அவிசுவாசிகளுடன் உங்களைப் பிணைத்துக்கொள்ளாதீர்கள்
“அன்னிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; . . . அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?”—2 கொரிந்தியர் 6:14, 15.
1. எப்படி ஒரு சகோதரி, அவிசுவாசி ஒருவரை மணம்செய்ய நேர்ந்தது?
சில வருடங்களுக்கு முன்பு, மத்திய மேற்கு ஐக்கிய மாகாணங்களிலிருந்த யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் தன் கணவனை ஒரு கார் விபத்தில் இழந்தார். “முதலில் நான் மனமொடிந்து போனேன்” என்று அவள் நினைவுகூருகிறாள். “ஆனாலும் யெகோவாவுக்கு நான் செய்யும் சேவையை இது தடை செய்யாதிருக்கத் தீர்மானித்தேன். இருப்பினும் ஓரிரு ஆண்டுகளுக்குப் பின் சபையிலுள்ள ஜோடிகள் அருகில், நான் வேண்டாதவளைப் போல உணர ஆரம்பித்தேன். என் மகளும் நானும் எல்லாச் சமயங்களிலும் குடும்ப உல்லாச பயணங்களுக்கு அழைக்கப்படுவதில்லை. கிறிஸ்தவ தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்பு வெளிக்காட்டுவதை நான் கவனிக்கும்போது, நான் மேலும் விலக்கி தள்ளப்படுவது போல் உணர்ந்தேன். ஆவிக்குரிய வகையில் நான் பலவீனம் அடைவதை ஒருவரும் கவனியாதது போலிருந்தது. ஆகையால், நான் வேலைபார்க்குமிடத்தில் எனக்குத் தெரிந்த உலகப்பிரகாரமான மனிதன் ஒருவன் என்னை வெளியே விருந்துண்ண அழைத்தபோது, நான் அவனுடன் சென்றேன். நான் அதை அறிந்துணர்வதற்கு முன்னமே அவனோடு காதல் கொண்டேன். கடைசியில், என் பலவீனத்தாலும், என் தனிமை என்னை மேற்கொண்டதாலும் அவனைத் திருமணம் செய்ய நான் சம்மதித்தேன்.”
2, விவாகம் செய்து கொள்வதற்கான ஆசை ஏன் இயற்கையானது? மேலும், விவாகம் எதை ஏற்படுத்துவதற்காக உருவமைக்கப்பட்டது?
2 ஆம், ஒரு துணையோடு வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை மிகவும் பலமானதாக இருக்கலாம். மேலும் இது இயல்பானதும்கூட. யெகோவா, தாமே கூறியதுபோல்: “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை (“தேவையைப் பூர்த்தி செய்பவர்” அவனுக்கு பொருத்தமான ஒன்று) அவனுக்கு உண்டாக்குவேன்.” (ஆதியாகமம் 2:18, NW, ஒத்துவாக்கிய பைபிள், அடிக்குறிப்பு) ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே நெருங்கிய நிலையான கூட்டுறவை ஏற்படுத்துவதற்கே விவாகம் உருவமைக்கப்பட்டது. “இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான்” என்பதாக ஆதாமல்ல, ஆனால் யெகோவாவே கூறினார். (ஆதியாகமம் 2:22-24, மத்தேயு 19:4-6-ஐ ஒப்பிட்டு பார்க்கவும்.) ஒருவேளை, உங்கள் இருதயம் இப்படிப்பட்ட தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு துணையை நாடலாம்.
3 ஆனாலும் வேதாகமம் அவிசுவாசிகளுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு எதிராக எச்சரிக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் கூறியதுபோல்: “அந்நிய நுகத்திலே [“சமநிலையற்ற கூட்டில் இணைத்து பூட்டப்படாதிருப்பீர்களாக” எருசலேம் பைபிள்] அவிசுவாசிகளுடன்a பிணைக்கப்படாதிருப்பீர்களாக . . . அவிசுவாசியுடனே விசுவாசிக்கு பங்கேது?”b (2 கொரிந்தியர் 6:14, 15) உழுவதற்கு, எருதையும் கழுதையையும் நுகத்தடியால் இணைப்பதை தடையிட்ட மோசேயின் பிரமாணத்தை பவுல் மனதில் வைத்திருக்கலாம். (உபாகமம் 22:10) கழுதை அளவில் சிறியதாகவும், அவ்வளவு பலமாகவும் இல்லாதலால், இப்படிப்பட்ட சமமற்ற இணைப்பினால் பாதிக்கப்படும். விவாகம் கணவனையும், மனைவியையும் ஒன்றாக இணைக்கும் நுகத்தடியை போலிருப்பதினால், ஓர் அவிசுவாசியை ஒரு கிறிஸ்தவர் திருமணம் செய்வது சமமற்ற ஓர் இணைப்பை விளைவிக்கும். (மத்தேயு 19:6) இப்படிப்பட்ட இணைப்பு, ஒரு விவாகத்திற்கு கூடுதலான அழுத்தத்தையும் அமுக்கத்தையும் கொண்டுவரும்.—1 கொரிந்தியர் 7:28-ஐ ஒப்பிட்டு பார்க்கவும்.
3, 4. (எ) அவிசுவாசிகளுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு எதிராக பைபிள் எப்படி எச்சரிக்கிறது? (பி) சமநிலையற்ற பிணைப்பைப்பற்றிய பவுலின் ஆலோசனை எந்த வகையில் விவாகத்திற்கு பொருத்தப்படலாம்? (சி) “அவிசுவாசிகள்” என்ற பதத்தை கொரிந்திய கிறிஸ்தவர்கள் எவ்வாறு புரிந்துகொண்டிருப்பார்கள்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
4 இருப்பினும், ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட அனுபவம் விளக்குவதுபோல், சில கிறிஸ்தவர்கள் அவிசுவாசிகளைத் திருமணம் செய்ய தெரிந்துகொள்கின்றனர். “கர்த்தருக்குட்பட்டவர்களை” மட்டுமே திருமணம் செய்ய சிலருக்கு ஏன் கடினமாயிருக்கிறது?—1 கொரிந்தியர் 7:39.
சிலர் ஏன் வேறு இடங்களில் பார்க்கின்றனர்
5. ஓர் அவிசுவாசியுடன் ஏன் சிலர் காதல் உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்பதை விளக்குங்கள்.
5 அவர்கள் கடவுளுடைய ஆலோசனையை புறக்கணிக்க வேண்டுமென்றே கிளம்புவதில்லை. திருமணம் செய்ய விரும்புகின்ற ஒரு கிறிஸ்தவ சகோதரியின் நிலைமையை சிந்தித்து பாருங்கள். அவள் ஒரு கிறிஸ்தவ கணவனை நாடலாம், ஆனால் அவளது விசுவாசிக்கும் நண்பர்களின் மத்தியில் பல தகுதியான சகோதரர்கள் இருப்பதாக தெரியவில்லை. அவள், தன் வயதை உணருகிறாள். அவள் ஒரு குடும்பத்தைக் கொண்டிருக்க விரும்புகிறாள். தனிமையில் வயதாகிவிடுவோம் என்ற பயமும், நேசிக்கப்பட விரும்பும் தேவையும் அவளை பலவீனமாக்குகிறது. அப்படியிருக்க, உலக பிரகாரமான மனிதன் ஒருவன் அவள் மீது அக்கறை காட்டினால், அதை எதிர்ப்பதற்கு அவளுக்குக் கடினமாக இருக்கும். அவன் அன்பானவனாகவும், அனுதாபமுள்ளவனாகவும் தோன்றலாம். அவன் புகைபிடிக்காமலும், கெட்ட வார்த்தைகளை உபயோகிக்காமலும் இருக்கலாம். பிறகு இப்படியான நியாய விளக்கங்கள் வரும்: ‘ஏன், எனக்குத் தெரிந்த பல சகோதரர்களைவிட அவர் நல்லவராக இருக்கிறாரே!’ ‘படிப்பில் அக்கறை காட்டுகிறார்.’ ‘ஒரு சகோதரி அவிசுவாசி ஒருவரை மணந்து, அவர் முடிவில் விசுவாசியாக மாறியது போன்ற சம்பங்கள் எனக்குத் தெரியும்.’ ‘சில கிறிஸ்தவ திருமணங்களே வெற்றிகரமாக முடிவதில்லை!’—எரேமியா 17:9-ஐ பார்க்கவும்.
6, 7. (எ) ஒரு தனி சகோதரி, அவள் ஏமாற்றத்தை எப்படி விளக்குகிறாள்? (பி) என்ன கேள்வி நம் கவனத்தைப் பெற வேண்டும்?
6 ஆம், மணம்செய்ய விரும்புகிற தனி கிறிஸ்தவருக்கு இது மிகவும் ஏமாற்றமாக இருக்கலாம். சிலர் மிகவும் நம்பிக்கையற்றவர்களாகவும்கூட உணருகிறார்கள். தான் இருக்கும் இடத்திலுள்ள நிலைமையை விவரிக்கும்பொழுது ஒரு தனி சகோதரி கூறுகிறாள்: “தகுதிவாய்ந்த சகோதரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் விவாகம் ஆகாத சகோதரிகளின் எண்ணிக்கையோ மிகவும் பெரியதாக இருக்கிறது. தன் இளமை விரைவாக மறைவதைப் பார்க்கும் சகோதரிக்கு, திருமணமே செய்யாமல் இருப்பது அல்லது அவளுக்குக் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே திருமணம் செய்வது என்ற தேர்வுகளே உள்ளன.”
7 இருப்பினும், பைபிளின் ஆலோசனை தெளிவாக இருக்கிறது: ‘அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக.’ (2 கொரிந்தியர் 6:14) இந்தத் தெய்வீக எச்சரிக்கை கடுமையாகவும், நியாயமற்றதாகவும் இருக்கிறதா?
கடவுளின் அன்பான அக்கறையின் உணர்ச்சி வெளிப்பாடு
8. நம்முடைய சிறந்த நலனை அவர் இருதயத்தில் கொண்டிருக்கிறார் என்பதை யெகோவா எப்படி வெளிக்காட்டி இருக்கிறார்?
8 நம்முடைய நிரந்தர நலனைக் குறித்து யெகோவா ஆழ்ந்த அக்கறையுடையவராய் இருக்கிறார். தம்மை அதிகமாக பாதித்தபோதிலும், தன் மகனையே “அநேகரை மீட்கும் பொருளாக” அவர் தரவில்லையா? (மத்தேயு 20:28) “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதிக்கிறவர்” அவர் இல்லையா? (ஏசாயா 48:17) “உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு இடம் கொடுக்க மாட்டார்” என்று அவர் வாக்குறுதி கொடுக்கவில்லையா? (1 கொரிந்தியர் 10:13) நியாயமாகவே அப்படியானால், அவிசுவாசிகளுடன் நாம் பிணைக்கப்பட வேண்டாம் என்று அவர் நம்மிடம் கூறும்பொழுது, நம்முடைய சிறந்த அக்கறைகளையே அவர் மனதில் வைத்திருக்க வேண்டும்! நம் பேரிலுள்ள அவருடைய அன்பான அக்கறையின் உணர்ச்சி வெளிப்பாடாக இந்த எச்சரிக்கை எவ்வாறு அமைந்துள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
9. (எ) ஓர் அவிசுவாசியுடன் நெருங்கிய உறவை ஒரு கிறிஸ்தவன் ஏற்படுத்திக்கொள்வதற்கு எதிராக பவுல் என்ன எச்சரிக்கையை கொடுக்கிறார்? (பி) “இசைவு” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் அர்த்தம் என்ன? கிறிஸ்தவன் ஒருவன் அவிசுவாசியுடன் தன்னைத் தானே பிணைத்துக்கொள்ளும் போது உருவாகும் பிரச்னையை அது எவ்வாறு விளக்குகிறது?
9 கணவனும் மனைவியும் “ஒரே மாமிசமாகி” மனிதர்கள் இடையே விவாகம் மிகவும் நெருங்கிய ஓர் உறவை ஏற்படுத்த வேண்டும் என்பது சிருஷ்டிகரின் நோக்கமாகும். (ஆதியாகமம் 2:24) இப்படிப்பட்ட ஒரு நெருங்கிய உறவை, அவிசுவாசியுடன் ஒரு கிறிஸ்தவர் ஏற்படுத்துவது ஞானமாகுமா? ஊடுருவும் ஒரு கேள்வித் தொடரை எழுப்புவதன் மூலம் பவுல் பதிலளிக்கிறார்; இது ஒவ்வொன்றிற்கும் ‘இல்லை’ என்பதே பதிலாகும்: “நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும், பேலியாளுக்கும் [சாத்தான்] இசைவேது? (கிரேக்கில் ஸிம்போனெஸிஸ்) அவிசுவாசியுடனே விசுவாசிக்கு பங்கேது?” (2 கொரிந்தியர் 6:14, 15) ஸிம்போனெஸிஸ் என்ற கிரேக்க வார்த்தையின் சொல்லர்த்தம் “ஒன்றோடொன்று சப்தமிடுதல்” என்பதாகும். (‘ஸிம்’ என்பதற்கு ‘உடன்’ என்றும் ‘போன்’ என்பதற்கு ‘சப்தம்’ என்பதாகும்.) இது சங்கீதக் கருவிகள் ஏற்படுத்தும் ஒத்திசைவைக் குறிக்கிறது. கிறிஸ்துவுக்கும், சாத்தானுக்கும் நிச்சயமாக ஒத்திசைவு இல்லை. அதுபோல, சமமற்ற ஓர் இணைப்பில், கணவனும் மனைவியும் ஒத்திசைந்திருப்பது கடினமாகும். தம்பதிகள் இன்னிசையை எழுப்புவதற்கு பதிலாக, முரண்பாடான ஒலிகளை எழுப்பும் இரண்டு ஒத்திசைவில்லாத இசைக்கருவிகளை போல் இருப்பார்கள்.
10. ஒரு சந்தோஷமான விவாகத்தின் தேவையான அம்சங்கள் யாவை? மேலும் ஒரு சமநிலையான பிணைப்பு உள்ளபோது என்ன நன்மைகள் உள்ளன?
10 அப்படியிருக்க ஆவிக்குரிய மனிதன் எவ்வாறு சரீரப்பிரகாரமான மனுஷனோடு முழுமையான ஒத்திசைவை அனுபவிக்க முடியும்? (1 கொரிந்தியர் 2:14) ஒரு சந்தோஷமான விவாகத்திற்கு தேவையான அம்சங்கள் பொதுவான நம்பிக்கைகளும், கொள்கைகளும் இலக்குகளும் ஆகும். சிருஷ்டிகரிடம் இருவரும் கொண்டிருக்கும் பக்தி, ஒரு விவாகத்திற்கு எதைக் காட்டிலும் அதிக உறுதியைத் தருகிறது. சமமான ஓர் இணைப்புள்ளபோது வணக்கத்தில் கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொள்ளலாம். தங்கள் வேறுபாடுகளைத் தீர்க்க இருவரும் வேதாகமத்தைப் பார்க்கலாம். நமது விவாக துணையுடன் எவ்வளவு நெருங்கிய உறவைக் கொண்டு இருக்க முடியுமோ அதை நாம் அனுபவிப்பதற்காக யெகோவா நம்மை அவிசுவாசிகளுடன் பிணைக்கப்பட வேண்டாம் என்று சொல்லுகிறார் என்பது தெளிவாகவுள்ளதல்லவா?
11. வணக்கத்தாரல்லாதவர்களுடன் விவாக கூட்டுறவுகள் செய்வது ஏன் இஸ்ரவேலில் தடைசெய்யப்பட்டிருந்தன? மேலும், என்ன யோசனையைத் தூண்டும் கேள்வி எழுப்பப்படுகிறது?
11 ஒரு கிறிஸ்தவன் அவிசுவாசியுடன் தன்னை இணைத்துக்கொள்ளும்போது ஏற்படும் துன்பந்தரும் விளைவுகளை, வேதாகம எச்சரிக்கையை கவனித்து கீழ்ப்படியும்போது தவிர்க்கலாம். உதாரணமாக, அவிசுவாசி, கிறிஸ்தவ துணையை யெகோவாவை சேவிப்பதிலிருந்து திருப்பக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது. பூர்வீக இஸ்ரவேலுக்கு, யெகோவாவின் எச்சரிக்கையை கவனியுங்கள். வணக்கத்தாரல்லாதவருடன் விவாக தொடர்புகள் தடை செய்யப்பட்டன. ஏன்? “என்னைப் பின்பற்றாமல் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலக்க பண்ணுவார்கள்” என்று யெகோவா எச்சரித்தார். (உபாகமம் 7:3, 4) அவிசுவாசியான துணையிடமிருந்து வரும் எதிர்ப்பை சந்திக்கும்போது அவருடன் இணங்கி சுலபமான பாதையில் செல்லும் ஒரு மனச்சாய்வு ஏற்படலாம். “இது எனக்கு நேரிடாது!” என்று நினைப்பது சுலபமாகும். ஆனால் சாலொமோனின் ஞானத்தையுடைய ஒரு மனிதனுக்கு அது நேரிட்டது. இது உங்களுக்கும் நேரிடலாம் அல்லவா?—1 இராஜாக்கள் 11:1-6; 1 இராஜாக்கள் 4:29, 30 ஒப்பிட்டு பார்க்கவும்.
12. புறமதத்தினருடன் மணம் செய்வதைத் தடுக்கும் கடவுளின் சட்டம் எப்படி இஸ்ரவேலருக்குப் பாதுகாப்பாக அமைந்தது? விளக்குக.
12 உண்மை வணக்கத்திலிருந்து விசுவாசி திருப்பப்படவில்லையென்றாலும், மதத்தால் பிளவுப்பட்ட வீட்டுடன் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் அழுத்தங்களும் இருக்கின்றன. இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட கடவுளின் சட்டத்தை மீண்டும் கவனியுங்கள். கானானிய மனிதனை ஓர் இஸ்ரவேல் பெண் திருமணம் செய்ய சம்மதித்தாள் என்று எடுத்துக்கொள்ளலாம். கானான் தேசத்தில் பரவியிருந்த பால் சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்கள் அவ்வளவு மோசமாவையாயிருக்க, அவளுடைய தேவனின் சட்டங்களுக்கு அவனுக்கு என்ன மதிப்பிருக்கும்? உதாரணமாக, மோசேயின் பிரமாணத்தில்c தேவைப்பட்டதுபோல மாதவிடாய் சமயம் பாலுறவு கொள்வதிலிருந்து மனப்பூர்வமாக விலகியிருப்பானா? (லேவியராகமம் 18:19; 20:18; லேவியராகமம் 18:27-ஐ ஒப்பிட்டு பார்க்கவும்.) கானானியப் பெண்ணை மணந்த ஓர் இஸ்ரவேல் மனிதனுடைய காரியத்தில், காலத்திற்கேற்ற பண்டிகைகளுக்கு வருடத்தில் மூன்று முறை அவன் எருசலேமுக்குப் பயணம் செய்தபோது அவள் எந்த அளவுக்கு அவனுடைய முயற்சிகளை ஆதரிப்பாள்? (உபாகமம் 16:16) தெளிவாகவே, இப்படிப்பட்ட விவாகங்களை தடை செய்யும் கடவுளின் பிரமாணம் இஸ்ரவேலருக்கு ஒரு பாதுகாப்பாக அமைந்தது.
13. (எ) உலகப்பிரகாரமான மனிதனுக்கு ஏன் பைபிள் அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்ட கிறிஸ்தவ மனசாட்சி இல்லை? (பி) என்ன அழுத்தங்களையும், பிரச்னைகளையும் சிலர் மதத்தால் பிளவுப்பட்ட வீடுகளில் எதிர்ப்பட்டிருக்கின்றனர்?
13 இன்றைய நாளை பற்றி என்ன? உலக மக்களின் ஒழுக்க தாரதரங்கள் பைபிளில் உள்ளவற்றிற்கு மாறாக மிகவும் மோசமானதாக இருக்கின்றன. உலக மக்கள் எவ்வளவு ஒழுக்கமுள்ளவராக இருப்பது போல் தோன்றினாலும், அவர்களுக்கு பைபிள் அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்ட கிறிஸ்தவ மனசாட்சி இல்லை. தங்கள் “மனம் புதிதாகவும்”, “பழைய மனுஷனை களையவும்” அவர்கள் பல வருடங்களாக கடவுளுடைய வார்த்தையைப் படிக்கவில்லை. (ரோமர் 12:2; கொலோசெயர் 3:9) ஆகையால், அவிசுவாசியுடன் தன்னையே இணைத்துக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவர் அதிக மன வேதனைக்கும், துயரத்துக்கும் தன்னை உள்ளாக்குகிறார். உலக பண்டிகைகளை கொண்டாடவும், இயற்கைக்கு முரணான பாலுறவு சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்களில் பங்குகொள்ளவும் அழுத்தங்களை அடிக்கடி சிலர் எதிர்ப்படலாம். தனிமையைப் பற்றியும்கூட சிலர் முறையிடலாம். ஒரு சகோதரி எழுதினாள்: “யெகோவா தேவனை நேசிக்காத ஒருவரை விவாகம் செய்திருக்கும்பொழுது நீங்கள் உணரும் தனிமையானதுதான் கற்பனை செய்யக்கூடிய தனிமைகளிலேயே மிகவும் மோசமானது. உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காரியமாகிய சத்தியத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு உங்களுக்கு ஒருவரும் இல்லாததை கவனியுங்கள்.”
14. (எ) பிளவுப்பட்ட வீட்டில் “யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” பிள்ளைகளை வளர்ப்பது ஏன் கடினமாக உள்ளது? (பி) பிளவுப்பட்ட வீட்டிலுள்ள பிள்ளைகள் மீது என்ன பாதிப்பு ஏற்படலாம்?
14 ஒரு பிளவுப்பட்ட வீட்டில் பிள்ளைகளை “யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” வளர்ப்பது மிகவும் கடினமாக இருக்கக்கூடும். (எபேசியர் 6:4) உதாரணமாக, பிள்ளைகள் வெளி ஊழியத்தில் பங்குகொள்வதையும் கூட்டங்களுக்கு வருவதையும், அந்த அவிசுவாசி மனப்பூர்வமாக அனுமதிப்பாரா? முடிவில் அடிக்கடி பிள்ளைகள் அவர்களது பாச உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுகிறார்கள்—அவர்கள் பெற்றோர் இருவரையும் நேசிக்கிறார்கள், ஆனால் ஒரு பெற்றோர் மட்டுமே யெகோவாவை நேசிக்கிறார். அவிசுவாசி ஒருவரை மணந்த ஒரு சகோதரி கூறினாள்: “என்னுடைய 20 வருட விவாக வாழ்க்கையில் நான் கடுந்துயருக்குள்ளானேன். என் மகன்கள் அதிக குழப்பத்திலும் உணர்ச்சிவசப்பட்ட நிலைக்குலைவிலும் வளர்ந்தார்கள்; இப்போது இந்த உலகத்தின் ஒரு பாகமாக இருக்கிறார்கள். என் மகள், அவளுடைய தந்தையின் மேற்பார்வை உரிமையின் காரணமாக என்னிடமிருந்து பிரிந்திருக்க வேண்டியது குறித்து அடிக்கடி மன அமைதி இழக்கிறாள். இந்த எல்லாப் பிரச்னைகளும் இருப்பதற்கு காரணம், நான் 18 வயதில் யெகோவாவின் நியமங்களில் ஒன்றைப் புறக்கணிக்க முடிவெடுத்தது.” அந்த நியமம் என்ன? அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருங்கள்!
15. அவிசுவாசிகளுடன் நம்மைநாமே பிணைக்க வேண்டாம் என்று யெகோவா ஏன் நமக்கு ஆலோசனை கூறுகிறார்?
15 தெளிவாகவே, வாழ்க்கையிலிருந்து நாம் அதிகத்தைப் பெறுவதை யெகோவா விரும்புகிறார், அவர் நம்மிடமிருந்து கேட்பது, அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாமலிருப்பது உள்பட, நம்முடைய நன்மைக்கானது. (உபாகமம் 10:12, 13) ஓர் அவிசுவாசியை மணப்பது, வேதாகம அறிவுரையையும், நடைமுறை ஞானத்தையும், மற்றவருக்கு அடிக்கடி உண்டாகும் துயரமிக்க அனுபவங்களையும் புறக்கணிப்பதாகும்.
பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்
16, 17. (எ) நாம் கவனமாக இல்லாவிட்டால், எப்படி உணர்ச்சி வேகமானது நன்கு யோசிப்பதில் குறுக்கிடலாம்? (பி) ஒரு கிறிஸ்தவர் அவிசுவாசி ஒருவரை மணந்து, இப்போது அவ்விருவருமே யெகோவாவை சேவித்துவரும் விதிவிலக்கான சூழ்நிலைமைகளினால் கடவுளுடைய ஆலோசனைகள் புறக்கணிக்கப்படலாமா? விளக்குக.
16 என்றபோதிலும் நாம் கவனமாக இல்லாவிட்டால், உணர்ச்சிவேகம் நன்கு யோசிப்பதில் குறுக்கிடலாம். நம்முடைய வழக்கில் ஒரு விதிவிலக்கை செய்யலாமென்று நாம் உணர முற்படலாம். மிகவும் பொதுவாக கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றை கவனியுங்கள்.
17 ஒரு சகோதரனோ, சகோதரியோ ஓர் அவிசுவாசியை மணந்து, அந்த இருவரும் இப்போது யெகோவாவை சேவிக்கும் சூழ்நிலைமைகளைப் பற்றி என்ன? ஆகிலும் யெகோவாவின் நியமங்கள் மீறப்பட்டன. முடிவானது பின்பற்றப்பட்ட வழிமுறையை சரியென்று காட்டுகிறதா? அவருடைய ஆலோசனையை புறக்கணிப்பவரைப் பற்றிய தேவனின் நோக்குநிலையை சித்தரிக்கும் வகையில் பாபிலோனிய சிறைக்காப்பிலிருந்து திரும்பிய யூதர்களின் வழக்கு உள்ளது. சிலர் புறமத மனைவிகளை எடுத்துக்கொண்டபோது பைபிள் எழுத்தாளர்களாகிய எஸ்றாவும் நெகேமியாவும் அவர் செய்கைகளைக் கண்டனம் செய்வதை எந்த அளவிலும் குறைக்கவில்லை. அந்த யூதர்கள் “பாவஞ் செய்தார்கள்”, “பெரிய பொல்லாப்பைச் செய்தார்கள்” மேலும் “குற்றத்திற்குள்ளானார்கள்.” (எஸ்றா 10:10-14; நெகேமியா 13:27) கவனிப்பதற்கு வேறு சில காரியங்கள்: நாம் கடவுளுடைய ஆலோசனைகளை புறக்கணிக்கும்போது நம் மனசாட்சியில் தழும்புண்டாகும் வகையில் நாம் நம்மை நாமே ஆவிக்குரிய வகையில் காயப்படுத்திக்கொள்வோம். முடிவில் விசுவாசியாக மாறிய அவிசுவாசி கணவனை கொண்டிருந்த ஒரு சகோதரி கூறுகிறாள்: “மனதில் ஏற்பட்ட வடுக்களை நான் இன்னமும் சமாளிக்கிறேன். மற்றவர்கள் எங்களைச் சுட்டிக்காட்டி ‘ஆனால் அவர்களுடைய விவாகம் வெற்றியில் முடிவடைந்ததே’ என்று கூறும்போது, என் மன வேதனையை என்னால் உரைக்க முடியவில்லை.”
18. முழுக்காட்டப்படாத ஒருவரிடம் நீங்கள் கவரப்பட்டால் ஞானத்தின் போக்கு என்னவாயிருக்கும்? மேலும், அதன் மூலம் நீங்கள் எதை வெளிக்காட்டுவீர்கள்?
18 பைபிளை படித்துவரும், கூட்டங்களுக்கு வருகின்ற, ஆனால் இன்னும் முழுக்காட்டப்படாத ஒருவனையோ அல்லது ஒருத்தியையோ கண்டு நீங்கள் கவரப்படுவீர்களென்றால் என்ன? பைபிள் சத்தியத்தில் எவரேனும் ஒருவர் அக்கறை காண்பிக்கும்பொழுது நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் கேள்வி என்னவென்றால்: நீங்கள் உங்கள் மனச்சாய்வின்படி நடக்கலாமா? வெளிப்படையாகவே, உங்களது நண்பர் முழுக்காட்டப்பட்ட பிறகு, மேலும் கடவுளின் ஆவியின் கனிகளை பிரதிபலிப்பதில் முன்னேற்றமடைந்த பிறகு மட்டுமே எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகளில் அவரோடு செல்வது ஞானத்தின் போக்காகும். (கலாத்தியர் 5:22, 23) இப்படிப்பட்ட ஆலோசனையை செயல்படுத்துவது எளிதாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் இவ்வாறு செய்யும்போது பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பதில் உங்கள் பக்தியை வெளிக்காட்டுகிறீர்கள்; விவாகத்தில் உண்மையான சந்தோஷத்தைப் பெற இது ஒரு நல்ல அஸ்திவாரத்தைப் போடும். உங்கள் நண்பர் உண்மையிலேயே உங்கள் மீது அக்கறையுள்ளவராக இருந்தால், மெய்யாகவே யெகோவாவை நேசித்து வருகிறவரானால், சந்தேகமில்லாமல் அவன் (அல்லது அவள்) விவாக நோக்குடன் உங்களோடு பழகுவதற்கு முன்பு, நீங்கள் இருவருமே “கர்த்தருக்குள்” வரும்வரை—ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படும் வரை காத்திருக்க மனதுள்ளவனாக இருப்பான். காலம் கடந்துபோவதினால், உண்மையான அன்பு குறைந்துவிடுவதில்லை என்பதையும்கூட நினைவு கூருங்கள்.
19. சகவிசுவாசிகளிலிருந்து ஒரு விவாகத்துணையை தேர்ந்தெடுப்பது உங்களுக்குக் கடினமாக இருந்தால் நீங்கள் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்?
19 சக விசுவாசிகளிலிருந்து ஓர் ஏற்ற விவாக துணையை கண்டுபிடிப்பது உங்களுக்குக் கடினமாக இருந்தால், அப்போதென்ன? “நான் 26 வயதானவள், தனியாகவும், உண்மையிலேயே தனிமையிலேயும் இருக்கிறேன்” என்று ஒரு சகோதரி கூறினாள். உண்மை, தனியாக இருப்பது உங்களுக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் விவாகத்தில் சமநிலையில்லாமல் பிணைக்கப்படுவதால் விளையும் பிரச்னைகள் இன்னும் அதிக கடினமானவையாக இருக்கலாம்! கடவுளுடைய ஆலோசனைக்குக் கீழ்ப்படிவது விசுவாசம், தன்னடக்கம் மற்றும் பொறுமையை தேவைப்படுத்தலாம். ஆனால் உங்களுக்கு எது சிறந்தது என்பதை யெகோவா அறிகிறார் மற்றும் விரும்புகிறார் என்று நிச்சயமாக இருங்கள். (1 பேதுரு 5:6, 7) அதை ஜெபத்திற்கான ஒரு விஷயமாக வைத்து, யெகோவாவின் மீது சார்ந்து காத்திருங்கள். (சங்கீதம் 55:22) இந்தக் காரிய ஒழுங்கில், எவருக்குமே ஒரு பரிபூரணமான திருப்தியளிக்கும் வாழ்க்கை இல்லை. உங்களைக் குறித்ததில் உங்கள் இருதயம் ஒரு துணைக்காக ஏங்கலாம். மற்றவர்களோ பிரச்னைகளில் அவர்களுக்குரிய பங்கை கொண்டிருக்கிறார்கள்; இதில் சில, இந்த ஒழுங்குமுறையில் குணப்படுத்த முடியாதவை. வரப்போகிற புதிய உலகத்தில் மட்டுமே “சகல பிராணிகளின் வாஞ்சையும்” முழுவதுமாக திருப்தி செய்யப்படும்.—சங்கீதம் 145:16.
20. ஒரு தனி சகோதரி எப்படி அவளுடைய தீர்மானத்தைப் பற்றிச் சொல்லுகிறாள்? அதே விதமாக தீர்மானிப்பதில், நீங்கள் என்ன திருப்தியை அடையலாம்?
20 இதற்கிடையில், ஓர் அவிசுவாசியுடன் நீங்கள் உங்களை பிணைத்துக்கொள்ளாமலிருக்க உறுதியாயிருங்கள். 36 வயதான, தனியே உள்ள சகோதரி ஒருத்தி, அவள் தீர்மானத்தைக் குறித்து இவ்வாறு சொன்னாள்: “நான் ஒரு விவாக துணைக்காக ஒவ்வொரு நாளும் யெகோவாவிடன் ஜெபம் செய்கிறேன். யெகோவாவினுடைய அமைப்பிற்கு வெளியே பார்க்க எனக்கு விருப்பம் இல்லை, ஆனாலும் அந்தத் தீய கவர்ச்சிகள் இன்னும் இருக்கின்றன. இந்த இடை நேரத்தில், ஓர் ஆவிக்குரிய மனிதன் தேடுகிற ஆவிக்குரிய பெண்ணாக நான் இருப்பதற்கு, ஓர் ஆளை முன்னேற்றுவிக்கும் பண்புகளை வளர்க்க திட்டமிடுகிறேன்.” நீங்களும் அவ்வாறு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், தெய்வீக நீதியின் தேவனுக்கு உங்கள் உண்மைத் தன்மையை நிரூபிப்பதில் வரும் திருப்தியை நீங்கள் அடையலாம்.—சங்கீதம் 37:27, 28. (w89 11⁄1)
உங்களால் விளக்கமுடியுமா?
◻ அவிசுவாசிகளுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு எதிராக பைபிள் எவ்வாறு எச்சரிக்கிறது?
◻ ஒரு விவாக துணைக்காக சில ஒப்புகொடுத்த கிறிஸ்தவர்கள் ஏன் சபைக்கு வெளியே பார்க்கிறார்கள்?
◻ சமநிலையற்ற பிணைப்பைப்பற்றிய யெகோவாவின் எச்சரிக்கை, எப்படி உண்மையிலேயே நம் மீது அவர் கொண்டிருக்கிற அன்பான அக்கறையின் உணர்ச்சி வெளிப்பாடாக உள்ளது?
◻ ஒரு துணையை தேடுவதைப்பற்றி, பொதுவாக, என்ன கேள்விகள் கேட்கப்படுகின்றன? அதற்கு
[அடிக்குறிப்புகள்]
a 1 கொரிந்தியர் 14:22-ல் பவுல் “விசுவாசிகள்” அல்லது முழுக்காட்டப்பட்டவர்கள் என்பதற்கு எதிரான பதமாகிய “அவிசுவாசிகள்” என்பதை உபயோகித்தார். ஆகவே, கொரிந்தியர்கள், “அவிசுவாசிகள்” என்ற வார்த்தை முழுக்காட்டப்படாத ஆட்களைக் குறிப்பதாக புரிந்துகொள்வார்கள்.—அப்போஸ்தலர் 8:13; 16:31-34; 18:8-ஐப் பாருங்கள்.
b “விரிவாக்கப்பட்ட அமைப்பில் அந்த நியமத்தை இப்படி கூறலாம்: ‘கிறிஸ்தவ தராதரங்களை விட்டுகொடுப்பதற்கு வழிநடத்தும் அல்லது கிறிஸ்தவ சாட்சியின் கொள்கை மாறாத் தன்மைக்கு கேடு விளைவிக்கக்கூடிய, தற்காலிக அல்லது நிலையான உறவை அவிசுவாசிகளுடன் ஏற்படுத்த வேண்டாம். மேலும், ஏன் அப்படிப்பட்ட பிரிந்திருத்தல் வேண்டும்? ஏனென்றால் அவிசுவாசி கிறிஸ்தவ தராதரங்களில், கருணைகளில் அல்லது இலக்குகளில் பங்கு கொள்வதில்லை.’”—The Expositor’s Bible Commentary, ஏடு 10, பக்கம் 359.
c செப்டம்பர் 15, 1972 ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 575-6 பார்க்கவும்.