ஜீவனுக்கான பந்தயத்தில் நீங்கள் எவ்வாறு ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?
“பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும் ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.”—1 கொரிந்தியர் 9:24.
1. நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கைப் போக்கை பைபிள் எதற்கு ஒப்பிடுகிறது?
நித்திய ஜீவனுக்கான நம்முடைய நாட்டத்தை பைபிள் ஒரு பந்தயத்திற்கு ஒப்பிடுகிறது. தன்னுடைய வாழ்க்கையின் முடிவை நெருங்குகையில் அப்போஸ்தலனாகிய பவுல் தன்னைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.” தன் உடன் கிறிஸ்தவர்களும் அதையே செய்யும்படி அவர் ஊக்குவித்தார்: “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.”—2 தீமோத்தேயு 4:7; எபிரெயர் 12:1.
2. ஜீவனுக்கான ஓட்டத்தில் என்ன உற்சாகமூட்டும் ஆரம்பத்தை நாம் காண்கிறோம்?
2 இந்த ஒப்பீடு பொருத்தமானதாய் இருக்கிறது, ஏனென்றால் ஒரு பந்தயத்திற்கு ஒரு தொடக்கம், ஓடுவதற்கு ஒரு பாதை, ஓர் இறுதிக்கட்டம் அல்லது இலக்கு ஆகியவை இருக்கின்றன. அதே போன்று தான் ஜீவனை நோக்கிச் செல்லும் நம்முடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தின் வழிமுறையும் இருக்கிறது. நாம் பார்த்தபடி, ஒவ்வொரு வருடமும் ஜீவனுக்கான பந்தயத்தில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஒரு நல்ல துவக்கத்தோடு ஆரம்பிக்கிறார்கள். உதாரணமாக, கடந்த ஐந்து வருடங்களில் 13,36,429 நபர்கள் ஒப்புக்கொடுத்தல், தண்ணீர் முழுக்காட்டுதல் ஆகியவற்றின் மூலம் பந்தய ஓட்டத்தை முறைப்படி ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட சுறுசுறுப்பான ஒரு தொடக்கம் அதிக உற்சாகமூட்டுவதாய் இருக்கிறது. என்றபோதிலும், இறுதிக்கட்டத்தை எட்டும் வரை பந்தயத்தில் நிலைத்திருப்பது தான் முக்கியமான காரியம். நீங்கள் இதை செய்கிறீர்களா?
ஜீவனுக்கான பந்தயம்
3, 4. (எ) ஓட்டத்தில் வேகத்தைத் தளராது வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பவுல் எவ்வாறு குறிப்பிட்டுக் காட்டினார்? (பி) பவுலின் புத்திமதிக்கு கவனம் செலுத்த சிலர் எவ்வாறு தவறியிருக்கின்றனர்?
3 பந்தயத்தில் நிலைத்திருக்க வேண்டிய முக்கியத்துவத்தை அழுத்திக் காண்பிப்பதற்கு பவுல் இவ்வாறு அறிவுரை கூறினார்: “பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும் ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.”—1 கொரிந்தியர் 9:24.
4 பண்டையக் கால விளையாட்டுகளில் ஒருவர் மட்டுமே பரிசை பெற்றுக்கொள்ளக்கூடும் என்பது உண்மைதான். எனினும், ஜீவனுக்கான பந்தயத்தில், ஒவ்வொருவரும் பரிசைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதியுள்ளோராய் இருக்கின்றனர். இறுதிவரை ஓட்டத்தில் நிலைத்திருப்பது மட்டுமே தேவையாய் இருக்கிறது! சந்தோஷமாக, அப்போஸ்தலனாகிய பவுல் செய்தது போல அநேகர் தங்களுடைய வாழ்க்கையின் இறுதிவரை உண்மையோடு ஓட்டத்தை ஓடியிருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கின்றனர். ஆனால் சிலர் முன்னேறிச் செல்ல தவறியிருக்கின்றனர் அல்லது இறுதிக்கட்டத்தை நோக்கி முன்னேற்றம் செய்யவில்லை. மாறாக, தங்களை தடை செய்வதற்கு மற்ற காரியங்களை அனுமதித்ததினால் அவர்கள் ஓட்டப்பந்தயத்திலிருந்து தோல்விடைந்தனர், அல்லது ஏதோவொரு விதத்தில் தகுதியற்றவர்களாக ஆகிவிட்டனர். (கலாத்தியர் 5:7) ஜீவனுக்கான பந்தயத்தில் நாம் எவ்வாறு ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதை ஆராய்ச்சி செய்துபார்க்க இது நம் அனைவருக்கும் காரணத்தைக் கொடுக்க வேண்டும்.
5. ஜீவனுக்கான பந்தயத்தை ஒரு போட்டி விளையாட்டோடு பவுல் ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தாரா? விளக்குங்கள்.
5 “ஒருவனே பந்தயத்தைப் பெறுவான்,” என்று பவுல் சொன்னபோது, அவர் எதை மனதில் கொண்டிருந்தார்? என்ற கேள்வி ஒருவேளை கேட்கப்படலாம். முன்பு கவனித்தபடி, ஜீவனுக்கான பந்தயத்தில் ஓட ஆரம்பித்த அநேகரில் ஒருவர் மட்டும் தான் நித்திய ஜீவன் என்ற வெகுமதியை பெற்றுக்கொள்வார் என்று அவர் அர்த்தப்படுத்தவில்லை. அது அவ்வாறு இருக்க முடியாது என்பது தெளிவாக இருக்கிறது. ஏனென்றால் எல்லா வகையான ஜனங்களும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது கடவுளுடைய சித்தம் என்பதை அவர் அடிக்கடி தெளிவுபடுத்தினார். (ரோமர் 5:18; 1 தீமோத்தேயு 2:3, 4; 4:10; தீத்து 2:11) பந்தயத்தில் பங்குகொள்ளும் ஒவ்வொருவரும் மற்ற எல்லாரையும் தோற்கடிக்க முயற்சி செய்யும் ஒரு போட்டி என்று ஜீவனுக்கான பந்தயத்தை அவர் சொல்லிக்கொண்டில்லை. இஸ்த்மியன் விளையாட்டுகளில் போட்டியிட்டவர்கள் மத்தியில் அப்படிப்பட்ட போட்டிக்குரிய ஆவி நிலவியிருந்தது என்று கொரிந்தியர்கள் நன்கு அறிந்திருந்தனர். அந்தச் சமயத்தில் இஸ்த்மியன் விளையாட்டுகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களைக் காட்டிலும் அதிக கீர்த்தி பெற்றிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால் பவுல் எதை மனதில் கொண்டிருந்தார்?
6. ஓடுபவனைப் பற்றியும், பந்தயத்தைப் பற்றியும் பவுலின் கலந்தாலோசிப்பைக் குறித்து சூழமைவு எதை வெளிக்காட்டுகிறது?
6 ஓடுபவனுடைய உதாரணத்தை மேற்கோள் காட்டுவதில் பவுல் இரட்சிப்புக்கான தன்னுடைய சொந்த எதிர்பார்ப்புகளை முக்கியமாக கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். இதற்கு முந்தின வசனங்களில், அவர் எவ்வாறு கடினமாக உழைத்தார் என்பதையும், அநேக வழிகளில் தன்னை கடுமுயற்சியில் ஈடுபடுத்திக் கொண்டார் என்பதையும் அவர் விவரித்தார். (1 கொரிந்தியர் 9:19-22) பின்னர் வசனம் 23-ல் அவர் இவ்வாறு சொன்னார்: “சுவிசேஷத்தில் நான் உடன் பங்காளியாயிருக்கும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.” அவர் ஓர் அப்போஸ்தலனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததன் காரணத்தினாலோ அல்லது மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதில் அநேக வருடங்கள் செலவழித்திருந்ததன் காரணத்தினாலோ அவருடைய இரட்சிப்பு உத்தரவாதமளிக்கப்பட்டில்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார். நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் பங்கு பெறுவதற்கு, நற்செய்தியினிமித்தமாக தன்னால் முடிந்த எல்லாவற்றையும் அவர் தொடர்ந்து செய்ய வேண்டும். வெற்றிபெற வேண்டும் என்ற முழு தீர்மானத்தோடு அவர் ஓட வேண்டும். “ஒருவனே பந்தயத்தைப் பெற்றுக்கொள்ளும்” இஸ்த்மியன் விளையாட்டுக்களில் இருந்த ஓட்டப்பந்தயத்தில் ஒருவன் ஓடுவது போல் கடுமையாக பிரயாசப்படவேண்டும்.—1 கொரிந்தியர் 9:24எ.
7. “பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுவதற்கு” எது தேவைப்படுகிறது?
7 இதிலிருந்து நாம் அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம். பந்தயத்தில் சேர்ந்து கொள்ளும் ஒவ்வொருவரும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினாலும், வெற்றி பெறுவதற்கு முழுமையாக உறுதிபூண்டிருப்பவர்கள் மட்டுமே வெற்றியடைவதற்கான எதிர்பார்ப்பை கொண்டிருக்க முடியும். இதன் காரணமாக நாம் வெறுமென ஓட்டப்பந்தயத்தில் சேர்ந்து கொண்டிருப்பதன் காரணமாக நாம் சுய-திருப்தியுள்ளவர்களாக உணரக்கூடாது. நாம் ‘சத்தியத்தில் இருப்பதன்’ காரணமாக எல்லா காரியங்களும் சிறப்பாக இருக்கும் என்று நாம் எண்ணக்கூடாது. நாம் கிறிஸ்தவர்கள் என்ற பெயரை பெற்றிருக்கலாம். ஆனால் நாம் கிறிஸ்தவர்கள் என்பதை நிரூபிக்க நம்மிடம் சாரம் இருக்கிறதா? உதாரணமாக ஒரு கிறிஸ்தவன் செய்ய வேண்டும் என்று நாம் அறிந்திருக்கும் காரியங்களை—கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு ஆஜராவது, வெளி ஊழியத்தில் பங்குகொள்வது போன்ற காரியங்களை—நாம் செய்கிறோமா? அப்படிச் செய்கிறீர்கள் என்றால் அது பாராட்டத்தக்கது. அப்படிப்பட்ட மிகச் சிறந்த பழக்கங்களில் தொடர்ந்து நிலைத்திருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். நாம் செய்யும் காரியங்களிலிருந்து நாம் அதிக பயனடைவது கூடிய காரியமா? உதாரணமாக, கூட்டங்களில் பதில் சொல்வதன் மூலம் பங்கெடுப்பதற்கு நாம் எப்போதுமே தயாராக இருக்கிறோமா? நாம் கற்றுக்கொள்ளும் காரியங்களை நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு பொருத்த நாம் முயற்சிசெய்கிறோமா? வெளி ஊழியத்தில் நாம் எதிர்ப்படும் இடையூறுகள் மத்தியிலும் ஒரு முழுமையான சாட்சி கொடுப்பதற்கு நம்முடைய திறமைகளை மேம்படுத்த நாம் கவனம் செலுத்துகிறோமா? அக்கறை காண்பிப்பவர்களை மறுபடியும் சந்தித்து, வீட்டு பைபிள் படிப்புகளை நடத்தும் சவாலை ஏற்றுக்கொள்ள நாம் விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறோமா? “நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்,” என்று பவுல் ஊக்குவித்தார்.—1 கொரிந்தியர் 9:24பி.
எல்லாக் காரியங்களிலும் தன்னடக்கத்தை அப்பியாசியுங்கள்
8. ‘எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருக்கும்படி’ தன் உடன் கிறிஸ்தவர்களை ஊக்குவிப்பதற்கு பவுலை எது தூண்டியிருக்க வேண்டும்?
8 பவுல் தன் வாழ்நாட்காலத்தில் அநேகர் ஜீவனுக்கான பந்தயத்தில் வேகத்தைக் குறைத்துக்கொள்வதையும், வழிதப்பிச் செல்வதையும் பந்தயத்திலிருந்து விலகிக்கொள்வதையும் பார்த்திருக்கிறார். (1 தீமோத்தேயு 1:19, 20; எபிரெயர் 2:1) அதன் காரணமாகத் தான் அவர்கள் கடின முயற்சியை அவசியப்படுத்தும், தொடர்ந்து இருக்கும் ஒரு போட்டியில் இருக்கின்றனர் என்று அவர் தன் உடன் கிறிஸ்தவர்களுக்கு திரும்பத் திரும்ப நினைப்பூட்டினார். (எபேசியர் 6:12; 1 தீமோத்தேயு 6:12) அவர் ஓடுபவனின் உதாரணத்தை ஒரு படி கூடுதலாக எடுத்துச்சென்று இவ்வாறு சொன்னார்: “பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்.” (1 கொரிந்தியர் 9:25எ) கொரிந்திய கிறிஸ்தவர்கள் நன்கு அறிமுகமாகியிருந்த ஏதோவொன்றை பவுல் ஒப்பிட்டு இவ்வாறு சொல்கிறார். அதாவது, இஸ்த்மியன் விளையாட்டுகளில் போட்டியிடுபவர்கள் பின்பற்றின கடுங்கண்டிப்பான பயிற்சி.
9, 10. (எ) இஸ்த்மியன் விளையாட்டுகளில் போட்டியிடுபவர்களை ஒரு பதிவு எவ்வாறு விவரிக்கிறது? (பி) அந்த விவரிப்பைக் குறித்து குறிப்பாக கவனிக்க வேண்டியது என்ன?
9 பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் ஓர் ஓட்டக்காரனை பற்றிய தெளிவான விவரிப்பு இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது:
“திருப்தியோடு முணுமுணுப்பின்றி அவன் பத்து மாத பயிற்சியின் விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் தன்னைக் கீழ்ப்படுத்துகிறான். அவ்வித பயிற்சியின்றி அவன் போட்டியிடாமலே இருக்கலாம். . . . அவன் தனக்கு ஏற்படும் சிறு இன்னல்கள், களைப்புகள், இழப்புகள் ஆகியவற்றை பெருமைப்படுவதற்குரிய ஒன்றாகக் கருதுகிறான். அவன் வெற்றியடைவதற்குரிய வாய்ப்பைச் சிறிதளவும்கூட குறைத்துவிடும் எந்தக் காரியத்திலிருந்தும் விலகியிருக்க விழிப்போடு இருக்கிறான். மற்ற மனிதர்கள் உணவுக்கான விருப்பத்துக்கு இடங்கொடுத்து விடுவதை அவன் பார்க்கிறான். சரீரப்பிரகாரமான கடுமுயற்சியில் அவன் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கையில் மற்றவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை அவன் காண்கிறான். சொகுசாக குளித்துக்கொண்டும் வாழ்க்கையை மனமகிழ்ச்சியோடு அனுபவிப்பதையும் பார்க்கிறான். பரிசை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவனுடைய இருதயம் உறுதியாக விரும்புவதால் அவனுக்குப் பொறாமையான எண்ணம் இருப்பதில்லை. கடும் பயிற்சி இன்றியமையாததாய் இருக்கிறது. ஏதாவது ஒரு விஷயத்தில் அல்லது ஏதாவது ஒரு சமயத்தில் சிட்சையின் கடுமையை அல்லது அழுத்தத்தை அவன் தளர்த்தினால் அவனுடைய வாய்ப்புகள் போய்விடும் என்பதை அவன் அறிந்திருக்கிறான்.”—எக்ஸ்பாஸிட்டர்ஸ் பைபிள், புத்தகம் V, பக்கம் 674.
10 பயிற்சி பெற்றுக்கொண்டிருப்பவன் அப்படிப்பட்ட கடுமையான ஒழுங்கான சுயநல தவிர்ப்பை “மதிப்புக்குரிய ஒரு விஷயமாக கருதுகிறான்,” என்பதைக் கவனிப்பது அக்கறைக்குரிய விஷயமாக இருக்கிறது. உண்மையில், மற்றவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் செளகரியத்தையும் இன்பத்தையும் அவன் காண்கையில் அவனுக்குப் “பொறாமை எண்ணம் ஏற்படுவதே இல்லை.” இதிலிருந்து நாம் ஏதாவது கற்றுக்கொள்ளக்கூடுமா? ஆம், உண்மையிலேயே கற்றுக்கொள்ளக்கூடும்.
11. ஜீவனுக்கான பந்தயத்தில் ஈடுபட்டிருக்கும் போது எந்தத் தவறான எண்ணத்துக்கு எதிராக நாம் நம்மை காத்துக்கொள்ள வேண்டும்?
11 “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்,” என்ற இயேசுவின் வார்த்தைகளை நினைவுபடுத்திப் பாருங்கள். (மத்தேயு 7:13, 14) ‘இடுக்கமான வாசல்’ வழியாய் பயணம் செய்ய நீங்கள் முயற்சி செய்யும் போது, அடுத்த பாதையில் சென்றுகொண்டிருப்பவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் சுயாதீனத்தையும், செளகரியத்தையும் பார்த்து நீங்கள் பொறமைப்படுகிறீர்களா? மற்றவர்கள் செய்துகொண்டிருக்கும், தன்னில்தானே தவறற்றதாக தோன்றும் காரியங்களை நீங்கள் காண்கையில் அவற்றை நீங்கள் அனுபவிக்கத் தவறுகிறீர்கள் என்று உணருகிறீர்களா? நாம் இந்தப் போக்கை ஏற்றுக்கொண்டிருப்பதற்கான காரணத்தை நாம் மனதில் வைத்திருக்கத் தவறினால் சுலபமாய் இவ்விதம் நாம் உணரக்கூடும். “அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்,” என்று பவுல் சொன்னார்.—1 கொரிந்தியர் 9:25பி.
12. ஜனங்கள் நாடிச்சென்றிருக்கும் மகிமையும், புகழும் இஸ்த்மியன் விளையாட்டுக்களில் அளிக்கப்பட்ட அழிந்து போகும் தன்மையுடைய கிரீடத்தைப் போன்று எவ்வாறு இருக்கின்றன?
12 இஸ்த்மியன் விளையாட்டுகளில் வெற்றிபெற்றவன் தேவதாரு மரக்கிளையினால் அல்லது அதைப் போன்ற வேறொரு செடியினால் செய்யப்பட்ட வளையம் ஒன்றை பெற்றுக்கொண்டான். அது சில நாட்களில் அல்லது வாரங்களில் வாடிப்போயிருக்கும். அழிந்துபோகக்கூடிய வளையத்துக்காக போட்டியாளர்கள் போட்டியிடவில்லை. ஆனால் அதோடு வந்த மகிமை, மதிப்பு, புகழ் ஆகியவற்றுக்காக போட்டியிட்டனர். வெற்றிபெற்றவன் வீட்டுக்குத் திரும்பிய போது, அவன் வெற்றி வீரனாக வரவேற்கப்பட்டான். அவனுடைய ஊர்வலம் கடந்து செல்வதற்காக நகரத்தில் இருந்த சுவர்கள் இடித்துத் தகர்க்கப்பட்டன. அவனுடைய சிறப்புக் கருதி உருவச்சிலைகள் எழுப்பப்பட்டன என்று பதிவு ஒன்று குறிப்பிடுகிறது. இவையெல்லாவற்றின் மத்தியிலும், அவனுடைய மகிமை அழியக்கூடியதாக தான் இருந்தது. வெற்றி வீரர்களாக அன்று இருந்தவர்கள் யார் என்பதை இன்று வெகு சில ஆட்களே அறிந்திருக்கின்றனர். அநேகர் உண்மையில் அதில் அக்கறை கொள்வதில்லை. இவ்வுலகில் அதிகாரம், புகழ், செல்வம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக தங்கள் நேரம், ஊக்கம், ஆரோக்கியம், குடும்ப சந்தோஷத்தையும்கூட தியாகம் செய்பவர்கள் கடவுளிடமாக செல்வந்தவர்களாக இல்லாவிடில், தங்கள் பொருள் சம்பந்தமான “கிரீடம்” தங்கள் வாழ்க்கையைப் போன்றே வெறுமென மறைந்து போவதாகக் காண்பார்கள்.—மத்தேயு 6:19, 20; லூக்கா 12:16-21.
13. ஜீவனுக்கான பந்தயத்தில் இருக்கும் ஒரு நபரின் வாழ்க்கைப் போக்கு எவ்வாறு ஒரு போட்டியிடுபவனின் வாழ்க்கையிலிருந்து வித்தியாசமானதாய் இருக்கிறது?
13 உடற்பயிற்சி விளையாட்டில் போட்டியிடுபவர்கள் மேலே விவரிக்கப்பட்டிருக்கும் பயிற்சியின் கடுமையான தேவைகளை ஏற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்களாய் இருப்பார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் தான். விளையாட்டுக்கள் முடிந்தவுடன் அவர்கள் இயல்பான வாழ்க்கை முறைக்குத் திரும்பச் சென்றுவிடுவார்கள். தங்களுடையத் திறமைகளைக் காத்துக்கொள்வதற்காக அவர்கள் அவ்வப்போது பயிற்சி செய்வார்கள். ஆனால் கடுமையான சுய-நலன் தவிர்ப்புக்குரிய போக்கை அவர்கள் அதற்குப் பின்பு தொடர்ந்து பின்பற்றுவதில்லை. அடுத்த போட்டி வரும் வரையிலுமாவது அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. ஆனால் ஜீவனுக்கான பந்தயத்தில் இருப்பவர்களின் விஷயத்தில் அவ்வாறு இல்லை. பயிற்சியும், சுய-நலன் தவிர்ப்பும் வாழ்க்கை முறையாக அவர்களுக்கு இருக்க வேண்டும்.—1 தீமோத்தேயு 6:6-8.
14, 15. ஜீவனுக்கான பந்தயத்தில் போட்டியிடுபவன் ஏன் தொடர்ந்து தன்னடக்கத்தை பிரயோகிக்க வேண்டும்?
14 “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, (“வேண்டாம்” என்று தனக்கே அவன் சொல்லிக்கொள்ள வேண்டும், சார்ல்ஸ் B. வில்லியம்ஸ்-ன் மொழிபெயர்ப்பு) தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்,” என்று இயேசு கிறிஸ்து சீஷர்களும், மற்றவர்களும் அடங்கியிருந்த கூட்டத்தை நோக்கிச் சொன்னார். (மாற்கு 8:34) இந்த அழைப்பை நாம் பெற்றுக்கொள்ளும் போது, நாம் அதை “தொடர்ந்து” செய்வதற்கு தயாராயிருக்க வேண்டும். சுய-நலன் தவிர்ப்பு ஏதோ விசேஷ மதிப்பு இருப்பதன் காரணமாக அல்ல. ஒரு கணம் அறியாப்பிழை செய்து விடுதல், நல்ல தீர்ப்பு செய்வதில் தவறி விடுதல் ஆகியவை ஏற்கெனவே உருவாக்கிய அனைத்தையும் துடைத்தழித்துவிடும், நம்முடைய நித்திய நலனையும்கூட இடருக்கு உட்படுத்தும். பொதுவாக ஆவிக்குரிய வளர்ச்சியின் வேகம் மெதுவாக இருக்கிறது. ஆனால் நாம் எப்போதும் கவனமாக இல்லையென்றால் அது எவ்வளவு விரைவாகப் பயனற்றுப் போகும்!
15 மேலும், நாம் “எல்லாவற்றிலேயும் தன்னடக்கமாயிருக்க” வேண்டும் என்று பவுல் ஊக்குவித்தார். அதாவது, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நாம் நிலையாய் இதை அப்பியாசிக்க வேண்டும். இது நியாயமானதாய் தோன்றுகிறது, ஏனெனில் பயிற்சி செய்பவர் மனம்போன போக்கில் சென்றால் அல்லது கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் வாழ்ந்தால், அவன் சகித்துக்கொண்டிருக்கும் உடல் நோவு, களைப்பு ஆகியவற்றால் என்ன பயன் இருக்கும்? அதே போன்று ஜீவனுக்கான நம்முடைய ஓட்டத்தில், எல்லாக் காரியங்களிலும் நாம் தன்னடக்கத்தை காண்பிக்க வேண்டும். குடிபோதை, வேசித்தனம் போன்ற காரியங்களில் ஒரு நபர் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளலாம், ஆனால் அவன் மேட்டிமையானவனாகவும், சண்டையிடுகிறவனாகவும் இருந்தால் இதனுடைய மதிப்பு குறைந்துவிடுகிறது. அல்லது அவன் மற்றவர்களிடம் நீடிய பொறுமையாயும் தயவாயும் நடந்துகொண்டு, தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதோ இரகசிய பாவத்தை வைத்துக்கொண்டிருந்தால் அப்போது என்ன? தன்னடக்கம் முழுமையாக பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்றால், அது “எல்லாவற்றிலேயும்” காண்பிக்கப்பட வேண்டும்.—யாக்கோபு 2:10, 11-ஐ ஒப்பிடுங்கள்.
“நிச்சயமில்லாதவனாக” ஓடேன்
16. “நிச்சயமில்லாதவனாக ஓடேன்” என்பதன் அர்த்தம் என்ன?
16 ஜீவனுக்கான பந்தயத்தில் வெற்றியடைவதற்கு ஊக்கமான முயற்சிகள் தேவைப்படுகின்றன என்பதை உணர்ந்த பவுல் தொடர்ந்து சொல்கிறார்: “ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.” (1 கொரிந்தியர் 9:26) “நிச்சயமில்லாத” என்ற வார்த்தை சொல்லர்த்தமாகவே “தெளிவில்லாத” (கிங்டம் இன்டர்லீனியர்) “கவனிக்கப்படாத,” “குறிப்பிடப்படாத” (லேங்ஸ் காமென்டரி) என்று பொருள்படுகிறது. எனவே, “நிச்சயமில்லாதவனாக ஓடேன்” என்பதன் அர்த்தம், கவனித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஓடுபவர் எங்கே ஓடிக்கொண்டிருக்கிறார் என்பது மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். தி ஆங்கர் பைபிள் அதை “கோணல்மாணலான ஓட்டம் அல்ல,” என்று மொழிபெயர்க்கிறது. கடற்கரையில் வளைந்து நெளிந்து செல்லும் இரண்டு பாதங்களின் தடங்களை நீங்கள் கண்டால், அது அவ்வப்போது வட்டமாகச் சென்று, சில சமயங்களில் பின்னோக்கியும்கூட சென்றிருப்பதை நீங்கள் கண்டால், அந்த நபர் ஓடிக்கொண்டிருந்தார் என்று நீங்கள் எண்ணமாட்டீர்கள். தான் எங்கே போய்கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றி அறிந்திருந்தாரா என்பதை கேட்கவே வேண்டாம். ஆனால் ஒவ்வொரு பாத தடமும் அதற்கு முந்தின தடத்தையும் தாண்டி ஒழுங்கான இடைவெளிகளில் நீளமான நேர் கோடு போன்று அமைந்திருப்பதை நீங்கள் பார்த்திருந்தீர்களானால், தான் எங்கே சென்றுகொண்டிருக்கிறார் என்பதை திருத்தமாக அறிந்திருப்பவருடைய பாத தடங்கள் அவை என்று நீங்கள் முடிவுக்கு வருவீர்கள்.
17. (எ) “நிச்சயமில்லாதவனாக” பவுல் ஓடிக்கொண்டில்லை என்பதை அவர் எவ்வாறு காண்பித்தார்? (பி) இவ்விஷயத்தில் நாம் எவ்வாறு பவுலைப் பின்பற்றலாம்?
17 “நிச்சயமில்லாதவனாக” அவர் ஓடவில்லை என்பதை பவுலின் வாழ்க்கை தெளிவாக காண்பிக்கிறது. அவர் ஒரு கிறிஸ்தவ ஊழியராகவும், ஓர் அப்போஸ்தலராகவும் இருந்தார் என்பதை நிரூபிக்க மிகுதியான சான்றுகளைக் கொண்டிருந்தார். அவர் ஒரு குறிக்கோளை வைத்திருந்தார். அதை பெற்றுக்கொள்வதற்கு தன் வாழ்நாட்காலம் முழுவதும் தன்னை சுறுசுறுப்பாக கடுமுயற்சியில் ஈடுபடுத்தினார். புகழ், அதிகாரம், செல்வம் அல்லது சொகுசு போன்ற எவற்றையும் வேண்டுமானால் அவர் பெற்றிருந்திருக்க முடியும். இருப்பினும் இவைகளால் அவர் ஒருபோதும் திசைதிருப்பப்படவில்லை. (அப்போஸ்தலர் 20:24; 1 கொரிந்தியர் 9:2; 2 கொரிந்தியர் 3:2, 3; பிலிப்பியர் 3:8, 13, 14) உங்களுடைய வாழ்க்கைப் போக்கை நீங்கள் திரும்பிப் பார்க்கையில், என்ன விதமான பாதையை நீங்கள் காண்கிறீர்கள்? ஒரு தெளிவான இலக்கை உடைய ஒரு நேர் கோடையா அல்லது குறிக்கோளின்றி திரிந்து கொண்டிருக்கும் ஒன்றையா? ஜீவனுக்கான பந்தயத்தில் நீங்கள் போட்டியிடுகிறீர்கள் என்பதைக் காண்பிப்பதற்கு சான்று இருக்கிறதா? ஆர்வமின்றி ஏதோவொன்றை செய்வதற்கு முயற்சி செய்வது போல் நாம் இந்தப் பந்தயத்தில் இருந்து கொண்டில்லாமல், முடிவு வரை செல்வதற்காக இருக்கிறோம் என்பதை நினைவில் வையுங்கள்.
18. (எ) நம்முடைய பங்கில் “ஆகாயத்தை அடிக்கிறதற்கு” எது ஒப்பாக இருக்கும்? (பி) பின்பற்றுவதற்கு அது ஏன் அபாயகரமான போக்காக இருக்கிறது?
18 மற்றொரு விளையாட்டு நிகழ்ச்சியோடு ஓர் இணைப்பொருத்தத்தைக் காட்டி பவுல் கூடுதலாக சொன்னார்: “ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.” (1 கொரிந்தியர் 9:26பி) ஜீவனுக்கான நம்முடைய போட்டியில் சாத்தான் உட்பட இந்த உலகம், நம்முடைய சொந்த அபூரணங்கள் ஆகிய அநேக எதிரிகள் நமக்கு இருக்கின்றனர். பண்டையக் கால குத்துச்சண்டை செய்பவனைப் போல நாம் அவர்களை வலுக்கட்டாயமான அடிகளால் அடித்து நொறுக்கவேண்டும். சந்தோஷகரமாக, யெகோவா தேவன் நம்மை பயிற்றுவிக்கிறார். இச்சண்டையில் நமக்கு உதவி செய்கிறார். அவர் தம்முடைய வார்த்தை, பைபிளை-அடிப்படையாகக் கொண்ட பிரசுரங்கள், கிறிஸ்தவக் கூட்டங்கள் ஆகியவற்றில் போதனைகளை கொடுக்கிறார். என்றபோதிலும், பைபிளையும் பிரசுரங்களையும் படித்துவிட்டு கூட்டங்களுக்குச் சென்று நாம் கற்றுக்கொள்வதை நடைமுறையில் அப்பியாசிக்காவிடில் நாம் நம்முடைய முயற்சிகளை வீணாக்குகிறோம் அல்லவா? “ஆகாயத்தை அடிக்கிறோம் அல்லவா”? அவ்வாறு செய்வது நம்மை அதிக அபாயகரமான நிலையில் வைக்கிறது. நாம் எதிர்த்துப் போராடுகிறோம் என்று நினைத்துக்கொண்டு ஒரு பொய்யான பாதுகாப்பு உணர்வை பெற்றுக்கொள்கிறோம். ஆனால் நாம் நம்முடைய எதிரிகளை தோல்வியடையச் செய்வதில்லை. அதன் காரணமாகத் தான் சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு அறிவுறுத்துகிறார்: “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.” “ஆகாயத்தை அடிப்பது” நம்முடைய எதிரிகளை முடமாக்காது. அது போல “கேட்கிறவர்களாய் மாத்திரம்” இருப்பது நாம் கடவுளுடைய சித்தத்தை செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்தாது.—யாக்கோபு 1:22; 1 சாமுவேல் 15:22; மத்தேயு 7:24, 25.
19. ஆகாதவர்களாய்ப் போகாதபடிக்கு நாம் எவ்வாறு நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்?
19 இறுதியில் பவுல் தன் வெற்றியின் இரகசியத்தை நமக்குச் சொன்னார்: “மற்றவர்களுக்கு பிரசங்கம் பண்ணுகிற நான் தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.” (1 கொரிந்தியர் 9:27) நம்முடைய அபூரண மாம்சம் நம்முடைய எஜமானாக ஆதிக்கம் செலுத்துவற்கு பதிலாக பவுலைப் போன்று, நாமும்கூட அதை அடக்கியாள வேண்டும். மாம்சப்பிரகாரமான ஆசைகள், விருப்பங்கள் ஆகியவற்றை அடியோடு ஒழிக்க வேண்டும். (ரோமர் 8:5-8; யாக்கோபு 1:14, 15) அவ்வாறு செய்வது நோவு உண்டாக்கலாம், “ஒடுக்கி” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை ‘கண்ணுக்குக் கீழ் அடி’ என்று சொல்லர்த்தமாக பொருள்படுகிறது. (கிங்டம் இன்டர்லீனியர்) விழுந்துபோன மாம்சத்தின் விருப்பங்களுக்கு விட்டுக்கொடுத்து மரித்துப் போவதைவிட அடிப்பட்ட கண்ணோடு உயிர்வாழ்வது மேலானது அல்லவா?—மத்தேயு 5:28, 29; 18:9; 1 யோவான் 2:15-17 ஒப்பிடுங்கள்.
20. ஜீவனுக்கான பந்தயத்தில் நாம் எவ்வாறு ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதை ஆராய்வது இப்போது ஏன் விசேஷமாக அவசரமாய் இருக்கிறது?
20 இன்று நாம் பந்தயத்தின் முடிவு கட்டத்தை நெருங்கி வந்துகொண்டிருக்கிறோம். பரிசுகள் கொடுக்கப்படுவதற்கான நேரம் அருகாமையில் உள்ளது. அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு அது “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளாக” இருக்கிறது. (பிலிப்பியர் 3:14) திரள்கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அது பரதீஸிய பூமியில் நித்திய ஜீவன். இத்தனை காரியங்கள் உட்பட்டு இருப்பதால், “ஆகாதவனாய் போகாதபடிக்கு” பவுலைப் போன்று தீர்மானமாய் இருப்போமாக. “நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்,” என்ற புத்திமதியை நாம் அனைவரும் இருதயத்தில் ஏற்போமாக.—1 கொரிந்தியர் 9:24, 27.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையை ஒரு பந்தயத்திற்கு ஒப்பிடுவது ஏன் பொருத்தமானதாய் இருக்கிறது?
◻ ஜீவனுக்கான பந்தயம் ஓர் ஓட்டப்பந்தயத்திலிருந்து எவ்வாறு வித்தியாசப்பட்டதாய் இருக்கிறது?
◻ நாம் “எல்லாவற்றிலேயும்” தொடர்ந்து தன்னடக்கத்தை ஏன் பிரயோகிக்க வேண்டும்?
◻ ஒருவர் எவ்விதமாக “நிச்சயமில்லாதவனாக” ஓடுகிறார்?
◻ வெறுமென “ஆகாயத்தை அடிப்பது” ஏன் அபாயகரமானது?
[பக்கம் 16-ன் படம்]
பந்தய வீரனின் வளையம், மகிமை, மதிப்பு ஆகியவை வாடிப்போகும்