முன்னேறுகிற, வளைந்துகொடுக்கிற ஊழியர்களாய் ஆகுதல்
“எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.”—1 கொரிந்தியர் 9:22.
புலமை வாய்ந்த அறிஞர்களிடமும் சாதாரண கூடாரத் தொழிலாளிகளிடமும் எந்தத் தயக்கமும் இல்லாமல் அவர் பேசினார். ரோம உயர்குடியினரிடமும் பிரிகியா நாட்டு விவசாயிகளிடமும் இணங்க வைக்கும் விதத்தில் பேசினார். பரந்த மனமுள்ள கிரேக்கர்களையும் பழமைவாதிகளான யூதர்களையும் உந்துவிக்கும் விதத்தில் கடிதங்கள் எழுதினார். மறுக்க முடியாத விதத்தில் நியாயங்காட்டிப் பேசினார், உணர்ச்சியோடு வலிமைமிக்க பேச்சுகளைக் கொடுத்தார். சிலரையாவது கிறிஸ்துவின் பக்கம் திருப்புவதற்காக தனக்கும் அவர்களுக்கும் பொதுவாயிருந்த விஷயங்களைப் பற்றி பேச முயற்சியும் எடுத்தார்.—அப்போஸ்தலர் 20:21.
2 அவர் யார்? அவரே அப்போஸ்தலன் பவுல்; அவர் ஒரு திறம்பட்ட ஊழியராய், முன்னேறுகிற ஊழியராய் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. (1 தீமோத்தேயு 1:12) ‘புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் கிறிஸ்துவின் நாமத்தை அறிவிக்கும்’ பொறுப்பை இயேசுவிடமிருந்து அவர் பெற்றிருந்தார். (அப்போஸ்தலர் 9:15) இந்தப் பொறுப்பை அவர் எப்படிக் கருதினார்? “எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்” என்று அவர் சொன்னார். (1 கொரிந்தியர் 9:19-23) பிரசங்க வேலையிலும் போதிக்கும் வேலையிலும் அதிகத் திறம்பட்டவர்களாவதற்கு பவுலின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
மனம் மாறிய மனிதன் சவாலை சமாளித்தார்
3 பவுல் எப்போதுமே பொறுமையுள்ளவராக, கரிசனையுள்ளவராக, அந்தப் பொறுப்பை ஏற்கத் தகுதியுள்ளவராக இருந்தாரா? இல்லவே இல்லை! மதவெறியின் காரணமாக, சவுல் (பவுலுடைய முந்தைய பெயர்) கிறிஸ்துவின் சீஷர்களைக் கொடூரமாய்த் துன்புறுத்துகிறவராக இருந்தார். வாலிப வயதில், ஸ்தேவானை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தார். பிறகு, கிறிஸ்தவர்களைப் பிடிக்க வெறித்தனமாகத் தேடி அலைந்தார். (அப்போஸ்தலர் 7:58; 8:1, 3; 1 தீமோத்தேயு 1:13) “கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி” எப்போதும் முயன்றுகொண்டிருந்தார். எருசலேமிலிருந்த விசுவாசிகளைத் துன்புறுத்தியதோடு திருப்தியடையாமல், வடக்கே தமஸ்கு வரைக்கும் சென்று அங்கிருந்த விசுவாசிகளையும் துன்புறுத்தினார்.—அப்போஸ்தலர் 9:1, 2.
4 கிறிஸ்தவ மதத்தை பவுல் அடியோடு வெறுத்ததற்கு முக்கிய காரணம், அந்தப் புதிய மதம் யூத மதத்திற்குள் புறஜாதியாரின் கருத்துகளைப் புகுத்தி அதைக் கறைபடுத்திவிடுமோ என்று அவர் எண்ணியதுதான். சொல்லப்போனால், பவுல் ஒரு ‘பரிசேயராக’ இருந்தார்; பரிசேயர் என்பதன் அர்த்தமே “பிரித்து வைக்கப்பட்டவர்” என்பதாகும். (அப்போஸ்தலர் 23:6) அப்படியிருக்கும்போது, கிறிஸ்துவைப் பற்றி எல்லாரிடமும், அதுவும் புறஜாதியாரிடம் பிரசங்கிப்பதற்குத் தன்னைக் கடவுள் தேர்ந்தெடுத்திருந்ததை அறிந்து பவுல் எந்தளவு அதிர்ச்சி அடைந்திருப்பார் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்! (அப்போஸ்தலர் 22:14, 15; 26:16-18) பாவிகளென தாங்கள் கருதிய ஜனங்களுடன் பரிசேயர்கள் சாப்பிடக்கூட மாட்டார்களே! (லூக்கா 7:36-39) எனவே, தன்னுடைய கண்ணோட்டத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கும், எல்லா மக்களும் இரட்சிக்கப்பட வேண்டுமென்ற கடவுளுடைய சித்தத்திற்கு இசைய அதை மாற்றிக்கொள்வதற்கும் பவுலுக்குக் கண்டிப்பாகப் பெருமளவு முயற்சி தேவைப்பட்டிருக்கும்.—கலாத்தியர் 1:13-17.
5 நாமும்கூட நம் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கலாம். பல்வேறு நாட்டவரும் பல்வேறு மொழியினரும் வாழ்கிற நம் பிராந்தியத்தில் வித்தியாச வித்தியாசமான ஆட்களை நாம் சந்திக்க வேண்டியிருப்பதால், நம்முடைய மனப்பான்மையைச் சோதித்துப் பார்த்து தப்பெண்ணங்களைக் களைந்தெறிவதற்கு ஊக்கமாக முயற்சி செய்வது அவசியம். (எபேசியர் 4:22-24) ஏனெனில், நாம் அறிந்திருக்கிறோமோ இல்லையோ, நாம் வளர்ந்த சமுதாயமும் பெற்ற கல்வியும் நம்மீது செல்வாக்கு செலுத்துகின்றன. இவை ஒருதலைப்பட்சமான, வளைந்துகொடுக்காத கருத்துகளையும் எண்ணங்களையும் நம்மில் விதைக்கலாம். செம்மறியாடுகளைப் போன்றோரைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவுவதில் வெற்றிகாண இப்படிப்பட்ட எண்ணங்களை பிடுங்கியெறிய வேண்டும். (ரோமர் 15:7) அதைத்தான் பவுல் செய்தார். தன் ஊழியத்தை விரிவுபடுத்துவதற்கான சவாலை அவர் ஏற்றுக்கொண்டார். அன்பின் தூண்டுதல் காரணமாக, போதிக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டார்; அவை நாம் பின்பற்றுவதற்கு உகந்தவை. உண்மையில் ‘புறதேசத்தாருக்கு அப்போஸ்தலனான’ பவுலின் ஊழியத்தை ஆராயும்போது, பிரசங்க வேலையிலும் போதிக்கும் வேலையிலும் அவர் கவனமுள்ளவராக, வளைந்துகொடுப்பவராக, சாமர்த்தியசாலியாக இருந்தது நமக்கு நன்கு விளங்கும்.a—ரோமர் 11:13.
முன்னேறுகிற ஓர் ஊழியர் செயலில்
6 தனக்குச் செவிகொடுத்தவர்களின் நம்பிக்கைகளையும் பின்னணியையும் பவுல் கவனத்தில் வைத்துப் பேசினார். இரண்டாம் அகிரிப்பா ராஜாவிடம் பேசுகையில், “யூதருடைய சகல முறைமைகளையும் தர்க்கங்களையும்” ராஜா நன்கு அறிந்தவர் என்பதை பவுல் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு, அகிரிப்பாவின் நம்பிக்கைகளைக் குறித்துத் தனக்குத் தெரிந்த விஷயங்களைத் திறமையாகப் பயன்படுத்தி அவரிடம் பேசினார். பவுலின் நியாயவிவாதங்கள் அவ்வளவு தெளிவாகவும் ஆணித்தரமாகவும் இருந்ததால், “நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய்” என அகிரிப்பா சொன்னார்.—அப்போஸ்தலர் 26:2, 3, 27, 28.
7 பவுல் வளைந்துகொடுப்பவராகவும் இருந்தார். லீஸ்திரா பட்டணத்து ஜனங்கள் தன்னையும் பர்னபாவையும் தெய்வங்களென நினைத்து வணங்கியபோது, அதைத் தடுப்பதற்காக அவர் எப்படி வித்தியாசமாக பேசினார் என்பதைக் கவனியுங்கள். லிக்கவோனியா மொழி பேசிய இந்த ஜனங்கள் படிப்பறிவு இல்லாதவர்களாயும் அதிக மூடநம்பிக்கை உள்ளவர்களாயும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் அனுபவித்து மகிழ்ந்த படைப்புகளும் அதன் இயற்கை வளங்களும் உண்மைக் கடவுள் மிகமிக உயர்ந்தவர் என்பதற்குரிய அத்தாட்சிகளென பவுல் அவர்களிடம் சுட்டிக்காட்டிப் பேசியதாக அப்போஸ்தலர் 14:14-18 குறிப்பிடுகிறது. அவருடைய நியாயவிவாதம் புரிந்துகொள்வதற்கு எளிதாய் இருந்தது. அதோடு, பவுலுக்கும் பர்னபாவுக்கும் அந்த ‘ஜனங்கள் பலியிடாதபடிக்கு அவர்களை அமர்த்தியது.’
8 இருந்தாலும், பவுல் பரிபூரணராக இருக்கவில்லை; சில சமயங்களில், சில விஷயங்களில் அவர் கொதிப்படைந்தார். உதாரணமாக, ஒரு சந்தர்ப்பத்தில் அவமரியாதையாகவும் அநியாயமாகவும் தாக்கப்பட்டபோது, அனனியா என்ற ஒரு யூதர்மீது அவர் சீறி விழுந்தார். ஆனால் இன்னொரு சந்தர்ப்பத்தில், தான் தரக்குறைவாகப் பேசியது ஒரு பிரதான ஆசாரியரையே என்பது தெரியப்படுத்தப்பட்டதும் அவர் மன்னிப்பு கேட்டார். (அப்போஸ்தலர் 23:1-5) மற்றொரு சமயம் அத்தேனே பட்டணத்திற்கு அவர் வந்தபோது, “அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு எரிச்சலடைந்தார்.” என்றாலும், மார்ஸ் மேடையில் பேச்சு கொடுத்தபோது, எந்தவொரு எரிச்சலையும் அவர் வெளிக்காட்டவில்லை. மாறாக, “அறியப்படாத தேவனுக்கு” என்று எழுதியிருந்த ஒரு பலிபீடத்தைச் சுட்டிக்காட்டுவதன் மூலமும், அவர்களுடைய புலவர்களில் ஒருவரைக் குறிப்பிடுவதன் மூலமும் அவர்களுக்குத் தெரிந்த பொதுவான விஷயங்களின் பேரில் நியாயங்காட்டிப் பேசினார்.—அப்போஸ்தலர் 17:16-28; NW.
9 பல வித்தியாசமான ஆட்களிடம் பேசுகையில் பவுல் தன்னுடைய சாமர்த்தியத்தை வெளிக்காட்டினார். தான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களின் சிந்தனையில் செல்வாக்கு செலுத்தியிருந்த பழக்கவழக்கங்களையும் பின்னணியையும் கவனத்தில் வைத்துப் பேசினார். ரோமிலிருந்த கிறிஸ்தவர்கள், அன்றைய மாபெரும் வல்லரசின் தலைநகரில் வாழ்ந்து வந்ததை மனதில் வைத்து அவர்களுக்குக் கடிதம் எழுதினார். ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்தின் முக்கிய சாராம்சம் என்னவெனில், ஆதாமுடைய பாவத்தின் அழிக்கும் வல்லமையை கிறிஸ்து தமது இரட்சிக்கும் வல்லமையால் வெற்றிகொண்டார் என்பதே. ரோம கிறிஸ்தவர்களுக்கும் அவர்களைச் சுற்றியிருந்தோருக்கும் அவர்களுடைய இருதயத்தைத் தொடும் மொழியில் பவுல் பேசினார்.—ரோமர் 1:5; 5:14, 15.
10 பைபிளின் ஆழமான சத்தியங்களை ஜனங்களிடம் விளக்குவதற்கு பவுல் என்ன செய்தார்? கடினமான பைபிள் கருத்துகளைத் தெளிவுபடுத்துவதற்காக, எளிதில் புரிந்துகொள்ளத்தக்க பொதுவான உதாரணங்களைப் பயன்படுத்துவதில் அவர் கெட்டிக்காரராக இருந்தார். எடுத்துக்காட்டாக, ரோம சாம்ராஜ்யமெங்கும் இருந்த அடிமைத்தனத்தைப் பற்றி ரோம மக்களுக்கு நன்கு தெரியும் என்பதை அவர் அறிந்திருந்தார். சொல்லப்போனால், அவர் கடிதம் எழுதிய ரோம கிறிஸ்தவர்களில் பலரும் அடிமைகளாக இருந்திருக்கலாம். ஆகவே, ஒரு நபர் பாவத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டுமா, நீதிக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டுமா என்ற தனது வலிமைமிக்க விவாதத்திற்கு வலுவூட்ட அடிமைத்தனத்தைப் பற்றிய உதாரணத்தை அவர் பயன்படுத்தினார்.—ரோமர் 6:16-20.
11 “ரோம சமுதாயத்தில், ஓர் எஜமான் தன் அடிமையிடம் ஒன்றும் எதிர்பார்க்காமல் அவனை விடுதலை செய்துவிடலாம், அல்லது பணம்செலுத்தி அந்த அடிமையே தன்னை விடுவித்துக்கொள்ளலாம். உரிமையை ஒரு தெய்வத்திற்கு மாற்றுவதன் மூலமும்கூட விடுதலை பெறலாம்” என ஒரு புத்தகம் கூறுகிறது. விடுதலை பெற்ற ஓர் அடிமை தன் எஜமானிடம் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பழக்கமும் இருந்தது. எந்த எஜமானுக்குக் கீழ்ப்படிந்திருப்பது என்பதன் பேரில், அதாவது பாவத்திற்கா அல்லது நீதிக்கா என்பதன் பேரில், ஒருவர் செய்யும் தெரிவைக் குறித்து பவுல் எழுதியபோது அவர் இந்தப் பழக்கத்தையே மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கலாம். ரோம கிறிஸ்தவர்கள் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, கடவுளுடைய அடிமைகளாக ஆகியிருந்தார்கள். அவருக்குச் சேவை செய்ய விடுதலை பெற்றிருந்தார்கள், ஆனாலும் பாவத்திற்கே, அதாவது தங்களுடைய பழைய எஜமானுக்கே, சேவை செய்ய அவர்கள் தெரிவுசெய்துகொள்ளக்கூடும்—ஒருவேளை அவர்கள் விரும்பினால். எளிய, அதே சமயத்தில் நன்கு தெரிந்த இந்த உதாரணம், ரோமிலிருந்த அந்தக் கிறிஸ்தவர்கள் தங்களையே பின்வருமாறு கேட்கும்படி உந்துவித்திருக்கும்: ‘எந்த எஜமானுக்கு நான் சேவை செய்கிறேன்?’b
பவுலின் உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல்
12 வித்தியாசப்பட்ட ஆட்களின் இருதயத்தைச் சென்றெட்டுவதற்கு, பவுலைப் போல நாமும் கவனமுள்ளவர்களாயும், வளைந்துகொடுப்பவர்களாயும், சாமர்த்தியமுள்ளவர்களாயும் இருக்க வேண்டும். நற்செய்தியின் கருத்தை ஜனங்கள் புரிந்துகொள்வதற்காக, வெறுமனே அவர்களைச் சந்தித்து, தயார் செய்த ஒரு பிரசங்கத்தைச் சொல்லி, ஏதாவது பைபிள் பிரசுரத்தைக் கொடுப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ள நாம் விரும்புவதில்லை. அவர்களுடைய தேவைகள், கவலைகள், விருப்புவெறுப்புகள், பயங்கள், தப்பெண்ணங்கள் ஆகியவற்றைப் பகுத்துணர முயலுகிறோம், இது வெகு முக்கியம். இதற்காக ஆழ்ந்த யோசனையும் அதிக முயற்சியும் அவசியப்பட்டாலும்கூட உலகெங்குமுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகள் அதை ஆர்வமாகச் செய்கிறார்கள். உதாரணத்திற்கு, யெகோவாவின் சாட்சிகளுடைய ஹங்கேரி கிளை அலுவலகம் இவ்வாறு அறிவிக்கிறது: “பிற நாட்டு மக்களின் பழக்கவழக்கங்களையும் வாழ்க்கைப் பாணியையும் சகோதரர்கள் மதிக்கிறார்கள்; உள்ளூர் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பதில்லை.” பிற நாடுகளில் உள்ள யெகோவாவின் சாட்சிகளும் அதையே பின்பற்ற முயலுகிறார்கள்.
13 தூர கிழக்கு நாடு ஒன்றில், பெரும்பாலோர் ஆரோக்கியத்திற்கும் பிள்ளை வளர்ப்புக்கும் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆகவே, அங்குள்ள ராஜ்ய பிரஸ்தாபிகள் ஜனங்களிடம் இந்த விஷயங்களைப் பற்றியே அதிகம் பேசுகிறார்கள்; மோசமடைந்து வருகிற உலக நிலைமைகள் பற்றியும் சிக்கலான சமூக பிரச்சினைகள் பற்றியும் அல்ல. அவ்வாறே, ஐக்கிய மாகாணங்களில் ஒரு மாநகரைச் சேர்ந்த பிரஸ்தாபிகள் தங்களுடைய சுற்றுவட்டாரத்திலுள்ள ஒரு பகுதியில் வாழ்வோர் ஊழல், போக்குவரத்து நெருக்கடி, குற்றச்செயல் ஆகிய விஷயங்களுக்கு அதிக கவனம் செலுத்துவதைக் கவனித்திருக்கிறார்கள். அதனால், பைபிள் சம்பந்தமான உரையாடலை ஆரம்பிப்பதற்கு இந்த விஷயங்களை அவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்துகிறார்கள். திறம்பட்ட விதத்தில் பைபிளைப் போதிப்பவர்கள், தாங்கள் எந்த விஷயத்தின் பேரில் உரையாடலை ஆரம்பித்தாலும், நம்பிக்கையோடும் உற்சாகத்தோடுமே பேசுகிறார்கள், அதுமட்டுமல்ல, பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பதால் தற்போது கிடைக்கும் நடைமுறை பயன்களுக்கும், கடவுள் தரப்போகிற ஒளிமயமான எதிர்காலத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேசுகிறார்கள்.—ஏசாயா 48:17, 18; 52:7.
14 ஜனங்களுடைய பழக்கவழக்கங்களும் கல்வியும் மதமும் பெருமளவில் வேறுபடுவதால், ஊழியத்தில் வித்தியாசமான அணுகுமுறைகளைப் உபயோகிப்பதும்கூட பயனுள்ளது. படைப்பாளரை நம்புகிற, ஆனால் பைபிளை நம்பாத ஆட்களிடம் பேசுவதுபோல் நாத்திகர்களிடம் நாம் பேசுவதில்லை. பைபிள் போதனையை ஏற்றுக்கொள்கிற ஒருவரிடம் பேசுவதுபோல், மத சம்பந்தமான எல்லாப் புத்தகங்களும் மதத்தைப் பரப்புவதற்காகவே பிரசுரிக்கப்படுவதாக நினைப்போரிடம் பேசுவதில்லை. படித்தவர்களிடமும் படிக்காதவர்களிடமும் பேசுவதற்கும்கூட வளைந்துகொடுப்பவர்களாய் இருப்பது அவசியம். போதிப்பதில் திறம்பட்டு விளங்குபவர்கள் சூழ்நிலைக்குப் பொருத்தமான நியாயவிவாதங்களையும் உதாரணங்களையும் பயன்படுத்துவார்கள்.—1 யோவான் 5:20.
புதிய ஊழியர்களுக்கு உதவி
15 போதிக்கும் முறைகளில் தான் மட்டுமே முன்னேறினால் போதுமென பவுல் நினைக்கவில்லை. தீமோத்தேயு, தீத்து போன்ற இளம் தலைமுறையினர்கூட திறம்பட்ட ஊழியர்களாக ஆவதற்கு அவர்களைப் பயிற்றுவித்து தயார்படுத்துவது அவசியம் என்பதை அவர் புரிந்திருந்தார். (2 தீமோத்தேயு 2:2; 3:10, 14; தீத்து 1:1) அதுபோன்ற பயிற்றுவிப்பை அளிப்பதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் இன்று அவசர தேவை உள்ளது.
16 உலகெங்கும், 1914-ல் சுமார் 5,000 ராஜ்ய பிரஸ்தாபிகள் இருந்தார்கள்; இன்றோ, ஒவ்வொரு வாரமும் சுமார் 5,000 புதியவர்கள் முழுக்காட்டுதல் பெறுகிறார்கள்! (ஏசாயா 54:2, 3; அப்போஸ்தலர் 11:21) கிறிஸ்தவ சபையுடன் கூட்டுறவுகொள்ள ஆரம்பித்து ஊழியத்தில் பங்குகொள்ள விரும்புகிற அந்தப் புதியவர்களுக்கு பயிற்சியும் வழிநடத்துதலும் தேவைப்படுகிறது. (கலாத்தியர் 6:6) போதிப்பதிலும் சீஷர்களைப் பயிற்றுவிப்பதிலும் நம் எஜமானர் இயேசு பயன்படுத்திய முறைகளை நாம் பின்பற்றுவது முக்கியம்.c
17 ஜனக்கூட்டத்தாரை வெறுமனே காண்பித்துவிட்டு அவர்களிடம் போய்ப் பேசும்படி இயேசு தம் அப்போஸ்தலர்களிடம் சொல்லவில்லை. மாறாக, பிரசங்க வேலையின் அவசியத்தை முதலில் அவர்களுக்குப் புரியவைத்தார், அதைக் குறித்து விடாது ஜெபிக்கவும் அவர்களை ஊக்குவித்தார். அதன் பிறகு, மூன்று அடிப்படைக் காரியங்களுக்கு ஏற்பாடு செய்தார்: ஒரு துணை, ஒரு பிராந்தியம், ஒரு செய்தி. (மத்தேயு 9:35-38; 10:5-7; மாற்கு 6:11ஆ; லூக்கா 9:2, 6) நாமும் அதையே செய்யலாம். நம்முடைய பிள்ளைக்கு, புதிய மாணாக்கருக்கு, சில காலமாக ஊழியத்தில் பங்குகொள்ளாதிருந்தவருக்கு என யாருக்கானாலும், இதேவிதமாகப் பயிற்சி அளிக்க முயலுவதே தகுந்தது.
18 ராஜ்ய செய்தியைத் தைரியமாக அறிவிக்க புதியவர்களுக்கு அதிக உதவி தேவைப்படுகிறது. மனதைத் தொடும் எளிய ஒரு பிரசங்கத்தைத் தயார்செய்து அதைப் பழகிப்பார்க்க அவர்களுக்கு உங்களால் உதவ முடியுமா? வெளி ஊழியத்தின்போது, முதலில் நீங்களே சில வீடுகளில் பேசுங்கள்; உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்ளட்டும். இவ்விஷயத்தில் நீங்கள் கிதியோனின் மாதிரியைப் பின்பற்றலாம், அவர் தம் சக படைவீரர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள்.” (நியாயாதிபதிகள் 7:17) அதன் பிறகு புதியவரைப் பேசச் சொல்லுங்கள். அவர்கள் எடுக்கும் முயற்சிகளை அன்போடு பாராட்டுங்கள், தேவைப்பட்டால் முன்னேறுவதற்கான சில ஆலோசனைகளைக் கொடுங்கள்.
19 ‘நம் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு’ நம்முடைய அணுகுமுறையில் வளைந்துகொடுப்பவர்களாய் இருக்க தீர்மானித்திருக்கிறோம்; புதிய ஊழியர்களும் அவ்வாறே இருக்க பயிற்சி அளிக்கிறோம். நம்முடைய இலக்கின் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்கையில், அதாவது இரட்சிப்புக்கு வழிநடத்துகிற கடவுளைப் பற்றிய அறிவைப் புகட்டுவதைக் குறித்துச் சிந்திக்கையில், ‘எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு எல்லாருக்கும் எல்லாமாவதற்கு’ நாம் எடுக்கும் எல்லா முயற்சிகளும் தகுந்ததே என்ற உறுதி நமக்கு ஏற்படுகிறது.—2 தீமோத்தேயு 4:5; 1 கொரிந்தியர் 9:22.
[அடிக்குறிப்புகள்]
a ஊழியத்தில் பவுல் இப்படிப்பட்ட பண்புகளை வெளிக்காட்டியது பற்றிய உதாரணங்களுக்கு, அப்போஸ்தலர் 13:9, 16-42; 17:2-4; 18:1-4; 19:11-20; 20:34; ரோமர் 10:11-15; 2 கொரிந்தியர் 6:11-13 ஆகிய வசனங்களைப் பாருங்கள்.
b அவ்வாறே, கடவுளுக்கும் ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட அவரது ‘புத்திரர்களுக்கும்’ இடையிலான புதிய உறவைப் பற்றி விளக்குகையில், பவுல் ஒரு சட்டப்பூர்வ கருத்தைப் பயன்படுத்தினார்; ரோம சாம்ராஜ்யத்திலிருந்த அவரது வாசகர்களுக்கு அது நன்கு தெரிந்த விஷயமாக இருந்தது. (ரோமர் 8:14-17) “தத்தெடுப்பது ரோமர்களின் பழக்கமாக இருந்தது, அதோடு குடும்பத்தைப் பற்றிய ரோமர்களின் கருத்துகளோடு அது நெருங்கிய தொடர்புடையதாய் இருந்தது” எனச் சொல்கிறது ரோமில் புனித பவுல் என்ற ஆங்கிலப் புத்தகம்.
c பயனியர்கள் மற்றவர்களுக்கு உதவுகிற திட்டம் தற்போது யெகோவாவின் சாட்சிகளுடைய அனைத்து சபைகளிலும் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் குறைந்த அனுபவமுடைய பிரஸ்தாபிகள், முழுநேர ஊழியர்களின் அனுபவத்திலிருந்தும் அவர்கள் பெற்ற பயிற்சியிலிருந்தும் பயன் அடைகிறார்கள்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• ஊழியத்தில் என்னென்ன வழிகளில் பவுலின் மாதிரியை நாம் பின்பற்றலாம்?
• நம் எண்ணத்தில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம்?
• நம்முடைய செய்தியை நாம் எப்படி நம்பிக்கையோடு பேசலாம்?
• தைரியமாகப் பேச புதிய ஊழியர்களுக்கு என்ன தேவை?
[கேள்விகள்]
1, 2. (அ) அப்போஸ்தலன் பவுல் என்னென்ன விதங்களில் திறம்பட்ட ஊழியராய் விளங்கினார்? (ஆ) பவுல் தன்னுடைய பொறுப்பை எப்படிக் கருதியதாகச் சொன்னார்?
3. பவுல் மதம் மாறுவதற்கு முன்பு கிறிஸ்தவர்களை எப்படி நடத்தினார்?
4. தன் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு பவுல் தன்னை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது?
5. ஊழியத்தில் பவுலின் மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
6. தனக்குச் செவிகொடுத்தவர்களின் பின்னணியை பவுல் எப்படிக் கவனத்தில் வைத்தார், அதன் விளைவு என்ன?
7. லீஸ்திராவிலிருந்த ஜனங்களிடம் பிரசங்கிக்கையில் பவுல் எப்படி வளைந்துகொடுப்பவராக இருந்தார்?
8. பவுல் சில சமயங்களில் கொதிப்படைந்தாலும், என்னென்ன வழிகளில் வளைந்துகொடுப்பவராக இருந்தார்?
9. பல வித்தியாசமான ஆட்களிடம் பேசுகையில் பவுல் எப்படிச் சாமர்த்தியத்தை வெளிக்காட்டினார்?
10, 11. ஜனங்களுக்கு ஏற்றபடி பவுல் எப்படி உதாரணங்களைப் பயன்படுத்தினார்? (அடிக்குறிப்பையும் காண்க.)
12, 13. (அ) இன்று வித்தியாசப்பட்ட ஆட்களின் இருதயத்தைச் சென்றெட்டுவதற்கு என்ன முயற்சி தேவைப்படுகிறது? (ஆ) வித்தியாசப்பட்ட பின்னணியைச் சேர்ந்தவர்களிடம் பிரசங்கிக்க எது பயனுள்ளதாய் இருப்பதாக நீங்கள் கண்டிருக்கிறீர்கள்?
14. ஜனங்களுடைய வித்தியாசப்பட்ட தேவைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு நாம் என்னென்ன வழிகளில் பேசலாமென விவரியுங்கள்.
15, 16. புதிய ஊழியர்களைப் பயிற்றுவிப்பதற்கான தேவை இருப்பது ஏன்?
17, 18. ஊழியத்தில் தைரியமாகப் பேச புதியவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?
19. ‘ஊழியத்தை முழுமையாக நிறைவேற்ற’ முயலுகையில் என்ன செய்யத் தீர்மானித்திருக்கிறீர்கள்?
[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]
அப்போஸ்தலன் பவுல் பிரசங்கிப்பதிலும் போதிப்பதிலும் கவனமுள்ளவராக, வளைந்துகொடுப்பவராக, சாமர்த்தியசாலியாக இருந்தார்
[பக்கம் 31-ன் சிறு குறிப்பு]
இயேசு தமது சீஷர்களுக்கு மூன்று அடிப்படைக் காரியங்களுக்கு ஏற்பாடு செய்தார்: ஒரு துணை, ஒரு பிராந்தியம், ஒரு செய்தி
[பக்கம் 28-ன் படங்கள்]
பவுல் எல்லாருக்கும் தகுந்த விதமாகப் பேசி ஊழியத்தில் வெற்றி கண்டார்
[பக்கம் 30-ன் படம்]
திறம்பட்ட ஊழியர்கள் தங்களுக்குச் செவிசாய்ப்போரின் பழக்கவழக்கங்களைக் கவனத்தில் வைக்கிறார்கள்
[பக்கம் 31-ன் படம்]
முன்னேறுகிற ஊழியர்கள், ஊழியத்திற்குத் தயார்செய்ய புதியவர்களுக்கு உதவுகிறார்கள்