வேலை பற்றி சமநிலையான நோக்கை வளர்ப்பது எப்படி
பயங்கரமான அழுத்தங்களைக் கொண்டுவரும் இன்றைய உலக சந்தைகள், போட்டா போட்டி, மெகா உற்பத்தி ஆகியவற்றால் தினமும் சுரத்தின்றிதான் அநேகர் வேலைக்குப் போய் வருகிறார்கள். என்றாலும், நாம் வேலையில் இன்பம் காண வேண்டும். ஏன்? ஏனென்றால் தம்முடைய வேலையில் சந்தோஷத்தை காணும் கடவுளின் சாயலில் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். உதாரணமாக, ஆறு சிருஷ்டிப்பு “நாட்களில்,” அதாவது நீண்ட காலப் பகுதிகளில், தாம் செய்து முடித்திருந்த வேலையை கடவுள் மறுபடியும் பார்வையிட்டபோது “அது மிகவும் நன்றாயிருந்தது” என ஆதியாகமம் 1:31 சொல்கிறது.
யெகோவா வேலை செய்வதில் அலாதி இன்பம் காண்கிறார், அதனாலேயே அவர் ‘நித்தியானந்த தேவன்’ என்று அழைக்கப்படுகிறார், அதில் எவ்வித சந்தேகமுமில்லை. (1 தீமோத்தேயு 1:11) அப்படியென்றால் நாமும் அவரை எந்தளவுக்கு பின்பற்றுகிறோமோ அந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருப்போம் என்பது நியாயம்தானே? இதன் சம்பந்தமாக, கட்டுமான பணியிலும் அமைப்பாளராக இருப்பதிலும் சிறந்து விளங்கிய பண்டைய இஸ்ரவேலின் அரசனாகிய சாலொமோன் இவ்வாறு எழுதினார்: “மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் [உழைப்பின்] பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.”—பிரசங்கி 3:13.
வேலை செய்யுமிடத்தில் சூழ்நிலைகள் படுவேகமாக மாறிவரும் இன்றைய உலகில் வேலை பற்றிய சமநிலையான, ஆரோக்கியமான நோக்குநிலையை வளர்ப்பது மிகவும் கஷ்டம்தான். ஆனால் தமது அன்புள்ள அறிவுரைகளுக்கு செவிசாய்ப்பவர்களை யெகோவா தேவன் ஆசீர்வதிக்கிறார். (சங்கீதம் 119:99, 100) அப்படிப்பட்டவர்கள் மதிப்புள்ள, நம்பகமான வேலையாட்களாக ஆவதால் வேலையை இழந்துவிடும் அபாயம் அவர்களுக்கு கம்மிதான். வாழ்க்கையையும் வேலையையும் வெறுமனே பணம் சம்பாதிக்கும் நோக்கோடு பார்க்காமல் ஆன்மீக கண்ணோட்டத்தில் பார்க்க அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். இதனால் அவர்களால் வாழ்க்கையில் பொறுப்புடன் தீர்மானங்களை செய்ய முடிகிறது. அதுமட்டுமல்ல, அவர்களது மகிழ்ச்சியையும் பாதுகாப்புணர்வையும், அவர்களுடைய வேலையோ நிலையற்ற வேலைச் சந்தையோ கட்டுப்படுத்துகிறதில்லை. (மத்தேயு 6:31-33; 1 கொரிந்தியர் 2:14, 15) சமநிலையான வேலை நெறிமுறைகளை வளர்த்துக்கொள்ள இப்படிப்பட்ட ஆன்மீக கண்ணோட்டமே அவர்களுக்கு உதவுகிறது.
கடவுளைப் பிரியப்படுத்தும் வேலை நெறிமுறைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்
எப்போதும் தங்கள் வேலைக்கே முதலிடம் கொடுத்து வேலையே கதியென்று அதிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள் சிலர். மற்றவர்களோ வேலையை அப்படியே போட்டுவிட்டு எப்போது வீட்டுக்கு கிளம்பலாம் என்று காத்துக் கிடக்கிறார்கள். இவற்றில் சமநிலையான கருத்து என்ன? பைபிள் பதிலளிக்கிறது: “காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்.” (பிரசங்கி [சபை உரையாளர்] 4:6, பொது மொழிபெயர்ப்பு) நேரங்காலம் பார்க்காமல் ஒரேயடியாக வேலை செய்துகொண்டே இருப்பதில் ஒரு பிரயோஜனமுமில்லை—அது வீணே, “காற்றைப் பிடிக்க முயல்வது” போன்றது. ஏன் அப்படி? குடும்பத்தாரோடும் நண்பரோடும் உள்ள நம் உறவு, ஆன்மீகம், ஆரோக்கியம், ஆயுசுக் காலம் ஆகிய எல்லாவற்றையுமே நாம் கெடுத்துக்கொள்வோம். சொல்லப்போனால், இவைதான் நம் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைய உதவும் காரியங்கள். (1 தீமோத்தேயு 6:9, 10) தலைக்கு மேல் வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு வருத்தத்தையும் சஞ்சலத்தையும் சுமப்பதைவிட குறைந்த வசதியுடன் ஓரளவு சமாதானத்தோடு திருப்தியாக இருப்பதே சமநிலையான நோக்குநிலை.
இத்தகைய சமநிலையான நோக்குநிலையை பைபிள் ஊக்கப்படுத்துகிற போதிலும், அது சோம்பேறித்தனத்தை ஆதரிப்பதில்லை. (நீதிமொழிகள் 20:4) சோம்பேறித்தனம் சுய மரியாதையையும் மற்றவர்கள் நம்மீது வைத்திருக்கும் மரியாதையையும் அரித்துவிடும். அதைவிட கடவுளோடு நமக்குள்ள உறவையும்கூட பாதிக்கும். வேலை செய்ய மனதில்லாதவன் மற்றவர்கள் காசில் சாப்பிடவும் கூடாது என பைபிள் வெளிப்படையாகவே கூறுகிறது. (2 தெசலோனிக்கேயர் 3:10) அதற்கு பதிலாக, அவன் தன் வழிகளை மாற்றிக்கொண்டு, தன்னுடைய மற்றும் தன்னை அண்டியிருக்கும் ஜீவன்களுடைய வயித்துக்காக பாடுபட்டு சம்பாதிக்க வேண்டும். கடினமாக வேலை செய்தால்தான் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கும் உதவ முடியும். இப்படிச் செய்வதையே கடவுளுடைய வார்த்தை உற்சாகப்படுத்துகிறது.—நீதிமொழிகள் 21:25, 26; எபேசியர் 4:28.
வேலையை மதிக்க பிள்ளைப் பருவத்தில் பயிற்சி
வேலை சம்பந்தப்பட்ட நல்ல பழக்கங்கள் திடுதிப்பென்று வந்துவிடுவதில்லை, அவை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. ஆகவே பைபிள் இவ்வாறு பெற்றோருக்கு அறிவுரை கூறுகிறது: “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” (நீதிமொழிகள் 22:6) வேலை செய்வதில் நல்ல முன்மாதிரியாக இருப்பதோடு, ஞானமுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வயதிற்கேற்ப, வீட்டு வேலைகளை சொல்லிக் கொடுத்து அவர்களை பயிற்றுவிக்க ஆரம்பிக்கிறார்கள். வேலை செய்ய சொன்னால் பிள்ளைகள் சில சமயங்களில் எரிச்சலடைந்தாலும், அவர்கள் ஒரு வேலையை நன்றாக செய்து முடிக்கையில், அம்மாவும் அப்பாவும் அவர்களை பாராட்டும்போது தாங்களும் குடும்பத்தில் பயனுள்ள அங்கத்தினர்கள் என்பதை உணர ஆரம்பிப்பார்கள். பெற்றோர் சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு அன்பு காட்டுவதாக நினைத்து, அவர்களுக்காக தாங்களே எல்லா வேலையையும் செய்து செல்லம் கொடுத்து கெடுத்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோர் நீதிமொழிகள் [பழமொழி ஆகமம்] 29:21-ல் (கத்தோலிக்க பைபிள்) சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளை சிந்தித்துப் பார்ப்பது நல்லது. அது இவ்வாறு சொல்கிறது: “இளமை தொட்டு அடிமையைச் [அல்லது பிள்ளையை] செல்லமுடன் பேணுகிறவன் பிற்காலத்தில் அவன் அவமதிப்பவன் [“நன்றிகெட்டவன்,” NW] என்று கண்டறிவான்.”
பொறுப்புள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பள்ளிப் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வர். நன்றாக கற்றுக்கொள்ளவும் பள்ளியில் கடினமாக உழைக்கவும் அவர்களை உற்சாகப்படுத்துவர். இப்படி செய்தால் அந்தப் பிள்ளைகள் பிற்பாடு வேலைக்குச் செல்லும்போது மிகவும் பிரயோஜனமாய் இருக்கும்.
வேலையைத் தேர்ந்தெடுப்பதில் ஞானம் தேவை
எந்தெந்த வேலையை நாம் செய்ய வேண்டும் என்று பைபிள் நமக்குச் சொல்லாவிட்டாலும், நம்முடைய ஆவிக்குரிய முன்னேற்றம், கடவுளுக்கு சேவை, முக்கியமான பொறுப்புகள் ஆகியவை பாதிக்காதபடி பார்த்துக்கொள்ள சிறந்த வழிகாட்டும் நியமங்களை நமக்கு கொடுக்கிறது. உதாரணமாக, அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “இனிவரும் காலம் குறுகினதானபடியால், . . . இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள் போலவும் இருக்க வேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்து போகிறதே.” (1 கொரிந்தியர் 7:29-31) தற்போதுள்ள உலகில் எதுவும் நிரந்தரமல்ல, நிலையானதுமல்ல. நம்முடைய எல்லா நேரத்தையும் சக்தியையும் இந்த உலகத்திற்காக செலவழித்தோமென்றால், நம் வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்ததை வெள்ளம் வந்து அடித்துச் செல்லும் பகுதியில் கட்டப்பட்ட வீட்டிற்காக செலவழிப்பதற்கு சமானமாக அது இருக்கும். அது எவ்வளவு முட்டாள்தனம்!
இவ்வுலகத்தை “தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்” என்ற சொற்றொடரை, அதில் ‘ஆழ்ந்துவிடாமல்’ அல்லது “முழுமையாக ஈடுபடாதவர்” என்று மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்க்கின்றன. (கத்.பை.; பொ.மொ.) தற்போதைய உலகிற்கு காலம் ‘குறுகிவிட்டது,’ ஆகவே அதில் ‘ஆழ்ந்துவிடுவது’ அல்லது ‘முழுமையாக ஈடுபடுவது’ கண்டிப்பாக ஏமாற்றத்திற்கும் வருத்தத்திற்குமே வழிநடத்தும் என்பதை ஞானமுள்ளவர்கள் உணருகிறார்கள்.—1 யோவான் 2:15-17.
‘தேவன் உன்னைக் கைவிடவே மாட்டார்’
நம் தேவைகளைப் பற்றி யெகோவா நம்மைவிட நன்கு அறிவார். அவருடைய நோக்கம் நிறைவேறுகையில் நாம் எந்த காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதும் அவருக்குத் தெரியும். ஆகவேதான் அவர் நமக்கு இவ்வாறு நினைப்பூட்டுகிறார்: “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.” (எபிரெயர் 13:5) எவ்வளவு ஆறுதலான வார்த்தைகள்! தம் மக்கள்மேல் கடவுளுக்கிருக்கும் அதே அன்புள்ள அக்கறையை இயேசுவும் காட்டினார். அதனால்தான் தமது பிரபலமான மலைப் பிரசங்கத்தில் அடிக்கடி, வேலையைப் பற்றியும் பொருளாதார காரியங்களைப் பற்றியும் சரியான நோக்குநிலையைக் கொண்டிருக்க வேண்டுமென்று சீஷர்களுக்கு கற்பித்தார்.—மத்தேயு 6:19-33.
யெகோவாவின் சாட்சிகள் இந்தப் போதனைகளுக்கு செவிகொடுக்க கடுமையாக முயற்சிக்கிறார்கள். உதாரணத்திற்கு, எலக்ட்ரிஷனாக வேலை பார்த்துவந்த ஒரு சாட்சியிடம் அவருடைய முதலாளி, அடிக்கடி அவரை ஓவர் டைம் செய்யும்படி சொன்னார். அவரோ மறுத்துவிட்டார். ஏன்? ஏனென்றால் தன் குடும்பத்திற்காகவும் ஆன்மீக காரியங்களுக்காகவும் ஒதுக்கி வைத்திருக்கும் நேரத்தில் வேலையை நுழைக்க விரும்பவில்லை. அவர் மிகச் சிறந்த வேலையாளராகவும் நம்பகமானவராகவும் இருந்ததால், முதலாளி அவரை விட்டுவிட்டார். ஆனால் எப்போதுமே இப்படி நடப்பதில்லை, ஒரு சிலர் சமநிலையான வாழ்க்கை முறையைக் காத்துக்கொள்வதற்காக வேறொரு வேலையைத் தேடிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இருந்தபோதிலும், யெகோவாவை முழுமையாக நம்புகிறவர்கள் தங்களுடைய நல்நடத்தையாலும் வேலையில் நெறிமுறையோடு நடந்துகொள்வதாலும் முதலாளியின் தயவைப் பெறுகிறார்கள்.—நீதிமொழிகள் 3:5, 6.
எல்லா வேலையும் பலனளிக்கப்போகிற காலம்
தற்போதுள்ள அபூரண உலகில் வேலை மற்றும் வேலை வாய்ப்பு எப்போதுமே பிரச்சினைகளோடும் அநிச்சயங்களோடும்தான் இருக்கும். போகப் போக இந்த உலகம் நிச்சயமாய் நிலையற்றதாகவே ஆகும், அப்போது பொருளாதாரம் அதிகமாக ஊசலாடலாம் அல்லது வீழ்ச்சியடையலாம், அல்லது காரியங்கள் இன்னும் படுமோசமடையலாம். ஆனால் இந்த நிலைமை தற்காலிகமானதே. சீக்கிரத்தில், யாருமே வேலை இல்லாமல் இருக்கப்போவதில்லை. அதுமட்டுமல்ல, எல்லா வேலையும் முழு ஈடுபாட்டுடன் செய்வதாகவும் பலனுள்ளதாகவும் இருக்கும். இது எப்படி சாத்தியம்? இந்த மாற்றத்தை எது கொண்டுவரும்?
அப்படிப்பட்ட ஒரு காலத்தைப் பற்றி தமது தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் வாயிலாக யெகோவா பேசினார்: “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.” (ஏசாயா 65:17) தாம் கொண்டு வரப்போகும் ஒரு புதிய அரசாங்கத்தைப் பற்றி அவர் இங்கு பேசுகிறார். இந்த அரசாங்கத்தின் கீழ் முற்றிலும் புதிதான, மாறுபட்ட மனித சமுதாயம் இருக்கப்போவது நிச்சயம்.—தானியேல் 2:44.
அப்போது மனிதர்கள் எவ்வாறு வாழ்வார்கள், எப்படி வேலை செய்வார்கள் என்பதைக் குறித்து அந்தத் தீர்க்கதரிசனம் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறது: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப் போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.”—ஏசாயா 65:21-23.
கடவுள் வடிவமைக்கும் அந்தப் புதிய உலகம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்! ‘விருதாவாக உழைக்காமல்’ உங்கள் உழைப்பின் “கனியை” முழுமையாக அனுபவித்து மகிழும் இப்படிப்பட்ட ஓர் உலகில் வாழ உங்களுக்கு விருப்பமா? ஆனால் யார் மட்டும் இந்த ஆசீர்வாதங்களை அனுபவிப்பார் என்பதை கவனியுங்கள்: “அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட”வர்கள். யெகோவாவைப் பற்றி நீங்கள் தெரிந்துகொண்டு, அவர் கேட்கும் காரியங்களை செய்வதன் மூலம் நீங்களும் ‘ஆசீர்வதிக்கப்பட்டவராக’ இருக்கலாம். இயேசு இவ்வாறு சொன்னார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை ஒழுங்காக படித்து இப்படிப்பட்ட ஜீவனைத் தரும் அறிவை நீங்கள் பெற்றுக்கொள்ள யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷமாக உங்களுக்கு உதவி செய்வார்கள்.
[பக்கம் 6-ன் பெட்டி]
“எப்போதும் ஏக கிராக்கி”
‘எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், யெகோவாவுக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:24) நிச்சயமாக, இந்தச் சிறந்த நியமத்தை பின்பற்றும் ஒருவரையே வேலைக்கு அமர்த்த முதலாளிகள் தேடுவார்கள். இதன் காரணமாகவே ஜே. ஜே. லூனா என்பவர் ஹெளவ் டு பி இன்விஸிபிள் என்ற தன் புத்தகத்தில், சில மத தொகுதிகளில் மும்முரமாய் ஈடுபடுபவர்களை தேடிக் கண்டுபிடித்து, அவர்களையே வேலைக்கு அமர்த்தும்படி முதலாளிகளுக்கு ஆலோசனை கூறுகிறார். இப்படி சொல்லிவிட்டு அவர் மேலும் கூறுகிறார்: “பெரும்பாலும், கடைசியில் நாங்கள் யெகோவாவின் சாட்சிகளையே வேலைக்கு அமர்த்த தீர்மானிக்கிறோம்.” அதற்கு அவர் கொடுக்கும் காரணங்களில் ஒன்று, யெகோவாவின் சாட்சிகள் நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள்; அதனால்தான் எல்லா விதமான வேலைகளிலும் “அவர்களுக்கு எப்போதும் ஏக கிராக்கி.”
[பக்கம் 5-ன் படங்கள்]
ஆன்மீக காரியங்களோடும் பொழுதுபோக்கோடும் வேலையை சமநிலைப்படுத்துவது திருப்தி தருகிறது