மணமாகாதவர்களுக்கும் மணமானவர்களுக்கும் ஞானமான அறிவுரைகள்
“நீங்கள் தகுந்த காரியத்தைச் செய்யவும் கவனச்சிதறல் இல்லாமல் நம் எஜமானருக்குத் தொடர்ந்து ஊழியம் செய்யவும் உங்கள் மனதைத் தூண்டுவதற்காக இதைச் சொல்கிறேன்.”—1 கொ. 7:35.
1, 2. மணமாகாதவர்களுக்கும் மணமானவர்களுக்கும் பைபிள் தரும் அறிவுரைகளை நாம் ஏன் ஆராய வேண்டும்?
எ திர்பாலாரோடு பழகும்போது நாம் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்றுவிடலாம் அல்லது விரக்தியின் விளிம்புக்கே போய்விடலாம் அல்லது கவலையின் கடைக்கோடியைத் தொட்டுவிடலாம். இப்படிப்பட்ட உணர்ச்சிகள் நமக்குள் பொங்கியெழும் என்பதால் கடவுளுடைய வழிநடத்துதல் தேவை. வேறு பல காரணங்களுக்காகவும் அவருடைய உதவி நமக்குத் தேவை. உதாரணத்திற்கு, கிறிஸ்தவர்கள் சிலர் திருமணம் செய்துகொள்ளாமலேயே சந்தோஷமாக இருக்கலாம்; ஆனால், திருமணம் செய்யும்படி சொந்தபந்தங்களோ நண்பர்களோ அவர்களை நச்சரிக்கலாம். இன்னும் சிலர் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படலாம்; ஆனால், பொருத்தமான மாப்பிள்ளையோ பெண்ணோ கிடைக்காமல் தவிக்கலாம். வேறு சிலர், திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்திருக்கலாம்; ஆனால், பொறுப்புள்ள கணவனாக அல்லது மனைவியாக நடந்துகொள்ள அவர்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படலாம். இவை தவிர, மணமாகாதவர்களும் சரி மணமானவர்களும் சரி, கற்பைக் காத்துக்கொள்ளப் போராட வேண்டியிருக்கலாம்.
2 இந்த விஷயங்கள் ஒருவரது சந்தோஷத்தை மட்டுமல்ல, யெகோவா தேவனுடன் அவருக்கு உள்ள பந்தத்தையும் பாதிக்கின்றன. ஒன்று கொரிந்தியர் 7-ஆம் அதிகாரத்தில், திருமணமாகாதவர்களுக்கும் திருமணமானவர்களுக்கும் பவுல் அறிவுரைகள் தந்தார். “தகுந்த காரியத்தைச் செய்யவும் கவனச்சிதறல் இல்லாமல் நம் எஜமானருக்குத் தொடர்ந்து ஊழியம் செய்யவும்” அவர்களைத் தூண்டுவதே அவருடைய குறிக்கோளாக இருந்தது. (1 கொ. 7:35) அவர் தந்த முக்கியமான அறிவுரைகளை ஆராயும்போது, எவ்வாறு யெகோவா தேவனை இன்னும் முழுமையாகச் சேவிக்கலாம் என்பதைக் குறித்துச் சிந்தியுங்கள், நீங்கள் மணமாகாதவராக இருந்தாலும் சரி மணமானவராக இருந்தாலும் சரி.
சொந்தத் தீர்மானம், முக்கியத் தீர்மானம்
3, 4. (அ) கல்யாணம் செய்யச் சொல்லி நண்பர்களோ குடும்பத்தாரோ ஒருவரைக் கட்டாயப்படுத்தினால் என்ன ஆகும்? (ஆ) திருமணத்தைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க பவுலின் வார்த்தைகள் நமக்கு எவ்வாறு உதவும்?
3 முதல் நூற்றாண்டிலிருந்த யூதர்களைப் போலவே இன்றும் அநேகர் கல்யாணம்தான் வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். ஒரு பையனோ பெண்ணோ கல்யாண வயதை எட்டினால் போதும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் கவலை வந்துவிடுகிறது; உடனே கல்யாணப் பேச்செடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ‘சும்மா தள்ளிப்போடாமல் சட்டுபுட்டென்று ஒரு முடிவு எடு’ என்று அவர்கள் கூறலாம். சொல்லப்போனால், ஒரு நல்ல பையனோ பெண்ணோ இருப்பதாகக்கூட அவர்கள் ஜாடைமாடையாகச் சொல்லலாம். இரண்டு பேரை ஜோடி சேர்த்து வைப்பதற்காக அவர்களுக்கே தெரியாமல் அவர்களைச் சந்திக்க வைக்கலாம். ஆனால், இப்படியெல்லாம் செய்யும்போது தர்மசங்கடம் ஏற்படுகிறது, நட்பு முறிகிறது, மனவருத்தம் உண்டாகிறது.
4 கல்யாணம் செய் என்றோ செய்யாதே என்றோ பவுல் எவரையும் கட்டாயப்படுத்தவில்லை. (1 கொ. 7:7) துணைவி இல்லாமல் யெகோவாவைச் சேவிப்பதில் அவருக்குப் பரம திருப்தி கிடைத்தது; என்றாலும், திருமணம் செய்துகொள்ள மற்றவர்களுக்கு இருந்த உரிமையை அவர் மதித்தார். இன்றும், மணமுடிப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் உண்டு. ஆகவே, ‘அப்படிச் செய், இப்படிச் செய்’ என யாரும் யாரையும் வற்புறுத்தக் கூடாது.
மணமாகாமலே மகிழ்ச்சி காண
5, 6. மணமாகாதிருப்பது நல்லதென பவுல் ஏன் குறிப்பிட்டார்?
5 மணமாகாதவர்கள் கடவுளை நன்கு சேவிக்கலாம் என்பதை கொரிந்தியர்களுக்கு பவுல் எழுதிய வார்த்தைகள் காட்டுகின்றன. (1 கொரிந்தியர் 7:8-ஐ வாசியுங்கள்.) பவுல் மணமாகாதவராக இருந்தபோதிலும் மணமானவர்களைவிட தான் மேலானவர் என நினைக்கவில்லை; இன்று கிறிஸ்தவக் குருமார்தான் அப்படி நினைத்துக்கொள்கிறார்கள். பவுலோ, மணமாகாமல் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறவர்கள் அனுபவிக்கிற ஒரு நன்மையைச் சிறப்பித்துக் காட்டினார். அது என்ன?
6 மணமானவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஊழியப் பொறுப்புகளை மணமாகாதவர்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. பவுல் ‘புறதேசத்தாருக்கு ஓர் அப்போஸ்தலனாக’ இருக்கும் விசேஷப் பாக்கியத்தைப் பெற்றிருந்தார். (ரோ. 11:13) அப்போஸ்தலர் புத்தகத்தில் 13-20 அதிகாரங்களில் அவருடைய அனுபவங்களைக் கவனிக்கிறோம்; மிஷனரி சேவையில் அவரும் அவரது தோழர்களும் புதிய பிராந்தியங்களுக்குச் சென்று பிரசங்கித்தார்கள், பல இடங்களில் புதிய சபைகளை நிறுவினார்கள். ஊழியத்தில் பவுல் சந்தித்த கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல; இன்று அவரளவுக்குக் கஷ்டப்படுகிறவர்கள் வெகு சிலரே. (2 கொ. 11:23-27, 32, 33) என்றாலும், சீடர்களை உண்டாக்குவதற்காக அவர் அந்தப் பாடுகளையெல்லாம் சகித்தார்; அதனால் மிகுந்த சந்தோஷத்தையும் பெற்றார். (1 தெ. 1:2-7, 9; 2:19) அவருக்கு மனைவி மக்கள் இருந்திருந்தால் இந்தளவு சாதித்திருக்க முடிந்திருக்குமா? பெரும்பாலும் முடிந்திருக்காது.
7. மணமாகாத சகோதரிகள் இருவர் எப்படித் தங்களுடைய சூழ்நிலையை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்?
7 மணமாகாத கிறிஸ்தவர்கள் பலர் தங்களுடைய சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு கடவுளுடைய சேவையில் அதிகம் ஈடுபடுகிறார்கள். உதாரணமாக, மணமாகாத சகோதரிகளான சாராவும் லிம்பானியாவும் பொலிவியாவில் வசிக்கிறார்கள்; பல வருடங்களாகச் சாட்சி கொடுக்கப்படாத ஒரு கிராமத்திற்கு இவர்கள் குடிமாறிப் போனார்கள். அங்கு மின்வசதி இல்லாதது ஒரு குறையாக இருந்ததா? அவர்களே சொல்கிறார்கள்: “இங்கு ரேடியோவோ டிவியோ இல்லாததால், கிராமவாசிகளால் நிறைய வாசிக்க முடிகிறது.” கிராமவாசிகள் சிலர், யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களை ஏற்கெனவே வாசித்து வந்திருந்தார்கள்; இப்போது அச்சடிக்கப்படாத அந்தப் பிரசுரங்களை அந்தச் சகோதரிகளிடம் காட்டினார்கள். அங்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஆர்வமுள்ளவர்கள் இருந்தார்கள்; அதனால் அந்தக் கிராமத்தில் ஊழியத்தை முடிப்பதற்குள் அந்தச் சகோதரிகள் திக்குமுக்காடிப் போனார்கள். வயதான பெண்மணி ஒருவர் அவர்களிடம், “யெகோவாவின் சாட்சிகள் ஒருவழியாக இங்கு வந்துவிட்டதைப் பார்த்தால், முடிவு சீக்கிரத்தில் வந்துவிடும்போல் தெரிகிறது” என்றார். விரைவிலேயே, கிராமவாசிகள் சிலர் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.
8, 9. (அ) மணமாகாமல் கடவுளைச் சேவிப்பது நல்லதென பவுல் ஏன் குறிப்பிட்டார்? (ஆ) மணமாகாதவர்கள் அனுபவிக்கிற சில நன்மைகள் யாவை?
8 கடினமான பிராந்தியங்களில் பிரசங்கிக்கும்போது மணமானவர்களுக்கும் நல்ல பலன் கிடைப்பது உண்மைதான். ஆனால், மணமாகாத பயனியர்கள் செய்கிற சில சேவைகளை மணமானவர்களும் பிள்ளைகள் உள்ளவர்களும் செய்ய முடியாமல் போகலாம். பவுல் சக கிறிஸ்தவர்களுக்கு எழுதிய சமயத்தில், நற்செய்தி இன்னும் அதிகமாக அறிவிக்கப்பட வேண்டுமென அறிந்திருந்தார்; அதோடு, தன்னைப் போலவே எல்லாரும் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டுமென விரும்பினார்; அதனால்தான், மணமாகாமல் யெகோவாவைச் சேவிப்பது நல்லதெனக் குறிப்பிட்டார்.
9 அமெரிக்காவைச் சேர்ந்த மணமாகாத சகோதரி ஒருவர் இவ்வாறு எழுதினார்: “கல்யாணம் செய்துகொள்ளாவிட்டால் சந்தோஷமாகவே இருக்க முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், யெகோவாவுடன் நெருங்கிய பந்தம் வைத்திருக்கும்போதுதான் எப்போதும் சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். திருமணம் செய்யாமல் தனியாக இருப்பது ஒரு தியாகம் என்றாலும், அதைப் பிரயோஜனப்படுத்திக் கொண்டால் அது ஒரு அருமையான பரிசு.” அதோடு, “கல்யாணம் செய்யாமல் இருப்பது சந்தோஷத்தைத் தருமே தவிர அதற்குத் தடையாக இருக்காது. மணமானவர்கள்மீது மட்டுமல்ல, மணமாகாதவர்கள் மீதும் யெகோவா பாசத்தைப் பொழிகிறார் என்பது நான் அறிந்த உண்மை” என எழுதினார். இப்போது அந்தச் சகோதரி, பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்படுகிற ஒரு நாட்டில் சந்தோஷமாகச் சேவை செய்து வருகிறார். நீங்கள் மணமாகாதவரா? அப்படியென்றால், உங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு கற்பிக்கும் வேலையில் அதிகமாக ஈடுபட முடியுமா? அப்படிச் செய்தீர்கள் என்றால், மணமாகாத நிலை யெகோவா தந்திருக்கும் ஓர் அற்புதப் பரிசு என்பதை நீங்களும் ருசிப்பீர்கள்.
மணமுடிக்க ஆசைப்படுவோர்
10, 11. பொருத்தமான துணை கிடைக்காதவர்களுக்கு யெகோவா எவ்வாறு உதவுகிறார்?
10 மணமாகாமல் யெகோவாவுக்கு உண்மையுடன் சேவை செய்யும் அநேகர், சில காலத்திற்குப் பிறகு மணமுடிக்கத் தீர்மானிக்கிறார்கள். யெகோவாவின் வழிநடத்துதல் தேவை என்பதை உணர்ந்து, பொருத்தமான துணையைக் கண்டுபிடிப்பதற்காக அவரிடம் உதவி கேட்கிறார்கள்.—1 கொரிந்தியர் 7:36-ஐ வாசியுங்கள்.
11 யெகோவாவுக்கு முழு மூச்சோடு சேவை செய்ய வேண்டுமென உங்களைப் போலவே ஆசைப்படும் ஒருவரை மணமுடிக்க நீங்கள் நினைத்தால், அதைக் குறித்துத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். (பிலி. 4:6, 7) அதற்காக எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியிருந்தாலும் சரி சோர்ந்துபோகாதீர்கள். அன்பான கடவுள் உங்களுக்கு உதவுவார் என்று நம்பிக்கையாக இருங்கள்; உங்களுக்கு என்ன தேவை என்பதை அவர் அறிந்திருக்கிறார், உங்களை உணர்ச்சிப்பூர்வமாகத் தாங்குவார்.—எபி. 13:6.
12. ஒருவர் உங்களைக் கல்யாணம் செய்ய விரும்புவதாகச் சொன்னால், நீங்கள் ஏன் அவசரப்பட்டுத் தீர்மானம் எடுக்கக் கூடாது?
12 திருமணம் செய்ய நீங்கள் ஒருவேளை ஏங்கிக்கொண்டிருக்கலாம். ஆனால், ஆன்மீக ரீதியில் பலவீனமான ஒருவர் அல்லது சத்தியத்தில் இல்லாத ஒருவர் உங்களைக் கல்யாணம் செய்ய விரும்புவதாகச் சொன்னால் என்ன செய்வீர்கள்? அவருக்கு நீங்கள் சம்மதம் தெரிவித்துவிட்டால், தனிமையுணர்வில் தவித்த தவிப்பைவிட அதிகமாகத் தவிக்க ஆரம்பித்துவிடுவீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். அதுவும் கல்யாணம் என்று ஆகிவிட்டால், நல்லவரோ கெட்டவரோ அவருடன்தான் நீங்கள் கடைசிவரை காலத்தை ஓட்ட வேண்டும். (1 கொ. 7:27) ஆகவே, வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள் என்று நினைத்து அவசரப்பட்டு ஒரு தீர்மானத்தை எடுத்துவிடாதீர்கள்; பிற்பாடு அதை நினைத்து நினைத்து வருந்துவீர்கள்.—1 கொரிந்தியர் 7:39-ஐ வாசியுங்கள்.
திருமணத்திற்குத் தயாராகுதல்
13-15. கல்யாணத்திற்கு முன்பே எப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுவது நல்லது?
13 மணமாகாமல் யெகோவாவைச் சேவிப்பது நல்லதென பவுல் சொன்னாலும், மணமானவர்களை அவர் மட்டமாகப் பார்க்கவில்லை. மாறாக, அவர்களுக்கும் உதவ எண்ணி, அறிவுரைகள் வழங்கினார். அவை, திருமணத்தை எதார்த்தமான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கும் திருமண பந்தத்தைக் கட்டிக்காப்பதற்கும் உதவுகின்றன.
14 சிலர் மணவாழ்வு பற்றிய தங்கள் எதிர்பார்ப்புகளில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கலாம். கல்யாணத்திற்கு முன்பு, தங்களுடைய காதல்தான் ஒரு காவியக் காதல், உன்னதக் காதல் என்று யோசிக்கலாம்; தங்களைப் போல் ஒரு காதல் ஜோடி உலகிலேயே இல்லையென நினைக்கலாம். மணவாழ்வில் எப்போதுமே சந்தோஷ சாரல் அடிக்குமென்று கனவு காணலாம். இப்படிக் காதல் வானில் மிதந்தவாறே கல்யாணமும் செய்யலாம். ஆனால், நிஜத்தில் நடப்பதோ வேறு. தாம்பத்திய வாழ்வு இன்பமளிக்கும் என்பது உண்மைதான்; ஆனால், மணவாழ்வில் வரும் உபத்திரவங்களைச் சமாளிக்க அது மட்டுமே போதாது.—1 கொரிந்தியர் 7:28-ஐ வாசியுங்கள்.a
15 புதுமணத் தம்பதிகள் பலர், முக்கியமான விஷயங்களில் தங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு தலைதூக்கும்போது அதிர்ச்சியும் ஏமாற்றமும்கூட அடைகிறார்கள். உதாரணத்திற்கு, எவ்வளவு பணம் செலவழிப்பது, எப்படிப் பொழுதைப் போக்குவது, எங்கே வசிப்பது, சொந்தபந்தங்களை எவ்வளவு அடிக்கடி சந்திப்பது போன்ற விஷயங்களில் அவர்கள் இரு துருவங்களாக இருக்கலாம். அதோடு, ஒருவருடைய சுபாவம் இன்னொருவருக்கு எரிச்சலூட்டலாம். காதலிக்கும் சமயத்தில் இந்த விஷயங்களெல்லாம் கண்ணில் தெரியாது, ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு இவை பூதாகரமாகத் தெரியலாம். ஆகவே, கல்யாணத்திற்கு முன்பே இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி இருவரும் பேசுவது நல்லது.
16. சவால்களைச் சமாளிக்கும் விஷயத்தில் ஏன் கணவனும் மனைவியும் ஒன்றுபட்டிருக்க வேண்டும்?
16 மணவாழ்வில் மகிழ்ச்சி ததும்ப கணவனும் மனைவியும் சவால்களைக் கைகோர்த்துச் சமாளிக்க வேண்டும். பிள்ளைகளைக் கண்டிக்கும் விஷயத்திலும், வயதான பெற்றோரைக் கவனிக்கும் விஷயத்திலும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். குடும்பப் பிரச்சினைகள் தங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்த இடங்கொடுக்கக் கூடாது. பைபிளிலுள்ள அறிவுரைகளை அவர்கள் கடைப்பிடித்தால் பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும், எளிதில் தீர்க்க முடியாத பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும், சந்தோஷமாகச் சேர்ந்து வாழ முடியும்.—1 கொ. 7:10, 11.
17. மணமானவர்கள் ஏன் ‘உலகக் காரியங்களுக்காகக் கவலைப்படுகிறார்கள்’?
17 மணவாழ்வைப் பற்றி 1 கொரிந்தியர் 7:32-34-ல் பவுல் இன்னொரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். (வாசியுங்கள்.) மணமானவர்கள் ‘உலகக் காரியங்களுக்காகக் கவலைப்படுகிறார்கள்.’ அதாவது, உணவு, உடை, வீடு போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகக் கவலைப்படுகிறார்கள். ஏன்? மணமாவதற்கு முன்பு ஒரு சகோதரர் ஊழியத்தில் முழுமூச்சோடு ஈடுபட்டிருப்பார். ஆனால் மணமான பின்பு, தன் மனைவிக்காகக்கூட நேரத்தையும் சக்தியையும் செலவிட வேண்டியிருக்கிறது. மனைவியின் விஷயத்திலும் இதுவே உண்மை. பரஸ்பர சந்தோஷத்திற்காக ஒருவருக்கொருவர் இப்படிச் செய்ய வேண்டியிருப்பதை யெகோவா அறிந்திருக்கிறார். ஆம், மணமாவதற்கு முன்பு ஊழியத்தில் ஈடுபட்ட அளவுக்கு இப்போது அவர்களால் ஈடுபட முடியாது என்பதை அவர் அறிந்திருக்கிறார். ஆக, அவர்களுடைய மணவாழ்வு நிலைத்திருப்பதற்கு முன்பு ஊழியத்தில் செலவிட்ட நேரத்திலும் சக்தியிலும் கொஞ்சத்தை இப்போது ஒருவருக்கொருவர் செலவிட வேண்டியிருக்கிறது.
18. பொழுதுபோக்குக்காக நேரம் செலவிடும் விஷயத்தில் மணமானவர்கள் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்?
18 மற்றொரு விஷயத்தையும் கவனியுங்கள். ஊழியத்தில் செலவிட்ட நேரத்திலும் சக்தியிலும் கொஞ்சத்தை இப்போது மணத்துணைக்காகச் செலவிட வேண்டும் என்றால், பொழுதுபோக்குக்காக அல்லது மற்ற காரியங்களுக்காகச் செலவிட்ட நேரத்தையும் சக்தியையும்கூட அப்படித்தானே செய்ய வேண்டும்? கணவன் முன்பு போலவே தன் நண்பர்களோடு சேர்ந்து விளையாட்டிலோ மற்ற பொழுதுபோக்குகளிலோ நிறைய நேரம் செலவிட்டால் மனைவிக்கு எப்படி இருக்கும்? அல்லது, மனைவி அப்படிச் செய்தால் கணவனுக்கு எப்படி இருக்கும்? தனிமை வாட்டும், சந்தோஷம் பறிபோகும், அன்புக்கான ஏக்கம் உண்டாகும். இதைத் தவிர்ப்பதற்கு, கணவனும் மனைவியும் முழுமுயற்சி எடுத்து தங்கள் பந்தத்தைப் பலப்படுத்த வேண்டும்.—எபே. 5:31.
யெகோவா ஒழுக்கத்தை எதிர்பார்க்கிறார்
19, 20. (அ) திருமணம் செய்வதுதானே ஒழுக்கக்கேட்டிலிருந்து பாதுகாப்பைத் தந்துவிடாது என்று ஏன் சொல்லலாம்? (ஆ) மணமானவர்கள் வெகு காலம் பிரிந்திருப்பதில் என்ன ஆபத்து இருக்கிறது?
19 யெகோவாவின் ஊழியர்கள் ஒழுக்க ரீதியில் சுத்தமாயிருக்கத் தீர்மானமாய் இருக்கிறார்கள். ஒழுக்கக்கேட்டைத் தவிர்ப்பதற்காகச் சிலர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், திருமணம் செய்வதுதானே ஒழுக்கக்கேட்டிலிருந்து பாதுகாப்பைத் தந்துவிடாது. பைபிள் காலங்களில், நகரங்களுக்குப் பலமான மதில்கள் இருந்தன. மக்கள் அந்த மதில்களுக்குள் இருந்தவரைதான் பாதுகாப்புப் பெற்றார்கள். அதைவிட்டு வெளியே சென்றபோதோ கொள்ளைக் கூட்டத்தாரிடம் மாட்டிக்கொண்டார்கள், உயிரையும் இழந்தார்கள். அதேபோல், மணமானவர்கள் திருமணம் சம்பந்தமாக யெகோவா தந்திருக்கும் சட்டதிட்டங்களுக்கும் வரம்புகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கும்வரைதான் ஒழுக்கக்கேட்டிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
20 அந்த வரம்புகளைப் பற்றி 1 கொரிந்தியர் 7:2-5-ல் பவுல் விளக்குகிறார். கணவனுடன் தாம்பத்திய உறவு கொள்ளும் உரிமை மனைவிக்கு மட்டுமே உண்டு; அதேபோல் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளும் உரிமை கணவனுக்கு மட்டுமே உண்டு. ஒருவருக்கொருவர் செலுத்த வேண்டிய தாம்பத்திய “கடனைச்” செலுத்த வேண்டும் என்று கடவுள் சொல்கிறார். என்றாலும், சில தம்பதிகள் வேலை விஷயத்திற்காகவோ தனித்தனியாக விடுமுறையைக் கழிப்பதற்காகவோ வெகு காலம் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்திருக்கிறார்கள்; இதனால், தாம்பத்திய “கடனைச்” செலுத்தத் தவறுகிறார்கள். அப்படிப்பட்ட சமயங்களில் ‘உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல்’ பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டுவிடலாம். அப்போது, திருமணத்தைச் சீர்குலைக்க சாத்தான் எடுக்கும் முயற்சி வெற்றி பெற்றுவிடலாம். ஆகவே, அதற்கு இடங்கொடுக்காமல் குடும்பத்தையும் திருமண பந்தத்தையும் கட்டிக்காக்கிற கணவன்மாரை யெகோவா ஆசீர்வதிக்கிறார்.—சங். 37:25.
பைபிள் அறிவுரைகளைப் பின்பற்றுவதன் நன்மைகள்
21. (அ) திருமணம் செய்வதா வேண்டாமா எனத் தீர்மானிப்பது ஏன் மிகவும் கஷ்டம்? (ஆ) 1 கொரிந்தியர் 7-ஆம் அதிகாரத்தில் உள்ள அறிவுரை ஏன் பயனுள்ளது?
21 திருமணம் செய்வதா வேண்டாமா என்பதுதான் தீர்மானங்களிலேயே மிகக் கஷ்டமான தீர்மானம். நாம் எல்லாரும் அபூரணர்கள் என்பதால், எந்தத் தீர்மானத்தை எடுத்தாலும் சரி, பிரச்சினைகள் வரத்தான் செய்யும். யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்ற மக்கள்கூட, சிலசமயம் வாழ்க்கையில் ஏமாற்றங்களைச் சந்திப்பது சகஜம்தான். 1 கொரிந்தியர் 7-ஆம் அதிகாரத்திலுள்ள ஞானமான அறிவுரையை நீங்கள் கடைப்பிடித்தால், பிரச்சினைகளைக் குறைக்கலாம். அதோடு, நீங்கள் மணமானவரோ இல்லையோ, யெகோவாவைப் பிரியப்படுத்தலாம். (1 கொரிந்தியர் 7:37, 38-ஐ வாசியுங்கள்.) அவருடைய பிரியத்தைச் சம்பாதிப்பதுதான் வாழ்க்கையில் கிடைக்கும் மிகப் பெரிய ஆசீர்வாதம். இந்த உலகில் மட்டுமல்ல புதிய உலகிலும் அந்த ஆசீர்வாதத்தை நாம் அனுபவிப்போம். இன்று ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள எந்தப் பிரச்சினைகளும் அங்கு இருக்காது.
[அடிக்குறிப்பு]
a குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம், அதிகாரம் 2, பாராக்கள் 16-19-ஐக் காண்க.
பதிலளிக்க முடியுமா?
• திருமணம் செய்துகொள்ளச் சொல்லி ஏன் யாரும் யாரையும் வற்புறுத்தக் கூடாது?
• மணமாகாதவர்கள் எவ்வாறு நேரத்தைச் சிறந்த விதத்தில் பயன்படுத்தலாம்?
• மணமுடிக்கத் தீர்மானித்திருப்பவர்கள் எவ்வாறு சவால்களைச் சந்திக்கத் தயாராகலாம்?
• திருமணம் செய்வதுதானே ஒழுக்கக்கேட்டிலிருந்து பாதுகாப்பைத் தந்துவிடாது என்று ஏன் சொல்லலாம்?
[பக்கம் 14-ன் படம்]
மணமாகாதவர்கள் கடவுளுடைய ஊழியத்தில் அதிகமாக ஈடுபடும்போது சந்தோஷத்தைப் பெறுகிறார்கள்
[பக்கம் 16-ன் படம்]
திருமணத்திற்குப் பிறகு சிலர் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம்?