் சக விசுவாசிகளில் பலர் தங்களுக்குத் தேவையானவற்றைப் பரலோகத் தகப்பன் தருகிறார் என்பதை அனுபவத்தில் ருசித்திருக்கிறார்கள்.
13 “தேவபக்தியோடுகூட, போதுமென்ற மனமே மிகுந்த ஆதாயம் தரும்.” (1 தீ. 6:6, நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்) இது இன்றுள்ள மக்களின் கருத்துக்கு நேர் எதிரானது. உதாரணத்திற்கு, புதுமணத் தம்பதியரில் பலர், எல்லா வசதிகளும் தங்களுக்கு உடனடியாக வேண்டுமென நினைக்கிறார்கள்; அதாவது, சகல சௌகரியங்களுடன் உள்ள ஒரு வீடு, அழகான கார், நவீன எலெக்ட்ரானிக் சாதனங்கள் என எல்லாமே வேண்டுமென நினைக்கிறார்கள். என்றாலும், தற்காலிகக் குடிகளாக வாழ்கிற கிறிஸ்தவர்கள் நியாயமாகத் தேவைப்படுகிறவற்றையும் தங்கள் சக்திக்குட்பட்டவற்றையும் பெறவே ஆசைப்படுகிறார்கள்; அதற்கும் மேலாக ஆசைப்படுவதில்லை. சொல்லப்போனால், அநேகர் யெகோவாவின் சேவையில் அதிக நேரத்தையும் சக்தியையும் செலவிடுவதற்காகச் சில வசதிகளை விட்டுக்கொடுக்கிறார்கள்; இது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இன்னும் சிலர் பயனியர்களாக, பெத்தேல் ஊழியர்களாக, பயண ஊழியர்களாக, அல்லது மிஷனரிகளாகச் சேவை செய்கிறார்கள். நம் சக வணக்கத்தார் யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்வதை நாம் எல்லாரும் எவ்வளவாய்ப் பாராட்டுகிறோம்!
14. விதைப்பவனைப் பற்றிய இயேசுவின் உவமையிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
14 விதைப்பவனைப் பற்றிய உவமையில் இயேசு, “இவ்வுலகத்தின் கவலையும் செல்வத்தின் வஞ்சக சக்தியும்” நம்முடைய இருதயத்திலுள்ள கடவுளுடைய செய்தியை நெருக்கிப்போட்டு பலன் கொடுக்காதபடி செய்துவிடுமெனச் சொன்னார். (மத். 13:22) இவ்வுலகில் நாம் தற்காலிகக் குடிகளாகத் திருப்தியோடு வாழ்வது, அந்த வலையில் வீழ்ந்துவிடாமலிருக்க உதவுகிறது. மேலும், இது நம்முடைய கண்ணை “தெளிவாக” அல்லது ‘ஒருமுகப்பட்டதாக’ வைத்துக்கொள்ள உதவுகிறது; அதாவது, கடவுளுடைய அரசாங்கத்திற்கும் அது சம்பந்தப்பட்ட காரியங்களுக்குமே கவனம் செலுத்தி அவற்றிற்கு நம் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க உதவுகிறது.—மத். 6:22, அடிக்குறிப்பு.
‘இந்த உலகம் ஒழிந்துபோகும்’
15. அப்போஸ்தலன் யோவான் சொன்ன என்ன வார்த்தைகள் உண்மைக் கிறிஸ்தவர்களின் கண்ணோட்டத்தையும் நடத்தையையும் பாதிக்கின்றன?
15 இந்த உலகம் சீக்கிரத்தில் அழியப்போவதை உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம் உறுதியாய் நம்புவதே, நம்மை ‘அந்நியர்களும் தற்காலிகக் குடிகளுமாக’ கருதுவதற்கு முக்கியக் காரணம். (1 பே. 2:11; 2 பே. 3:7) இந்தக் கண்ணோட்டம்தான் நம் தெரிவுகளையும் விருப்பங்களையும் குறிக்கோள்களையும் தீர்மானிக்கிறது. “இந்த உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோகும்; கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்” என்பதால் உலகத்தின் மீதோ உலகத்திலுள்ள காரியங்கள் மீதோ அன்பு வைக்க வேண்டாமென அப்போஸ்தலன் யோவான் சக கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறினார்.—1 யோ. 2:15-17.
16. நாம் வித்தியாசப்பட்டவர்கள் என்பதை எப்படிக் காட்டலாம்?
16 இஸ்ரவேலர் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தால் ‘சகல ஜனங்களிலும் [அவருக்கு] சொந்த சம்பத்தாயிருப்பார்கள்’ என்று சொல்லப்பட்டது. (யாத். 19:5) அப்படிக் கீழ்ப்படிந்தபோது, வழிபாட்டிலும்சரி வாழ்க்கை முறையிலும்சரி, அவர்கள் மற்ற எல்லாத் தேசத்தாரிலிருந்தும் வித்தியாசமானவர்களாய் இருந்தார்கள். அதேபோல் இன்று, சாத்தானுடைய உலகத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமானவர்களாய் இருக்கும் ஜனத்தைத் தமக்காக யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார். ‘தேவபக்தியற்ற நடத்தையையும் உலக ஆசைகளையும் விட்டொழித்து . . . தெளிந்த புத்தியுள்ளவர்களாக, நீதியுள்ளவர்களாக, தேவபக்தியுள்ளவர்களாக இந்த உலகத்தில் வாழுங்கள். . . . நம்முடைய மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்காகவும், நம்முடைய மகத்தான கடவுளும் நம்முடைய மீட்பராகிய கிறிஸ்து இயேசுவும் மகிமையோடு வெளிப்படுவதற்காகவும் காத்திருக்கிற வேளையில் அவ்வாறு நாம் வாழ வேண்டும்; கிறிஸ்து நமக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தார்; இவ்வாறு, நம்மை எல்லா விதமான அக்கிரமங்களிலிருந்தும் விடுவித்து, அவருக்கே உரிய மக்களாகவும் நற்காரியங்கள் செய்வதில் வைராக்கியமுள்ள மக்களாகவும் ஆகும்படி நம்மைத் தூய்மையாக்கினார்’ என்று பைபிள் சொல்கிறது. (தீத். 2:11-14) பரலோக நம்பிக்கை உள்ள கிறிஸ்தவர்களும், இவர்களுக்கு உதவியையும் ஆதரவையும் அளிக்கிற ‘வேறே ஆடுகளான’ லட்சக்கணக்கானோரும் இந்த ‘மக்களின்’ பாகமாக இருக்கிறார்கள்.—யோவா. 10:16.
17. பரலோக நம்பிக்கை உள்ளவர்களும்சரி வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களும்சரி, இந்தப் பொல்லாத உலகில் தற்காலிகக் குடிகளாக வாழ்ந்ததற்காக ஏன் ஒருபோதும் வருத்தப்பட மாட்டார்கள்?
17 கிறிஸ்துவுடன் ஆட்சி செய்வதே பரலோக நம்பிக்கை உள்ள கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் “மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு.” (வெளி. 5:10) வேறே ஆடுகளைச் சேர்ந்தோர் பூமியில் முடிவில்லா வாழ்வைப் பெற்ற பிறகு, அதற்கு மேலும் தற்காலிகக் குடிகளாக இருக்க மாட்டார்கள். தங்களுக்குச் சொந்தமான அழகிய வீடுகளில் குடியிருப்பார்கள்; ஏராளமான உணவு வகைகளைச் சாப்பிடுவார்கள், விதவிதமான பானங்களைப் பருகுவார்கள். (சங். 37:10, 11; ஏசா. 25:6; 65:21, 22) ‘சர்வபூமியின் தேவனான’ யெகோவாவே இவை எல்லாவற்றையும் தந்திருக்கிறார் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்; இஸ்ரவேலரைப் போல் அதை மறந்துவிட மாட்டார்கள். (ஏசா. 54:5) பரலோக நம்பிக்கை உள்ளவர்களும்சரி வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களும்சரி, இந்தப் பொல்லாத உலகில் தற்காலிகக் குடிகளாக வாழ்ந்ததற்காக ஒருபோதும் வருத்தப்பட மாட்டார்கள்.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• கடவுளுடைய பூர்வகால ஊழியர்கள் எந்த விதத்தில் தற்காலிகக் குடிகளாக வாழ்ந்தார்கள்?
• ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தில் எப்படி நடந்துகொண்டார்கள்?
• உண்மைக் கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தை எப்படி ஓரளவு பயன்படுத்திக்கொள்கிறார்கள்?
• இந்தப் பொல்லாத உலகில் தற்காலிகக் குடிகளாக வாழ்ந்ததற்காக நாம் ஏன் ஒருபோதும் வருத்தப்பட மாட்டோம்?
[பக்கம் 18-ன் படம்]
ஆரம்பகால கிறிஸ்தவர்கள் வன்முறையும் ஒழுக்கக்கேடும் நிறைந்த பொழுதுபோக்குகளைத் தவிர்த்தார்கள்