பைபிளின் கருத்து
கிறிஸ்தவ ஒருமை பல்வகைமையை அனுமதிக்கிறதா?
கிறிஸ்தவ சபையில் ஒருமை மிகவும் அவசியம். கொள்கை சார்ந்த நம்பிக்கையில் ஒருமையின்மை, கடும் விவாதங்களும் அபிப்பிராய பேதமும், பகைமையும்கூட ஏற்பட வழிவகுக்கும். (அப்போஸ்தலர் 23:6-10) “தேவன் ஒழுங்கின்மைக்குத் தேவனாயிராமல், சமாதானத்துக்குத் தேவனாயிருக்கிறார்” என்று பைபிள் கூறுகிறது. (1 கொரிந்தியர் 14:33, NW) ஆகவே, கிறிஸ்தவர்கள் ஒரேகாரியத்தைப் பேசவும், ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் அறிவுரை கூறப்படுகிறது.—1 கொரிந்தியர் 1:10.
இந்த வார்த்தைகளும் இதைப் போன்ற பைபிள் வசனங்களும், கிறிஸ்தவர்கள் எல்லா விஷயங்களிலும் தங்களுக்கு மத்தியில் அவசியமாகவே ஒருமைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்துகின்றனவா? (யோவான் 17:20-23; கலாத்தியர் 3:28) பைபிளில் விவரிக்கப்பட்டிருக்கும் மெய்க் கிறிஸ்தவம், தனிநபரின் ஆளுமையைப் பற்றிய விஷயத்தில் பல்வகைமையை எதிர்க்கிறதா? கெட்டியான ஓர் அச்சில் வார்க்கப்பட்டதைப் போல கிறிஸ்தவர்கள் எல்லாருமே ஒரேமாதிரியாய் இருக்கும்படியே எதிர்பார்க்கப்படுகின்றனரா?
நம்மைத் தனிநபராக கடவுள் தம்மிடம் இழுக்கிறார்
பாமரமக்கள் தங்களைத் தாங்களே தன்னிச்சையாக கட்டுப்படுத்திக்கொள்வதற்கு பைபிள் வெறுமனே மற்றொரு கருவியாய் இருப்பதாக சிலர் உறுதியாய் நம்புகின்றனர். எனவேதான், சில மதப்பிரிவினரால் அடிக்கடி அது தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. என்றாலும், பைபிள் புத்தகங்களையும் அவற்றின் தெய்வீக ஆசிரியரையும் பற்றி வேறொரு கோணத்தில் இயேசு விளக்கினார். தம்முடைய படைப்புகள் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்த அக்கறை காட்டும் ஒருவராக கடவுளை பைபிள் விவரிக்கிறது.
யோவான் 6:44-ல், இயேசு இவ்வாறு விவரித்தார்: “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.” இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ள வினைச்சொல்லானது, தங்களுடைய விருப்பத்துக்கு மாறாக மக்களைக் கடவுள் இழுக்கிறார் என்று குறிப்பிட்டுக் காட்டுவதில்லை. அதற்குப் பதிலாக, கடவுள் மென்மையாய் கவர்ந்திழுக்கிறார், இதயப்பூர்வமான ஆவலைத் தூண்டிவிடுகிறார். ஒரு பைபிள் கல்விமான் விவரித்தபடி, ‘மனது நம்பும்படியாக நம்மீது கடவுள் செல்வாக்கு செலுத்துகிறார்.’ தனித்துவம் இல்லாத ஒரு ஜனக்கூட்டமாய் மனித குடும்பத்தை சிருஷ்டிகர் நோக்குவதில்லை. தனிநபர்களை அவர் மதிப்பிடுகிறார்; செம்மையான இதயமுள்ளோரை தம்மிடம் மென்மையாய் இழுத்துக்கொள்கிறார்.—சங்கீதம் 11:5; நீதிமொழிகள் 21:2; அப்போஸ்தலர் 13:48.
அப்போஸ்தலன் பவுல், சந்தர்ப்பத்துக்கேற்றவாறு மாற்றியமைத்துக்கொண்ட விதத்தைக் கவனியுங்கள். அவர் தனிநபர்களது பிரத்தியேக தேவைகளைப் புரிந்துகொண்டு, குறிப்பிட்ட தேசத்தினருக்கு அல்லது பின்னணியினருக்கு சில நோக்குநிலைகள் பொதுவாய் இருந்தன என்பதை ஒப்புக்கொண்டார். பிறகு அதற்கு ஏற்றாற்போல் தன்னுடைய அணுகுமுறையை அவர் மாற்றியமைத்துக்கொண்டார். அவர் எழுதினதாவது: “யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும் . . . பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.”—1 கொரிந்தியர் 9:20-22.
பவுல் ஜனங்களை ஒரே மாதிரியானவர்களாக நினைக்கவோ அல்லது எல்லாரையும் ஒரே விதமாய் நடத்தவோ இல்லை என்பது தெளிவாய் தெரிகிறது. அவர் பின்வரும் இந்த உற்சாகத்தை அளித்தார்: “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.” (கொலோசெயர் 4:6) ஆம், பவுலும் மற்ற கிறிஸ்தவர்களும், ஒவ்வொருவருக்கும் உதவுவதற்காக அவரவருடைய தனித்தன்மையை புரிந்துகொண்டு அதை மதிக்கவேண்டியிருந்தது.
கடவுளுடைய ஆதி நோக்கம்
தனிநபராக ஒருவருக்கு காட்டப்படும் இந்த மரியாதை, அவர் கிறிஸ்தவ சபையின் பாகமான பின்பும் தொடருகிறது. முழுமையான ஒருமை, மற்றும் அதிகாரம் செலுத்துவோரின் முன்னுரிமைகளுடன் முற்றிலும் ஒத்துப்போதல் எனும் கடலுக்குள் கடவுளின் ஜனங்கள் மூழ்கிவிடுவதில்லை. மாறாக, விசாலித்திருக்கும் பல்வகைப்பட்ட ஆளுமையால் மகிழுகின்றனர்; வெவ்வேறு திறமைகளும் பழக்கங்களும் கருத்துக்களும் அவர்களிடையே இருக்கின்றன. ஒவ்வொருவரின் தனித்துவமும் தொந்தரவாகவோ அல்லது இடைஞ்சலாகவோ நோக்கப்படுவதில்லை. அது கடவுளுடைய ஆதி நோக்கத்தின் பாகமே.
ஆகவே, நீதிமான்களுக்கென பைபிள் வாக்குக்கொடுத்திருக்கும் புதிய உலகில், மனிதர்களின் மத்தியில் பரிபூரணத்தன்மை இருப்பதானது, மிகப் பல்வேறான வகையை அனுமதிக்கும். (2 பேதுரு 3:13) “பரிபூரணத்தன்மை” என்ற தலைப்பில், பைபிள் என்ஸைக்ளோப்பீடியாவான வேதாகமங்களின் பேரில் உட்பார்வை a (ஆங்கிலம்) என்ற புத்தகம் பொருத்தமாகவே பின்வரும் கூற்றுக்களைக் குறிப்பிடுகிறது: “என்றாலும், ஆட்கள் பொதுவாக நினைப்பதைப் போன்று, பரிபூரணத்தன்மை பல்வகைமைக்கு முடிவை அர்த்தப்படுத்துவதில்லை. யெகோவாவின் ‘பரிபூரண படைப்புச்செயலின்’ (ஆதி[யாகமம்] 1:20-24; உபா[கமம்] 32:4, NW), விளைபொருளாய் இருக்கும் விலங்கு சாம்ராஜ்யத்தில், ஏராளமான வகைப்பாடு அடங்கியுள்ளது.”
உட்பார்வை மேலும் சொல்வதாவது: “அதுபோலவே, பூமிக்கோளத்தின் பரிபூரணத்தன்மையும் பல்வகைமை, மாறுதல், அல்லது முரண்பாடு ஆகியவற்றை உடையதால் ஒன்றோடொன்று ஒத்துப்போகாமல் இல்லை; எளியவை மற்றும் சிக்கலானவை, அலங்காரமின்மை மற்றும் அலங்காரம், புளிப்பு மற்றும் இனிப்பு, கடினமானவை மற்றும் மிருதுவானவை, புல்வெளிகள் மற்றும் காடுகள், மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆகிய அனைத்தையும் அது அனுமதிக்கிறது. அது, வசந்தகால துவக்கத்தின் கிளர்ச்சியூட்டும் புதுமலர்ச்சியையும், தெளிவான நீல நிற வானங்களுடன்கூடிய கோடைகால இதத்தையும், இலையுதிர்கால பலவண்ணங்களின் அழகையும், புதிய பனியின் புதுப்பொலிவையும் உள்ளடக்குகிறது. (ஆதி[யாகமம்] 8:22) இவ்வாறு, பரிபூரண மனிதர்கள் ஒரேவிதமான ஆளுமை, அறிவாற்றல்கள், திறன்கள் ஆகியவற்றையுடைய ஒரே வகையினராய் இருக்கமாட்டார்கள்.”
மற்றவர்களுக்கான அக்கறை
என்றபோதிலும், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு என்ன நடந்தாலும்சரி, அதில் கொஞ்சம்கூட அக்கறை காட்டாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என சுயநலமாய் இருப்பதை மெய்க் கிறிஸ்தவம் தடைசெய்கிறது. அப்போஸ்தலன் பவுல், மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்குவதைத் தவிர்ப்பதற்காக தன் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் மிகவும் எச்சரிக்கையாய் நடந்துகொண்டார். கொரிந்துவிலிருந்த சபைக்கு எழுதிய கடிதத்தில் அவர் இவ்வாறு கூறினார்: ‘இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்குவதில்லை.’ (2 கொரிந்தியர் 6:3) சிலசமயங்களில், நம்முடைய தனிப்பட்ட ஆவல்களை நாம் கட்டுப்படுத்திக்கொண்டு, நம் சொந்த விருப்புவெறுப்புகளைக் காட்டிலும் மற்றவர்களுடைய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உதாரணமாக, ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.”—ரோமர் 14:21.
அதைப்போலவே இன்றும், தன் குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினையுடைய ஒருவரின் முன்னிலையில் மது அருந்தாமலிருப்பதை ஒருவர் தெரிந்துகொள்ளலாம். (1 கொரிந்தியர் 10:23, 24) இது, அடுத்தவரின் முன்னுரிமைக்காக செய்ய வேண்டியிருக்கிறதே என்ற கட்டாயத்துடன் செய்யப்படாமல், தயவு மற்றும் அன்புடன்கூடிய பெருந்தன்மையான செயலாகச் செய்யப்படுகிறது. “கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்” இருந்தார். இயேசு ஒரு தனிநபராய் இருந்தார்; ஆனால், மற்றவர்களுடைய உணர்ச்சிகளைப் பொருட்படுத்தாத அளவுக்கு தம் முன்னுரிமைகளை வலியுறுத்தவில்லை.—ரோமர் 15:3.
இன்னும், மெய்க் கிறிஸ்தவத்தின் மிகவும் புத்துணர்ச்சியூட்டும் அம்சங்களில் ஒன்று என்னவென்றால், தனிநபர்களின் சுதந்திரத்துக்கும் முன்னுரிமைக்கும் பைபிள் வழிகாட்டுக் குறிப்புகளின் அடிப்படையில் மரியாதை காட்டுவது. நாம் தனிப்பட்டவர்களாயும் தனித்தன்மை உடையவர்களாயும் இருக்கும்படியே கடவுள் நம்மை உண்டாக்கினதாய் அது கற்பிக்கிறது. 1 கொரிந்தியர் 2:11-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்?” நம்மால் முடிந்தவரை மற்றவர்களைப் புரிந்துகொள்ள நாம் முயலுகிறோம். ஆனால், இந்த வசனம், நாமும் நம் சிருஷ்டிகரும் மட்டுமே புரிந்துகொள்ளும் வகையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது என்பதைக் குறித்துக்காட்டுகிறது. நமக்கு விருப்பமான விதத்தில் வெளிக்காட்டும், ‘இருதயத்தில் மறைந்திருக்கிற குணம்’ நமக்கிருக்கிறது.—1 பேதுரு 3:4.
ஒருமையும் பல்வகைமையும் —கவனமான சமநிலை
கிறிஸ்தவ சமநிலைக்கு அப்போஸ்தலன் பவுல் நல்ல முன்மாதிரி வைத்தார். கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக அதிகாரமுடையவராய் இருந்தும், மற்றவர்கள்மீது தன் கருத்தைத் திணிக்காதிருக்க அவர் கவனமாய் இருந்தார்.
உதாரணமாக, அபூரணமான இந்த உலகில் மணமாகாத நிலையின் பலன்களைப் பற்றி வெகு நல்ல அபிப்பிராயம் அவருக்கு இருந்தது. அவர், “அப்படிப்பட்டவர்கள் [விவாகம்பண்ணினவர்கள்] சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்” என்றும், “என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் [விதவையானவள்] அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாய் [“சந்தோஷமுள்ளவளாய்,” NW] இருப்பாள்” என்றும் எழுதினபோது அவருமே ஒண்டியாய் இருந்தார். அவர் எழுதியவை கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையின் பாகமான உண்மை, அவருடைய அபிப்பிராயத்தில் எந்தத் தவறும் இல்லை என்று காட்டுகிறது. ஆனாலும், அவர் இவ்வாறும் விவரித்தார்: “நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல.”—1 கொரிந்தியர் 7:28, 40.
அப்போஸ்தலர்களில் பெரும்பாலானோர் திருமணமான ஆண்களாய் இருந்தனர் என்பது தெளிவாய் இருக்கிறது; அதனால்தான் பவுல் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?” (1 கொரிந்தியர் 9:5) இந்த விஷயத்தில் தாங்கள் பவுலினுடையதிலிருந்து வித்தியாசமான தெரிவுகளைச் செய்யலாம் என்றும், அவ்வாறு செய்தாலும் பவுல் தங்களை மதிப்பார் என்றும் கிறிஸ்தவர்கள் அறிந்திருந்தனர்.
கடவுளை வணங்குபவர்கள், தங்களுடைய தனித்தன்மையுள்ள ஆளுமைக்கு இசைவாக தங்களுடைய விசுவாசத்தை வெளிக்காட்ட எப்பொழுதுமே அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். உண்மையில், எழுதும்போது பைபிள் எழுத்தாளர்கள் தங்களுடைய சொந்த நடையைப் பயன்படுத்தவும் கடவுள் அவர்களை அனுமதித்தார். உதாரணமாக, நெகேமியா தன் விவரப் பதிவை, தன்மை இடத்தில் வைத்து எழுதினபோதிலும், தாழ்மையானவராய் இருந்தார். (நெகேமியா 5:6, 19) மறுபட்சத்தில், அடக்கத்தினால், அப்போஸ்தலன் யோவான் தன் சுவிசேஷ பதிவில் ஒரு தடவைகூட தன் சொந்தப் பெயரைப் பயன்படுத்தவில்லை; மேலும் தன்னைப் பற்றி அரிதாகவே குறிப்பிட்டார். இவ்விரு முறைகளையுமே கடவுள் அங்கீகரித்தார்; அவை பைபிளில் பாதுகாக்கப்படும்படியும் செய்தார்.
சமநிலைக்கும் நியாயத்தன்மைக்குமான இதைப்போன்ற உதாரணங்கள் பைபிள் முழுவதிலும் காணப்படுகின்றன. கிறிஸ்தவ ஒருமை பல்வகைமைக்கு அனுமதியளிப்பது தெளிவாய் தெரிகிறது. ஆவிக்குரிய பண்புகள் குறைவுபடுகையில் பல்வேறு வகையான பின்னணிகளும் கருத்துக்களும் ஒருமையின்மைக்கு வழிநடத்தலாம் என்பது உண்மையே. (ரோமர் 16:17, 18) ஆனால், நாம் “பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளு”ம்போது, மற்றவர்களுடைய தனிப்பட்ட ஆளுமையை ஏற்றுக்கொள்ளவும் அனுபவிக்கவும் கற்றுக்கொள்கிறோம்.—கொலோசெயர் 3:14.
“தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று பைபிள் கூறுகிறது. (ரோமர் 15:7) கடவுளுடைய ஆவியின் உதவியோடு, சபையில் ஒருமையைக் காத்துக்கொண்டு, அதே சமயத்தில் தனித்தன்மைகளின் பல்வேறு வகைகளையும் அனுபவிக்கும் கவனமான சமநிலையை கிறிஸ்தவர்கள் அடையலாம்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 14-ன் படக்குறிப்பு]
தனித்துவம் இல்லாத ஒரு ஜனக்கூட்டமாய் மனித குடும்பத்தை சிருஷ்டிகர் நோக்குவதில்லை
[பக்கம் 15-ன் படக்குறிப்பு]
நாமும் நம் சிருஷ்டிகரும் மட்டுமே புரிந்துகொள்ளும் வகையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது