யெகோவாவே நம் பேரரசராகிய எஜமானர்!
“பேரரசராகிய எஜமானர் யெகோவாவை என் அடைக்கலமாகக் கொண்டிருக்கிறேன்.” —சங். 73:28, NW.
1. ஒன்று கொரிந்தியர் 7:31-லுள்ள பவுலின் வார்த்தைகள் எதைத் தெரிவிக்கின்றன?
“இந்த உலகத்தின் காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 கொ. 7:31) இந்த உலகத்தை ஒரு நாடக மேடைக்கு அவர் ஒப்பிட்டு பேசுகிறார்; இந்த நாடகத்தின் காட்சி முடியும்வரை இதில் பங்கேற்கும் கதாபாத்திரங்கள் நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ நடிக்கிறார்கள்.
2, 3. (அ) யெகோவாவின் பேரரசாட்சிக்கு எதிராக விடப்பட்ட சவாலை எதற்கு ஒப்பிடலாம்? (ஆ) என்ன கேள்விகளைச் சிந்திக்கப்போகிறோம்?
2 இன்று மிக மிக முக்கியமான ஒரு நாடகம் நடந்துகொண்டிருக்கிறது; இதில் நீங்களும் கதாபாத்திரங்களாக இருக்கிறீர்கள்! இது விசேஷமாக யெகோவா தேவனின் பேரரசாட்சியே சரியானதென நிரூபிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்டது. இந்த நாடகத்தை ஒரு நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு ஒப்பிடலாம். அங்கு ஒழுங்கை நிலைநாட்ட சட்டப்பூர்வ அரசாங்கம் ஒன்று இருக்கிறது. அதேசமயத்தில், சட்டவிரோதமான ஓர் அமைப்பும் இருக்கிறது; இது ஊழல், வன்முறை, கொலை ஆகியவற்றிற்குப் பேர்போனது. இந்த அமைப்பு, சட்டப்பூர்வ அரசாங்கத்தை எதிர்த்துச் சவால் விடுகிறது; அதோடு, அதன் குடிமக்கள் எல்லாருடைய உண்மைத்தன்மையையும் சோதிக்கிறது.
3 இதேபோன்ற சூழ்நிலைதான் இந்தப் பிரபஞ்சத்தில் நிலவுகிறது. இங்கு ‘பேரரசராகிய எஜமானர் யெகோவாவின்’ சட்டப்பூர்வ அரசாங்கம் இருக்கிறது. (சங். 71:5, NW) ஆனால், ‘பொல்லாதவனுடைய’ கட்டுப்பாட்டில் இருக்கிற சட்டவிரோதமான அமைப்பு இன்று மனிதகுலத்தை அச்சுறுத்துகிறது. (1 யோ. 5:19) இது, கடவுளுடைய சட்டப்பூர்வ அரசாங்கத்தை எதிர்த்துச் சவால் விடுகிறது; அவருடைய உன்னத அரசாட்சிக்குக் கீழ்ப்பட்டிருக்கிற மக்கள் எல்லாருடைய உண்மைத்தன்மையையும் சோதிக்கிறது. இந்தச் சூழ்நிலை எப்படி உருவானது? இதைக் கடவுள் ஏன் அனுமதித்தார்? இந்த விஷயத்தில் நம் ஒவ்வொருவரின் பங்கு என்ன?
நாடகத்தில் இடம்பெறும் அம்சங்கள்
4. இந்தச் சர்வலோக நாடகத்தில் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்ட என்ன இரண்டு விவாதங்கள் இடம்பெறுகின்றன?
4 இந்தச் சர்வலோக நாடகத்தில், ஒன்றோடொன்று சம்பந்தப்பட்ட இரண்டு விவாதங்கள் இடம்பெறுகின்றன: ஒன்று யெகோவாவின் பேரரசாட்சி, மற்றொன்று மனிதரின் உத்தமத்தன்மை. பொதுவாக, யெகோவாவை “பேரரசராகிய எஜமானர்” என்றே பைபிள் குறிப்பிடுகிறது. உதாரணமாக, சங்கீதக்காரன் முழு நம்பிக்கையுடன் இவ்வாறு பாடினார்: “பேரரசராகிய எஜமானர் யெகோவாவை என் அடைக்கலமாகக் கொண்டிருக்கிறேன்.” (சங். 73:28, NW) ‘பேரரசாட்சி’ என்பது உன்னத அதிகாரத்தை அல்லது அரசாட்சியைக் குறிக்கிறது. ஒரு பேரரசரின் அதிகாரம் எந்த அதிகாரத்தையும்விட உன்னதமானது. எனவே, யெகோவா தேவனை உன்னதப் பேரரசராகக் கருதுவதற்குத் தகுந்த காரணங்கள் இருக்கின்றன.—தானி. 7:21.
5. யெகோவாவின் பேரரசாட்சியை ஆதரிக்க எது நம்மைத் தூண்ட வேண்டும்?
5 படைப்பாளரான யெகோவா தேவன் இந்தப் பூமிக்கும் சர்வலோகத்திற்கும் பேரரசராக இருக்கிறார். (வெளிப்படுத்துதல் 4:11-ஐ வாசியுங்கள்.) யெகோவா நமக்கு நியாயாதிபதி, சட்டம் இயற்றுபவர், ராஜா. (ஏசா. 33:22, NW) அவராலேயே நாம் உயிரோடிருக்கிறோம், அவரையே அண்டி வாழ்கிறோம்; ஆகவே, அவரை நம் பேரரசராகிய எஜமானராகக் கருத வேண்டும். “கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது” என்பதை எப்போதும் மனதில் வைத்தால், அவருடைய உயர்ந்த ஸ்தானத்தை ஆதரிக்கத் தூண்டப்படுவோம்.—சங். 103:19; அப். 4:24.
6. உத்தமத்தன்மை என்றால் என்ன?
6 யெகோவாவின் பேரரசாட்சியை ஆதரிப்பதற்கு நாம் எப்போதுமே அவருக்கு உத்தமமாய் இருக்க வேண்டும். “உத்தமத்தன்மை” என்பது ஒழுக்கநெறி தவறாதிருப்பதை, முழு இதயத்தோடு கடவுளிடம் பக்தி காட்டுவதைக் குறிக்கிறது. உத்தமமாய் நடப்பவர் மாசற்றவராகவும் நேர்மையானவராகவும் இருப்பார். முற்பிதாவாகிய யோபு அப்படிப்பட்டவராக இருந்தார்.—யோபு 1:1, பொது மொழிபெயர்ப்பு.
நாடகம் எப்படி ஆரம்பமானது
7, 8. யெகோவாவின் பேரரசாட்சி சரியானதா என்பதைக் குறித்து சாத்தான் எப்படிக் கேள்வி எழுப்பினான்?
7 சுமார் 6,000 வருடங்களுக்கு முன்பு, தேவதூதன் ஒருவன் யெகோவாவின் பேரரசாட்சி சரியானதா என்ற கேள்வியை எழுப்பினான். எல்லாரும் தன்னை வணங்க வேண்டுமென்ற ஆசை அவனுடைய பேச்சிலும் செயலிலும் வெளிப்பட்டது. முதல் தம்பதியரான ஆதாம் ஏவாளைக் கடவுளின் பேரரசாட்சிக்குத் துரோகம் செய்ய அவன் தூண்டினான்; கடவுள் ஒரு பொய்யர் என்று சொல்வதன் மூலம் அவருடைய பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றான். (ஆதியாகமம் 3:1-5-ஐ வாசியுங்கள்.) அந்தக் கலகக்காரன் பரம எதிரியாக, சாத்தானாக (எதிர்ப்பவன்), பிசாசாக (பழிதூற்றுபவன்), பாம்பாக (வஞ்சிப்பவன்), ராட்சதப் பாம்பாக (விழுங்குபவன்) ஆனான்.—வெளி. 12:9.
8 இவ்வாறு, அவன் யெகோவாவுக்குப் போட்டி ஆட்சியாளனாக ஆனான். இப்போது, பேரரசரான யெகோவா எப்படி அவனுடைய சவாலுக்குப் பதிலளிப்பார்? சாத்தான், ஆதாம், ஏவாள் ஆகிய மூன்று கலகக்காரரையும் உடனடியாக அழித்துவிடுவாரா? அழிக்க உண்மையிலேயே அவருக்கு வல்லமை இருந்தது; அப்படிச் செய்திருந்தால், யாருக்கு அதிக வல்லமை இருக்கிறது என்ற கேள்விக்குப் பதில் அளித்திருக்கும். அதோடு, தம்முடைய சட்டத்தை மீறினால் தண்டனை கிடைக்கும் என்று அவர் சொல்லியிருந்ததையும் நிரூபித்திருக்கும். ஆனால், கடவுள் ஏன் அப்படிச் செய்யவில்லை?
9. சாத்தான் எதைக் குறித்து கேள்வி எழுப்பினான்?
9 சாத்தான் பொய்ச் சொல்லி, ஆதாம் ஏவாளை யெகோவாவிடமிருந்து திருப்பியதன் மூலம் மனிதர் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பினான். அதுமட்டுமல்ல, முதல் தம்பதியரைக் கீழ்ப்படியாமல் போகும்படி செய்ததன் மூலம் புத்திக்கூர்மையுள்ள படைப்புகள் அனைவருடைய உண்மைத்தன்மையைக் குறித்தும் கேள்வி எழுப்பினான். மனிதர் எல்லாரையுமே கடவுளிடமிருந்து விலக்க முடியும் என்று அவன் அடித்துச் சொன்னான்; யெகோவாவின் பேரரசாட்சிக்கு உண்மையோடிருந்த யோபுவின் வாழ்க்கையிலிருந்து இதைத் தெரிந்துகொள்ளலாம்.—யோபு 2:1-5.
10. தம்முடைய பேரரசாட்சியைக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உடனடியாகப் பதிலளிக்காமல் இருந்ததன் மூலம் கடவுள் எதை அனுமதித்தார்?
10 யெகோவா தம்முடைய பேரரசாட்சியைக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உடனடியாகப் பதிலளிக்காமல் இருந்ததன் மூலம் சாத்தான் தன்னுடைய விவாதத்தை நிரூபிக்க காலம் அனுமதித்தார். அதோடு, தம்முடைய பேரரசாட்சிக்கு உண்மையோடு இருப்பதைச் செயலில் காட்ட மனிதருக்கும் வாய்ப்பளித்தார். கடந்த நூற்றாண்டுகளில் என்ன நடந்திருக்கிறது? சாத்தான் சட்டவிரோதமான ஓர் அமைப்பை, அதுவும் வலுவான ஓர் அமைப்பை, உருவாக்கியிருக்கிறான். என்றாலும், கடைசியில் யெகோவா அந்த அமைப்பையும் பிசாசையும் அழித்துவிடுவார்; இவ்வாறு, தம்முடைய பேரரசாட்சியே சரியானது என்பதற்கு ஆணித்தரமான அத்தாட்சியை அளிப்பார். அந்த விவாதம் நன்மையில் முடிவடையும் என்பதில் யெகோவா தேவனுக்குத் துளியும் சந்தேகம் இருக்கவில்லை; அதனால்தான், ஏதேனில் கலகம் தலைதூக்கியபோது அந்த விவாதத்தின் முடிவைக் குறித்து முன்னறிவித்தார்.—ஆதி. 3:15.
11. யெகோவாவின் பேரரசாட்சி சம்பந்தமாக, அநேகர் என்ன செய்திருக்கிறார்கள்?
11 யெகோவாவின் பேரரசாட்சிக்கு அநேகர் தங்களுடைய விசுவாசத்தையும் உண்மைத்தன்மையையும் காட்டியிருக்கிறார்கள்; அதோடு, அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதிலும் பங்களித்திருக்கிறார்கள். ஆபேல், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், சாராள், மோசே, ரூத், தாவீது, இயேசு, அவருடைய ஆரம்பகால சீடர்கள், இன்று உத்தமராய் நடக்கிற லட்சோப லட்ச மக்கள் என அவர்களின் பட்டியல் நீள்கிறது. கடவுளுடைய பேரரசாட்சியை ஆதரிக்கிற இப்படிப்பட்டவர்கள் சாத்தானைப் பொய்யனாக நிரூபிப்பதில் பங்குகொள்கிறார்கள்; அதோடு, மனிதர் எல்லாரையுமே யெகோவாவிடமிருந்து தன்னால் விலக்கிவிட முடியுமென பிசாசு மார்தட்டிச் சொன்னதன் மூலம் அவருடைய பெயருக்கு ஏற்படுத்திய களங்கத்தைப் போக்குவதிலும் பங்குகொள்கிறார்கள்.—நீதி. 27:11.
நாடகத்தின் முடிவு தெரிந்ததே
12. தீமையைச் சதாகாலமும் கடவுள் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்பதை நாம் ஏன் உறுதியாய் நம்பலாம்?
12 யெகோவா சீக்கிரத்தில் தம்முடைய பேரரசாட்சியே சரியானதென நிரூபிப்பார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம். தீமை தொடர்கதையாவதை அவர் பொறுத்துக்கொள்ளவே மாட்டார். அதுமட்டுமல்ல, நாம் கடைசி காலத்தில் வாழ்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். நோவா காலத்தில், தீயவர்களைப் பெருவெள்ளத்தால் அவர் அழித்தார். சோதோம், கொமோரா பட்டணத்தாரையும், பார்வோனையும் அவனுடைய படைவீரர்களையும் அவர் அழித்தார். சிசெராவையும் அவனுடைய படைவீரர்களையும் சனகெரிப்பையும் அவனுடைய அசீரிய படைவீரர்களையும் உன்னதமான கடவுள் படுதோல்வி அடையச் செய்தார். (ஆதி. 7:1, 23; 19:24, 25; யாத். 14:30, 31; நியா. 4:15, 16; 2 இரா. 19:35, 36) தம்முடைய பெயரை இழிவுபடுத்துவதையும் தம்முடைய சாட்சிகளைத் துன்புறுத்துவதையும் என்றென்றைக்கும் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம். அதோடு, இயேசுவின் பிரசன்னத்திற்கும் இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவுக்குமான அடையாளத்தை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.—மத். 24:3.
13. யெகோவாவின் விரோதிகளோடு சேர்ந்து நாமும் அழிந்துவிடாமல் எப்படித் தப்பிக்கலாம்?
13 கடவுளுடைய விரோதிகளோடு சேர்ந்து நாமும் அழிந்துவிடாதிருக்க, யெகோவாவின் பேரரசாட்சிக்கு உண்மையுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும். எப்படி? சாத்தானுடைய பொல்லாத ஆட்சியை ஆதரிக்காமலும் அவனுடைய ஆதரவாளர்களுக்குப் பயப்படாமலும் இருப்பதன் மூலம். (ஏசா. 52:11; யோவா. 17:16; அப். 5:29) இப்படிச் செய்தால்தான் நம் பரலோகத் தகப்பனின் பேரரசாட்சியை ஆதரிக்க முடியும்; அதோடு, யெகோவா தம்முடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்குவதற்கும் தாம் மட்டுமே சர்வலோகப் பேரரசர் என்பதை நிரூபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும்போது நாம் தப்பிப்பிழைக்கவும் முடியும்.
14. பைபிளில் என்னென்ன விஷயங்கள் உள்ளன?
14 யெகோவாவின் பேரரசாட்சியையும் மனிதகுலத்திற்கு அவர் என்ன செய்வார் என்பதையும் பற்றிய விவரங்கள் பைபிள் முழுவதும் உள்ளன. பைபிளின் முதல் மூன்று அதிகாரங்கள் படைப்பையும் மனிதர் பாவத்தில் வீழ்ந்ததையும் பற்றிச் சொல்கின்றன; கடைசி மூன்று அதிகாரங்களோ மனிதர் மீட்பு பெறுவதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. இடைப்பட்ட அதிகாரங்கள், மனிதருக்கும் பூமிக்கும் பிரபஞ்சத்திற்கும் தாம் வைத்திருக்கிற நோக்கத்தை நிறைவேற்ற பேரரசரான எஜமானர் யெகோவா எடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றிய விவரங்களைத் தருகின்றன. சாத்தான் எப்படி வந்தான், பூமியில் தீமை எப்படி ஆரம்பமானது என்பதை ஆதியாகமப் புத்தகம் சொல்கிறது; வெளிப்படுத்துதல் புத்தகத்தின் கடைசி பாகம் தீமை எப்படி ஒழிக்கப்படும், சாத்தான் எப்படி அழிக்கப்படுவான், கடவுளுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியில் எப்படிச் செய்யப்படும் என்பதைச் சொல்கிறது. ஆம், பாவத்திற்கும் மரணத்திற்கும் காரணம் என்ன என்பதை பைபிள் வெளிப்படுத்துகிறது; அதோடு, அவை பூமியிலிருந்து நீக்கப்பட்டு, உத்தமர்கள் அளவில்லா ஆனந்தத்தையும் முடிவில்லா வாழ்வையும் பெறுவது எப்படி என்றும் தெரிவிக்கிறது.
15. பேரரசாட்சி பற்றிய நாடகம் முடிவடையும்போது அதிலிருந்து நாம் ஒவ்வொருவரும் பயனடைய என்ன செய்ய வேண்டும்?
15 சீக்கிரத்தில், இந்த உலகத்தின் காட்சி அடியோடு மாறப்போகிறது. கடவுளுடைய பேரரசாட்சி சம்பந்தமான அந்த நீண்ட நாடகம் முற்றுப்பெறும்; அப்போது திரை விழும். நாடக மேடையிலிருந்து சாத்தான் நீக்கப்பட்டு, நித்தியமாக அழிக்கப்படுவான்; கடவுளுடைய சித்தமும் நிறைவேற்றப்படும். ஆனால், நாம் பயனடைவதற்கும் கடவுளுடைய வார்த்தையில் சொல்லப்பட்டுள்ள எண்ணிலடங்கா ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கும் இப்போதே யெகோவாவின் பேரரசாட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் நாம் மதில்மேல் பூனையாக இருக்க முடியாது. “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்” என்று சொல்ல வேண்டுமானால் நாம் எப்போதும் அவர் பட்சத்தில் இருக்க வேண்டும்.—சங். 118:6, 7.
நாம் உத்தமத்தில் நிலைத்திருக்க முடியும்
16. கடவுளுக்கு மனிதர் உத்தமமாய் நிலைத்திருக்க முடியுமென ஏன் உறுதியாய் சொல்லலாம்?
16 நாம் யெகோவாவின் பேரரசாட்சியை ஆதரிக்கவும் உத்தமத்தில் நிலைத்திருக்கவும் முடியும்; ஏனென்றால், “மனிதர்களுக்குப் பொதுவாக வருகிற சோதனையைத் தவிர வேறெந்தச் சோதனையும் உங்களுக்கு வரவில்லை. ஆனால், கடவுள் நம்பகமானவர்; உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு நீங்கள் சோதிக்கப்பட அவர் அனுமதிக்க மாட்டார்; மாறாக, சோதனையை நீங்கள் சகித்துக்கொள்வதற்கு வழிசெய்வார்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொ. 10:13) இங்கு பவுல் எப்படிப்பட்ட சோதனையைப் பற்றிக் குறிப்பிடுகிறார், அதை நாம் சகித்துக்கொள்வதற்குக் கடவுள் எப்படி வழிசெய்கிறார்?
17-19. (அ) இஸ்ரவேலர் வனாந்தரத்தில் என்ன சோதனைக்குள் வீழ்ந்துவிட்டார்கள்? (ஆ) நம்மால் யெகோவாவுக்கு உத்தமமாய் இருக்க முடியும் என்று ஏன் சொல்லலாம்?
17 சூழ்நிலைகள் காரணமாக “சோதனை” வரலாம் என்பதை வனாந்தரத்திலிருந்த இஸ்ரவேலருடைய அனுபவம் காட்டுகிறது; அப்படிப்பட்ட சோதனை வரும்போது கடவுளுடைய சட்டத்தை மீறும்படி நாம் தூண்டப்படலாம். (1 கொரிந்தியர் 10:6-10-ஐ வாசியுங்கள்.) இஸ்ரவேலரால் சோதனையை எதிர்த்துச் சமாளித்திருக்க முடியும், ஆனால் ஒரு மாதத்திற்குப் போதுமான காடைகளை யெகோவா கொடுத்த சமயத்தில் அவர்கள் “தீமையானவற்றை” விரும்பினார்கள். இறைச்சி சாப்பிட்டு சில காலம் ஆகியிருந்தாலும் போதுமான மன்னாவை அவர்களுக்குக் கடவுள் கொடுத்திருந்தார். ஆனாலும், கட்டுக்கடங்கா பேராசையுடன் காடைகளைச் சேகரித்ததன் மூலம் சோதனைக்கு இடமளித்துவிட்டார்கள்.—எண். 11:19, 20, 31-35.
18 இதற்கு முன்பு, திருச்சட்டத்தைப் பெற சீனாய் மலைக்கு மோசே சென்றிருந்தபோது இஸ்ரவேலர் உருவ வழிபாட்டில் ஈடுபட்டார்கள்; ஆம், கன்றுக்குட்டியை வழிபட்டு இன்பங்களில் திளைத்திருந்தார்கள். அவர்களுடைய தலைவரான மோசே இல்லாத நேரத்தில் சோதனையில் சிக்கிவிட்டார்கள். (யாத். 32:1, 6) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் நுழைவதற்குச் சற்று முன்பு, ஆயிரக்கணக்கான இஸ்ரவேலர் மோவாபிய பெண்கள் விரித்த மோக வலையில் விழுந்துவிட்டார்கள். அச்சமயத்தில், இஸ்ரவேலரில் பல்லாயிரம் பேர் பாவப் படுகுழியில் விழுந்து மாண்டுபோனார்கள். (எண். 25:1, 9) சில சமயங்களில், சோதனைக்கு இடமளித்து முறுமுறுத்தார்கள்; ஒரு சந்தர்ப்பத்தில் மோசேக்கு விரோதமாக, ஏன் கடவுளுக்கே விரோதமாகப் பேசினார்கள். (எண். 21:5) கெட்டவர்களான கோராகு, தாத்தான், அபிராம், அவர்களுடைய கூட்டாளிகள் எல்லாரும் அழிக்கப்பட்ட பிறகும்கூட, அப்படி அழித்தது அநியாயம் என்று சொல்லி முறுமுறுத்தார்கள். அதனால், இஸ்ரவேலரில் 14,700 பேர் கடவுள் அனுப்பிய வாதைக்குப் பலியானார்கள்.—எண். 16:41, 49.
19 மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்தச் சோதனைகள் எதுவுமே இஸ்ரவேலரால் சமாளிக்க முடியாதவை அல்ல. இருந்தாலும், அவர்கள் சோதனையில் வீழ்ந்துவிட்டார்கள். காரணம்? யெகோவா மீதுள்ள விசுவாசத்தை அவர்கள் இழந்துவிட்டார்கள், அவரையும் அவர்கள்மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் அவருடைய நீதியான வழிகளையும் மறந்துவிட்டார்கள். இஸ்ரவேலருடைய விஷயத்தில் பார்த்த விதமாக, நாம் எதிர்ப்படுகிற சோதனைகள் எல்லாம் மனிதருக்குப் பொதுவாக வருகிற சோதனைகள்தான். அவற்றைச் சமாளிக்க எல்லா முயற்சியும் எடுத்து நாம் யெகோவாவைச் சார்ந்திருந்தால், உத்தமத்தில் நிலைத்திருக்க முடியும் என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம். ஏனென்றால், “கடவுள் நம்பகமானவர்”; அதுமட்டுமல்ல, “தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு [நாம்] சோதிக்கப்பட அவர் அனுமதிக்க மாட்டார்.” அவருடைய சித்தத்தைச் செய்ய முடியாத சூழ்நிலைக்குள் நாம் சிக்கிவிட அவர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்.—சங். 94:14.
20, 21. நாம் சோதிக்கப்படும்போது, அதைச் சகிக்க கடவுள் நமக்கு எப்படி ‘வழிசெய்கிறார்’?
20 யெகோவா நம்மைப் பலப்படுத்துவதன் மூலம் சோதனைகளை எதிர்த்துச் சமாளிக்க ‘வழிசெய்கிறார்.’ உதாரணத்திற்கு, விசுவாசத்தைவிட்டு விலக்குவதற்காகத் துன்புறுத்துவோர் நம்மைக் கொடுமைப்படுத்தலாம். அவர்கள் நம்மை இன்னும் அடிப்பார்களோ, சித்திரவதை செய்வார்களோ, கொலைகூட செய்துவிடுவார்களோ என பயந்து இப்படிப்பட்ட சோதனைக்கு இணங்கிவிட நினைக்கலாம். ஆனால், இந்தச் சோதனைகள் எல்லாம் தற்காலிகமானவையே என்பதை 1 கொரிந்தியர் 10:13-ல் உள்ள பவுலின் வார்த்தைகள் உறுதியளிக்கின்றன. நாம் உண்மையோடு நிலைத்திருக்க முடியாதளவுக்குச் சோதனைகள் கைமீறிப் போக யெகோவா அனுமதிக்க மாட்டார். அவர் நம் விசுவாசத்தைத் திடப்படுத்தி, உத்தமத்தில் நிலைத்திருப்பதற்குத் தேவையான பலத்தைத் தருவார்.
21 யெகோவா தமது சக்தியினால் நம்மைத் தாங்குகிறார். சோதனையைச் சமாளிப்பதற்கு உதவும் பைபிள் வசனங்களையும் அவருடைய சக்தி நமக்கு நினைப்பூட்டும். (யோவா. 14:26) அதனால், தவறான வழியில் சென்றுவிட மாட்டோம். உதாரணமாக, யெகோவாவின் பேரரசாட்சியையும் மனிதருடைய உத்தமத்தன்மையையும் பற்றிய விவாதங்களை நாம் அறிந்திருக்கிறோம். இதை அறிந்திருக்கிற அநேகர், மரணம்வரை உண்மையோடு நிலைத்திருக்க கடவுளுடைய உதவியைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சோதனையிலிருந்து தப்பிக்க மரணமே வழியாக இருக்கவில்லை; மாறாக, யெகோவா செய்த உதவியே சோதனைக்கு இணங்கிவிடாமல் கடைசிவரை சகித்திருக்க அவர்களுக்குக் கைகொடுத்தது. அவர் நமக்கும் அவ்வாறு உதவுவார். சொல்லப்போனால், “மீட்பைப் பெறப்போகிறவர்களுக்குப் பணிவிடை செய்ய அனுப்பப்படுகிற” உண்மையுள்ள தேவதூதர்களையும் நம் சார்பாக அவர் பயன்படுத்துகிறார். (எபி. 1:14) கடவுளுடைய பேரரசாட்சியை என்றென்றும் ஆதரிக்கும் அருமையான வாய்ப்பை உத்தமர்கள் மட்டுமே பெற முடியும் என்பதை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம். நம் பேரரசராகிய எஜமானர் யெகோவாவைப் பற்றிக்கொண்டால், நாமும் அவர்களில் ஒருவராக இருப்போம்.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• நாம் ஏன் யெகோவாவை நம் பேரரசரான எஜமானராக ஏற்றுக்கொள்ள வேண்டும்?
• கடவுளுக்கு உத்தமமாய் நிலைத்திருப்பது என்றால் என்ன?
• யெகோவா சீக்கிரத்தில் தம்முடைய பேரரசாட்சியே சரியானதென நிரூபிப்பார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
• 1 கொரிந்தியர் 10:13-லுள்ள கருத்துப்படி நம்மால் யெகோவாவுக்கு உத்தமமாய் இருக்க முடியும் என்று ஏன் சொல்லலாம்?
[பக்கம் 24-ன் படம்]
யெகோவாவுக்குத் துரோகம் செய்ய ஆதாம் ஏவாளைச் சாத்தான் தூண்டினான்
[பக்கம் 26-ன் படம்]
யெகோவாவின் பேரரசாட்சியை ஆதரிக்கத் தீர்மானமாய் இருங்கள்